privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்கந்துவட்டி தாதாவுக்கு எதிராக திருச்சி பெவிமு போராட்டம்

கந்துவட்டி தாதாவுக்கு எதிராக திருச்சி பெவிமு போராட்டம்

-

டிசம்பர் மாதம் 22-ம் தேதி அன்று திருச்சிமாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில், ஆதார் அட்டை, பள்ளி கல்லூரி அனுமதி மற்றும் எரிவாயு உருளை பெற அவசியமில்லை என தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக உச்சநீதி மன்றத்தில் பெற்ற தடையாணை பற்றி விளக்கி வீடு வீடாக பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தோம், இப்பிரச்சாரத்தில் பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் ஈடுபட்டு வந்தனர். பிரச்சாரம் தொடங்கி சுமார் 2 மணி நேரம் கடந்த பிறகு அடுத்தடுத்த தெருக்களுக்கு சென்று கொண்டிருந்தோம்.

கருவாட்டுக்காரம்மா (அடைமொழி) என்ற நீலாவதி எனும் கந்து வட்டி தாதாவகையறாவினர் குடியிருக்கும் பகுதியில் பிரச்சாரம் துவங்கியதும் நா கூசும் அளவிற்க்கு அசிங்கமாக பேசத் துவங்கினார் நீலாவதி, விவரம் புரியாத மற்ற தோழர்கள், “ஏம்மா இப்படி பேசறீங்க, உங்களுக்கு என்ன பிரச்சனை” என கேட்டதும், நீலாவதி சாமியாடுவது மேலும் அதிகரித்தது.

அப்பகுதி பெண் தோழர் அருகே வந்ததும், “வாங்கின பணத்தை குடுக்காம என்னடி கொடி புடிக்கிற” என ஏக வசனத்தில் பேசிக் கொண்டே இருந்தார். நீலாவதியுடன் இவர்களது உறவினர்களான மகள், பேத்தி, மருமகள் என பத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் கூடி ஆங்காங்கு ஊளையிட்டுக் கொண்டு இருந்தனர்.

பொறுமை இழந்த பெண் தோழர் ஒருவர் சம்பந்தப்பட்ட பஜாரிகளில் ஒருத்தியை ஓங்கி ஒரு அறை விட்டார். ஏற்கனவே தெருமக்கள் கூடியதாலும் அந்த பகுதி தாதாவாக செயல்பட்ட நம்மை ஒருத்தி கைநீட்டி அடித்து விட்டாள் என்றதும் பத்துக்கும் மேற்பட்ட கும்பல் சூழ்ந்து கொண்டு சம்பந்தப்பட்ட தோழரை சேலையை பிடித்து இழுத்தும் முடியைப் பிடித்து இழுத்தும் அடித்து உதைத்து அலங்கோலம் செய்தனர். குழந்தைகளுடன் சென்ற தோழர்களுக்கும், குழந்தைகளுக்கும் அடி உதை விழுந்தது. அக்கம் பக்கத்தினர் ஒரு சிலர் வந்து தடுத்து நம்மை மீட்டதும் ஒரு சில நிமிடங்களில் நடந்தேறியது.

யார் இந்த நீலாவதி?

கருவாடு மீனான கதை!

