privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காயாசர் அராஃபத் விசம் வைத்து கொல்லப்பட்டார் – அல்ஜசீரா வீடியோ

யாசர் அராஃபத் விசம் வைத்து கொல்லப்பட்டார் – அல்ஜசீரா வீடியோ

-

ரசியல் எதிரிகளை கொலை செய்வது, மக்கள் மீது குண்டு வீசுவது, குழந்தைகளுக்கு மருந்துகள் மறுப்பது போன்ற பயங்கரவாத செயல்களில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் நாடுகள் அமெரிக்காவும், அதன் கூட்டாளி இஸ்ரேலும். அதன் சமீபத்திய சான்றாக பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராஃபத் 2004-ம் ஆண்டு கதிரியக்க நச்சின் மூலம் படுகொலை செய்யப்பட்டிருப்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.

யாசர் அராஃபத்
யாசர் அராஃபத்

பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமித்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் 1948-ம் ஆண்டு உருவாக்கிய யூதர்களுக்கான இஸ்ரேல் நாடு தொடர்ந்து தனது ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தி, லட்சக் கணக்கான பாலஸ்தீன மக்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக, சிறைக் கைதிகளாக நடத்தி வருகிறது. 35 ஆண்டுகளாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும் அதற்கு பின்பலமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து போராடிய பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவரான யாசர் அராஃபத் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் சின்னமாக இருந்தவர்.

பாலஸ்தீன விடுதலை அமைப்புதான் மதசார்பற்ற அமைப்பாகவும் இருந்தது. அதை உடைப்பதெற்கென்றே மதவாத அமைப்புகளை பாலஸ்தீனில் கொண்டுவருவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் முயன்றன. வெற்றியும் பெற்றன. மேலும் கடைசி ஆண்டுகளில் யாசர் அராஃபத்தும், பிஎல்ஓ அமைப்பும் எதிரிகளுடன் சமரசமும் செய்து கொண்டன. அது அடக்குமுறையை எதிர் கொள்ள முடியாத அவலத்தாலும், உறுதியான அரசியல் இல்லாமையாலும் நடந்தேறின. அந்த இடத்தை ஹமாஸ் போன்ற மதவாத அமைப்புகள் பிடித்துக் கொண்டன. எனினும் யாசர் அராஃபத்தை கொன்றே ஆக வேண்டும் என்பதில் இசுரேல் பின்வாங்கவில்லை.

2004-ம் ஆண்டு பாலஸ்தீனிய பகுதியான ரமலானில் இருந்த யாசர் அராஃபத்தின் குடியிருப்பை ஆயுதப் படைகளால் சூழ்ந்து, அவரை சிறைப் படுத்தி, உணவு, தண்ணீரைக் கூட கட்டுப்படுத்தி வந்தது இஸ்ரேல். ஆரோக்கியமாக இருந்த அராஃபத் அந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி திடீரென கடும் நோய்வாய்ப்பட்டார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாரிசில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் நவம்பர் 11-ம் தேதி தனது 75-வது வயதில் உயிரிழந்தார். ஒரு மாதத்துக்குள் உடல் சுருங்கி, தோல் கறுத்து, கொடூரமாக கொல்லப்பட்டிருந்தார்.

யாசர் அராஃபத் - இறுதி மரியாதை
பொலோனியம் ஏற்படுத்தும் நோய்க் கூறுகள் காணப்பட்டன.

அராஃபத்தைக் கொன்றது இஸ்ரேல்தான் என்று பாலஸ்தீன மக்கள் உறுதியாக நம்பினர். ஆனால், அராஃபத்திற்கு பிறகு பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவரான முகமது அப்பாஸ், பிரேத பரிசோதனை கூட செய்யாமல் உடலை புதைக்க ஏற்பாடு செய்தார். அராஃபத்துக்கு சிகிச்சை அளித்த பிரெஞ்சு மருத்துவமனையின் மருத்துவர்கள் அவரது நோய் தொடர்பாக எந்தத் தகவல்களையும் வெளியிட மறுத்து விட்டனர். அவை ராணுவ ரகசியங்கள் என வகைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

