privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விபுமாஇமு ரிப்பன் பில்டிங் முற்றுகை !

புமாஇமு ரிப்பன் பில்டிங் முற்றுகை !

-

சென்னை மாநகராட்சிப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளின் இழி நிலை…

மாணவர்களே ! புமாஇமுவின் ஆய்வுக்குழு உங்கள் பள்ளிக்கும் வருகின்றது, ஆதரவு கொடுங்கள்!

ரசுப்பள்ளிகளை தரம் உயர்த்து” என்ற முழக்கத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணியின் சார்பில் பல்வேறு வகையான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இயக்கத்தின் மூலம் மாணவர்கள் – பெற்றோர்கள் – ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் சென்று, “அரசின் கல்வி தனியார்மயக் கொள்கையே அரசுப் பள்ளிகளை திட்டமிட்டு சீரழித்தது, அதை ஒழிக்காமல் அனைவருக்கும் கல்வி என்பதை பெற முடியாது” என்பதை பதிய வைத்து வருகிறோம்.

சென்னையில் உள்ள அரசுப்பள்ளிகளின் சீரழிந்த நிலையினை மக்களிடம் அம்பலப்படுத்தி அதற்கெதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி மனு கொடுப்பது முதல் முற்றுகை வரை நடந்து கொண்டிருந்த சூழலில்தான் கடந்த சனிக்கிழமையன்று மணலி அருகில் உள்ள சடையான் குப்பம் என்ற ஊரில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியின் மேற்தளம் இடிந்து விழுந்ததில் இரு மாணவர்கள் படுகாயமடை ந்தனர்.

கருணாவும் ஜெயாவும் அறிக்கைப்போர் என்ற அக்கப்போர்களை முக்கியச் செய்தியாக வெளியிடும் ஊடகங்கள் ஏதோ ஒரு மூலையில் இந்தச் செய்திக்கு இடம் அளித்தன. ஒரு மூலையில் இருந்தாலும் அரசுப்பள்ளியின் அவல நிலை எமது மூளையில் சுளீர் என்று உரைத்தது. அரசின் அலட்சியத்தால் மாணவர்கள் உயிர் பறிபோக இருந்த அநியாயத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சென்னை மாநகராட்சி செயல்படும் ரிப்பன் பில்டிங்கில் திடீரென ஆர்ப்பாட்டம் செய்யத் திட்டமிட்டோம்.

முக்கியச் சாலையில் இருந்து செங்கொடிகளுடனும் பதாகைகளுடனும் தோழர்கள் பேரணியாக புமாஇமுவின் சென்னைக்கிளை இணை செயலர் தோழர். ஏழுமலையின் தலைமையில் முழக்கமிட்டபடியே மாநகராட்சி அலுவலகத்தை அடைந்தனர். 200-க்கும் மேற்பட்ட போலீசும் 4 வெள்ளை வண்டிகளும் வந்து நின்றனர். அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற தோழர்களை போலீசு தடுத்தது. ரிப்பன் பில்டிங் வாசலிலேயே ஆர்ப்பாட்டம் நீடித்தது. வேறுவழியின்றி மேயரிடம் பேச்சுவார்த்தை நடத்த 5 தோழர்களை மட்டும் போலீசு அனுமதித்தது.

ஆர்ப்பாட்டம் தொடரவே, ஊடகங்கள் வந்தபடியே இருந்தன, இதைக் கண்டு பதறிய மாநகராட்சி அதிகாரிகள் “அத்தனை பேர்களையும் மேயர் சந்திக்க நினைக்கிறார்” என்று அனைவரையும் மேயரை சந்திக்க வைத்தது. மேயரின் முன்னால் கருப்புக்கொடி காட்டுதல் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் மாணவர்கள் தங்கள் பையினைக்கூட கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

எல்லா மாநகராட்சிப் பள்ளிகளிலும் அனைத்து அடிப்படை வசதிகள் இருப்பதாக மேயர் கூற, அதை மறுத்தார்கள் நமது தோழர்கள். இறுதியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியும், மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகளும் இணைந்து ஆய்வுக்குழு அமைத்து அனைத்து சென்னை மாநகராட்சிப்பள்ளிகளையும் ஆய்வு செய்வது என்றும் அதன் அறிக்கையின் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் மேயர் கூறினார்.

“கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை, கல்வி தனியார்மயத்தில் அரசுப்பள்ளிக்கு இடமில்லை” என்பது தான் உண்மை எனினும் ஆதாரங்கள் தேவைப்படுகின்றனவாம். அந்த ஆதாரங்களை கண்டறிய புமாஇமு தோழர்களாகிய நாங்கள் மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து சென்னையில் உள்ள 10 கல்வி மண்டலங்களிலும் உள்ள அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் 17.01.2014 அன்று வருகின்றோம்.

மாணவர்களே, பெற்றோர்களே, ஆசிரியர்களே அரசுப்பள்ளியை அழிக்க நினைக்கும் கல்வி தனியார்மயத்துக்கு எதிராக ஒன்றிணைவோம்! அரசுப்பள்ளிகளைக் காக்க தோள் கொடுங்கள் !

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை