privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதேவர் சாதிவெறிக்கு ஆதரவாக சம்பத் கமிசன் அறிக்கை !

தேவர் சாதிவெறிக்கு ஆதரவாக சம்பத் கமிசன் அறிக்கை !

-

2011 செப்டம்பர் 11 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களில் ஒருவராகிய தியாகி இமானுவேல் சேகரன் குருபூசையையொட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தமிழக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் பலியானார்கள். துப்பாக்கி சூட்டில் இறந்த மஞ்சூரை சேர்ந்த ஜெயபால் என்ற இளைஞனை செத்த நாயைத் தூக்குவது போல நான்கு போலீசார் சேர்ந்து தூக்கிச் சென்ற காட்சி ஊடகங்களில் வெளியான போது ”நாம் ஒரு நாகரீக சமுதாயத்தில் தான் வாழ்கின்றோமா?” என்ற கேள்வியும், அதிர்வுகளும் இந்தியா முழுக்க பல்வேறு தரப்பில் கிளம்பியது. அடுத்த இரு நாட்களில் பரமக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே. சம்பத் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிசனை அமைப்பதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சம்பத் கமிசன்
ஆய்வு செய்யும் சம்பத் கமிஷன் (படம் : நன்றி தி ஹிந்து)

இந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சட்டசபையில் முன் வைக்கப்பட்டுள்ள சம்பத் கமிசனின் அறிக்கை காவல் துறையின் செயல்பாடுகளை, பொறுமையை, விவேகத்தை பாராட்டியதுடன், முதல்வரின் பெருந்தன்மையையும் போற்றிப் புகழ்ந்துள்ளது. தங்களை தற்காத்துக் கொள்வதற்காகத்தான் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அது சட்டப்படி சரி என்றும் சம்பத் தனது அறிக்கையில் கூறியுள்ளார். தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளாக அவரால் கை காட்டப்பட்டிருப்பவர்கள் போலீசின் கொலைவெறித் தாக்குதலால் பாதிக்கப்பட்ட, பலியான தாழ்த்தப்பட்ட மக்கள் தான்.

2011-ல் செப்டம்பர் 9 அன்று பரமக்குடிக்கு அருகிலுள்ள மண்டல மாணிக்கம் என்ற கிராமத்தில் பழனிமுத்து என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பள்ளி மாணவனை முள்காட்டில் வைத்து கொன்று விடுகின்றனர் தேவர்சாதி வெறியர்கள். அதற்கு அச்சிறுவன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை ‘ஒன்பது’ என இழிவுபடுத்தி ஊரில் உள்ள பொதுச்சுவரில் எழுதினான் என்ற ஒரு காரணத்தை ஆப்பநாடு மறவர் சங்கம் முதல் அம்மணி ஜெயலலிதா வரை அனைவரும் ஒரே குரலில் பேசியிருக்கின்றனர். உண்மையில் எப்படியாவது ஆண்டுதோறும் நடத்தப்படும் இமானுவேல் சேகரனுடைய குருபூசையை நிறுத்த வேண்டும் என்பது தான் ஆதிக்க சாதிகளின் நோக்கம். இதனை தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தாக்குதலில் ஈடுபடுகையில் ஆதிக்க சாதிகளை சேர்ந்த குறிப்பாக மறவர் சாதியை சேர்ந்த போலீசார் சொல்லிக் காட்டியே அடித்துள்ளனர். அச்சிறுவனது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தவும், தியாகி இமானுவேல் சேகரன் குருபூசையில் கலந்துகொள்ளவும் அங்கு வர இருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களில் ஒருவரான ஜான் பாண்டியனை மாவட்டத்திற்குள் நுழைய விடாமல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