2012-ம் ஆண்டு, அல்ஜசீரா தொலைக்காட்சி அவரது மனைவி சுகா அராஃபத்திடம் கொடுக்கப்பட்டிருந்த அராஃபத்தின் உடைகள், பல் தேய்க்கும் பிரஷ் இவற்றைப் பெற்று சுவிட்சர்லாந்தில் உள்ள லசானே பல்கலைக் கழகத்துக்கு சோதனைக்கு அனுப்பியது. அவற்றில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம், வேர்வை, உமிழ்நீர், சிறுநீர் போன்று திரவங்களின் படிமங்களை சோதனை செய்து அவற்றில் நஞ்சுக்களின் தடயம் இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. வழக்கமான நஞ்சுகள் எதுவும் கிடைக்காமல் போகவே அரிதான நஞ்சுகளுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவற்றில் பொலோனியம் 210 என்ற தனிமம் இயற்கையாக இருப்பதை விட 10 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. உதாரணமாக, அவரது பல் தேய்க்கும் பிரஷ்ஷில் 54 மில்லிபெக்குரலும், அவரது உள்ளாடையில் இருந்த சிறுநீர் படிமங்களில் 180 மில்லி பெக்குரலும் பொலோனியம்-210 இருந்தது. இது இயற்கையாக வந்திருக்க முடியாது என்று லசானே பல்கலைக் கழக  கதிர்வீச்சு இயற்பியல் கழகத்தின் இயக்குநர் டாக்டர் பிரான்சுவா பொகுத் தெரிவித்தார். ஒப்பீட்டுக்காக சோதிக்கப்பட்ட சாதாரண மனிதர் ஒருவரின் உள்ளாடையில் பொலோனியம் 6.7 மில்லி பெக்குரல்தான் இருந்தது.

யாசர் அராஃபத்
யாசர் அராஃபத்

பொலோனியம் என்பது 1898-ம் ஆண்டு மேரி கியூரியால் கண்டறியப்பட்ட கதிர்வீச்சு தனிமம் ஆகும். சில ஆண்டுகளுக்குப் பிறகு பொலோனியம்-210 ஆல் பாதிக்கப்பட்ட மேரி கியூரியின் மகள் ஐரீன், உயிரிழந்தார். இஸ்ரேலின் அணுஉலை திட்டத்தில் பணி புரியும் இரண்டு ஊழியர்கள் பொலோனிய நச்சினால் கொல்லப்பட்டதாக பதிவாகியிருக்கிறது. 2006-ம் ஆண்டு முன்னாள் ரஷ்ய உளவாளி, அலெக்சாண்டர் லித்வினென்கோ பொலோனியம்-210 நச்சுப்படுதலின் மூலம் லண்டனில் உயிரிழந்தார். அராஃபத்தைப் போலவே கடும் வயிற்றுப் போக்கு, எடை இழப்பு, வாந்தி இவற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் லித்வினென்கோ.

இவற்றைத் தவிர பொலோனியம் 210 நச்சால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதிலும் 5-ஐ தாண்டாது. ஏனெனில் இது யாருக்கும் கிடைத்து விடக்கூடிய பொருள் அல்ல. வல்லரசு நாடுகளைத் தாண்டி யாரும் இவற்றை கைக்கொள்வது கடினம். எனவே, பொலோனியம் நச்சினால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்க் கூறுகள் பற்றிய தரவுகள் பெருமளவு கிடைப்பதில்லை. இருப்பினும், விலங்குகளில் செய்யப்பட்ட சோதனைகளில் அராஃபத்துக்கு ஏற்பட்ட நோய்க்  கூறுகள் காணப்பட்டன.

அராஃபத்தின் உடைகளில் படிந்திருந்த பொலோனியத்தின் அளவு இயற்கையானது இல்லை, அணுஉலைகளில் தயாரிக்கப்பட்ட பொலோனியம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தடவியல் நிபுணர்கள் கூறினர். புதைக்கப்பட்ட அராஃபத்தின் உடலைத் தோண்டி எலும்புகளை ஆய்வு செய்து அவற்றில் பொலோனியம் இருப்பது நிரூபிக்கப்பட்டால், அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யலாம் என்று அராஃபத்தின் மனைவி கோரிக்கை விடுத்தார். கூடவே, அராஃபத் உயிரிழந்த பிரான்சில் ஒரு குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

பொலோனியம் 210-ன் அரை வாழ்வுக் காலம் 138 நாட்கள். அதாவது கதிர் வீச்சின் மூலம் ஆல்பா துகள்களை வெளியிட்டு 138 நாட்களில் எடையில் பாதியை இழக்கிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆரம்பத்தில் இருந்த அளவு பெருமளவு குறைந்திருக்கும்.

சுகா அராஃபத்
சுகா அராஃபத்

அராஃபத்தின் உடலை பரிசோதனைக்கு வெளியில் எடுப்பதற்கு ஆரம்பத்தில் முட்டுக்கட்டை போட்ட பாலஸ்தீன விடுதலை அமைப்பு, பின்னர் அதற்கான ஏற்பாடுகளை செய்தது; சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் நிபுணர்களோடு, ரஷ்யா குழு ஒன்றையும் அழைத்தது.  கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட அராஃபத்தின் எலும்பு மாதிரிகள் சுவிட்சர்லாந்து ஆய்வகத்திலும், ரஷ்யாவிலும் பிரான்சிலும் பரிசோதனை செய்யப்பட்டன.

