privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்தில்லை தீண்டாமைச் சுவரை தகர்க்க புரட்சிகர அமைப்புகளின் முற்றுகை !

தில்லை தீண்டாமைச் சுவரை தகர்க்க புரட்சிகர அமைப்புகளின் முற்றுகை !

-

“டிசம்பர் 25-வெண்மணித் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !” என்ற முழக்கத்தின் கீழ் 25-12-2013 அன்று “சிதம்பரம் நடராசர் கோயிலில் நமது முப்பாட்டன் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம்!” என்ற கிளர்ச்சிப் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை திட்டமிடப்பட்டிருந்தது.

காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், “ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுத்தால், முற்றுகைக்கு அனுமதி தரமாட்டோம், மீறி நீங்கள் முற்றுகை நடத்துவோம் என்று பிரசாரம் செய்தால், ஆர்ப்பாட்டத்திற்கே அனுமதி தர மாட்டோம். இதை மீறி நீங்கள் கூட்டம் நடத்தினாலே கைதுசெய்வோம்.” என்று டி.எஸ்.பி. ராஜாராமன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், எஸ்.ஐ. கதிரவன் அடங்கிய அதிகார வர்க்க கும்பல் நமது தோழர்களை மிரட்டிக் கொண்டிருந்தது.

இந்த சூழலில், காலை ஒன்பது மணிக்கெல்லாம் சிதம்பரம நடராசர் கோயிலின் நான்கு வீதிகளிலும் திரண்டிருந்த எமது தோழர்கள் எங்கு வருவார்கள் என்று காத்திருந்த காவல் துறையின் கண்காணிப்புகளை மீறி, தெற்கு வாயில் எதிரில் நூறடி தூரத்தில் பேனர், கொடிகள், முழக்கத் தட்டிகள் சகிதமாக ஒன்று கூடினர். உடனே ஓடி வந்த காவல் துறை, தோழர்களை தெற்கு வாயிலை நோக்கி முன்னேற விடாமல், அருகில் உள்ள மண்டபத்திற்குள் திணிக்க முயன்றது. ஒரு நிமிடம் கூட ஆர்ப்பாட்டமோ முற்றுகையோ நடத்தாமல், அனைவரையும் கைது செய்து விடலாம் என்று மனப்பால் குடித்தது. உடனடியாக நமது செயல்திட்டத்தை மாற்றி, காதி வஸ்த்ராலயம், பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, கீழ வீதி அரச மரத்தடி, சீனிவாசா மருந்தகம் என்று வெவ்வேறு முனைகளைத் தெரிவு செய்து, பு.மா.இ.மு. கடலூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் கருணாமூர்த்தி, பு.ஜ.தொ.மு. புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் பழனிசாமி, வி.வி.மு. தி.வெ. நல்லூர் செயலாளர் தோழர் ஹரிகிரிட்டிணன் ஆகிய தோழர்களின் தலைமையில் அலையலையாக தெற்கு வாயிலை நோக்கி முற்றுகையிட தோழர்கள் முன்னேறினர்.

காலை பத்து மணி முதல் மதியம் பன்னிரெண்டு மணிவரை முற்றுகைப் போராட்டமும் கைதுகளும் நீடித்தன. பெண்கள், குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகினர். அடையாள போராட்டங்கள், போலீசிடம் முன்னரே அறிவித்து விட்டு பெயருக்காக புகைப்படத்திற்குப போஸ் கொடுத்துக் கைதாவது போன்ற ‘அசாத்தியமான’ போராட்டங்களையே கண்டிருந்த போலீசுக்கு, புரட்சியாளர்களின் போர்க் குணம் மிக்க, சமரசங்களுக்கு அடிபணியாத போராட்ட முறை மிரட்சியை ஏற்படுத்தியது. காலை எட்டுமணி வரை ஈயாடிக் கொண்டிருந்த சிதம்பரம் நகர வீதிகள், செஞ்சட்டைகளின் அணிவகுப்பால் நிரம்பின. சிதம்பரம் நகரத்தில் ஏதோ நிகழப் போகிறது என்பதை உணர்த்தும் வகையில் கூடுதல் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் டி.எஸ்.பி., பல காவல் நிலையங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட துணை ஆய்வாளர்களும், பத்துக்கும் மேற்பட்ட போலீசு வாகனங்களும் தெற்கு வீதி முழுவதும் ஆக்கிரமித்திருந்தன.