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர் தான் கருவாட்டுக்காரம்மா நீலாவதி, ஆரம்பத்தில் இப்பகுதியில் கருவாடு விற்று காசு சம்பாதித்தார், பின்னர் உழைக்காமல் காசு சேர்க்க எண்ணி வட்டிக்கு விடும் தொழிலுக்கு மாறினார். மருத்துவம், கல்யாணம், கருமாதி என ஆத்திர அவசரத்துக்கு இவரிடம் கடன் வாங்கினால் சொன்ன தேதியில் திருப்பித் தர வேண்டும, முடியா விட்டால் தாலியை விற்றாவது வட்டி கட்டியாக வேண்டும். இவரின் ஆபாச பேச்சு, அடாவடித்தனத்தை எதிர் கொள்ளத் தயங்குகிற தன்மானமும், சுயமரியாதையும் உள்ளவர்கள் கடனை வட்டியோடு வீசியெறிந்தால் பொறுக்கிக் கொண்டு போய் விடுவாள். கந்துவட்டி, மீட்டர்வட்டி, ராக்கெட் வட்டி என பல பெயர்களில் வசூல் வேட்டை நடத்தும் இந்த கும்பல் வட்டியும் முதலும் பேசிய தேதியில் ஒப்படைக்க வேண்டும், தவறும் போது தவணை தர மாட்டார்கள். இருக்கிற சொத்துக்களை எழுதி வாங்குவது மூலம் லாரி உட்பட பல சொத்துக்களை கைப்பற்றி உள்ளனர், இவர்கள் குடியிருக்கும் வீடு இப்போது இவர்களுக்கு சொந்தமாகி விட்டது.

குறுகிய காலத்திலேயே இப்பகுதியில் குட்டி பெண் தாதாக்களாக வலுபெற்றுள்ளனர். இக்கும்பல் வட்டி வசூலிப்பதற்காகவே ஒரு குண்டர் படையை தீனி போட்டு தனியே வளர்த்து வருகிறது, இது மட்டுமே இவரின் பலம் அல்ல, உள்ளூர் போலீசும் தான், “என் கடையில் எச்சி சோறு திங்காத, கை நீட்டி காசு வாங்காத போலீசுகாரன் எவன் இருக்கான்” என்று கருவாட்டுக்காரம்மா கூறுவதிலும் உண்மை இருப்பதாகவே தெரிகிறது. நமது தோழர்களை மருத்துவமனையில் சேர்த்த பிறகு துவாக்குடி காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் ரமேஷ்குமார், “நான் ரொம்ப நேர்மையானவன்! இரண்டு தரப்பை விசாரித்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கிறேன்” என தேனொழுக பேசினார். அடுத்தநாள் இரண்டு தரப்பிலும் வழக்கு பதிவு செய்து இருப்பதாக கூறினார். கந்துவட்டி கும்பல் அடித்ததாக வழக்கு, எங்கள் மீது அவர்களின் 2 பவுன் சங்கிலியை திருடிக்கொண்டு சென்றதாக வழக்கு பதிவு செய்தார். நீலாவதி வீசிய எலும்புத்துண்டு வேலை செய்வதை புரிந்து கொண்ட நாம் இதனை அம்பலப்படுத்தி சுவரொட்டிகளை நகர் முழுவதும் ஒட்டினோம்.

மறுநாள் பெண்கள், குழந்தைகள் உட்பட தோழர்கள் திரண்டு காவல்துறை உயர் அதிகாரிகள் SP, DSP யை சந்தித்து முறையிட்டோம்.

எமது அமைப்பையும் அதன் நேர்மையான செயல்பாட்டையும் எதிரிகள் கூட புரிந்துள்ளனர், அதனடிப்படையில் நம் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்பட்டன, சம்பந்தப்பட்ட கும்பல் மீது ஒப்புக்கு சில வழக்குகளை போட்டு நிறுத்திக் கொண்டது காவல்துறை. கந்துவட்டி தடைச்சட்டம் உட்பட பல முக்கிய பிரிவுகளில் இருந்து அவர்களை பாதுகாத்தது. போடப்பட்ட வழக்குகள் அடிப்படையில் கூட கைது செய்து சிறையில் அடைக்காமல் வேடிக்கை பார்த்து வந்தனர் போலீசார். இதனைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டினோம்.

அதனைத் தொடர்ந்து பெண் தோழர்களை ஒருங்கிணைத்து பிரசுரம் அடித்து வீடு வீடாக பிரச்சாரம் செய்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானித்தோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மக்கள் மத்தியில் பிரச்சார இயக்கமாக சென்றபோது பலரும் பல்வேறு கருத்துக்களை கூறினர்.

