privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்இதர நாடுகள்சம்பீசி ஆறு – இயற்கையின் அற்புதம் - வீடியோ

சம்பீசி ஆறு – இயற்கையின் அற்புதம் – வீடியோ

-

Natural World – Zambezi – BBC Documentary

ம்பீசி ஆறு ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் 1,600 மைல் தூரம் ஓடி இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது. சாம்பியாவின் மலைப் பகுதிகளில் உருவாகும் நீரூற்றுகள் மேற்கிலிருந்து ஆறு நாடுகள் வழியாக ஓடி 5 லட்சம் சதுர மைல் நிலப்பரப்பை செழிக்க வைத்து கிழக்கில் மொசாம்பிக் கடற்கரையில் கடலில் சேருகின்றன. சம்பீசி ஆறு தனது ஓட்டத்தில் நெஞ்சை அள்ளும் இயற்கை காட்சிகளையும், எதிர்பாராத ஆச்சரியங்களையும் உருவாக்குகிறது. சமயங்களில் சம்பீசியின் ஆற்றல் தாங்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கிறது, இன்னும் சில சமயங்களில் தண்ணீர் வடிந்து வறண்டு போகும் போது கரைவாழ் உயிரினங்களின் வாழ்க்கை வேறு வகையில் போராட்டமாகிறது. இந்தப் பகுதியில் வாழும் அனைத்து உயிரினங்களின் வாழ்க்கையும், ஆண்டு முழுவதும் மாறிக் கொண்டே இருக்கும் மகத்தான சம்பீசி ஆற்றின் போக்கை சார்ந்தே உள்ளது.

zambezi-snap-20சம்பீசி ஆறின் பாதையை வைத்து இங்கு ஒரு அற்புதமான உலகம் இயங்குகிறது. விலங்குகள், பறவைகள், நீர் வாழினங்கள், காடுகள், பசுமைப் புல்வெளிகள், பழங்குடி மக்கள் என சம்பீசி ஆற்றின் புதல்வர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து  வாழும் இயற்கையின் இயக்கத்தை இந்த ஆவணப்படத்தில் காணலாம். ஆறு உற்சாகத்துடன் நீர் கொண்டு வந்த போதும், வறண்டு தூங்கிய போதும் இந்த புதல்வர்கள் அதற்கேற்ற வகையில் தமது வாழ்க்கையை கட்டியமைத்திருக்கின்றனர்.

ஆற்றின் பாதையின் மையப் பகுதியில் இருக்கும் விக்டோரியா அருவியில் ஏப்ரல் மாதம் ஒரு நிமிடத்துக்கு 5 லட்சம் டன் நீர் கொட்டுகிறது. சில மாதங்கள் கழித்து செப்டம்பர் மாதம் அருவி முற்றிலும் நீர் வறண்டு போகிறது. தென் கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும் பகுதி உயிர் கொடுக்கும் தண்ணீர் இன்றி வறண்டு போகிறது.

வறட்சிக் காலத்தில் சூரியன் சுட்டு எரிக்கிறது. யானைகளும், காட்டு எருமைகளும் சுருங்கிக் கொண்டிருக்கும் ஆற்றுக்கு வந்து தண்ணீர் குடித்து விட்டு உணவைத் தேடி கரையில் வெகு தூரம் போக ஆரம்பிக்கின்றன. ஆற்றோர மரங்களில் பசுமை இல்லாமல் போய் விட மேலும் மேலும் அதிக தூரம் போய்தான் உணவு தேட வேண்டியிருக்கிறது.

யானைகள் 2-3 நாட்களுக்குத் போதுமான தண்ணீர் குடித்து விட்டு இரை தேட போய் விடுகின்றன, காட்டு எருமைகளுக்கோ காலையில் ஒரு முறை மாலையில் ஒரு முறை தண்ணீர் தேவைப்படுகிறது. நீர் யானைகள் பகல் முழுவதும் தண்ணீரிலேயே மூழ்கி இருக்க வேண்டியிருக்கிறது. தண்ணீர் வடிந்து தேங்கியிருக்கும் நீர்ப் பரப்பு சுருங்கச் சுருங்க பெரும் எண்ணிக்கையிலான நீர் யானைகள் நெருக்கியடித்துக் கொண்டு மிதக்கின்றன. இரவில் வெப்பநிலை குறையும் போது கரையில் உலாவி இரை தேடி விட்டு விடியற்காலையில் ஆற்றுக்குத் திரும்பி விடுகின்றன.

அவற்றின் தடித்த ரப்பர் போன்ற தோல் தண்ணீருக்கு வெளியில் தாக்குப் பிடிக்க முடியாது. அவற்றின் உடலில் வியர்வை சுரப்பிகளே இல்லாததால் சூட்டை தாங்க முடியாது. தண்ணீரில் மூழ்கித் திளைத்திருப்பதுதான் ஒரே வழி.

zambezi-snap-16ஆற்றுக்குத் திரும்பி வரும் ஒரு நீர்யானை கழுதைப் புலிகளின் படை ஒன்றின் மத்தியில் சிக்கிக் கொள்கிறது. பொதுவாக நீர்யானை போன்ற பெரிய விலங்குகளை எதிர் கொள்ளும் அபாயத்தை தவிர்க்கும் கழுதைப் புலிகளுக்கு காய்ந்து போன சூழலில் கிடைப்பதை அடிக்கும் தேவை ஏற்படுகிறது. நீர்யானை தப்பித்து ஓடி ஒரு வழியாக தண்ணீரின்றி உயர்ந்து நிற்கும் ஆற்றங்கரையைத் தாண்டி நீருக்குள் போய் சேருகிறது. ஆழமான நீர் பகுதியில்தான் நீர் யானைகள் பாதுகாப்பாக உணர்கின்றன. ஆனால், ஆயிரக் கணக்கான நீர் யானைகள் நெருக்கியடிக்கும் சூழலில் சண்டைகள் மூள்கின்றன. அவற்றில் உயிரிழப்பும் நிகழ்கிறது.

