privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்வளம் கொழிக்கும் இணைய உளவுத் தொழில்

வளம் கொழிக்கும் இணைய உளவுத் தொழில்

-

மூன்றாம் உலக நாடுகளுக்கு உளவுக் கருவிகளை விற்பது இப்போழுது தனியார் நிறுவனங்களுக்கு நல்ல லாபம் தரும் தொழில். தேர்ந்த தொழில் நுட்பத்துடன் மக்களை உளவு பார்க்கும் கருவிகள் மற்றும் மென் பொருட்களை சந்தைப்படுத்தி பெரும் லாபம் ஈட்டிக் கொண்டிருகின்றன பல தனியார் நிறுவனங்கள்.

“எங்கள் உளவுக் கருவிகளை பயன்படுத்தினால் நீங்கள் ஒரே நேரத்தில் பல லட்சம் மின்னஞ்சல்களை உளவு பார்க்கலாம்” என்கிறது ஒரு தனியார் நிறுவனத்தின் கவர்சசிகரமான விளம்பரம்.

இங்கிலாந்தை சேர்ந்த பிரைவசி இன்டர்நேஷனல் எனும் தனிநபர் உரிமைகளை கண்காணிக்கும் நிறுவனம் வெளியிட்டுள்ள  ஆய்வறிக்கையில், மூன்றாம் உலக நாடுகளுக்கு உளவுக் கருவிகள் விற்கும் தனியார் நிறுவனங்களின் லாபம் கொழிக்கும் வணிகம் பற்றியும் அவர்களின் ரகசிய சந்தைப்படுத்தும் ஆவணங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

ஒளி இழைக் கம்பிகள்
ஆமெஸ் நிறுவனம் வழங்கும் செரிப்ரோ கருவியை ஒளி இழைக் கம்பி வலையமைப்பில் பொருத்துவதன் மூலம் இணைய பரிமாற்றங்களை ஒட்டுக் கேட்கலாம்.

பிரைவசி இன்டர்நேஷனல் கடந்த நான்கு ஆண்டு காலம் நடத்திய ஆய்வுகள் மற்றும் ஆவண சேகரிப்பின் மூலம், தனியார் உளவு கருவிகள் விற்கும் நிறுவனங்கள் நடத்திய ரகசிய விற்பனை கண்காட்சிகள், அதில் சந்தைப்படுத்த உபயோகித்த 1200-க்கும் அதிகமான ஆவணங்கள், இதர ரகசிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கைப்படி இங்கிலாந்து, ஜெர்மெனி, பிரான்சு, அமெரிக்காவைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள், ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகளுக்கு மக்களை உளவு பார்க்கும் கருவிகள், மற்றும் மென் பொருட்களை விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது. இந்த விற்பனைக்காக அரசு பிரதிநிதிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டும் பங்கெடுத்த பல ரகசிய கண்காட்சிகளும் நடத்தப்பட்டுள்ளன. துபாய், பராகுவே, பிரேசில், வாஷிங்டன், கோலாலம்பூர், லண்டன் போன்ற நகரங்களில் இந்த ரகசிய கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

பல்வேறு கவர்ச்சிகரமான தொழில் நுட்பங்களை காட்டி தங்கள் கருவிகள் மற்றும் மென்பொருட்களின் சிறப்பை அவர்கள் விளக்கியுள்ளனர். அவர்களின் உளவுக் கருவிகள் பல லட்சம் மின்னஞ்சல்கள், குறுங்செய்திகள், தொலைபேசி அழைப்புகளை ஒரே நேரத்தில் கண்காணிக்கும் என்று மார் தட்டியுள்ளனர்.

இந்த மாதிரியான உளவுக் கருவிகளை விற்பனை செய்வது குறித்து எந்த நாட்டிலும் தனிச் சட்டங்கள் இல்லை. இவர்களின் வணிகம் கண்காணிப்படுவதும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் இவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ‘இந்த மாதிரி கருவிகளை விற்பது சட்டப்படி குற்றமாகாது. இன்று பெருகி வரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த இந்த உளவுக் கருவிகள் பெரிதும் உதவும்’ என்பது அவர்களின் வாதம்.

ஆனால், “தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என வாங்கப்படும் பல உளவு கருவிகள் அந்நாடுகளில் உள்ள மனித உரிமை பாதுகாவலர்கள், களப்பணியாளர்கள், தகவல் உரிமை ஆர்வலர்கள் இதர சமுக ஆர்வலர்களை கண்காணிக்க பெரிதும் பயன்படுத்தப்படுகிறது” என கவலை தெரிவிக்கிறது பிரைவசி இனடர்நேஷனல். “எங்களின் இந்த முயற்சியின் மூலம் இந்த வணிகம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும், கட்டுப்படுத்தப்பட வேண்டும். இது தான் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டதன் முக்கிய நோக்கம்” என்கிறது பிரைவசி இன்டர்நேஷனல்.

அமெரிக்காவின் பிரிஸம், இங்கிலாந்தின் ஜிசிஎச்க்யு அரசு நிறுவனங்களை  போன்று  மக்களை உளவு  பார்க்கும் பெரிய பூதத்தின் குட்டிச் சாத்தான்கள் தான் இந்த மூன்றாம் உலக நாடுகளின் கண்காணிப்புகள். வரும் காலத்தில் இவை அனைத்தும் ஒன்றாக ஒரே வலைப் பின்னலுக்குள் இணைக்கவும் படலாம்.

