privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாஇந்தியாவை ஆள்வது யார் ?

இந்தியாவை ஆள்வது யார் ?

-

ந்தியாவை ஆள்வது யார்?

ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்
இந்தியாவுக்கான தர மதிப்பீட்டை குறைக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது ‘ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்’

சென்ற வாரம் ஊடகங்களில் வெளிவந்துள்ள சில செய்திகள் இதற்கு பதில் அளிக்கலாம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்த கதியில் இருப்பதால், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி குறித்த இந்தியாவுக்கான தர மதிப்பீட்டை குறைக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது ‘ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்’ என்ற சர்வதேச தர நிர்ணய நிறுவனம். வரும் 2014 நாடாளுமன்ற தேர்தல் வரையிலும் காத்திருக்கப் போவதாகவும், புதிய அரசு பொறுப்பேற்றதும் இந்த மந்தமான சூழலை மாற்றாமல் போனால், நடவடிக்கை உறுதி என்கிறது எஸ் அண்ட் பி.

இதே நிறுவனம், பிரான்ஸ் நாட்டின் கடன் வாங்கும் திறனை AA+ என்ற நிலையில் இருந்து AA என்ற நிலைக்கு தகுதிக் குறைப்பு செய்திருக்கிறது. இந்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு AAA என்ற நிலையில் இருந்து AA+ என்ற நிலைக்கு பிரான்ஸ் நாட்டை தகுதியிறக்கம் செய்த எஸ்&பி, இப்போது அதை விடவும் ஒரு படி கீழே இறக்கியுள்ளது.

ஒரு நாட்டின் அரசாங்கத்தையே மிரட்டிப் பார்க்கும் இத்தகைய தர நிர்ணய நிறுவனத்தின் பிரதான நோக்கம் என்ன? அதுவும் பத்திரிகை செய்தியிலேயே இருக்கிறது. ‘இந்தியாவின் இப்போதைய பொருளாதார வளர்ச்சியே மந்தமாகத்தான் இருக்கிறது. இப்போதே தர நிர்ணயத்தைக் குறைக்கலாம். ஆனால் அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால், ‘அதன் முடிவுகளின் மூலம் வளர்ச்சி ஏற்படக் கூடிய சாத்தியத்தை மறுத்து’ முன் முடிவுடன் இப்போதே மதிப்பீடு செய்வது போல் ஆகி விடும். அதனால்தான் நாங்கள் தேர்தல் வரை பொறுத்திருப்பது என்று முடிவு எடுத்திருக்கிறோம்’ என்கிறது எஸ் அன்ட் பி. ரொம்ப பெருந்தன்மைதான். அந்தப் பெருந்தன்மையின் பின்னே ஒழிந்திருப்பது என்ன என்பது, அதே செய்தியின் பின்னால் வருகிறது.

பிரான்ஸ் தரநிர்ணயம்
பிரான்ஸ் நாட்டின் கடன் வாங்கும் திறனை AA+ என்ற நிலையில் இருந்து AA என்ற நிலைக்கு தகுதிக் குறைப்பு செய்திருக்கிறது எஸ்&பி

‘இதை செய்யலேன்னா, நான் ரேட்டிங்கை குறைச்சிருவேன்’ என்று கழுத்தில் கத்தி வைத்து எஸ் அண்ட் பி செய்யச் சொல்லும் ‘அது’ என்ன? நாம் புரிந்து கொள்ள வேண்டியதும் அதைத்தான். ‘‘மானியம் குறித்து மத்திய அரசு வெளியிட்டு வரும் அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. எனினும், டீசல் விலை மீதான அரசின் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பது ஒரு சாதகமான அம்சம். இந்த ஆண்டின் (2013) இறுதியில் டீசலுக்கான மானியத்தை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம், டீசலின் விலையை சர்வதேச விலைக்கு ஏற்றாற் போல அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம். இத்தகைய சீர்திருத்தங்களே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்” என்கிறது எஸ்&பி.

டீசல் விலைக்கான மானியம் முற்றிலுமாக நீக்கப்படுவதை ஆராவாரத்துடன் வரவேற்கிறது இந்த தர நிர்ணய நிறுவனம். இப்படி மக்கள் நலத் திட்டங்களுக்கான மானியங்களை வெட்ட வேண்டும் என்பதும், புதிய தாராளமயக் கொள்கையை இன்னும் வேகமாக அமல்படுத்த வேண்டும் என்பதும்தான் இத்தகைய தர நிர்ணய நிறுவனங்களின் கோரிக்கை. அவை கோரிக்கை கூட இல்லை. நிபந்தனை. ‘‘டீசல் மானியம், உணவு மானியம், உர மானியம் என இந்தியாவின் முன்னே பல சவால்கள் காத்திருக்கின்றன’’ என்று இதை வர்ணிக்கிறது எஸ்&பி. அந்த சவால்களை கடந்து வருவதற்கு எஸ்&பி காட்டும் வழித்தடம், புதிய தாராளமய கொள்கைகள். புதிதாக பதவியேற்கப்போகும் அரசு செயல்படுத்த வேண்டிய ‘சீர்திருத்தமும்’ இதுதான். ஏற்கெனவே இங்கு அமலில் இருப்பதும் இதே தாராளமயக் கொள்கைதான். 1991-ல் இதை இந்தியாவிற்கு கொண்டு வந்த மன்மோகன்சிங்தான் இப்போது பிரதமரும் கூட. இப்போது என்ன பிரச்னை என்றால், ‘தாராளமய கொள்கையை மன்மோகன் சிங் செயல்படுத்தும் வேகம் போதாது’ என்கிறார்கள். அவரை விட வேகமாக மோடி செயல்படுத்துவார் என்பதால் அவரைக் கொண்டு வரத் துடிக்கின்றனர்.

