privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகிரீசில் நாஜி வெறியர்களை எதிர்த்து மக்கள் போராட்டம்

கிரீசில் நாஜி வெறியர்களை எதிர்த்து மக்கள் போராட்டம்

-

கிரீசில் இடது சாரி மக்கள் பாடகரும், பாசிச எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஊக்கத்துடன் ஈடுபட்டவருமான பாவ்லோ, கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி தங்க விடியல் (Golden dawn) என்ற நியோ நாஜி (நவீன நாஜி) கட்சியினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தொழிலாளர்களும், பொதுமக்களும் இனவாத பாசிஸ்டுகளுக்கு எதிரான மிகப்பெரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 6 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த வேலை நிறுத்த போராட்டம் கிரீசின் 35-க்கும் மேற்பட்ட நகரங்களில் பற்றி படர்ந்தது. இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் நடந்தன. இதில் அனைத்து பொதுத் துறை ஊழியர்களும், பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டு இனவாத பாசிஸ்டுகளுக்கு எதிரான தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். தலைநகர் ஏதென்சில் நடந்த ஊர்வலத்தில் சுமார் 20,000 பேர் வரை கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

பாவ்லோஸ்
பாவ்லோஸ்

கொல்லப்பட்ட பாவ்லோஸ், ஒரு பைப் ஃபிட்டர் தொழிலாளியாக இருந்தவர். கிரீசின் பொருளாதார நெருக்கடியில் வேலை இழந்த பாவ்லோஸ் முழு நேர பாடகராக செயல்பட தொடங்கியிருக்கிறார். உலோகத் தொழிற்சங்க உறுப்பினரான இவர் அரசுக்கு எதிரான அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.

2008-ல் அமெரிக்காவில் ஆரம்பித்து ஐரோப்பாவெங்கும் பரவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து கிரீஸ் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. முதலாளித்துவத்தின் இலாப வெறியினால் ஏற்பட்ட இந்த பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் தலையில் கட்டி, முதலாளிகளை காப்பாற்றும் மீட்பனாக  கிரீஸ் அரசு, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவை களம் இறங்கின. இந்த நிறுவனங்கள் மீட்பு நிதியாக கிரீஸ் அரசுக்கு 24,000 கோடி யூரோ கடனளிக்க விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை குறைத்ததுடன் வரி விகிதத்தை உயர்த்தியுள்ளது கிரீஸ் அரசு. மேலும் சுகாதார பட்ஜெட் சுமார் 40% குறைக்கப்பட்டுள்ளது. காப்பீடு இல்லாமல் மக்கள் மருத்துவம் பார்க்க இயலாத சூழல் நிலவுகின்றது. கல்விக்கான மானியம் வெட்டப்பட்டுள்ளது.

கிரீஸ் நாஜி எதிர்ப்பு
கிரீஸ் நாஜி எதிர்ப்பு

மொத்த மக்கள் தொகையில் 28 லட்சம் பேர் வாழ்வதற்கே பணமில்லாத நிலையிலும், 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தமது குடும்பத்தில் எவருக்குமே வேலையில்லாததால் முற்றிலும் பணமில்லாத பராரிகளாகவும் தள்ளப்பட்டுள்ளனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அரசு அளிக்க வேண்டிய ஓய்வூதியம் போன்ற நிலுவையிலுள்ள தொகையை தவணை முறையில் அளிப்பதைக் கொண்டு தங்களால் வாழ இயலவில்லையென, அவற்றை உடனடியாக வழங்கக்கோரி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

இதன் விளைவாக, நாளுக்கு நாள் மக்கள் போராட்டங்களும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வீரியமாகிக் கொண்டு வருகின்றன.  “நாங்கள் 99%, முதலாளிகள் 1%” என்று கூறி பங்குச் சந்தை வீதிகளை கைப்பற்றும் போராட்டம் அமெரிக்கா, ஐரோப்பா முழுமைக்கும் நடந்தது. இந்த பின்னணியில் மக்கள் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கு முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டமாக மாறும் வாய்ப்பு இருப்பதை முதலாளிகள் அச்சத்துடன் பார்க்கின்றனர்.

