privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஜேப்படி முதலாளிகளை விளம்பரத்தில் வெளியிடுவாரா சிதம்பரம் ?

ஜேப்படி முதலாளிகளை விளம்பரத்தில் வெளியிடுவாரா சிதம்பரம் ?

-

டந்த சனிக்கிழமை (செப்டம்பர் 15) அன்று காரைக்குடியில் நடந்த வங்கிகளின் கல்விக்கடன் வழங்கும் விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இந்தியா முழுக்க ரூ 70,500 கோடி கல்விக்கடன் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 2008-ல் சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையாகவும், மற்ற விவசாயிகளுக்கு ஓரளவும் என விவசாயக் கடன் ரத்து செய்யப்பட்டதில் மத்திய அரசுக்கு ரூ 70,000 கோடி செலவு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். யாருக்கும் கல்விக்கடன் மறுக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

ப சிதம்பரம்ஆனால் சிதம்பரத்தின் கண்ணீர் ஒரு முதலையின் கண்ணீர் என்பதை மக்கள் அறிவார்கள். விவசாயக் கடனை அல்லது கல்விக் கடனை திருப்பிக் கட்ட தாமதிக்கும் விவசாயிகள் மற்றும் மாணவர்களது புகைப்படங்களுடன் விளம்பரம் வெளியிடும் அவலம் இப்போதும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. போடி நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஒரு பிளக்ஸ் பேனரில் கல்விக்கடனைத் திருப்பிக் கட்டாத மாணவர்களது புகைப்படங்களை அவர்களது பெற்றோர்களின் புகைப்படத்துடன் அச்சிட்டு காட்சிக்கு வைத்திருந்தது. சத்தியமங்கலத்தில் ஒரு பொதுத்துறை வங்கியிலும் இது போன்ற கொடுமை நடந்துள்ளது

நாடு முழுதும் பல்வேறு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுக்கு வைத்துள்ள வரிப் பாக்கி மட்டும் ரூ 4 லட்சம் கோடியை தாண்டி விட்டது. இவற்றை அவர்களிடமிருந்து வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க இந்நடவடிக்கையை நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆணையின் பேரில் எடுத்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 2013 ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டத்தில் மட்டும் 41 நிறுவனங்கள் தரத்தவறிய வரி பாக்கியானது ரூ 70,000 கோடி (ஒட்டுமொத்த கம்பெனிகளின் வரி பாக்கியில் இது வெறும் 17 சதவீதம் மட்டும் தான்) என்றும், கார்ப்பரேட்டுகளின் வரி ஏய்ப்பு விபரங்களைத் திரட்டி வரும் அக்டோபர் மாதம் வெளியிட உள்ளதாகவும் நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டேட் வங்கி போஸ்டர்
கல்விக் கடன் செலுத்தத் தவறியவர்கள் போட்டோக்களை பேனராக வைத்த எஸ்பிஐ

முதலாளிகளிடம் வரிபாக்கியை வசூலிக்க அவர்கள் கையாளும் முறை முக்கியமானது. முதலில் வரி ஏய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களையும் அவர்கள் கண்டறிந்து அதனை ஓரிடத்தில் சேமிப்பார்களாம். இரண்டாவதாக, சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நோட்டீசு அனுப்புவார்களாம். அதையடுத்து வரி ஏய்ப்பில் அந்நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்தால், வருமான வரிக்கணக்கை சமர்ப்பிக்க செய்து, எப்பாடு பட்டாவது அவர்களை வரி செலுத்த வைக்கும் பணியில் நிதியமைச்சக அதிகாரிகள் ஈடுபடுவார்களாம். யாராவது வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்தாலும் அதை கண்டறியும் பட்சத்தில் மீண்டும் எப்படியாவது அந்த உண்மையான வரியை கட்ட வைக்க முயற்சிப்பார்களாம். அபராதமோ அல்லது தண்டனையோ முதலாளிகளுக்கு கிடையாதாம்.

