privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககாங்கிரசு மட்டும்தானா ராஜபக்சேவின் கூட்டாளி ?

காங்கிரசு மட்டும்தானா ராஜபக்சேவின் கூட்டாளி ?

-

கேரளத்துக்குப் போனால் மலையாளிகளுக்கு ஆதரவாகவும் ஆந்திராவுக்குப் போனால் தெலுங்கர்களுக்கு ஆதரவாகவும் என்று இடத்திற்குத் தகுந்தாற் போன்று பசப்புவது  ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பன மதவெறிக் கும்பலுடைய வழக்கம். அந்த வகையில் தான் ஈழ, இந்தியத் தமிழருக்கு ஆதரவாக திருச்சி மாநாட்டில் குஜராத் பாசிசக் காட்டுமிராண்டி நரேந்திர மோடி பசப்பியிருக்கிறார். காஷ்மீருக்குள் புகுந்து இந்திய இராணுவத்தினரின் தலையை வெட்டி எடுத்துச் செல்லுகிறார்கள், பாகிஸ்தான் பயங்கரவாதிகள்; தமிழக மீனவர்களைக் கொல்லுகிறார்கள், இலங்கை இராணுவத்தினர்; இரண்டையுமே தடுக்கத் தவறி விட்டது, காங்கிரசு அரசு.” என்றார் மோடி.

ராஜீவ், வாஜ்பாய் காலத்தில் இருந்து இம்மாதிரியான இந்திய தேசிய, திராவிட அரசியல்வாதிகளின் பசப்பல்களை நம்பச் சொல்லி ஈழத் தமிழர்களின் கழுத்தறுக்கிறார்கள், தமிழினவாதப் பிழைப்புவாதிகள். இப்போது அடுத்த சுற்றுக்குத் தயாராகிறார்கள். இந்த இந்திய தேசிய, திராவிட அரசியல்வாதிகள் எல்லோரும் உண்மையில் சிங்கள பாசிசக் கொலைக் குற்றவாளி ராஜபக்சேவின் கூட்டாளிகள்தாம்.  இதற்கான ஆதாரமாக மோடியின் திருச்சிப் பேச்சுக்கு முந்தியநாள் கொழும்புவிலிருந்து வெளிவரும் “சிறீலங்கா கார்டியன்” நாளிதழின் தலைப்புச் செய்தியைக் கீழே தருகிறோம்.

***

 “மோடிக்கு ராஜபக்சேவின் கண்ணசைவுகள்”

கடந்த வாரம், செய்தி ஊடகப் பிராணிகளுக்கு ஒரு வகையில் வழக்கமான பாணியிலான ஒரு தகவலை மோப்பம் பிடித்து விட்டார்கள். சில இந்தியப் பிரபலங்களைச் சுமந்து கொண்டு ஒரு விமானப்படை ஹெலிகாப்டர் என்னவென்று தெரியாத கோளாறு காரணமாக தேம்பே அருகேயுள்ள ஒரு இடத்தில் அவசரமாகத் தரையிறங்கியது. இந்தத் தகவலைப் பெற்ற ஊடகத்திலுள்ளவர்களின் ஆர்வத்தைத் தூண்டியது என்னவென்றால், அந்த ஹெலிகாப்டரில் வந்த இந்தியப் பயணிகள் யார் யார் என்பது இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது தான். அது பற்றிய ஒரு சிறு தகவலைப் பல்வேறு விமானப்படை மூலங்களில் இருந்து பெற ஊடகத்தார் சிரமப்பட்டு எத்தனித்தபோதும்  அது திட்டமிட்டுத்  தடுக்கப்பட்டது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

தம் முயற்சியைக் கைவிடாத ஊடகத்தார் ஊக விளையாட்டில் ஈடுபட்டனர். அந்த மர்மமான பயணிகள் – ‘மும்பை வெல்வெட்’ சினிமாவில் நடிக்கும் பாலிவுட் நடிகர்கள் இங்கே படப்பிடிப்புக்காக வந்திருக்கலாம் என ஊகித்தனர். எனினும், இறுதியில் உண்மை தெரியவந்த போது, அந்த மர்மமான பயணிகள் அல்லது மர்மமான பயணி  பாலிவுட் சினிமாவோடு சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அந்தப் பயணியின் அடையாளத்தை அறிந்தபோது ஒவ்வொருவரையும்  வியப்பு கவ்விக் கொண்டது; ஏனென்றால், அவர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. பாரதிய ஜனதா கட்சியோடு நெருக்கமான பிணைப்புக் கொண்டது, சிவசேனா.  அக்கறைக்குரிய விடயம் என்னவென்றால், அதிபர் ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் இலங்கைக்குக் கடந்த முறை கூட தாக்கரே  பயணம் வந்திருக்கிறார்.