இந்தச் சூழலில், ‘ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் காரணம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தான் என்றும் அவர்களால் தான் கிரீஸ் மக்களின் வாய்ப்புகள் தட்டி பறிக்கப்படுகின்றன, அவர்களை ஒழித்தால் பிரச்சனை  தீர்ந்து விடும்’ என்று பிரச்சாரம் செய்யும் இனவாத அமைப்புகளின் செல்வாக்கை ஆளும் வர்க்கங்கள் வளர்த்து விட ஆரம்பித்தன. முதலாளிகள் அதிக லாபம் சம்பாதிப்பதற்கு குறைந்த கூலியில் உழைக்க ஆள் வேண்டும் என்ற நோக்கத்தில் வெளி நாடுகளிலிருந்து அவர்கள் இறக்குமதி செய்த புலம் பெயர் தொழிலாளர்கள் மீது, அதே லாப வேட்டையின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கான பழியும் சுமத்தப்பட்டது.

இவ்வாறு மடை மாற்றுவது முதலாளித்துவத்திற்கு புதியது அல்ல. 1929-ல் அமெரிக்க வால்வீதியில் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடி நிதிச் சந்தை வீழ்ச்சி பொருளாதார பெரு மந்தமாக (Great Depression) உருவெடுத்து ஐரோப்பா நெருக்கடியில் சிக்கிய போது, மக்கள்  முதலாளித்துவத்தின் மீது நம்பிக்கை இழந்து, சோவியத் யூனியனின் முன்மாதிரியால் ஈர்க்கப்பட்டு, கம்யூனிச ஆதரவு வளர்ந்த நிலையில் ஜெர்மனியில் ஹிட்லரின் தலைமையில் நாஜிக் கட்சி வளர ஆரம்பித்தது.  ஜெர்மன் மக்களின் பிரச்சனைக்கு முழுக் காரணமும் யூத மக்கள் தான் என்ற இனவெறி பிரச்சாரம், அவர்களை ஒழித்தால் பொருளாதார பிரச்சனை தீர்ந்து விடும் என்ற மோசடி பிரச்சாரம், தேசிய சோசலிசம் என்ற சில சொல்லாடல்கள் இவற்றை பயன்படுத்தி, மக்களை திரட்டி ஆட்சியைப் பிடித்தது நாஜி கட்சி.

இதன் இந்திய பதிப்பாக 1980களுக்குப் பிறகு  மறுகாலனியாக்க கொள்கைகள் இந்தியாவில் தீவிரப்படுத்தப்பட போது, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் கையில் எடுத்த அயோத்தியில் இராமர் கோயில் பிரச்சனை மக்களை மத ரீதியாக பிளந்து, பொருளாதார பிரச்சனைகளுக்கு எதிரான போராட்டங்களை திசை திருப்பியது.

அதுபோல கிரீசில், 2009 நெருக்கடிக்கு பிறகு அதே செயல்தந்திரத்தை கடைப்பிடித்து  கோல்டன் டான் (Golden Dawn) என்ற இனவாத நாஜிக் கட்சி வளர்ந்து வருகிறது. “புலம் பெயர்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களால் கிரேக்க கலாச்சாரம் தாக்குதலுக்கு உள்ளாகிறது.” என பிரச்சாரம் செய்கிறது இந்த நியோ-நாஜி கட்சி. இந்தக் கட்சி தனக்கு என பா துணை இராணுவப் படையை பராமரித்து வருகிறது. இந்த படைக்கு கிரேக்க இரணுவம் பயிற்சியளித்து வருகிறது. உலக வங்கியின் ஆணைக்கு ஏற்ப  மக்கள் நலத் திட்டங்களை வெட்டும் கிரீஸ் அரசை கண்டித்து இடதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் போது உள்ளே புகுந்து கலவ்ரம் செயவதற்காக போலீஸ் இவர்களுக்கு ஆயுதங்களையும், ரேடியோ சாதனங்களையும் வழங்கியது ஏற்கனவே அம்பலமாகி உள்ளது. மக்கள் போராட்டங்களில் புகுந்து கலவரம் செய்வது, போலீசுடன் சேர்ந்து மக்களை தாக்குவது என இவர்களின் அடாவடி தொடர்கிறது.

