privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாபெர்டோல்டு பிரெக்ட் : ஜெர்மனியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன் !

பெர்டோல்டு பிரெக்ட் : ஜெர்மனியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன் !

-

பிரெக்டின் ‘எமக்குப் பின் பிறந்தார்க்கு’ என்ற கவிதைதான் அவர் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வரும். பிரெக்டின் முக்கியமான அரசியல் கவிதைகளில் அது ஒன்று.

பெர்டோல்ட் பிரெக்ட்
பெர்டோல்ட் பிரெக்ட்

‘’அவர்கள் சொன்னார்கள்:
‘சாப்பிடு, பருகு’
கிடைத்ததே என்று சந்தோசப்படு’

எப்படி நான் தின்பேன், குடிப்பேன்!
எனக்கான சோறு பசித்தவரிடமிருந்து
பிடுங்கிக் கொடுக்கப்படுகிறதே;
கிடைக்கும் ஒரு குவளைத் தண்ணீரும்
தாகத்தால் துடிப்பவர் கையில்
இருந்தே.

இருப்பினும் நான் தின்கிறேன்,
குடிக்கிறேன்.’’

பிரெக்டு பெர்லின் நகரத்திற்கு வந்த போது எங்கும் பசி, பட்டினிச் சாவுகள், மக்களின் கலகங்கள்; கலகம் செய்தவர்களோடு பிரெக்டும் சேர்ந்து கொண்டார். கிடைத்த நேரத்தில் கிடைத்ததைச் சாப்பிட்டார். எந்நேரமும் கொலை நிழல் அவரது உறக்கத்தின் மீது படர்ந்து கொண்டே இருந்தது. பேச உரிமை இல்லை, நடமாட உரிமை இல்லை. அதிலும் அரசியல் விமர்சகர் உண்மையைப் பேசினால் கசாப்புக்கு அனுப்பப்பட்டார். அரசியல் தொடர்புகளைச் சந்திப்பதற்குச் சென்றால் அநேகமாகச் சிறைக்குள் தள்ளப்படுவது நிச்சயம்; அல்லது சுட்டுக் கொல்லப்படலாம்.

ஜெர்மனியில் இட்லரின் கூலிப் படைகளின் அடக்கு முறை ஆட்சி பற்றி பிரெக்டு எழுதிய கவிதையே மேலே நீங்கள் படித்தது. அவர் கலை வேறு, வாழ்க்கை வேறு என்று வாழ்வதை வெறுத்தார்; அதனாலேயே பல பிரச்சினைகளை எதிர் கொண்டார். பிரெக்டு உள்ளுறையாக மறைத்து அரசியலை எழுதினாலும் அதை இட்லரின் உளவுப் படை விளங்கிக் கொண்டது. அவரது நூல்களைத் தேடிப் பிடித்து எரித்தது; தடை செய்தது; அவரது நாடகங்களுக்கு உயிர் கொடுத்து வந்த நாடக அரங்கம் பூட்டிச் சீல் வைக்கப்பட்டது.

தனது பதினாறாவது வயதிலேயே சமூக நோக்குள்ள கவிதை எழுதத் தொடங்கிய அவர் தனது வாழ்க்கையில் பல பிரச்சினைகளைச் சந்திக்க கூடும் என்று தெரிந்தே இப்படி முடிவு செய்திருந்தார். ஆரம்ப காலத்திலேயே – “கவிதை என்பது நிரந்தரமாக நிலைத்து நிற்கும் தரத்தில் சுய அனுபவங்களைச் சொல்ல வேண்டும்; அன்றாட சமூக, அரசியல் பிரச்சினைகளைப் பற்றி எழுதினால், அவற்றின் வாழ்வு அற்ப சொற்பமாக முடிந்து போய் விடும்’’ என்ற கருத்தை அவர் ஏற்கவில்லை. தனது கவிதைகளுக்கு நிரந்தரத்துவம் தேவையில்லை, அதைப் படிப்பவர் ஏற்றுப் பயன்படுத்த வேண்டும், அந்தக் கருத்துக்களுக்கு செயல் உருக் கொடுக்க வேண்டும் என்று முடிவு கொண்டிருந்ததார்.

