privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஆதர்ஷ் : தியாகிகளின் பெயரில் பாவிகள் சுருட்டிய வீடுகள் !

ஆதர்ஷ் : தியாகிகளின் பெயரில் பாவிகள் சுருட்டிய வீடுகள் !

-

மும்பையிலிருந்து சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்திரபூர் மாவட்டத்தில் வசிப்பவர் சுரேஷ் குலாப்ராவ் ஆத்ராம். 42 வயதான ஆத்ராம் வேலை கிடைக்கும் நாட்களில் ஒரு நாளைக்கு ரூ 100 வரை சம்பாதிக்கிறார்.

ஆத்ராம்
“குடும்பத்துக்கு மூணு வேளை சோறு போடறதே திண்டாட்டமா இருக்கிற, எனக்கு எங்கய்யா இது மாதிரி வீடெல்லாம்”

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பத்திரிகையாளர் ஒருவர், மும்பையின் கொலாபா பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ரூ 78 லட்சம் மதிப்புள்ள வீடு அவரது பெயரில் உள்ளது என்று கூறி அது பற்றிய மேல் விபரங்கள் கேட்டிருக்கிறார். “குடும்பத்துக்கு மூணு வேளை சோறு போடறதே திண்டாட்டமா இருக்கிற, எனக்கு எங்கய்யா இது மாதிரி வீடெல்லாம்.” என்று சொல்லியிருக்கிறார் ஆத்ராம்.

உண்மையில் அப்போது கொலாபாவில் கட்டி முடிக்கப்பட்டிருந்த ஆதர்ஷ் கூட்டுறவு அடுக்குமாடி குடியிருப்பின் வீட்டு சொந்தக்காரர்கள் பட்டியலில் 86-வதாக ஆத்ராமின் பெயர் இருந்தது. ஆத்ராம் வேலைக்குப் போகும் எஸ்.எம்.எஸ் என்ற உள்ளூர் நிறுவனத்தின் நிறுவனத்தின் இயக்குனர் அபய் சஞ்சேதி, பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்ய சபை உறுப்பினர் அஜய் சஞ்சேதியின் சகோதரர். அஜய் சஞ்சேதி பாஜக தலைவர்களுள் ஒருவரான நிதின் கட்காரிக்கு நெருக்கமானவர்.

ஆதர்ஷ் கட்டிடத்தில் வீடு வாங்குவதற்கு ஆத்ராமுக்கு ரூ 59.5 லட்சம் கடனை அபய் சஞ்சேதியின் நிதி நிறுவனமே கொடுத்திருப்பதாக காட்டியிருக்கிறார்கள். இது போல, ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் சட்ட விரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 22 வீடுகளில் 8 இந்த கும்பலால் ஆத்ராம் போன்ற தமது கடைநிலை ஊழியர்களின் பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது.

இது போல அப்போது சிவசேனை கட்சியின் மாநில மேலவை உறுப்பினராக  இருந்த கன்னையாலால் கித்வானி வெவ்வேறு பெயர்களில் 10 வீடுகளை வாங்கியிருக்கிறார். இந்த 10 வீடுகளில் மூன்றை நேரடியாக அவரும் அவரது மகன்களும், நான்கை கட்டிடத்துக்கு தேவையான பல்வேறு அனுமதிகளை வழங்கிய மாநில அரசின் உயர் அதிகாரிகள் பெயரிலும் இரண்டை முன்னணி அரசியல்வாதிகளின் பெயரிலும் வாங்க ஏற்பாடு செய்திருக்கிறார் கன்னையாலால் கித்வானி.

அஜய் சஞ்சேதி
சட்ட விரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 22 வீடுகளில் 8 அஜய் சஞ்சேதி கும்பலால் வாங்கப்பட்டிருக்கிறது.

“ஏன், நான் வீடு வாங்கினால் என்ன தப்பு? நீங்கெல்லாம் வீடு வாங்கறதே இல்லையா?” என்று ஆதர்ஷ் கட்டிடத்தில் சட்ட விரோதமாக வீடு வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற மகாராஷ்டிரா ஐஏஎஸ் அதிகாரி உத்தம் கோப்ரகடே சொல்லியிருக்கிறார். ஒருவர் வீடு வாங்குவது கிரிமினல் குற்றமா? முகேஷ் அம்பானி போன்றவர்கள் ரூ 5,000 கோடி மதிப்பிலான 27 மாடிகள் கொண்ட வீடு கட்டிக் கொள்ளும் போது ஒரு அரசு அதிகாரி தனக்காக ஒரு வீடு வாங்கிக் கொள்வதில் என்ன பிரச்சனை என்று பொருமுகிறார்கள் இந்த அதிகார முதலைகள்.

