privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்BYD முதலாளிகளை பணிய வைத்த தொழிலாளி வர்க்கம்

BYD முதலாளிகளை பணிய வைத்த தொழிலாளி வர்க்கம்

-

டந்த 5-ம் தேதி திருப்பெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள BYD என்கிற பன்னாட்டு நிறுவனத்தில் பனிபுரியும் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீரென்று வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். ஆலையின் உற்பத்தியை நிறுத்தியதுடன், உள்ளிருந்து வெளியிலோ, வெளியிலிருந்து உள்ளேயோ யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை. தொழிலாளர்களை பயமுறுத்த நிர்வாகத்திற்கு தெரிந்த ஒரே பூச்சாண்டி தமிழக போலீஸ் தான். போலீசுக்கு ஃபோனைப்போட்டது நிர்வாகம், போலீசார் வந்து இறங்கினர்.

BYDBYD ஒரு சீன நிறுவனம். செல்போன் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை தயாரித்து வழங்குவது தான் இதன் பிரதான உற்பத்தி. சென்னையில் ஒன்று, டெல்லியில் ஒன்று என இந்தியாவில் இரண்டு தொழிற்சாலைகள் உள்ளன. இது தவிர இந்நிறுவனம் ஆட்டோமொபைல் துறையிலும் உலகளவில் கால் பரப்பியிருக்கிறது. சீனாவில் சொந்தமாக கார்களையும் தயாரிக்கிறது. சென்னை ஆலையில் 4,000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் 1,200 பேரை மட்டும் நிரந்தரம் செய்துவிட்டு மீதமுள்ளவர்களை பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளிகளாகவே வைத்து 5,000 ரூபாய் சம்பளத்துக்கு சுரண்டி வருகிறது.

தொழிற்துறை தற்போது மந்த நிலையில் உள்ளது. இவ்வாண்டில் நோக்கியா மைக்ரோசாஃப்டிடம் விற்கப்பட்டது. அதன் பிறகு 1,000 தொழிலாளிகளை நோக்கியா அதிரடியாக தூக்கியெறிந்தது. BYD நோக்கியாவின் பிரதான சப்ளையர் என்பதால் நோக்கியாவில் உற்பத்தி குறைந்த போது அது BYD-யின் உற்பத்தியையும் பாதித்தது. இதனால் நிர்வாகம் ஆட்குறைப்பில் ஈடுபட்டது. ஆட்குறைப்பு செய்வதென்றால் அதை சட்டப்படி தொழிலாளிகளுக்கு முன்கூட்டியே அறிவித்து, 6 மாத ஊதியத்தையும் வழங்கி பிறகு நீக்குவது தான் சரியான நடைமுறை. ஆனால் BYD எப்படி நடந்து கொண்டது ?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மற்றும் மேல்மருவத்தூர், செங்கல்பட்டு என்று திருப்பெதும்புதூருக்கு வெகு தொலைவில் இருந்தெல்லாம் வெறும் 5,000 ரூபாய்க்காக பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களை அழைத்து வருகின்றன. வெளியூர்களில் இருப்பவர்களை அழைத்து வருவதற்காகவே இந்நிறுவனங்கள் தனி பேருந்துகளையும் ஏற்பாடு செய்திருக்கின்றன. தொழிலாளிகளை அழைத்துச் செல்லும் பேருந்து ஒரு நாள் வரவில்லை என்றால் அன்று அந்த ரூட்டில் வருபவர்கள் எல்லாம் வேலை நீக்கம் செய்யப்பட்டுவிட்டார்கள் என்று அர்த்தம். தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வது என்று முடிவானதும் நிர்வாகம் முதலில் இவர்களை தான் நிறுத்தியது.

