privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்தூத்துக்குடி கூட்டம் - பெண் தோழர்களின் அனுபவம்

தூத்துக்குடி கூட்டம் – பெண் தோழர்களின் அனுபவம்

-

ணல் கொள்ளையை எதிர்த்து கேள்வி கேட்டாலே, பரலோகம்தான் என்பது மணல் கொள்ளையர்களின் எழுதாத சட்டம். அதிலும் தாது மணல் கொள்ளை மேலும் பயங்கரமானது. இந்த சம்பவங்களை செய்திகளாக படித்து, படித்து இயற்கை கொள்ளையை தடுக்க ஆள் இல்லையே என்று  மனம் ஏங்கும். பல நாள் ஏக்கப் பெருமூச்சுக்கு வெளிச்சம் கிடைத்ததுப் போல், கையில் பிரசுரம் கிடைத்தது.

ரயில் பயணம்….தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை,
தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்!

பல லட்சம் கோடி அடித்த வைகுண்டராஜனின் சொத்துக்களை பறிமுதல் செய்!
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கீடு!

23.11.13 தூத்துக்குடியில் பொதுக்கூட்டம்.

பொதுக் கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள வேணும் என்று முடிவு செய்தேன். சென்னையிலிருந்து 12 மணி நேர பயணம். முன் நாளே அதற்கு தயாராகி எழும்பூர் ரயில் நிலையம் சென்றேன். மாலை 5.30-க்கு இரயில். அங்கு என்னைப் போன்ற பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த பல பெண் தோழர்கள், குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள் என்று குடும்பம், குடும்பமாக வந்திருந்தனர். அனைவரின் முகத்திலும், குடும்ப நிகழ்ச்சிக்குப் போகும் பரவசம்!

வந்திருந்த அனைவரும் சாதாரண உழைக்கும் மக்கள்.  படுக்கும் வசதியுடன் கூடியப் பெட்டியில் பயணம் செய்ய வசதியில்லை. சாதா பெட்டியில்தான் பயணம். எந்த வசதிகளும் இல்லை, பெட்டி முழுவதும் நாற்றம் வீசியது. குழந்தைகளின் பயணக் கனவு அங்கேயே காணாமல் போனது.

அப்போது ஒருவர், “தினமும் செல்பவர்களுக்கு பிரச்சனை இல்லை” என்று கூறினார். நானும், “பரவாயில்லேயே! அவர்களுக்கு வேறு ஏதாவது ஏற்பாடு இருக்கா” என்றேன். “இல்லை இல்லை! நாற்றம் பழகி விடும்” என்றார். சில நிமிடங்களிலேயே, தோழர் ஒருவருக்கு உடல் முழுவதும் வீக்கம். என்ன? என்று, நாங்கள் பார்க்கும்முன் எதிரில் பயணித்த வள்ளியூர் பாட்டி, “பூச்சிக்கடி அலர்ஜி” என்று கூறி, டாக்டரானார். அலர்ஜிக்கான மருந்து இல்லை.

எங்களைப் போன்றே கஷ்டப்பட்ட மற்ற பயணிகளுடனும் ஐக்கியமானோம். அனைவரும் ஒருவருக்கொருவர் வீட்டு விஷயங்களைப் பேசினோம். அதில், வள்ளியூர் பாட்டி கதை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ……சோகத்தை போக்க, அடுத்த பயணி, சிலோன் பெண்மணி பாட்டுப்பாடி குஷிப்படுத்தினார். இவர் தன் சிறுவயதிலேயே மதுரையில் குடியேறியுள்ளார். படித்த வசதியான குடும்பம். அவருக்கு, சிலோன் பிரச்சனைகளை பேச ஆர்வமில்லை.

