privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ராம்கோ குரூப்பின் முதலாளித்துவ பயங்கரவாதம்

ராம்கோ குரூப்பின் முதலாளித்துவ பயங்கரவாதம்

-

ராஜபாளையம் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. குறிப்பாக ராம்கோ குரூப். பி.ஏ.சி. ராமசாமி ராஜா என்பவரால் தொடங்கப்பட்டு சிமிண்ட், நூற்பாலை, மருத்துவ துணிகள் ஆலை, கூரைத் தகடுகள் என பலதுறைகளில் கால்பரப்பி இந்திய அளவில் ராஜஸ்தான் வரையிலும், பன்னாட்டு அளவில் இலங்கை, பாகிஸ்தான் வரையிலும் விரிந்து வரும் நிறுவனம் தான் ராம்கோ குரூப்.

ராஜபாளையம் மில்ஸ்
ராஜபாளையம் மில்ஸ் – ராம்கோ குழும நிறுவன முதலாளி ராமசாமி ராஜா

இந்த ராம்கோ குரூப்பின் கட்டுப்பாட்டில் தான் ராஜபாளையம் பகுதி இருக்கிறது. அவர்கள்வைத்தது தான் இங்கு சட்டம். அவர்கள் விரும்பாத எதையும் இங்கு நடக்க விடமாட்டார்கள்.

மின் வெட்டுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தை காவல்துறை தலையிட்டு இடைநிறுத்தியது குறித்து ஏற்கனவே வினவு வாசகர்களுக்கு தெரியும். இப்படி ஊருக்குள் நடக்கும் பொது நிகழ்ச்சிகளையே தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக நடத்தக் கூடாது என நினைக்கும் இவர்கள் தங்கள் தொழிலாளர்களை எப்படி நடத்துவார்கள்?

எல்லா தொழிற்சாலைகளையும் போலவே இங்கும் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள், உரிமை மறுப்பு, அடிப்படை வசதிகளின்மை, அடாவடித்தனம், கருங்காலித்தனம் என அத்தனையும் உண்டு. தொழிற்சாலைக்குள் மட்டுமல்ல குடும்பத்தினரிடம் கூட ஆலை நிர்வாகத்தைப் பற்றி விமர்சனமாக எதுவும் பேசிவிடக் கூடாது என நினைக்குமளவுக்கு தொழிலாளர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். இப்படியான சூழலில் தான் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

டந்த 01/11/2013 வெள்ளியன்று மதியம் 3 மணிக்கு மேல், ராம்கோ குரூப்பின் ஒரு பிரிவான ராஜபாளையம் மில்ஸ் எனும் நூற்பாலையில் நடக்கும் அத்து மீறல்களையும், தொழிலாளர்கள் நிலையினையும், அவர்கள் புரட்சிகர சங்கங்களில் திரண்டு போராட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி ஆலையின் வாயில் பகுதிக்கு முன்பு சாலையில் தொழிலாளர்களிடம் பிரசுரம் வினியோகித்துக் கொண்டிருந்தார்கள் இரண்டு தோழர்கள்.

திடீரென ஆலைக்குள்ளிருந்து பாய்ந்து வந்த ஏழெட்டு பேர், “எங்கள் ஆலைக்கு முன்னால் வந்து எங்களை எதிர்த்து நோட்டீஸ் கொடுக்கிறீர்களா?” என்று தோழர்களை குண்டுக் கட்டாக தூக்கிக் கொண்டு ஆலைக்குள் சென்றார்கள்.

தோழர்கள் கையிலிருந்த பிரசுரத்தை பறித்து படித்துப் பார்த்த அதிகாரிகள், “உள்ளே இருக்கும் தொழிலாளர்களின் உதவியில்லாமல் இப்படி நோட்டீஸ் தொகுக்க முடியாது. உங்களுக்கு உதவிய தொழிலாளர்கள் யார் எனக் கூறுங்கள் உங்களை விட்டு விடுகிறோம்” என்று கூறியிருக்கிறார்கள்.