கொல்லப்பட்டு நீரில் மிதக்கும் நீர்யானையின் பெரிய உடலை உண்டு செரிக்க முதலைகளின் கூட்டம் ஒன்று சூழ்ந்து கொள்கிறது. சில மணி நேரத்துக்குள்ளாகவே 100-க்கும் அதிகமான முதலைகள் நீர் யானையில் உடலை சூழ்ந்து கொள்கின்றன. குட்டி முதலைகள் பின் தங்கி பெரிய ஆட்களை முதலில் சாப்பிட விடுகின்றன. பெரிய ஆட்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நீர் யானையின் உடலை கடித்துக் குதறுகின்றன. அடுத்த சாப்பாடு கிடைப்பதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம் என்ற நிலையில் முடிந்த மட்டும் வயிற்றை நிரப்பிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

முதலைகளுக்கு நீர்யானையின் சதையில்தான் வயிறு நிறைகிறது என்றால் மாட்டுக் கொத்திகள் நீர் யானைகள் மற்றும் காட்டு எருமைகளின் மேல் உட்கார்ந்து அவற்றின் தோலின் மீதுள்ள செத்த செல்கள், உண்ணிகள், காய்ந்து போன உமிழ்நீர் படிமங்கள், காது அழுக்கைக் கூட கொத்தி வயிற்றை நிறைத்துக்கொள்கின்றன.

zambezi-snap-126 மாதங்களுக்கு முன்பு நீரால் மூழ்கடிக்கப்பட்டு இப்போது நீர் மட்டம் தாழ்ந்த பிறகு வெளிப்பட்டிருக்கும் உயர்ந்த கரைகளின் சுவர்களில் சென்ற பருவத்தில் ஏற்படுத்தியிருந்த துளைகளை மீண்டும் ஆழமாக்கி கார்மைன் தேனீ உண்ணிகள் (சிறு பறவைகள்) குடியேறியிருக்கின்றன. நூற்றுக்கணகான இணைகள் இந்த வறண்ட பருவத்தில் இங்கு வாழ்க்கை நடத்துகின்றன. ஒன்றாக கூடியிருப்பதில் பாதுகாப்பு உள்ளது. ஆனால், அவற்றில் ஒப்பீட்டளவில் பெரியவற்றுக்கு வானத்தில் இருந்தும் அபாயம் வருகிறது. ஆப்பிரிக்க மீன் கழுகு ஒன்று, மீன்கள் அருகிப் போன இந்த பருவத்தில் பறவைகளை சாப்பிடுவதில் ருசி கண்டிருக்கிறது. கம்பீரமாக பறந்து வரும் கழுகு, சிறகடித்துக் கொண்டிருக்கும் தேனீ உண்ணி ஒன்றை இரண்டு கால் விரல்களுக்கிடையே பற்றிக் கொண்டு பறப்பை தொடர்கிறது.

வறண்டு போன இந்த பருவத்தில் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டால்தான் உயிர் பிழைத்து இருக்க முடியும் என்பதை உணர்ந்த சம்பீசி வாழ் உயிரினங்களில் இன்னும் ஒன்று இந்த ஆப்பிரிக்க மீன் கழுகு.

அக்டோபர் மாதத்தில் நீர் மட்டம் தரையை தொட்டு விட்டது. குளங்களின் சேற்றில் மீன்கள் துள்ளிக் கொண்டிருக்கின்றன. சிறு மீன்கள், சேற்றுக்குள் புதைந்து கொள்ளவோ, தரையில் துள்ளித் துள்ளி அடுத்த நீர் குட்டைக்குப் போய் விடவோ செய்கின்றன. ஆனால், பெரிய மீன்களின் கதி தீர்மானிக்கப்பட்டு விட்டது. குறு அலகு கொக்குகளின் கொத்தலில் சிக்கி உயிரை விடுகின்றன.

zambezi-snap-17இங்கிருந்து 100 மைல்கள் தொலைவில், மேல் மடைப் பகுதியில் சம்பீசியை சூழ்ந்த நிலப்பகுதியில் நிலைமை மிகவும் பரிதாபகரமாக ஆகியிருக்கிறது. தரை காய்ந்து புழுதி மண்டலமாக மாறி விட்டிருக்கிறது. புல் வெளிகள் காய்ந்து சருகாக மாறியிருக்கின்றன. குரங்குக் கூட்டங்களும், மான்களும், யானைகளும் இரை தேடி அமைதியின்றி அலைகின்றன.

வேட்டை நாய்களின் ஒரு படை ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. அவை, தங்களைக் கடந்து போகும் வான்கோழிகளை சலனமின்றி பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பசிக்கு இந்தக் கோழிகள் போதாது, பெரிய இரை ஒன்று வேண்டும்.

அந்தி சாயும் போது நாய்களின் படை எழுந்து நின்று ஒன்றை ஒன்று உரசி வேட்டைக்கு தயாரித்துக் கொள்கின்றன. வேட்டைக்குப் போகும் கூட்டத்தை இரண்டு பெரிய தலைகள் முன் நின்று வழி நடத்துகின்றன. மணிக்கு 30 மைல் வேகத்தில் ஓடும் அவை காற்றில் மிதப்பது போல பறக்கின்றன. இரையை சூழ்ந்து, தந்திரமாக பிடிப்பதற்கு இருவேறு  குழுக்களாக பிரிந்து போகின்றன.

மேய்ந்து கொண்டிருக்கும் இம்பாலா மான் கூட்டத்தை மெதுவாக, ஓசை இன்றி அணுகுகின்றன. வேட்டை நாய்கள் வெகு நேரம் ஓடக் கூடியவை, தந்திரமாக வேட்டையாடக் கூடியவை. ஒரு மான் மாட்டிக் கொள்கிறது. அதைக் கொன்று தமது இரையை பங்கு போட்டுக் கொள்கின்றன. இந்த எண்ணிக்கையிலான வேட்டை நாய்ப் படை ஒவ்வொரு நாளும் ஒரு விலங்கை கொல்ல வேண்டியிருக்கிறது.

zambezi-snap-04ஆற்றங்கரையிலிருந்து விலகிப் போகப் போக தரை வறண்டு போயிருக்கிறது. யானைகளின் நிலைமையோ மோசமாகிக் கொண்டிருக்கிறது. குட்டிகளும், பெண் யானைகளுமாக யானைக் கூட்டம் இரை தேடி வறண்ட காட்டுக்குள் பயணிக்கின்றது. காய்ந்து போன மரத்தின் கிளைகளையும், சுள்ளிகளையும் கூட சாப்பிடலாம் என்று குட்டி யானைகள் முதல் முறையாக கற்றுக் கொள்கின்றன. காய்ந்து போன கம்புகளுக்குள்ளும் சிறிதளவு ஈரப் பதம் கிடைக்கிறது. ஒரு வளர்ந்த யானைக்கு ஒரு நாளைக்கு 200 கிலோ வரை உணவு தேவைப்படுகிறது. அதை செரிப்பதற்கு கணிசமான அளவுக்கு தண்ணீரும் தேவை. அதனால், அடிக்கடி ஆற்றுக்குத் திரும்ப வேண்டியிருக்கிறது.

தண்ணீர் குடிக்காமல் 3-4 நாட்கள்தான் தாக்குப் பிடிக்க முடியும். யானைக் கூட்டம் தண்ணீர் குட்டைக்குள் குதித்துக் கொண்டு, ஆடிக் கொண்டு வந்து சேருகிறது. நிலைமைகளை புரிந்து கொண்டு நகர்வதுதான் உயிர் பிழைத்திருப்பதற்கான ஒரே வழி, பல தலைமுறைகளாகக் கற்றுக் கொண்ட அனுபவங்களை கூட்டத்தின் தலைவி உள் வாங்கியிருக்கிறது. குட்டி யானைகள் இந்தப் பாடங்களை புதிதாக கற்றுக் கொள்கின்றன.

வயது வந்த யானை ஒரு முறையில் 100 லிட்டர் வரை தண்ணீரை குடித்து விட முடிகிறது. ஆனால், நீண்ட நேரம் இங்கு தாமதிக்க  முடியாது, உடனே பயணத்தைத் தொடர்ந்தால்தான் அடுத்த வேளை உணவை தேடி முடிக்கலாம். இருந்தாலும், சில யானைகளுக்கு தண்ணீரின் குளிர்ச்சியை விட்டுப் போக மனமில்லை.

இப்போது சிறிது சிறிதாக கால நிலையின் போக்கு மாறுகிறது. கடல் மட்டத்துக்கு மேல் 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள வடக்கு சாம்பியாவில் உள்ள கலீனி மலையில் பருவக் காற்றால் கொண்டு வரப்பட்ட மேகத் திரள்கள் இடியாக இடிக்கின்றன. அவைதான் சம்பீசிக்கு புத்துயிர் கொடுக்கும் பசுமைத் தொட்டில்கள். புயல் மழை பெய்யத் தொடங்குகிறது. துளித் துளியாய் விழும் மழை நீர் நீரோடைகளாக பெருக்கெடுக்கின்றது. சம்பீசி ஆற்றின் மறுபிறப்பு தொடங்குகிறது.

zambezi-snap-01பல நீரோடைகள் ஒன்று சேர்ந்து நீர் ஓட்டம் விரிவடைந்து மேற்கு நோக்கி அங்கோலாவுக்குள் பாய்கிறது சம்பீசி. இந்தப் பகுதியில் சேபிள் கலைமான்கள் வசிக்கின்றன. கருப்பு நிற ஆண் மான்கள் 1.5 மீட்டர் வரை வளரக் கூடிய பெரிய வளைந்த கொம்புகளை கொண்டிருக்கின்றன. இல்லாமல் அழிந்து போன இனமாக 30 ஆண்டுகள் கருதப்பட்ட இந்த கலைமான்களின் கூட்டம் 2005-ம் ஆண்டு இந்தப் பகுதியில் கண்டறியப்பட்டது. நூற்றுக் கணக்கான மான்களைக் கொண்ட இந்த மந்தைக்கு சம்பீசியின் கரையோரம் இயற்கை காப்பிடமாக விளங்குகிறது.

இந்த பகுதிக்குப் பிறகு ஆறு கிழக்கு நோக்கித் திரும்பி சாம்பியாவுக்குள் மீண்டும் நுழைகிறது. காட்டை விட்டு வெளியில் வந்து பரட்சீ சமவெளியில் தனது பயணத்தைத் தொடர்கிறது. வறண்டு போன குளங்களை நிரப்புகிறது. தண்ணீருக்கான தேவையும், உணவு தேடலுக்கான ஓட்டமும் என்று பல மாதங்களாக அலைக்கழிந்து கொண்டிருந்த எருமைகளின் வாழ்க்கை இலகுவாகிறது. காய்ந்து போயிருந்த தாவரங்கள் பசுமையடைகின்றன. இந்தப் பருவத்தில் எருமைகளின் முக்கிய வேலை சாப்பிடுவதுதான். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் சாப்பிடுகின்றன.

