privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதாது மணல் தமிழக அரசு தடை: HRPC பத்திரிக்கை செய்தி

தாது மணல் தமிழக அரசு தடை: HRPC பத்திரிக்கை செய்தி

-

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
150-இ, ஏரிக்கரை சாலை, அப்போலோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர்,
மதுரை – 20, தொடர்புக்கு 9865348163

18.09.2013

பத்திரிக்கை செய்தி

  • தூத்துக்குடி மாவட்ட தாது மணல் கொள்ளை தொடர்பான ககன்தீப்சிங் பேடி விசாரணைக் குழுவின் அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்!
  • நேர்மையான முறையில் விசாரணை நடக்க வைகுண்டராஜன் உள்ளிட்ட கார்னெட் நிறுவன உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகள் –  சொத்துக்களை முடக்கி அவர்களை தமிழக அரசு கைது செய்ய வேண்டும்!

தாது மணல் பிரச்சனை தொடர்பாக தமிழக அரசின் வருவாய்த்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கையைப் பெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா தூத்துக்குடியைத் தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் தாது மணல் எடுக்க இடைக்காலத் தடை விதித்துள்ளார். மேலும் இந்த ஐந்து மாவட்டங்களில் உள்ள 71 பெருங்கனிமக் குவாரிகளில் சிறப்புக் குழு ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆய்வு முடிவுக்குப் பின் பெருங்கனிமக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கும் என்று அறிவித்துள்ளார்.

ஆனால் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான விசாரணைக் குழு அளித்த அறிக்கையின் விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்படவில்லை. விசாரணைக் குழு பட்டா நிலங்களில் கூடுதலாக மணல் அள்ளியது தொடர்பாக மட்டும் விசாரித்ததா? புறம்போக்கு நிலங்கள், கடற்கரைகளில் மணல் அள்ளப்பட்டது தொடர்பாக விசாரித்ததா? மக்களிடம் ஏற்பட்டுள்ள புற்று நோ்ய், தோல் நோய், கடல் வாழ் உயிரினங்கள் – மீன்வளம் அழிவு, கடல் அரிப்பு உள்ளிட்ட சுற்றுச் சூழல் பாதிப்புகள், தாது மணல் கொள்ளைக்கு கடந்த 25 ஆண்டுகளாக உடந்தையாக இருந்த அதிகாரிகள் – ஆட்சியாளர்களின் பங்கு, தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட் எடுக்கப்பட்டது, மொத்த கார்னெட் மணல் இருப்பு – தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்ட மணல் ஆகியவை குறித்தெல்லாம் விசாரித்ததா என்ற விபரங்கள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

கடந்த காலங்களில் வெவ்வேறு பிரச்சனைகளுக்கு அமைக்கப்பட்ட பல்வேறு விசாரணைக் குழுக்கள் அரசின் விருப்பத்தை நிறைவேற்றுவனவாகவே அமைந்திருந்தன என்ற நிலையில் கார்னெட் மணல் கொள்ளை தொடர்பான விசாரணை வெளிப்படையாக மக்களுக்குத் தெரியும் வகையில் நடத்தப்பட வேண்டும் என்று கோர தமிழக மக்களுக்கு உரிமையுள்ளது. ஆகவே ககன்தீப்சிங் பேடி தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.

மேலும் கார்னெட் மணல் கொள்ளையின் முக்கிய குற்றவாளியான வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன், ஜெயா தொலைக்காட்சியில் பங்குதாரராக இருந்து, கடந்த ஆட்சியில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது ஊடகங்களில் பதிவாகியுள்ளது. ஆகவே அதிமுக அரசுக்கும் – வைகுண்டராஜனுக்கும் நெருக்கமான உறவிருப்பது மறுக்க முடியாத உண்மை. இவ்வாறான சூழலில் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான விசாரணைக் குழு நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடத்தும் போது அதே மாவட்டத்தில் வசிக்கும் வைகுண்டராஜன் மணல் கொள்ளையின் ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளது. கடந்த 17.08.2013 அன்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழுவினர் தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை கடற்பகுதிக்கு ஆய்வுக்காகச் சென்றபோது பி.எம்.சி நிறுவன ஊழியர்கள் கழிவுமணலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவரசமாக மூடிக் கொண்டிருந்தனர். மிக ஆழமாக தாது மணல் எடுக்கப்பட்ட பகுதிகளில் கழிவு மண்ணைக் கொட்டி மேடாக்கி கற்றாழையை நட்டு வைத்திருந்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடி சாட்சிகளாக உள்ள மக்களை மிரட்டி சாட்சியங்களை வைகுண்டராஜன் உள்ளிட்ட கார்னெட் முதலாளிகள் கலைக்கவும் வாய்ப்புள்ளது. கிரானைட் ஊழல் விசாரணையின் போது பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட இதர கிரானைட் குவாரி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சாட்சிகளை மிரட்டிய பி.ஆர்.பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பின் மாவட்ட காவல்துறையால் புகார் முகாம் நடத்தப்பட்டதில் மக்கள் ஓரளவு அச்சமின்றி புகார் அளித்தனர். ஆனால், கார்னெட் முதலாளிகள் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் குண்டர் சாம்ராஜ்யம் நடத்தி வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள்  பெரும் அச்சத்தில் உள்ளனர். ஆகவே மக்கள் அச்சமின்றி சாட்சியமளிக்கும் நிலையை அரசு உத்திரவாதம் செய்ய வேண்டும். அதற்கு உடனே வைகுண்டராஜன் உள்ளிட்ட கார்டென் நிறுவன உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும். கார்னெட் மணல் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் சொத்துக்களை முடக்க வேண்டும்.

கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் தாது மணல் கொள்ளையில் மாநில அரசின் வருவாய்த்துறை, கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை, பத்திரப்பதிவுத் துறை, வனத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் முதல் அணுசக்தித் துறை, கனிமங்கள் மற்றும் சுங்கத்துறை,  சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரிகளும் உடந்தையாக இருந்து ஆதாயம் அடைந்துள்ளனர். ஆகவே பாதிக்கப்பட்ட மக்கள்  பரிந்துரைக்கும் நேர்மையான அதிகாரிகள்  கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை அனைத்துக் கோணங்களிலும் நடத்தப்பட வேண்டும்.

சே வாஞ்சிநாதன்
வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை.
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.