privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்இதர நாடுகள்காமன்வெல்த் மாநாடும் மன்மோகன் சிங்கின் நாடகமும்

காமன்வெல்த் மாநாடும் மன்மோகன் சிங்கின் நாடகமும்

-

“காமன்வெல்த் மாநாட்டில் நான் கலந்து கொள்ள மாட்டேன், ஆனால் இந்தியா கலந்து கொள்ளும்” என்று முடிவு செய்திருக்கிறார் மன்மோகன் சிங். இந்தியாவின் சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான அதிகாரிகள் குழு மாநாட்டில் கலந்து கொள்ளும்.

மன்மோகன் சிங்
இரட்டை முகம் காட்டும் மன்மோகன் சிங்.

“பல்வேறு காரணங்களால் தான் நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை. வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது பிரதிநிதியாக மாநாட்டில் கலந்து கொள்வார்” என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ‘சுருக்கமான’ கடிதம் எழுதியிருக்கிறார் மன்மோகன். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் கூட்டணி கணக்குகளை மனதில் வைத்துதான் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று பெயர் சொல்ல விரும்பாத அதிகாரிகள் சொல்வதாக செய்தித் தாள்களில் கிசுகிசு செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 20 ஆண்டுகளில் நடந்த காமன்வெல்த் அரசாங்க தலைவர்களின் 11 மாநாடுகளில் பிரதமர் கலந்து கொள்ளாதது இது 6-வது முறையாக இருக்கும் என்பதும் சுட்டிக்  காட்டப்படுகிறது. பிரதமர் கலந்து கொள்ளாமல் வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொள்வது வழக்கமான நிகழ்வுதான் என்று இலங்கையை சமாதானப்படுத்துகிறார்கள். ‘இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளாததால் காமன்வெல்த் அரசாங்க  தலைவர்கள் மாநாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் எல் எல் பெரீஸ் கூறியிருக்கிறார்.

உண்மை நிலவரம் இப்படி இருக்க, பிரதமர். மாநாட்டில் கலந்து கொள்ளாதது மூலம் இலங்கை அரசுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக எதிர் கிசு கிசுவும் பரப்பப்படுகிறது. இந்தியப் பிரதமர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசவில்லை என்பது நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக பேசப்படுகிறது. மத்திய அமைச்சர் நாராயணசாமி, இந்த முடிவு தமிழக மக்களிடையே ஆதரவை பெறும் என்று கூறியிருக்கிறார்.

இப்படி இரண்டு முகம் காட்டுவது காமன்வெல்த் நாடுகளின் பல தலைவர்களுக்கு தேவைப்படுகிறது.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை கண்டித்து இந்த நிகழ்வை புறக்கணிக்கப் போவதாக கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அறிவித்திருக்கிறார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட், நியூசிலாந்து பிரதமர் டேவிட் கீ ஆகியோர் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

“தான் மாநாட்டில் கலந்து கொள்வது மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டு வரும் இலங்கை அரசை ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ளப் படக் கூடாது” என்றும் “தம்முடன் வரவிருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் முர்ரே மெக்கல்லி இலங்கையின் வடக்கு பகுதிகளை சுற்றிப் பார்த்து நிலைமையை நேரில் ஆய்வு செய்யப் போவதாகவும்” நியூசிலாந்து பிரதமர் டேவிட் கே தெரிவித்திருக்கிறார்.

ஜேம்ஸ் பேக்கர்
சூதாட்ட விடுதி அமைக்க வரும் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பேக்கர்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பில்லியனர் முதலாளி ஜேம்ஸ் பேக்கர் காமன்வெல்த் பிசினஸ் மன்றத்தில் பேசவுள்ளார். 45 கோடி டாலர் செலவில் (சுமார் ரூ 2,700 கோடி) ஒரு ஐந்து நட்சத்திர தங்கும் மற்றும் சூதாட்ட விடுதியை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக அக்டோபர் மாதம் ஜேம்ஸ் பேக்கர் அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்துக்கு முதலீட்டு ஒப்புதலும், வரிச் சலுகைகளும் வழங்குவதைக் குறித்து இலங்கை நாடாளுமன்றமும் முதலீட்டு வாரியமும் பரிசீலித்து வருகின்றன. இந்நிலையில் அவர் தான் அமைக்க விரும்பும் ஐந்து நட்சத்திர சொகுசு விடுதிக்கு ஒப்புதல் பெறுவதற்காக இலங்கை அரசு அதிகாரிகளை சந்திக்கவிருக்கிறார்.

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று சீக்கிய தீவிரவாத அமைப்பான தல் கால்சா இங்கிலாந்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறது. இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று டேவிட் காமரூன் சொல்லியிருப்பது போல 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் விசாரண்டை நடத்துவதற்கு இந்தியாவை வலியுறுத்த வேண்டும் என்றும் கன்வர் பால் சிங் இங்கிலாந்து பிரதமரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

53 முன்னாள் காலனிய நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய பெருமைகளை நினைவுபடுத்திக் கொள்வதற்காக இங்கிலாந்து ஏற்படுத்திய கூட்டமைப்பு. இதில் உறுப்பினராக இருப்பதற்கு உறுப்பினர் கட்டணம் செலுத்துவதை தவிர கூடுதலாக எந்த பொறுப்பும் இல்லை என்பதால் ஒரு பன்னாட்டு கிளப்பின் பகுதியாக சேர்வது போல பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகள் பல இதில் உறுப்பினராக உள்ளன. 2009-ம் ஆண்டில் 9 காமன்வெல்த் நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் படி பெரும்பான்மை மக்கள் காமன்வெல்த் பற்றியோ, அதன் செயல்பாடுகளைப் பற்றியோ அறிந்திருக்கவில்லை. கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் மூன்றில் ஒரு பகுதியினர் வரை காமன்வெல்த்தை விட்டு தமது நாடு விலகினால் கவலையில்லை என்று சொல்லியிருக்கின்றனர்.