சமீப காலத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டவர் சிவசேனா உறுப்பினர் மட்டுமல்ல, பா.ஜ.க.-சிவசேனா கூட்டணியுடன் நெருக்கமாக இணைந்துள்ள ஒரு இந்தியப் பத்திரிகையாளர் ஸ்வப்பன்தாஸ் குப்தா (இவர் இந்திய நாடாளுமன்ற மேலவையில் பா.ஜ.க.வின் உறுப்பினர்) கூட சமீபத்தில் இலங்கைக்கு வந்துள்ளார். வடக்கில் மகிந்த ராஜபக்சேவின் வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றங்களைப் பாராட்டிப் பல தொடர் கட்டுரைகளை எழுதியுள்ளார். இப்போது அறிய வருவது என்னவென்றால், அதிபர் ராஜபக்சேவின் அழைப்பின் பேரிலேயே உத்தவ் தாக்கரே  இரகசியமாக இலங்கை வந்துள்ளார். அக்கறைக்குரிய விடயம் என்னவென்றால், நரேந்திர தாமோதரதாஸ் மோடியைத் தனது பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்ததைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் பயணம்  வந்துள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினை மீதான இந்தியக் கண்ணோட்டத்தைத் தனக்குச் சாதகமாக அமையுமாறு  செல்வாக்கு செலுத்துவதற்காக  இந்திய அரசியல்வாதிகளுடனான தனது தனிப்பட்ட தொடர்புகளைப் பயன்படுத்திகொள்வது ராஜபக்சே குடும்பத்திற்கு மிகவும் கைவந்த கலை. தற்போதைய இந்திய அரசுத் தலைவர் பிரணவ முகர்ஜி இந்திய அயலுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, அவருடன் நெருக்கமான தொடர்புடைய ஒரு பெண்மணியைத் தரகராகக் கொண்டு  தமக்கு  அவரது நல்லாதரவைப் பெறுவதற்கு தூண்டில் போடும் வேலையை ராஜபக்சேக்கள் செய்தார்கள். அதைப் போலவே, பிரியங்கா காந்தி கணவரின் ஒரு தொழில் கூட்டாளி மூலமாக காந்தி குடும்பத்தின் நல்லாதரவைப் பெறுவதற்கு அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். வேறொரு கடந்தகால நிகழ்வாக, கருணாநிதி தமிழக முதலமைச்சராக இருந்தபோது,  இலங்கை இனப்பிரச்சினையில் தமிழகத்தின் நிலையில் பாதிப்பை ஏற்படுத்துமாறு கருணாநிதியின் மகள் கனிமொழியோடு தொடர்புடைய தொண்டைமானின் தொடர்புகளை ராஜபக்சேக்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். ஜெயலலிதா ஜெயராம் தமிழக முதலமைச்சரானபோது, ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெறுவதற்காக அவரது நெருக்கமான கூட்டாளியான அப்போதைய ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவோடு மிலிண்டா மொரகோடாவின் தனிப்பட்ட தொடர்புகளை ராஜபக்சேக்கள் பயன்படுத்திக் கொண்டார் கள்

மொரகோடாவின் வெற்றிவாய்ப்புகள்

மகிந்த ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே

2002 ரணில் அரசாங்க காலத்தில் நாயுடுவோடு மொரகோடா ஒரு நல்ல ஒத்துணர்வைக் கட்டமைத்துக் கொண்டார். தனது தனிப்பட்ட தொடர்புகளைப் பயன்படுத்தி க்கொண்டு, இந்தியாவோடு  நெருக்கமாகப் பாலம் அமைக்குமாறு மொரகோடா கேட்டுக் கொள்ளப்பட்டால்,  மொரகோடாவின் எதிர்காலப் பாத்திரத்தைப் பொறுத்தவரை பல காட்சிகள் சாத்தியம் என்று அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் எழுந்துள்ளன. சில அரசாங்க உள்வட்டாரத் தகவல்களின்படி, அடுத்த இந்தியத் தேர்தலில் பா.ஜ.க. அதிகாரத்துக்கு வந்தால் , இந்திய அரசாங்கத்தோடு பேரங்கள் நடத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் சிறப்பு முகவராக மொரகோடா நியமிக்கப்படலாம். பா.ஜ.க.வோடு அனைவரும் அறிந்த அவருக்குள்ள நெருக்கமான உறவைப் பயன்படுத்திக் கொள்வதற்காகத் தேசியப் பட்டியலில் இருந்து மொரகோடா நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டு, அயலுறவுத் துறை அமைச்சராகவும் ஆக்கப்படலாம் என்று இன்னொரு ஊகமும் உள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுடன் மொரகோடாவுக்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக அவரது கூட்டாளிகள் ராஜபக்சே குடும்பத்தைத் தூண்டிவிடுவதாகக் கூறப்படுகிறது.

அது அவ்வாறே இருந்தாலும்,  பா.ஜ.க. தேர்தலில் வெற்றிபெறும், மோடி அடுத்த பிரதமர் ஆவார் என்று எண்ணுவதோடு, அதையே மிகவும் நம்பியிருக்கிறார், மகிந்த ராஜபக்சே என்பது வெளிப்படையானதாகும். மோடியின் பெயர் பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தாக்கரேயை  இலங்கைப் பயணத்துக்கு ராஜபக்சே அழைத்ததன் காரணம் இதுதான் என்று தெரிகிறது….

