privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம் ஜாய்ஸ் டீச்சர் அடிக்க மாட்டார் – சண்முக சுந்தரம்

ஜாய்ஸ் டீச்சர் அடிக்க மாட்டார் – சண்முக சுந்தரம்

-

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – 1

னக்கு தமிழை எழுதப் படிக்கக் கற்றுத் தந்த பூரணம் டீச்சரை என்னால் மறக்க முடியாது. எப்போதுமே அவரது வகுப்பில் தூங்கி வழிந்த காரணத்தால் என்னால் ஆனா ஆவன்னா எழுதுவதில் ஏ என்ற எழுத்தைக் கூட தாண்ட முடியவில்லை. எங்கள் கிராமத்தில் துவக்கப்பள்ளி மட்டும்தான் இருந்தது.

மேல்நிலைப் பள்ளிகணக்கை முறைப்படி செய்யவும், விரும்பும்படியும் செய்தவர் எனது 2-ம் மற்றும் மூன்றாம் வகுப்புகளுக்கு ஆசிரியராக வந்த கள்ளவாண்டன் ஆசிரியர். அப்போதுதான் அவருக்கு அரசு வேலை கிடைத்திருந்தது. மிகுந்த வறுமையான குடும்ப சூழல், சாதிரீதியாக ஆதரவற்ற கிராமப்புறம் என்ற நிலைமையில் வேலைக்கு வந்த அவருக்கு எங்கள் கிராமத்திலேயே ஒரு பெண்ணும் அமைந்து குடும்பமாகி இப்போது ஓய்வும் பெற்று எங்களூர்க்காரராகவே வாழ்ந்து வருகிறார். கணித வகுப்பு அப்போது என்னை மிகவும் அவமானப்படுத்துவது போல தோன்றினாலும், எப்படி என்னை அதன் ரசனைக்குள் அவர் இழுத்துச் சென்றார் என்பதுதான் என்னால் இப்போது யோசித்துப் பார்த்தாலும் சொல்லவே முடியவில்லை. ஊரில் யாரையும் மதிக்காத எனக்கு இப்போதும் அவரைப் பார்த்தால் மட்டும்தான் மரியாதை செலுத்த தோன்றுகிறது. மற்ற ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்விக்காக பிற தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகையில் அவரோ தான் வேலை பார்த்த அரசு உதவிபெறும் பள்ளியிலேயே தனது பிள்ளைகளை படிக்க வைத்தார்.

பூரணம் டீச்சர் எனக்கு தமிழை கற்றத்தர முடியாத போதிலும் எண்களை நூறு வரை எழுத கற்றுத் தந்திருந்தார். அவர்கள் அப்போதே ஐம்பது வயதை கடந்திருந்தார்கள். ஊரில் பல மாணவர்களின் தந்தை, தாய்மார்களும் கூட அவரிடம் படித்தவர்கள்தான். எதாவது மாணவனை ஆசிரியர்கள் அடித்து விட்டால் அவனது தந்தையும் தாயும் பள்ளிக்கு குறிப்பாக அடித்த ஆசிரியருக்கு எதிராக சண்டைக்கு வந்து விடுவார்கள். எல்லா வகுப்புகளும் ஸ்தம்பித்து விடும். அது போன்ற தருணங்களில் அந்த ஆசிரியர்கள் நாடுவது பூரணம் டீச்சரைத்தான். பூரணம் டீச்சர் வந்தவுடன் குடிகார தந்தைகள் கூட பெட்டிப் பாம்பாக பம்முவார்கள். ‘’நீங்க சொன்னால் சரியாகத்தான் இருக்கும் டீச்சர். அந்த டீச்சருக்கு தான் பேசத் தெரியல’’ என்று முணுமுணுத்தபடி பூரணம் டீச்சர் சொல்லும் எதனையும் கேட்டுக் கொண்டு அவர்கள் செல்வதை பார்க்கையில், அதுவும் ஊரறிந்த சண்டியர்கள் தலை கவிழ்ந்து போவதைப் பார்க்கையில் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏனெனில் அவர்கள் இந்த வகுப்பறை முறை எவ்வளவு துன்பமாக இருந்து அவர்களை பள்ளியில் இருந்து துரத்தி இருந்தாலும் ஒன்றாம் வகுப்புக்கு வந்து இவரிடம் தானே படித்திருப்பார்கள். அப்போதெல்லாம் படித்து முடித்த பிறகு ராணுவத்தில் சேர விரும்புவதாக சொல்லிக் கொண்டிருந்த எனக்கு ஒன்றாம் வகுப்புக்கு ஆசிரியராக வேண்டும் என்ற ஆசை இதுபோன்ற தருணங்களில் தான் தோன்றியது.

