privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காமுதலாளித்துவத்தை தூக்கி எறி – உலகெங்கிலும் போராட்டம் !

முதலாளித்துவத்தை தூக்கி எறி – உலகெங்கிலும் போராட்டம் !

-

வம்பர் 5-ம் தேதி இணையத்தில் புகழ்பெற்ற அனானிகளின் குழு விடுத்திருந்த அழைப்பை ஏற்று, உலகம் முழுவதிலும் 400-க்கும் அதிகமான நகரங்களில் ஆயிரகணக்கான மக்கள் பங்கெடுத்த முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான பேரணி உலக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அழுகிப் போய்விட்ட முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிய வேண்டும் என்ற அடிப்படை கொள்கையுடன் போராட பல்வேறு நாட்டு மக்கள் வீதிக்கு வந்திருப்பது வரவேற்கப்பட வேண்டியது விடயம் தான்.

வாஷிங்டன்
வாஷிங்டனில் பேரணி

இணையத்தில் இயங்கும் மிக பிரபல குழுவான அனானிகளின் குழு, உலக மக்களுக்கு ஒரு அழைப்பை விடுத்தது. நவம்பர் ஐந்தாம் தேதி,  ஊழலில் அழுகிப் போய் இருக்கும் அரசுகளுக்கு எதிராக பத்து லட்சம் முகமூடிகளின் பேரணி (Millions Mask March ) ஒன்றை நடத்துமாறு கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும், பல்வேறு நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பேரணியை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்கள்.

இளைஞர்கள், அறிவுத் துறையினர், உழைக்கும் மக்கள் தங்கள் குழந்தைகளை சுமந்தபடி குடும்பத்துடன் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர். இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா என்று நாடுகளின் பட்டியல் நீண்டது. 400-க்கும் அதிகமான நகரங்களில் இந்த பேரணிகள் நடந்ததாக கார்டியன் செய்திகள் கூறுகின்றன. முதலாளித்துவ எதிர்ப்பு, மக்களை வேவு பார்க்கும் என்எஸ்ஏ எதிர்ப்பு, பொருளாதார சிக்கன நடவடிக்கை மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி வெட்டு எதிர்ப்பு, கதிரியக்க பயிர் எதிர்ப்பு, இயற்கை வள சுரண்டல் எதிர்ப்பு என்பவை பேரணியில் மக்கள் மத்தியில் பொதுவான கோரிக்கைகளாக இருந்தன.

“இந்த அழுகி போய் விட்ட அமைப்பிற்கு மாற்று வேண்டும்”

“மக்களின் வரிப் பணத்தை கொள்ளயடித்து விட்டு, மக்களுக்கு கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தண்ணீர் கொடுக்காத இந்த அமைப்பு வேண்டாம்”

“இந்த பேரணியின் எதிரிகள்-  மக்களுக்கு நீதியை மறுக்கும் பணக்கார வங்கிகள் மற்றும் கார்ப்பரேட்டுகள், இருவரும் இணைந்து உருவாக்கும் ஊழல்மிகுந்த அரசியல்வாதிகள்”

என்ற முழக்கங்களுடன் தங்கள் எதிரி கார்ப்பரேட்டுகள், தங்களுக்கு தேவை ஒரு புதிய அமைப்பு என்பதில் மக்கள் தெளிவுடன் இருந்தனர். அதை சரியான முழக்கங்களாக மாற்றவும் செய்தனர்.

வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை முன்பு.

“மக்களுக்கான சட்டத்தை வங்கிகள் எழுத வேண்டாம்” என்று முதலாளித்துவ அமைப்பை சாடியது ஒரு முழக்கம், “என் தலைமுறை இந்த அமைப்பை மாற்றும்” என நம்பிக்கை தந்தது இன்னொரு முழக்கம். லண்டனில் பேரணி பக்கிங்காம் அரண்மனை முற்றுகை இட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும் போலிஸ் தடியடி உலகம் முழுவதிலும் பொதுவாக இருந்தது. லண்டனில் நடைபெற்ற பேரணியில் “ஓட்டுப் போடாதே புரட்சி செய்” என்று அறை கூவல் விடுத்த நகைச்சுவை நடிகரும், பத்திரிகையாளருமான ரஸ்ஸல் பிரான்ட் முகமூடி அணிந்து பங்கேற்றார்.

வாஷிங்டன் நகரில் பேரணி வெள்ளை மாளிகை நோக்கி சென்றது, “அதிபர் ஒபாமா, வெளியே வந்து மக்களுக்கு பதில் சொல்” என்று முழக்கமிட்டனர். நியூயார்க் நகர வால் வீதிகளில் போராட்டம் தொடர்ந்தது.

பேரணியில் பங்கெடுத்தவர்கள் பெரும்பாலும் கய் பாக்ஸின் (Guy Fawkes) முகமூடியை அணிந்திருந்தனர். பேரணி நடந்த நவம்பர் 5-ம் தேதி ‘கய் பாக்ஸ்’ தினம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொத்த பேரணிக்கு ஒரு சுவாரசியமான வரலாற்றுப் பின்னணி உள்ளது. ஆனால் அந்த வரலாறே இந்த பேரணிகளின் அராஜகவாதத்தையும் காட்டிக் கொடுக்கிறது.