ஆலையில் முதல் ஷிப்ட் காலை 6 மணிக்கு. இந்த தொலைதூரப் பகுதிகளிலிருந்து முதல் ஷிப்ட்டுக்கு வருபவர்கள் இரவு 1.30 மணிக்கு எழுந்து, குளித்து தயாராகி 2.30 மணிக்கு ரோட்டிற்கு வந்தால் தான் காலை ஆறு மணி ஷிப்ட்டுக்கு ஆலைக்குள் நுழைய முடியும். கடந்த மாதத்தின் ஒரு நாள் நள்ளிரவு 2.30 மணிக்கு சாலைகளில் வந்து நின்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளிகளை ஏற்றிச்செல்ல பேருந்துகள் வரவில்லை. HR மேனேஜருக்கு போன் செய்தால் வேலையிலிருந்து நீக்கிவிட்டோம் என்கிற பதில் வருகிறது. அடுத்து சென்னையிலிருந்து வருபவர்கள் வழக்கமாக ஏற வேண்டிய இடங்களில் நின்றனர், ஆனால் பேருந்துகள் வரவில்லை. போன் செய்தால் வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டீர்கள் என்கிற பதில்.

இப்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எந்த அறிவிப்பும் இன்றி 500 தொழிலாளர்களை விரட்டியடித்திருக்கிறது BYD. தொடர்ந்து கொண்டிருந்த இந்த முதலாளித்துவ பயங்கரவாதத்தை ஒரு இடத்தில் தொழிலாளிகள் மறித்து நிறுத்தினர். நவம்பர் மாத இறுதியில் கன மழை பெய்து கொண்டிருந்த ஒரு நாளில். ஷிப்டிற்கு செல்ல வேண்டிய தொழிலாளிகள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர், ஆனால் வரவில்லை. சில நிமிடங்கள் காத்திருந்தவர்கள் தாமதிக்காமல் சொந்த முயற்சியில் வண்டிகளை ஏற்பாடு செய்து கொண்டு திருப்பெதும்புதூர் வரை சென்றனர்.

திரும்பெதும்புதூரிலிருந்து ஆலை எட்டு கி.மீ தூரத்தில் உள்ளது. கொட்டும் மழையில் சொந்த காசை செலவு செய்து ஆலையை அடைந்தவர்களை, “எதற்காக வந்தீர்கள், உங்களை நேற்றே வேலையிலிருந்து நீக்கி விட்டோம்” என்று சர்வ சாதாரணமாக கூறியது நிர்வாகம். தொழிலாளிகள் கெஞ்சிப்பார்த்தனர். வாயில் கதவு அடைக்கப்பட்டது. அன்று ஒரே நாளில் 60 தொழிலாளிகளும் மழையில் வெளியே தள்ளப்பட்டனர். திரும்பி போவதற்கு கூட யாரிடமும் போதிய பணம் இல்லை. என்ன செய்வதென்றறியாமல் நின்று கொண்டிருந்தவர்கள், பிறகு பக்கத்து ஆலைகளிலிருந்த சக தொழிலாளிகளிடம் 10, 20 என்று திரட்டிக் கொண்டு அழுதபடியே எட்டு கி.மீ மழையில் நனைந்து கொண்டே திருப்பெதும்புதூர் சென்று அங்கிருந்து பேருந்து ஏறினர்.

இந்த சம்பவம் ஆலையில் உள்ள பிற தொழிலாளிகளிடம் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. நாளைக்கு நமக்கும் இதே கதி தான் என்பதை உணர்ந்தனர். அடுத்து என்ன செய்வது என்று தொழிலாளர்கள் கூடி பேசினர். அப்போது தான், பு.ஜ.தொ.மு சங்க உறுப்பினர்களான நிரந்தரத் தொழிலாளிகள் தோழர்களை தொடர்பு கொள்ளுமாறு வழிகாட்டினர். சிறிதும் தாமதிக்காத தொழிலாளிகள் உடனடியாக பு.ஜ.தொ.மு தோழர்களை தொடர்பு கொண்டனர்.

டிசம்பர் 6-ம் தேதி, முதல் ஷிப்ட்டை முடித்துவிட்டு வெளியில் வந்த 400 தொழிலாளிகள் வீட்டுக்கு செல்ல வண்டியில் ஏறவில்லை, மாறாக ஆலையிலேயே அமர்ந்து உற்பத்தியை முடக்கினர். யாரும் உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியாதபடி இரு வாயில்களையும் அடைத்துக் கொண்டு அமர்ந்தனர். பீதியான நிர்வாகம் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தது. ஓரகடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறியாளன் பத்து போலீசாருடன் பறந்து வந்தார். “என்ன பிரச்சினை” என்று மிரட்டலாக பேசத் துவங்கினார்.

“போலீசுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை” என்பதையும், “இது தொழிலாளர் பிரச்சினை” என்பதையும் தோழர்கள் அவருக்கு புரிய வைத்தனர். “சார் இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை, தொழில் தகராறு பிரச்சினை. நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினை. நிர்வாகத்திடம் நாங்கள் சில கோரிக்கைகளை வைத்து போராடுகிறோம்” என்று பு.ஜ.தொ.மு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் சிவா விளக்கினார்.  “சரி ஓக்கே கேட்டை மட்டும் திறந்து விட்ருங்க, உள்ள இருக்கறவங்க வெளியில் போகனும்” என்றார். “அது முடியாது சார் கேட்டை திறந்தால் அப்புறம் எல்லா அதிகாரிங்களும் போய்டுவானுங்க, அப்புறம் நாலு நாளைக்கு லீவ் விட்ருவானுங்க. அப்புறம் யார் எங்களுக்கு வேலை கொடுக்கிறது, அரசு பொதுத்துறை நிறுவனங்களான NLC, ஏர் இந்தியா, போர்ட் டிரஸ்ட் போன்றவற்றிலேயே ஒப்பந்த தொழிலாளிகளுக்கு எந்த பாதுகாப்பு இல்லைங்கிற போது இங்கே யாரை நம்பி கேட்டை திறக்கச் சொல்றீங்க” என்றார்.

அதற்கு பதில் கூற முடியாத இன்ஸ்பெக்டர், “சரி, சரி சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராம பார்த்துக்குங்க” என்றார். “தொழிலாளிங்க என்ன பேக்ட்ரி கண்ணாடியை உடைச்சாங்களா, இல்லை உள்ள இருக்க மிஷின்சை உடைச்சாங்களா எதுவும் இல்லையே, எங்க கோரிக்கை ஒன்னு தான் வேலை கொடு, சட்டவிரோதமான முறையில் வேலையிலிருந்து நீக்காதே அப்படிங்கிறது தான், அதுக்காகத்தான் போராடுகிறோம்” என்றதும் மேற்கொண்டு அதுவும் பேசாமல் அவர் கிளம்பி விட்டார்.

காலை 11 மணிக்கு துவங்கிய போராட்டம் மாலை 6 மணி வரை எந்த முடிவையும் எட்டாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. இயந்திரங்கள் அனைத்தும் ஓய்விலிருந்தன, சூப்பர்வைசர், ஹெச்.ஆர் மேனேஜர், உயரதிகாரிகள், கிளர்க்குகள், ஐ.டி டிபார்ட்மெண்ட் என்று டஜன் கணக்கானவர்கள் ஆலைக்குள் இருந்தனர். வெளியில் 400 தொழிலாளர்களும் கலைந்து விடாமல் கட்டுக் கோப்பாக ஆலைக்கு அரண் அமைத்திருந்தனர். தொழிலாளர்களை கலைக்க நிர்வாகம் தனது உளவாளிகள் மூலம் பயபீதியை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கியது. ‘மாலை 7 மணிக்கு காஞ்சிபுரத்திலிருந்து போலீஸ் போர்ஸ் வரப்போகிறது, லத்தி சார்ஜ் பண்ணப் போகிறார்கள்’ என்கிற வதந்தி பரப்பப்பட்டது.

இப்பகுதியில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களிடம் பொறுக்கித் தின்பதற்காகவே பலர் இருக்கின்றனர். அவர்கள் என்.ஜி.ஓக்களின் பெயரிலும் தொழிலாளர்கள் மத்தியிலும் ஊடுருவியுள்ளனர்.

போலீஸ் தடியடி என்கிற வதந்தி பரவியவுடன் மாவடடச் செயலாளர் சிவாவை அணுகிய ஒருவர், “இது மனித உரிமை மீறல், எனவே மனித உரிமை கமிஷனில் புகார் அளிக்கப் போகிறேன்” என்றார்.

“மனித உரிமை கமிஷனுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இங்கே போலீஸ் என்கவுண்டர் நடந்துடுச்சா, இல்லை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்கசாதி தாக்குதல் எதுவும் நடந்துடுச்சா, இது அடிப்படையில தொழிலாளர்கள் பிரச்சினை, தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்குமான பிரச்சினை, இதில் மனித உரிமை கமிஷனுக்கு போகிறேன்னெல்லாம் பேசி பிரச்சினை திசை திருப்பாதீங்க. இந்த போராட்டத்திற்கு என்று ஒரு போராட்டக்குழு இருக்கிறது, போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாக நீங்க என்கிட்ட வந்து தனியா பேசாதீங்க, உங்க கருத்தை தொழிலாளர்கள் மத்தியில் உள்ள அந்த போராட்டக் குழுவிடம் பேசுங்க. அவங்க சரின்னா அதை செய்ங்க, ஆனா ஒண்ணு நீங்க சொல்ற மனித உரிமைக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை” என்றதும் அவர் பின் வாங்கினார்.

இந்த பிரச்சினையை பயன்படுத்திக் கொண்டு பொறுக்கித் தின்பது, கட்டிங் வாங்குவது என்று முயற்சித்த பிழைப்புவாதிகளின் முயற்சி இவ்வாறு முறியடிக்கப்பட்டது.

இரவு 8 மணி.

தொழிலாளர்களில் கணிசமானவர்கள் பெண்கள். அனைவரும் உணவருந்தாததால் சோர்வடைந்திருந்தனர். பெண்கள் அதிகமான சோர்விலிருந்தனர். நிர்வாகம் பரப்பிய பீதியாலும் தொழிலாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டிருந்தது. இதை அறிந்த போராட்டக்குழு, தொழிலாளர்கள் மத்தியில் சென்று, “போலீசு, தடியடி என்பதெல்லாம் நிர்வாகம் பரப்பும் வதந்தி, பொய் செய்தி. எனவே இதற்கெல்லாம் அச்சப்பட வேண்டியதில்லை. நம்முடைய கோரிக்கை நியாயமானது, நேர்மையானது. எனவே நமது கோரிக்கையில் உறுதியோடு நிற்போம். அதே போல நாம் அனைவரும் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறோம். ஆனால் அதிக பட்சமாக 5000 ரூபாய் தான் பெறுகிறோம். எனவே சம்பள உயர்வு, வேலை நிரந்தரம் என்கிற நியாயமான கோரிக்கைகளுக்காக நிற்கிறோம். நம்முடைய கோரிக்கை நியாயமானது. போலீஸ் வரட்டும், அல்லது இராணுவம் கூட வரட்டும், நிர்வாகம் சொல்கிறபடி அப்படியே வந்தாலும் அவர்களால் தடியடி நடத்த முடியாது. எனவே நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை” என்று தொழிலாளர்களிடம் பேசியது அவர்களை உற்சாகப்படுத்தியது. அவர்கள் மனதில் இருந்த குழப்பமும், சந்தேகமும் தீர்ந்தது. இறுதி வரை உறுதியுடன் நிற்போம் என்றனர். அடுத்ததாக இரவு உணவுக்காக தொழிலாளர்கள் மத்தியிலிருந்தே நிதி வசூலிக்கப்பட்டு அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

இரவு 10 மணி

காஞ்சிபுரம் மாவட்ட டி.எஸ்.பி கண்ணன் தனது படைகள் சூழ சைரன் சத்தத்துடன் பந்தாவாக வந்து இறங்கினார். பிரச்சினை என்ன என்று எதையும் கேட்டறியாமல், வந்ததுமே மிரட்டினார். உளவியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தி, போராட்டத்தை பிசுபிசுத்து போக வைப்பது தான் அவருடைய நோக்கம். வண்டியிலிருந்து இறங்கியதுமே, “என்னா பிரச்சினை இங்க” என்று அதிகாரத் தோரணையுடன் அதட்டிக் கொண்டு முன்னால் வந்தார்.

