privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககாமன்வெல்த் மாநாடும் கருணாநிதியின் சரணடைவும்

காமன்வெல்த் மாநாடும் கருணாநிதியின் சரணடைவும்

-

ரும் நவம்பர் 15 முதல் 17 வரை இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது எனக் கோரி தமிழகம் முழுக்க பல்வேறு கட்சிகளும், இயக்கங்களும், மாணவர்களும், வணிகர் சங்கங்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். 12-ம் தேதி மதிமுக, வணிகர் சங்கங்களின் பேரவை உள்ளிட்ட 21 அமைப்புகள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் நடவடிக்கைகள் அவரை சந்தர்ப்பவாதமாக ஆதரிக்கும் பிரிவினரிடையே கூட அதிருப்தியை உருவாக்கியுள்ளன. தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு செருப்பாக உழைக்கிறார் கருணாநிதி என்ற அவரது அரசியல் எதிரிகளின் குற்றச்சாட்டு உண்மைதான் என்பது நிரூபணமாகியுள்ளது.

கருணாநிதி
கருணாநிதி

அக்டோபர் 18 அன்று பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், ”இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளது மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது” என்று வலியுறுத்தியிருந்தார். தொடர்ந்து அக்டோபர் 22-ம் தேதி கருணாநிதி வெளியிட்டிருந்த அறிக்கையில் ”அடுத்து வரும் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

அக்டோபர் 24-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தில், ”பெயரளவுக்கு கூட இந்தியா சார்பில் யாரும் இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்றுவதற்கு இந்தியா பிற நாடுகளிடம் கோரிக்கை வைத்து போராட வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது.

அப்போது ”இந்தியா சார்பில் ஒரு துரும்பு கூட காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது. மீறி மாநாட்டுக்கு பிரதமர் சென்றால் அதன் விளைவுகளை காங்கிரசு கட்சி அனுபவிக்க நேரிடும்” என்று மத்தியில் ஆட்சியிலுள்ள காங்கிரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் கருணாநிதி.

அதன் பிறகு ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிட பொது வேட்பாளரை நிறுத்தவுள்ளதாக கூறி மதிமுக, அதிமுக தவிர்த்த பிற எல்லா கட்சிகளிடமும் ஆதரவு கோரி கடிதம் எழுதினார் கருணாநிதி. பாஜகவினருக்கும் கூட ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கிடையில் நவம்பர் 2 அன்று ப.சிதம்பரம் சென்னை கோபாலபுரத்திற்கு சென்று கருணாநிதியை சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் ”காமன்வெல்த் மாநாடு பற்றிய கருணாநிதியின் கோரிக்கை, தமிழக மக்களின் உணர்வுகள், நாட்டு மக்களின் நலனை கணக்கில் கொண்டே முடிவு செய்வோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்” எனக் கூறினார்.

வம்சம்
“தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு செருப்பாக உழைக்கிறார் கருணாநிதி”

ஆனால் மத்திய அரசு தரப்பில் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியாது என்பதையும், இப்படி கலந்து கொள்வதை தமிழகத்தில் உள்ள தேசியக் கட்சிகளான பாஜக, மார்க்சிஸ்டுகள் போன்றோர் கண்டிக்கவில்லை என்பதையும் அச்சந்திப்பில் கருணாநிதிக்கு சுட்டிக் காட்டி புரிய வைக்கவே ப.சிதம்பரம் காங்கிரசு தரப்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தாராம். இதற்கிடையில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என காங்கிரசின் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் கூட சொல்ல ஆரம்பித்து விட்டார். இல்லாவிடில் இங்கு ஓட்டுச்சீட்டு அரசியலில் காலம் தள்ள முடியாது என்பதால் இப்போது தமிழக பாஜகவும் தனது அகில இந்திய தலைமைக்கு இதனை சுட்டிக் காட்டி ”காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க மத்திய அரசை வலியுறுத்துங்கள்” எனக் கோரியது.

எல்லாம் பேசி வைத்து நடத்தப்படும் நாடகம்தான். இத்தகைய வெற்றுச் சவடால் பேச்சுக்களை வைத்தே தமிழகத்தில் வாக்குகளை அள்ளி விடலாம் என்ற நிலைமை உண்மையில் தமிழக மக்களுக்குத்தான் அவமானம்.

இதற்கிடையில் நவம்பர் 6-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்த சிபிஐ துணை கண்காணிப்பாளர் எஸ்.கே. சின்ஹா ”2009ல் நடைபெற்ற கலைஞர் டிவி இயக்குநர்கள் கூட்டத்தில் கனிமொழி கலந்து கொள்ளவில்லை” என கனிமொழிக்கு சாதகமாக சாட்சியம் அளித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சிக்கு தனியார் நிறுவனங்கள் சிலவற்றில் இருந்து வந்த ரூ.200 கோடி பணப் பறிமாற்றம் குறித்து கனிமொழிக்கு எதுவும் தெரியாது என்பதை நிரூபிக்கும் விதமாக அவரது சாட்சியம் சிபிஐ தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டது.

காங்கிரசின் இக்காய் நகர்த்தலை தொடர்ந்து, ”காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார், ஆனால் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பார்” என மத்திய அரசின் சார்பில் செய்திகள் வெளியாயின. இதுபற்றி கேட்டதற்கு கருணாநிதி ”நமது கோரிக்கைக்கு மதிப்பளித்து பிரதமர் கலந்து கொள்ளாமல் இருப்பது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. ஆனால் குர்ஷித் பங்கேற்பது விவாதத்திற்குரியது” என்று கழுவிய மீனில் நழுவிய மீனாக சமாளித்து, தான் ஒரு பச்சையான சந்தர்ப்பவாதி தான் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

ஏற்கெனவே  உண்ணாவிரதம் அறிவித்து நான்கு மணி நேரத்தில், போர் நின்று விட்டதாக கூறி 2009-ல் ஈழப்போரின் உச்சகட்டத்தில் போராட்டத்தை கைவிட்ட கருணாநிதியை தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள்.

தா பாண்டியன்
தா பாண்டியன்

தற்போதைய காமன்வெல்த் மாநாட்டில் கனடா மற்றும் மொரிசியஸ் சார்பாக யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரிகிறது. கடந்த பத்து காமன்வெல்த் மாநாடுகளில் இந்தியா சார்பில் பிரதமர்கள் பங்கேற்றது 5-ல் மட்டும்தான். மற்ற மாநாடுகளில் துணை ஜனாதிபதி, அமைச்சர்கள் என யாராவது ஒப்புக்கு கலந்து கொள்வார்கள். எனவே மன்மோகனது முடிவு கருணாநிதியின் கோரிக்கைக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இன்ன காரணத்துக்காக தாம் கலந்துகொள்ளவில்லை என ராஜபட்சேவுக்கு மன்மோகன் எழுதிய கடிதத்தில் குறிப்பிடாத போதும், ”அரசியில் நிர்ப்பந்தம் காரணமாக இந்த முடிவை இந்திய பிரதமர் எடுத்துள்ளதாக தெரிகிறது” என உடைத்துக் காட்டியவர் இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் என்பதையும் கவனிக்க வேண்டும்.

மன்மோகன் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை வெளிப்படையாக சொல்லவில்லை என்பதை சுட்டிக்காட்டி சிபிஐ கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா விமர்சனம் செய்துள்ளார். கலைஞருக்கு ஏற்காடு இடைத்தேர்தலும், கனிமொழி விடுதலையும் முன்னால் வந்து நிற்பதால் தைரியமாக மத்திய அரசை விமர்சனம் செய்ய இயலவில்லை. ஆனால் ‘எங்களுக்கும் போராடத் தெரியும், நேரம் வரும் போது போராடுவோம்’ என்று செய்தியாளர்களிடம் தனது கோபத்தை காட்டவும் அவர் தவறுவதில்லை. திமுக கூட்டணியில், குறிப்பாக டெசோ இயக்கத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், வீரமணி போன்றவர்கள் கூட சல்மான் குர்ஷித் இம்மாநாட்டில் கலந்து கொள்வதை எதிர்க்கத் துவங்கியுள்ளனர். இல்லையென்றால் அவர்களும் கூட இங்கே பிழைப்பு நடத்துவது கடினம். மற்றபடி இதெல்லாம் சுயமரியாதை நடவடிக்கை இல்லை என்பதை அனைவரும் அறிவர்.