இங்கிலாந்தின் அரசுத் துறைகள் இந்நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றன. இந்த கருவிகளை உண்மையான தீவிரவாதிகள் வாங்கி அரசையும் கண்காணிக்கலாம் என்ற பயமாக இருக்கலாம். ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் வருவது போல் சட்டை பட்டன் கேமிரா, கோக் டின்னில் காமிரா, ரகசிய ஆயுதங்கள் என இந்த உளவுக் கருவிகள் பல வண்ண தொழில் நுட்பங்களை கொண்டவை. ஆனால் இங்கிலாந்தின் அரசுத் துறைகள் எந்த லட்சணத்தில் இயங்கும் என்பதும், குறிப்பாக வெளிநாடுகளில் வணிகம் என்றால் எப்படி இயங்கும் என்பதும் குளோபல் டெக்னிகல் நிறுவனத்தின் போலி வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவி விற்பனையிலேயே பார்த்தது தான்.

இந்த நிறுவனங்கள் அமெரிக்காவின் என்எஸ்ஏ, இங்கிலாந்தின் ஜிசிஎச்க்யு ஆகியவற்றுக்கு நிகரான கருவிகள் இருப்பதாக பயம் காட்டுகின்றன. பிரைவசி இனடர்நேஷனல் அம்பலப்படுத்தியுள்ள ஆவணத்தில் உள்ள மத்திய கிழக்கை சேர்ந்த துபாயை தலைமை இடமாக கொண்ட தனியார் நிறுவனம் அமெஸ், செரிப்ரோ எனும் கருவியை விற்பனை செய்கிறது. செரிப்ரோ கிட்டத்தட்ட இங்கிலாந்தின் உளவு நிறுவனமான ஜிசிஎச்க்யு நிறுவனத்தின் டெம்போரா எனும் கருவிக்கு நிகரானது. இந்த கருவி வன்பொருள் மற்றும் மென்பொருள் இணைந்து செயல்படும் ஒரு அமைப்பு.

செரிபெரா கருவியை நாட்டின் மைய ஒளி இழையில் (Optocal Fibre Cable) பொருத்துவதன் மூலம், ஒரே நேரத்தில் பல லட்சம் இணைய பரிமாற்றங்களை, குறுஞ்செய்திகள், செல்பேசி அழைப்புகள், பில்லிங் தகவல்கள், மின்னஞ்சல்கள், சமூக வலைத் தளங்களில் நடக்கும் விவாதங்கள், தனி நபர் சாட் வரை அனைத்தையும்  கண்காணிக்கலாம். இதில் சிறப்பு என்னவென்றால், இதற்கு எந்த சேவையாளரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

செரிப்ரோவின் இன்னொரு சிறப்பு, அது பில்லியன் கணக்கான தகவல்களை சேமிக்க வல்லது. ஒரு நபரை நேரடியாக அதாவது லைவாக கண்காணிக்க முடியும் என்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சம்.

சேர்மன் மாவோ
மாவோ அணுகுண்டை “காகிதப் புலி“ என்றார்.

இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் யாரும் பத்திரிக்கை கேள்விகளுக்கு பதில் அளிக்க விருமபவில்லை. “நாங்கள் அரசுக்கு உதவியாகத்தான் இருக்கிறோம், தீவிரவாதத்தை ஒழிக்க உதவுகிறோம் என்று மட்டும் விளக்கம் அளிக்கின்றன.

ஆனால் இந்த கருவிகள் தீவிரவாதிகள் மீது மட்டும்தான் கண்காணிப்பை நிகழ்த்துகின்றன என்பதற்கு  என்ன உத்திரவாதம்? யார் பொறுப்பேற்பார்கள்.?

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லாரசு நாடுகள் மட்டுமில்லாமல், மூன்றாம் உலக நாடுகள் கூட மக்களை உளவு பார்க்க காரணம் என்ன?

அரசின் ஊழல், வேகமாகி வரும் தனியார் மயம் இவற்றின் மூலம் நாட்டின் வளங்கள் கார்ப்பரேட்டுகளின் லாப வெறிக்கு அள்ளிக் கொடுக்கப்படுகிறது, சாதாரண மக்களின் வாழ்க்கை அதிகரித்து வரும் வரிகளின் சுமையுடனும், விலைவாசி உயர்வுடனும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. கார்ப்பரேட்டுகளின் லாப வெறிக்கு எதிராக மக்கள் எழுச்சிகள் வெடிக்காமல் அவர்கள் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது அவசர தேவையாகியிருக்கிறது. அமெரிக்கா பூச்சாண்டி காட்டிய தீவிரவாதத்தை விட உண்மையாக மக்களின் எழுச்சியைத் தான் அவர்கள் தீவிரவாதம் என பார்க்கிறார்கள்.

அறுபதுகளின் இறுதியில் பல நாடுகள் அணுகுண்டை வைத்து அலும்பு செய்துக் கொண்டிருந்த போது, மாவோ அணுகுண்டை “காகிதப் புலி“ என்றார். யோசித்துப் பார்த்தால், உண்மையான மக்கள் எழுச்சியின் முன்பு இந்த உளவு தொழில் நுட்பங்கள் வெறும் காகிதப் புலிகள் என்று தெரிய வரும்.

மேலும் படிக்க