privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைநன்றி நரகாசுரன்...!

நன்றி நரகாசுரன்…!

-

அசுரர்கள்ன்பமயமாய் வாழ்ந்தவர்கள்
தேவர்கள்! – அதற்கு
இடையூறு செய்தவன் நரகாசுரன்
அவனைத் தீர்த்துக்கட்டியது தீபாவளி!
கொண்டாடுங்கள் என்கிறது புராணம்…

அசுரன் கெட்டவன் என்றதால்
அப்பொழுதே மறந்தேன்,
தேவர்கள் நினைவில் தெருவில் கலந்தேன்
தீபாவளி விளம்பரத்தில் ஊரே தேவலோகம்!

கவர்ச்சிகரமான டிசைன்களுடன்
காத்திருக்கும் துணிக்கடை முதலாளிகள்,

”இந்த தீபாவளிக்கு
எங்களிடம் தலையைக்கொடுங்கள்” என
வாழ்த்துக்களோடு வழியும் எண்ணெய் முதலாளிகள்.

இந்துக்களின் புனிதத் திருநாளை
தலைமுடியில் பிடித்திழுக்கும்
பன்னாட்டு ஷாம்பு கம்பெனிகள்,

கவர்ச்சிகரமான வட்டியுடன்
நம் வாழ்வில் ‘ஒளியேற்றும்’
கார்ப்பரேட் வங்கிகள்,

விளைநிலத்தை தரிசாக்கி
‘ரெண்டுகிலோ ஸ்வீட், புஸ்வானத்தோடு’
தீபாவளி பரிசாக்கும்
ரியல் எஸ்டேட் முதலாளிகள்,

தென்திசைக் காற்றின் முகந்தனை தீய்த்து
நன்நீர் ஊற்றுக்கண் நிலத்தடி மாய்த்து
தலைமுறை மார்பினில் காசநோய் பூத்து
தீபாவளி விளம்பரமாய் சிரிக்கிறது
வேதாந்தா ஸ்டெர்லைட்.

சாதாரண இருமலுக்குப் போனவனை
‘சங்கு சக்கரமாய்’ சுத்த விட்டு,
வாயில் தர்மாமீட்டரை விட்டு
வயிறு வழியாக சொத்தை எடுத்து,
கிட்னிக்கு ‘வெடி’ வைத்து
இதயத்தில் பாம்பு மாத்திரை கொளுத்திய
மருத்துவமனை முதலாளிகள் வாயிலிருந்து
‘மகிழ்வான வளம் கூட்டும்’ தீபாவளி வாழ்த்துக்கள்.

தேவலோகம் இப்படியெனில்,
தேவர்களின் கொண்டாட்டமோ,
செத்த எலிக்கே வீச்சம்!

நெய்யிலும், பொய்யிலும் பிரபலமான
ஸ்வீட் கடைகளில் வித வித ‘ஆர்டர்கள்’!
கிரெடிட் கார்டில் முறுக்கு பிழியும்
ஐ.டி. வளர்ச்சிகள்!
இனிப்புகள் பீதியுற
மொய்க்கும் விழிகள்!
எல்லாம் செரிக்க
தீபாவளி மருந்தாய் தீபாவளி மலர் ஜெயமோகன்கள்.

ஆடையே அறியாதவர் போல்
அலைந்தலைந்து ஒரேநாளில்
ஆயிரக்கணக்கில் கடை நுழைந்து
புதிய ரகங்களை பொறுக்கியெடுக்க,
ஜவுளிக்கடை ஊழியர்களின்
எலும்புகளை முறிக்கும்
ஜாலி ஷாப்பிங்!
புதுத்துணியில் இழையோடும்
தொழிலாளியின் காயம்
பூசும் பண்டிகை மஞ்சளால் புலப்படும்.

திளைப்பும், கொழுப்பும்
காரின் வேகத்தில் தெரியும்,
புது நகை வாங்க போகும் வழியில்
தானும் பிழைக்கும் சாலையோர வியாபாரியின்
கால்களைப் பார்த்து
காரின் விளக்குகள் கண்களில் எரியும்!
”தீபாவளி நேரத்துல இவுனுங்க ஒரு இடைஞ்சல்”
என பண்டிகை வேகம்
உதட்டினில் வெடிக்கும!

தீபாவளி ஷாப்பிங்
“தீபாவளி நேரத்துல இவுனுங்க ஒரு இடைஞ்சல்”

கொளுத்தும் பட்டாசிலும்
குறிவைத்து அனுப்பும் ராக்கெட்டிலும்
வர்க்கத்தின் வனப்பு மின்னும்!
வேடிக்கைப் பார்த்து
தெருவினில் வெடிக்காத பட்டாசைத்
தேடித் திரியும் ஏழைப் பிள்ளை நெஞ்சில்
ஆசை வெடிமருந்தாய்ச் சேரும்!

அனாதைகளை உருவாக்கும்
சமூக அமைப்பிற்கு வெடிவைக்காமல்,
அனாதை இல்லங்களில் போய் வெடிவைத்து
ஆடை, இனிப்பு என ஆடிப்பாடி கொண்டாடி
அடுத்த நொடியே அவர்களின் தேசத்தை சூறையாடும்
கார்ப்பொரேட் தருமங்கள்!

மிச்சம் வைக்காமல் ‘பில்’ போட
தீபாவளியை ‘நுகர’ அழைக்கும் முதலாளிகள்
‘மிச்சம்’ வைக்காமல் கொண்டாட
தலை தீபாவளிக்கு தயாராகும் மாப்பிள்ளைகள்…

தேவரீர் சமூகத்தின்
இந்தத் திளைப்புகளைய்ப் பார்க்கையில்
நான் திடமாக நம்புகிறேன்…
இந்தக் கொண்டாட்டங்களுக்கு இடையூறாக இருந்த
நரகாசுரன் நிச்சயம் நல்லவன்தான்!

– துரை.சண்முகம்