முப்பதாம் ஆண்டுகளில் ஜெர்மானியக் கவிஞர்கள் சிலர் வறுமைக்கும் துயரத்துக்குமான காரணத்தை சமூகத்துக்கும் அப்பால் தேடி, தப்பித்து, விலகி வாழ்ந்தபோது, பிரெக்டும் அவரைப் போன்ற சிலரும் அதற்கான காரணங்களைச் சமூகத்திலேயே தேடினார்கள். பொருளாதாரச் சீர்குலைவே சமூக அவலங்களுக்கு அடிப்படை, இதற்குக் காரணம் முதலாளித்துவப் பொருளாதாரமே என்று மார்க்சிய தத்துவத்தை வழிகாட்டியாக மேற்கொண்டார்கள்.

தொழிலாளிகள் ஐரோப்பா முழுவதும் ஒரு பெரும் சக்தியாகத் திரண்ட அன்றைய சூழலில் பிரெக்டு போன்றவர்கள் ‘நடைமுறைப் பாடல்கள்’ என்ற வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். சாதாரணத் தொழிலாளிகளும் எளிதாகப் பாடுவதற்காகப் பாடல்களை எழுதினார்கள். தனி நபர்வாதக் கவிஞர்களுக்கு எதிராக அரசியல் கலகக் கொடி ஏற்றிய கலைஞர்களுக்கு பிரெக்டு தலைமை தாங்கினார் என்றே சொல்லலாம்.

தனிநபர்வாதிகள் தங்கள் கவிதைகளின் ஆழத்துக்காக, ரசனைகளுக்காக பழைய வடிவங்களிலிருந்தும் சரி, புதிய வடிவங்களிலிருந்தும் சரி ‘உயர்ந்த’ பாணியை கடைப் பிடித்தார்கள். அதற்கு நேர் எதிராக – பிரெக்டு ஜெர்மானிய நாட்டுப்புறப் பாடல்களைப் பயன்படுத்தி கதைப் பாடல்களை எழுதினார்.

அவரது பாடல்கள் போர்க்கள முழக்கமாயின; படைநடைப் பாடல்களாயின; அங்கத வீச்சு வாள்களாயின. அவரது கதைப் பாடல்கள் ஒரே ஒரு கித்தாரைப் பின்னணி இசையாக மீட்டி இசைக்கப்பட்டன – அவரே கித்தாரை மீட்டிப் பாடுவார். நடைமுறைப் பயன்பாடு என்ற அணுகுமுறையை வைத்து கலையின் புது அழகியலை உருவாக்கிக் கொண்ட பிரெக்டு இயல்பாகவே நாடகத்தின் பக்கம் இழுக்கப்பட்டார். அவரது கதைப் பாடல்கள் நாடக அரங்கிலும் இடம் பெற்றன.

நாடக அரங்கிலும், சினிமாவிலும் இசைப் பாடல்களைப் பயன்படுத்தினார். குர்த்வைல், ஹான்ஸ் ஐஸ்லர் போன்ற இசை அமைப்பாளர்களைக் கொண்டு இசையமைத்து இவர் அமைத்த பாடல்கள் சர்வதேச அளவில் தொழிலாளர் இயக்கங்களில் ஏற்றுப் பாடப்பட்டன. ஜெர்மனி, ரசியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், அமெரிக்கா பான்ற நாடுகளின் தொழிலாளர் வழி நடைப் பாடல்களாக அவை உருவாயின. ஒரு சில தொழில் விற்பன்னர்களின் அக்கறையாக இருந்த கவிதை பல இலட்சம் தொழிலாளர்கள் முடுக்கி, தூண்டி, உணர்வூட்டி இயக்கிய ஜனரஞ்சகமான பாடல்களாயின.