லோசீ இனத்தைச் சேர்ந்த மக்கள் சம்பீசியின் நதிக் கரையில் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். ஆற்றின் பல போக்குகளுக்கேற்ப தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். தண்ணீர் மட்டம் உயர ஆரம்பிப்பதற்குள் கெண்டை மீன் பிடிப்பதில் ஈடுபடுகின்றனர், சேற்றில் மாட்டிக் கொண்டிருக்கும் பெரிய மீன்களை ஈட்டியால் குத்தி கரையில் போடுகின்றனர். லோசீ மக்களும் சீக்கிரமே ஆற்று வெள்ளப் பெருக்கிலிருந்து தப்பிக்க நகர வேண்டியிருக்கும்.

zambezi-snap-21ஆற்று வெள்ளம் பெருக்கெடுக்கும் போது அங்கோலாவின் காடுகளிலிருந்து 200 மைல்கள் தெற்கு நோக்கி பயணித்து இங்கு வந்து சேரும் நீல காட்டு ஆடுகளின் இடம் பெயர்தல் நடக்கிறது. ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய, பெரிதும் அறியப்படாத இந்த இடப்பெயர்ச்சியின் உச்ச கட்டத்தில் சுமார் 30,000 ஆடுகள் இங்கே கூடுகின்றன. இங்கு வளர்ந்திருக்கும் பசும் புல்லை மேய்வதற்கும் குட்டி போடுவதற்கும் அவை இங்கு வருகின்றன. குட்டிகள் அனைத்தும் 3 வார கால கட்டத்திற்குள் பிறக்கின்றன. இந்தப் புல்வெளி பிரதேசம் புதிய உயிர்த் துடிப்பில் பரபரக்கிறது.

ஆனால், அபாயமும் அருகிலேயே இருக்கிறது. ஒரு கழுதைப் புலி கூட்டம் மந்தையை நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறது. அவற்றின் வேட்டையாடும் உத்தி எளிதானது. கூட்டத்தை கலைத்து ஓட விட்டு ஓடுவதில் பலவீனமானதை வீழ்த்துவதுதான் அது. வரிக்குதிரைகளும், காட்டு ஆடுகளும், மான்களுமாக அந்த இடமே ஓட்டப்  பந்தய மைதானமாகிறது. துரத்தி வரும் கழுதைப் புலிகளிடமிருந்து தப்பித்து மந்தையின் பாதுகாப்பை அடைந்து விடுகிறது ஆட்டுக் குட்டி ஒன்று. ஆனால் அதன் அம்மாவுக்கு நேரம் அவ்வளவு நன்றாக இல்லை. கழுதைப் புலிகளால் வீழ்த்தப்பட்டு அவற்றுக்கு இரையாகி விடுகிறது. கடித்துக் குதறி உணவை முடித்து விட்டு முதுகெலும்பை ஒரு பக்கமும், தோலை இன்னொரு பக்கமும் கவ்விச் செல்வது வரை தின்று தீர்க்கின்றன.

சனவரி மாதம் புயல் மழை அடர்த்தியாக பெய்ய ஆரம்பிக்கிறது. ஆற்றின் கரைகளைத் தாண்டி சுற்றியிருக்கும் நிலப்பரப்பில் வெள்ளக் காடு பரவுகிறது. பல மாதங்களாக சிறிதளவு தண்ணீரையே பார்த்து வந்த பராக்சீ வாசிகள் இப்போது சம்பீசியின் இன்னொரு முகத்தை பார்க்கின்றனர். ஆயிரக்கணக்கான சதுர மைல்களுக்கு வெள்ளக்காடாக நிரம்பி ஒரு ஆழமற்ற உள்நாட்டு கடலாக அந்த புல் வெளி பகுதி மாறி விடுகிறது.

zambezi-snap-23இப்போது இன்னும் பல இடம் பெயர் விருந்தினர்கள் வந்து சேருகிறார்கள். ஆயிரக் கணக்கான நீர்ப் பறவைகள் பூச்சிகள், தவளைகள், மீன்களை பிடித்து வயிறு நிறைக்க வந்து சேருகின்றன. தட்டை அலகு கொக்குகள், கரண்டி அலகு கொக்குகள் நத்தைகளையும், மஞ்சள் அலகு கொக்குகள் பெரிய மீன்களையும் கபளீகரம் செய்கின்றன.

புதியவர்கள் தண்ணீரில் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது இந்தப் பகுதியின் மற்ற குடிமக்களுக்கு இடம் மாறும் நேரம் வந்து விட்டிருக்கிறது. இப்போது தண்ணீரிலிருந்து தப்பிப்பதற்கான இடம் நகர்வு. எருமை மந்தைகள் தண்ணீரை முரட்டுத் தனமாக  கிழித்துக் கொண்டு நகர்கின்றன. நீல காட்டு ஆடுகள் அங்கோலாவின் காடுகளை நோக்கிய தமது 5 மாத பயணத்தை ஆரம்பிக்கின்றன. அனைவரும் பெருகி வரும் நீர் மட்டத்துடன் போட்டி போட்டுக் கொண்டு நகர வேண்டியிருக்கிறது. கலைமான்கள் உயர்ந்து வரும் வெள்ளத்தில் குதியாட்ட நீச்சல் போட்டுக் கொண்டு நகர்கின்றன. தொடர்ந்து உயர்ந்து வரும் சம்பீசி வேட்டைக்கார மிருகங்களையும், வேட்டையாடப்படும் மிருகங்களையும் அனைவரையும் வேறு இடம் பார்த்து போக வைக்கிறது.

ஏப்ரல் மாதம் நீர் மட்டம் உச்ச கட்டத்தை அடைகிறது. ஆறு 20 மைல் அகலத்துக்கு வெள்ளக் காடாக நகர்கிறது. இந்த வெள்ளப் பெருக்கு ஒரு இடத்தைக் கடந்து செல்ல வாரக் கணக்கில் நேரம் பிடிக்கிறது. லோசீ மக்களின் கிராமங்களில் தண்ணீர் தேங்க ஆரம்பிக்கிறது. பின்னர், வீடுகள் தண்ணீரில் மூழ்க ஆரம்பிக்கின்றன. ஆனால், இடம் பெயர்வதற்கான நாள் இன்னமும் வரவில்லை. அதற்கு லோசீ மன்னரின் உத்தரவு வர வேண்டும்.

