privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்நீயா நானா கோபிநாத் : இளைஞர்களை மொக்கையாக்கும் 2-ம் அப்துல்கலாம்..!

நீயா நானா கோபிநாத் : இளைஞர்களை மொக்கையாக்கும் 2-ம் அப்துல்கலாம்..!

-

ஸ்டார் விஜய் டிவியில் “நீயா நானா” நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமான கோபிநாத், “என் தேசம் என் மக்கள்” என்ற புதிய நிகழ்ச்சி மூலம் விலைவாசி உயர்வு முதல் கல்விக் கட்டண உயர்வு உள்ளிட்ட சமூக பிரச்சனைகளை அலசுவது என்ற பெயரில் இப்பிரச்சனைகளிற்கு அடிப்படை காரணங்களை அறியாமலோ மறைத்தோ விவாதத்தை நகர்த்தி இறுதியில் ஆகாசவாணி டைப் உபதேசங்களை அள்ளிவிடுகிறார்.

கோபிநாத்
கோபிநாத்

இத்தகைய கோபிநாத், “யூனிவர்செல் கடையில செல் வாங்குங்க, இந்த பிராண்ட் வேஷ்டி வாங்குங்க” என விளம்பரங்களில் நடிப்பது மூலம் மக்கள் தலையில் பொருட்களை திணிக்கும் சராசரி சினிமா, தொலைக்காட்சி ‘பிரபலங்கள்’ போலத்தான் என நினைத்துக் கொண்டு இருந்தேன்.

ஆனால் அவருடைய நிகழ்ச்சி வீடியோக்களை இணையத்தில் பார்த்த போது தான் அருகிலேயே ‘நீயா நானா புகழ் கோபிநாத் உரைகள்’ என பல பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுகி சிவம் போல ஆன்மீகத் தமிழில் அப்துல் கலாம் போல அட்வைசு மழையில் ஆற்றிய சொற்பொழிவுகள் பலவற்றை பார்க்க முடிந்தது.

சரி என்ன சொல்கிறார் என அவற்றில் சிலவற்றை பார்த்த போது பொருளாதாரம் முதல் சாதி, மதப் பிரச்சனை என மாணவர்கள் கவலைப்படும்படி ஒன்றும் இல்லை, ’பயம் வேண்டாம், பயம் வேண்டாம்’ என விசுவாசக் கூட்டம் நடத்தி வருவதை கண்டு அதிர்ந்தே போய் விட்டேன். கோமாளி அப்துல கலாமாவது, “நாடு வல்லரசு ஆக கனவு காணுங்கள் இளைஞர்களே” என்றார். ஆனால் நம்ம 2-ம் கலாம் கோபிநாத் அவர்களோ “கனவே (ஆணியே) காண வேண்டாம். ஆல்ரெடி நாடு வல்லரசாக தான் இருக்கிறது” என ஒரே போடாக போடுவதை பார்க்கும் போது என்ன கொடுமை சரவணா என கத்தணும் போலத் தோன்றியது.

பேச்சாளர் கோபிநாத்
அட்வைசு குண்டு மழை வீசும் சொற்பொழிவாளர் கோபிநாத்

வல்லரசு ‘ஸ்பெஷலிஸ்ட்’ அப்துல் கலாமே செல்ப் எடுக்காமல் தள்ளாடி வரும் போது கோபிநாத் மட்டும் எப்படி இன்றைய இளைஞர்களை மொக்கைகளாக்க முடியும். முடியாது என்பதை சில கல்லூரிகளில் சொற்பொழிவு முடிந்த பின் மாணவர்கள் எழுந்து கோபிநாத்தின் முகத்தில் அறைவது போல யதார்த்தமான கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்ததையும் வேட்டி கட்டியஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் பேசுவது போல பேண்டு போட்ட கோபிநாத் சந்தர்ப்பவாதமாக சமாளிப்பதை பார்க்க முடிந்தது.

பழனியில் 2011 அன்று சுப்ரமணிய பொறியியல் கல்லூரியில் கோபிநாத் கலந்து கொண்டு பேசியவற்றை பார்க்கலாம்.

கோபிநாத் உரை இந்த இணைப்பில் உள்ளது.

********************

“50 ஆண்டுகளாக இந்தியா செப்பனிடப்பட்டு, சரி செய்யப்பட்டு இன்று நம் கையில் கொடுக்கப்பட்டு இருக்கு, நம் எல்லோர் கையிலும் செல்போன். உலகிலேயே செல்போன் அதிகம் பயன்படுத்துவது இந்தியன், ஆனால் அதனை தயாரிப்பதில் ஒரு இந்திய நிறுவனம் கூட இல்லை. அதன் சேவைகளை வழங்குவதிலும் சொல்லும்படியான ஒரு இந்திய நிறுவனம் கூட இல்லை. நம்மையே தயாரிக்க வைத்து நம்மிடமே விற்பனை செய்கிறான். நாம் பயன்படுத்தும் அனைத்தும் வெளிநாட்டு பொருட்கள். பேசுகிறவன் தமிழன் , பேசுகின்ற மைக் மேட் இன் இந்தியா கிடையாது.

உலகின் மிகப் பெரிய ஆயுதம் அன்பும், அறிவும் தான். சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தி என்ற கோவணம் மட்டும் கட்டிய தனி மனிதனுக்கு பின்னால் ஒட்டு மொத்த இந்தியாவும் சென்றதற்கு காரணம், காந்தி இந்த தேசத்தின் மீது, மக்கள் மீது வைத்திருந்த அன்புக்கு பிரதிபலனாகத்தான். அதனால் ஆயுதம் எதையும் செய்யாது. அன்பு மட்டுமே நிலைத்திருக்கும்.

நமது சூழ்நிலைக்கு பொருந்தாத பீட்சாவை விக்கிறான். நம்ம இட்லியை ஏன் அவன் நாடுகளில் மார்க்கெட் பண்ண முடியவில்லை. வேம்பு- மஞ்சள் என அனைத்துக்கும் நமக்கு காப்புரிமை இல்லை என எவனோ ஒருத்தன் விலை பேசுகிறான், அதைப் பற்றி கவலைப்படாமல் ஒரு நல்ல வேலை – வரதட்சணை வாங்கிக் கொண்டு ஒரு கல்யாணம்– ஊருக்கு வெளியே சொந்த வீடு – குழந்தை – அப்புறம் சாவு என நாம் இருக்கிறோம்.… இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?” –

பேச்சாளர் கோபிநாத்
பேச்சாளர் கோபிநாத்

இவையெல்லாம் 2-ம் அப்துல் கலாம் ஆதங்கப்பட்ட சில கருத்து முத்துக்கள். அத்தனையும் கோர்க்க முயலும் போதே புட்டுக்கொள்ளும் டப்பா முத்துக்கள்!

50 ஆண்டுகளில் செப்பனிடப்பட்டு, சரி செய்யப்பட்டு விட்ட நாடு என கோபி சொல்லுவது கடந்த 20 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட, கனிம வளங்களை கொள்ளையிட ஆயுதப் படைகளாலும் சல்வாஜூடும் போன்ற அரசின் கூலிப்படைகளாலும் பல லட்சம் பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்டு ஒரு மிகப் பெரிய மக்கள் மீதான போரை நடத்தும் இந்திய நாட்டை!

காந்தி குறித்தும் அன்பு குறித்தும் வகுப்பு எடுக்கும் கோபிநாத் காஷ்மீரிலும், கூடங்குளத்திலும், தண்டகாரண்யாவிலும் யாருக்காக இந்திய அரசு அன்புடன் ஆயுதம் ஏந்தி போர் புரிகிறது என்பதை கூறவில்லை. அரசு மக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கலாம். ஆனால் அதை எதிர் கொள்ள உழைக்கும் மக்கள் ஆயுதம் எடுக்கக் கூடாது என்று அன்று காந்தி சொன்ன அதே வார்த்தைகளைத் தான் இன்று கோபிநாத் கூறுகிறார். காந்தி செத்த பின்னரும் மக்களுக்கு எதிராக அவர் விட்டுச் சென்ற அகிம்சையின் துரோகம் தொடர்கிறது. ஹிம்சையைக் கூட மக்கள் தமது சொந்த அனுபவத்தில் புரிந்து கொண்டு பின்னர் எதிர்க்கத் துவங்குகிறார்கள். ஆனால் அஹிம்சைவாதிகளின் காயடிப்பைத்தான் அத்தனை சீக்கிரம் மக்கள் உணர்வதில்லை.

மஞ்சள், வேம்பு காப்புரிமை பறி போவதாக பதறும் கோபிநாத்துக்கு ஒரு இந்திய நிறுவனம் செல்போன் தயாரிப்பதுதான் முன்னேற்றத்துக்கான வழியாக தெரிகிறது. ஆனால் நம் நாட்டு வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் ஆட்சியாளர்களை குறித்து அவருக்கு எந்த குறையும் இல்லை. பாரதத் தாய் விற்கப்படும் அவலத்தை விட அவள் அணிந்து கொள்ளும் ஆபரணங்கள் குறித்துத்தான் இந்த கோட்டு சூட்டு கோபிநாத் கவலைப்படுகிறார்.

செல்போன் சேவையினை வெளிநாட்டு கம்பெனிகள் தான் வழங்க வேண்டும் என்ற கொள்கையின் காரணமாக பொதுத் துறை நிறுவனமாக VSNL-யை டாடாவுக்கு விற்றதையும், தொலைத்தொடர்பு துறையில் 74% அந்நிய முதலீட்டுக்கு திறந்து விடப்பட்டு அதுவும் போதாது என அதனை 100% ஆக்க வேண்டும் என தினந்தோறும் வேலை செய்து பி.எஸ்.என்.எல்-ஐ முழுவதுமாக அழித்த அரசின் சதி குறித்து கோபிநாத் என்ன சொல்கிறார்? தினமணியில் நடுப்பக்க கட்டுரை படிக்கும் ஒருவருக்கு தெரியக்கூடிய விஷயம் இந்தியாவின் சிறந்த ‘மீடியாபர்சன்’ என டாக்டர் பட்டம் வாங்கிய கோபிநாத்-க்கு தெரியாதா?

புதிய தலைமுறையில் வந்த பி.எஸ்.என்.எல்-ஐ அரசே அழித்த கதை இதோ

”நமக்கு என்ன கஷ்டம். உலகத்திலேயே நமது நாட்டில் தான் சீரான வெப்பநிலை, அறிவு, இயற்கை வளம் என அனைத்தும் இருக்கிறது. 3 வேளை சோற்றுக்கே இன்னும் எத்தனை நாளைக்கு பயந்து கொண்டு இருக்கப் போகிறீர்கள்? உலகத்துக்கே சோறு போடுவது எப்போது. நாம காப்பாத்தலைனா இந்த உலகத்தை யார் காப்பாற்ற முடியும்? இங்க உட்கார்ந்து இருக்கும் மாணவர்களை நான் எம்.எல்.ஏ, கவுன்சிலராக பார்க்கலை, இங்க இருப்பவர்களில் ஒருத்தர்தான் நாளை ஐ.நாவில் பேசப் போகிறார், பிரிட்டிஷ் அரண்மனையில் இந்திய ஜனநாயகத்தைப் பேசப் போகிறார். நமக்கு அந்த பெருமிதமும் – ஆணவமும் வேண்டும்.

இந்த வயதிலும் நம்ம தலைவர்கள் ஜீ 8 மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டேன் என்பது எந்த துணிச்சலில், பல ஒப்பந்தங்களில் கையெழுத்து போட முடியாது என கூறுவது எந்த துணிச்சலில். எல்லாம் உங்கள் மீதான் நம்பிக்கையில்தான்..

இந்தியாவில் படிப்பது என்பது 1980-ல் குடும்பத்தைக் காப்பாற்ற, 1990-ல் கிராமத்தைக் காப்பாற்ற, 2000 ஆரம்பத்தில் தேசத்தைக் காப்பாற்ற, ஆனால் இன்று இந்த உலகத்தைக் காப்பாற்ற. இதை நான் சொல்லவில்லை, பிரிக் ரிப்போர்ட் சொல்லுது. அடுத்த 7 ஆண்டுகளில் உலகில் இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகமென்று.”

– ஸ்ஸ்ஃஃஃ செப்பா, இப்பவே கண்ணைக் கட்டுதே என்று அயர்ந்து விடாதீர்கள். இவையும் நமது 2-ம் கலாம் அள்ளி வீசிய அட்வைசு குண்டுகள்.

வார்டு கவுன்சிலராக மாறி ஒரு தெருவை மாற்றுவதற்கு பதில் ஐநா செயலர் ஆனால் ஒரே நாளில் உலகை மாற்றி விடலாம் என்று இவர் யோசித்திருப்பார் போலும்! காசா, பணமா? கனவைக் கூட கொஞ்சம் ரிச்சாகத்தான் காணுவார் போலும். ஐநாவின் யோக்கியதையை ஈரானிடமோ, இல்லை ஈராக்கிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளும் பணிவோ, பக்குவமோ இத்தகைய அமெரிக்க அடிமைகளுக்கு இருப்பதில்லை.