…..தொடர்ந்து, அமைப்புப் பாடல்களைப் பாட, பெட்டியே அமைதியானது. பின் பெட்டியில் இருப்பவர்களும், பெண் போலிசும், கைதட்டி ரசித்தனர்.  பாட்டு தொடர்ந்தது, வழி நெடுக கூட்டம் நெருக்கித் தள்ளியது, கீழே உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் தவித்தோம். பாத்ரூம் நாற்றம், ”குப் குப்” என்று வீசியது. பூச்சிக் கடியால், அலர்ஜியான தோழருக்கு காய்ச்சல். இடையே, பால், காபி, டீ.

பெண் பயணி ஒருவர், எங்கள் பெட்டியில் எட்டிப் பார்த்து, “பாட்டெல்லாம் ரொம்ப நல்லாயிருந்தது, எல்லாப் பிரச்சனைகளை பத்தியும் பாடினீங்க” என்று கூறிச் சென்றார். பயணிக்கும் போது, தண்ணீரும் குடிக்க பயம்! காரணம் உங்களுக்கு புரியும். பாத்ரூமில் உள்ளே போகவே முடியாத நாற்றம், இருந்தும், பாத்ரூமின் பக்கத்தில் குழந்தைகளை கிடத்தி, உட்கார்ந்திருந்தனர் கூலி வேலை செய்யும் பெண்கள். அவர்கள், கவலை மறந்து  எங்களுடன் இன்முகத்துடன் பேசினர்.

கொஞ்ச நேரத்தில் பக்கத்து பெட்டியில் ஒரே கூச்சல்! எட்டிப் பார்த்தால், இட பிரச்சனைக்காக ஒருவர் வயதுப் பெண்ணை அடித்து விட்டார். அந்தப் பெட்டியில் இருக்கும் பெண்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இங்கு பெட்டியிலிருந்த தோழர்கள் இருவரையும் சமாதானப் படுத்தி சகஜ நிலைக்கு திருப்பினர். அடுத்து, மதுரை மாமி எடுத்து வந்த ஆப்பிள் அனைவருக்கும் அமிர்தமானது. குழந்தைகளும் கொசுக்கடியில் தூங்கினர். பெட்டியில் ஃபேனும் சரியாக சுத்தல, லைட்டும் எரியல. இருட்டில் கைப்பேசி ஒலித்தது. அதில் வந்த செய்தி, அடுத்து இறங்க வேண்டுமாம்!

தூத்துக்குடி வந்து விட்டதா? என்று சந்தேகம்.

அடுத்த, இரயிலில் வரும் தோழர்களுடன் இணைந்து செல்வது திட்டம். அந்த வண்டி, செங்கல்பட்டில் 3 மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் மாட்டிக் கொண்டது. எனவே, கோவில்பட்டியில் இறங்கினோம். அவர்கள் வரும் வரை, சிறிது நேரம் ஸ்டேஷனில் தூங்கி, காலைக் கடனை முடித்து, உணவு உண்டு தயாரானோம்.  பின், வண்டியில் வந்தவர்களுடன் இணைந்து, தூத்துக்குடி அடைந்தோம்.

பொதுக்கூட்டம்இரயில் நிலையத்திலிருந்து, 2 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக நடந்து, தங்கும் இடத்தை அடைந்தோம். பறை இசை வரவேற்றது. அனைவரும் ஆர்வத்துடன் உள்ளே சென்றால், மையக் கலைக் குழு, ”தனியார் மயமே கொள்ளை!” ”தனி, தனியா என்னத் சொல்ல” என்று பயிற்சியில் இருந்தனர். வயிற்றுப் பசியும் மறந்து, அமைதியாய் கண்டு களித்தோம். பூச்சிக் கடி அலர்ஜியால்,  காய்ச்சலுடன் இருந்தவரை தோழர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மதிய உணவுக்குப் பிறகு 5 மணி பொதுக் கூட்டத்திற்கு தயாரானோம். கூட்டம், கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமானது. உழைத்து வியர்த்த மணம் மாறாமல், அலை, அலையாய் வந்தனர் உள்ளூர் மீனவ மக்கள்.