ஆதர்ஷ் கூட்டுறவு அடுக்குமாடி குடியிருப்பின் கதை சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு 2000-ம் ஆண்டில் ஆரம்பிக்கிறது. பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டிகளின் மூலம் பராமரித்து வளர்க்கப்பட்ட இந்திய தேசபக்தி, நேரடியாக நடந்த கார்கில் போர் மூலம் தீவிரமடைந்திருந்த நேரம். மும்பை பகுதி பாதுகாப்புத் துறை சொத்து பராமரிப்பு பிரிவு அலுவலர் ராமச்சந்திர சோனேலால் தாக்கூர், கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக ஆதர்ஷ் திட்டத்தை வகுத்தார்.

இரண்டு அறை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு வீடு (ஃபிளாட்) ஒன்று ரூ 2 கோடி வரை விலை போகும் மும்பையின் கொலாபா பகுதியில் கார்கில் தியாகிகளின் குடும்பங்களுக்காக வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்துக்கு அனுமதி கோரி அப்போதைய மகாராஷ்டிரா முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு கடிதம் எழுதுகிறார் அவர். அந்த கடிதத்தில் உலகிலேயே விலை உயர்ந்த நிலப்பரப்பைக் கொண்ட இந்த கடற்கரையில் கடலை நிரப்பி நிலமாக்கிய 3,854 சதுரமீட்டர் (சுமார் 41,000 சதுர அடி) நிலத்தை சலுகை விலையில் ஒதுக்கும்படி வேண்டுகிறார்.

இந்த நிலம் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிடுகிறார். இந்த நிலத்தில் குடியிருப்பு கட்டிடம் கட்ட அனுமதி பெற்று 40 முன்னாள் இராணுவத்தினருக்கு வீடு கட்டித் தர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கிறார். மும்பை மாநகரத்தின் வளர்ச்சித் திட்டத்தின்படி, இந்த நிலத்தை ஒட்டிய சாலையை 60 அடி சாலையாக மாற்றும் திட்டம் இருந்தாலும், ஏற்கனவே பகீரதி, கங்கோத்ரி என்ற இரண்டு கடற்படை குடியிருப்புகள் கட்டப்பட்டு விட்டிருப்பதால், இந்த சாலை அமைப்பது சாத்தியமில்லை. எனவே இந்த சாலை அமைக்கும் திட்டத்தை மும்பை வளர்ச்சித் திட்டத்திலிருந்து நீக்கி விட்டு ஆதர்ஷ் குடியிருப்பு கட்டிடத்துக்கு அனுமதி அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறார்.

ஆதர்ஷ் நிலம்
ஆதர்ஷ் சங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலம்.

முன்னாள் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு, குறிப்பாக கார்கில் தியாகிகளின் குடும்பத்துக்கு இந்தியாவின் விலை உயர்ந்த கடற்கரை பகுதியில் சலுகை விலையில் வீடு கட்டிக் கொடுக்கும் தன்னுடைய உத்தேசத்துக்கு மேலும் வலு சேர்ப்பதற்காக, நாட்டின் பாதுகாப்புக்காக தொலை தூரங்களில் பணி புரியும் இராணுவ அதிகாரிகளின் பெண் குழந்தைகள் தங்கி படிப்பதற்காக ஒரு பெண்கள் விடுதி கட்டுவதற்கும் இடம் ஒதுக்கப் போவதாக தெரிவிக்கிறார். இதை கருத்தில் கொண்டு விதிகளுக்கு விலக்கும், சட்டங்களுக்கு விடுமுறையும் கொடுக்க வேண்டும் என்று பணிவாக முன் வைக்கிறார்.

ரூ 2 கோடி சந்தை விலை போகும் வீடுகளை சுமார் 60 லட்சம் விலையில் இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்குவது என்பது அவர் திட்டம். அதாவது, சலுகை விலை வீட்டை வாங்கும் ஒவ்வொருவருக்கும் ரூ 1 கோடிக்கு மேல் ஆதாயம் கிடைக்கும்.

இப்படி செத்துப் போன இராணுவ வீரர்களின் பெயரில் நடந்த அப்பட்டமான மோசடியில் ஆட்டையைப் போட்டவர்களில் இருவர்தான் மேலே சொன்ன அஜய் சஞ்சேதியும் கன்னையாலால் கித்வானியும்.