“இந்த பஜாரிகளால் பல குடும்பங்கள் நிம்மதியிழந்து உள்ளனர். இவர்களுக்கு ஒரு முடிவு கட்டுங்கள்” என்றும் “இந்த போலீசை நம்பி பலன் இல்லை, இவனுங்களே அவளிடம் கடன்வாங்கி உள்ளனர்” என்றும் “இவளுக பெரிய ஆளெல்லாம் கிடையாது, ஆனா வாயை திறந்தா வெறும் சாக்கடையாத்தான் வரும், கடனை வாங்கி மீள முடியாம தவிக்கிறேன்” என கொட்டி தீர்த்தனர்.

3 நாள் பிரச்சார இயக்கத்தின் போது மக்கள் பெருமளவு நிதி கொடுத்தனர்.

20.01.2014 காலை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தோம். மாலை 6.30 மணி அளவில் துவாக்குடி அண்ணாவளைவு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட அனுமதிக்காக ஒரு வாரம் முன்னதாக அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் முதல் நாள் இரவு, “வேறு தேதி மாற்றிக் கொள்ளுங்கள்” என போலீசார் கூறினர்.

“எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டது, மாற்ற முடியாது, திட்டமிட்டபடி நடைபெறும்” என அறிவித்து ஆர்ப்பாட்ட வேலைகள் துவங்கப்பட்டது.

தோழர்கள், தோழமை அரங்கு தோழர்கள் , பெண்கள், குழந்தைகள் என பரவலாக பொதுமக்கள் கூடிநின்று கவனித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பெண்கள் விடுதலை முன்னணி தலைவர் நிர்மலா தலைமை உரையில் பேசும் போது, “இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கல் உடைத்து வாழ்க்கை நடத்திய தொழிலாளிகள் இருந்தனர். பிறகு முதலாளிகள் லாபத்தை கொண்டு சென்றவுடன் மக்களுக்கு மிஞ்சியது 200, 350 அடி ஆழம் உள்ள பாறைக் குழிகளே. இன்றைய சூழ்நிலையில் விலைவாசி உயர்வு, மறுகாலனிய பாதிப்புகள் அனைத்தும் நகரத்தில் ஏதாவது வேலை செய்து பிழைக்க வேண்டிய சூழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் வட்டிக்கு வாங்குவதென்பது தொடர் விசயமாகி உள்ளது, வீட்டில் விசேசம் ஏதும் நடந்தால் அதுக்கும் தேவைப்படுகிறது, மக்களின் வறிய நிலை இயலாமையை பயன்படுத்தி அவர்களின் ரத்தத்தை பிழியும் இந்தக் கும்பல் தமது அடாவடி ரெளடி தனத்தின் மூலம் மக்களை அச்சுறுத்தி கொள்ளையடித்து வருகின்றனர்.

இவர்களை மக்களை திரட்டி மோதி வீழ்த்தும் போதுதான் இந்த கிரிமினல்களை அடக்க முடியும்” என பேசினார்.

கண்டன உரை

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் ஓவியா, “தோழர்களை தாக்கி ஆபாசமாக பேசி அராஜகமாக நடந்து கொண்ட இந்த கந்துவட்டி கூட்டத்தை கேசு போட்டு சிறையிலடைக்காமல் பாதிக்கப்பட்ட தோழர்கள் மீது செயினை பறித்ததாக வழக்கு போட்டு அவமானப்படுத்தியுள்ளது போலீசு. இதே காவல்துறை, முதலமைச்சர் ஜெயலலிதா பறித்தார் என புகார் குடுத்தால் விசாரிக்காமல் வழக்கு போடுமா? இன்று மக்கள் வட்டிக்கு வாங்கும் நிலையில் இருப்பதற்க்கு காரணம் விலைவாசி உயர்வு, வாங்கும் வருமானத்தில் குடும்பம் நடத்த முடியவில்லை. நக்சல்பாரி அமைப்பின் பாரம்பரியம் எதிரிகளுக்கு பதிலடி கொடுத்து மக்களை காப்பதே. இந்தக் கந்து வட்டி கூட்டம் ஒன்றும் செய்ய முடியாது. அமைப்பாய் திரண்டால் எதிரியை எதிர்த்து விடலாம்” என்றார்.