தலைமை தோழர் வாஞ்சி நாதன், “தாது மணல் கொள்ளையன் வைகுண்ட ராஜனின்  ஆரம்ப வரலாற்றை விளக்கினார். தொடர்ந்து, ஊர் கமிட்டி தலைவர்களின் பேச்சில், துணிவு, போராட்ட குணம், மணல் கொள்ளைக்கு எதிராக மக்களை தயார்படுத்துவது பற்றி துணிவுடன் விளக்கினர்.

தோழர் ராஜூவின் உரையில், வைகுண்டராஜன் மீது  மக்களுக்கான பயம் எப்படி உருவாக்கப்பட்டது? அதை எப்படி உடைப்பது, என்பதை விளக்கினார்.

தோழர் மருதையனின் உரையில், மணல் கொள்ளை மட்டும் அல்ல, மற்ற இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்கும் கும்பல்களை அம்பலப்படுத்தினார். வைகுண்டராஜன்களின் ஆதிக்க திமிரையும், ஆளும் வர்க்கத்தின் கையாலாகாத்தனத்தையும் புரியும் வகையில் எடுத்துரைத்தார்.

மையக் கலைக் குழுவின் “திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜனின் அரசாங்கம்..” மக்களை சிந்திக்க வைத்தது. தொடர்ச்சியாக, கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுத்திய, கொள்ளையன் வி.வி. யின் அடியாட்கள் வாலை சுருட்டிக் கொண்டனர். இரவு 10 மணிக்கு கூட்டம் முடிந்தது.

இரவு உணவாக மீனவ மக்களின் வீட்டு உலையில் கொதித்த சோறு சுவையூட்டியது. தோழர்கள், எச்சரிக்கை உணர்வுடன் பெண்கள், குழந்தைகளை பாதுகாத்து மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். காலை 5 மணிக்கு தூத்துக்குடி இரயில் நிலையம். தோழர்கள் அனைவரும் ஒன்றானோம். ஒரேப் பெட்டியில் பயணப்பட்டோம். தோழர்களின் அனுபவங்களும், பாடல்களும் பயணத்தை நிறைவாக்கியது.

இந்த பொதுக் கூட்டத்துக்கு திட்டமிட்டு, 10 நாட்களுக்கு முன், தம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தை விட்டு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண் தோழர்கள் தங்களின் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டனர்.

பிரச்சாரத்திற்கு சென்ற பெண் தோழர்களை, கிராம மக்கள்  தன் வீட்டு பெண் பிள்ளைகளைப் போல் பாவித்து, பாதுகாத்தது பற்றி கேட்டபோது எங்களுக்கு மெய் சிலிர்த்தது. தங்களை நம்பி வந்த பெண்களை, தோழர்களை உச்சி முகர்ந்து மெச்சினர் மீனவ மக்கள். மீன்வடை, மீன் அவியல், குண்டு அரிசிச் சோறு என்று உபசரித்தனர். “மக்கா, எங்களை நம்பி வந்துட்டீங்க, உங்களை பத்திரமா நாங்க பாத்துக்கணும்” என்று பொறுப்பேற்று , இரவில் தங்க பாதுகாப்பான இடம் என்று முடிவு செய்து கிறித்துவ ஆலயத்தில் தங்க வைத்துள்ளனர். இவர்களின் அன்புக்கு ஈடு ஏது! அவர்கள் வீட்டு பிள்ளைகளும், “அக்கா, அக்கா” என்று சுற்றி, சுற்றி வருவதும், பள்ளி முடிந்ததும், பிரச்சாரத்தில் பெண் தோழர்கள், எங்கு இருந்தாலும், அங்கு ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும் பிஞ்சுகளின் செயலை மறக்கமுடியுமா? என்றனர்.

மக்களின் பிரச்சனைகளை, மக்களோடு ஐக்கியமாகி முன்னெடுத்துச் செல்லும் தோழர்களின் தொய்வில்லாத
தொடர்ச்சியான போராட்டம் வீண் போகாது! என்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சியானது.

– லட்சுமி