அவரது பேனாவிலிருந்து பல நாடகங்கள் பிறந்தன. அவை அன்றைய அரசியல் பற்றிய கூர்மையான அங்கத – நகைச்சுவை நாடகங்களாகவோ அல்லது முதலாளித்துவச் சந்தையைத் திரை கிழிக்கும் விமர்சன அரசியல் நாடகங்களாகவே இருந்தன. ‘எடுத்த நடவடிக்கைகள்’, ‘சந்தையின் புனித ஜோற்’, கார்க்கியின் ‘தாய்’ நாவலின் நாடக வடிவம், ‘மூன்று பென்னி (ஜெர்மானிய நாணயம்) இசை நாடகம்’, ‘வட்டத் தலைகளும் முக்கோணத் தலைகளும்’ (ஒருவரின் இனத்தை வைத்து அவர் குலத்தைத் தீர்மானிக்கும் இட்லரின் இனவெறி அரசியலைக் கிழித்தெறியும் அங்கத நாடகம்), ‘வெள்ளை வட்டம்’ (உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கருத்து), ‘கலிலியோ’ (பூமி உருண்டை என்று முடிவெடுத்ததற்காக கிறித்தவ மதத் தலைவர்களால் சித்திரவதைக்குள்ளாகும் கலிலியோ வாழ்க்கை பற்றி) – இப்படிப் பல நாடகங்கள் காவிய பாணியில் படைக்கப்பட்டன.

பிரெக்டு விஞ்ஞான யுகத்திற்கேற்ப தன் நாடக மேடையை அமைப்பதாகச் சொன்னார். ‘’விஞ்ஞானம் என்பது நேருக்கு நேர் மோதுதலைக் கொண்ட அறிவுத் தோட்டம்…. அதுபோல, நாடகக் காரர்களான நாம் விஞ்ஞானத்துக்கு முந்திய அஞ்ஞான யுகத்தில் இருப்பது போல் நடக்க முடியாது. பார்வையாளர்கள் நுழை வாயிலேயே தங்கள் மூளைகளை கழட்டி விட்டு வரும்படி நாம் கோர முடியுமா? – அது வெட்கக் கேடானது, அதேநேரம் அபாயகரமானதும் பொறுப்பற்றதும் கூட.’’

சமூகத்தை, அரசியலை விளங்கிக் கொள்வதும், அதை மாற்றுவதற்கான உந்துதலைப் பெற்றுக் கொள்வதும் நாடக மேடையிலிருந்தும் நடக்க வேண்டும். இதற்கேற்ற ‘காவியபாணி’ என்றொரு பாணியை, வடிவத்தை பிரெக்டு உருவாக்கினார். பல ஊற்றுமூலங்கள் இதற்கு உண்டு. கிழக்கு ஆசிய நாடக மேடையின் எளிமையும் தூரப்படுத்தும் கோட்பாடும்; ஹெர் ஸ்டெயின்ரக் என்ற நடிகரின் தேர்ந்த யதார்த்த பாணி நடிப்பு; எர்வின் பிஸ்கேட்டர் என்ற கம்யூனிஸ்டு அரசியல் நாடக இயக்குனரின் நாடகங்கள்; அமெரிக்கர்களின் அங்க சேட்டைகள் – இதிலிருந்து மனித நடத்தைகள் பற்றிய கவனிப்பையும் ஆய்வையும் பிரெக்டு எடுத்துச் செய்தார்; சார்லி சாப்ளினின் பாவனைகள் (உடல் அசைவுகள்) –இப்படி ஒரு வளமான கல்வியை பிரெக்டு தன் சொந்த முயற்சியில் பெற்றிருந்தார்.

ஆசிய நாடகங்ளிலிருந்து அவர் பெற்ற தூரப்படுத்தும் வடிவம் பற்றிச் சில முக்கியப் பிரச்சினைகள் இங்கே குறிப்பிடாமல் இருக முடியாது. எடுத்துக்காட்டாக தமிழக தெருக் கூத்தில் இடம் பெறும் கதை சொல்லும் முறையும், கட்டியங்காரனின் பங்கு பாத்திரமும் இத்தகையது. பழம் சீன நாடகங்கள் பற்றி பிரெக்ட் இதேபோல குறிப்பிடுகிறார். மேடையில் நடக்கும் கதை பல ஆயிரமாண்டு முந்தையதாக இருந்தாலும், இடையே கதையைத் தற்கால அரசியலுக்கும் சமூகச் சூழலுக்கும் பொருத்தியோ அல்லது விமர்சித்தோ நடத்துவது இதன் முக்கியமான அம்சம். இதன் மூலம் நாடகம் பார்ப்பவர்கள் நாடகத்தின் உணர்ச்சிமயமான (நகைச்சுவை, சோகம்) பாத்திரங்களிலோ காட்சிகளிலோ மூழ்கிவிடாமல் ஒரு சமூக விமர்சகனைப் போலவும், ஒரு ஆய்வாளனைப் போலவும் விலகி நின்று ஆராயும் வாய்ப்பு ஏற்படுகிறது.

பிற்போக்குக் கருத்துக்களைத் தாங்கி இருப்பினும், ஆசிய நாடகங்களில் – குறிப்பாக நாட்டுப்புறக் கலைகளில் இந்தக் கூறுகள் உண்டு. இவைபற்றி பிரெக்டு அறிந்திருந்தார். உணர்ச்சிகளுக்கு அல்ல, மாறாக அறிவுக்கே இம்மேடை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று காவிய பாணி நாடகம் பற்றி அவர் கூறியதாகக் குறிப்பிடுவார்கள்.

பிரெக்டின் கலைப் பாணியை அவர் வாழ்ந்த காலத்தின் அரசியல் பண்பாட்டுச் சூழலுடன் பொருத்திப் பார்த்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆரிய இனவெறி, வெள்ளை நிற வெறி, யூத எதிர்ப்பு, ஜெர்மன் தேச வெறி, போர்வெறி ஆகிய அனைத்தும் கலந்த நாஜி அரசியல் ஜெர்மானிய மக்கள் மீது செல்வாக்கு செலுய காலம் அது.

ஆரிய இனத்தவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அரைக் குரங்குகள் என்று கருதும் இனவெறி வெறும் அரசியல் பிரச்சாரமாக மட்டுமின்றி பரிணாம வளர்ச்சிக் கோட்பாடாக, இயற்கை விஞ்ஞானமாகவே திருத்தி எழுதப்பட்ட காலம் அது. வேறு வார்த்தைகளில் சொன்னால் போலி உணர்ச்சிகளின் பலி பீடத்தில் பகுத்தறிவு காவு கொடுக்கப்பட்ட காலம் அது.

அந்தப் போலி உணர்ச்சிகளின் முகத்திரையைக் கிழித்தெறிய கலை, இலக்கியமும் முன் மாதிரிகளைப் படைக்கிறது. இசைந்து செல்லுதல் என்பது ஒத்து ஊதுதல் அல்ல.

பிரெக்டின் அனுபவத்தை நாம் நமது நிலைக்குப் பொருத்துவது எப்படி? மதவெறியும், தேசவெறியும், ஆளும் வர்க்கங்களின் புனிதமான ஒழுக்க விழுமியங்களும் ‘’உணர்ச்சி பூர்வமாக’’ ஊதிப் பருக்க வைக்கப்படும் போது, பகுத்தறிவு எனும் குண்டூசியால் நமது படைப்புகள் அதனைக் குத்த வேண்டியிருக்கிறது.

நுகர் பொருள் மோகமும், இன்பக் களியாட்ட வெறியும், அந்த வாழ்க்கையைப் பெறுவதற்காக எல்லா மனித உறவுகளையும், சக மனிதர்களையும் பண்டமாகக் கருதி ‘’வரவு – செலவுக் கணக்கு’’ போடும் காரிய சாத்தியப் (pragmatic) ‘பகுத்தறிவும்’ கோலோச்சும் இன்றைய பண்பாட்டுச் சூழலில் இதற்கெதிராக உழைக்கும் மக்களின் உணர்ச்சியை வாளாக ஏந்தவும் வேண்டியிருக்கிறது.

சமூக மாற்றத்திற்கான நோக்கமோ, அதற்குரிய நாணயமான நடைமுறையோ இல்லாத முதலாளித்துவ அறிஞர்கள் சிலர் பிரெக்டின் தூரப்படுத்தும் கோட்பாட்டைச் சோதனை செய்து பார்க்கவும் அதற்குப் புதிய தத்துவஞான விளக்கம் தரவும் முயற்சிக்கிறார்கள்.

ஆனால் சோசலிசத்தையும், சோவியத் அரசு வடிவத்தையும் எதிர்த்த இவ்வறிஞர்களின் மூதாதையர்களை எதிர்த்துப் போராடியவர் பிரெக்ட். சோசலிசம் உருவாக்கும் புதிய மனிதனைப் போற்ற கிழக்கு ஜெர்மனியின் கூட்டுப் பண்ணை அனுபவத்தை மேடையேற்றியவர்; பால்ராப்சனைப் போலவே சோவியத் அளித்த லெனின் விருது பெற்ற கலைஞர்.

முதலாளித்துவத்தைக் கட்டோடு வெறுத்த, சோசலிசத்தை நேசித்த, ஒரு இயங்கியல் பொருள் முதல்வாதிதான் பிரெக்ட் எனும் மனிதன்; அந்த மனிதனில் மலர்ந்தவன் தான் பிரெக்ட் எனும் கலைஞன்.

பிரெக்ட் எனும் மனிதனின் சமூகக் கண்ணோட்டத்தை ஏற்க மறுக்கும் ‘’கலை விற்பன்னர்கள்’’ அவரது கலைக் கோட்பாட்டின் அடிப்படையில் நடத்தும் ‘’வித்தியாசமான சோதனை’’களுக்கும், டி.வி.எஸ். அய்யங்கார், நாட்டுக்கோட்டை செட்டியார் வம்சங்களைச் சேரந்த மாமிகளும், ஆச்சிகளும் சதையைக் குறைப்பதற்காக நடத்தும் ‘’நாட்டிய சோதனை’’களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

‘’எங்கள் மூளைகளிலிருந்து சில்லுகளையும் தூசுகளையும் துடைத்தெறிந்தவர்’’ என்று பிரெக்டைப் பற்றிக் கூறிகிறார் அன்னா செகர்ஸ் என்ற சக எழுத்தாளர். தாங்கள் அமைதி கண்டு விட்டதாகச் சொன்ன நண்பர்களை ஓயாது தொந்தரவு செய்து அவர்களது அமைதியைக் குலைத்தவர் பிரெக்ட். அவரது நூற்றாண்டில் நாம் தொடர வேண்டிய பணியும் அதுதான்.

பெட்டிச் செய்தி :

பிரக்டின் வாழ்க்கையிலே….

பெர்டோல்டு பிரெக்ட் – நாஜி இட்லரை குலை நடுங்க வைத்த கம்யூனிஸ்டு கலைஞர்களில் ஒருவர். முக்கியமாக ஒரு நாடகாசிரியர்; ஒரு கவிஞர்; மக்கள் கலை படைத்த ஒரு பேனாப் போராளி.

1898-இல் ஜெர்மனியில் பிறந்த பிரெக்டு, தாயின் மதநம்பிக்கையில் வளர்க்கப்பட்டு பின் எந்த மத நம்பிக்கையுமில்லாதவராக முதிர்ச்சி பெற்று ஒரு கம்யூனிஸ்டு கொள்கைப் பற்றாளராக வாழ்ந்தார். முதல் உலகப் போர் நிகழ்ச்சிகள் அவருக்கு ஏகாதிபத்திய நரகத்தையும், சோசலிச ரசியா என்ற நம்பிக்கை மலர்ச்சியையும் ஒருங்கே அடையாளம் காட்டின. 1918-இல் இராணுவ மருத்துவ மனையில் சேவை செய்ய உதவியாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று ஜெர்மனி இளைஞர்கள் கட்டாய இராணுவ சேவை செய்தேயாக வேண்டும். அது ‘தேச’ப்பணி. இதற்குப் பிறகு மருத்துவப் படிப்பைத் தொடரந்து முடித்தார். என்றாலும் ஜெர்மானிய இதயங்களின் மனநோய்க்கு மருந்துகாண கலை இலக்கித்தையே வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

