privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்மார்த்தாண்ட வர்மா : கொடுங்கோல் அரச பரம்பரை வாரிசு சாவு !

மார்த்தாண்ட வர்மா : கொடுங்கோல் அரச பரம்பரை வாரிசு சாவு !

-

திருவிதாங்கூர் அரச பரம்பரையின் கடைசி வாரிசான உத்திராடம் நாளில் பிறந்த மார்த்தாண்ட வர்மா (91) 12/16/2013 காலை இறந்ததை முன்னிட்டு கேரள அரசு திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்துள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபா கோயிலில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இலட்சம் கோடி மக்கள் சொத்தை அரசு கஜனாவிற்கு மாற்ற வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கி மொத்த சொத்தையும் ஆட்டையைப் போட்டவர் தான் இறந்த இந்த யோக்கியர்.

  • தன்னை பத்மநாப தாசன் என்று கூறிக்கொண்டே அடிமை முறையை தன் குடிகள் மீது நிஷ்டூரமாக ஏவிய கொடுங்கோலர்களின் கடைசி வாரிசுதான் இறந்த மார்த்தாண்ட வர்மா.

    மார்த்தாண்ட வர்மா
    அடிமை முறையை தன் குடிகள் மீது நிஷ்டூரமாக ஏவிய கொடுங்கோலர்களின் கடைசி வாரிசுதான் இறந்த மார்த்தாண்ட வர்மா.
  • பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனியின் தாசர்களான போதும் கூட 1845-ஆம் ஆண்டு சட்டப்படி கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்னும் 1853 வரை திருவிதாங்கூரில் மட்டும் அடிமைமுறையை நீடிக்கச் செய்த பெருமைக்குரிய வம்சத்தை சேர்ந்தவர் (ஆ. சிவசுப்பிரமணியம் 2005. ப. 72).
  • 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை தாழ்த்தப்பட்ட இந்துப்பெண்கள் மேலாடை அணிந்தால் உடுதுணி உரியப்பட்டு பொது இடத்தில் அரசனின் அடியாட்படையான உயர்சாதியினாலேயே அவமானப்படுத்தப்பட்ட நாட்டை ஆண்ட மன்னர்களின் வாரிசு இவர்.
  • ’தலைவரி’, ’முலைவரி’ என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்டவர்களின் உடல் உறுப்புகளுக்குக்கூட வரிவிதித்த உலகத்தின் முதலும் கடைசியுமான அரச பரம்பரையின் கடைசி வாரிசு.
  • வரிவசூல் நாய்களான நாயர்களின் வேட்டையால் வாழை இலையில் ரத்தம் சொட்டச் சொட்ட அறுத்தெடுத்த தன் இரு முலைகளையும் வைத்து ’முலைவரி கட்டி’, அத்தோடு முலைவரிக்கும் முடிவுகட்டிய நன்செல்லி என்ற ஈழவப்பெண் வாழ்ந்த முலைச்சிப்பறம்பு இந்த அரச பரம்பரையில் ’மூலம்’ நாளில் பிறந்த அரசனின் (1885-1924) ஆளுகைக்குட்பட்டது.
  • 18 ஆம் நூற்றாண்டில் தன் நாட்டின் அண்டை பிரதேசமான வளம் கொழிக்கும்  செம்பகச்சேரி, கோட்டயம், கொச்சி பகுதிகளைக் கொள்ளையடித்த பணத்தாலும், சாணிப்பாலும் சவுக்கடியும் கொடுத்து ஈழவ, சாணார் மற்றும் தாழ்த்தப்பட்ட குடிகளிடம் வசூலித்த வரிப்பணத்தாலும் பத்மநாபனின் உண்டியலை நிரப்பிய மார்த்தாண்டவர்மாவின் பரம்பரை தான் இப்பொ செத்த இந்த மார்த்தாண்ட வர்மா.
  • பல இலட்சக்கணக்கான விவசாயக் குடியான மக்கள் பட்டினியாலும், காலராவாலும் கொத்துக் கொத்தாக செத்து விழுந்து கொண்டிருந்த போது, பத்மநாபக் கோயிலின் ’ஊட்டுபுரா’ என்ற சாப்பாட்டு அறைகளில் தேனும் பாலும், பாயாசமும், பல இலட்சம் ’பகோடா’க்கள் தட்சிணையும் ஆறாக ஓடி பார்ப்பனர்களின் உண்டியையும், உண்டியலையும் குளிர்வித்துக்கொண்டிருந்த பெருமைக்குரிய தேசத்தை ஆண்ட பரம்பரை.
  • அண்டை நாடுகளிலும் பாளையங்களிலும் ஆங்கிலேயர்களை எதிர்த்து கட்டபொம்மனும், திப்புவும், பூலித்தேவனும், கேரளவர்மாவும் வீரப்போர் புரிந்து வீரமரணமடைந்த போது, ஆங்கிலேயனின் காலடியில் விழுந்து நாட்டை அடகு வைத்து கப்பம் கட்டிய துரோகிகளின் பரம்பரை.
  • 1947 – ல் ஆங்கிலேயர்கள் ஆட்சியதிகாரத்தை காங்கிரசின் கையில் ஒப்படைத்த போது, திருவிதாங்கூரை ஆண்டு வந்தவர் இப்போது செத்த மார்த்தாண்ட வர்மாவின் அண்ணன் பலராம வர்மா. பட்டேல் திருவிதாங்கூரை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும்போது பலராம வர்மாவுக்கு மானியம் வழங்க முன்வந்தார். ஆனால் பலராம வர்மாவோ பெரிய மனது பண்ணி தனக்கு இந்திய அரசு வழங்கும் மானியத்தை பிச்சைக்காசு என்று நிராகரித்து விட்டு தனக்கு பத்மநாபா கோயிலே போதும் என்றார். ஏனெனில் பத்மநாபா கோவில் சொத்துக்ளின் மதிப்போடு ஒப்பிடும் போது அரசு மானியமெல்லாம் பிச்சைக்காசுதான். பிற கோயில்கள் அனைத்தும் கேரள தேவஸ்யம் போர்டின் கீழ் வந்த போது பத்மநாபபுரம் கோயில் மட்டும் அரசனின் சொத்தானது.
கோயில் தங்கம்
திருவனந்தபுரம் பத்மநாபா கோயிலில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மக்கள் சொத்தில் ஒரு பகுதி.