தடையை மீறி குருபூசைக்கு வர முயன்ற காரணத்தால் அன்று காலையில் ஜான் பாண்டியனை வல்லநாட்டில் கைது செய்கிறது போலீசு. உடனே அவரது ஆதரவாளர்கள் சுமார் 50 பேர் திரண்டு பரமக்குடியில் உள்ள ஐந்து முக்கு சாலையில் மறியலில் ஈடுபடுகின்றனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரிக்கிறது. அப்போது அந்த வழியாக தாழ்த்தப்பட்ட மக்களின் இன்னொரு தலைவர் கிருஷ்ணசாமி குருபூசைக்கு செல்கிறார். அவருக்கு மாவட்ட நிர்வாகத்தால் செல்வதற்கு அனுமதி தரப்படவே, இரு தலைவர்களின் ஆதரவாளர்களுக்குள்ளும் கூட கொஞ்சம் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இதனை தனது அறிக்கையில் பெரிதுபடுத்தி காட்டியிருக்கிறார் நீதிபதி கே.சம்பத். இதனாலும் குழப்பம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னை அடையாறு துணை ஆணையர் செந்தில்வேலன் மற்றும் பரமக்குடி காவல்துறை ஆய்வாளர் சிவக்குமார், வட்டாட்சியர் சிவக்குமார் போன்றோர் மறியல் செய்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் உடனே தடியடியை துவக்கினார். மக்களிடமிருந்து கற்கள் மற்றும் கம்புகள் போன்றவை பறந்து வரவே, பின்வாங்குவது போல முதலில் பம்மி காவல்நிலையத்துக்கு பின்வாங்கிய போலீசார் அடுத்து உடனடியாக வெளியே வந்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். வருவாய்த்துறையிடம் எழுத்துப் பூர்வமான அனுமதி பெற்றுத்தான் அப்போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் கூறுகின்றனர். இறந்தவர்களின் உடலையும் கூட மீண்டும் மீண்டும் தாக்கினர். தங்களது வாகனங்களுக்கு அவர்களே தீ வைத்துக் கொண்டனர். வேடிக்கை பார்த்த மக்களையும் போலீசார் விட்டு வைக்கவில்லை. மாலை ஆறு மணி வரை போலீசார் நடத்திய அராஜக தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், எண்ணிடலங்காதோர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். பல்லவராயனேந்தல் கணேசன், வீரம்பல் பன்னீர், மஞ்சூர் ஜெயபால் (நாயைப் போல இவரது சடலத்தை போலீசார் தூக்கிச் சென்றனர் – இவர் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்), சடயனேரி முத்துக்குமார், கீழக்கொடுமலூர் தீர்ப்புக்கனி (இவர் எப்படி இறந்தார் என சம்பத் ஆல் கண்டுபிடிக்க முடியவில்லையாம்), காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ஆகியோரே இறந்த ஆறு பேரும் ஆவார்கள்.

தடியடி
போலீஸ் தடியடி (படம் : நன்றி தி ஹிந்து)

மறுநாள் சட்டசபையில் துப்பாக்கிச் சூடு குறித்து அறிக்கை சமர்ப்பித்த ஜெயலலிதா சம்பவத்திற்கு தாழ்த்தப்பட்டவர்களே காரணம் என்பதை மறைமுகமாக கோடிட்டுக் காட்டியிருந்தார். அடுத்த சில நாட்களில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சம்பத் தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது. கமிசனின் இறுதி அறிக்கை கடந்த மே 7-ம் தேதி முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது வெளியாகியிருக்கும் சம்பத் கமிசன் அறிக்கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு மக்களிடம் போலீசார் சிலர் நடந்து கொண்ட விதம் சரியில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதனை அரசு ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது. அதே நேரத்தில் கலவரக்காரர்கள் துணை ஆணையர் செந்தில்வேலனை தாக்க முயன்றார்கள் என்றும், காவல் நிலையத்துக்கு தீ வைக்க முயன்றார்கள் என்றும், தீ வைப்பது, பெட்ரோல் குண்டு வீசுவது என அவர்கள் கலவரம் செய்ய ஆரம்பிக்கவே துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாமல் போய்விட்டதாக நீதிபதி கே. சம்பத் போலீசாரின் வக்கீலாக பேசியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தி வன்முறையை கட்டுக்குள்ள கொண்டு வர போலீசார் தவறியிருந்தால் தென் மாவட்டம் முழுக்க சாதிக் கலவரம் பரவி இருக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும், அமைதியை நிலைநாட்டவும் துப்பாக்கிச் சூடு அவசியம் என்றும், அது நியாயமானது என்றும் சம்பத் கூறியுள்ளார். இக்கலவரத்தில் போலீசார் அளவு கடந்த பொறுமை காத்தனர் என்றும், அதனை தான் மெச்சுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தாசில்தார் எச்சரிக்கை செய்தும் நிலைமை கட்டுக்குள் வராத காரணத்தால் தான் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி தரப்பட்டதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பொதுச் சொத்துக்களை நாசப்படுத்திய கலவரக்காரர்களை கண்டறிந்து தக்க தண்டனைகளை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார். உண்மையில் போலீசு வாகனங்களுக்கு அன்று தீ வைத்தவர்கள் பின்வாங்கியது போல நடித்த போலீசாரே.

