privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்காவின் கண்காணிப்புக்கு ஒத்தூதும் இந்தியா !

அமெரிக்காவின் கண்காணிப்புக்கு ஒத்தூதும் இந்தியா !

-

மெரிக்க அரசின் உளவுத் துறைகளில் ஒன்றான தேசியப் பாதுகாப்பு நிறுவனம், ”ப்ரிஸம்’’ என்ற உளவு இயக்கத்தின் மூலமாக அனைத்து உலக நாடுகளின் முக்கிய இணையம் மற்றும் தொலைத்தொடர்புத் தகவல் பரிமாற்றங்களை வேவு பார்ப்பதை கடந்த ஜூன் மாதத்தில் ஸ்நோடென் அம்பலப்படுத்தினார். முதற்கட்டமாக அவர், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இணையத்திலும் தொலைபேசியிலும் நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை அமெரிக்கா பிரதியெடுத்துள்ளதை ஆதாரங்களோடு வெளியிட்டார். தற்போது இரண்டாம் கட்டமாக, இந்தியா, பிரேசில் போன்ற ஏழை நாடுகளையும் அமெரிக்கா உளவு பார்ப்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார்.

ஜெர்மன் ஹாம்பர்க் நகர் ஆர்ப்பாட்டம்
ஜெர்மனி, இந்தியா, பிரேசில் உள்ளிட்டு பல்வேறு நாடுகளின் அரசுகள் மற்றும் பொதுமக்களின் இணைய தளங்களை அமெரிக்கா ரகசியமாக வேவு பார்த்து வருவதைக் கண்டித்து ஜெர்மனியிலுள்ள ஹாம்பர்க் நகரில் நடந்த ஆர்ப்பாட்டம்.

கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் இந்த ஒற்றறியும் வேலைகளை ஸ்நோடென் அம்பலப்படுத்திய போது, தீவிரவாதிகளைக் கண்காணிப்பதற்காகத்தான் அவ்வாறு செய்ததாகக் கூறி, அதனை நியாயப்படுத்தியது அமெரிக்கா. ஆனால், தற்போது அதன் விசுவாசமான  ‘நட்பு’ நாடுகளான இந்தியா, பிரேசில் போன்றவற்றையும் அமெரிக்கா உளவு பார்த்துள்ளது. இத்தகைய ஒற்று வேலைகளின் மூலமாகத் திரட்டப்பட்ட தகவல்களின் அளவுகளில், இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உள்ள கணினிகளில் சேமிக்கப்பட்டுள்ள எல்லா தகவல்களையும் அமெரிக்கா பிரதியெடுத்துள்ளது. தூதரக அதிகாரிகளின் மின்னஞ்சல்களைக் கண்காணித்ததுடன், கணினியைக் கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் வேவு பார்த்துள்ளது. இதே போன்று வாஷிங்டன் நகரில் உள்ள ஐ.நா.வுக்கான இந்திய அலுவலகத்தையும், மற்றுமொரு தூதரக அலுவலகத்தில் இயங்கி வந்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ஐ.எஸ்.ஆர்.ஓ. (ISRO) வையும் வேவு பார்த்துள்ளது. இந்தியக் குடிமக்கள் தொலைபேசி மூலமாக யாருடன் பேசுகிறார்கள், இணையம் மூலமாக என்னென்ன தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள் எனவும் கண்காணித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவின் இணைய மற்றும் தொலைத்தொடர்புத் தகவல் பரிமாற்றங்களிலிருந்து கிட்டத்தட்ட 6.3 பில்லியன் தகவல்கள் அளவிற்கு அமெரிக்கா பிரதியெடுத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்வுகள் தொடங்கி, அணுசக்தி மற்றும் விண்வெளித்துறையின் செயல்பாடுகள் வரையிலான அனைத்துத் தகவல்களும் இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது.

இந்தியாவைப் போன்றே பிரேசில் நாட்டின் தூதரகங்களையும் பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்களையும் கண்காணித்ததுடன், அந்நாட்டு அதிபரது மின்னஞ்சல் முகவரியுடன் யாரெல்லாம் தொடர்பிலுள்ளனர் போன்ற தகவல்களையும் அமெரிக்கா களவாடியுள்ளது. பிரேசில் நாட்டின் எண்ணெய் வயல்களையும், பொதுத்துறை எண்ணெ நிறுவனமான ”பெட்ரோபாஸ்” நிறுவனத்தையும் அமெரிக்கா கண்காணித்ததுடன், இணையம் மூலமாக அந்நிறுவனம் பரிமாறிக் கொண்ட அனைத்துத் தகவல்களையும், அந்நிறுவனத்தின் கணினிகளில் சேமிக்கப்பட்ட அனைத்து கோப்புகளையும் பிரதியெடுத்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் எண்ணெ வளத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் தற்போது அமெரிக்காவின் கையில் உள்ளது.

ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிடுவதென்பது அந்நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. ஆனால் இன்று அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்ட சூழலில், நாடுகளின் இறையாண்மை என்பது கேலிப் பொருளாகி விட்டது. இந்தியா, பிரேசில் போன்ற ஏழை நாடுகள் மட்டுமல்ல; அமெரிக்காவின் மேலாதிக்கத்தை ஏற்கும் ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய நாடுகளைக் கூட அமெரிக்கா உளவு பார்த்துள்ளது. இதற்கெதிராக பிரான்சும் ஜெர்மனியும் பிரேசிலும் கண்டனம் தெரிவித்துள்ளன.07-internet-usa-02

ஆனால் இந்திய ஆட்சியாளர்களோ, இத்தகைய வாயளவிலான முணுமுணுப்பு கூட இல்லாமல், உலகளாவிய உளவு பார்க்கும் வலைப்பின்னலில் அமெரிக்காவின் கூட்டாளியாகவே செயல்படுகின்றனர். அமெரிக்காவின் கண்காணிப்புத் திட்டத்துக்கு உதவும் வகையில், அமெரிக்க அரசுடன் இந்தியாவின் வி.எஸ்.என்.எல். நிறுவனம் (டாடா தொலைத்தொடர்பு நிறுவனம்) 2005 ஏப்ரலிலும், ரிலையன்ஸ் நிறுவனம் 2007 நவம்பரிலும் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்க அரசு கோரினால், தங்களது வலைப்பின்னல் மூலம் சேகரிக்கப்படும் அனைத்துத் தகவல்களையும் அமெரிக்காவுக்கு இந்நிறுவனங்கள் அளிக்கும் வகையில் ஒப்பந்த விதிகள் போடப்பட்டுள்ளன.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் மறுகாலனியாதிக்கம், எல்லா ஏழை நாடுகளது பெயரளவிலான இறையாண்மையையும் ஒழித்து அவற்றைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவே துடிக்கிறது அமெரிக்கா.

இதற்காக அந்நாடுகளின் இயற்கை வளத்தைச் சூறையாடும் நோக்கில் தகவல்களைத் திருடுவதுடன், ஆட்சியாளர்கள் முதல் குடிமக்கள் வரை யாராக இருந்தாலும், தான் கண்காணிக்க விரும்பும் அனைவரையும் எவ்விதத் தடையும் இன்றி உளவு பார்க்கிறது. இந்தியாவின் இயற்கை மூலவளங்கள் உள்ளிட்டு உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளையும் கொள்ளை அடிக்கவும், வர்த்தக நலன்களையொட்டி ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போட்டா போட்டியில் இந்தியாவின் மீதான தனது இரும்புப் பிடியைத் தக்கவைத்துக் கொள்ளவும், தனது அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும் அமெரிக்க வல்லரசு இத்தகைய உளவு பார்க்கும் நடவடிக்கைகளைச் செய்து வருகிறது.

இது ஒரு நாட்டின் இறையாண்மையில் தலையிடும் அத்துமீறல் மட்டுமல்ல; வெறும் உளவு பார்க்கும் நடவடிக்கையும் அல்ல. இது அனைத்து நாடுகளின் தகவல்களையும் நடவடிக்கைகளையும் தனது விரல் நுனியில் வைத்துக்கொண்டு உலகை ஆட்டிப்படைக்கும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டத்தின் ஒரு அங்கம். இந்த நோக்கத்திலிருந்தே மெய் உலகிலும் (real) மெய்நிகர் உலகிலும் (virtual) அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்துகிறது.

அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை எதிர்த்த போராட்டம் என்பது அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஆப்கான், இராக் போன்ற நாடுகளுக்கு மட்டும் உரியதோ, அமெரிக்காவின் உடனடி இராணுவ அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் சிரியா, இரான், வட கொரியா ஆகிய நாடுகளுக்கு மட்டும் உரியதோ அல்ல. ஒவ்வொரு நாட்டின் அரசும் அந்த நாட்டின் குடிமகனும் நேரடியாக அமெரிக்காவின் கண்காணிப்புக்கு உள்ளாகி வரும் சூழலில், அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்பது நமது அன்றாட வாழ்வின் அடிப்படைஉரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டமாகவே மாறிவிட்டிருக்கிறது.

-கதிர்
____________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013
____________________________________