மூன்றில் ஒருவர் இரவு உணவு இல்லாமல் படுக்கப் போகும் இந்திய நாட்டு இளைஞர்கள் தான் உலகத்தை காப்பாற்ற வேண்டும் என்கிறார் கோபிநாத். நாட்டின் 77% மக்களின் தினசரி வருமானம் 20 ரூ என அரசின் புள்ளி விவரமே கூறும் நிலையில் இவர் போகச் சொல்வது யாரைக் காப்பாற்ற?

காட் ஒப்பந்தம் முதல் அணு சக்தி ஒப்பந்தம் வரை போட்டு நாட்டின் இயற்கை வளங்களையும், மக்கள் உயிரையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு நித்தம் நித்தம் காவு கொடுத்து வரும் இந்திய ஓட்டுப்பொறுக்கி அரசியல் தலைவர்களின் சாதனைகள் போபால், விதர்பா, கூடங்குளம், ஈழம் என தொடர்வதை பார்க்கலாம். இதற்கெல்லாம் ஆதாரம் தேவையில்லை.

வால்மார்ட்டை ஏன் திணிக்கிறான், என்.எல்.சி-யை ஏன் விக்கிறான் என தினசரி பேப்பர் படிப்பவனுக்கு கூட இந்த ஆட்சியாளர்கள் குறித்த மாயை அகன்று வரும் நிலையில், கோபிநாத்துக்கு தெரியவில்லை என்றால், ஒன்று அவர் ரொம்ப நாளாக தூங்கிக் கொண்டு இருக்கிறார் அல்லது அவர் ஒரு அடி முட்டாள் என்று தான் அர்த்தம். ஆனால் அப்துல் கலாம் டைப் அறிவாளிகள் காமடியனா, இல்லை வில்லன்களா என்று பிரித்தறிவு கடினம். வில்லத்தனத்திற்கான காமடியன்கள் என்று வேண்டுமானால் அறுதியிடலாம்.

இந்தியாவில் படிப்பது என்பது சுதந்திரத்துக்கு முன்னர் ஆங்கிலேயனுக்கு தேவையான மூளையினை உற்பத்தி செய்யக் கூடிய மெக்காலே கல்வி என்றால் தனியார்மயம், உலகமயம் என்ற நாசகார கொள்கையினை மன்மோகன் சிங் 1991 புகுத்திய பின்னர் அது பன்னாட்டு கம்பெனிகளின் தேவைக்கான மூளையினை உற்பத்தி செய்யக்கூடிய நவீன மெக்காலே கல்வியாக இருக்கிறது. இதை கோபிநாத்- நடத்தும் நிகழ்ச்சிகளிலேயே மாணவர்கள் சொல்லி கதறி அழுகின்றனர். “மாநில அரசு மின்சார உற்பத்தியில் ஈடுபட முடியாது, ஏன்னா மன்மோகன் சிங் கொண்டு வந்த உலகமயக் கொள்கை அப்படி” என ஆவடி குமார் போன்ற அதிமுக அடிமைகள் பேசும் அளவுக்கு உலகமயக் கொள்கைகள் புளுத்து நாறும் நாட்டில், 3 வேளை சோத்துக்கு கூட இந்த படிப்பு ஆகிறது இல்லை என சிறார்களை வேலைக்கு அனுப்பும் நாட்டில் இருந்து கொண்டு தேச நலனுக்கான தலைவர்கள், உலகத்தையே காப்பாற்றும் படிப்பு என கோபிநாத் புரூடா விடுவது ஏனோ..?

”கேம்பஸ் இண்டர்வியூ கலந்து கொண்டு வேலை வாங்கினால் மட்டும் போதாது, 3 ஆண்டுகளில் ஒரு கம்பெனியை ஆரம்பித்து முதலாளியாக மாறணும். இன்றைக்கு முதலாளியாக மாறுவதற்கு முக்கியம் முதலீடு அல்ல, வாடிக்கையாளர்கள் தான். உலகத்திலேயே மிக அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கும் நாடு இந்தியா, சீனாவில் கூட இல்லை. எனது அம்மாவை அழைத்துப் போக ஹெலிகாப்டர் வேண்டும் என கேட்கும் திமிர் வேணும் நமக்கு..”

என்று அறம் பாடுகிறார் கோபிநாத்.

நம் நாட்டில் இளைஞர்கள் அதிகம், அறிவு அதிகம் அதனால் உலகத்தை மாற்றுவோம் என்ற கோபிநாத் இப்ப என்னடா என்றால் இந்தியாவில் தான் வாடிக்கையாளர்கள் அதிகம் அதனால் முதலாளியாக மாறு என பாடம் எடுக்கிறார். வால்மார்ட் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வரை நமது நாட்டை நுகர்வோர் தேசமாகத்தான் பார்க்கும் உண்மையினை மறைத்து வெளிநாட்டு கம்பெனிக்காரன் நம் அறிவைப் பார்த்து மிரள்கிறான் என்று பொய் சொன்ன கோபிநாத் நம் நாட்டு மக்களை வெறும் நுகர்வோராக பாரு என உண்மையை போட்டு உடைக்கிறார். சரி எல்லாரும் முதலாளிகளானால் தொழிலாளிகள் யார் என்று கேட்டால் தொழிலாளிகளும், ஏழைகளும், ஏனைய சாமானியரும் கோபிநாத்தின் கருணைப் பார்வையில் இடம் பெறும் தகுதி கொண்டவர்கள் இல்லை என்பதே பதில்.

”நான் சினிமா பற்றி எண்டர்டெய்ன்மெண்ட் ஆக பேசி கைதட்டல் வாங்கியிருக்கலாம், ஆனால் பஸ்-ல் புஸ்பக் சீட்டை தள்ளத் தெரியாமல் கூச்சப்பட்டு கொண்டு இருந்த என்னை இந்தக் கூட்டம் தான் இந்த இடத்துக்கு வந்து விட்டுருக்கு. அதற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். எனது அடுத்த தலைமுறைக்கு விசுவாசமாக இருக்கனும்….

அரசியலுக்கு போகலாமா? வேணாமா ? என்று சிலர் கேட்கிறார்கள். நீங்க அரசியலுக்கு போங்க.. போகாமல் கூட இருக்க… ஆனா முதலில் ஓட்டுப் போடுங்க. தேசத்தின் தலையெழுத்தை மாற்றுவதற்கு உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே உத்தி இது. அதை செய்யாமல் ஊழல் செய்றாங்க, வடை திங்கிறாங்க.. என்பதும் அரசியல் ஒரு சாக்கடை என்பதும் தவறு. அதனால் ஓட்டு என்பது நான் ஜனநாயகவாதி என்பதற்கான அடையாளம்.”

இது கோபிநாத் இறுதியாக வீசிய கருத்துக் குண்டுகள்.

மக்களாகவே இந்த அரசியல் அமைப்பை புரிந்து கொண்டு தேர்தலை புறக்கணிக்கும் எத்தனித்தில் இருந்தாலும் இத்தகைய அப்துல் கலாம்கள் முதல் ஆனந்த விகடன்கள் வரை உடனே ஓட்டுப் போடு இல்லையென்றால் நீ விசம் கக்கி சாவாய் என்று சாபம் போட்டு மிரட்டுகிறார்கள். கேட்டால் இதுதான் ஜனநாயகமாம்! இந்த ஜனநாயகத்தின் யோக்கியதையை காஷ்மீரிலும், ஐரோம் ஷர்மிளாவிடமும் கேட்டால் பளிச்சென்று விளக்கிவிடுவார்கள். ஆனால் கோபிநாத் மருந்துக்கும் கூட இத்தகைய ஒடுக்கப்படும் இந்தியாவோடு அறிமுகம் கொண்டவரல்ல. ஒடுக்கும் முதலாளிகளின் இந்தியாவின் தூதர் அவர்.

உரையினை முடித்துகொண்ட பின் கோபிநாத்திடம் சில மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதில் ஒரு கேள்வி.

“வறுமை, லஞ்சம், வன்முறை போன்றவற்றில் இந்திய இளைஞனின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது எது?”  என்பது. அதற்கு கோபிநாத் சொன்ன பதில்

“முதலில் இப்படி பேசுவதை நிறுத்துங்க பாஸ், உலகிலேயே அமைதியான நாடு இந்தியா, எல்லோருக்கும் வேலை வாங்கித் தருவது அரசாங்கத்தின் வேலை இல்லை, இது கார்ப்பரேட் உலகம், இதில் போட்டி போட்டு நீங்க தான் வேலை தேடணும். மற்றபடி ஊழல் & லஞ்சம் பற்றி நோ கமெண்ட்ஸ்”

என முடித்து கொண்டார். பாசிஸ்டுகளின் இராணுவம் புல்லட் ஃபுரூப் போட்டுக்கொள்வது போல பாசிஸ்டுகளின் உபதேசியார்கள் போட்டுக்கொள்ளும் கருத்து புல்லட் ஃபூரூப்தான் இந்த நோ கமெண்ட்ஸ்!

ஆனால் நமது கமெண்டசை நாம் நிறுத்த வேண்டியதில்லை.

“சினிமா பற்றி பேசி கைதட்டல் வாங்க முடியும், ஆனால் மக்களுக்கு விசுவாசமாக இருக்கனும்” எனும் கோபிநாத் அவர்களே, நாட்டில நடக்கிற எந்த விஷயத்திற்காவது இதுவரை மக்களுக்காக குரல் கொடுத்து உள்ளீர்களா..?

பெரிய மீடியாபர்சன் என்ற டாக்டர் பட்டம் வாங்கினதாக சொல்லும் நீங்கள் உங்கள் கண் எதிரே கூடங்குளம் மக்கள் மீதான அரசின் அடக்குமுறை ஆகட்டும், ஈழத்தில் போரை முன்னின்று நடத்திய இந்திய அரசாலும், சிங்கள இனவெறியர்களாலும் மக்கள் கொத்து கொத்தாக செத்தபோதும், அதனை தடுப்பதாக சொல்லி கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட ஓட்டுக்கட்சி தலைவர்கள் நாடகமாடிய போதும் இந்திய மேலாதிக்கத்திற்கு எதிராகவும் ஈழத்தமிழ் மக்களுக்காகவும் வீதியில் இறங்கி மாணவர்கள், வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம் ஆகட்டும், சமச்சீர் புத்தகங்களை கொடுக்க மறுத்த ஜெயா அரசுக்கு எதிரான போராட்டம் ஆகட்டும்…. என எந்த மக்கள் போராட்டத்திற்காவது ஆதரவு கொடுத்து உள்ளீர்களா?

ஏன் உங்களை போன்று சன் டிவியில் வேலை செய்த அகிலா என்ற பெண்-க்கு பாலியல் தொல்லை கொடுத்த அதன் மேலாளர் ராஜாவுக்கும் அவனுக்கு ஆதராவாக நின்ற சன் டிவி ஓனருக்கும் எதிராக போராட்டம் வலுத்த போது ஒரு சிறு குரலையாவது பதிவு செய்து இருக்கிறீர்களா..? இல்லையே.

உலகத்தை மாற்ற முதலாளியாக மாறு என்று சொன்ன நீங்கள் இறுதியில் தேசத்தை காப்பாற்ற நம்மிடம் இருக்கும் ஒரே உத்தி ஓட்டுரிமை என ஓட்டுரிமைக்கு ஒளிவட்டம் போடுவது ஏன்?

அருந்ததி ராய், சாய்நாத் போன்ற பல பத்திரிக்கையாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இந்தியாவின் வல்லரசு கனவையும், மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மகிமையையும் மறுக்க முடியாமல் அம்பலப்படுத்தி எழுதிவிட்ட பின்னரும் விசுவாசம், ஓட்டுப்போட்டாத்தான் ஜனநாயகவாதி என 1-ம் வகுப்பு பையனிடம் வித்தை காட்டுவது போல பேசுவது ஏன் கோபிநாத்.?

நாட்டை எப்படி காப்பாற்றணும் என போராட வர வேண்டியவர்களிடம் உலகத்தை காப்பாற்ற வாடா என ’இண்டிபெண்டன்ஸ் டே‘ படம் காட்டுவதுதான் கோபிநாத்தின் உத்தி. காப்பிரைட் அப்துல் கலாமுடையது.

மொத்தத்தில் கோபிநாத் அவர்களுக்கு நான் சொல்ல வருவது, விசுவாசம், சின்சியர் மேன் நான், என மாணவர்களை, இளைஞர்களை மொக்கையாக்காமல் பவர் ஸ்டாருடன் ஒரு நாள், ரிகார்டு டான்ஸ் விஜய் டிவி அவார்ட்ஸ் போன்ற நிறைய மொக்கை நிகழ்ச்சிகளை தயார் செய்து காம்பெயர் மட்டும் செய்தால் அதுவே இன்றைய மாணவ இளைஞர்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய நல்லதாக இருக்கும்.

-தோழர் இலக்கியன், புமாஇமு