போலீசுடன் இணைந்து போராட்டக்காரர்கள் மீது கல்லெறியும் கோல்டன் டான் அடியாட்கள்

கோல்டன் டான் முதலாளிகளுக்கு கூலிப்படையாகவும் செயல்படுகின்றது. “கை, கால்களை முறிப்பதற்கு 300 யூரோ, மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு தாக்க 1,500 யூரோ கொடுத்தால் போதும்” என கட்சி அலுவலகத்தில் வைத்து தனக்கு தொல்லை கொடுப்பவர்களை தாக்குவதற்கு தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக ஒரு பெண் பி.பி.சி க்கு கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவிக்கிறார். தான் வேண்டாம் என்று மறுத்தபோது இந்தத் தகவலை வெளியில் சொன்னால் உயிருடன் எரித்து விடுவேன் என மிரட்டியதாகவும் குறிப்பிடுகிறார் (பி.பி.சி வீடியோ).

இவர்கள் ஒரு பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து வேர்ட்பிரஸ் கோல்டன் டான் அமைப்பின் தளத்தை மூடியது.

கப்பல் முதலாளிகள், வங்கி முதலாளிகள், ரியல் எஸ்டேட் முதலாளிகளால் கட்டுப்படுத்தப்படும் கிரேக்க ஊடகங்கள் இந்த நவீன பாசிச கட்சிகளை வளர்த்து விடுவதில்  முக்கிய பங்காற்றியிருக்கின்றன. இந்தக் கட்சியானது 1980-களிலேயே ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும் 2009 பாராளுமன்ற தேர்தலில் அது வாங்கிய வாக்கு சதவீதம் 0.29 % மட்டுமே என்பதால் நாடாளுமன்றத்துக்கு ஒரு பிரதிநிதியை கூட அனுப்ப இயலவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு பிறகு 2012 தேர்தலில் வாக்கு சதவீதம் 6.97%-ஆக உயர்ந்து, அந்தக் கட்சி 21 பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பியது. புலம் பெயர்ந்தவர்கள் வாழும் பிரதேசங்களில் இதன் வாக்கு சதவீதம் 20%-ஐ எட்டியுள்ளது. புலம் பெயர் தொழிலாளிகளையும், கீரீஸ் மக்களையும் பிளவுபடுத்தி இதை சாதித்துள்ளது. வரவிருக்கும் ஏதென்ஸ் நகர மேயருக்கான தேர்தலில் இதன் வேட்பாளர் தான் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வருடம் மொத்தவாக்குகள்  வாக்கு சதவீதம் சீட்
1996 4,537 0.1% 0
2009 19,636 0.29 0
2012(மே) 440,966 6.97% 21
2012(ஜூன்) 426,025 6.92% 18

(நன்றி: விக்கிபீடியா   2009 பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் முதலாளிகள், கார்ப்பரேட் வங்கி, அரசு இவர்களின் ஆதரவினால் பாய்ச்சலில் அதிகரித்த வாக்கு சதவீதம்.

கிரீஸ் போராட்டம்இவ்வாறு கட்சியின் ஆயுதப் படைக்குஅரசின் பயிற்சி, முதலாளிகளின் பணம் மற்றும் ஊடக பலத்தால் செல்வாக்குடன் வளர்ந்து வரும் கட்சி, புலம் பெயர்ந்தவர்களையும் தொழிலாளர்களையும் குறி வைத்து தாக்கி வருகிறது. தொழிலாளிகள் உரிமை என்று பேசினால், முதலாளிகள் “கோல்டன் டான் கட்சிக்கு போன் போடவா?” என்று  மிரட்டுவதாக “ தி கார்டியன்” தயாரித்துள்ள ஆவணப் படத்தில் தொழிலாளிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆவணப் படம் இன்னும் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. “நாங்கள் பூங்காக்களில், விடுதிகளில், பார்களில் என அனைத்து இடங்களிலும் ஆபத்தாக உணர்கிறோம்” என்று இந்த ஆவணப் படத்தில் தெரிவிக்கிறார் ஒரு புலம் பெயர்ந்தவர். டி.வி விவாதத்தின் போது மாற்றுக் கருத்து கொண்டவர்களை  அங்கேயே அடிக்கிறார்கள் இந்தக் கட்சியினர்.

“இவர்கள் புலம் பெயர்ந்தவர்களை மட்டுமல்ல கம்யூனிஸ்டுகளையும் மாற்று இனமாக கருதுகின்றனர். தங்கள் கருத்துடன் உடன்படாதவர்களை மாற்று இனத்தவராக முத்திரை குத்துகின்றனர்” என்கிறர் லியனா கனீலி என்கிற கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.

