privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஉ.வ.க. பாலி மாநாடு : ரேசன் கடையின் சாவி இனி அமெரிக்காவின் கையில்!

உ.வ.க. பாலி மாநாடு : ரேசன் கடையின் சாவி இனி அமெரிக்காவின் கையில்!

-

னியார்மயம்-தாராளமயம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டவுடனேயே, “இனி ரேஷன் கடைகளில் என்னென்ன உணவுப் பொருட்களை, என்ன விலையில் வழங்க வேண்டும் என்பதைக்கூட அமெரிக்கா தீர்மானிக்கும் காலம் வந்துவிடும்” என நாம் எச்சரித்து வந்தது, இன்று ஏறத்தாழ நடைமுறை உண்மையாகிவிட்டது. இந்தோனேஷியாவிலுள்ள பாலியில் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் நடந்து முடிந்த உலக வர்த்தகக் கழகத்தின் 9-வது அமைச்சர்கள் மாநாட்டில், ஏழை நாடுகள் தமது விவசாயத்திற்கும், ரேஷன் கடைகளின் மூலம் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கும் எவ்வளவு மானியம் வழங்க வேண்டும் என்பது குறித்தும், ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் குறித்தும் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இம்முடிவுகள் இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளுக்குப் புதிதாக எதையும் தராத அதேசமயம், இருப்பதையும் தட்டிப்பறித்துக் கொள்ளும் ஓரவஞ்சனை கொண்டதாக அமைந்துள்ளன.

மங்களூரு ஆர்ப்பாட்டம்
இந்திய விவசாயிகளுக்குத் தரப்படும் மானியத்தைக் குறைக்கச் சொல்லி உத்தரவிடும் உலக வர்த்தகக் கழகத்தின் பாலி மாநாட்டைக் கண்டித்து கர்நாடகா மாநிலம் மங்களூரில் பல்வேறு விவசாய சங்கங்கள் மங்களூரு துறைமுகம் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டம்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்திய அரசுகள், உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்ட ஏகாதிபத்திய நிறுவனங்களின் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடந்து கொள்வது இந்திய அரசுக்குப் புதிய விசயமல்ல. எனினும், இந்தச் சரணாகதி அரசியலில் புதிய சாதனையை பாலி மாநாட்டில் நிகழ்த்தியிருக்கிறது, இந்திய அரசு. இந்திய விவசாயிகளுக்கு எவ்வளவு மானியம் தர வேண்டும், அவர்களிடமிருந்து எந்தெந்த உணவுப் பொருட்களை எந்தளவிற்குக் கொள்முதல் செய்ய வேண்டும்; எந்தெந்த உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளின் மூலம் விநியோகிக்க முடியும்; அவற்றை என்ன விலையில் விற்க வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் உரிமையை, இவற்றை மேற்பார்வையிடும் உரிமையை உலக வர்த்தகக் கழகத்திடம் ஒப்படைத்துக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறது, இந்திய அரசு.

மன்மோகன் சிங் அரசு கையெழுத்துப் போட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இந்திய அணுஉலைகளைக் கண்காணிக்கும் உரிமையை சர்வதேச அணுசக்தி முகாமையிடம் தாரை வார்த்தது என்றால், பாலி மாநாட்டுத் தீர்மானங்கள் இந்தியாவிலுள்ள ரேஷன் கடைகளைக் கண்காணிக்கும் உரிமையை உலக வர்த்தகக் கழகத்திடம் தூக்கிக் கொடுத்திருக்கிறது.

விவசாயத்திற்கு மானியம் வழங்குவது குறித்து உலக வர்த்தகக் கழகத்தில் இரண்டுவிதமான சமனற்ற விதிகள் உள்ளன. “ஏழை நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் தமது ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியின் மதிப்பில் 10 சதவீத அளவிற்கே விவசாய மானியமாக வழங்கவேண்டும். இந்த மானியமும் 1985-86 ஆண்டைய விவசாய உற்பத்தியின் மதிப்பைத் தாண்டக்கூடாது” என நிபந்தனை விதித்துள்ள உலக வர்த்தகக் கழகம், “ஏகாதிபத்திய நாடுகள் விவசாயத்திற்கு வழங்கி வரும் நேரடி மற்றும் மறைமுக மானியங்களில், நேரடி மானியத்தில் மட்டும் 20 சதவீத அளவிற்குக் குறைத்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறுகிறது.