தோழர் சிவா பேசத்துவங்கியதும், “நீங்க யாரு” என்றார்.

“நான் பு.ஜ.தொ.மு என்கிற தொழிலாளர் சங்கத்தில் இருக்கிறேன்” என்றதும்,

“உங்களுக்கு இங்கே என்ன வேலை” என்றார்.

“எங்களுக்கு இங்கே இல்லாம வேற எங்க சார் வேலை, தொழிலாளர்களுக்காக நாங்க பேசாம வேற யார் பேசுவாங்க, இவங்களோட பிரச்சினை என்னன்னு தெரியுமா உங்களுக்கு, இந்த தொழிலாளர்கள் எங்கே இருந்தெல்லாம் வேலைக்காக இங்கே வர்றாங்கன்னு தெரியுமா உங்களுக்கு, அவங்க வாங்குற சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா உங்களுக்கு”

என்று தொழிலாளர்களின் பிரச்சினைகள் அனைத்தையும் விளக்கிய பிறகு,

“இதையெல்லாம் என்கிட்ட ஏன் சொல்றீங்க, லேபர் ஆபீஸ்ல போய் சொல்லுங்க” என்றார்.

“லேபர் ஆபீஸ்ல கம்ளெய்ண்ட் கொடுத்துட்டு தான் சார் வந்திருக்கிறோம்” என்றதும்,

“நீங்க எங்கனா பேசிக்குங்க, ஆனா உள்ள இருக்கிறவங்கள வெளியே விடுங்க” என்றார்.

“அப்படி எல்லாம் அனுமதிக்க முடியாது சார், தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஏற்கெனவே உங்களுக்கு சொன்னேன், நீங்க மக்களுக்காக இருக்கீங்களா, யாருக்காக இருக்கீங்க, அவங்க சில கோரிக்கைகளை முன் வைக்கிறாங்க. முன்னறிவிப்பின்றி வேலையிலிருந்து நீக்கக் கூடாது உள்ளிட்ட சில நியாயமான கோரிக்கைகளை வச்சிருக்காங்க, காலையிலிருந்து அதுக்கு பொறுப்பான பதிலை HR மேனேஜரோ, DGM மோ இதுவரைக்கும் சொல்லவில்லை. இதுக்கு என்ன பதில் சொல்றீங்க” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே DSP குறுக்கிட்டார். “சார் நான் இன்னும் பேசி முடிக்கவில்லை நான் பேசிய பிறகு பேசுங்க” என்றதும் அமைதியானார்.

“நிர்வாகம் எந்த விசயத்திலும் சட்டப்படி நடந்துகொள்வதில்லை. தொழிலாளிகளின் ஊதியத்திலிருந்து பிடிக்கப்படும் PF பணத்தை கூட கொடுப்பதில்லை, நிர்வாகம் எப்படி வேணும்னா நடந்து கொள்ளும். தொழிலாளிகள் அதை எதிர்த்து கேள்வி கேட்காமல் பொறுத்து போகணும்னு சொல்றீங்களா” என்று ஏறி பேசியதும் தொழிலாளர்கள் மத்தியிலிருந்து போலீசுக்கும் நிர்வாகத்திற்கும் எதிரான முழக்கங்கள் எழுந்தன. தொழிலாளிகள் அனைவரும் உற்சாகமடைந்து வாயிலை மேலும் இறுக்கமாக அடைத்துக் கொண்டு நின்றனர்.

இரவு 11 மணி.

நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்தது. “உற்பத்தி குறைந்திருக்கிறது. வேலை இல்லை என்ன செய்யச் சொல்கிறீர்கள்” என்றனர். “சரி, வேலையில்லைன்னு தெரியுது இல்ல, அப்படின்னா சட்டப்படி என்னவோ அதை செய்ங்க, அதைத் தானே தொழிலாளிகள் கேட்கிறார்கள். அப்படி இல்லாமல் எந்த அறிவிப்புமின்றி வேலையிலிருந்து தூக்கியடிப்பது எப்படி சரியாகும்” என்றதும்,

அருகில் நின்றுகொண்டிருந்த DSP கண்ணன் தோழர்களுக்கு முன்னால் சீன் போடுவதற்காக

“ஏய் யார்யா அது HR, கூப்பிடுய்யா அந்தாளை” என்றார். தொழிலாளர்கள் வைத்த வாதங்களுக்கு எந்த பதிலும் கூற முடியாத நிர்வாகம். கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முன்வந்தது.

