privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்புத்தகக் காட்சியா ? கோயில் கடையா ?

புத்தகக் காட்சியா ? கோயில் கடையா ?

-

றிவுப் பசியை போக்கிக் கொள்ள சென்னை புத்தகக் காட்சிக்கு ஒரு எட்டு வைக்கலாம் என்று, ஆரம்பத்திலேயே நம்மை வழிமறிக்கும் ஸ்நாக்ஸ் கடைகளைத் தாண்டி, உள்ளே நுழைந்தேன்.

பிட்சாக் கடை
புத்தகக் கண்காட்சியில் ஸ்நாக்ஸ் கடைகள் (கோப்புப் படம்).

“ஏம்ப்பா! புத்தகக்காட்சி பொறுப்பாளர்களே, படிப்பு வாசனையைத் தேடி நுழையும் போதே நுழைவாயிலில் பாப்கார்ன் வாசனையை தூக்கலாக்கிக் காட்டி சுண்டி இழுப்பதை நிறுத்தக் கூடாதா? வரும் போதே தடுக்கி விழுந்தால் சாட் அயிட்டங்களில் விழும்படி என்னய்யா அப்படி ஒரு ஏற்பாடு?! போகட்டும், படிக்கும் பழக்கம் அருகி வரும் காலத்தில் இத்தனை புத்தகக் கடைகளை ஓரிடத்தில் வரிசை வைத்துக் காட்டும் உங்கள் முயற்சியை பாராட்டலாம்” என்ற எண்ணத்தோடு பார்வையிட்டேன்.

சுயமுன்னேற்றம், பொழுதுபோக்கு, இலக்கியக் கோஷ்டிகளின் மத்தாப்புக்கள், நுகர்வு உலகின் அழிபசி தெரியாமல் இன்னும் பிள்ளையை நல்லவனாக வளர்க்க நன்னெறிக்கதைப் புத்தகங்களோடு ”இந்த வருசம் வியாபாரம் சரியில்ல!” என்று நொந்து நூலாகிக் கிடக்கும் விற்பனையாளர்கள் என பல வண்ணக் கருத்துக்களின் கடைகளைப் பார்த்து வருகையில், இடையிடையே பெரும்பாலும் பக்தி புத்தகங்களைத் தாண்டி நடைபாதை கோயில் மாதிரியே சில கடைகள் மெல்லிய இசையுடன் ”கிருஷ்ண கிருஷ்ணா, ஓம்… ஓம்….” என்று ஊளை ரீங்காரத்தைக் காட்டி ஆள்பிடித்தன.

புத்தகக்கண்காட்சி என்ற வரம்புக்குள் மதவாதிகள் தங்கள் பிரச்சாரத்தை புத்தகங்களாக பார்வைக்கு வைப்பதைக் கூட சகித்துக்கொள்ளலாம், பல பார்ப்பன பண்டாரக் கடைகளில் அவர்களின் ‘நூல்’ விடும் முயற்சியே முறுக்கிக் கொண்டு தெரிகிறது.

ஆன்மீகக் கடைகள்
புத்தகக் கண்காட்சியில் ஆன்மீகக் கடைகள் (கோப்புப் படம்)

”இஸ்கான்” கடையில் கிருஷ்ண ஆலாபனையுடன் ஊதுவத்தி, தசாங்கம், அத்தர், ஜவ்வாது, நறுமணப் பொருட்கள் என புத்தகங்கள் வரிசையில் இடம் பிடித்திருந்தன. பகவத்கீதையை தூக்கி நிறுத்தவும், பார்ப்பன நாற்றத்தைப் பரப்பவும் புத்தகக்காட்சி சாக்கில் அவாளின் பிரசாதக் கடைகள், “வேத மந்தீர்” என்றொரு கடை, கிலோ கணக்கில் ராசிக்கற்கள், ஸ்படிக கும்பங்கள், கல் மணி மாலைகள் வேதாந்தம், மத அனுஷ்டானம் என்ற விளம்பரங்கள் இதற்குப்பெயரும் புத்தகக் கடையாம்! இன்னொரு வரிசையில் “ராமகிருஷ்ண மடம்” சங்கராச்சாரி, ஆதிசங்கரர் மினி கட் அவுட்டுகள், டாலர்கள் (அமெரிக்க டாலர் இல்லீங்க? அது அங்க! இங்க அவாள் குரு – க்களின் படம் போட்ட டாலர்!) விவேகானந்தர் படங்கள், ஒலி / ஒளி நாடாக்கள், கூடவே புத்தகங்கள் துளசி நீர்த்தம் மட்டும்தான் பாக்கி!

தன் பங்குக்கு “ஈஷா மையம்” லிங்கம், படங்கள், மாலைகள், சத்குருவின் படங்கள், கேசட்டுகள் என வாயைக் கொடுத்தால் ‘குண்டலினியில்’ தூக்கிப்போட குண்டுகட்டான ஆட்களுடன், “ஸ்ரீ வித்யதீர்த்தா பவுன்டேசன்” பெயரில் 80 – ஜி வரிவிலக்கோடு உண்டி வசூலுக்கு நோட்டீஸ் விநியோகம் வேறு, சூடம், ஊதி வத்திக்கு மசியாதவனை கட்டிப்போட “இன்ஃபினி” என்ற பெயரில் கார்ப்பரேட் குருவின் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய டி.வி. காட்சியுடன் ஒரு கடை. நாலு தடியர்கள், கடை நிறைய பரப்பப்பட்டிருக்கும் குருவின் ஒரே ஒரு புத்தகத்தைக் காட்டி போகிற வருபவர்களைக் முதலில் கொக்கிப் போடுகிறார்கள், பின் டி.வி.யைக் காட்டி அதில் ஆவியாய் அலையும் குருவின் உரையில் முக்கி எடுத்து, முகவரியைப் பிடுங்க… முடிவற்ற காரிய வாதத்தில் உயர் நடுத்தரவர்க்கத்தை முக்தி அளிக்கும் திசைக்கு பத்தி விடுகிறது “இன்ஃபினி” கார்ப்பரேட் ‘கறிக் கடை!

ஆன்மீகக் கடைகள்
புத்தகக் கண்காட்சியில் கோயில் கடைகள் (கோப்புப் படம்)

இத்தனைக் கேடிகளும் இருக்குமிடத்தில் நித்யானந்தா இல்லாமல் விளங்குமா? நித்யபீடமும் புத்தகக்காட்சியில் உத்திராட்சங்களுடன் வருபவர்களைத் தடுக்கி விடுகிறது. ஒரு உத்திராட்சத்துடன் நித்யானந்தா டாலரைக் கோர்த்து வருபவர்களுக்கு அதை இனாமாகக் கட்டிவிட சிஷ்யகேடிகள்! மினி நித்தி கட் அவுட்டுகள் சந்தன மாலைகள், சிரிப்பாய் சிரித்த நித்தியின் சிரிப்பு படங்கள்… என ஆங்காங்கே புத்தகக் காட்சியில் சாமியார் மடங்கள் பத்தாது என அவ்வப்போது கண்காட்சி அரங்குகளில் திடீர் பிரசன்னமாகி விபூதி வழங்கும் சாமியார்களையும் நேரடியாக கடையில் கொண்டு வந்து அடுக்கி வைத்திருக்கின்றன சில காவிகள்!

பார்ப்பன பந்தாவுக்கு ஈடுகொடுக்க முடியாமல், பாவம் சன்மார்க்கம், ஓங்காரம் என்று சில சைவப் பண்டாரக் கடைகளில் விபூதி மணக்கும் கோலத்தில் சில சாமிகள் ‘தேமே’ என தாடியை தடவிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. இசுலாமிய, கிறித்தவ நிறுவனங்கள் புத்தக வடிவம் தாண்டி வேறு ஜிகினாக்கள் காட்டாமல் அடக்கி வாசிக்கும் போது, பார்ப்பன இந்துமத பண்டாரங்கள் புத்தகக் காட்சிக்கு சம்பந்தமே இல்லாமல் விபூதி, பூஜை பொருட்கள் என தலை விரித்தாடுவதைப் பார்க்கையில், இது புத்தகக் காட்சியா, இல்லை நடைபாதை கோயில்களா? என சந்தேகம் வராமல் இல்லை!

“பபாசி” சங்கத்தில் புத்தகக் கடைகளில் ஆடியோ கேசட்டுகள் கூட வைத்து விற்கக் கூடாது என கறாராக விதி வகுத்திருப்பதாகச் சொல்கிறார்கள், அங்கங்கே தகடுகளும், ஆடியோ/வீடியோ ஒளி பரப்புகளையும் பார்க்கையில் “பபாசியும்” பாப்பார பாசியாக இருப்பது அவமானம்!

‘விதியை’ நொந்து கொண்டு வெளியே வந்தால்… வெளியே உள்ள சொற்பொழிவு அரங்கில் ஒரு சாம்பிராணி தீவிரமாக புகைந்து கொண்டிருந்து, “ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் விவேகானந்தரை கொண்டு சேர்க்க வேண்டும்” என்ற அந்த ஆர்.எஸ்.எஸ். பிராண்ட் சாம்பிராணி யார் என்று எட்டிப் பார்த்தால் தமிழருவி மணியன்! வெளங்கிடும்?!

– சுடர்விழி