privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ஆட்டோ ஓட்டுனர்கள் மீதான போலீசின் அடக்குமுறையை முறியடிப்போம் !

ஆட்டோ ஓட்டுனர்கள் மீதான போலீசின் அடக்குமுறையை முறியடிப்போம் !

-

ஆட்டோ ஓட்டுனர்கள் மீதான போலீசின் அடக்குமுறையை முறியடிப்போம்! தொழிலாளர்கள் – மாணவர்கள் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஆட்டோ தொழிலாளர்களே,

ஆட்டோ ஓட்டுனர்கள் நம் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பதை நாம் அறிவோம். அவசரமாக வெளியில் செல்ல வேண்டுமா? முக்கியமான வேலையா? நள்ளிரவா? உடனே ’’கூப்பிடு ஒரு ஆட்டோவை’’ என்கிறோம். சென்னை போன்ற பரந்து விரிந்திருக்கும் மாநகரத்தில் நாம் செல்ல வேண்டிய முகவரி தெரியவில்லையா? ஆட்டோக்காரர் உதவியோடுதான் கண்டுபிடிக்கிறோம். பிறப்பு, இறப்பு, மருத்துவம் பார்க்க, திருமணம், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப என நம் குடும்பத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உடனிருந்து உதவுபவர்கள் ஆட்டோக்காரர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இப்படிப்பட்ட ஆட்டோக்காரர்கள் கடந்த டிசம்பர் 30-ம் தேதி உரிமை கேட்டு போராடியதற்காக, கொலைவெறியுடன் தாக்கியுள்ளது பாசிச ஜெயா அரசின் போலீசு. இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்பதும், எதிர்த்து குரல்கொடுப்பதும் நம் அனைவரின் கடமை.

அரசு அடக்குமுறைகள்
ஆட்டோ ஓட்டுனர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றது அரசு.

சென்னையில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. அரசு 6 ஆண்டுகளாக ஆட்டோ கட்டணத்தை திருத்தியமைக்கவில்லை. ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடிக்க பெட்ரோல்,டீசல் விலையை விசம்போல் உயர்த்தி, ஆட்டோ ஓட்டுனர்கள் வயிற்றிலடித்து வந்தது அரசு. அப்போதும், ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களுக்குள் ஒரு நிலையான கட்டணத்தை முடிவு செய்து அதையே வசூலித்தும் வந்தனர். அப்போதெல்லாம் அவர்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க துப்பில்லாத அரசு, இப்போது ஆட்டோ ஒட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சுமத்துகிறது, ஆட்டோ ஓட்டுனர்களை கலந்து ஆலோசிக்காமல் புதிய மீட்டர், கட்டண நிர்ணயம், புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள், எஸ்.எம்.எஸ் மூலம் புகார் என புதுப், புது வடிவங்களில் கேள்வி கேட்பாரின்றி அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றது.

இந்த புதிய முறையை அறிவித்ததில் இருந்து ஆட்டோ ஓட்டுனர்கள் சொல்ல முடியாத துன்ப துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே ஆட்டோவைக் கண்ட இடத்திலேயே வழிமடக்கி மிரட்டி மாமுல் வசூலிக்கும் ட்ராபிக் போலீசுகாரர்களுக்கு சொல்ல வேண்டுமா என்ன? இப்போது இவர்களுடன் காக்கிச் சட்டை கிரிமினல்களும் சேர்ந்து கொண்டுள்ளனர். இந்த கிரிமினல் கும்பல் தற்போது மீட்டர் சோதனை என்ற பெயரில் பொய்வழக்குப் போட்டு பணத்தையும், ஆட்டோக்களையும் வழிப்பறி செய்கிறது.

ஒரு சில ஆட்டோக்காரர்கள்தான் தவறு செய்கிறார்கள் என்பது உண்மைதான். அதை நாம் நியாயப்படுத்த முடியாது. உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி கங்குலி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது நாடு முழுவதும் நாறுகிறது, ஆனால், ஒட்டுமொத்த நீதிபதிகளுமே இப்படிப்பட்டவர்கள்தான் என்று யாரும் சொல்வதில்லையே? தொழிலாளர்கள், மாணவர்கள் மீது மட்டும் ஒட்டுமொத்தமாக குற்றவாளிகளாக முத்திரைக் குத்த முயற்சிக்கிறார்கள். தவறு செய்யும் ஒரு சிலரை தவிர்த்து பார்த்தால், ஆபத்துக்கு உதவுபவன், பிரவத்திற்கு இலவசமாக வருபவன், மக்களின் நண்பன் என்றெல்லாம் மக்களோடு ஐக்கியப்பட்டுள்ள உழைக்கும் வர்க்கத்தினர் ஆட்டோக்காரர்கள். ஆனால், மக்கள் நலனுக்காகவே இந்த புதிய முறைகள் என்பதுபோல் காட்டி, ஆட்டோக்காரர்களை குற்றவாளிகளாக சித்திரித்து மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவும், மக்களுக்கும், ஆட்டோக்காரர்களுக்கும் இடையிலான ஐக்கியத்தை உடைக்கவுமான சதித்தனத்தில் ஈடுபட்டுள்ளது கிரிமினல்மயமான போலீசு.

ஆட்டோக்காரர்கள் வாழ்க்கை நமக்குத் தெரியாததா என்ன? நம் நாட்டில் திணிக்கப்பட்டுள்ள தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கையின் விளைவாக, கிராமங்களில் விவசாயம் அழிக்கப்பட்டு, கவுரவமான வாழ்வை இழந்து, நரகமாகிப் போயுள்ள சென்னைக்கு பிழைப்புத் தேடி வந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் செய்யும் தொழில் ஆட்டோ ஓட்டுவது. கல்லூரிக்கு போக முடியாதவர்களும், மெத்தப் படித்து வேலை கிடைக்காதவர்களும் வந்து சேரும் இடம் ஆட்டோ ஸ்டேண்ட்.

சிங்காரச் சென்னையின் மாடி வீடுகளுக்கு வாடகை கொடுக்க முடியாமல் துர்நாற்றம் வீசும் கூவம் ஓரங்களிலும், சேரிகள் என்று இந்த அரசால் அடிப்படை வசதிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளிலும், நெருக்கடி மிகுந்த வட சென்னையின் 8 க்கு 8 அறைகளிலும், சுகாதாரமான வாழ்க்கையின்றி, கொசுக்கடியில் தூக்கமின்றி உழலுபவர்கள்தான் ஆட்டோ ஓட்டுனர்கள். பெரும்பாலானோர் ஓட்டுவது வாடகை ஆட்டோ. சிலர் ராஜஸ்தான் மார்வாடிகளிடம் பர்மிட்டை அடகு வைத்து ஆட்டோ வாங்குவார்கள், மாதாந்திர தொகை கட்டமுடியாமல் போனால் மார்வாடி ஆட்டோவை பறிமுதல் செய்வான். அதை மீட்க இன்னொரு மார்வாடியிடம் அடகு என சுற்றி வரும் இவர்கள், சொந்த ஆட்டோ வைத்திருப்பதாக சொன்னாலும் அது அவர்களுக்கு சொந்தமில்லை.

ஷேர் ஆட்டோ, டாடா மேஜிக், கால் டேக்சி ஆகியவை நகரத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில், முன்பு போல் இப்போதெல்லாம் ஆட்டோ ஓடுவதில்லை. ’’வருமானம் இல்லை, சென்னைக்குள் வாழமுடியாது’’ என்று குடும்பத்தை புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்றிவிட்டு, இரவில் ஆட்டோ ஸ்டேண்டிலேயே படுத்து, கடைகளில் சாப்பிட்டு, வாரம் ஒரு நாள் வீட்டிற்கு சென்று வரும் ஆட்டோ ஓட்டுனர்களை நாம் பார்க்கவில்லையா? பிள்ளையை படிக்க வைக்க, மகளுக்கு திருமணம் செய்ய, மனைவிக்கு வைத்தியம் பார்க்க பகல், இரவு என ஓய்வு ஒழிச்சலின்றி ஆட்டோ ஓட்டும் நபர்களிடம் பேசியதில்லையா? படிக்க வேண்டும் என்ற ஆசையில் பகலில் கல்லூரிக்கும், படிப்பு மற்றும் குடும்ப செலவுக்காக இரவில் ஆட்டோ ஓட்டப் போகும் மாணவர்களை கேட்டுப் பாருங்கங்கள், அந்த கடுமையான உழைப்பை பல கதைகளாக சொல்வார்கள். இவர்கள் கடுமையாக உழைப்பது கோடீஸ்வரர்களாவதற்கல்ல, அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்காக. இப்படிபட்ட உழைப்பாளிகளைத் தான் குற்றவாளிகளாக சித்தரிக்கிறது, மக்கள் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் போலீசு.

கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஆட்டோ ஓட்டுனர்களிடம் சோதனையிடும் போலீசு, ஆம்னி பஸ்களின் பகிரங்கமான பகற்கொள்ளையை சோதிக்க முடியுமா? ஆட்டோக்களை பறிமுதல் செய்யும் இந்த யோக்கியர்கள், பயணிகள் சேவை என்று சொல்லிக் கொண்டு சரக்குகளை ஏற்றி கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகளை பறிமுதல் செய்வார்களா? முடியாது. அவர்கள் போலீசுக்கு மாத சம்பளமும், போனசும் கொடுக்கும் பெரும் முதலாளிகள். அதனால், அந்த முதலாளிகளுக்கு வாலைக் குழைக்கிறார்கள். 50, 100 யை மட்டுமே பிடுங்க முடியும் ஆட்டோக்காரர்கள் தொழிலாளிகள்தானே, இதனால் வெறிநாய்போல் கடித்து குதறுகிறார்கள்.

ஆட்டோக்காரர்கள் மீது புகார் தெரிவிக்க சிக்னலுக்கு சிக்னல் டிஜிட்டல் போர்டில் தொலைபேசி எண்ணாம், அதே சிகனல்களில் வாகனங்களை வழிமறித்து பணம் பறிக்கும், லாரி ட்ரைவர்கள் விட்டெரியும் காசைப் பொறுக்கித் தின்னும் போலீசார் மீது யாரிடம் புகார் செய்வது? அந்த காட்சிகளுடன் அவர்களை படம் பிடித்து சிக்னலுக்கு சிக்னல் தொங்கவிடுவது யார்?

ஆட்டோ ஓட்டுனர்கள்
போலீசு தொல்லையை எதிர்த்து புகார் செய்யும் ஆட்டோ ஓட்டுனர்கள்.

எஸ்.எம்.எஸ்-ல் புகார் செய்தாலே வழக்குப் போடும் உத்தமர்களாம் போலீசார். ஆட்டோக்காரர்களை தாக்கிய அதே நாளில், எஸ்பிலனேடு போலீசுக்காரர் பள்ளிகொண்ட பெருமாள் தன் மனைவிடம் இரவு வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு, சக பெண் காவலர் வீட்டில் கூத்தடித்து விட்டு, தப்பிக்கும் போது மாடியில் இருந்து விழுந்த செய்தி பகிரங்கமான பின்பும் அந்த அயோக்கியனை வேலையில் இருந்து தூக்கவில்லை, தலித் மக்களை பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு என்ற பெயரில் திட்டமிட்டு கொன்ற கொலைகார போலீசை சிறையிலடைக்கவில்லை. இப்படி லஞ்சம் ஊழலில் தொடங்கி போலி என்கவுண்டர், காவல் நிலைய கொலை என குற்றங்கள் மலிந்து கிடக்கும் இடம்தான் போலீசு நிலையம், அங்கு குற்றமற்றவர்களே இல்லை என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இவர்களை தண்டிப்பது யார்? பொய் வழக்குப் போட்டு பணம் பிடுங்கவும், தொழிலாளிகளை குற்றவாளிகளாக்கி சிறையிலடைக்கவும்தான் எஸ்.எம்.எஸ் மூலம் சதி வலை பின்னுகிறார்கள்.

இப்படிபட்ட ’உத்தமர்களுக்குத்’ தான் பாசிச ஜெயா அரசு, அவ்வப்போது சிறந்த ’காவலர்கள்’ பட்டமும், சன்மானமும் வழங்கி உசுப்பேற்றுகிறது. வானளாவிய அதிகாரங்களை வாரி வழங்கி போலீசு ராஜ்ஜியத்தை நிறுவத் துடிக்கிறது. இது மிகப் பெரிய ஆபத்து. ஏற்கனவே விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக போராடும் மக்களை ஒடுக்க குண்டாஸ் பாயும் என பீதியூட்டல், வாடகைதாரர்களின் விவரங்களை சேகரிக்க போலீசுக்கு அதிகாரம், பொது இடங்களில் கேமரா, மக்களை எப்போதும் வேவு பார்க்க ஆதார் அட்டை, எதிர்கால சந்ததிகளான மாணவர்களை திட்டமிட்டே ரவுடிகள், பொறுக்கிகள் என சித்தரிப்பது, பொய் வழக்குப் போட்டு சிறையிலடைப்பது, ரூட் கலாச்சாரம் ஆபத்தானது என ஊதிப்பெருக்கி மாணவர் ஒற்றுமையை சீர்குலைப்பது, கல்லூரிக்குள் உளவு போலீசையும், வெளியே காக்கிச் சட்டைகளையும் நிறுத்தி பீதியூட்டுவது, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், உதவியாளர்களை கங்காணிகளாக்குவது, எல்லாவற்றுக்கும் மேலாக, மாணவர்களையே மாணவ சமுதாயத்திற்கு எதிரான கைக்கூலிகளாக உருவாக்க ’ஸ்டூடன்ஸ் விங்’ எனும் அரைகாக்கிப்படை உருவாக்குவது என மாணவர்கள் மீதும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது.

  • இவை எல்லாவற்றுக்குமே இந்த அரசு ஒரு நியாயத்தை கற்பிப்பது போல, ஆட்டோ ஓட்டுனர்களை குற்றவாளிகளாக சித்தரிக்க ’கட்டண முறைகேடு’ என்று நியாயம் சொல்கிறது.
  • வானளாவிய அளவு சொத்து குவித்திருக்கும் தனியார் விமானங்கள் பயன்படுத்தும் விலை உயர்ந்த பெட்ரோலுக்கு மானியம் வழங்கும் அரசு, வறுமையில் வாடும் ஆட்டோ ஓட்டுனர்கள் மானியம் கேட்டால் மண்டையை உடைக்கிறது.
  • தனியார் பள்ளி – கல்லூரி முதலாளிகளின் மிரட்டலுக்கு அடிபனிந்து ஆயிரக்கணக்கில் கட்டணம் நிர்ணயம் செய்துகொடுப்பவர்கள், எரிபொருள் விலை உயர்வுக்கேற்ப கட்டணம் நிர்ணயக்கக் கோரிக்கை வைக்கும் ஆட்டோ ஓட்டுனர்களை கொலைவெறியுடன் தாக்குகிறார்கள்.
  • தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடினால் ஏளனம் செய்கிறார்கள்.

நவீன தொழில்நுட்ப கிரிமினல்மயமாக்கம்ஆட்டோ ஓட்டும் நண்பர்களே, ஒன்றை புரிந்துகொள்ளுங்கள், தொழிலாளி வர்க்கமாகிய நாம் லட்சக்கணக்கானவர்கள். நாம் நடத்துவது உரிமைக்கான போராட்டம். நாம் ஏன் ஓட வேண்டும். எதிர்த்து துணிவுடன் நிற்கவேண்டிய தருணமிது.

போலீசாரால் அடக்கப்படுவது நாம் மட்டுமல்ல, மாணவர்களும் நம்மைப் போன்றே போலீசாரால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களும் லட்சக்கணக்கானவர்கள்.

தொழிலாளர்கள், மாணவர்கள் ஒற்றுமையை கட்டியமைப்போம். உழைக்கும் மக்கள் ஆதரவைத் திரட்டுவோம்.

நம்மை குற்றவாளிகளாகவும், ரவுடிகளாகவும், பொறுக்கிகளாகவும் சித்தரித்து, நம் மீது இந்த அரசு நிறுவத்துடிக்கும் போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம்.

உரிமைக்காகப் போராடிய ஆட்டோ ஓட்டுனர்கள் மீது  காட்டுமிராண்டி போலீசு  கொலைவெறித் தாக்குதல்

தமிழக அரசே!

  • தாக்குதல் நடத்திய போலீஸ்காரர்களை கைது செய்
  • மீட்டர் சோதனை, எஸ்எம்எஸ் புகார் என்று ஆட்டோ ஓட்டுனர்களை குற்றவாளிகளாக்கி பொய் வழக்கு போடுவதை நிறுத்து

உழைக்கும் மக்களே

  • குற்றவாளிகள் ஆட்டோக்காரர்களல்ல
  • ஆட்டோவையும் பணத்தையும் பறிக்கும் போலீசுதான்
  • காக்கிச்சட்டை ரவுடிகளான போலீசு – மாணவர்களையும், தொழிலாளர்களையும் ரவுடிகள், பொறுக்கிகளாக சித்தரிப்பதை அனுமதியோம்

ஆட்டோ ஓட்டுனர்களே

  • உழைக்கும் மக்கள் மாணவர்கள், தொழிலாளர்கள், வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்போம்
  • போலீசின் ரவுடி ராஜ்ஜியத்தை முறியடிப்போம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
9445112675 – 9444834519