அதற்கு தோழர்கள் “சாலையில் நின்று பிரசுரம் வினியோகிக்கிறோம். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? எங்களை இப்படி நீங்கள் தூக்கி வந்ததே தவறானது. எங்களை போக விடுங்கள். நாங்கள் அமைதியாக பிரசுரம் வினியோகித்து விட்டு சென்று விடுவோம்.இதை தடுப்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை” என்று எதிர்த்து பேசியிருக்கிறார்கள்.

இதன் பிறகு அங்கிருந்த அதிகாரிகள், கருங்காலிகள், குண்டர்கள் என 15 பேர் தோழரை தாக்குகிறார்கள். ஆண் தோழருக்கு அடி, உதை, கீழே தள்ளி மிதிக்க பெண் தோழரை நாக்கூசும் நாராச வார்த்தைகளால் அர்ச்சித்திருக்கிறார்கள். இதில் ஆண் தோழர் மயங்கி விழுந்து விட தண்ணீர் தெளித்து மயக்கத்திலிருந்து விடுவித்து பின்னர் அடி உதை, விசாரணைகள் தொடர்ந்திருக்கின்றன.

இதற்குள் வெளியில் நின்றிருந்த தோழர்கள் இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் மில் முதலாளி மீதும், ஹெச். ஆர் மேனேஜர் மீதும் தோழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதாக புகார் அளித்துள்ளனர். ஆலைக்குள் சென்ற காவல் துறை துணை கண்காணிப்பாளரும் நிர்வாகத்தினரோடு சேர்ந்து கொண்டு தோழர்களிடம் எப்.ஐ.ஆர் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.

அதையும் தோழர்கள் துணிவுடன் எதிர்கொள்ளவே நிலைமை விபரீதமாக போவதைத் தெரிந்து கொண்டு தோழர்களின் குடும்பத்தினரையும், ஆலைக்குள் வேலை பார்க்கும் தோழர்களின் பகுதியைச் சேர்ந்தவர்களையும் அழைத்து வந்து நைச்சியமாக “உள்ளே இருக்கும் தொழிலாளர்கள் யார் என்பதை மட்டும் காட்டிக் கொடுத்து விடுங்கள். உங்களை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் விட்டு விடுகிறோம். உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்கிறோம்” என்று ஒரு பக்கம் பேசிக் கொண்டே மறு பக்கம் தோழரின் செல்பேசியை பறித்து அதிலிருக்கும் நம்பர்களை அழைத்து ஆபாசமாக திட்டிக் கொண்டும் இருந்திருக்கிறார்கள்.

என்ன ஆனாலும் உயிரே போனாலும் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க மாட்டோம் என்பதில் தோழர்கள் உறுதியாக இருந்தார்கள்.

இதன் பின்னர் வேறு பகுதி தோழர்கள் மூலமாக டி.எஸ்.பி க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாலை ஏழு மணிக்கு தோழர்களை விட்டு விடுவதற்கு முன் வந்தார்கள். ஆலையிலிருந்து அப்படியே வெளியில் அனுப்பக் கூடாது அவர்களை போலீஸ் ஸ்டேசன் அழைத்து வர வேண்டும். புகார் மனுவை பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து தோழர்கள் ஸ்டேசனில் முழக்கம் எழுப்ப, “தீபாவளி நேரமாக இருப்பதால் பிரச்சனை வேண்டாம் இப்போது அழைத்துச் செல்லுங்கள் தீபாவளி கழித்து புகாரை பதிவு செய்து விசாரிக்கிறோம்” என்று போலீஸ் சமாதானம் செய்ததின் பேரில் தோழர்கள் திரும்பியிருக்கிறார்கள்.

பொது இடத்தில் பிரசுரம் வினியோகிப்பது தவறா? ஜனநாயகம், சுதந்திரம் என்பதெல்லாம் பல்லிளிக்கும் இடம்  இதுதான். இது சுதந்திர நாடு என்றால், இங்கு ஜனநாயகம் இருக்கிறது என்றால் தோழர்கள் பிரசுரம் வினியோகித்தது எப்படி தவறாகும்? அப்படியே தவறு என்றாலும் ஆலை நிர்வாகத்தினர் தோழர்களைத் தாக்குவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? இந்தக் கேள்விக்கான விடையை நம்மால் குற்ற நடவடிக்கைகளில் தேட முடியாது. அரசியல் நடவடிக்கைகள் மூலமே தேட வேண்டும். ஏனென்றால் தோழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அரசியல் நடவடிக்கை தானேயன்றி குற்ற நடவடிக்கை அல்ல.

