privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்திருடனுக்கு கொலை - ஜோசியனுக்கு பரிகாரம் !

திருடனுக்கு கொலை – ஜோசியனுக்கு பரிகாரம் !

-

தினமணியின் இணைப்பாக வெளியாகும் வெள்ளிமணியில் ‘காலம் உங்கள் கையில்’ என்ற ஜோதிட கேள்விப் பதில் பகுதியில் கடந்த 13 செப்டம்பர் அன்று வாசகர் ஒருவர் இரு கேள்விகளை கேட்டுள்ளார்.

ஆயுளும் மரணமும்
ஒருவரது ஆயுளைத்தான் குறிப்பிட முடியுமே தவிர, அவரது மரணம் இன்ன நேரத்தில் சம்பவிக்கும் என சொல்ல முடியாது.

கொள்ளையர்கள் சிலர் அவரது அத்தை, அத்தை மகள் மற்றும் பேத்தி ஆகிய மூவரையும் வீடு புகுந்து கொன்றுவிட்டு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஆனால் மூவருக்குமே ஜாதகத்தின்படி 70 வயது வரை ஆயுள் இருப்பதாக ஏற்கெனவே ஜோதிடர்கள் கணித்த பிறகும் அத்தையின் மகளும், பேத்தியும் அதற்கு முன்னரே மரணமடைந்தது ஏன்? ஜோதிடர்களின் கணிப்பு தவறா? மற்றும் ஆயுள் முடிவதற்கு முன்னரே அகால மரணமடைபவர்கள் ஆயுள் முடியும் வரை ஆவி உலகில் சுற்றி துன்பம் அடைவார்களா? அவர்களது ஆன்மா சாந்தி அடைய பரிகாரம் என்ன? என்பது தான் அந்தக் கேள்விகள்.

மூன்று பேர் திருடர்களால் கொல்லப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் இதை ஜோதிடத்திற்கு கொண்டு வந்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மேலும் இந்தக் கொலை மூலம் ஜோசியம் எனும் முட்டாள்தனத்தை காறி உமிழ்ந்து விட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டிய அந்த குடும்பம் மீண்டும் அதே ஜோசியக்காரர்களிடம் போய் நிற்பது அடுத்த அதிர்ச்சி. நம் மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். போகட்டும்.

பதில் சொல்ல வந்த தினமணியின் ஆஸ்தான ஜோதிடர் முதலில் வாசகரின் துயரத்தில் சென்டிமெண்டாக பங்கு கொள்கிறார். அப்புறம் பிரம்மன் எழுதிய காலம் முடிந்த பிறகு ஆத்மா எப்படியாவது உடலை விட்டு எஸ்கேப் ஆகிவிடும் என்கிறார். ஜோதிடத்தை பொறுத்தவரை ஒருவரது ஆயுளைத்தான் குறிப்பிட முடியுமே தவிர, அவரது மரணம் இன்ன நேரத்தில் சம்பவிக்கும் என சொல்ல முடியாது என்கிறார். அதாவது ஆயுளுக்கும் மரணத்துக்கும் சம்பந்தமே கிடையாதாம். குழப்பமாக இருக்கிறதா? இதற்கு இதிகாசம், புராணங்களிலெல்லாம் உதாரணம் இருக்கிறதாம். இதிலிருந்தே இந்த புராணக் குப்பைகள் மோசடி என்பதையும், அந்த மோசடியை வைத்தே ஜோசியக்காரர்களும் பிழைக்கிறார்கள் என்பது தெரிகிறது.

கருட புராணம் படிப்பதன் மூலம் இறந்து போனவரின் ஆன்மாவுக்கு அடுத்த பத்து நாட்களுக்கு சாந்தி அளிப்பதையும், அதை இழவு விழாத வீட்டில் படிக்க கூடாது என்பதையும் போகிற போக்கில் சுட்டிக் காட்டும் ஜோதிடர், ஓராண்டு காலம் மாதா மாதம் செய்ய வேண்டிய பிதுர்களுக்கான (பெற்றோர்கள் மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையினர்) மாசிகம் என்ற சடங்கு பற்றி குறிப்பிடுகிறார். அதாவது மாதமொரு முறை நீர், பிண்டம் போன்றவற்றை பித்ருக்களுக்கு படைக்க வேண்டும். நாம் படைக்கும் இப்பொருட்களை உட்கொண்டுதான் அவர்கள் (ஆன்மா) யமலோகத்தை நோக்கி பயணப்படுவார்கள். இதற்கிடையில் ஆறு மாதம் கழித்து த்ரௌஞ்சம் என்ற நகருக்கு போய் சேரும் ஆன்மா அங்குதான் முந்தைய ஆறு மாத பிண்டத்தை மொத்தமாக சாப்பிட்டு விட்டு அடுத்த ஆறு மாத பயணத்துக்கு தயாராகும். பிறகு யமலோகத்தை ஆன்மா அடைந்து பித்ரு தெய்வமாகி விடுவதால் அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கொரு முறை மாத்திரம் திதி கொடுத்தால் போதுமானது என்றும் கூறுகிறார்

சிரார்த்தம்
இந்த பதினைந்து நாட்களிலும் தொடர்ந்து பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தால் வருடம் முழுவதும் செய்ததற்கு சமமாம்.