ஓய்வுபெற்ற ஆசிரியர் வெள்ளைச்சாமி (வயது 72) என்பவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஆய்வாளர் சிவக்குமார் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தீர்ப்புக்கனி என்பவர் எப்படி இறந்தார் என்பது பற்றி கண்டறியப்பட வேண்டும் என்றும் கமிசனால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதலில் வெள்ளைச்சாமியிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த ஆய்வாளர் திடீரென அவரது சாதியை இழிவாக பேசி லத்தியால் கொடூரமாகத் தாக்கியதுடன் நீண்ட நேரம் ரத்தம் வடிய வடிய அவரை தெருவில் போட்டு வைக்குமாறு செய்துள்ளார். ‘பள்ளப் பயலுக்கெல்லாம் எதுக்குடா செருப்பு’ எனக் கூறி செருப்பை எடுக்க முயன்ற போது அம்முதியவரை ரத்தம் வரும் வரை லத்தியால் அடித்துத் தாக்கியுள்ளார். பல போலீசார் துப்பாக்கி சூடு முடிந்த பிறகும் நிராயுதபாணியாக இருந்த மக்களை சூழ்ந்து கொண்டு கொலைவெறியுடன் தாக்கியதை ஏற்க முடியாது என கமிசன் கூறியுள்ளது. ஆனால் அறிக்கையின் இப்பகுதியை விசாரணை கமிசனின் வரம்பை மீறியிருப்பதாக கூறி மாநில அரசின் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் நிராகரித்து விட்டார்.

போலீசாரால் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த 1000 பேரில் சத்தியமூர்த்தி என்ற பத்தாம் வகுப்பு மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும், வேடிக்கை பார்க்கவே அவன் அங்கு வந்திருந்தான் என்றும் கண்டறிந்து கூறியுள்ள சம்பத், காயமடைந்த கார்த்திக் ராஜா என்பவருக்கு இன்னும் ரூ.30 ஆயிரம் வரை இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தருமாறும் பரிந்துரைத்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு இதுகுறித்த அரசாணை ஒன்றையும் நேற்று பிறப்பித்துள்ளது.

மரணமடைந்தவர்களைப் பற்றி கமிசன் கூறுகையில் ‘கலவரங்களில் ஈடுபடும் வகையில் தவறாக வழி நடத்தப்பட்டு அதனால் பலியானவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது. தேவர் ஜெயந்தி அன்று உண்மையிலேயே குடித்து விட்டு வீதியில் கும்மியடிக்கும் சாதி வெறியர்களைப் பற்றி இப்படி குறிப்பிட சம்பத் முன்வருவாரா? அதற்கு அவருக்கு தைரியம் இருக்கிறதா? பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்திற்கு அரசு செய்த உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், இதில் வெளிப்பட்டுள்ள அரசின் பெருந்தன்மையையும், கருணையையும் கண்டு பெருமிதம் அடைவதாகவும் சம்பத் கூறியுள்ளார். அப்பகுதியில் சமூக அமைதியை நிலை நாட்டவும், தொழில் வளர்ச்சியை பெருக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் சில வழிகாட்டுதல்களை கமிசன் வழங்கி உள்ளது. இவை ஏற்கெனவே அரசிடம் இருப்பதாகக் கூறி மாநில அரசு அப்பரிந்துரைகளை நிராகரித்து விட்டது.

சம்பத் கமிசனின் அறிக்கை ஏறக்குறைய அண்ணா தி.மு.க-வின் கொள்கை விளக்க அறிக்கை போலவே தெரிகிறது. கற்களையும், கம்புகளையும் எதிர்கொள்ள இயலாத சூழலில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக சொல்லும் போலீசாரின் கூற்றை அப்படியே ஏற்றுக்கொண்ட கமிசன், இறந்தவர்களில் ஒருவர் (தீர்ப்புக்கனி) போலீசாரால் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை வெறுமனே மீண்டும் விசாரிக்குமாறுதான் பரிந்துரைத்திருக்கிறது.

போலீஸ் கொடூரம்
காயமடைந்தவரை தூக்கிச் செல்லும் போலீஸ். (படம் : நன்றி தி ஹிந்து).

அழகிரி கைதானால் சாலை மறியல், ஜெயா கைதானால் பேருந்துக்கு தீ வைத்து மாணவிகளைக் கொல்வது என எல்லா அரசியல் கட்சிகளும் செய்யும் போது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு மாத்திரம் மறியல் செய்ய உரிமை கிடையாது எனச் சொல்கிறது போலீசு. ‘பள்ளப் பசங்களுக்கெல்லாம் குரு பூசையாடா’ எனக் குமுறும் தேவர் சாதி வெறியர்கள் ‘தெய்வத் திருமகன்’ என்ற வார்த்தையை கூட முத்துராமலிங்க தேவரை தவிர யாருக்கும் பயன்படுத்த கூடாது என அடாவடி செய்து வருவதும் நாடறிந்த உண்மை. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற துப்பாக்கிச் சூடு அவசியம் எனில் அக்டோபர் 30 அன்று சுற்றியுள்ள எல்லா மாவட்டங்களிலும் தேவர் சாதியினர் நடத்தும் பேரணி அக்கிரமத்தை எப்படி தடுக்கப் போகிறார்கள்? துப்பாக்கிச் சூடு நடத்தியா?

பொறுமையின் உறைவிடமாகவும், நயமாகவும் போலீசார் அன்று நடந்து கொண்டதாக நீதிபதி சம்பத் சொல்லியிருப்பது முழுப்பொய். பொதுவாகவே ‘பாம்பையும், போலீசையும் பார்த்தால் ஒதுங்கு’ என்று தான் மக்கள் காலம் காலமாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். போலீசின் நண்பர்களாக இருந்து போராடும் மக்களை காட்டிக் கொடுக்கும் உள்ளூர் எடுபிடிகளைக் கூட கண்டால் ஒதுங்கும் அளவுக்கு மக்களுக்கு அவர்கள் மீது வெறுப்பிருக்கிறது. மக்களின் நண்பன் என்று போலீசு நெற்றியில் எழுதிக் கொண்டு வந்து சொன்னாலும் நம்புவதற்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

இந்த லட்சணத்தில் சமூகத்தில் புரையோடிப் போயுள்ள ஆதிக்க சாதிவெறி போலீசிலும் நிலவுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களை ஏதோ குற்றவாளிகளைப் போலவும், தண்டிக்கப்பட வேண்டியவர்கள் போலவும் கருதும் இவர்கள், தங்களின் அதிகாரத்திற்கு கீழே எல்லா வகையிலும் குனிந்து நிற்க வேண்டியவர்கள் கேள்வி கேட்கவும் போராடவும் துவங்கவே கண்மண் தெரியாமல் தாக்கத் துவங்குகிறார்கள்.

சம்பத் கமிசனின் அறிக்கை சட்டமன்றத்தில் வைக்கப்பட்டவுடன் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி அதனை எதிர்த்து வெளிநடப்பு செய்தார். இந்த ஆண்டு தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அம்மாவட்டத்தில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அக்டோபர் 30 அன்று அதிமுகவின் செல்லூர் கே. ராஜூ மற்றும் சுந்தர்ராஜன் போன்ற அமைச்சர்கள் காரில் பசும்பொன் சென்ற போது தேவர்சாதியினை சேர்ந்தவர்கள் ”144 தடையுத்தரவு போட்டு விட்டு இங்கு எதற்காக வந்தீர்கள்” எனக் கேட்டு அவர்களது கார்களை மறித்துள்ளனர். செங்கற்களும், கம்புகளும் அமைச்சர்களது கார் மீது வீசப்பட்டன.

ஆனால் அத்தேவர்சாதி கும்பல் மீது சிறு தடியடி கூட காவல்துறை நடத்தவில்லை என்பதையும் இத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. இதன்மூலமாக போலீசு, ஜெயலிலிதா, நீதிபதி என எல்லோருமே சாதிக்கு ஒரு நீதியை வைத்திருப்பது தெளிவாக தெரிகிறது. இத்துடன் 2011 செப்டம்பர் 11 அன்று இளையாங்குடி மற்றும் மதுரை சிந்தாமணி பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடுகள் பற்றியும் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. இதனை ஒரு செய்தியாகவே தமிழக அரசு இதுவரை கருதவில்லை.

சம்பத் கமிசனின் பரிந்துரைகளில் ஒன்று, இனி வரும் காலத்தில் எல்லா சாதித் தலைவர்களுக்குமே குருபூஜை நடத்த அரசு அனுமதி தரக் கூடாது என்பது தான். சுந்தரலிங்கத்தின் பெயரில் போக்குவரத்துக் கழகம் ஆரம்பித்து பிற ஆதிக்க சாதிகளுக்கு அது பிரச்சினையானவுடன் எல்லா போக்குவரத்துகழகங்களுக்கும் இருந்த பழைய பெயரை அரசு நீக்கியது போல இதற்கும் செய்ய முயல வேண்டும் எனப் பரிந்துரைத்தாலும், முத்துராமலிங்கத் தேவரை தேசியம், தெய்வீகம் எனப் புரட்டல் செய்து அதை மட்டும் விழாவாக நடத்தி விடுவார்கள். அந்த உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்படும்.

தற்போது பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் நேரத்தில் தேவர் சாதி மக்களின் வாக்குகளை கவர்ந்திழுக்கவும், அச்சாதியில் இருக்கும் ஒரு சில வெறியர்களை சமாதானப்படுத்தவுமே சம்பத் கமிஷனின் அறிக்கை “தேவர் குரு பூஜை” நாளில் திட்டமிட்டு வெளியிடப்படுகிறது.

போலீசும், அரசும், ஓட்டுக்கட்சிகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியையும் வழங்கி விடாது என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

– வசந்தன்