தொழிலாளர்களையும் நாட்டின் வளங்களையும் தாராளமாக சுரண்டிக் கொள்ளலாம் என்பது முதலாளிக்கு உள்ள சுதந்திரம், இந்த சுதந்திரத்திற்கு தடையாக உள்ள எதையும் சட்டம், மக்கள் உரிமை என்று எந்தக் கவலையும் இன்றி அடக்கி ஒடுக்குவதற்கும் தேவைப்பட்டால் கொலை செய்வதற்கும் கூட முதலாளிகளுக்கு உரிமை உண்டு. தேசிய முதலாளியா, தரகு முதலாளியா, பன்னாட்டு முதலாளியா என்பதைப் பொறுத்து அளவுகள் மாறலாம். ஆனால், இது தான் யதார்த்தம்.

இதற்கு மாறாக உழைக்கும் மக்களுக்கோ டாஸ்மாக சரக்கடித்து வீதியில் விழுந்து கிடப்பதற்கு உரிமையுண்டு. ஆபாச வக்கிரங்களை கலை என்ற பெயரில் திரைப்படங்களிலும் இணையத்திலும் கண்டு களித்து வீணாவதற்கு சுதந்திரம் உண்டு. சாதிச் சங்கங்கள் என்ற பெயரில் நித்தம் ஒரு சுவரொட்டி ஒட்டி அடாவடி செய்வதற்கு ஜனநாயகம் துணைக்கு வரும். ஆனால் ஒரு முதலாளியை எதிர்த்து இழந்து கொண்டிருக்கும் உரிமைகளைக் கேட்டால் உரிமையோ, சுதந்திரமோ, ஜனநாயகமோ எதுவும் இருக்காது. முதலாளியின் தாக்குதல் உட்பட காவல் துறையினரின் அத்துமீறல்கள் வரை அத்தனையும் எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். இதுவும் யதார்த்தம். இந்த உரிமைகளிலிருந்து தான் முதலாளி தொழிலாளர்களை தாக்குகிறான், உரிமைகளைப் பறிக்கிறான் , சுரண்டிக் கொழுக்கிறான்.

யதார்த்தம் இப்படி இருக்க, இந்த ரவுடித்தனத்தை சுதந்திரம், ஜனநாயகம் என்று உழைக்கும் மக்களும் நம்புகிறார்களே அதனால் தான் இது போன்ற கொடுமைகள் இவ்வளவு காலமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ராஜபாளையம் மில்ஸ்
ராஜபாளையம் மில்ஸ்

இது நமக்கான சுதந்திரம் இல்லை என்பதை ராஜபாளையம் மில்ஸ் தொழிலாளர்கள் உணர்ந்திருந்தால் அந்த 15 ரவுடிகள் தோழரைத் தாக்கியிருக்க முடியுமா? அச்சேற்ற முடியாத வக்கிர வார்த்தைகளை உதிர்த்திருக்க முடியுமா? ஆனாலும் தொழிலாளர்கள் உணர்ந்து வருகிறார்கள். “நோட்டிஸ் கொடுத்தது தப்பா? ஏன் அடிக்க வேண்டும்? நமக்காக எங்கிருந்தோ வந்து அடிவாங்கியிருக்கிறார்களே, எவ்வளவு அடித்துக் கேட்டும் தோழர்கள் உள்ளிருக்கும் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க வில்லையே” எனும் உணர்ச்சிகள் தான் தொழிற்சாலை முழுவதும் பேச்சாக இருக்கிறது. இது அவர்களுக்கு புரிதலைக் கொடுக்கும். அதற்கான வேலைகளில் தோழர்களும், ஆதரவுத் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். மரம் ஓய்வை நாடினாலும் காற்று சும்மா இருப்பதில்லையே.

சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று திங்கள் கிழமை அதிகாலை 4 மணிக்கு ராஜபாளையம் மில்ஸின் ரவுடித்தனத்தை கண்டித்து தோழர்கள் சுவரொட்டிகள் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த போலீசார் ஒட்டிய சுவரொட்டிகளையும், தோழர்களை வைத்திருந்த சுவரொட்டிகளையும் கிழித்துப் போட்டு, பசையை கீழே கொட்டி இரண்டு தோழர்களை தெற்கு போலிஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு துணை கண்காணிப்பாளர் முகவரி, தொலைபேசி எண்களை வாங்கி வைத்துக் கொண்டு அழைத்த போதெல்லாம் விசாரணைக்கு வர வேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் இது போன்ற இயக்கங்களில் சேர்ந்து உங்கள் வாழ்க்கையை வீணக்கிக் கொள்ளாதீர்கள் என்று இலவச அறிவுரைகளை வழங்கி, எந்தப்பிரச்சனை என்றாலும் நாங்கள் நிர்வாகத்திற்குத்தான் ஆதரவாக இருப்போமேயன்றி உங்களுக்கு ஆதரவாக இருக்க முடியாது என்று மிரட்டி விடியும் வரை வைத்திருந்து விட்டு அனுபியுள்ளார்கள்.

இப்படி அப்பட்டமாக சட்டத்தை மதிக்காமல் உரிமைகளை மீறும் ஆலை நிர்வாகத்தையும் காவல் துறையையும் சும்மா விட்டு விட முடியுமா? தோழர்கள் தொடர் நடவடிக்கைகளை ஆலோசித்து வருகிறார்கள். புஜதொமு சங்கம் கட்டாமல் விடப் போவதில்லை. ராம்கோ குரூப்ஸின் கொட்டத்தை அடக்காமல் ஓயப் போவதில்லை.

வினியோகிப்பட்ட பிரசுரம்

அன்பார்ந்த ராம்கோ குரூப் நூற்பாலை தொழிலாளர்களே,

பலகாலமாக தொழிற்சாலைகளில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும் இயல்பாக இருக்க வேண்டிய மகிழ்வோடு நீங்கள் இருக்கிறீர்களா? எப்போது வேலை போகுமோ எனும் அச்சம், எப்போது நிரந்தரம் செய்யப்படுவோமா எனும் கவலை, விற்கும் விலைவாசியில் போதாத சம்பளம் ஏற்படுத்தும் பற்றாக்குறையை எப்படி சரிக்கட்டுவது எனும் சிந்தனை, எப்போதும் கண்காணிக்கப்படுவது போன்ற உணர்வால் நிம்மதியற்ற நிலை போன்றவற்றால் ஒரு இயந்திரம் போல் மாறிக் கொண்டிக்கிறீர்கள் என்றால் அது மிகையல்ல. இதுதான் அனைத்து தொழிற்சாலைகளிலும் உள்ள தொழிலாளர்களின் நிலையாக இருக்கிறது. இப்படித்தான் தொடர்ந்து இருக்கப் போகிறீர்களா?

நிரந்தரத் தொழிலாளர்கள்

ராம்கோ குரூப் நூற்பாலைகளிலும் கூட அதே நிலை தான். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் இந்த ஆலையில் பணி நிரந்தரம் செய்யப்பட்டிருப்பவர்கள் நானூறு பேர் கூட இல்லை. ஏழு, எட்டு ஆண்டுகள் பணி செய்தும் கூட நிரந்தரமாக்கப்படாத தொழிலாளர்கள் இங்கு இருக்கிறார்கள். ஆனால் அரசின் சட்டமோ 480 நாட்கள் வேலை செய்து விட்டாலே, நிர்வாகம் அறிவிக்கா விட்டாலும் கூட அந்த தொழிலாளி அடுத்த நாள் முதல் நிரந்தரத் தொழிலாளியாக ஆகிவிடுகிறார் என்கிறது.