zambezi-snap-25இதோ வந்து விட்டது, தூரத்தில் ஒலிக்கும் முரசு ஒலிதான் இடம் பெயருவதற்கான உத்தரவு. குவோம்போகா என்று அழைக்கப்படும், அதாவது தண்ணீரை விட்டு வெளியேறும் இந்த பெயர்ச்சி கொண்டாட்டமாக, பெரிய படகுகளில் நூற்றுக் கணக்கான பேர் துடுப்பு போட நடைபெறுகிறது. ஆடலும், பாடலுமாக படகுகள் தண்ணீரில் மிதக்கின்றன. மன்னரின் படகில் ஒரு பிரம்மாண்டமான யானை பொம்மை நிறுத்தப்பட்டிருக்கிறது, ராணியின் படகில் ஒரு கொக்கின் பொம்மை. ராஜ படகு ஒவ்வொன்றையும் நூற்றுக் கணக்கான பேர் துடுப்பு போடுகின்றனர். தண்ணீர் ததும்பி நிற்கும் புல்வெளியைத் தாண்டி பல மணி நேர பயணத்துக்குப் பிறகு தமது கோடைக் கால கிராமத்தை சென்றடைவார்கள் இந்த மக்கள். 6 மாதங்கள் அங்கு கழித்த பிறகு திரும்பும் இந்த சிரமத்துக்கு உற்ற பலன் கிடைக்கத்தான் செய்கிறது.

வெள்ளம் வடியும் போது, தான் அடித்து வந்த வண்டல் மண்ணை நிலத்தில் விட்டுச் செல்கிறது. வீடு திரும்பும் கிராம மக்கள் பயிரிடவும், கால்நடைகளை வளர்க்கவும் இந்த வண்டல் நிலத்தை செழிப்பாக்குகிறது. மற்ற எல்லா உயிரினங்களையும் போலவே இந்த மக்களின் வாழ்க்கையையும் ஆற்று வெள்ளத்தின் ஏற்றமும் இறக்கமும்தான் தீர்மானிக்கின்றன.

லோசீ மக்கள் விட்டுச் சென்ற கிராமத்திலோ நிலைமை முற்றிலும் அமைதியாக இல்லை. நூற்றுக் கணக்கான மீன்கள் நீரில் மூழ்கியிருக்கும் குடிசைகளுக்குள்ளும், முற்றங்களிலும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. வீட்டுச் சுவர்களில் முட்டையிடுகின்றன, இடுக்குகளில் பதுங்கிக் கொள்கின்றன. ஆனால், இந்த மீன்களை வேட்டை ஆடும் புலிமுக மீன்களும் மோப்பம் பிடித்து வந்து விடுகின்றன.

zambezi-snap-03தண்ணீர் ஆழத்தின் பாதுகாப்பிலிருந்து மேல் மட்டத்துக்கு வந்தால் இன்னும் ஒரு ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு இரை மிதக்கும் பகுதியில் மீன் பிடிக்கும் ராஜ மீன்கொத்தி இறங்குகிறது. மனதை கொள்ளை கொள்ளும் அழகான லாவகத்துடன் நீண்ட குறுகிய அலகை முன் வைத்து நீரினுள் மூழ்குகிறது மீன்கொத்தி. வெளியில் வரும் போது கொழுத்த மீன் ஒன்றை கவ்விக் கொண்டுள்ளது.

இப்போது நாம் பார்ப்பது சமவெளியின் தெற்கு முனையை அடைந்து விட்ட சம்பீசி ஆற்றை. தோன்றிய இடத்திலிருந்து 700 மைல் தூரத்தை தாண்டி வந்திருக்கிறது. இங்கு நதி கிழக்கு நோக்கித் திரும்பி டாங்கோ பீடபூமியின் பாறைகளை வெட்டிக் கொண்டு பாய்கிறது. தூரத்தில் ஏதோ மேக மூட்டம் போல தெரிகிறதே, என்னவாக இருக்கும்? 20 மைல் தூரத்திலிருந்து கூட மேகம் போல தெரியும் இது என்ன?

அதுதான் மோசி ஒவடூனியா (முழங்கும் புகை) எனப்படும் அருவி. விக்டோரியா நீர்வீழ்ச்சி என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. வெள்ளம் முழு வீச்சில் பாயும் போது இதுதான் உலகத்திலேயே மிக அகலமான அருவி, ஒரு நிமிடத்துக்கு 5 லட்சம் கனமீட்டர் தண்ணீர் வீழ்கிறது. அதாவது, இந்தப் பருவத்தில் இந்த அருவியிலிருந்து விழும் நீரை 5 நிமிடங்களுக்கு மட்டும் பிடித்தால் அது சென்னையில் அனைவருக்கும் ஒரு நாள் முழுவதற்கும் தாராளமான பயன்பாட்டிற்கு தண்ணீர் வழங்குவதற்கு போதுமானதாக இருக்கும். இந்த பருவத்தில் அருவியின் அகலம் 1 மைல் தூரம் வரை உள்ளது.

இந்த அருவியின் முகத்தில், சிதறும் நீர்த்துளிகளால் தனிச்சிறப்பான மழைக்காடு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போது பெரு வெள்ளம் வடிய ஆரம்பித்திருக்கிறது, அருவிக்கு வரும் நீர் வரத்து குறைந்திருக்கிறது. அருவியின் மலை முகட்டில் தண்ணீருக்கு நடுவே நீட்டிக் கொண்டிருக்கும் பாறைகளில் நின்று கொண்டு மீன் பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர் உள்ளூர் மீனவர்கள். கொஞ்சம் கால் தவறினாலும், 100 மீட்டர் ஆழத்திற்கு விழுந்து கீழே உள்ள பாறைகளில் எலும்புகளை நொறுக்கிக் கொள்ள வேண்டியதுதான்.

zambezi-snap-07இதற்குப் பிறகு, ஆறு சமவெளிப் பகுதியை தாண்டி புதிய உலகத்துக்குள் நுழைந்துள்ளது. பல லட்சக் கணக்கான ஆண்டுகளாக தண்ணீரின் ஓட்டத்தால் ஒவ்வொரு செனடிமீட்டராக வெட்டப்பட்டு உருவாக்கப்பட்ட பாறைகளுக்கு நடுவிலான பள்ளத்தாக்கில் 100 மீட்டர் அகலக் கால்வாயாக குறுக்கப்படுகிறது. சுமார் 1,600 மீட்டர் அகலத்திலிருந்து 100 மீட்டராக குறுகும் இந்த இடத்தில் நீரோட்டத்தின் வலு அதிகமாக உள்ளது.