1605-ம் ஆண்டு, நவம்பர் 5-ம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு ரகசியக் குழுவை சேர்ந்த கய் பாக்ஸ் எனும் நபரை வெடி பொருட்களுடன் காவல் துறையினர் கைது செய்தனர். இங்கிலாந்தை அப்பொழுது ஆண்டு வந்த முதலாம் ஜேம்ஸ் மன்னன் புராடஸ்டன்ட் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவன். பெரும்பான்மை புராடஸ்டன்ட் மத்தியில் சிறுபான்மை கத்தோலிக்கர்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இந்த மதச் சண்டையின் விளைவாக சில கத்தோலிக்க ஆர்வலர்கள் ஒரு சிறு குழுவை ஏற்படுத்தினார்கள். அதில் முன்னாள் ராணுவ வீரரான கய் பாக்ஸ் இணைந்தார்.

சாகச நடவடிக்கையின் மேல் ஈடுபாடு கொண்டிருந்த அந்த குழுவினர், வெடி பொருட்களை சேகரித்து பாரளுமன்றத்தை தகர்க்க திட்டமிட்டனர், அதன் மூலம் மன்னரைக் கொல்வது, நாட்டில் கலகம் செய்வது, கத்தோலிக்கத் தலைமையை ஏற்படுத்துவது என்பது திட்டம். அவர்கள் அரசு அதிகாரிகளுக்கும், பாதிரியார்களுக்கும் எச்சரிக்கை கடிதம் எழுதினார்கள். கடிதத்தில் தங்களை அனானிகள் என்று அழைத்துக் கொண்டனர்.

லண்டன்
லண்டன் நாடாளுமன்ற அவைகளுக்கு வெளியில்.

கடிதங்கள் கவனம் பெற்றன, காவலர்கள் உஷார்படுத்தப்பட்டனர். நகரம் முழுவதும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. நாடாளுமன்றத்தின் கீழ் பாதாள அறையில் வெடி பொருட்களுடன் இருந்த கய் பாக்ஸ் காவலர்களிடம் சிக்கினார். கடும் துன்புறுத்தலுக்கு பின் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கய் பாக்ஸின் உடல் நான்காக பிளக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு எச்சரிக்கைக்காக அரண்மனையின் நான்கு பகுதிகளில் வைக்கப்பட்டது.

மன்னர் காப்பாற்றப்பட்டதை தொடர்ந்து நவம்பர் 5-ம் தேதி  நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நிகழ்த்தப்பட்டன, வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை குறிக்கும் வண்ணம் வாண வேடிக்கைகள் கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக இருந்தன. நவம்பர் 5-ம் தேதி இன்று வரை இங்கிலாந்து மக்களால் விமரிசையாக வாண வேடிக்கைகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால், பெரும்பாலான இங்கிலாந்து மக்கள் கய் பாக்ஸின் அரசு எதிர்ப்பை மிக முக்கியமானதாகவும், அவரை சாகச நாயகனாகவும், அரசு எதிர்ப்பின் சின்னமாகவும் பார்க்கத் தொடங்கினர். விளைவு கய் பாக்ஸ் முகமூடி, அனானி குழு அரசு எதிர்ப்பின் சின்னமாக பார்க்கப்பட்டது. இதை மையமாக வைத்து ஆலன் மூர் எனும் எழுத்தாளார் “வி ஃபார் வென்டெட்டா” எனும் சாகச நாயகனை மையப்படுத்திய நாவல் ஒன்றை எழுதினார். இது டேவிட் லாயிட் என்பவரின் கை வண்ணத்தில் காமிக்ஸ் புத்த்கமாக வந்து சக்கை போடு போட்டது. இங்கிலாந்தை பாசிஸ்ட் ஒருவர் ஆட்சி செய்ய, அவரை எதிர்த்து வீழ்த்தும் சாகச நாயகன் வென்டெட்டா, கய் பாக்ஸ் முகமூடி அணிந்திருப்பான். அனானியாக (முகமற்றவனாக) அரசை எதிர்க்கும் பல சாகசங்களை செய்வான். இந்த சாகச நாயகனின் கதை இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக விற்பனை ஆனாது. படமாகவும் வந்தது. வென்டெட்டா அனைத்து வித அதிகாரங்களையும் எதிர்க்கும் அராஜகவாதி.

விக்கிலீக்ஸின் வருகை, இணையத்தில் ஹேக்கர்களாக வலம் வந்த சிலரின் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியது, அரசு எதிர்ப்பு, வெளிப்படையான அரசு, கருத்து சுதந்திரம், என்ற அடிப்படைகளை கொண்ட அனானிகள் குழு  உருவானது. கய் பாக்ஸின் முகமூடியை சின்னமாகக் கொண்ட, யார் என்று தெரியாத நபர்கள் அனானிகள் குழுவினர், அரசின் தளங்களை ஹேக் செய்வது, முடக்குவது என்ற சாகச நடவடிக்கைகள் மூலம் அறியப்பட்டனர். சாகசவாதமே இவர்களின் வடிவம்.