1940-கள் முதல் இராணுவத்தின் பயன்பாட்டில் இருக்கும் இந்த நிலப்பகுதியை வீடு கட்ட ஒதுக்கலாமா என்று அனுமதி கேட்டு மும்பை ஆட்சியர் மகாராஷ்டிரா, குஜராத் இராணுவத் தலைமையகத்திற்கு கடிதம் அனுப்புகிறார். “இந்த நிலத்தை நாங்கள் பயன்படுத்தி வந்தாலும், அது எங்கள் பெயரில் பதிவாக வில்லை. உங்கள் விருப்பப்படி இதை வீடு கட்ட பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று ஒரே வாரத்துக்குள் பதில் சொன்னது இராணுவ தலைமையகம்.

கொலாபா
வளர்ச்சியடைந்த மும்பையின் கொலாபா.

இந்த அசாதாரணமான சுறுசுறுப்புக்கு காரணம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் முன்னாள் இராணுவ வீரர்களின் குறிப்பாக கார்கில் தியாகிகளின் குடும்பங்களுக்கு என்று முன் வைக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் மூன்று இந்திய இராணுவத் தலைமை தளபதிகள், 1998 முதல் 2010 வரை மும்பை, குஜராத் இராணுவத் தலைமையகத்தின்  தளபதிகளில் ஒருவரை தவிர மற்ற அனைவரும், நிலம் பாதுகாப்பு அமைச்சகத்தின் பெயரில் இல்லை என்று உறுதி செய்த அதிகாரி, தென்னிந்திய இராணுவ ஆணையகத்தின் தலைமை தளபதிகள் என்று இராணுவத்தின் உயர் அதிகாரிகளும், நிர்வாகப் பிரிவு அதிகாரிகளும் பட்டியலில் சேர்க்கப்பட்டதை அறிந்திருக்க வேண்டும்.

“நாங்கதானே தேவையான ஒப்புதல்களை வாங்கிக் கொடுக்கிறோம். அதற்கு ஊதியமாக வீடு வாங்குவதற்கு எங்களுக்கும் உரிமை இல்லையா” என்று கேட்டிருக்கிறார் கன்னையாலால் கித்வானி (அப்போது சிவசேனை மேல்சபை உறுப்பினர்). அப்போதைய வருவாய்த் துறை அமைச்சர் அசோக் சவான் அரசுப்பணி அதிகாரிகளுக்கு 40% வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். 38 பாதுகாப்புத் துறையினருக்கு 33 அரசுப் பணி அதிகாரிகளுக்கு என கட்டப் போகும் வீடுகளின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது.

இந்த நிலத்தை ஒட்டிய சாலையை அகலப்படுத்த வேண்டாம் என்றும், அங்கு வந்து சேரும் கேப்டன் பிரகாஷ் பேதே சாலையின் அகலத்தை 69.97  மீட்டரிலிருந்து 18.4 மீட்டராக குறைக்கலாம் என்றும் மும்பை வளர்ச்சித் திட்டம் திருத்தப்படுகிறது. மாநகரங்களின் வளர்ச்சிக்காக ஆயிரக்கணகான ஏழை மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அடித்து துரத்தி விட்டு ஐந்து நட்சத்திர விடுதிகளை கட்டும் ஆளும் வர்க்கம், தமக்கு வீடுகளை கட்டிக் கொள்ள சாலை அகலமாக்கும் திட்டத்தை கைவிட்டிருக்கிறது.

பி வி தேஷ்முக்
சுற்றுச் சூழல் அனுமதி கிடைத்து விட்டதாக பொய் சொல்லி குறிப்பு எழுதிய பி வி தேஷ்முக் கைது செய்யப்படும் பிற அதிகாரிகளுடன்.

கொலாபா போன்ற பாதுகாக்கப்பட்ட கடற்கரை பகுதியில் புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு சுற்றுச் சூழல் துறையின் அனுமதி பெற வேண்டும். மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்கு அனுமதி கேட்டு மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறையின் துணை செயலர் பி வி தேஷ்முக் கடிதம் எழுதுகிறார். குறிப்பிட்ட நிலம் கடற்கரை பகுதி வகையினம் II-ல் உள்ளது என்றும் இதற்கான ஒப்புதல் வழங்கும் பொறுப்பை அந்தந்த வட்டார சுற்றுச் சூழல் துறையிடம் தான் ஒப்படைத்து விட்டதாக பதிலளித்திருக்கிறது மத்திய சுற்றுச் சூழல் துறை. அதையே சுற்றுச் சூழல் ஒப்புதலாக எடுத்துக் கொண்டு, சுற்றுச் சூழல் அனுமதி கிடைத்து விட்டதாக பொய் சொல்லி குறிப்பு எழுதுகிறார் பி வி தேஷ்முக். அதற்கு சம்பளமாக அவரும் ஆதர்ஷ் கட்டிடத்தில் வீட்டு உரிமையாளர் ஆகிறார்.