வரி பாக்கி வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் வோடஃபோன் நிறுவனம் ரூ.22,146 கோடியும், ஆதித்யா பிர்லா டெலிகாம் ரூ.3,173 கோடியும், எச்டிஎப்சி வங்கி ரூ.2,653 கோடியும், ஆந்திரா பெவரேஜஸ் கார்ப்பரேஷன் ரூ.2,413 கோடியும், மைக்ரோசாஃப்ட் இந்தியா ரூ.1,999 கோடியும், ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் ரூ.1,856 கோடியும், ஐசிஐசிஐ வங்கி ரூ.1,688 கோடியும் பாக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆறு ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக முன்னணி கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடனின் மதிப்பு மட்டும் ஆறு மடங்கு அதிகரித்து இப்போது ரூ 120 பில்லியன் டாலர்களாக உள்ளதாம். 2008 நெருக்கடிக்கு பிறகு வங்கிகள் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்து மாற்றியமைத்த தொகைதான் இது. இதைப் பற்றி சிபிஐ விசாரணை கூட முறைகேடுகள் காரணமாக நடந்து வருகிறது. தள்ளுபடியான தொகை யார் யாருக்கு எவ்வளவு என்பதெல்லாம் கடைசி வரை தெரியப் போவதேயில்லை. ஆனால் 75,000 கிளை மூலம் விவசாயிக்கு தள்ளுபடியான கடன் இவ்வளவு என அறிவிக்க ப. சிதம்பரம் போன்றவர்கள் கூச்சப்படுவதேயில்லை.

மல்லையா
சாராய ஊதாரி மல்லையா

தேர்தல் நெருங்குவதால் நேரடி வரிவிதிப்பை மக்கள் மீது விதிக்க முடியாதாம். அதற்காக முதலாளிகளிடம் வசூலிக்க திட்டமாம். இந்த அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாகத்தான் தேர்தலுக்கு பிறகும் கூட நீடிக்கும். ஆனால் மக்களிடம் தங்களது நேர்மையை, முயற்சியை போலியாக தம்பட்டம் அடித்து விளம்பரம் செய்ய ஆட்சியாளர்கள் தயங்குவதேயில்லை. இது போன்ற செய்திகளை அவ்வப்போது அம்பானி, டாடா போன்றவர்களிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டே வெளியிடுவார்கள் போலும்.

பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடனைக் கட்டாத முதலாளிகள் வரிசையில் சாராய ஊதாரி மல்லையா மட்டும் ரூ.7,500 கோடி வரை கடன் வைத்துள்ளார்.  இதுபோக அம்பானிகளுக்கும், டாடாக்களுக்கும் பல ஆயிரம் கோடி வரிவிலக்குகள் அளிக்கப்படுவதை அனைவரும் அறிவர். மக்களைப் பொறுத்த வரையில் அவர்களது வாராக்கடனுக்கு ஃபிளக்ஸ் பேனர் வைத்து அவமானப்படுத்தும் வங்கி அதிகாரிகளுக்கு, வரி கட்டாத முதலாளிகளின் பெயர்களை ஒரு பத்திரிகை விளம்பரமாக புகைப்படத்துடன் வெளியிட முடியுமா? வாங்கிய கடனுக்காக மல்லையாவின் கிங் ஃபிஷர் விமானங்களை பறிமுதல் செய்யக் கூட வங்கிகளுக்கு சட்டப்படி உரிமை கிடையாது. சில ஆயிரம் ரூபாய் வாங்கிய கடனைக் கட்ட இயலாவிடில் கூட மானத்திற்கு பயந்து மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மல்லையாவோ ஊர் ஊராக சுற்றிக்கொண்டு ஊர்ப்பணத்தில் மஞ்சள் குளித்து குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்களில் 54 சதவீதம் இது போன்ற பெரிய முதலாளிகளால் வாங்கப்பட்டது தான்.

ஆடம்பர கார் வாங்குவதற்கு 8% வட்டியில் பணம் தரும் வங்கிகள் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 14% வட்டி போடுகிறது. நபார்டு வங்கியில் சிறு விவசாயிக்கு 8% வட்டியில் கடன் தருபவர்கள் கார்ப்பரேட்டுகளுக்கு 6.5% வட்டியில் கடன் கொடுக்கிறார்கள். இது போக மின்சாரம், தண்ணீர், நிலம் எல்லாமுமே கார்ப்பரேட்டுகளுக்கு இலவசமாக தரும் அரசு, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கும் மானியம் தருகிறது. தனியார்மய காலகட்டத்தில் சாமான்ய மக்களுக்கு ஒரு நீதி, தரகு முதலாளிகளுக்கு ஒரு நீதி என்பது தான் நடைமுறையில் அமலில் உள்ளது.