அடுத்து பள்ளி தாளாளரின் மகனை திருமணம் செய்து கொண்டு எங்கள் பள்ளிக்கு 3-5 வகுப்புகளை எடுக்க வந்தவர் ஜாய்ஸ் டீச்சர். வரும் ஏப்ரலில்தான் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். ஆங்கிலத்தை படிக்க கற்றுத் தந்தார் என்பதுடன் படிப்புக்கு வெளியே நடனம், பாட்டு, நாடகம் என்ற உலகத்தை எங்களுக்கு திறந்து விட்டவர் என்ற முறையில் நான் இவர்களை மறக்க முடியாது. அப்போதே மாதம் பத்து ரூபாய் கட்டி டியூசனுக்காக அவரது வீட்டுக்கு செல்வோம். அங்கு போயும் கதை சொல்வது, நடனம் ஆடுவது என்று பொழுது போக்குவோம். அவர் இங்கு வேலைக்கு வருவதற்கு முன்னர் வரை தாளாளர் வீட்டு எடுபிடி வேலைகளை மாணவர்கள் தான் செய்து வந்தார்கள். ஜாய்ஸ் டீச்சர் வந்த பிறகுதான் அந்த நடைமுறை மாறியது. இதையெல்லாம் கேள்விப்பட்ட எங்களது முந்தைய தலைமுறை ஆச்சரியமாக வாய்பிளந்து ‘கலி முத்திருச்சி’ என்று தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். ஜாய்ஸ் டீச்சர் யாரையும் அடிக்க மாட்டார்கள். திட்டக் கூட மாட்டார்கள்.

ஜாய்ஸ் டீச்சர் பல நல்ல படிக்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்தார் என்பதுதான் அவர்களுடைய ஆகச் சிறந்த பணி எனக் கருதுகிறேன். அதுவரை மக்கு, முட்டாள் என எல்லோரும் நம்பிக் கொண்டிருந்த பலரையும், ‘அவனுக்கு மேத்ஸ் வரும், இங்கிலீஷ் வராது’ அல்லது ‘நல்லா பாடுவான், படிப்பில ஆவரேஜ்’ என்றளவுக்கு அனைவரையும் பேசுமாறு மாற்றினார். கடைசி பெஞ்ச் மாணவர்களை கூட வகுப்பறைக்கு விரும்பி வர வைப்பதற்காக மதிய உணவுக்குப் பிறகு கலைநிகழ்ச்சிகளை நடத்துவார். அதற்கு நல்ல பலன் இருந்தது.

அடுத்து ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அருகில் உள்ள நகரத்தில் இருக்கும் மிகப்பழைய ஆனால் பாரம்பரிய புகழ்பெற்ற பள்ளிக்கு படிக்க சென்றேன். என்னை கதை சொல்ல பழக்கிய ஆல்பிரட் வாத்தியார், வரலாற்றில் மிகுந்த ஈடுபாட்டை உருவாக்கிய விளாத்திகுளம் செல்வராஜ் வாத்தியார், வரலாற்று பாடத்தை எடுக்கும்போது நெப்போலியனாகவே நடித்து, பேசிக் காட்டி பாடம் நடத்திய சிசல்ராஜ் வாத்தியார் போன்றவர்களை இங்குதான் சந்தித்தேன். சிசல்ராஜ் எனக்கு காந்தியின் சிந்தனைகளை படிப்புக்கு வெளியே அறிமுகம் செய்து வைத்ததுடன், டால்ஸ்டாயை அறிமுகம் செய்து வைத்தார். வரலாற்றுத் துறையில் நான் சிசல்ராஜின் மாணவன் என்று சொல்வதற்காக உண்மையில் பெருமைப்படுகிறேன்.

என்னை தனியாக முன்னேற்ற முயற்சித்தவர்கள் சில ஆசிரியர்களும் இங்கு உண்டு. அவர்களில் ஒருவர் முருகன், இன்னொருவர் பெயர் ஞாபகம் இல்லை, ஆனால் இருவர் முகமும் எனக்கு நன்றாக ஞாபகத்தில் உள்ளது (இதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்). இவர்கள் அப்போது சி.பி.எம் சார்பு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் துளிர் பத்திரிக்கை மூலமாக அறிமுகம் ஆகி, கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் என பல விசயங்களுக்கு என்னை தயார்படுத்தினார்கள். தயார்படுத்துவது என்றால் வழிகாட்டுவதும், ஊக்கப்படுத்துவதும் தான். இருவருமே தமிழாசிரியர்கள்.