ஆனந்த் சர்மா
பாலி வர்த்தக மாநாட்டில் உரையாற்றும் இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா.

1995-இல் உலக வர்த்தகக் கழகம் தொடங்கப்பட்ட சமயத்தில் அமெரிக்க அரசு விவசாயத்திற்கு வழங்கிய மானியம் ஏறத்தாழ 6,100 கோடி அமெரிக்க டாலர்கள். ஐரோப்பிய யூனியன் நாடுகள் அளித்துவந்த விவசாய மானியம் ஏறத்தாழ 9,000 கோடி யூரோ. அச்சமயத்தில் உலக வர்த்தகக் கழகத்தைச் சேர்ந்த பல்வேறு ஏழை நாடுகள் விவசாயத்திற்கு ஒரு பைசாகூட நேரடி மானியம் வழங்கவில்லை என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் உ.வ.க.வின் விதிகள் அடிப்படையிலேயே நியாயமற்றவை எனப் புரிந்து கொள்ள முடியும்.

2001-ஆம் ஆண்டு நடந்த தோஹா மாநாட்டில் விவசாய மானியம் தொடர்பான விதிகளை ஏழை நாடுகள் உடனடியாக அமலுக்குக் கொண்டுவர வேண்டும்; விவசாயம் சாராத பொருட்களுக்கான ஏற்றுமதி வர்த்தகத்தில் காணப்படும் அதிகமான சுங்க வரி, காப்புத் தடைகள் உள்ளிட்டவற்றை நீக்க வேண்டும் என அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் கோரின. மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளின் இந்த அபாயகரமான கோரிக்கைக்கு தோஹா வளர்ச்சி நிரல் எனப் பெயரும் சூட்டப்பட்டது.

விவசாய மானியத்தைக் குறைக்கச் சொல்லி ஏழை நாடுகளை நிர்பந்தித்துவந்த அமெரிக்க அரசோ தான் வழங்கும் மானியத்தில் ஒரு தம்பிடிகூடக் குறைக்கவில்லை. அமெரிக்க அரசு 2010-ஆம் ஆண்டில் விவசாயத்திற்கு வழங்கிய மானியம், 1995-ஆம் ஆண்டை ஒப்பிடும்பொழுது இருமடங்காக, 13,000 கோடி அமெரிக்க டாலர்களாக அதிகரித்திருக்கிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் வழங்கும் விவசாய மானியம் 2002-இல் 7,500 கோடி யூரோ, 2006-இல் 9,000 கோடி யூரோ, 2009-இல் 7,900 கோடி யூரோ – என ஏறுவதும் இறங்குவதுமாக நீடித்து வருகிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கடந்த பத்தாண்டுகளில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை என்பதோடு, அந்நாடுகள் நேரடி மானியத்தை மறைமுக மானியப் பட்டியலுக்குக் கொண்டு சென்று தப்பித்துக் கொள்ளும் தந்திரத்திலும் ஈடுபட்டன.

ரேஷன் கடைவிவசாய மானியத்தைக் குறைப்பது தொடர்பான பிரச்சினை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக இருந்துவரும் நிலையில், இது குறித்து பாலி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் உ.வ.க.வில் நிலவும் சமமற்ற, அநீதியான விதிகளை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. மாறாக, ஏழை நாடுகளுக்குக் கிடைத்ததெல்லாம் ஒரு நான்கு ஆண்டு கால அவகாசம் மட்டும்தான். அதுவரை (2017 முடிய) இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் தற்பொழுது வழங்கிவரும் மானியங்களையும் உணவுப் பொருள் கொள்முதலையும் தொடர முடியும். இந்தக் கால அவகாசம்கூட ஏழை நாடுகளுக்கு இனமாகக் கிடைத்து விடவில்லை. ஏற்றுமதி வர்த்தகத்திற்குத் தடையாக உள்ள அதிகமான சுங்க வரி, காப்பு வரிகள் உள்ளிட்ட தடைகளை நீக்குவதற்கு ஒப்புக்கொண்ட பிறகுதான் கிடைத்தது.