1991- ல் அண்ணன் பலராமவர்மா இறந்ததும் பத்மநாபா கோயிலை தீட்சிதர்களின் அதே பாணியில் தம்பி மார்த்தாண்ட வர்மா அபகரித்தார். இதற்கு எதிராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வழக்கறிஞர் சுந்தரராஜன் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோயில் மார்த்தாண்ட வர்மாவின் கட்டுப்பாட்டின் கீழ் செல்ல எந்தச் சட்ட உரிமையும் இல்லை என்றும் கேரள அரசே கோயிலின் எல்லாப் பொறுப்புகளையும் ஏற்று அவற்றின் சொத்துக்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து மூன்று மாதங்களாகியும், அச்சுதானந்தனனின் ’கம்யூனிஸ்ட்’ அரசாங்கம் கோயிலை கையகப்படுத்தவோ அறங்காவலரை நியமிக்கவோ செய்யாமல் இழுத்தடித்ததன் மூலம் மார்த்தாண்டவர்மா உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடைபெற்று ஒரு இலட்சம் கோடி ரூபாய் மக்கள் சொத்தை சுவாகா செய்ய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து தன் ராஜவிசுவாசத்தை புதுப்பித்துக் கொண்டது. மொத்தத்தில் பல நூற்றாண்டுகளாக நாட்டின் வளத்தையும் மக்களின் உழைப்பையும் தன் அதிகாரத்தின் மூலம் சூறையாடி கோயிலின் கற்பகிரகத்துக்குள் பதுக்கிவிட்டு தன்னை கடவுளின் அடிமையென பித்தலாட்டம் நடத்தி ஊரை ஏய்த்து, அதற்கு சிறு ஊறு விளைந்தாலும் சகிக்க திராணியின்றி ஆங்கிலேயனை நத்திப் பிழைத்த பரம்பரையின் கடைசி வாரிசு தான் இந்த மார்த்தாண்டவர்மா.

இப்பேர்ப்பட்ட மார்த்தாண்டவர்மா செத்ததற்குத் தான் கேரளாவின் உம்மன்சாண்டி அரசாங்கம் விடுமுறை அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை காங்கிரசு எம் எல் ஏ விடி பல்ராம் மட்டும் எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ”பழைய ஒரு அரச பரம்பரையின் அங்கம் என்பதன்றி அவர் இந்த நாட்டை ஆளவில்லை. அப்படிப்பட்டவரின் மரணத்துக்கு விடுமுறை அறிவிக்கவேண்டிய தேவையென்ன? மன்னராட்சியும், நிலப்பிரபுத்துவமும் இப்போது இல்லை என்றும், இது ஒரு ஜனநாயக நாடு என்பதையும் ஆட்சியாளர்கள் அடிக்கடி மறந்து போகிறார்கள். ’அரசர் இறந்துவிட்டார்’ போன்ற தலைப்பு செய்திகளை செய்தித்தாள்கள் பிரசுரித்தாலும் அதிசயமில்லை” என்றார் அவர். ஒரு காங்கிரஸ் எம் எல் ஏ வுக்கு உள்ள முதுகெலும்பு கூட போலிகம்யூனிஸ்டுகளுக்கு இவ்விவகாரத்தில் இல்லை.

–    ராஜன்

மேலும் படிக்க