மும்பை மாநகராட்சியின் கட்டிட விதிமுறைகளின்படி நிலத்துக்கும் கட்டப்பட்ட பரப்பளவுக்குமான விகிதம் 1-க்கு 1.33 ஆகத்தான் இருக்க முடியும். ஆனால், வீடு ஒதுக்கப்பட வேண்டிய பெருந்தலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் மாடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், அதற்கு கூடுதல் நிலம் வேண்டும்.

இந்த நிலத்தை ஒட்டிய மனையின் பின்புறம் மும்பை போக்குவரத்து கழகத்தின் பணிமனை உள்ளது. ‘பேருந்துகள் பணிமனைக்குள் போகும் வழியாக பயன்பட்டு வந்த நிலத்தையும் சேர்த்து நமது கட்டிட பரப்பளவை கணக்கிட்டுக் கொள்ளலாம்’ என்று முடிவு செய்தார்கள் சங்கத்தினர். அப்போது மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலராக இருந்த ராமானந்த் திவாரி என்பவர், “அதெப்படி முடியும், இது பெஸ்ட்டுக்கு (போக்குவரத்துக் கழகம்) சொந்தமானதாச்சே” என்று ஆட்சேபணை தெரிவிக்கிறார். நகர்ப்புற அமைச்சகம் பெஸ்ட் நிறுவனத்திடம் கருத்து கேட்கிறது.

ராமானந்த் திவாரி
பெஸ்ட் நிலத்தை வாங்கிக் கொடுத்த ராமானந்த் திவாரி (அவரது மகன் ஓம்கார் திவாரிக்கு ஒரு வீடு பார்சல் போடப்பட்டது).

“நாங்கள்  பயன்படுத்தும் நிலத்தை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்” என்று பெஸ்ட் அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்க, கோபமடைந்த ராமானந்த் திவாரி, “அப்படீன்னா, அந்த நிலத்துக்கான சந்தை விலையை மகாராஷ்டிரா அரசுக்கு கட்டி விட்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று மிரட்டியிருக்கிறார். அவ்வளவு பணத்தை கட்ட முடியாத பெஸ்ட் நிறுவனமும் உங்கள் விருப்பப்படி செய்து கொள்ளுங்கள் என்று சரண்டைந்து விட்டது. இதற்கிடையில் ராமானந்த் திவாரியின் மகன் ஓம்கார் திவாரியின் பெயரில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டு விட்டது என்பதை தெரிந்து கொண்டால் அவரது மன  மாற்றத்தை புரிந்துகொள்ளலாம். அப்போது முதலமைச்சராக இருந்தவர் இப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் சுசீல் குமார் ஷிண்டே.

மும்பை போக்குவரத்துக் கழகத்தின் பொது மேலாளராக பின்னர் பதவி வகித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உத்தம் கோப்ரகடே தனது மகள் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி தேவயானி கோப்ரகடே பெயரில் ஆதர்ஷ் திட்டத்தில் வீடு வாங்கியிருக்கிறார்.

600 சதுர அடியிலான வீடு வாங்குபவர்களின் மாத வருவாய் ரூ 12,500-க்கு குறைவாக இருக்க வேண்டும் என்ற விதி பல உயர் அதிகாரிகள் வீடு வாங்குவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. நாட்டிற்காக தியாகம் புரியும் ராணுவ வீரர்களின் நன்மைக்காக வருமான வரம்பை ரத்து செய்யும்படி முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறார் கன்னையாலால் கித்வானி. அதுவும் செவ்வனே நிறைவேற்றி வைக்கப்படுகிறது.

மும்பையில் அரசு அதிகாரிகளுக்கான ஒதுக்கீட்டில் சலுகை விலையில் வீடு வாங்குபவர்கள் மகாராஷ்டிராவில் குறைந்தது 15 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்படுகிறது. எப்போதாவது மகாராஷ்டிராவில் பணி புரிந்திருந்தாலே போதும் என்று விதி திருத்தப்படுகிறது. அதன்படி, 1968 முதல் 1972 வரை மகாராஷ்டிராவில் பணி புரிந்த ஒரு லெப்டினண்ட் ஜெனரலுக்கும் வீடு ஒதுக்கப்படுகிறது.

கன்யாலால் கித்வானி
ஆதர்ஷ் ஊழலை முன்நின்று நடத்தி வைத்த அரசியல் தரகர் கன்னையாலால் கித்வானி.

சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியுடன் 5 ஆண்டுகளாக நடந்த தொடர் அத்துமீறல்களுக்குப் பிறகு 2004-ம் ஆண்டு 3,824.43 சதுர மீட்டர் நிலம் ஆதர்ஷ் குடியிருப்புக்கு ஒதுக்கப்பட்டது. பொது பயன்பாட்டு தேவைகளுக்காக கட்டுமான பரப்பில் 15 சதவீதம் குறைத்துக் கொண்டு மாநகராட்சி வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளித்தது. இந்த 15 சதவீதத்தையும் சேர்த்துக் கட்டிடம் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்து அனுமதி பெற்றது ஆதர்ஷ் சங்கம். அதற்கு பதிலுதவியாக அப்போது மும்பை ஆட்சியராகயிருந்த திருமதி ஏ குந்தன் கட்டிடத்தில் வீடு வாங்குவோரின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஒவ்வொருவரும் சுமார் ரூ 1 கோடி லாட்டரி அடிக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மும்பையில் உயர் அடுக்கு கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கும் சிறப்புக் குழு 27 மாடிகள் கட்டுவதற்கு அனுமதி அளித்திருந்தது. ‘கூடுதலாக 28-வது மாடி கட்டுவதற்கு தனியாக அனுமதி பெறத் தேவையில்லை’ என்று நல்ல முடிவுக்கு வந்த ஜெய்ராஜ் பதக் என்ற ஆணையரின் மகனும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்.

கார்கில் தியாகிகளின் குடும்பங்களுக்கும், ராணுவ வீரர்களின் பெண் குழந்தைகளின் விடுதிக்கும் என்ற ‘புனித’ எண்ணத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தில் கடைசியில் பெண்கள் விடுதி என்ற பேச்சே எழவில்லை. இறுதியாக இந்த கட்டிடம் கட்டப்பட்டு குடியிருப்பு தகுதி சான்றிதழ் பெறும் போது வீடு வாங்கிய கார்கில் போர் வீரர்களின் குடும்பங்களின் எண்ணிக்கை 3 மட்டுமே. சிவிலியன்கள் உட்பட பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் 34 பேரும், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் 15 பேரும், நாடாளுமன்ற அல்லது சட்ட மன்ற உறுப்பினர்கள் 8 பேரும், அரசு அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகளின் உறவினர்கள் 42 பேரும் வீடு பெற்றிருந்தார்கள்.

புறங்கையை மட்டும் நக்காமல், பானையையே உடைத்து திருடியவர்களின் இந்த பட்டியலில் அப்போதைய மகாராஷ்டிரா முதலமைச்சர் அசோக் சவான் தனது மாமியாருக்கும் மச்சினிக்கும் வீடு வாங்கியிருக்கிறார். தரைப்படை முன்னாள் தலைமை தளபதிகள் என்.சி.விஜ், தீபக் கபூர், முன்னாள் கடற்படை தளபதி மாதவேந்திர சிங், வைஸ் அட்மிரல் மதன்ஜித் சிங், மேஜர் ஜெனரல் ஆர்.கே.ஹூடா ஆகிய இராணுவ உச்ச  அதிகாரிகளுக்கும் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது.

கட்டிடம் கட்டப்பட்டு தகுதிச் சான்றிதழ் பெற்ற பிறகு 2010-ம் ஆண்டு பத்திரிகைகளில் இந்த ஊழல் தொடர்பான தகவல்கள் வெளியாகின. “ஒரு வீட்டு வசதி சங்கம் என்றால் அதில் இடம் கிடைக்காதவர்கள் பலருக்கு வயித்தெரிச்சல் இருக்கத்தான் செய்யும்” என்று சொல்கிறார் கன்னையாலால் கித்வானி. அப்படிப்பட்ட வயிற்றெரிச்சல் பேர்வழிகள்தான் தேரை இழுத்து தெருவில் விட்டிருக்கிறார்கள்.

அசோக் சவான்
இரண்டு வீடுகளை விழுங்கியவர் அப்பாவி பூனை தோற்றமளிக்கும் முன்னாள் முதல்வர் அசோக் சவான்.

அப்போது முதலமைச்சராக இருந்த அசோக் சவானை நீக்கி ‘தூய்மையானவர்’ என்ற இமேஜ் இருந்த பிருத்விராஜ் சவானை முதலமைச்சர் ஆக்குதல், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜே ஏ பட்டீல் தலைமையில் விசாரணை கமிஷன், சிபிஐ விசாரணை என்று ஊழல் ‘ஒழிப்பு’ நாடகங்கள் முறையே தொடங்கி வைக்கப்பட்டன.

மத்திய தணிக்கை அதிகாரி இது தொடர்பாக ஆய்வு நடத்தி 2011-ம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையில் விதிமீறல்களும், ஊழல்களும் பட்டியலிடப்பட்டு மாநிலத்தின் அப்போதைய மற்றும் முந்தைய முதல்வர்களான சுசீல் குமார் ஷிண்டே, அசோக் சவான், மற்றும் விலாஸ் ராவ் தேஷ்முக் இதில் பங்கேற்றவர்கள் என்று கூறப்பட்டிருந்தது.

சி.பி.ஐ விசாரணையும், அமலாக்கப் பிரிவின் விசாரணைகளும் கண் துடைப்புகளாக தொடர்ந்து கொண்டிருந்தன. ஆதர்ஷ் தொடர்பான ஆவணங்களில் பல தொலைந்து போயின. ராணுவம் அளித்த தடையில்லாச் சான்றிதழ், திட்ட முன்வரைவு, சுற்றுச் சூழல் விதிகளை ரத்து செய்யும் ஆணை, சாலையின் அகலத்தை குறைப்பதற்கான அனுமதி வழங்கிய ஆணை, 6 மாடிகளை 31 மாடிகளாக உயர்த்திக் கட்டுவதற்கு அனுமதி வழங்கும் ஆணைகள் ஆகியவை மாயமாகியிருந்தன.

இதுதொடர்பான பொது நல வழக்கு ஒன்றில் 2012-ல் மும்பை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ யை கண்டித்தது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ ஓய்வு பெற்ற ராணுவ தளபதிகள் மேஜர் ஜெனரல் டி கே கவுல், மேஜர் ஜெனரல் ஏ ஆர் குமார், ஓய்வு பெற்ற பிரிகேடியர் எம்.எம் வாஞ்சூ, கன்னையாலால் கித்வானி, அப்போதைய மாநகர ஆணையர் மற்றும் 2012-ல் நிதித் துறை செயலராக இருந்த பிரதீப் வியாஸ் ஆகியோரை கைது செய்தது. இந்த ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் பிரதீப் வியாஸ் மற்றும் ஜெய்ராஜ் பதக் ஆகியோரை அரசு பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதாக முதல்வர் பிருத்விராஜ் சவான் அறிவித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஏர் இந்தியா அதிகாரியிடம் அவர் மீதான குற்றங்களை நீர்த்துப் போக வைப்பதற்காக ரூ 50 லட்சம் கேட்டதாக சிபிஐயின் வழக்கறிஞர்கள் ஜே கே ஜகியாசி, மற்றும் மந்தர் கோஸ்வாமியும் கைது செய்யப்பட்டனர்.

பிருத்விராஜ் சவான்
பிருத்விராஜ் சவான்- ‘நேர்மை’யான முதல்வர் ஊழல் பேர்வழிகளை தப்புவிக்கிறார்.

ஆனால், சிபிஐ 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தவறியதால் மே 2012-ல் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் 7 பேருக்கு நீதிமன்றம் பெயில் வழங்கியது.

கடந்த டிசம்பர் மாதம் பட்டீல் தலைமையிலான கமிஷன் விசாரணையை முடித்து தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அறிக்கையில் தணிக்கை அதிகாரி குறிப்பிட்ட மூன்று முன்னாள் முதல்வர்களுடன் சிவாஜிராவ் நிலங்கேகர் பட்டீல் என்ற முன்னாள் முதல்வர், அமைச்சர்கள் ராஜேஷ் தோப்பே, சுனில் தத்காரே மற்றும் தேவயானி கோப்ரகடே உட்பட 12 பிற உயர் அதிகாரிகளும் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

சங்கத்தின் 102 உறுப்பினர்களில் 25 பேர் உறுப்பினர் ஆவதற்கு தகுதி இல்லாதவர்கள் என்றும் 22 பினாமி பரிமாற்றங்கள் நடந்ததாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. ஆதர்ஷ் சங்கம் சுற்றுச் சூழல் துறையின் அனுமதி பெறவே இல்லை என்பதையும் உறுதி செய்திருக்கிறது.

இந்த அறிக்கையை தனது அரசு நிராகரிப்பதாக முதலமைச்சர் பிருத்விராஜ் சவான் அறிவித்தார். மகாராஷ்டிரா ஆளுநர் கே சங்கரநாராயணன் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் மீது வழக்கு தொடர்வதற்கு அனுமதி மறுத்திருக்கிறார். குற்றம் நடந்திருக்கிறது என்று முடிவு செய்வதற்கு ஒரு கமிஷனின் 2 ஆண்டு விசாரணை,  குற்றவாளிகள் மீது வழக்கு தொடரலாமா என்று முடிவு செய்யும் அதிகாரம் அதே குற்றவாளிகளின் அரசிடம் விடப்பட்டிருந்தது. ஊழல் எதிர்ப்பு இமேஜை கட்டியமைத்துக் கொண்டிருக்கும் ராகுல் காந்தியின் தலையீட்டைத் தொடர்ந்து மகாராஷ்டிரா அரசு அறிக்கையை பகுதியளவு ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறது. அதாவது, கண் துடைப்புக்காக சில அதிகாரிகள் தண்டிக்கப்படுவராகள். பல அதிகாரிகளும், தளபதிகளும், அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள். சுஷில் குமார் ஷிண்டே உள்துறை அமைச்சராகவும் விலாஸ் ராவ் தேஷ்முக் மத்திய அமைச்சராகவும் தொடர்கிறார்கள்.

ஆதர்ஷ் கட்டிடத்தின் குடியிருப்பு தகுதி சான்றிதழை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆதர்ஷ் சங்கம், தங்களைப் போன்றே சட்ட விரோதமாக, சட்டங்களை வளைத்து கட்டப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் பட்டியலை தயாரித்துள்ளது. போலீஸ் குடியிருப்புக்கான நிலத்தை ஒதுக்கிக் கொண்ட சாகர் தரங், ஏற்கனவே சொந்தமாக வீடு இருந்த நீதிபதிகள் பினாமி பெயரில் வீடு வாங்கிய சமதா திட்டம், கால்பந்தாட்ட மைதானத்துக்கான வண்டி நிறுத்தும் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தில்வாரா திட்டம் உட்பட 13 கட்டிடங்களின் பட்டியலை அவர்கள் கொடுத்திருக்கின்றனர்.

கார்கில் வீரர்கள்
கார்கில் போரில் உயிரிழந்த இராணுவ வீரர்கள்.

இவர்கள் போட்டி போட்டுக் கொண்டு கொள்ளையடிக்கும் நிலங்களின் உரிமையாளர்களான மக்கள் ‘வளர்ச்சி’யை கொண்டு வரும் முதலாளிகளால் ஏற்கனவே விரட்டியடிக்கப்பட்டு விட்டார்கள்.

மும்பையின் கடற்பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து மீன் பிடித்து வருபவர்கள் கோலி இனத்தைச் சேர்ந்த மீனவர்கள். ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து அவர்கள் படிப்படியாக தமது நிலங்களிலிருந்து துரத்தப்பட்டனர். மும்பையின் குறுகிய கடற்கரை ஓரங்களை கார்ப்பரேட் கட்டிடங்களும், நட்சத்திர விடுதிகளும், மேட்டுக் குடி பொழுதுபோக்கு மையங்களும், ராணுவ வளாகங்களும் ஆக்கிரமித்திருக்கின்றன. கோலி மக்கள் இப்போது கடலோரங்களில் எஞ்சியிருக்கும் மீனவ குடியிருப்புகளில் மட்டும் வாழ்கின்றனர்.

ஆதர்ஷ் போன்ற ஆயிரக்கணக்கான மேட்டுக்குடி குடியிருப்புகள் உமிழும் கழிவு நீரும், பிளாஸ்டிக் பொருட்களும் குவிந்து கடலோர மீன்பிடிப்பு அழிக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலேயே, இந்திய ஆட்சியாளர்கள் ஆக்கிரமித்த இந்தப் பகுதியில் சுற்றுச் சூழலை பாதுகாக்க, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய, நகரத்தின் வளர்ச்சியை முறைப்படுத்த என்று இயற்றப்பட்ட சட்டங்களை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள் அவற்றை கழிப்பறை காகிதங்களாக பயன்படுத்தியிருக்கின்றனர். இது போன்று ஒவ்வொரு நாளும் புதுப் புது வாய்ப்புகளை உருவாக்கி நாட்டையும் நாட்டு மக்களையும் கொள்ளை அடிக்கின்றது இந்த கும்பல்.

கார்கில் போரில் இறந்த வீரர்களது குடும்பத்திற்கு வீடு என்ற பெயரில் இந்நாட்டின் அதிகார வர்க்கம், அரசியல் கட்சிகள், இராணுவ தளபதிகள், நீதிபதிகள், சிபிஐ அனைவரும் சேர்ந்து நடத்தியிருக்கும் ஊழல்தான் ஆதர்ஷ் வீடுகள் திட்ட ஊழல். போரில் செத்த வீரர்களின் பெயரில் கட்டப்படும் வீடுகளே அவர்களுக்கு போய்ச்சேராது என்றால் நாட்டின் ஏழை எளிய மக்களின் பெயரில் இறைக்கப்படும் திட்டங்களின் கதி என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் அரசு, அதிகார வர்க்கம், இராணுவம், நீதிமன்றம், காவி-கதர் தேசியக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து எப்படி இயங்குகின்றன என்பதற்கு ஆதர்ஷ் ஊழல் ஒரு சான்று. சான்று கிடைத்து விட்டது, இனி இந்த அமைப்பை தகர்க்கும் வழியை ஆராய்வோமா?

அப்துல்

மேலும் படிக்க

  1. நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும்[இராணுவ வீரர்களின்] கீழ் நடுத்தர ,நடுத்தர வர்க்கம் !

    நாட்டின் வளங்களை எல்லாம் புடிங்கி திண்னுது அதிகார, அரசியல்வாதிகளின் ஆளும் வர்க்கம் !

    இது தானா உங்கள் போலி சன நாயகம் ! துத்தேரி !

  2. நக்சல்பரி தோழர் பாலன் வழியை ஆராய்வோமா?

    //இனி இந்த அமைப்பை தகர்க்கும் வழியை ஆராய்வோமா?

  3. நாட்டின் எல்லைகளை பாதுகாக்க மட்டும் [இராணுவ வீரர்களின்] கீழ் நடுத்தர ,நடுத்தர வர்க்கம் தேவை ! ஆனால் வளங்களை எல்லாம் பங்கு போட மட்டும் அதிகார, அரசியல்வாதிகளின் ஆளும் வர்க்கமா ?
    இந்த வர்க்க வேறுபாடுகளை கலைய, நக்சல்பரி தோழர் பாலன் வழியை ஆராய்வோமா?

  4. கேஜ்ரிவால் பற்றியோ ஆம் ஆத்மி பற்றியோ ஒருவரி கூட வினவு எழுதாததேன்??

    • ஹா ஹா இவர்கள் இடத்தை ஆட்டைய போட்டவர்கள் பற்றி பேசுவார்களா?

    • They are waiting for Kejrival to fail or make mistake.

      What Vinavu group thinks is without solid foundation of principle like communism/capitalism/socialism nothing will be achieved and the group will vanish eventually. It is like saying.. without bible/Geetha like basics are laid out ,a religion will vanish and cant stand the test of time.

  5. Are the soldiers are illiterates. Are they don’t not know what is going on in India. Why they are awaiting for the enemies from Pakistan and China. All the enemies are inside the country in the form of politician, bureaucrats and businessmen. First they have to save India from these corrupted bastards and then turn towards other enemies. Some soldiers saved the politicians from parliament attack by loosing their life. Why they have to do so… and what for!!

  6. படித்து புரிந்து கொள்ளும் முன் கண்ணைக் கட்டுகிறது,யாருக்காகத் திட்டம் உருவாகியதோ அவர்களைத் தவிர அனைத்து ஏமாற்றுவாதிகளும் பயன் அடைந்துள்ளனர்,தெரியாத கொள்ளைகளை கேள்விப் பட்டால் மனது பதை பதைக்கறது இதை சாதாரண மக்களுக்கும் கொண்டு சென்று புரிய வைத்தால் கூடநம்மால் ஆஆஆஆஆஆவ்…பாவிகளைநம்மால் என்ன செய்யமுடியும்? என்று கூறி விட்டு பிழைப்புக்காக தனது பொன்னான நேரத்தை செலவழிக்கச் சென்று விடுவர்,இதைப் புரியவைக்க வேண்டிய அறிவாளிகள் இணையதள எழுத்துக்களுடன் நின்றுவிடுகின்றனர்,முடிவில் படித்து கொடுமை கண்டு கோபம் கொள்பவர்கள் ஏக்கப் பெருமூச்சு மட்டும் விட்டாலும் எதிர் காலம் இக்கோமாளிகள் தண்டிக்கப் படுவர் என்ற நம்பிக்கையுடன் நாட்களைக் கடத்திக் கொண்டுள்ள என் போன்றவர்களே நாம் வாழும் காலம் சுருக்கமானது என்பது மட்டும் புரிந்து,மக்களுக்கு நன்மை செய்ய ஏதாவது செய்வோம் என்பதை உணர்வீர்களாக.

Leave a Reply to K.SENTHILKUMARAN பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க