இதிலிருந்து ஆன்மா என்பது பிஎஸ்எல்வி ராக்கெட் போல பிண்டம் எனும் எரிபொருளை ஏற்றிக் கொண்டு எமலோகம் எனும் கோளையோ நட்சத்திரத்தையோ நோக்கி போகிறது போலும். இவ்வளவு சுலபமாக விண்வெளியில் சுற்ற முடியும் என்பது ஐஎஸ்ஆர்வோ மற்றும் நாசா அறிவாளிகளுக்குத் தெரியவில்லை. முக்கியமாக இந்த கருடபுராணத்தின் படிதான் ரோட்டில் எச்சி துப்பிய அப்பாவிகளை எண்ணெயில் வறுத்து கொலை செய்தார் இயக்குநர் ஷங்கர்.

புரட்டாசி மாத தேய்பிறையில் (அதாவது முதலில் வரும் பௌர்ணமி முழுநிலவுக்கு அடுத்து வரும் நாட்கள்) சூரிய பகவான் கன்னி ராசிக்கு போய் விடுவாராம். இந்த பதினைந்து நாட்களும் மகாளயம் என அழைக்கப்படுமாம். இந்த பதினைந்து நாட்களிலும் தொடர்ந்து பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தால் வருடம் முழுவதும் செய்ததற்கு சமமாம். பிரதமை அன்று செய்பவர்களுக்கு செல்வம் கிடைக்குமாம். துவிதைக்கு குழந்தை பாக்கியமும், திருதியைக்கு வளர்ச்சியும் லாபமும், சதுர்த்திக்கு எதிரியின் நாசமும், பஞ்சமிக்கு லாபமும், சஷ்டிக்கு புகழும், சப்தமிக்கு லீடர்ஷிப்பும், அஷ்டமிக்கு நல்ல புத்தியும், நவமிக்கு நல்ல பெண்ணும், தசமிக்கு நினைத்த எல்லாமும், ஏகாதசிக்கு வேதமும், துவாதசிக்கு குல வளர்ச்சியும், மேதைமையும், பசுவும், ஆரோக்கியமும், சுதந்திரமும், அவ்வளவு ஏன் தீர்காயுளும் கூட அமையுமாம்.

சரி இந்த ராசிக்காரர்களை திருடர்கள் தாக்கினால் என்ன கிடைக்கும் என்பதை அந்த ஜோசிய ஐயர்வாள் தெரிவிக்கவில்லை.

இந்த பதினைந்து நாட்களும் பித்ருலோகத்தில் உள்ள நமது முன்னோர்களின் மூன்று தலைமுறையினரும் பூமிக்கு நமது வீட்டுக்கு வருவார்களாம். (நாம் இறந்து போனால் அங்கிருக்கும் சீனியர் புரமோசன் வாங்கி சொர்க்கத்துக்கு போய் விடுவாராம்) வருபவர்களுக்கு தேவையான சாப்பாடு, கருப்பு எள் (திருமாலின் வியர்வையில் தோன்றியதால் அதுதான் சுத்தமானதாம்), அப்புறம் தர்ப்பை (இதில்தான் முப்பெரும் கடவுள்களும் இருக்கின்றனராம். மேலும் இது சுயம்புவாகவே தோன்றுவதாம் – அதாவது ஆன்மா போன்றதாம்) எல்லாம் வைத்து வழிபட வேண்டுமாம். கருப்பு எள்ளுடன், சரியாக ஆட்காட்டி விரலுக்கு நடுவில் வைத்து நீர் ஊற்றா விட்டால் முன்னோர்கள் கோபித்துக் கொண்டு நமது வீட்டுக்கு அழைப்பை ஏற்று வர மாட்டார்களாம். இனி இன்றைய இளைய தலைமுறை பித்ரு லோகம் சென்றால் அவர்களுக்கு பிசாவும், பர்கரும் அளிக்கப்பட வேண்டும் என்று எப்போது மாற்றுவார்கள் தெரியவில்லை.

பண்டாரங்களுக்கு செல்வம்
பார்ப்பன பண்டாரங்களின் வாழ்விலும் செல்வம் குவிய என்னமா பாடுபடுகிறார்.