திருச்சி மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மைய செயற்குழு உறுப்பினர் தோழர் தண்டபாணி பேசும் போது, “இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருக்கின்றனர். கந்துவட்டிக்கு எதிராக 25 வருடமாக போராட்டம் நடைபெறுகிறது . இந்தியாவில் 70 கோடி மக்கள் வறிய நிலையில் உள்ளனர், 30 கோடி பேர் சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலை உள்ளது. துவாக்குடி பகுதியில் 200 கம்பெனிகள் இருந்த நிலைமாறி இன்று அனைத்தும் இழுத்து மூடப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் தம் தேவைக்கு வட்டிக்கு வாங்குகின்றனர், அரசியல் வாதிகள், அதிகாரிகள் உயர்பதவியில் இருப்பவர்கள் கந்துவட்டி மூலமே சம்பாதித்து பதவிக்கு வந்தவர்கள். ஆக அடிமட்டம் முதல் உயர்மட்டம் வரை மக்களுக்கு எதிரானவர்களே. மனித உரிமைகள் எல்லாம் இந்த அரசிடமும், காவல் துறையிடமும் எதிர்பார்ப்பது வீண்செயல்” என்றும், “வீதியில் இறங்கி போராடுவதே இன்றைய உடனடி தேவை” என உணர்த்தினார்.

அண்ணா வளைவு பெ.வி.மு உட்கிளை இணைச்செயலர் தோழர் லட்சுமி, “பகுதியில் நடந்த சம்பவத்தை விளக்கினார். இந்த கந்துவட்டி கும்பலுக்கு அடியாளாக துவாக்குடி காவல்துறை செயல்படுகிறது” என்றும் “எதிர்க்கத் தயங்கும் மக்கள் அமைப்பாக திரள்வதே தேவை” என்றார்.

ம.க.இ.க வின் மையக்கலைக்குழு தோழர்.கோவன் சிறப்புரையாற்றினார்.

“அண்ணா வளைவு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கந்துவட்டி கொடுமை உள்ளது. தமிழகத்தில் 2003-ல் ஜெயலலிதா கந்துவட்டி தடைச் சட்டம் கொண்டு வந்தார். கூடுதலான வட்டி வாங்குபவருக்கு 3 ஆண்டு சிறை, 30ஆயிரம் அபராதம். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை. திருப்பூரில் கந்து வட்டி கொடுமை அதிகமாய் இருக்கு. விவசாயம் பொய்த்துப் போய் திருப்பூரை நோக்கி செல்கின்றனர். சட்டம் இருந்தும் புகார் கொடுக்க தயங்குகின்றனர். 2006-ல் 42பேர் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர். பாதிப்பு அதிகமாயிருந்தாலும் பயமே காரணம். காவல்துறையும் கந்துவட்டிக் கும்பலுடன் கை கோர்த்துள்ளது, ஆனால் காவல்துறையில் சேருவதற்கே வட்டிக்கு பணம் வாங்கியே பெற்றோர் சேர்க்கின்றனர், ஆனா அந்தக் கொடுமையை இவர்கள் உணர்வதில்லை. கந்துவட்டி கும்பல் போலீசு இரண்டுக்கும் எதிராக போராட வேண்டி உள்ளது.

BHEL மிகப்பெரிய கம்பெனி, இங்க ஆர்டர் இருந்தால் வேலை நிறைய இருக்கும். ஆனா இப்ப சீனாவில் இருந்து கொதி கலன்கள் இறக்குமதியாகிறது. அதனால் இங்குள்ள சிறு கம்பெனிகள் இழுத்து மூடப்படுவதால் கந்துவட்டியை நோக்கி செல்லும் நிலை உள்ளது.