இம்மாநாடு தொடங்குவதற்கு முன்பாக உணவுப் பொருள் கொள்முதல் தங்களின் இறையாண்மை பொருந்திய நடவடிக்கை, கால அவகாசம் கொடுக்கும் தந்திரங்களையெல்லாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என வீராப்புப் பேசிய இந்திய அரசு, இறுதியில் இந்திய மக்களை மட்டுமல்ல, தன்னை நம்பியிருந்த பிற ஏழை நாடுகளையும் கைவிட்டுவிட்டு அமெரிக்காவிடம் சரணடைந்திருக்கிறது. விவசாய மானியத்தையும் உணவுப் பொருட்களுக்குத் தரப்படும் மானியத்தையும் ஒன்றாக இணைக்கக் கூடாது. மானியத்தின் மதிப்பைத் தற்பொழுதுள்ள விலைவாசி மற்றும் உற்பத்திச் செலவைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும். ஏழை நாடுகளின் உணவுப் பொருள் கொள்முதலில் உ.வ.க. தலையீடு செய்யக் கூடாது என்ற கோரிக்கைகளுக்காக இந்தியா போராடும் என எதிர்பார்த்திருந்த ஏழை நாடுகளின் நெற்றியில் பட்டை நாமத்தைச் சாத்திவிட்டது, இந்திய அரசு.

  • caption-006-ration-shop-1தற்பொழுது எந்தெந்த உணவுப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அரசால் அறிவிக்கப்படுகிறதோ, அவற்றைத் தாண்டி வேறு உணவுப் பொருட்களுக்கு ஆதார விலைகளை அறிவிக்கக் கூடாது. தற்பொழுதுள்ள நிலையிலிருந்து ஆதார விலையை அதிகரிக்கக்கூடாது.
  • உணவுப் பொருள் கொள்முதலைத் தற்பொழுதுள்ள அளவிலிருந்து அதிகரிக்கக்கூடாது; ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் அளவு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தாண்டக்கூடாது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுப் பொருட்களைத் தாண்டி, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் போன்றவற்றை ரேஷன் கடைகளின் மூலம் விநியோகிக்கக் கூடாது.
  • இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் அனைத்தும் பொது விநியோகத்திற்காகக் கொள்முதல் செய்து வைத்திருக்கும் உணவுப் பொருட்களின் இருப்புக் கணக்கை உ.வ.க. மேற்பார்வையிட அளிக்க வேண்டும்.

– இவையெல்லாம் மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் அனுமதித்துள்ள கால அவகாசத்தோடு இணைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள். சமையல் எரிவாயுவுக்கும் மண்ணெண்ணெக்கும் வழங்கிவரும் மானியத்தைச் சிறுகச்சிறுக வெட்டிவரும் இந்திய அரசிற்கு; மானியத்தைப் பணமாக வழங்கும் “உங்கள் பணம் உங்கள் கையில்” திட்டத்தின் மூலம் சந்தை விலைக்கு உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளுவதை நோக்கி ஏழை மக்களை நெட்டித் தள்ளிவரும் இந்திய அரசிற்கு உ.வ.க. விதித்துள்ள நிபந்தனைகள் கசப்பாக இருக்கப் போவதில்லைதான். ஆனால், இந்நிபந்தனைகள் உணவுப் பாதுகாப்பு, உணவுப் பொருள் கொள்முதல் குறித்து நாடாளுமன்றத்திற்குள்ள இறையாண்மைமிக்க அதிகாரத்தைப் பறித்து, உலக வர்த்தகக் கழகத்திடம் ஒப்படைக்கின்றன என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.

ஒருபுறம் மானிய வெட்டு, இன்னொருபுறம் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்திலுள்ள தடைகளை நீக்குவது என்பது இந்திய விவசாயிகளை மட்டுமல்ல, சிறு உற்பத்தியாளர்கள் மீதும் இறங்கியிருக்கும் இடியாகும். பன்னாட்டு விவசாயக் கழகங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விவசாய விளைபொருட்களை இந்தியாவில் கொட்டுவதற்கு இந்த ஒப்பந்தம் கதவைத் திறந்துவிட்டிருப்பதாக எச்சரிக்கிறார், சமூக ஆர்வலர் சுமன் சகா. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைத் தடையின்றி இறக்குமதி செய்வது இந்தியப் பாரம்பரிய விவசாயத்தின் மீது வைக்கப்படும் கொள்ளிக்கட்டையாகும்.

இத்துணை பெரிய அபாயத்தில் நாடு சிக்க வைக்கப்பட்டிருக்கும் பொழுது, இந்தியத் தரகு முதலாளித்துவக் கும்பலோ இந்த ஒப்பந்தத்தை ஆரவாரத்தோடு வரவேற்றுள்ளது. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் உள்ளிட்ட பசிபிக் கடலையொட்டிய நாடுகளுக்குத் தமது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் உள்ள தடைகள் இந்த ஒப்பந்தத்தால் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கைதான் தரகு முதலாளித்துவக் கும்பலின் குதூகலத்திற்குக் காரணம். இந்தக் கும்பலின் ஆதாயத்திற்காக விவசாயிகள், ஏழை மக்களின் நலன் பாலி மாநாட்டில் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது.

உணவுப் பொருளுக்கும் விவசாயத்திற்கும் எவ்வளவு மானியம் வழங்க வேண்டும், எப்படி வழங்க வேண்டும் என்பதெல்லாம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு நேரடியாகச் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஆனால், இந்திய அரசோ இது குறித்து எந்தவொரு விவரத்தையும் சாதாரண பொதுமக்கள் தெரிந்துகொள்ளும்படி வெளியிடாமல்; இதனால் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகளிடமோ, ஏழை மக்களிடமோ, விவசாய சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகளிடமோ எந்தவொரு கலந்தாலோசனையும் நடத்தாமல்; கையெழுத்திடுவதற்கு முன் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதைக்கூடப் புறக்கணித்துவிட்டு, அமெரிக்காவும் மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளும் நீட்டிய அடிமைச் சாசனத்தில் கையெழுத்திட்டுத் திரும்பியிருக்கிறது. கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினையை, அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய அக்கறையே இல்லாத நிபுணர்கள் என்ற அயோக்கியர்கள் ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு தீர்மானிக்கிறார்கள் என்பது மக்களை எந்தளவிற்கு இந்த ஆளுங்கும்பல் கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இந்தத் திமிரையும், நமது நாட்டு உரிமைகளை அமெரிக்காவிடம் ஒப்புக் கொடுத்துவிட்டுத் திரும்பியிருக்கும் இந்த வெட்ககேட்டையும், துரோகத்தனத்தையும் எதிர்த்து எந்தவொரு எதிர்க்கட்சியும் போராட முன்வரவில்லை. இந்தியாவின் அரைகுறை இறையாண்மை பாலியில் உருவப்பட்டதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த எதிர்க்கட்சிகள், அமெரிக்க போலீசாரால் இந்தியத் தூதரக அதிகாரி தேவயானி அவமானப்படுத்தபட்டதற்கு எதிராக “சவுண்டு” விடுவதில் ஆளுங்கட்சியோடு கைகோர்த்துக் கொண்டுள்ளன. பாலி மாநாட்டு முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்துக்குள் கேள்வி எழுப்பித் தனது கடமையை முடித்துக்கொண்ட சி.பி.எம்., தேவயானி வழக்கில் வலதுசாரி பா.ஜ.க.விற்குப் போட்டியாக ரோட்டில் இறங்கிப் போராடுகிறது. மன்மோகன் சிங் அரசு பாலி மாநாட்டு முடிவுகளில் கையெழுத்துப் போட்டு துரோகமிழைத்திருக்கிறது என்றால், சி.பி.எம். உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சினையை மடைமாற்றுவதன் மூலம் துரோகமிழைத்துள்ளன.

– திப்பு
____________________________________
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014

____________________________________