அடுத்து பத்தாம் வகுப்பில் கணக்கு பாடம் எடுத்த குலையன்கரிசல் செல்வராஜ் வாத்தியார். எல்லோரையும் திட்டும் போதும் அவரது வாயிலிருந்து கெட்ட கெட்ட வார்த்தையாக வரும். ஆனால் பிரம்பையே தொடாத கணக்காசிரியர். கரும்பலகையைத் தொடாமல் ஆண்டு முழுக்க எங்களுக்கு கணக்கு நடத்தியவர். வகுப்பில் நன்றாக படிக்கும் அல்லது சுமாராக படிக்கும் மாணவர்களை கரும்பலகைக்கு போகச் சொல்லி விட்டு, பின் பெஞ்சுக்கும் பின்னால் நின்று கொண்டு டிக்டேட் செய்வார். பல சமயங்களில் கணக்கை சொல்லி விட்டு மாணவனையே வழிமுறைகளை நடத்துமாறு சொல்லி, தவறு செய்யும் இடத்தில், கையில் இருக்கும் ஒடிக்கப்பட்ட சாக்பீசால் குறி தவறாமல் கையில் எறிந்து திருத்தி எழுத வைப்பார். யாராவது வகுப்பைக் கவனிக்காமல் இருந்தால் அவனது தலைக்கும் இந்த சாக்பீஸ் துண்டுகள் பறந்து போகும். அதெல்லாம் வலிக்காது. ஆனால் கொஞ்ச நாட்களில் எல்லா மாணவர்களுமே கணித பாடத்தில் மட்டும் நல்ல மதிப்பெண்களை எடுக்க ஆரம்பித்தார்கள். கரும்பலகைக்கு சென்றவர்கள் சுயமாகவே கணக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தோம், மேடை பயம் சுத்தமாக விலகியது, வேறுவேறு முறைகளில் கணக்குகளுக்கு தீர்வு காண எங்களை மீண்டும் தூண்டுவார். மொத்த பள்ளியும் பத்தாம் வகுப்புக்கு கணித தனிப்பயிற்சி வைத்திருக்கும் வேளையில் அவரது வகுப்பில் இருக்கும் யாரும் துளியும் அப்பாடம் குறித்து பயமில்லாமல் பொதுத்தேர்வுக்கு சென்றோம்.

இவர்களில் முக்கியமானவர் ஒருவரை சொல்லாமல் கதை நிறைவுபெறாது. பிறப்பால் அவர் ஒரு பார்ப்பனர். ஏழாம் வகுப்பில் எனக்கு அவர்தான் வகுப்பாசிரியர். அந்த ஆண்டு ஓய்வு பெற இருந்தார். எனக்கு தெரிய வகுப்பில் மாணவர்களிடம் சாதி பேதம் எதுவும் பார்க்க மாட்டார். ஆனால் காலையில் கோவில் ஒன்றில் பூசை செய்து விட்டுதான் பள்ளிக்கு வருவார். எனது வகுப்பில் கை ஊனமான ஒரு மாணவனைத்தான் மானிட்டராக நியமித்தார். பிரம்பு வாங்கி வந்தால் அதனை எல்லாம் ஒரு அடி நீளத்திற்கு ஒடித்து விடுவார். யாரையும் அடிக்கும் போது அந்த பிரம்பின் மத்தியில் பிடித்துக் கொண்டுதான் அடிப்பார். அதாவது ஒவ்வொரு மாணவன் மீது விழும் அடியும் அவரது கையின் பின்புறத்திலும் விழும். எப்போதாவது மாணவர்களில் யாரிடமாவது சேட்டை அதிகமாகி அதனால் கோபமடைந்து மர ஸ்கேலை எடுத்து அடித்து விடுவார்.