பொது மக்களும் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர். சிதம்பரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த விவசாயிகள் சிலர் தாங்களாகவே ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகையில் கலந்து கொண்டு தோழர்களுடன் கைதாகினர். சபரிமலைக்கு மாலை போட்டவர்கள் சிலர் கூட சுயமரியாதையுடனும் தன்மானத்துடனும் முற்றுகையில் கலந்து கொண்டது நமது போராட்டத்தின் வீச்சைப் பறைசாற்றுவதாக இருந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் முடலூர், கடலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள் விடுமுறையில் தங்கள் வீடுகளுக்குச் செல்லாமல் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு சிறுகடை வியாபாரிகள், வழக்கறிஞர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என்று பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களும் தமது ஆதரவினைப பல்வேறு வழிகளில் தெரிவித்தனர். இப்போராட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் மாவட்ட இணைச் செயலாளர் செந்தில் குமார் தலைமையில் திரண்டு ஆரம்பம் முதலே போராட்டக் களத்தில் நின்று கொண்டிருப்பதை தமது முரட்டுத் தனமான ஒடுக்குமுறைகளை ஏவுவதற்கு பெரும் இடையூறாகக் கருதினர் போலீஸ் அதிகாரிகள். கைது செய்த பிறகும் கூட மண்டபத்தின் உட்புறம் செல்லாமல் நுழைவாயில் அருகிலேயே அமர்ந்து கொண்டு தோழர்கள் ஆர்பாட்டம் நடத்தியது, சாலையில் சென்ற ஆயிரக் கணக்கான பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. காவல்துறை தோழர்களை மண்டபத்திற்குள் செல்லுமாறு தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்தது. அனைத்துத் தோழர்களும் கைது செய்யப் பட்ட பிறகே மண்டபத்திற்குள் தோழர்கள் சென்றனர்.

மண்டபத்திற்குள் தோழர்களின் எழுச்சியூட்டும் உரைகள், கல்லூரி மாணவர்களின் நந்தனார் பற்றிய நாடகம், புரட்சிகரப் பாடல்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு நிகழ்த்திய “தெற்கு வாயில் தீண்டாமைச் சுவர் தகர்த்தெறியப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவதன் அவசியம்” குறித்த விளக்க உரைகள் என பல்வேறு புரட்சிகர நிகழ்வுகளோடும் முழக்கங்களோடும் தொடர்ந்து போராட்ட உணர்வை வளர்த்துக் கொண்டிருந்தன.

நமது போராட்டத்தை ஆதரித்து மண்டபத்தில் கைதாகியிருந்த தோழர்களிடையே பேசிய நந்தனார் ஆய்வு மையத்தின் அமைப்பாளர் காவியச் செல்வன், “வெண்மணித் தியாகிகளின் நினைவுதினத்தில் நடந்துள்ள இந்தப் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்று கூறினார்.

உண்மைதான்! ‘நமது முப்பாட்டன் நந்தன் நுழைந்ததால் தீட்டுப்பட்டு விட்டது’ என்று பார்ப்பன ஆதிக்கச் சாதிவெறியுடன் தில்லை தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிய தெற்கு வாயிலை முற்றுகையிட்ட தோழர்கள் தடுத்துக் கைது செய்யப்பட்ட போது இடையில்இருந்த தூரம் வெறும் நூறடிதான். சிதம்பரம் நடராசர் கோவிலில் பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு எதிராக களம் கண்டு அதன் மையப் பகுதியான சிற்றம்பல மேடை வரை முன்னேறிய எமது தோழர்களுக்கு இந்த நூறடி என்பது பெருந்தொலைவு இல்லை என்பதே வரலாற்று உண்மை.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி