privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைராமன் இரட்டைக் கொலை வழக்கு - நாடகம்

ராமன் இரட்டைக் கொலை வழக்கு – நாடகம்

-

ஓரங்க நாடகம் : ராமன் இரட்டைக் கொலை வழக்கு

ராமன்

ராமாயணத்தின் கதாநாயகனான இராமனின் பல்வேறு கிரிமினல் குற்றங்களில் இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த ஓரங்க நாடகம் எழுதப்பட்டுள்ளது. பெரிய புராணத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் வரலாற்றையே ஒரு கிரிமினல் வழக்கு விசாரணையாக, விரிவாகவும் ஆழமாகவும், புராணப் புளுகுகளையும் தோலுரிக்கும் விதத்தில் எழுதினார் மலேசியப் பெரியார்.

ஆனால், இந்த் ஓரங்க நாடகம் மக்கள் மத்தியில் வீதிகளில் நடத்துவதற்காகச் சுருக்கமாக எழுதப்பட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்க்கு முன்னதாக அன்றைய காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எழுதப்பட்ட நூலை இன்றைய கிரிமினல் சட்டப் பார்வையில் விமர்சிப்பது எப்படி சரியாகும் என ‘ஆத்திக அன்பர்கள்’ பொருமலாம். அப்படிப்பட்ட பழைய குப்பையையே இன்றைய சமுதாயத்தின் ஒழுக்கத்துக்கு வழிகாட்டி என்றும், அதன் நாயகர்களை புனிதர்கள் என்றும், அந்த ராமனே “தேசிய நாயகன்” என்றும் பார்ப்பன, ‘மேல்’சாதிக் கூட்டம் சித்தரிக்கும் போது அந்த ராமனை ” தேசிய வில்லன்” என்று நாங்கள் நிரூபிப்பதில் என்ன தவறு? அதுவும் கற்பனையாக அல்ல; பார்ப்பனர்களால் போற்றிப் புகழப்படும் வால்மீகி ராமாயணத்தின் அடிப்படையில் !

____________________________

பாத்திரங்கள் : – நீதிபதி, பெஞ்ச் கிளார்க், அரசு தரப்பு வழக்குரைஞர், ராமனின் வழக்குரைஞர், டவாலி, ராமன், வசிட்டன், நாச்சி முத்து (சலவைத் தொழிலாளி), மின்னல் கொடி (சீதையின் சேடிப் பெண்)

(நீதிபதி தனது இருக்கையில் வந்து அமர்கிறார். பெஞ்சு கிளார்க் வழக்கு விவரங்களைப் படிக்கிறார்)

டவாலி : கோதண்டராமன் என்கிற ராஜாராமன் என்கிற சீதாராமன் என்கிற அயோத்தி ராமன் என்கிற ராமன்…. ராமன்….ராமன்!

(ராமன் உள்ளே நுழைந்து கூண்டில் ஏறி நிற்கிறான்)

பெஞ்சு கிளார்க் : உன் பேர் என்னப்பா?

ராமன் : என் திருப்பெயர் ராமன்.

பெ.கி : அப்ப பாக்கி பேரெல்லாம்?

ராமன் : எல்லாம் நானே

பெ.கி : என்னய்யா ஆரம்பத்திலேயே குழப்பமா இருக்குது. உனக்கு மொத்தம் எவ்வளவு பேரு?

ராமன் : ஆயிரம் நாமங்கள்.

பெ.கி :  (தலையிலடித்துக் கொள்கிறார்) சரி, ராமன்கிறது யாரு… நீதானே?

ராமன் : ஆம்

பெ.கி : சரி ஆள விடு.

அரசு வக்கீல் : யுவர் ஆனர், குற்றம் சாட்டப்பட்ட ராமன் வில் அம்பு போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் கோர்ட்டில் வந்து நிற்கிறார். ஏற்கனவே இவர் மீது இரட்டைக் கொலை வழக்கு இருக்கிறது. இவரை ஆயுதங்களுடன் கோர்ட்டுக்குள் அனுமதிப்பது சட்டத்திற்குப் புறம்பானது.

ராமனின் வக்கீல் : அப்ஜெக் ஷன் யுவர் ஆனர். இது என் கட்சிக்காரரின் உரிமையை பறிப்பதாகும். மேலும் இது எங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது.