இங்கிருந்து கடலில் போய் கலக்கும் கிழக்கு நோக்கிய தனது அடுத்த 100 மைல் தூர பயணத்தில் சம்பீசி வளைந்து நெளிந்து நகர்கிறது.

இந்த பள்ளத்தாக்குகளில் இருந்து வெளியேறும் இடத்தில் வேகம் மட்டுப்பட்டு 180 மைல் நீளமான கரீபா ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு மலை உச்சிகளாக இருந்த பகுதிகள் இப்போது தீவுத் திட்டுகளாக தண்ணீருக்கு மத்தியில் எட்டிப் பார்க்கின்றன. இந்த ஏரி, சம்பீசி ஆற்றில் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்துவதற்காக கட்டப்பட்ட கரீபா அணைத் திட்டத்துக்குப் பிறகு உருவானது. இந்த அணையில் அறுவடை செய்யப்படும் நீரின் இயக்க ஆற்றல் சாம்பியா, சிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு மின்சாரம் வழங்க பயன்படுத்தப்படுகிறது. 1959-ல் இந்த அணை கட்டப்பட்ட பிறகு கரீபா ஏரி நிறைவதற்கு 4 ஆண்டுகள் பிடித்தது.

60 ஆண்டுகளுக்கு முன்பு கரீபா ஏரி செயற்கையாக நிரப்பப்படும் போது அந்தப் பகுதியில் இருந்த காட்டு விலங்குகளை மீட்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டது. பெருகி வரும் தண்ணீரைக் கண்டு திகைத்து ஓடும் விலங்குகளை பாதுகாப்பான பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்காக வன விலங்கு ஆர்வலர்களும் நிபுணர்களுக் களமிறங்கினார்கள். யானைகள், காண்டாமிருகம் போன்ற பெரிய விலங்குகள் மயக்க ஊசி போடப்பட்டு படகுகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. சிறு விலங்குகள் வலைகளில் பிடிக்கப்பட்டு இடம் மாற்றப்பட்டன. ஆப்பரேஷன் நோவா என்று அழைக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் 6,000 விலங்குகள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இந்த அணை ஆற்றின் போக்கை முற்றிலுமாக மாற்றி விட்டது. கீழ் மடை பகுதிகளில் இது வரை இயற்கையாக பெருகிக் கொண்டிருந்த பருவ கால வெள்ளப் போக்கை, இப்போது அணையின் பொறியாளர்கள் கட்டுப்படுத்தி வெளியிடுகிறார்கள். ஆற்றில் நீரோட்டத்தை தொடர்ந்து பராமரித்து சிறு குட்டைகளில் நீர் நிரம்பும் படியும் ஆற்றோட்டத்தை பராமரிக்கிறார்கள். மழைக் காலங்களில் ஆற்று வெள்ளம் கரைகளைத் தாண்டி நீர் நிலைகளை உருவாக்குகிறது. இந்த குளங்களை விலங்குகள் மொய்க்கின்றன. காய்ந்து போயிருந்த நிலத்தில் இப்போது பசுமை கொழிக்கிறது.

zambezi-snap-10இந்த நீர் நிலைகளில் ஆகாயத் தாமரை களைச் செடியாக பரவியுள்ளது. 19-ம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவின் அமேசான் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த களைச் செடிகள் தண்ணீருக்குள் வெளிச்சமும் ஆக்சிஜன் புகுவதை தடுத்து உயிராற்றலை முடக்குகின்றன. ஆனால் நீர்யானைகளும், யானைகளும் அவற்றை சுவைத்து தாக்குகின்றன.

பபூன் குரங்குகளுக்கு தண்ணீரைக் கண்டாலே வெறுப்புதான். ஆனாலும், இந்த நீரில் கிடைக்கும் நத்தைகளை விருந்தாக சுவைப்பதற்கு தண்ணீரில் இறங்கியிருக்கின்றன.

தண்ணீர் வடிந்திருந்த போது தேனீ உண்ணும் பறவைகளை பிடித்து உயிர் வாழ்ந்திருந்த மீன் கழுகுகள் இப்போது மீன் பிடித்தலை ஆரம்பித்து விட்டன. அவற்றின் மீன் பிடித் திறன், மீன்களில் பயங்கரமான புலி மீன்களைக் கூட தன் கால்களில் கவ்விக் கொண்டு போக உதவுகிறது.

இந்த நீர் நிறைந்த நீர்நிலைகள் அனைத்து வகை விலங்குகளையும் காந்தம் போல இழுக்கின்றன. குரங்குகள், வரிக் குதிரைகள், மான்கள் கூடுகின்றன. புத்திசாலி வேட்டை மிருகங்கள் கரையோரம் காத்திருக்கின்றன, இந்த சிங்கத்தைப் போல. தண்ணீர் குடிக்க வந்த எருமைகளுக்கு ஏதோ சரியில்லை என்று உள்ளுணர்வு உணர்த்துகிறது. மந்தையை திரட்டிக் கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு ஓடுகின்றன. சிங்கம் தன் இரையை துரத்த ஆரம்பிக்கிறது.

zambezi-snap-13கரையில் பாதுகாப்பான இடத்துக்கு வந்து விட்ட எருமை மந்தை ஒன்றாகக் கூடி எருமைக் கன்றுகளை தமக்கு நடுவில் நிறுத்திக் கொள்கின்றது. எருமைகள் ஒரு சிங்கத்தைக் கூட கிழித்து சின்னாபின்னமாக்கி விடக் கூடியவை. ஆனால், இந்த முறை சிங்கம் இரையை கொல்ல முடியாத அவமானத்தோடு தப்பித்து விடுகிறது.