ஊதிய உயர்வு

தொழிலாளர்களுக்கு போதிய ஊதியம் தரப்படுவதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இதற்கென நியமிக்கப்படும் கமிட்டி நிர்வாகத்திற்கு சாதகமாக நடந்து கொண்டு விலைவாசி உயர்வு உள்ளிட்ட எதையும் கணக்கிலெடுக்காமல் ஒப்புக்கு ஊதிய உயர்வை அறிவித்து ஏற்றுக் கொள்கிறது. அடிப்படை அலகாக 50 பைசாவுக்கு மேல் உயர்த்த மறுக்கிறது நிர்வாகம். ஆனால் உங்களுடைய உழைப்பின் பலனாக கடந்த ஆண்டு ராம்கோ குரூப் ஆலைகள் நிகர லாபம் மட்டும் 695 கோடி ஈட்டியுள்ளன.

போனஸ்

ராம்கோ குரூப் நிறுவனத் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஒரு நாளில் செலவழிக்கப்பட்ட தொகை கோடிகளை எட்டியிருக்கிறது. அதிலும் உங்கள் ஊதியத்திலிருந்து ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டுக்கான போனஸ் தொகையாக மொத்த தொழிலாளிகளுக்கும் சேர்த்து 10 கோடி என்று நிர்வாகம் ஒதுக்க அதை ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவித்துவிட்டு வந்திருகின்றன ஏ.ஐ.டி.யு.சி; ஐ.என்.டி.யு.சி; ஹெச்.எம்.எஸ். போன்ற சங்கங்கள்.

எந்திர வேகம் அதிகரிப்பு

ஒவ்வொரு ஆண்டும் எந்திரங்களின் உற்பத்தி வேகத்தை தொடர்ந்து கூட்டிக் கொண்டே போகிறது நிர்வாகம். இதனால் நான்கு எந்திரங்களுக்கு கூட சைடு பார்க்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள் தொழிலாளர்கள். இதைப் பயன்படுத்தி துணைக்கு ஒரு ஆளை விட்டு விட்டு சைடு சம்பளத்தை மொத்தமாக விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது நிர்வாகம்.

பாதுகாப்பு

ஒவ்வொரு வாரமும் உறுதிமொழி எடுப்பது என்ற பெயரில் விபத்து நேர்ந்தால் அதற்கு தானே காரணம் என தொழிலாளியை நம்ப வைக்கிறது நிர்வாகம். விபத்துகளுக்கு காரணம் உண்டு, பாதுகாப்பற்ற பழக்கங்களும், பாதுகாப்பற்ற சூழ்நிலையும் தான் காரணம் எனும் உறுதி மொழியை வாரந்தோறும் சொல்ல வைத்து அதே நேரம் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் தொழிலாளர்களுக்கு கொடுக்காமல் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

நிர்வாகத்தின் சதித்தனம்

குறைந்த சம்பளத்துக்கு வட மாநிலங்களிலிருந்து ஆட்களை கொண்டு வந்து இறக்கியிருப்பதோடு மட்டுமல்லாமல், புதிய ஆட்களை நேரடியாக எந்திரங்களில் வேலை கொடுத்து விட்டு நிரந்தரத் தொழிலாளர்களை, பழைய தொழிலாளர்களை துணை வேலைகளை செய்யச் சொல்வதன் மூலம் அவர்களை மன உழைச்சலுக்கு ஆளாக்கி அவர்களாகவே வேலையை விட்டுப் போகும்படி சதித்தனமான வேலைகளில் இறங்கியிருக்கிறது நிர்வாகம்.

பழிவாங்கும் நிர்வாகம்

சிறுநீர் கழிக்கக் கூட நேரமில்லாத அளவுக்கு இயந்திரங்களின் வேகம் அதிகரிக்கப்பட்டிருக்க கழிப்பறை, தண்ணீர் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல், இருந்தாலும் முறையாக பராமரிக்காமல் தொடர்ந்து அலட்சியம் செய்து வருகிறது நிர்வாகம்.

விஜயதசமி போன்ற பண்டிகை நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டும் என்றால் முன்னதாகவே அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கி கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது நிர்வாகம். ஆலோசனை எழுதிக் கொடுத்தால் பரிசு என்ற பெயரில் தொழிலாளர்களுக்குள் கருங்காலிகளை உருவாக்கி தொழிலாளர்களை ஒருவித அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வைத்திருக்கிறது நிர்வாகம்.