நெல்லை மாவட்டம் தூத்துக்குடி, கன்னியாகுமாரி மாவட்டத்தின் அச்சுறுத்தலாக இருந்த திமிங்கிலம் வைகுண்டராஜனுக் கெதிராக போராடி வெற்றியை சாதித்த எமக்கு இந்த கருவாட்டு கூட்டம் எம்மாத்திரம்” என உணர்வூட்டினார்.

ம.க.இ.க மையக் கலைக்குழு தோழர்கள் கந்துவட்டி, காவல்துறையை திரை கிழிக்கும் பாடல்களை எழுச்சியுடன் பாடினார்கள்.

அஞ்சி அஞ்சி ஆவதென்ன…..
அடங்கியதால் லாபமென்ன
நெஞ்சிலே பயம் எதற்கு போராடு
அது- நெருஞ்சி முள்தான் பிடுங்கி எறி வேரோடு..

ஏழைமக்கள பாதுகாக்க
போலீசு இருக்குதா
நம்மை ஏய்த்து பிழைக்கும் கூட்டத்தையே
பாதுகாக்குதா…

உழைக்கும் மக்கள் பாடல்களை ஆர்வத்துடன் கவனித்தனர்.

தமிழக அரசே!
கந்து வட்டிக் கும்பலிடமிருந்து
துவாக்குடி மக்களை மட்டுமல்ல
போலீசாரையும் மீட்க வேண்டும்

என்ற கோரிக்கை அரசின் செவிப்பறையை கிழித்திருக்கும் என நம்புகிறோம்,

விடை கிடைக்காத போது மீண்டும் வீதியில் இறங்குவோம்! மக்களை திரட்டி போராடுவோம்.

செய்தி
பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி.

  1. கடன் வாங்கும் நிலை இன்று மக்களுக்கு இயல்பாக வருவது எப்படி?

    உதாரணமாக இன்று ஒரு தொழிலாளியோ அல்லது சிறு விவசாயியோ கடன் வாங்காமல் குடும்பம் நடத்த முடிகிறது என்றால், இந்த அரசாங்கத்தின் தவறான திட்டங்களால் (அவர்களுக்கு வேறு வழி இல்லை ) விலைவாசி உயர்வு அதிகரிக்கிறது, அப்பொழுது ஏற்கனவே கடன்வாங்கமல் வாழ்ந்த குடும்பம் இப்பொழுது விலைவாசி உயர்வால் வேறுவழி இல்லமால் செலவை ஈடு கட்ட கடனில் விழ வேண்டி இருக்கிறது. ஆனால் மக்களுக்கு இதற்கான காரணம் தெரிவதில்லை. தன்னுடைய இந்த நிலைமைக்கு இந்த மக்களுக்கு எதிரான அரசு தான் காரணம் என்பதை புரிய வைக்க வேண்டும். ( விலைவாசி உயர்வு அதிகரிக்கும் போதெல்லாம் மத்திய, மாநில அரசுகள் அதாவது மக்களிடம் இருந்து அரசு ஊழியர்களை பிரிக்க, மக்களை ஒடுக்க ஒரு கருவியாக பயன்படுத்த சம்பள உயர்வை அதிகரிக்கிறது, அதானால் தான் ஒரு பள்ளி ஆசிரியர் கூட கந்து வட்டி தொழில் செய்கிறார்.)

    மற்றபடி விபத்து, திருமணம் போன்ற திடீர் செலுவுகலாலும் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப் படுகிறார்கள்.

  2. பஜாரி என்ற பதம்தான் உறுத்துது .. பணம் சம்பாரிக்க ஒவ்வொரு மனிதனும் பெரிய முதலாளிகளை பின்பற்றுவது சமூக அவலம் ,உழைக்கும் ஏழை எளிய மக்களின் நிலைதான் பரிதாபத்திற்கு உரியது …

Leave a Reply to மணி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க