ஒவ்வொரு நாளும் சடங்கு செய்ய வருகின்ற பார்ப்பனர்களுக்கு துணிமணிகள் முதல் தங்கம் வரை தானம் செய்ய வேண்டுமாம். நாம் நடத்துகின்ற அழகைப் பார்த்து விட்டு நமது முன்னோர்கள் திருப்தியாகும் பட்சத்தில் (இதையும் வருகின்ற புரோகிதப் பார்ப்பனர்கள்தான் உறுதிப்படுத்துவார்கள்) ‘போதும் போதும் போதும்’ என்று மூன்று முறை கும்மியடித்து விட்டு திரும்பவும் யமலோகத்துக்கு சென்றுவிடுவார்களாம். ஆன்மாக்களுக்கு இது காலாண்டுத் தேர்வு விடுமுறை போல வைத்துக் கொள்ளலாம். பரணி நட்சத்திரம் அன்று பண்ணினால் நமது நண்பர்களின் ஆவிகளும் கூட வீடு வந்து போகுமாம். தினமணியின் ஐயர்வாள் ஜோதிடர் மக்களுக்கு மட்டும் தீர்வை அள்ளி விடுவதில்லை, தன்னையொத்த பார்ப்பன பண்டாரங்களின் வாழ்விலும் செல்வம் குவிய என்னமா பாடுபடுகிறார்!

இதுபோக காரூணீக பித்ரு தர்ப்பணம் என்று ஒன்று இருக்கிறதாம். அதில் சிரார்த்தம் பண்ணினால் தேவர்கள் உட்பட நமக்கு தெரியாதவர்களுக்கும் கூட சேர்ந்து பலன் கிடைக்குமாம். இதெல்லாம் சங்கராச்சாரியார் ரேஞ்சுக்கான சிரார்த்தமாம். இந்த தெரியாதவர்களில் கொலை செய்த திருடர்களின் முன்னோர்களும் கூட இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த விளக்கங்களைப் பார்த்தால் கொலையே செய்யப்பட்டாலும் சில பல பரிகாரங்களை செய்து விட்டு ஜம்மென்று சொர்க்கம் சென்று விடலாம் போலும்.

சதுர்தசி அன்று சிரார்த்தம் செய்தால் எந்திரங்களால் இறந்தவர்களுக்கு நன்மை உண்டாகுமாம். இந்நாளுக்கு சஸ்திரஹத மகாளயம் என்று பெயர். அன்று செய்வதால் வெட்டுப்பட்டவர்களின் ஆன்மா சாந்தியடையுமாம். மகாளய அமாவாசை அன்றும் கட்டாயம் சிரார்த்தம் பண்ண வேண்டுமாம். இப்படி கொலை செய்யப்பட்டவர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்கு வழி இருப்பதால் இனி கொலை செய்வதை ஒரு குற்றமாக தண்டிக்க வேண்டியதில்லை போலும்.

இவைதான் அந்த பார்ப்பன ஜோதிடர், வாசகருக்கு வழங்கிய தீர்வு. ஆயுளுக்கும் மரணத்துக்கும் பொறுப்பேற்க தவறும் கடவுள்கள் மீது பக்தனுக்கு எந்த குறையும் இல்லை. அதை புரோக்கராக இருந்து முன்தேதியிட்டு கூறும் மோசடி ஜோதிடர்காரன் மீதும் மக்களுக்கு விமரிசனமில்லை. போகிறபோக்கில் ஒரு ஆன்மீக சுயநம்பிக்கை மொக்கையை ஜோதிடர்கள் எடுத்து விட்டாலே பிரச்சினையை மறந்து பரிகாரங்களை ஏற்கும் மனநிலைக்கு மக்கள் வந்து சேர்கிறார்கள்.

பரிகாரம்
விமான விபத்தில் இறப்பவர்களுக்கும், பாலியல் வல்லுறவால் இறப்பவர்களுக்கும், மதவெறிக் கலவரங்களில் கொல்லப்படுவர்களுக்கும் என்ன சிரார்த்தம்.

விமான விபத்தில் இறப்பவர்களுக்கும், பாலியல் வல்லுறவால் இறப்பவர்களுக்கும், மதவெறிக் கலவரங்களில் கொல்லப்படுவர்களுக்கும் என்ன சிரார்த்தம் செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. நவீன மோசடி ஜோதிடர்கள் இதற்கெல்லாம் தேவையான பரிகாரங்களை உருவாக்கத்தான் செய்வார்கள். அது இன்னும் 365 நாட்கள் போதாது என்ற நிலைமைக்கு இட்டுச் செல்லும்.

சிரார்த்தம் பண்ண ராமேசுவரம், வேதாரண்யம், கும்பகோணம், விஷ்ணு பிரயாக், ருத்ர பிரயாக் என பல இடங்களில் கோவில்களும் உள்ளன. வீட்டில் செய்யும்பட்சத்தில் வரும் பார்ப்பனர்களுக்கு வடை, பாயாசத்துடன் வயிறு நிரம்ப சாப்பாடு போட வேண்டும். இப்போது பெரும்பாலும் நேரமில்லாத காரணத்தால் அதற்கான தொகையை வரும் புரோகிதப் பார்ப்பனர்களிடம் கொடுத்து விட்டு எள்ளும், தண்ணீரும் ஊற்றி காரியத்தை முடித்து அனைவரும் அடுத்த வேலைக்கு கிளம்பி விடுகின்றனர்.

இன்றைய வாழ்க்கைச் சூழலும், பொருளாதார சிக்கல்களும் சேர்ந்து மக்களை விரட்டுகின்ற வேளையில் எதார்த்தமாகவே மக்கள் பித்ருக்களுக்கு சடங்கு செய்ய விரும்புவதில்லை. வளரும் பிள்ளைகளுக்கே நல்ல உணவும், உடையும், கல்வியும் அளிக்க திணறும் பெற்றோர்களுக்கு ஆன்மாக்களின் பசியை தீர்க்க வேண்டிய அவசியம் அவர்ளது வாழ்வில் முன் நிற்கவில்லை. எனவே அதனை நடுத்தர மக்கள் வரை புறக்கணித்தாலும், வாழ்வியல் துன்பங்களுக்காக அவர்கள் அணுகும் ஜோதிடர்கள் பித்ரு தோசம் என்ற வார்த்தையை போட்டு அதையே வாழ்வியல் துன்பங்களுக்கு காரணம் என்று காட்டுகிறார்கள். இந்த மிரட்டலுக்கு பயப்படும் மக்கள்கள் பணத்தை செலவழித்து பரிகாரம் செய்து தீர்க்கிறார்கள்.

வளர்ந்து வரும் விலைவாசி உயர்வு, தனியார்மயமான மருத்துவம், கல்வி என அன்றாடப் பிரச்சினைகள், சம்பள வெட்டு, வேலையிழப்பு என்ற நிகழ்கால பிரச்சினைகளுக்கு மகாளயத்திற்கு சிரார்த்தம் செய்யாதையும், ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களில் முன்னோர்களை வழிபடாமல் இருந்ததையும் ஒரு குற்ற உணர்ச்சியாக ஏற்க பழக்கப்படுத்துகிறார்கள். வேறு வழியறியாத மக்களும் இதையும் செய்து பார்ப்போமே என்றுதான் துவக்குகிறார்கள். இடையில் எதாவது மாந்திரீக ஜோதிட வகையறாக்கள் கையில் மாட்டினால் நரபலி வரை இது போகிறது.

பித்ரு தோஷத்திற்கு பரிகாரம் தேட பல எளிய வழிமுறைகளை ஏற்கெனவே ஏழைகள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். வேறு என்ன, மூன்று தலைமுறை முன்னோர்களையும் கூப்பிட்டு ”முன்னோர்களே என் நிலைமை இவ்வளவுதான். பாப்பானுக்கு படியளக்குற அளவுக்கு எனக்கு வசதியில்ல. அதுனால உங்களுக்கு ஏதும் பண்ணலன்னு கோவிச்சுக்காதீங்க” என்று முறையிடும் பட்சத்தில் முன்னோர்கள் அதை மறுக்க முடியுமா என்ன?

வரும் அக்டோபர் 3,4 ஆகிய தேதிகளில் மகாளய அமாவாசை வருகிறதாம். இந்த கேள்வியின் மூலம் மற்றவர்களும் பயன்பெறட்டும் என்றுதான் இதனை விபரமாக பதிவு செய்துள்ளதாக ஜோதிடர் கூறியுள்ளார். ஆக இம்மாதம் பார்ப்பனர்களின் ஒரு பிரிவினருக்கு வியாபாரம் கடை  கட்டும்.

அறிவியல், தொழில்நுட்பங்கள் இன்று உலகை ஒரு கைக்குள் சுருக்கி விட்டதாக பேசிக் கொள்கிறோம். சந்திரனுக்கு ராக்கெட் விடும் நிலைமைக்கு இந்தியா வளர்ந்து விட்டது. சூரிய மண்டலத்திற்கும் வெளியே ஆய்வுகள் விரிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதெல்லாம் எங்கள் புராணத்திலேயே இருக்கு என்று பேசும் அம்பிகள் உருவாக்கிய பித்ரு லோகம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதைப்பற்றி ஜோதிடர்களுக்கு பயமும் இல்லை, பக்தர்களுக்கு கவலையுமில்லை.

– வசந்தன்