மோடியின் செயல்திறன் குறித்து பல ஆதாரங்கள் வந்துவிட்டன. இப்போது மேலும் ஓர் ஆதாரம் பார்க்கலாம். குஜராத் மாநிலத்தின் பெட்ரோலியம் கார்பரேஷன், கிருஷ்ணா-கோதாவரி படுகையில் உள்ள தனது எண்ணெய் வயல்களின் பங்குகளை, பார்படோஸ் (Barbados) நாட்டில் உள்ள ‘ஜியோ குளோபல்’ என்ற ஓர் அநாதமதேய கம்பெனிக்கு விற்றது. இதன்மூலம் அந்த கம்பெனியின் சொத்து மதிப்பு 64 டாலரில் இருந்து (சுமார் 4 ஆயிரம் ரூபாய் மட்டும்), 10,000 கோடியாக உயர்ந்தது. இதை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்த அர்விந்த் கெஜ்ரிவால், ‘ஸ்பெக்ட்ரம் ஊழலை விட இது மோசடியானது’ என்கிறார். தொகை அதைவிட சிறியதாக இருக்கலாம். ஆனால் வெறும் 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போண்டா கம்பெனியை 10 ஆயிரம் கோடி மதிப்புள்ளதாக உயர்த்தி இருக்கிறார்கள் என்றால், அந்த ஊழலில் அடத்தியை சற்று கற்பனை செய்து பாருங்கள்.

இதைப்பற்றி எல்லாம் ஒருபோதும் கவலைப்படாத; கருத்து சொல்லாத எஸ் அண்ட் பி உள்ளிட்ட நிறுவனங்களோ, முதலாளித்துவ ஆதரவாளர்களோ… மானியம் பற்றி மட்டும் மாய்ந்து, மாய்ந்து பேசுகின்றனர். ‘வர்ற பணத்தை எல்லாம் மானியமாவே கொடுத்துவிட்டால் எப்படி நாடு உருப்படும்?’ என்று அங்கலாய்க்கிறார்கள். அவர்களின் கவனத்திற்காக மேலும் ஒரு புள்ளிவிவரத்தை கீழே காணலாம்.

2010-11-ம் ஆண்டில் பெருநிறுவனங்கள் இந்திய அரசுக்கு செலுத்திய மொத்த வரி, 2.75 லட்சம் கோடி ரூபாய். இதே ஆண்டில் இவர்கள் பெற்ற வரிச் சலுகை, 3.65 லட்சம் கோடி ரூபாய். அதாவது 100 ரூபாய் வரி செலுத்தினால், 145 ரூபாய்க்கு வரிச் சலுகை என்று பாதிக்குப் பாதி சலுகை பெற்றுள்ளனர். கடந்த எட்டு ஆண்டுகளில், ரூ 31.11 லட்சம் கோடி வரிச்சலுகையாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நிமிடத்துக்கு 70 லட்சம் ரூபாய் வரிச் சலுகை. மக்கள் நலத் திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியங்களை தண்டச் செலவு பட்டியலில் சேர்ப்பவர்கள் இதைப் பற்றியும் பேச வேண்டும். ‘உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால், அதுக்கு வேற மானியம் கொடுக்கனும். வெட்டிச் செலவு’ என்று எஸ் அன்ட் பி அங்கலாய்க்கிறது. என்றால் இந்த கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் மட்டும் தண்டச்செலவு இல்லையா?

எந்தத் திட்டத்துக்கு எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை முடிவு செய்யும் இந்த நிறுவனம், ‘2014 மே மாதத்திற்குள் இந்திய தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்’ என்று நிர்ப்பந்திக்கவும் செய்கிறது. ஏனென்றால், இந்தியாவுக்கு இப்போது கொடுப்பட்டிருப்பது ‘கிரேஸ் டைம்’. அதை விரைவில் முடித்துக் கொண்டு ‘வைல்ட் கார்டு’ ரவுண்டில், புதிய அரசின் கொள்கைகளுடன் வந்து கலந்து கொண்டு வெற்றி பெறலாம். ‘‘ஆனால் இதைப்பற்றி நாம் ரொம்பவும் கவலைப்படத் தேவையில்லை. இரண்டு தர நிர்ணய நிறுவனங்கள் மட்டுமே எதிர்மறையாக மதிப்பிட்டுள்ளன. நான்கு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. நாம் நம்பிக்கையுடன் நடை போடலாம்” என்று பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் தேர்தல் தேதி முதல், அரிசிக்கு எவ்வளவு, மண்ணெய்க்கு எவ்வளவு என்று முடிவு செய்வது வரையிலும் எவனோ ஒருவன் முடிவு செய்கிறானே என்ற மானங்கெட்டத் தன்மை இந்தியத் தலைவர்களுக்கு கோபம் வருவதில்லை.  இந்தியாவை ஆள்வது யார் என்ற துவக்கக் கேள்விக்கு எனக்குக் கிடைத்த பதில்.. முதலாளிகள்!

மேலும் படிக்க

– வளவன்