1942-இல் பிரெக்டு பெர்லின் நகருக்குச் சென்று அங்கு பத்தாண்டுகள் வாழ்ந்தார். ‘டாய்ட்ஸ் தியேட்டர்’ என்ற நாடக அரங்குடன் இணைந்து பல நாடகங்களை எழுதி இயக்கினார். இவ்வாண்டுகளில் அவர் மார்க்சியத்தை முறையாகப் படித்தார். பாட்டாளி வர்க்கத்தின் உலகக் கண்ணோட்டத்தைப் பயின்றதோடு நில்லாமல் அவர்களோடு வாழ்ந்து அவர்களின் போராட்டங்கள், நடப்பு அரசியல் நிகழ்ச்சிகளை நெருங்கிக் கவனித்தார்.

1928-இல் தொழிலாளிகளுக்காக நடத்தப்பட்ட ‘மார்க்சியப் பள்ளி’க்குச் சென்று கற்றார். நாஜிகள் உருவாக்கி வந்த யுத்தம் பற்றி வர்க்க விழிப்பு தேவை என்பதைப் பிரச்சாரம் செய்தார். இக்காலத்தில்தான் எலன் வைகல் என்ற பொதுவுடமைப் பற்று கொண்ட நடிகையை மணந்தார். நாஜிகள் சர்வாதிகாரம் ஆட்சிக்கு வருவதற்குச் சில நாட்கள் முன்னமேயே ‘’வட்டத்தலைகளும் கோணத் தலைகளும்’’ என்ற நாடகத்தின் மூலம் இட்லரின் ‘தேசிய சோசலிஸ்டுகள்’ பற்றிய முதல் எச்சரிக்கையை மக்களிடம் கொண்டு சென்றார்.

1933-இல் நாஜிகள் ஆட்சிக்கு வந்தனர். பிரெக்டின் மீது பாசிசக் காட்டு மிராண்டித் தாக்குதல் தொடங்கியது. அவரது புத்தகங்கள் எரிக்கப்பட்டன. ‘டாய்ட்ஸ் தியேட்டர்’ இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது; அவரது ஜெர்மனியக் குடியுரிமை பறிக்கப்பட்டது. 1933-முதல் 41 வரை ஒன்பதாண்டுகளுக்கு ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஸ்வீடன். நார்வே போன்ற நாடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். டென்மார்க்கில் நீண்ட காலம் இருந்து, பிறகு அமெரிக்கா சென்று 1947 வரை வாழ்ந்தார். அந்தப் பத்தாண்டு காலமும் அரசியல் ரீதியில் பாசிய எதிர்ப்பு முன்னணிச் செயல் வீரராகத் திகழ்ந்தார். பாசிசம் வீழும் என்று அறிவிக்கும் வலிமை வாய்ந்த கவிதைகளை, நாடகங்களை இக்கட்டத்தில் தான் பிரெக்டு எழுதினார்.

1949-இல் கிழக்கு ஜெர்மனிக்குத் திரும்பிய பிரெக்டு ‘பெர்லின் நாடகக் குழு’வை நிறுவினார். 1871-இல் பாரீசில் தொழிலாளர்கள் அமைத்த கம்யூனை நினைவு கொண்டு ‘கம்யூன் நாட்கள்’ என்று ஒரு நாடகத்தை எழுதினார். அதுவே அவரது கடைசி நாடகம்; போராட்டம் மிகுந்த ஒரு செழுமையான வாழ்க்கை வாழ்ந்த பிரெக்டு, 14 ஆகஸ்டு 1956 அன்று மறைந்தார்.

– குப்பண்ணன்
____________________________________________________
புதிய கலாச்சாரம், மே 1999
____________________________________________________