ஜெயலலிதா என்ற அம்சம்

காங்கிரசுக் கட்சியுடனான  உறவை விட மோடியுடனான  ஜெயலலிதாவின் உறவு ஒரு நல்ல அடித்தளம் கொண்டதாகவே இருக்கிறது. ஆகவே, பா.ஜ.க. இந்தியாவில் அடுத்த ஆட்சி அமைக்கும் என்ற வாய்ப்பு சாத்தியமானால் ஜெயலலிதாவின் கை ஓங்கும்; அதோடு அதற்குப் பொருத்தமாக இலங்கையின் இனப் பிரச்சினையில் தலையீடு செய்வற்கான அவருடைய சக்தியும் அதிகரிக்கும். ஆனால், இலங்கை அரசாங்கத்தின் முஸ்லீம் அடிப்படைவாத எதிர்ப்பு, சிவசேனாவின் முஸ்லீம் எதிர்ப்புப் பாத்திரத்தோடு பொருந்திப் போகிறது; ஆகவே, அவை ஒரு குறிப்பிட்ட  அளவு புரிந்துணர்வைப் பெறமுடியும் என்ற  நம்பிக்கையின் கீழ் ராஜபக்சே இருப்பதாக ஊகிக்க முடிகிறது. இதனால் பா.ஜ.க. வின் நல்லாதரவு வென்றெடுக்கக் கூடிய இலக்குதான் என்று அவர் எண்ணக் கூடும்.

எதிர்வரும் நாட்களில் ராஜபக்சேவின் மிகப்பெரிய தலைவலி வடக்கு மாகாண சபையும் அதன் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் சி.வி. விக்னேஸ்வரனும் ஆகும். விக்னேஸ்வரனும் மாகாண சபையும் காங்கிரசு அரசாங்கங்கத்தின் உருவாக்கங்களுடைய ஒரு தொடர்ச்சி என்றும், அவற்றுக்குத் தாங்கள் பொறுப்பில்லை என்றும் பா.ஜ.க. வின் எதிர்கால அரசாங்கம் கருதுமானால், அது அவர்களுக்குத் தூசு போன்ற அக்கறையே கொடுக்கும் என்ற பிரமையின் கீழ் இலங்கை அரசு ஆழ்ந்திருப்பது வெளிப்படை. இதற்கு மாறாக, ஒரு காங்கிரசு அரசாங்கத்தின் காலத்திலேயே அது பெற்றெடுத்த நாட்டின் இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணுமாறு இலங்கை அரசாங்கம் அறிவுறுத்தப்படலாம். எல்லாவற்றையும் விட ராஜீவ் கொலை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய அழிவுக்கு இந்தியாவின் ஆதரவு ஆகிய காரணங்களால் காங்கிரசு அரசாங்கமும் தமிழ்ப் பரிவாரங்களும் ஒன்றையொன்று வெறுக்கின்றன. எக்காரணம் கொண்டும் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளும் வெறுப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் எஞ்சியிருக்கும் அதன் உதிரிகள் மீதும் பா.ஜ.க.வுக்குக் கிடையாது. ஆகவே, மகிந்த ராஜபக்சே இனப் பிரச்சினைக்கு ஒரேயடியாக இறுதித் தீர்வு காண்பதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு இப்பொழுது கிட்டியிருக்கறது.”

(சிறீ லங்கா கார்டியன் செப்டம்பர், 25)

சிங்கள பாசிச ஆட்சியின்கீழ் பதிப்பிக்கப்படும் ஒரு நாளேட்டில் வந்துள்ள செய்திகள்தான் என்றாலும், இவை ஒதுக்கித்தள்ளக் கூடியவை அல்ல. இவை பல உண்மைத் தகவல்களைக் கொண்டுள்ளன. தொண்டைமான்- கனிமொழி – கருணாநிதி – காங்கிரசு; தரகுப் பெண்மணி – பிரணவ முகர்ஜி; பிரியங்காவின் கணவர் – அவரது தொழிற் கூட்டாளி – காங்கிரசு;  மிலிண்டா மொரகோடா – சந்திபாபு நாயுடு – ஜெயலலிதா – மோடி -பா.ஜ.க.,  உத்தவ் தாக்கரே – மோடி –  பா.ஜ.க.,  மிலிண்டா மொரகோடா – மோடி – பா.ஜ.க., – இப்படி மகிந்த ராஜபக்சேவின் பாசிச வலை பின்னப்பட்டிருக்கிறது.

ஆனால், புலிகளும் புலி ஆதரவுத் தமிழினவாதிகளும் தாங்கள்தாம் உலகிலேயே அரசியல் அதிமேதாவிகள் என்று நம்பிக்கொண்டு இரு பிரிவுகளாக நின்று, ‘கையை நம்பினோர் கைவிடப்படார்’ என்றும், ‘இலையும் தாமரையும் மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்றும் அணி சேர்கிறார்கள். இரட்சிப்பதற்குக் யாராவது கர்த்தாக்கள் வருவாரெனக்  காத்திருப்பதுதான் தமிழினவாதிகளின்  தன்னுரிமையோ?

– மாணிக்கவாசகம்.
____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013

____________________________________