கோல்டன் டான் குறித்த “தி கார்டியனின்” டாக்குமென்டரி

புலம் பெயர்ந்தவர்களை தாக்குவது, கொள்ளையிடுவது, கம்யூனிஸ்டுகளை தாக்குவது என அதன் அட்டூழியங்கள் தொடர்கின்றன. இதன் தொடர்ச்சியாகவே இந்த பாசிஸ்டுகளை இசை வழியாக எதிர்த்து போராடிய பாடகர் பாவ்லோஸ் கொல்லப்பட்டிருக்கிறார்.

கிரீஸ் போராட்டம்பாவ்லோசின் கொலையை தொடர்ந்த பாசிசத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் அழுத்தத்தால் அரசு கோல்டன் டான் கட்சியின் தலைவன் மற்றும் எம்.பிக்களை  கைது செய்துள்ளது. இந்த கைதுக்கு எதிராக கோல்டன் டான் உறுப்பினர்கள் அக்டோபர் 26 அன்று பெருந்திரளாக போராட்டம் நடத்தியுள்ளனர். கிரேக்க தெருக்கள் பாசிசத்துக்கும் அதற்கு எதிரான மக்கள் போராட்டத்துக்குமான களமாக மாறியுள்ளன.

இந்தியாவிலும் மறுகாலனியாக்கத்திற்கெதிரான மக்கள் போராட்டம பல வடிவங்களில் மேற்கு வங்கத்தில் நந்திகிராம், நியமகிரி, தமிழ்நாட்டில் கூடங்குளம், ஒடிசாவில் போஸ்கோ நிலப்பறிப்புக்கு எதிராக, வடகிழக்கு மாநிலங்களில் அரச வன்முறைக்கு எதிராக, காஷ்மீரில் தன்னுரிமைக்காக என தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஹிட்லரிடம் போய் அமைப்பு கட்டும் கலையை கற்று வந்த சங்க பரிவாரங்கள் கும்பலின் தலைவன் மோடியை இந்திய முதலாளிகள் இந்திய மக்கள் முன் ஊதிப் பெருக்கி, மக்களின் மீட்பனாக சித்தரிக்கிறார்க்ள்.

பொருளாதார நெருக்கடி போன்ற காலகட்டங்களில் மக்கள் போராட்டம அதிகமாக, தன்னை காத்துக் கொள்ளவும் போராட்டத்தை அடக்கவும் ஆளும் வர்க்கங்களுக்கு பாசிஸ்டுகளும், பாசிச சித்தாந்தங்களும் தேவைப்படுகின்றன. அதை ஒரு தேசியத்  தன்மையோடு கலந்து தங்களை தேசபக்தர்களாகவும், தாங்கள் உருவாக்குகின்ற போலியான எதிரியை தேச விரோதியாகவும் சித்தரிக்கின்றார்கள். இந்திய அளவில் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி உள்ளிட்டவை முஸ்லீம்களை ஆக்கிரமிப்பாளர்களின் வழித்தோன்றல்கள் என்றும் அவர்களால் தான் பிரச்சனை என்பது போலவும் சித்தரித்து தன் பாசிச கொள்கையை இந்து தேசியத்தின் மூலம் நிலைநாட்டுகின்றன.

தமிழக அளவில் மணியரசன் உள்ளிட்ட தமிழினவாதிகள் வடஇந்திய தொழிலாளர்களுக்கு ரேசன் அட்டை கொடுக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து தங்கள் பாசிசத்தை தமிழ்தேசியத்தின் பெயரால்  நிலைநாட்டுகிறார்கள். இராஜபக்சே சிங்களத்தின் பெயரால் தன் பாசிசத்தை நிலை நாட்டுகின்றான். இவர்கள் அனைவரும் முதலாளித்துவத்துக்கு சேவை செய்து தொழிலாளி வர்க்கத்தை காட்டி கொடுப்பவர்கள்.

இந்திய, தமிழ் நியோ நாசிகளுக்கு எதிராக நாம் போராடுவதும், கிரீஸ் மக்களின் போராட்ட்த்தை ஆதரிப்பதும் நமது கடமையாகும்.

மேலும் படிக்க