இக்கொடுமைகளை எதிர்த்துக் கேட்டாலோ, தொழிலாளர்களுடன் பேசினாலோ, முணுமுணுத்தாலோ கூட பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி தொழிலாளர்களை பழிவாங்குகிறது நிர்வாகம். இவைகளை கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய அரசோ கண்டு கொள்வதில்லை. அதிகாரிகளோ நிர்வாகத்துக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள்.

தொழிலாளர்கள் தங்களின் கடினமான வாழ்க்கைச் சூழலினால் இவற்றை சகித்துக் கொண்டு போகிறார்கள். இருக்கும் தொழிற்சங்கங்களோ நிர்வாகத்திற்கு வால் பிடித்துச் சென்று தொழிலாளர்களுக்கு துரோகம் செய்கின்றன. ஆனால் நிலமை இப்படியே இருந்துவிடுமா? இறுகிக் கொண்டிருக்கும் சூழ்நிலைகள் மேலும் மேலும் தொழிலாளர்களை வாழ முடியாது எனும் நிலைக்குள் தள்ளுகின்றன.

தொழிற்சாலைகளின் நிலை

நாடு முழுவதும் தொழிற்சாலைகள் இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்களை மனிதப் பிறவியாக கருதாமல் ஒரு இயந்திரமாகவே கருதுகின்றன. எல்லாவித அடக்குமுறைகளையும் கையாண்டு தொழிலாளர்களை கசக்கிப் பிழிகின்றன. எதிர்த்துக் கேட்டால் வெளியில் இருக்கும் வேலையில்லாப் பட்டாளத்தைக் காட்டி சம்பளத்தைக் குறைத்து விருப்பமிருந்தால் வேலை செய் என்று மிரட்டுகிறது. எந்த உரிமைகளையும் கொடுப்பதில்லை. சட்டப்படியாக அரசு வழங்கியிருக்கும் எந்தச் சலுகைகளையும் வழங்குவதில்லை. தொழிலாளர்களை முறைப்படி நிரந்தரம் செய்வதில்லை.  முதலாளிகள் தங்களின் கொள்ளை லாபத்திற்காக எந்தவித இழிசெயலையும் செய்யத் தயங்குவதில்லை. அவர்களுக்கு இந்தத் துணிவைக் கொடுத்தது யார்?

யார்? எது காரணம்?

அரசின் தனியார்மய தாராளமய உலகமய கொள்கைதான் நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடவும், தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து சுரண்டவும் முதலாளிகளுக்கு சட்டபூர்வமாகவே வழி செய்து கொடுக்கிறது. இந்தக் கொள்கையின் அங்கமாக இருந்துதான் முதலாளி தொழிலாளியைச் சுரண்டுகிறான். முதலாளியின் நலனுக்காகவே இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை தனியொரு தொழிலாளியால் எதிர்த்துப் போராட முடியுமா? இப்படி எண்ணித்தான் தொழிலாளர்கள் முடங்கிப் போய் கிடக்கிறார்கள். ஆனால் இழந்து கொண்டிருப்பது நம் வாழ்க்கை. நம் வாழ்க்கையை பாதுகாக்க நாம் ஒன்றிணைவதைத் தவிர வேறு வழியில்லை. நம்மைப் பிரிக்கும் அத்தனை பேதங்களையும் கடந்து தொழிலாளர்களாய் ஒன்றிணைந்து சங்கமாகி போராடினால் தான் நாம் சுரண்டப்படுவதை தடுக்க முடியும். நம்முடைய உரிமைகளையும் மீட்டெடுக்க முடியும்

வாருங்கள் தொழிலாளர்களே! புரட்சிகர சங்கத்தின் கீழ் அணி திரள்வோம்! நமக்கான உரிமைகளை வென்றெடுப்போம்.

ஒட்டப்பட்ட சுவரொட்டி

ராம்கோ குரூப் – ராஜபாளையம் மில்ஸின் ரவுடித்தனம்

மில்முன்பு தொழிலாளர்களிடம் பிரச்சாரம் செய்த பு.ஜ.தொ.மு தோழர்கள் மீது
காட்டுமிராண்டித் தாக்குதல்

தொழிலாளர்களே! உழைக்கும் மக்களே!

தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்த்து முறியடிப்போம்!
உரிமைகளை வென்றெடுப்போம்!

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி