privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்த வீட்டு விளம்பரத்தை படிக்க உங்களுக்கு அனுமதி இல்லை !

இந்த வீட்டு விளம்பரத்தை படிக்க உங்களுக்கு அனுமதி இல்லை !

-

சென்னையில் கட்டப்பட்டு வரும் மிக விலை உயர்ந்த அடுக்கு மாடியில் ஒரு குடியிருப்பின் விலை என்ன தெரியுமா? ரூ 14 கோடி முதல் ரூ 18 கோடி வரை. உங்கள் வங்கிக் கணக்கில் இப்படி கொஞ்சம் பணம் உபரியாக இருந்தால், இந்த குடியிருப்புகளில் ஒன்றை வாங்குவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் முதல் பக்க விளம்பரத்தில் தரப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு உங்கள் தனிச் செயலரை தொலைபேச சொல்ல வேண்டும்.

ஆடம்பர சொகுசு குடியிருப்புகள்
ஆடம்பர சொகுசு குடியிருப்புகள் (மாதிரி)

விளம்பரத்தின் முதல் சில வரிகளிலேயே விலையை குறிப்பிடுவதன் மூலம், ஒரு சில ஆயிரங்கள் அல்லது ஒரு சில லட்சங்கள் வரை சம்பாதிப்பவர்கள் இதற்கு மேல் படிக்கக் கூட தேவையில்லை என்று சொல்லி விடுகிறார்கள், கோடிகளில்  புரளும் அதி உன்னத குடிமக்கள் மட்டும் தொடர்ந்து படிக்கலாம்.

இவ்வளவு விலை கொடுக்க அப்படி என்னதான் இருக்கிறது இந்த வீடுகளில்? என்ற கேள்விக்கும் விடை விளம்பரத்திலேயே தரப்பட்டுள்ளது.

  • அமைச்சர்களும், நீதிபதிகளும், தொழில் அதிபர்களும் வசிக்கும் ராஜா அண்ணாமலை புரத்தில் கிரீன்வேஸ் சாலையில் கட்டப்பட்டது, பிளாட்டினம் தரச் சான்றிதழும், கிரைசில் 6 நட்சத்திர சான்றிதழும் பெற்றது.
  • 7 அடுக்கு பாதுகாப்பு உள்ளதால் ரூ 14 கோடி வீடு வாங்க வக்கில்லாத பிச்சைக்காரர்கள் வளாகத்திற்குள் நுழைந்து விடுவார்கள் என்ற பயமின்றி நிம்மதியாக இருக்கலாம்.
  • ஒற்றை கார் வைத்துக் கொண்டு, அதற்கு நிறுத்தும் இடம் வாங்க முடியாமல், பொது இடத்தில் தெருவில் நிறுத்தும் பராரிகளைப் போல் இல்லாமல், 5 சொகுசு கார்களுக்கு மூடப்பட்ட நிறுத்துமிடமும் இந்த விலையில் அடக்கம்.
  • இந்தியாவிலேயே முதல் முறையாக குயிக் சேப் அறை உருவாக்கப்பட்டுள்ளது.
  • பொது மின்தூக்கிகளுடன் கூடவே, தனி பயன்பாட்டுக்காக, உங்கள் வீட்டுக்கு நேரடியாக கொண்டு விடும் ஒரு மின்தூக்கி.
  • ஜெர்மனியைச் சேர்ந்த ஆடம்பர பிராண்ட் போக்கன் போல் பிராண்ட் வடிவமைப்பில் சமையல் அறை.
  • ஜெர்மனியின் டோன் பிராக்ட் பிராண்ட் குளியலறை வடிவமைப்பு
  • கட்டிடம் முழுதும் விஆர்வி சிஸ்டம்ஸ் மூலம் குளிரூட்டப்பட்டிருக்கும்
  • சமையலறைகளுடன் கூடிய 2 விருந்துக் கூடங்கள்
  • தனியார் 4D திரைப்பட அரங்கு
  • 12 அடி கூரை உயரம்

“பணம் மட்டும் போதாது. ஸ்டைல்தான் முக்கியம்” என பணப் பையின் சுருக்கைத் திறந்து தங்களது ஸ்டைலை வாங்கும் படி அழைக்கிறது அந்த விளம்பரம். ரியல் வேல்யூ பிரமோட்டர்ஸ் என்ற சென்னை நிறுவனத்தால் கட்டப்பட்டு விற்கப்படுகிறது இந்தக் குடியிருப்பு. ஒரு சதுர அடிக்கு ரூ 29,300 விலையில் 4,500 முதல் 6,000 சதுர அடி பரப்பிலான இந்த அபார்ட்மென்ட் வீடுகள் ராஜா அண்ணாமலை புரத்தில் கட்டப்பட்டுள்ளன.

கேம்ப கோலா குடியிருப்பு
கேம்ப கோலா குடியிருப்பு

இப்படி கோடிகளில் கொடுத்து வாங்க முடியாத நடுத்தர வர்க்கம் இலட்சங்களில் தனக்கான வீடுகளை தேடிக் கொள்கிறது. அந்த வீடுகளை சொந்தமாக்க தனது ஆயுள் வருமானத்தை எழுதியும் கொடுத்து விடுகிறது. ஆனாலும் அந்த சொந்தம் சிலருக்கு கிடைப்பதில்லை என்பதற்கு மும்பை கேம்ப கோலா வளாகத்திற்கு வாருங்கள்.