வங்க தேசத்தை காமன்வெல்த் அங்கீகரித்ததை எதிர்த்து பாகிஸ்தான் 1972-ம் ஆண்டு வெளியேறி 1989-ல் மீண்டும் சேர்ந்தது. 1999-ல் ஜெனரல் பர்வேஸ் முஷாராப் நடத்திய இராணுவ ஆட்சி பிடிப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டது. அது 2004-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 2007-ம் ஆண்டு முஷாரப் அவசர நிலை பிரகடனம் செய்ததைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை பாகிஸ்தான் காமன்வெல்த் அமைப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டது.

நைஜீரியா 1995-ம் ஆண்டிலும், 1999-லும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டது. ஜிம்பாப்வேவில் நடந்த நில வினியோக இயக்கத்தைத் தொடர்ந்து, வெள்ளை இன பண்ணையார்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதாக அந்நாட்டை காமன்வெல்த் அமைப்பு 2002-ம் ஆண்டு இடைக்கால நீக்கம் செய்த்து. தொடர்ந்து, ஜிம்பாப்வே 2003-ம் ஆண்டு தானாகவே அமைப்பிலிருந்து முழுமையாக விலகிக் கொள்ள முடிவு செய்தது.

பிஜி தீவுகள் 2001-ம் ஆண்டு ஜூன் மாத ஆட்சி கவிழ்ப்பை அடுத்து 2001 டிசம்பர் வரையிலும் ஒரு முறையும், இன்னும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து 2006-ம் ஆண்டிலும் நீக்கி வைக்கப்பட்டது. 2010-ல் தேசிய தேர்தல் நடத்த வேண்டும் என்ற கெடுவை மீறியதால், பிஜி முழுமையாக காமன்வெல்த்திலிருந்து நீக்கப்பட்டது. காமன்வெல்த் மாநாடுகள், விளையாட்டுப் போட்டிகள், தொழில் நுட்ப உதவி திட்டங்கள் போன்றவற்றிலிருந்து அது விலக்கி வைக்கப்பட்டிருக்கும் என்று காமன்வெல்த் செயலர் கமலேஷ் ஷர்மா கூறியிருக்கிறார்.

பாலா கார்ட்டூன்இந்நிலையில் காமன்வெல்த்  மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு ராஜபக்சேவின் இலங்கை அரசு காட்டும் தீவிரம் பிரிட்டனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் புரிந்த இலங்கை அரசின் தலைமையில் மாநாடு நடப்பதை ஒட்டி காமன்வெல்த் அமைப்பு உலக நாடுகள் மத்தியிலும், உலகச் செய்திகளிலும் பேசப்படுவதாக மாறியிருக்கிறது.

இலங்கையைப் பொறுத்த வரை 1976-ம் ஆண்டு கொழும்பில் நடந்த அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு பிறகு, பன்னாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளும் எந்த நிகழ்வும் அந்நாட்டில் இது வரை நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்களின் மாநாட்டை கொழும்பில் நடத்தி, அடுத்த 2 ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக இருப்பதன் மூலம் இலங்கையில் இயல்பு நிலை திரும்பி விட்டது என்ற தனது பிரச்சாரத்திற்கு சர்வதேச அங்கீகாரம் பெற முயற்சிக்கிறார் ராஜபக்சே.

“இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது” என்ற கோரிக்கையை “இந்தியப் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது” என்று சுருக்கியிருக்கிறது மன்மோகன் அரசு. ‘இந்தியா காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்’ என்பதை தமிழக தலைவர்களின் கருத்து மட்டுமே என்று கூறி பாஜகவும் காங்கிரஸ் அரசுடன் முழுமையாக உடன்படுகிறது. “குறுகிய அரசியல் ஆதாயங்களுக்கு மேலாக தேசிய நலன்களை வைத்து பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்” என்று பா.ஜ.க தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியிருக்கிறார்.

இந்தியாவில் ஆட்சிகள் மாறினாலும், வெளியுறவுக்  கொள்கையைப் பொறுத்த வரை அனைத்து தரப்புகளும் ஒரே நிலைப்பாட்டை எடுக்கின்றன என்பதை காங்கிரஸ், பாஜக இன்னொரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கின்றன. அதாவது உள்நாட்டில் தேர்தல்களில் போட்டி போடுவதற்காக வெவ்வேறு குரல்களில் பேசினாலும், வெளிநாடுகளுடனான உறவு குறித்து ஒரே நிலைப்பாடு எடுப்பது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று ஜெயா அரசாங்கம் நிறைவேற்றிருக்கும் தீர்மானம் எப்படி ஒரு ஏமாற்றோ அது போல மன்மோகன் சிங் கலந்து கொள்ளவில்லை என்பதும் ஒரு நாடகம்தான்.

மேலும் படிக்க