பல மாதங்கள் பெய்த மழைக்குப் பிறகு சம்பீசியின் குணம் மீண்டும் மாறுகிறது. இப்போது பெய்யும் கடைசி மழையில் அவ்வளவு பலம் இல்லை. சம்பீசியின் தாராள குணம் தீர்ந்து போய் கஞ்சத் தனம் திரும்புகிறது. யானைகள் மீண்டும் சிரமமான காலங்களுக்கு தயாராகிக் கொள்கின்றன.

இந்த முதிய ஃபிக் மரத்தைப் பாருங்கள். இந்த மரங்கள் ஆண்டின் எந்த பருவத்திலும் பூத்து காய்க்கக் கூடியவை. இந்த வறட்சி காலத்தில் காய்த்திருக்கின்றன. பறவைக் கூட்டங்களும், பபூன் குரங்கு குழுக்களும், மரத்தை மொய்க்கின்றன. கீழே விழும் பழங்களை சுவைக்க மான்கள் கூடியிருக்கின்றன.

வெப்ப நிலை அதிகமாகும் போது வாகை மரங்கள் தமது விதைப் பொதிகளை உதிர்க்கின்றன. அது யானைகளுக்கு மறுக்க முடியாத உணவாக மாறுகிறது. ஒரு பருவத்தில் ஒரு மரம் 300 கிலோ வரை காய் காய்க்கிறது. விலங்குகளுக்கு தன் பழத்தை உண்ணக் கொடுப்பதன் மூலம் விதைகளை பரவுவதற்கு மரத்தின் மிகச் சிறந்த உத்தி இது.

இந்தப் பருவத்தில் கிடைக்கும் பசுமையை வயிற்றில் அடைத்து பற்றாக்குறை காலத்தில் தாக்குப்பிடிப்பதற்காக தயாரித்துக் கொள்கின்றன. இந்த யானையைப் பாருங்கள், ஒட்டகச் சிவிங்கிகள் வசிக்காத இந்தப் பகுதியில் உயரத்தில் உள்ள மர இலைகளை மேய்வதற்கு சர்க்கஸ் வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. மண் திட்டுகளின் மீது ஏறி நின்று, பின்னங்காலில் நின்று முன்னங்காலை உயர்த்தி எட்டும் வரை கபளீகரம் செய்கிறது. ஆண் யானைகளின் எடை 5,000 கிலோ வரை இருக்கிறது. அந்த எடையை வைத்துக் கொண்டு செய்யும் சர்க்கஸ் வேலைகள் யானைகளின் முதுகெலும்பையும் கால்களையும் அழுத்துகின்றன. ஆனால், வறட்சி காலத்தில் தாக்குப் பிடிப்பதற்கு கடைசி பச்சையை காலி செய்வது அவசியமானது.

zambezi-snap-09குளங்கள் நிரம்பிய இந்தப் பகுதியைத் தாண்டி சம்பீசி ஆறு கிழக்கு நோக்கி பாய்ந்து மொசாம்பிக் நோக்கி நகர்கிறது. கடலுக்கு இன்னும் சில நூறு மைல் தொலைவே உள்ளது. ஆனால், இங்கு ஆற்றின் நீர் மட்டம் குறைய ஆரம்பிக்கிறது. பெரிய நீர்யானைகள் ஆழமான பகுதிகளிலும் குட்டி நீர் யானைகள் அவற்றிலிருந்து விலகி கரைப் பகுதிகளிலும் காலத்தை கழிக்கின்றன. குட்டி நீர் யானைகள் கரையோர முதலைகளை சீண்டிப் பார்த்து சிக்கலில் மாட்டிக் கொள்ளப் பார்க்கின்றன.

அதே நேரம் ஆழமான பகுதியில் பெரிய நீர் யானைகளுக்கிடையே போர் மேகம் சூழ்கிறது.  கூட்டத்தின் தாதா மற்ற ஆண் நீர்யானைகள் தனக்கு பணிந்து நடந்து கொள்வது வரை அவற்றை சகித்துக் கொள்கிறது. ஆனால், குறைந்த தண்ணீரின் நெருக்கடியில் டென்ஷன் அதிகமாகிறது. யாராவது திமிற ஆரம்பிக்க, இடித்து இடித்து அடுத்தடுத்தவர்களை தள்ளி சமநிலை சரி செய்யப்படுகிறது. இருந்தாலும் யார் பெருந்தலை என்று முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. தலை நீர்யானைக்கும் அதற்கு சவால் விடுக்கும் நீர்யானைக்கும் சண்டை தொடங்குகிறது. சண்டே பல மணி நேரம் கூட தொடரலாம். வெற்றி பெறுகிறவர் ஆற்றின் இந்தப் பகுதியின் ஆதிக்க சக்தியாக தொடருவார். பெண் நீர்யானைகளை ஏகபோகமாக சொந்தமாக்கிக் கொள்வார். சண்டை இருவரில் ஒருவர் உயிர் விடுவது வரை தொடர்கிறது.

zambezi-snap-18இன்னும் கொஞ்ச நாளைக்கு யானைகளுக்கு ஆற்றங்கரையோரத்திலேயே போதுமான உணவு கிடைக்கிறது. அதனால் ஆற்று நீரில் ஆட்டம் போடவும் நேரம் கிடைக்கிறது. சேற்றைப் பூசி வெயிலில் காயலாம். குட்டி யானைக்கு சேற்றில் இறங்கி பழக்கமில்லை. கால் புதைந்து சிக்கிக் கொண்ட குட்டியை அம்மா யானை துதிக்கையால் இழுத்து மேலே ஏற்றி விடுகிறது.

யானைகள் நீருக்குள் மூழ்கி நீண்ட துதிக்கையை மேலே நீட்டுவதன் மூலம் சுவாசித்துக் கொண்டு ஆற்றைக் கடக்கின்றன. யானைகள் நீருக்குள்ளே நகரும் போது ஆனந்த நடனம் புரிகின்றன. குளிரந்த நீரில் ஆடும் வரை ஆடிக் கொள்ள வேண்டியதுதான், சீக்கிரமே தண்ணீர் வற்றிப் போய் உணவுக்காக நாய் போல அலையும் வாழ்க்கை ஆரம்பித்து விடும்.

சம்பீசி ஆற்றின் 1,600 மைல் பயணத்தின் இறுதிக் கட்டம் வந்து விட்டது. மொசாம்பிக் நாட்டின் சமவெளிப் பகுதியில் சிறு சிறு கால்வாய்களாக இடைப்பட்ட நிலப்பரப்பில் வளமான வண்டல் மண்ணை பரப்புகிறது சம்பீசி. 60 ஆண்டுகளுக்கு முன்பு 8,000 சதுர மைல் ஆக  இருந்த இந்த டெல்டா பகுதி கரீபா அணையில் நீர் பிடிக்கப்பட்டு தேக்கப்படுவதைத் தொடர்ந்து 4,000 சதுர மைல் ஆக குறைந்துள்ளது. இருப்பினும், சம்பீசி ஆறு பெரும் அளவிலான நன்னீரை இந்தியப் பெருங்கடலுக்குள் கொண்டு கொட்டுகிறது.

ஆற்றின் பயணம் முடிந்து விட்டது என்றா சொன்னோம், இல்லை, இல்லை. தகிக்கும் சூரிய வெப்பம் கடலின் நீர்ப் பரப்பிலிருந்து நீர்த் துளிகளை உறிஞ்சி மேகமாக திரட்டுகிறது. இந்த மேகங்கள் பருவக் காற்றுகளால் மேற்கு நோக்கி உள் நாட்டுக்கு அடித்துச் செல்லப்படுகின்றன. 1,600 மைல் தூரத்தில் சாம்பியாவின் மலைப் பகுதிகளில் தாம் சுமந்து சென்ற நீர் சுமையை மழையாக பொழிகின்றன. இந்த முடிவற்ற நீர் சுழற்சியும், அதைச் சார்ந்த ஆயிரக் கணக்கான உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சியும் தொடர்ந்து முன் நகர்ந்து கொண்டே இருக்கின்றன.

தமிழாக்கம் : பண்பரசு

  1. நல்ல முயற்சி. வினவின் பன்முகத்தன்மை விரிவடைந்து செல்கிறது. இக்கட்டுரை ஒரு உதாரணம். அருமையான மொழிபெயர்ப்பு. பறவைகள், விலங்குகளின் பெயர்களை அவற்றிற்கான தமிழ்ப் பெயர்களுடன் கொடுத்துள்ளாரா மொழிபெயர்ப்பாளர் என்றூ தெரியவில்லை உதாரணத்திற்கு மாட்டுக் கொத்தி என்ற பறவைக்கு எதுவும் தமிழ்ப் பெயர் உள்ளதா தெரியவில்லை.

  2. இது போன்ற வீடியோக்கள் National Geographic (இப்போது NatGeo Wild வேறு தனியாக),Discovery தவிற BBC போன்ற சானல்களில் கொட்டிக் கிடக்கின்றன.

    அவற்றுக்குள்ளே எதாவது ரொம்பவும் வித்தியாசமாக, ருசிகரமாக இருந்தால் மறு பதிவு செய்யலாம்.

    என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் வினவிற்குத் தேவையில்லை.

    • தமிழ் வருணனைகளோடு இது போன்ற ஒளிப்பதிவுகள் இருக்கின்றனவா..?!

      இயற்கையின் கொடைகள், இயற்கை பொய்க்கும்போது அதைச் சார்ந்த எல்லா உயிர்களின் வாழ்க்கைப் போராட்டம், புவியியல்-சூழலியல் மற்றும் அவற்றை அழிக்காமல் பேண வேண்டிய அவசியம் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வு இக்காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒன்று.. நம்மாழ்வார் தமிழகத்தில் இதைச் செய்ய இந்த வயதிலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.. நாம் அனைவரும் நம்மால் இயன்ற வழிகளிலெல்லாம் இதைச் செய்யவேண்டும்.. கட்டுரையின் தமிழாக்கம் அருமை..

  3. Yes I too follow Mrs Siva’s words

    //என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் வினவிற்குத் தேவையில்லை.//

  4. Along with this geographical details of this revel ,,if we give the countries where it is running and politics of that country ,poverty then this essay is more meaningful one.

  5. வார்த்தைகளால் வருணிக்க முடியாத வருணனை இயற்க்கை அது எந்த காலத்தில் எது நடக்க வேண்டுமோ அத நயமாக நடத்துகுறது, மனிதம் அது புரியாமல் எதிர்நீச்சம் போட முடியாமல் சில சமயம் தடுமாறுகிறது, அந்த குறும்படதினை பார்த்தல் மட்டும் புரிந்து விடாது இதோ இந்த வருணனையை கையில் வைத்து கொண்டு பார்க்கவேண்டும் சூப்பர். நன்றி கட்டுறையாளருக்கு மனித நர வாடைக்கு மத்தியில் அழகிய ஓசையினை மெழிதாக பரப்பியதர்க்கு, இயற்க்கையின் செல்வங்கள், சில சமயம் மிகைக்கும்போது அதை பயன் தரும் வழியில் பயன்படுத்தியது போக அவைகளை தேவைக்கு அழிக்கும் போது சில இனங்கள் மண்ணில் இருந்தே அழிக்கபட்டு உள்ளது. மண்ணியம் காப்போம், இயற்க்கையினை அதன் வழி நடக்க அனுமதிப்போம்.

  6. This is one of your best posts. I am a great admirer of your outspoken thoughts,and courageous activism. Please write about eco systems once in a while, to enable readers to perceive the destruction we can avoid. Thank you.

Leave a Reply to Pattu பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க