“முன்னறிவிப்பு இல்லாமல் வேலையிலிருந்து நீக்கக் கூடாது, வேலையிலிருந்து நீக்குவதாக இருந்தால் சம்பந்தப்பட்ட தொழிலாளிக்கு முறையாக கடிதம் கொடுக்க வேண்டும். வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு சட்டப்படியான இழப்பீடு என்னவோ அதை கொடுக்க வேண்டும். அத்துடன் அவர்கள் வேலை செய்த காலத்தை கணக்கிட்டு அவர்களுக்கான PF பணம் முழுவதையும் கொடுக்க வேண்டும்.” என்பது உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதாக நிர்வாகம் கூறியது.

“ஏற்றுக் கொள்வதாக வாயில் கூறினால் போதாது. அதை எழுத்துப்பூர்வமாக DGM, HR கையெழுத்திட்டு BYD யின் சீலை அடித்து தர வேண்டும்” என்று கோரப்பட்டது. முதலில் சற்று அதிருப்தியடைந்தவர்கள் பிறகு அவ்வாறே கடிதத்தில் கையெழுத்தும், சீலும் அடித்து கொடுத்தனர்.

கடிதம் அனைத்து தொழிலாளர்களுக்கு மத்தியிலும் உரக்க வாசித்துக்காட்டப்பட்டது. தொழிலாளர்கள் உற்சாக முழக்கமிட்டனர். மூவாயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு சங்கத்தில் இணைவதாகவும் கூறினர்.

தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் அங்கே பு.ஜ.தொ.மு வர்க்க உணர்வுடன் நிற்கும் என்பதை இச்சம்பவத்திலும் தொழிலாளிகள் அறிந்துகொண்டனர். இது பெரிய வெற்றியல்ல வெற்றியின் முதல்படி தான், முதலாளித்துவ பயங்கரவாதத்தை சவக்குழிக்கு அனுப்புவது தான் முழுமையான வெற்றியாக இருக்க முடியும். அதை கோடிக்கால் பூதமான தொழிலாளி வர்க்கம் சாதிக்கும்.

byd கடிதம்
BYD நிறுவனம் எழுதிக் கொடுத்த கடிதம்

தகவல் :

ஆ.கா.சிவா
காஞ்சிபுர மாவட்ட செயலாளர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
  1. #அதை கோடிக்கால் பூதமான தொழிலாளி வர்க்கம் சாதிக்கும்.# ஆம்,நிச்சயம் சாதிக்கும்! முனைப்புடன் உறுதியாக போராடிய அனைத்து தொழிலாளர்களுக்கும், களத்தில் நின்று சவால்களை சந்தித்து வழிகாட்டியாக நின்று வெற்றியை பெற்றுதந்த பு.ஜ.தொ.மு., தோழர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!

  2. It is a basic law implementation issue. When labours are not selecting the Govt which can support and implement labor law , they have to fight themselves.

    Pasting Kathir Nilavan’s message

    முனைப்புடன் உறுதியாக போராடிய அனைத்து தொழிலாளர்களுக்கும், களத்தில் நின்று சவால்களை சந்தித்து வழிகாட்டியாக நின்று வெற்றியை பெற்றுதந்த பு.ஜ.தொ.மு., தோழர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!

  3. முனைப்புடன் உறுதியாக போராடிய அனைத்து தொழிலாளர்களுக்கும், களத்தில் நின்று சவால்களை சந்தித்து வழிகாட்டியாக நின்று வெற்றியை பெற்றுதந்த பு.ஜ.தொ.மு., தோழர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!

Leave a Reply to Venkatesan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க