பாமக வின் ராமதாசு மாநாட்டில் இந்திய அரசின் பங்கேற்பை மிகப் பெரிய துரோகம் என்கிறார். இதுவே பாமக மந்திரிகள் மத்திய அரசில் இருந்தால் இதே நாக்கு வேறு மாதிரி பேசும். தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறனோ ”கலைஞரின் கூற்று தமிழக மக்களிடையே எழுந்து வரும் எதிர்ப்பை திசை திருப்பும் வேலை” என்று கூறுகிறார். நெடுமாறன் ஒரு ஜெயா அடிமை என்பதால் அதை கவனிப்பார் யாருமில்லை.

சிபிஐ-ன் தா. பாண்டியனோ இதனை கருணாநிதியின் தொடரும் சறுக்கல்கள் என்கிறார். ”சொத்துக்களை பாதுகாக்க காங்கிரசுடன் உறவைத் தொடரும் கருணாநிதிக்கு இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லை” என்று கடுமையாக விமர்சனம் செய்கிறார். ராஜீவ் கொலைக்குப் பிறகு இவரது அக்கறை ஈழத் தமிழரை ஒடுக்குவதில் ஓங்கி நின்றதும் வரலாறுதான். எப்படியாவது அதிமுக கூட்டணியில் ஒரு அரை சீட்டாவது வாங்கி விடவேண்டும் என்பதைத் தாண்டி தாபாவின் பேச்சுக்கு வேறு  அழுத்தம் இல்லை.

விமர்சனம் செய்பவர்களின் அரசியல் சந்தர்ப்பவசமானது தான் என்ற போதிலும் அதுவே கருணாநிதியின் சந்தர்ப்பவாதங்களை நியாயப்படுத்தி விட முடியாது. தனது ஆட்சியையும், பதவியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய கருணாநிதி அஞ்ச மாட்டார் என்பதுதான் அவரது தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலமாக தெரிய வருகிறது. மூவர் தூக்கை ரத்து செய்ய வேண்டாம் என ஆளுநருக்கு 2000-ல் முதல்வராக இருக்கும் போது கடிதம் எழுதியவர், மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்த பார்வதியம்மாளை விமான நிலையத்திலேயே காக்க வைத்து திருப்பி அனுப்பியவர் கருணாநிதி என்பதெல்லாம் ஊரறிந்த உண்மை.

ஜெயா-கருணா
ஜெயலலிதாவும், கருணாநிதியும் வேறு வேறல்ல.

நளினியை விடுவிக்க கோரிக்கை எழுந்த போது சிறைச்சாலையில் செல்பேசியை ‘கைப்பற்றும்’ தனது நடவடிக்கையை துவக்கி வைத்தவர் கருணாநிதி. எப்படியாவது பார்ப்பன சோ, இந்து, சு.சாமி கும்பலிடம் நல்ல பெயர் வாங்க முயற்சித்தவரும் இவர்தான். இருந்தும் பார்ப்பனக் கும்பல் அன்றும் இன்றும் இவரை துரத்துவதில் குறியாக இருக்கிறது.

நேற்று காலை (12-11-2013) அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம் இலங்கை தமிழர்களுக்கு நலன் பயக்கும் வகையில் வலுவானதாக இருக்கும்பட்சத்தில் திமுக அதனை ஆதரிக்கும் என்றும், எல்லா கட்சிகளும் இணைந்து ஒரு மனதாக அதனை நிறைவேற்றி நமது ஒற்றுமையை காட்ட வேண்டும் என்றும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

சல்மான் குர்ஷித் இம்மாநாட்டில் கலந்து கொள்வது என்பது இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு அம்சம் என்பதால் சட்டசபை தீர்மானங்களால் எந்த பயனும் இல்லை என்பது ஒருபுறமிருக்க, இப்போது முடிவான பிறகு நிறைவேற்றப்படும் தீர்மானம் ஒரு லாவணி மட்டுமே எனத் தெளிவாக தெரிந்த பிறகும் ஈழத்தமிழர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பது ஒரு மாயை. இது கருணாநிதிக்கு நன்கு தெரியும் தான். சட்டசபை தீர்மானங்கள் மூலம் மக்கள் மத்தியில் அப்படி ஒரு மாயையை உருவாக்குவதில் ஜெயாவும், கருணாநிதியும் வேறுவேறு அல்ல.

நேற்று சட்டமன்ற தீர்மானத்தில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகவும், ஆயுத உதவி மற்றும் பயிற்சி கொடுத்ததற்கு பரிகாரமாக காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசை ஜெயா அம்பலப்படுத்தியது போல தோன்றினாலும், இத்தீர்மானத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு கிடையாது என்பது ஜெயாவுக்கும் நன்கு தெரியும். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஈழ ஆதரவு சவடால்களை அடிப்பது ஒரளவு வாக்கு வங்கியை பெறுவதற்கு உதவும் என்பதைத் தாண்டி இந்த தீர்மானத்திற்கு வேறு மதிப்பில்லை என்பதை அந்த தீர்மானமே அறிந்த உண்மை.

கருணாநிதிக்கு இதெல்லாம் பேசத் தெரியாத விசயமல்ல. 2ஜி ஊழல் வழக்கிற்காக காங்கிரசு அவரை மிரட்டுகிறது. நில அபகரிப்பு வழக்குகளுக்காக மாநில அரசு அவரது கட்சியின் மாவட்ட செயலர் முதல் வட்டச் செயலர் வரை விரட்டுகிறது. இடைத்தேர்தல்களில் டெபாசிட் வாங்குவதே பெரும்பாடாக இருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமாக சீட் வாங்கினால்தான் மத்திய அரசிடம் பேரம் பேசி வாரிசுகளை காப்பாற்ற முடியும், கட்சியையும் காப்பாற்ற முடியும் என்பதுதான் கருணாநிதியின் நிலைமை.

எனவே ஈழப்பிரச்சினையில் அவர் வீராவேசமாக பேசுவது காய்வதற்குள் மண்டியிடுவது காத்து நிற்கிறது. ஆனாலும் இதில் அவர் மட்டும் தனியாக இல்லை, ஏனைய ஓட்டுக் கட்சிகளும் கம்பெனி கொடுக்கின்றன என்பதுதான் கருணாநிதிக்கு உள்ள ஒரே ஆறுதல்.

–    வசந்தன்.

  1. மஞ்சல் துண்டை யாரும் சீண்டமாட்டீர்களா?
    சரி: விசயத்துக்கு வருவோம்…
    சி.கே.ரங்கனாதன்…தலைவர். கெவின் கெர்…சி…க்…ஷாம்பு
    மீ…ரா…சீகைக்காய்தூள்……..ஊறுகாய்:இவர் இலங்கயில் செய்யும் வியாபாரம்
    வெறும் 10 ரூபாய்(அ) 15 ரூபாய்…
    யார் இவர்….மு.க.முத்துவின் மருமகர்….மஞ்சல் துண்டுவுக்கு…பேத்தியின் கணவன்:
    பம்முவது ஏன் என்று தெரிகிறதா?

    • பகுத்தறிவு பகலவன் பெரியாரின், நேரடி பகுத்தறிவு சீடரை மஞ்சள் துண்டு என்று கூறுவது வன்மையாக கண்டிக்கதக்கது.

      • எதுக்கு சுத்தி வளைத்து…
        ஆள்காட்டி என்பது சரியான வார்த்தை

        • அய்யகோ! மஞ்சள் துண்டை அணிந்ததன் மூலம் தன் பழுத்த நாத்திகத்தை உலகறியசெய்த அந்த திராவிடகுல மாமணியையா ஆள்காட்டி என்பது? இனி நான் என் செய்வேன் தமிழ் தாயே?

      • உங்க பகுதறிவ நினைத்தால் அப்படியே புல்லரிக்குது!
        அதெப்படி, தலை கீழாக நின்னு யோசிபிங்களோ!

        • அடப்பாவி! உங்க புரிஞ்சுகிற அறிவ பாத்து நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.சூப்பர்னே நீங்க!?

  2. தங்களின் கட்டுரை ஒரு தலைபட்சமானது. அதற்காக நான் கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கவும் இல்லை.சிலசமயம் தங்களின் கருத்து மிகவும் தரம் தாழ்ந்து போய் விடுகிறது. ஈழப்போர் விடயத்தில் கருணாநிதி செய்தது மாபெறும் தவறுதான்.என்றாலும் கூட தா.பாண்டியன் போன்றவர்ளோடு கருணாநியை ஒப்பிடுவது துரதிஷ்டமானது.விமர்சனங்களில் நடுநிலை பேணுவதுதான் சான்றோர்களுக்கு அழகு.

    • தப்பு…தப்பு….
      கூலிக்கு மாறடிக்கும் பாண்டியனை
      மஞ்சள் துண்டுடன் ஒப்பிட்டது இமாலய தவறு…

Leave a Reply to ibrahim பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க