ரஷ்ய ஆய்வகத்தின் சோதனை முடிவுகளை ரகசியமாக பெற்ற அல்ஜசீரா, சோதனைகள் செய்வதில் அரசியல் தலையீடு இருந்ததையும், அறிக்கையில் தரப்பட்டிருக்கும் பொலோனியம் அளவு சாதாரண மனிதர்களிடம் இருக்கும் அளவு கூட இல்லை என்று அறிக்கை சொல்வதையும் சுட்டிக் காட்டி, ரஷ்ய அரசியல் தலைமை உண்மை வெளியாவதை விரும்பவில்லை என்று நிரூபித்திருக்கிறது. இருப்பினும் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் சோதனையிலிருந்து உறுதியாக முடிவு சொல்ல இயலாது என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவுகளிலிருந்து, பிரிட்டனைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் டேவிட் பார்க்ளே பொலோனியம் நச்சினால் அராஃபத் கொல்லப்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கிறார். அராஃபத்தின் இறுதி மாதங்களில் அவருக்கு வேறு எந்த நோயும் இல்லை என்பதையும், பிரெஞ்சு மருத்துவமனையில் பல வகைப்பட்ட நோய்களுக்கான சோதனைகளில் ஆட்கொல்லி நோய்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பதும் அணு உலையிலிருந்து பெறப்பட்ட பொலோனியம் 210 கொடுக்கப்பட்டது மூலம் அராஃபத் கொல்லப்பட்டிருப்பதை உறுதி செய்கின்றன.

ஆட்கொல்லி விஷமாக புகழ்பெற்ற சயனைடை விட 10 லட்சம் மடங்கு குறைவான அளவு பொலோனியமே ஒருவரை கொல்வதற்கு போதுமானதாக இருக்கும் என்கிறார் டேவிட் பார்க்ளே. இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் பொலோனியம் உற்பத்தியாகும் அணு உலைகள் உள்ளன என்பதையும், இறுதிக் காலத்தில் அராஃபத் இஸ்ரேல் படைகளால் சூழப்பட்டிருந்தார் என்பதையும் வைத்துப் பார்க்கும் போது, தனது நோக்கங்களுக்கு இடையூறாக இருந்த அராஃபத்தை தீர்த்துக் கொட்டுவதற்கான இஸ்ரேலின் சதிதான் இந்த படுகொலை என்பது நிரூபணமாகிறது.

அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ் நடத்தப்பட்ட இஸ்ரேலுடனான ‘சமாதான’ பேச்சு வார்த்தையில், அராஃபத் இஸ்ரேலின் நிலப்பறிப்பு கோரிக்கைகளுக்கு அடி பணிய மறுத்ததும், பாலஸ்தீன விடுதலைக்கான ஆயுதம் தாங்கிய போராட்டத்தை கைவிட மறுத்ததும் இஸ்ரேலின் திட்டங்களுக்கு முட்டுக் கட்டையாக இருந்தன. பாலஸ்தீன மக்களின் பெருவாரியான ஆதரவை பெற்ற தலைவராக இருந்த அராஃபத் வெளிப்படையாகக் கொல்லப்பட்டால், பெரும் மக்கள் எழுச்சி வெடிக்கும் என்று பயந்த இஸ்ரேல் நய வஞ்சகமாக அவரை கொலை செய்திருக்கிறது. அவரை கொலை செய்வதில்  உள்வட்டத்தைச் சேர்ந்த துரோகிகளின் பங்களிப்பும் இருந்திருக்கலாம் என்று அல்ஜசீரா குற்றம் சாட்டுகிறது.

அராஃபத்தின் மரணத்துக்குப் பிறகான ஆண்டுகளில் ஆயுதப் போராட்டத்தை நிராகரிக்கும் முகமது அப்பாஸ் தலைமையிலான பதா கட்சியின் நிர்வாகத்தின் கீழ் மேற்கு கடற்கரை பகுதி, ஆயுதம் ஏந்திய போராட்டத்தை முன்வைக்கும் ஹமாஸ் தலைமையில் காசா பகுதி என்று பாலஸ்தீன விடுதலை இயக்கம் பிளவுபட்டிருக்கிறது. இஸ்ரேல் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும், இன சுத்திகரிப்பையும் தொடர்ந்து நடத்தி வருகிறது.

Al Jazeera Investigates – What Killed Arafat?

Al Jazeera Investigates – Killing Arafat

மேலும் படிக்க