அ.வ : கனம் நீதிபதி அவர்களே , இந்த ஆள் ஏற்கனவே இந்த ஆயுதங்களைக் கொண்டு இரண்டு கொலை செஞ்சிட்டான். ஊரெல்லாம் அலம்பல் பண்ணிக்கிட்டு திரியுறான். கோர்ட் இதை அனுமதித்தால் நமக்கே ஆபத்து.

நீதிபதி : அப்ஜெக்சன் ஓவர்ரூல்ட்

(டவாலியிடம் கண்ணைக் காட்டுகிறார்- டவாலி அம்பு வில்லை பிடுங்கப் போகிறார்- ராமன் திமிறுகிறான், நீதிபதி மீது அம்பெய்ய முயலுகிறான். டவாலி பாய்ந்து சென்று வில்லைப் பிடுங்கி அம்பையும் உருவுகிறார். வில்லை இழந்த ராமன் கூண்டில் துவண்டு சாய்கிறான்)

ரா.வ : யுவர் ஆனர் அந்த வில்லை மட்டுமாவது என் கட்சிக்காரருக்குக் கொடுக்க வேண்டுகிறேன். இல்லையென்றால் அவரால் நிற்கக்கூட முடியாது.

(வில்லை மட்டும் கொடுக்க நீதிபதி உத்தரவிடுகிறார். வில் கிடைத்தவுடனே ராமன் மீண்டும் ‘கம்பீரமாக’ நிமிர்ந்து நிற்கிறான்.

அ.வ : உன் பெயர் என்ன?

ராமன் : ராமன்

அ.வ : அப்பா பேரு?

ரா : தசரத சக்கரவர்த்தி

அ.வ : அம்மா பேரு?

ரா : கோசலை

அ.வ : அப்படீன்னா நீங்கதான் தசரதனுக்கும் கோசலைக்கும் பிறந்த ராமன்கிறவரா?

ரா : அப்படி சொல்ல முடியாது, என் தாயார் கோசலை…

அ.வ : என்னய்யா ஆரம்பத்திலேயே குழப்புற?

ரா : அதாவது… எனது தந்தை தசரத சக்கரவர்த்திக்கு 60,000 மனைவிமார்கள்; இருந்தும் அவருக்கு நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லை; ஆகையால் புத்திர காமோஷ்டி யாகம் என்று ஒரு யாகத்தை நடத்தினார். யாகம் முடிந்தவுடன் என்னுடைய தாயின் அந்தப்புரத்திற்கு ஒரு குதிரையை…

(வசிஷ்டர் “அபிஷ்டு… அபிஷ்டு…” என தலையில் அடித்துக் கொள்கிறார்.)

ரா.வ : அப்ஜெக் ஷன் யுவர் ஆனர்

(வெறி வந்ததைப் போல கத்துகிறார்)

சம்மந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு எனது கட்சிக்காரரை அரசு வக்கீல் குழப்புகிறார். இது எங்கள் மத உணர்வை புண்படுத்துகிறது.

நீதிபதி  : ஆர்டர்…ஆர்டர்.. அடுதத கேள்விக்குப் போங்க

அ.வ : சரி நேரா விசயத்துக்கு வரேன். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் ஏதாவது மனஸ்தாபம், சண்டைகள் உண்டா?

ரா : (வில்லன் சிரிப்பு சிரிக்கிறார்) என்ன ஒரு கேள்வி கேட்டு விட்டீர்கள். எங்கள் திருமணம் காதல் திருமணமய்யா. உங்கள் கம்பனைக் கேட்டுப் பாருங்களேன்.  “அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்”.

அ.வ : அதெல்லாம் தெரியும்யா..சம்பவத்தன்று என்ன நடந்தது அதச்சொல்லு.

ரா : சம்பவ தினத்தன்று அதிகாலையில்…நான் அம்சதூளிகா மஞ்சத்திலே சயனித்திருந்த போது…

அ.வ : யோவ்….. விஷயத்துக்கு வாய்யா!

ரா : நான் அரசவையில் அமர்ந்திருந்து நடன மங்கையரின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப்புரத்தில் திடீரென்று ஒரு சத்தம். நான் ஓடினேன் அந்தப்புரத்திற்கு அங்கே…… அங்கே… அங்கே..

அ.வ : அங்கே என்னய்யா

ரா: அங்கே பூமி பிளந்திருந்தது. எனது சீதா தேவி பூமித்தாயின் கருப்பைக்கே சென்று கொண்டிருந்தாள்.

அ.வ : அப்போ அந்தபுரத்தில் வேறு யார் இருந்தாங்க?