மும்பை வொர்லி பகுதியில் கட்டப்பட்ட கேம்ப கோலா வளாகத்தில் உள்ள 92 அடுக்கு மாடி குடியிருப்புகள் சட்ட விரோதமாக கட்டப்பட்டவை என்று அவற்றை இடிக்க ஆரம்பித்திருக்கிறது மும்பை மாநகராட்சி.

செவ்வாய்க் கிழமை காலையில் தலா 15 பேரைக் கொண்ட மும்பை மாநகராட்சியின் 9 குழுக்கள், 200 தொழிலாளர்களுடன் வீடுகளை இடிப்பதற்கு கேம்பா கோலா வளாகத்திற்கு வந்து சேர்ந்தன. 200 பேரைக் கொண்ட போலீஸ் படை பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தது. வளாகத்திற்கு வெளியில் குடியிருப்பவர்களில் பலர் கையில் பேனர்களுடன் வழியை மறித்து நின்றனர். மற்றவர்கள் முழக்கங்களை எழுப்பியபடி வெளிக் கதவுக்கு உள்பக்கம் நின்றனர். மறியல் செய்த ஆறு பேரை இழுத்துச் சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர் காவல் துறையினர்.

குடியிருப்போர் போராட்டம்
குடியிருப்போர் போராட்டம்

“ஊழலை இடியுங்கள், வீடுகளை அல்ல” என்று முழங்கினர் மக்கள். “நான் ஏன் போக வேண்டும்? எங்கே போவது? நாங்கள் இந்த குடியிருப்புகளை வாங்கும் போது அவை சட்ட விரோதமானவை என்று எங்களுக்குத் தெரியாது” என்கிறார் ஒன்பது நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் 60 வயதான கமல் பரேக்.

1980-களில் கட்டப்பட்ட கேம்ப கோலா வளாகத்தில் 7 அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோபுரத்திலும் 5 மாடிகளுக்கு மட்டும் அனுமதி வாங்கியிருந்த கட்டுமான நிறுவனம், காலப் போக்கில் கூடுதலாக 35 தளங்களை சேர்த்தது. மிட்டவுன் என்ற கட்டிடத்தில் 35 தளங்களும், ஆர்ச்சிட் என்ற கட்டிடத்தில் 17 தளங்களும் உள்ளன. கடந்த 2005 ஆண்டு முதல் நடந்து வரும் சட்டப் போராட்டத்தின் முடிவில் உச்ச நீதிமன்றம் கூடுதல் தளங்களை அங்கீகரிக்க மறுத்ததை ஒட்டி மும்பை மாநகராட்சி அவற்றை இடிக்க முடிவு செய்தது.

இந்த கட்டிடங்களை கட்டி, விற்று பணம் குவித்த ரியல் எஸ்டேட் முதலைகளை எந்த சட்டமும் தண்டிப்பதில்லை. 1980-களில் மேட்டுக் குடியினர் வசிக்கும் பீச் கேண்டி பகுதியில் கட்டப்பட்ட 36 மாடி பிரதிபா கட்டிடத்தின் மேல் 8 மாடிகள் சட்ட விரோதமானவை என்று முடிவு செய்யப்பட்டு நீண்ட சட்ட போராட்டத்துக்குப் பிறகு இடிக்கப்பட்டன. அந்த கட்டிடத்தின் வடிவமைப்பாளர், பின்னர் கேம்பா கோலா கட்டிடத்தை உருவாக்குவதிலும் பங்கு வகித்தார்.

போராட்டம்இன்று (புதன்கிழமை) காலையில் வளாகத்தின் வெளிக் கதவை உடைத்து நுழைந்த மாநகராட்சி குழுவினர், இடிக்கும் வேலையை தொடங்கியிருக்கின்றனர். நடுத்தர வர்க்கத்தின் வீடு இழக்கும் அவலத்திற்கு ஒரு தேசிய பரபரப்பு ஊட்டிய ஊடகங்களின் பிரச்சாரத்தால் தற்போது இடிப்பிற்கு இடைக்கால தடை உத்திரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. இந்த வேகம் ஏழை மக்களின் குடிசைகளை அகற்றுவதற்கு ஒரு போதும் வருவதில்லை. ஊடகங்களும் பேசுவதில்லை.

கேம்ப கோலா வளாகத்தைப் போல மும்பையில் 241 சட்ட விரோத கட்டிடங்கள் இடிக்கப்பட தயாராக இருப்பதாக மும்பை மாநகராட்சி தெரிவிக்கிறது. மேலும் சுமார் 6,000 கட்டிடங்களுக்கு முறையான குடியிருப்பு சான்றிதழ் இல்லை.

சொந்த வீடு என்ற மாயையில் சேமிப்புகளையும், உழைப்பையும் கொட்டும் நடுத்தர வர்க்கம், மறுகாலனியாக்கம் பெற்றெடுத்திருக்கும் ரியல் எஸ்டேட் முதலைகளால் மொட்டை அடிக்கப்பட்டு கேம்பா கோல வாசிகள் போல நடுத்தெருவில் நிறுத்தப்படுகின்றனர். மேட்டுக்குடியினரோ இத்தகைய பிரச்சினைகள் அற்ற பல்லடுக்கு பாதுகாப்புடன் ஆடம்பர வீடுகளில் வாழ்கின்றனர். வேலை தேடி இந்தியாவெங்கும் சுற்றும் ஏழைகளுக்கு வீடு என்ற பார்வையே இருப்பதில்லை.

தங்குமிடம் என்பது ஒன்றானாலும் அதில்தான் எத்தனை எத்தனை வேறுபாடு?

மேலும் படிக்க