எந்த பையனாவது அழுதுவிட்டால் அவரும் அழுது விடுவார். அப்புறம் சொல்லுவார் ‘நீ சேட்டை பண்ணாமல் இருந்திருக்கலாம் இல்லையா? தெரியாமல் அடித்து விட்டேன்டா’’ என ஒரு வயதான பாட்டியம்மாவின் வாஞ்சையோடு மன்னிப்பை கேட்பார். பள்ளி முடிந்த பிறகு தன் வகுப்பிலிருந்து யாரையும் தனிப்பயிற்சிகளுக்கு செல்வதை தடுப்பதற்காக அந்த நேரத்தில் கூடுதல் வகுப்புகளை வைத்து அவர்களைப் படிக்க வைப்பார். அப்படி படிக்கும் மாணவர்களை வகுப்பறைக்குள் உட்கார விடாமல் கூட்டமாக மரத்தடிகளில் உட்கார வைத்து அவர்களுடன் அவரும் அமர்ந்து கொள்வார். மிகவும் எளிய மனிதர். அவரது பேண்டுகளின் கீழ்புறங்களில் கையால் தைத்திருப்பது நன்கு வெளியே தெரியும். அப்படியான நிலைமையிலும் பசியோடு இருக்கும் மாணவர்களுக்கு பிஸ்கெட்டுகளை தாராளமாக வாங்கித் தருவார்.

college-1பிரிட்டிஷார் நம்மை ஆண்ட இறுதிக் காலங்களில் படித்து வேலைக்கு வந்தவர். அந்த காலங்களை சொல்லும்போது தனது வகுப்புகள் அந்த ஆசிரியர்களின் கற்பித்தல் தரத்தில் இல்லை என்பதை அவராகவே முன்வந்து மாணவர்களிடம் சொல்லுவார். ஆனாலும் பிற வகுப்புகளை விட எங்கள் வகுப்பில் அவரது கற்பித்தல் முறை மிகவும் உயர்வானதாகத்தான் இருக்கும். தனது வேலையை கடைசி வரை சரிப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு சிலரால்தான் இது சாத்தியம் என நினைக்கிறேன். மிகுந்த வறுமையான குடும்ப பின்னணியில் இருந்து படித்த வந்த முதல் தலைமுறை என்பது அவரிடம் எப்போதும் தெரிந்தது. மூன்று ஊர்களைத் தாண்டி மதிய வெயிலில் வந்து தயிர் விற்றுப் போகும் ஒரு மூதாட்டியை அவர் சிறுவயதில் பார்த்து உழைப்பை கண்டு வியந்ததை எப்போதும் எங்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அவரது பெயர் வைத்தியநாத ஐயர். இப்போது அவர் உயிரோடு இருந்தால் கட்டாயம் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. ஆனால் அவர் ஒரு முற்போக்குவாதி எல்லாம் கிடையாது.

தமிழில் என்னை செதுக்கியவர் காந்திமதிநாத பிள்ளை. மடக்கி விடப்பட்ட முழுக்கைச் சட்டை, வெள்ளை வேட்டி, வழுக்கைத் தலை என வகுப்பறைக்குள் நுழையும் அவரது முதல் வேலையே செய்யுளை பாடத் துவங்குவார். ஆசிரியப்பாவுக்கு அகவலோசை உண்டு எனப் படித்த எனக்கு கவிமணியிடமிருந்து உதாரணங்களைப் பாடிக் காண்பிப்பார். நளவெண்பாவுக்கு செப்பலோசை இருப்பதை அவரைப் பார்த்துதான் அறிந்து கொண்டேன். சீர்பிரித்தல் துவங்கி, விருத்தங்களை விரும்பியவாறெல்லாம் புனைய வைத்து கம்பனை எனக்கு காப்பியடிக்கலாம் என தைரியமூட்டியவரும் கூட அவர்தான்.

அடுத்து மேல்நிலை வகுப்புகளுக்கு அருகில் உள்ள பெரிய கிராமம் ஒன்றுக்கு போக வேண்டியதாயிற்று.

அடுத்த எங்களது இயற்பியல் மிஸ் கலைச்செல்வி மேடம். இயற்பியலை எனக்கு பிடித்த பாடமாக மாறுமளவுக்கு நடத்தினார்கள். செமினார் வகுப்புகளை எடுக்க ஊக்குவித்தார்கள். தனது வகுப்பை அன்று மட்டும் கூட கவனிக்கும் கடைசி பெஞ்சு மாணவனைக் கூட எளிதில் அடையாளம் கண்டு கொண்டு கடைசியில் புரிந்ததா எனக் கேட்டு உறுதிப்படுத்துவார்கள். வகுப்பையும் பாடத்தையும் பேலன்ஸ் செய்து நடத்திக் கொண்டு செல்லும் திறமை அவரிடம் நிரம்பவே உண்டு. நேரடியாக பதில் சொல்லாமல் கேள்விகள் மூலமாக நம்மை பதில்களை நோக்கி வரவைப்பதிலும் அவர் கில்லாடி. இவரை முன்மாதிரியாகக் கொண்டுதான் கல்லூரியிலும் இயற்பியலை தேர்வு செய்தேன்.

அது நகரின் சிறிய கல்லூரி. என்னை மிகவும் கவர்ந்தவர் பேராசிரியர் செக்காரக்குடி கந்தசாமி (எஸ்.எஸ்.கே). எப்போதும் வெற்றிலையை மென்று கொண்டிருக்கும் அவருக்கு மாணவர்கள் வைத்த பெயர் வெற்றிலைப் பொட்டி. ஓய்வுபெறும் வயதில் இருந்தார். கிராமப்புற மாணவர்கள் பலரும் ஆங்கிலத்தை சரிவர பள்ளியில் கற்றிடாமல் கல்லூரிக்கு வந்து ஆங்கிலவழிக் கல்வி முறையில் கற்க இருந்தோம். பேராசிரியர் முதலில் தமிழ் மற்றும் ஆங்கில டெக்னிக்கல் வார்த்தைகளுடன் பாடம் நடத்துவார். ஏறக்குறைய நடுவாந்திரமானவர்களுக்கு கூட அது புரிந்து விடும். அடுத்த தூய தமிழில் நடத்துவார். கடைநிலை மாணவர்களுக்கும் மனதில் பதியும் விதமாக அது இருக்கும், மற்றவர்களுக்கோ நடத்தியது நன்கு உள்வாங்கப்படும். கடைசியில் ஆங்கிலத்தில் நடத்துவார். அதாவது படித்து விட்டு தேர்வுக்கு போக வேண்டிய கட்டாயம் எவருக்குமே இனி இருக்காது.

பாடத்தில் பெரும்பாலும் மூன்றில் ஒரு பங்குதான் முடித்திருப்பார். ஆனால் எல்லோரும் தேர்வாகி விடுவதுடன் பாடத்தை மறக்கவும் மாட்டார்கள். அவர் எடுத்த ஸ்பெசல் ரிலேட்டிவிட்டி தியரி வகுப்பை நினைத்தாலே புல்லரிக்கும். வேறு எதோ வீட்டுப் பிரச்சினையால் சுத்தமாக வகுப்பில் கவனமில்லாமல் இருந்த என்னை கவனிக்க வைத்த பாடவேளை அது.

எனது முதுகலை படிப்பிற்காக அவரே முன்வந்து பிற கல்லூரிகளுக்கு சிபாரிசு செய்வதாக சொன்னார். நான் தொழில்நுட்ப படிப்பை தவிர்த்து தூய அறிவியலை முதுகலைக்கு எடுப்பதில் விருப்பத்துடன் இருப்பதை தெரிந்தபோது மிகவும் மகிழ்ந்தார். அவர் நல்லதொரு இசை ரசிகர் மற்றும் விமர்சகரும் கூட. போராட்டங்களை நேரடியாக ஆதரிக்காத போதும் போராடும் மாணவர்களை பாதுகாக்க வேண்டும் எனக் கருதி செயல்படுபவர். ஆசிரியர் சங்கங்களில் இருக்கும் பலரும் கூட நிர்வாகத்துக்கு அடிபணியும் சூழலில் இவர் அவர்களிடமிருந்து தனித்து நின்றார்.

அடுத்து எங்களது வேதியியல் துறைக்கான ஆசிரியை செல்வராணி மேடம். நன்றாக பாடம் நடத்தினார்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் மாணவர்களின் நண்பராக இருந்தார். நாங்கள் கூறும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு தன்னை மாற்றிக் கொள்வார். பார்த்த வேலை நிரந்தரமான ஒன்றல்ல என்ற போதிலும் எங்களுக்காக மிகவும் சிரமப்பட்டு பாடம் நடத்தினார். அவரது குரலில் உள்ள குறைபாடு ஒன்றை எப்போதும் பழித்துக் காண்பிக்கும் நான் தான் வகுப்பில் அவரது சிறந்த நண்பன். ஏறக்குறைய மாணவ மாணவிகளுக்கு ஒரு அக்கா போலதான் செல்வராணி மேடம் இருந்தார்கள்.

கணித துறையில் பணியாற்றிய பாஸ்கரன் சார், தமிழ்துறையின் அருள்மணி சார் ஆகியோரும் மறக்க முடியாதவர்கள். எதிர்மறையாக இலக்கியம் பேசுவதை, சமூக அவலங்களை சுட்டிக்காட்டி பேசுவதை படைப்புகளாக்க வேண்டும் என்பதில் மாணவர்களை ஊக்கப்படுத்தியவர்கள். இப்போது அவர்கள் ஓய்வு பெற்று விட்டார்கள். நான் பேச்சுப்போட்டியின் தலைப்பே தவறு எனப் பேசிய ஒரு போட்டியில் எனக்கு முதல் பரிசு தர நடுவராக வந்த பாஸ்கரன் சார் பரிந்துரைத்திருந்தார். அதுதான் பாஸ்கரன் சார்.

அடுத்து முதுகலைக்கு வேறு சிறுநகரத்திற்கு சென்றேன். வியாபாரத்திற்கு பெயர்போன ஊர் அது. இங்கு எல்லா ஆசிரியர்களுமே என் நலன் விரும்பிகளாகத்தான் இருந்தார்கள்.

நான் மிகவும் மதிக்கும் எலக்ட்ரானிக்ஸ் வாத்தியார் லட்சுமி நாராயணன் (பி.எல்.என்) இங்குதான் எனக்கு கிடைத்தார். தியரியையும், எக்ஸ்பிரிமெண்டையும் இணைப்பதை எளிய முறையில் பலமுறை எனக்கு லேப்பில் விளக்கியவர் இவர். அவரது வகுப்பு என்பதே இரண்டரை மணி நேரம் கதவு, ஜன்னல்களை அடைத்து விட்டுதான் நடக்கும். வகுப்பில் நான் மட்டும்தான் மாணவன். அதனாலேயே கவனிக்க வேண்டியதாயிருக்கும். அவரது வேகத்தை பிடிக்க தவறினால் எதுவுமே புரியாது. மிகப்பெரிய யூனிட்டுகளை எல்லாம் சில வகுப்புக்களிலேயே எடுத்து முடித்து விடுவார். சந்தேகங்களை கேட்க பத்து நிமிடம் கடைசியில் நேரம் ஒதுக்குவார். நாங்கள் யாரும் கேட்டதாக இதுவரை எனக்கு ஞாபகம் இல்லை. டி.டி.எல் சர்க்கியூட், பூலியன் கேட்ஸ் போன்றவற்றை நடத்தும்போது அப்படியே கணித உலகையும், மின்னணு உலகையும் அவர் இணைக்கும் பாங்கே தனி.

அடுத்து கிளாசிக்கல் மெக்கானிக்சையும், எலக்ட்ரோ மேக்னடிக் தியரியையும் எடுத்த டி.சி என்று அறியப்படும் சந்திரசேகரன். எளிய தமிழில் முதுகலை இயற்பியலை விளக்கும் திறமை உடையவர். அவரது நோட்ஸ் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரு மடையனுக்கும் புரியும் விதமாக அவரது நோட்ஸ் இருக்கும். அதாவது வகுப்புகளுக்கு வர முடியாமல் போனவர்கள் அதனைப் பார்த்தே புரிந்து கொள்ள முடியும். செமினார் வகுப்பில் பாடத்திற்கு வெளியே கேள்வி கேட்பதில் வல்லவர். அதுவும் நன்றாக உள்வாங்கினால்தான் பதில் சொல்ல முயற்சி செய்யவே முடியும். இவர்கள் இருவரும் கடந்த பத்தாண்டுகளின் இடைவெளியில் ஓய்வுபெற்றவர்கள்.

முதுகலை படிக்கும்போதெல்லாம் எனக்கு பிடித்த ஆசிரியர் வேலைக்கு அடுத்த சில ஆண்டுகளில் சென்று விடுவோம் என்று நினைத்திருந்தேன். இதுவரை அது கைகூடவில்லை. ஆனால் நான் மாணவனாகவே இப்போதும் தொடர்கிறேன். நல்ல மாணவர்கள் யாரும் இப்போது ஆசிரியர்களாக வருவதில்லை என எனக்கு நானே இந்தப் பழம் புளிக்கும் எனச் சொல்லிக் கொள்கிறேன்.

– சண்முக சுந்தரம்