ரா : யாருமே இல்லை

அ.வ : அப்படின்னா… சம்பவத்தை கண்ணால் பார்த்த வேற சாட்சிகளே இல்லையா?

ரா : ஆம்

அ.வ : சத்தம் கேட்டு அந்தப்புரத்துக்கு போனீங்க உங்கள் மனைவி பூமிக்குள் தான் போனாங்கன்னு எப்படி நிச்சயமா சொல்றீங்க?

ரா : நான் தான் அவள் பூமிக்குள் போய்க் கொண்டிருப்பதை என் கண்ணால் பார்த்தேனே..

அ.வ : என்ன சார்…. லவ் பண்ணி கல்யாணம் பண்ணினதா சொன்னீங்க. நீங்க காப்பாத்த முயற்சிக்கலையா?

ரா : அவள் விதி முடிந்து விட்டது. நாம் என்ன செய்ய முடியும்?

அ.வ : சரி நீங்க போகலாம். நான் கூப்பிடும் போது வரணும்.

ரா: எமது அஸ்திரங்களை கொடுத்தீர்களானால்….

டவாலி : என்னாது…. அஸ்திரமா? போய்யா அதெல்லாம் கேஸ் முடிஞ்ச பின்னாலதான்.

2

டவாலி : மின்னல் கொடி…மின்னல் கொடி…. மின்னல் கொடி

(மின்னல்கொடி கூண்டில் ஏறி நிற்கிறாள்)

அ.வ : உன் பேரென்னம்மா?

மி.கொ : மின்னல்கொடிங்கய்யா

அ.வ : சீதையை உனக்கு எத்தனை நாளா பழக்கம்?

மி.கொ : ரொம்ப சின்ன புள்ளயிலிருந்தே பழக்கங்கய்யா

அ.வ : அப்படின்னா நீ அயோத்திக்கு எப்படிம்மா வந்தே?

மி.கொ : இந்த ஆளுக்கு கட்டி கொடுத்தப்ப, சீரு செனத்தியோட என்னையும் சேத்து அனுப்பிட்டாங்கையா.

அ.வ : அப்படின்னா நீ சீதைக்கு ரொம்ப நெருக்கம்னு சொல்லு.

மி.கொ : ஆமாங்கய்யா, எந்த விசயத்தையும் அம்மா எங்கிட்ட மறைச்சதே இல்ல.

அ.வ : சம்பவ தினத்தன்னைக்கு என்ன நடந்துச்சு?

மி.கொ : அது ஏங்க, இந்த ஆளு அந்த அம்மாவ என்னைக்கி ராவணங்கிட்டயிருந்து கூட்டிட்டு வந்தானோ அன்னையிலிருந்து ஒரே ராவடி தாங்கய்யா.

அ.வ : என்ன தகராறு?

மி.கொ : வேறென்ன? சந்தேகந்தான். ஆசையோட வாழ வந்த பொண்ண வீட்டுல வச்சி பாக்கலய்யா இவன், நெருப்புல இறக்கி பாத்தான்யா.

அ.வ : நெருப்புலயா…. என்னாச்சி?

மி.கொ : என்னா ஆச்சி….வெந்து போச்சி.

அ.வ : நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். நீ சொல்லும்மா.

மி.கொ : அன்னையிலிருந்து அந்தம்மாவக் கண்டாலே இவனுக்கு ஆவல, தென…ம் சண்டை.

அ.வ : சம்பவ தினத்தன்னைக்கு என்ன நடந்துச்சி? அதச் சொல்லு.

மி.கொ : அட… வழக்கமான வம்புதாங்க. அன்னக்கு மத்தியானம் இந்த ஆளு சோறு திங்க வந்தாரு. எவனோ வழி மேல போறவன் அம்மாவ பத்தி தப்பு தண்டாவா ஏதோ பேசிட்டு போனானாம். இந்த ஆளுக்கு ரோசம் பொத்துகிட்டு வந்துடுச்சாம். ஒரே சண்டை.

அ.வ : என்ன சண்டை?

மி.கொ : இந்த ஆளு பேசினதெல்லாம் நாலு சனம் இருக்கிற சபையில் சொல்ல முடியுங்களா?

அ.வ : சரி அந்த அம்மா என்ன சொல்லிச்சு? அதையாவது சொல்லு

மி.கொ : நான் அங்க நிக்கலீங்க. ஆனா கேட்டிச்சி நாக்கு புடுங்கிக்கிற மாதிரி கேட்டிச்சு.

அ.வ : அப்புறம்

மி.கொ : அவ்வளவு தாங்க. அப்பத்தான் அந்தம்மாவை கடைசியா நான் பாத்தது.

அ.வ : ஏதாவது வெடிச்சத்தம் மாதிரி கேட்டிச்சா?

மி.கொ : வெடிச்சத்தமும் கேக்கலை. இடிச்சத்தமும் கேக்கல. இந்தாளு அந்தம்மாவைப் போட்டு அடிச்ச சத்தம்தான் கேட்டிச்சு.

அ.வ : சரி நீ போம்மா. தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.

3

டவாலி : நாச்சிமுத்து…நாச்சிமுத்து..நாச்சிமுத்து

(நாச்சிமுத்து கூண்டில் ஏறி நிற்கிறார்)

அ.வ : உம் பேரென்னப்பா?

நா.மு : நாச்சிமுத்து

அ.வ : உங்கப்பா பேரு?

நா.மு : வீரையன்

அ.வ : சொந்த ஊரு?

நா.மு : நம்ம பரம்பரையா அயோத்திதாங்க.

அ.வ : தொழில்?

நா.மு: சலவை தொழிலாளிங்க. பரம்பரையா அரண்மனை சேவகம் செய்யுறமுங்க.

அ.வ : சரி கேக்குற கேள்விக்கு கரெக்டா பதில் சொல்லணும்.

நா.மு: சரிங்கய்யா

அ.வ : ஆத்தங்கரையில் வச்சி ராணியம்மாவைப் பத்தி நீ ஏதோ தாறுமாறா பேசுனியாமே?

நா.மு : அய்யய்யே… அப்படியெல்லாம் எதுவும் பேசலீங்க.

அ.வ : அப்படின்னா…. வேற என்ன பேசின?

நா.மு: நான் சொன்னது இதுதாங்க. நீ போயி சண்ட கிண்ட போட்டு அந்தம்மாவ கூட்டியாந்த. கூட்டியாந்தவன் ஒழுங்கு மரியாதையா வச்சி வாழ வேண்டியதுதானே.. அத வுட்டுட்டு நெருப்புல எறக்குனா அது என்னா நியாயம் -அப்படி சந்தேகப்பட்டவன் அவன்கிட்டயே வுட்டுட்டு வந்திருக்க வேண்டியதுதானே. இதத்தான்யா நான் சொன்னேன். கதையையே மாத்திட்டானுங்கய்யா

அ.வ : நீ பேசும் போது அங்க யாராவது இருந்தாங்களா?

நா.மு: சாமி சத்தியமா என் பொண்டாட்டியத் தவிர வேற யாரும் கெடயாதுங்க. அரண்மனை விசயத்தை நாலு பேர வச்சிகிட்டுப் பேசமுடியுங்களா?

4

டவாலி: வசிட்டர்…. வசிட்டர்….வசிட்டர்

(வசிட்டர் கூண்டுக்கு வந்து நிற்கிறார். டவாலி வசிட்டரைத் தொடுவது போல் அருகில் போக வசிட்டர் தொடாதே…தொடாதே என்று தள்ளுகிறார்)

அ.வ : உங்க பேரு என்ன பெரியவரே?

வசிஷ்: வசிஷ்டர்

அ.வ: ஊரு

வசி: யாதும் ஊரே…யாவரும் கேளீர்

அ.வ : கிழிஞ்சுது போ. சரி உங்க அப்பாரு பேரு?

வசி: ஈரேழு பதினாலு லோகங்களையும் எட்டு திசைகளையும், சூரிய சந்திரர்களையும் எவன் படைத்தானோ அவனே என் அப்பன்.

அ.வ : யோவ், இது கோர்ட்டா என்ன? கேக்குறதுக்கு ஒழுங்கு மரியாதையா பதில் சொல்லனும். சரி.. உன் தொழில் என்ன?

வசி : ராஜகுரு

அ.வ : எந்த ராஜாவுக்கு குரு?

வசி: சூரிய வம்சத்தின் ஏழேழு பரம்பரைக்கும் நான தான் குரு!

அ.வ : ஏழு பரம்பரைக்கும் நீதான் குருவா…சரி உன் வயதென்ன?

வசி: கடலின் ஆழமென்ன?

(ராமன் தரப்பு வக்கீல் ஹா…. ஹா.. என சிரிக்கிறார்.)

நீதிபதி: (முறைத்துப் பார்த்துவிட்டு) யோவ் பெரியவரே.. கேக்குற கேள்விக்கு நேரடியா பதில் சொல்லு.

அ.வ : ராமனை உமக்கு தெரியுமா?

வசி: தெரியுமாவா? இதோ இந்தத் தோளில் தூக்கி வளர்த்தவனய்யா நான்.

அ.வ : சம்பூகனை தெரியுமா?

வசி: கேள்விப்பட்டிருக்கிறேன்.

அ.வ : உங்களுக்கு சம்பூகனுக்கும் ஏதாச்சும் முன் விரோதம் உண்டா?

வசி : முன்விரோதமாவது பின்விரோதமாவது, அவன் ஒரு தேச விரோதி.

அ.வ : தேச விரோதியா? என்னய்யா பண்ணினான்?

வசி: அவன் ஒரு சூத்திரன். பிராமணர்களுக்கு போட்டியாக தவம் செய்ய முயற்சி செய்த சூத்திரன்.

அ.வ : அது உங்களுக்கு எப்படி தெரியும்?

வசி: அயோத்தி நகர் பிராமணர்கள் என்னிடம் முறையிட்டார்கள். அதை விசாரித்து உரிய தண்டனை கொடுக்கும்படி நான்தான் ராமனுக்கு உத்தரவிட்டேன்.

அ.வ : அப்போ நீங்கதான் கொலை செய்யத் தூண்டினீங்க அப்படித்தானே?

வசி : கொலையா? தருமத்தின்படி எதை செய்ய வேண்டுமோ அதை நான் செய்தேன். சூத்திரன் என்பவன் அடிமை வேலை செய்யப் பிறந்தவன். பிராமணனுக்கும், சத்திரியனுக்கும், வைசியனுக்கும் தொண்டு செய்வதுதான் அவன் குலத்தின் கடமை. அதை அவன் மீறினான்

அ.வ : என்னய்யா செஞ்சான்? அதச் சொல்லு

வசி: பிராமணர்களுக்கு போட்டியாக தவம் செய்தான். இது சட்ட விரோதம். சூத்திரன் வேதத்தை காதால் கேட்டாலே காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று நம் சனாதன தர்மம் சொல்கிறது. ஏன்?..சூத்திரன் சுடுகாட்டுக்குச் சமம் என்று ஆதிசங்கரரே சொல்லியிருக்கிறாரே

அ.வ : நீதான் கொலை செய்யத் தூண்டினதா மறுபடியும் ஒத்துக்கிற.

வசி : இது கொலையென்றால் இதுபோல ஆயிரக்கணக்கில் நாங்கள் செய்திருக்கிறோம். இதையெல்லாம் நீங்கள் விசாரித்து தீர்ப்பு சொல்லிவிட முடியுமா?

– ஏகலைவன் கேஸை விசாரித்தீர்களா?

– நந்தனார் கதையென்ன – எங்களுக்கு தெரியாததா?

– அவ்வளவு தூரம் ஏன்? உங்கள் வெண்மணியில் நீங்கள் செய்தது என்ன?

மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பாதீர்கள். சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் ராமன் செய்தான்.

அ.வ : அப்போ… ராமன் தான் இந்த கொலையை செஞ்சானு சொல்றீங்க

வசி : கொலை…கொலை…கொலை. இந்த கெட்டவார்த்தையைக் கேட்டு என் காதுகள புண்ணாகி விட்டன. சனாதன தர்மப்படி என்ன செய்ய வேண்டுமோ ஹிந்து தர்மப்படி என்ன் செய்ய வேண்டுமோ அதைத்தான் அவன் செய்தான்

அ.வ : நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்

– சரி நீங்க போகலாம்.

5

டவாலி : ராமன்…ராமன்….ராமன்

(ராமன் கூண்டில் வந்து நிற்கிறான்)

அ.வ : கனம் நீதிபதி அவர்களே! இந்த ரெட்டைக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சீதாராமன், கோதண்டராமன், ராஜாராமன், அயோத்திராமன் என்ற பல்வேறு பெயர்களில் உலவி வருகின்ற ராமன் என்கிற இந்த நபருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ததின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவன் தன் மனைவி சீதையை ஏமாற்றி தீ வைத்து கொளுத்தியிருக்கிறான். அவள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறாள். அதன்பின் அவளைக் கொலை செய்து புதைத்து இருக்கிறான். தடயங்களை அழிக்க முயற்சியெடுத்து இருக்கிறான். சாட்சிகளை மிரட்டியிருக்கிறான்.

ஒரு பாவமும் அறியாத சம்பூகன் என்ற தொழிலாளியை எவ்வித நியாயமான முகாந்திரமில்லாமல் திடீரென்று தாக்கி கொலை செய்திருக்கிறான். இந்தக் கொலைக்கு ‘ராஜகுரு’ என்று சொல்லப்படுகிற வசிஷ்டர் உடந்தையாகவும் தூண்டி விடுபவராகவும் இருந்துள்ளார்.

ஏற்கனவே, இந்தியாவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு புனைப்பெயர்களில் தசாவதாரம் என்கிற பெயரில் போர்ஜரி, ஆள்மாறாட்டம், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, சதி, கற்பழிப்பு போன்ற கொடிய கிரிமினல் குற்றங்களுக்காக இவன் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக விசாரணை நடத்தப்படாமல் உள்ளது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டும் இத்தகைய கிரிமினல் பேர்வழி இனிமேலும் வெளியில் நடமாடுவது சமுதாயத்திற்கே ஆபத்து என்கிற உண்மையை கணக்கில் கொண்டும், இவனுக்கு உரிய தண்டனை அளிக்கக் கோருகிறேன்.

குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர் இந்த நீதிமன்றத்தின் கருணைக்கும், இரக்கத்திற்கும் எள்ளளவும் தகுதியில்லாதவன் என்பதால் இவனுக்கு மிக அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நீதிபதி: என்னப்பா… இது சம்பந்தமா நீ ஏதாவது சொல்ல விரும்புறியா?

ரா: ஹா….ஹா…..ஹா…(சிரிக்கிறான்)

அ.வ : யோவ் என்னய்யா சிரிக்கிற. அய்யா கேட்கிறாரு ஒழுங்கா பதில் சொல்லு

ரா: யதா யதாஹி தர்மஸ்ய

நீதிபதி : என்னப்பா நான் இவவளவு சீரியசா கேட்டுக்கிட்டிருக்கேன். நீ என்னமோ உளர்றே, புரியுற மாதிரி சொல்லுய்யா

ரா: புரிந்தது…புரியாதது…தெரிந்தது..தெரியாதது எல்லாம எமக்குத்தான் . ராம் ராஜ்யத்தில் ராமன் மீதே விசாரணையா?

என் வீர பராக்கிரமங்களைப் பற்றி வால்மீகியிடம் கேட்டுப்பார்!

என் ஒழுக்கத்தைப்பற்றி கம்பனிடம் கேட்டுப்பார்!

என் காதல் லீலைகளைப்பற்றி துளசிதாசனிடம் கேட்டுப்பார்!

அ.வ : யோவ் நீ என்னய்யா சொல்ற… அத சொல்லு

ரா: மானிடப் பதரே! சூத்திர நாயே….! அற்பனே! யாரைப் பார்த்து நீ என்கிறாய்.

எங்கே என் கோதண்டம்…வாலியின் உயிர் பறித்த என் அஸ்திரங்கள் எங்கே? ராவணனின் சிரம் சாய்த்த எனது அம்புகள எங்கே…எங்கே…

நீதிபதி: ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்டு

(ராமன் இழுத்து செல்லப்படுகிறான்)

6

தொலைக்காட்சி அறிவிப்பு

ஒரு முக்கிய அறிவிப்பு :-

இரட்டைக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமன் என்கிற வாலிபர், நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் காவலிலிருந்து தப்பி விட்டார்.

அடையாளங்கள்

வயது : தெரியவில்லை. ஆனால் இளமையான தோற்றம்

நிறம் : பச்சை

போலீசாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வரும் இந்த நபர் கையில் வில், அம்பு போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் நடமாடிக் கொண்டிருக்கிறார். தற்போது தலைமறைவாக இருக்கும் இந்த நபர் தனக்கு ஆதரவாக தனது கூட்டாளிகளைத் தூண்டி விட்டு நாட்டில் கலவரத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வதாகவும் கடைசியாக வந்த தகவல்கள் கூறுகின்றன.

இந்த நபரை எங்கேனும் காண நேர்ந்தால் உடனே நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :- செயலர்,மக்கள் கலை இலக்கிய கழகம், தமிழ்நாடு.

– மருதையன்
______________________________________________
புதிய கலாச்சாரம் – டிசம்பர் 1992
______________________________________________