மெக்சிகோ சிட்டி
மெக்சிகோ சிட்டி

பொதுவான, கொள்கை, அமைப்பு, தலைமை ஏதுமில்லாத ஆனால் தங்களாக ஒருங்கிணைத்துக் கொள்ளும் அரஜாகவாதிகள், இந்த அனானி குழுவினர். சாகச நடவடிக்கைகளில் ஈடுபட்ட கய் பாக்ஸ் இவர்களின் ஆதர்சம். அவரின் முகம் இவர்களின் முகமுடி. இவர்கள் கோரிக்கையாக விடுத்தது தான் இந்த பேரணி.

இந்த பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் நிலவி வரும் முதலாளித்துவ அமைப்பை அம்பலப்படுத்தியதும், அது அழுகிப் போய் முடை நாற்றம் வீசுவதை அவர்கள் உணர்ந்திருப்பதும், இதற்கு மாற்று கோருவதும் வரவேற்கப்பட வேண்டியது தான். இவர்களின் முழக்கங்கள் வர்க்க போராட்டத்தை சரியாக கணித்து முன் வைக்கின்றன, இவர்கள் மார்க்சியம் பயின்றவர்கள் அல்லர், ஆனால் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் இந்த அமைப்பை புரிந்து கொண்டவர்கள். பல்வேறு நாட்டினர் குறிப்பாக முதலாளித்துவ நாட்டினரும், ஏகாதிபத்திய நாட்டினரும், மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்தவர்களும் பேரணியில் வர்க்கப் போராட்ட முழக்கமிட்டது மகிழ்ச்சியான விடயம் தான்.

ஆனால் முழக்கங்கள் அனைத்தையும் தீர்மானித்து விடுமா? இவ்வளவு தெளிவான மக்கள் கூட்டமும் அரசியல் அறிவும், முதலாளித்துவத்தை வீழ்த்த தயாராக இருக்கும் நிலைமையில் வெறும் சாகச வாதம் என்ன பலன் தரும்? இந்த முழு உணர்ச்சியும் காயடிக்கப்பட்டு விடும் என்பதுதான் இதன் எதிர்காலமாக இருக்கும்.

கய் பாக்ஸ்
கய் பாக்ஸ்

முதலாளித்துவம் அழுகிப் போய் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கும் இதே வேளையில் தான் அது இன்னும் பாசிசமாக மாறி வருகிறது. அமெரிக்க உளவுத் துறையின் கண்காணிப்பு திட்டமான பிரிசம் முதல் இந்திய அரசின் ஆதார் அடையாள அட்டை திட்டம் வரை ஆளும் அரசுகள் மக்களை கண்காணித்து ஒடுக்க பிரம்மாண்டமான தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கியுள்ளனர். சீரான பொருளாதார ஆதிக்க அமைப்புகள்,  ஒழுங்கமைத்து வைக்கப்பட்டிருக்கும் ராணுவம், மக்கள் மத்தியில் வேவு பார்க்க வேவு படை, மக்கள் உணர்வை சீரழிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்றிருக்கும் போது  அதை ஒழித்துக் கட்டுவது என்பதும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கோட்பாடால் தான் முடியும்.

திட்டமிட்ட, மிக பிரம்மாண்டமான பாசிச கட்டமைப்பை வீழ்த்த அராஜகவாதம்,  சாகசவாதம் போதாது. அது மேலும் நம்மை காட்டிக் கொடுக்கவும், போராட்டத்தை அழிக்கவுமே உதவும். அதனால் அரசு இன்னும் உறுதி பெறும்.

எதிரிக்கு நிகரான ஒழுங்கமைக்கப்பட்ட, சீரான கோட்பாடு, போர் தந்திரம், செயல் தந்திரம் கொண்ட, மக்களை திரட்டி அரசியல்படுத்தும் ஆற்றல் கொண்ட, இழப்பதற்கு இனி எதுவும் இல்லை விலங்குகளைத் தவிர என்ற உணர்வு கொண்ட பாட்டாளி முன்னணிப் படையின்  தலைமை தான் இதற்கு ஒரே தீர்வு. இந்த பேரணியில் பங்கேற்ற மக்கள் அடுத்த கட்டமாக  அதை நோக்கி நகர வேண்டும், நகருவார்கள்.

நவம்பர் 7 புரட்சி தினத்தை ஒட்டி நடந்த இந்தப் பேரணி ஒரு சிறப்பான முயற்சி, அரஜாகவாதத்தை முறியடித்து இது உண்மையான பாட்டளி வர்க்க புரட்சியாக பல நாடுகளில் வளர வேண்டிய நிலை உள்ளது. வளர்ந்தே தீரும்.

மேலும் படிக்க
‘The Corrupt Fear Us!’ Massive Anonymous ‘Million Mask March’ as it happened (PHOTOS, VIDEOS)