privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகூகிள், ஆப்பிள் ஆதிக்கத்திற்கெதிராக அமெரிக்க மக்கள் போராட்டம் !

கூகிள், ஆப்பிள் ஆதிக்கத்திற்கெதிராக அமெரிக்க மக்கள் போராட்டம் !

-

வால் வீதியும், நிதித்துறை நிறுவனங்களும், பங்குச் சந்தைகளும் கொடி கட்டிப் பறப்பது அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள நியூயார்க் மாநகரில் என்றால், 19-ம் நூற்றாண்டு தங்க வேட்டையினால் வளர்ச்சியடைந்து, கடந்த 20 ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் உலகத் தலைநகராக உருவாகியிருப்பது மேற்குக் கடற்கரையில் இருக்கும் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரம்.

சான்பிரான்சிஸ்கோ ஆர்ப்பாட்டம்
சான்பிரான்சிஸ்கோ மாநகராட்சி முன்பு ஜனவரி 21 அன்று நடந்த ஆர்ப்பாட்டம்.

சான்பிரான்சிஸ்கோ மாநகராட்சியில் கடந்த 21-ம் தேதி இது வரை கேள்விப்பட்டிராத புது பிரச்சனை தொடர்பாக பொது கருத்துக் கேட்பு ஒன்று நடைபெற்றது. மாநகரின் பொதுப் போக்குவரத்து பேருந்து நிறுத்தங்களில், சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஊழியர்களை அள்ளிச் செல்லும் தனியார் பேருந்துகளை தொடர்ந்து அவ்வாறு பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலித்து அனுமதிக்கலாமா, அல்லது அவற்றை தடை செய்ய வேண்டுமா என்பது மீதான கருத்துக் கேட்புதான் அது.

சான்பிரான்சிஸ்கோ மாநகரின் பேருந்து நிறுத்தங்களில் காலையிலும், மாலையிலும் பொதுப்போக்குவரத்து பேருந்துகளை காத்திருக்க வைத்து விட்டு அதிக உயரத்தில் வெண்ணிற உடம்பு, கருப்பாக்கப்பட்ட கண்ணாடி ஜன்னல்களுடனான வெளிப்புறமும்  குளிரூட்டப்பட்ட, சொகுசு இருக்கைகளுடன் கூடிய, மடிக்கணினியை வைத்து வேலை செய்ய மடிப்பு மேசையும், மின் இணைப்புகளும் பொருத்தப்பட்ட, கம்பியில்லா இணைய இணைப்புடன் கூடிய உட்புறமும் கொண்ட பேருந்துகள் வந்து நிற்கின்றன. அவற்றை இயக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தின் பெயர் கூட எங்கும் எழுதப்படாமல், முன் பக்கக் கண்ணாடியில் சிறு பலகையில் தலைமை அலுவலகத்தின் பெயர் மட்டும் குறிப்பிட்டு வெளிக்கிரகத்திலிருந்து வந்திறங்கிய அதிகார வர்க்கத்தினர் நகர்வலம் வருவதைப் போல சான்பிரான்சிஸ்கோ வீதிகளில் கோலோச்சுகின்றனர். இந்தக் காட்சிகள் சென்னையின் சோழிங்கநல்லூர் அல்லது வடபழனி அல்லது சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தங்களை நினைவூட்டினாலும் தவறில்லைதான்.

கூகிள் பஸ்
கூகிள் வளாகத்துக்கு போகும் பேருந்தில் ஏறும் பயணிகள்.

சாதாரண பேருந்துகளைப் போல இரண்டு வாசல்கள் இல்லாமல் முன்பக்கம் ஒரே ஒரு கதவு மட்டும் உள்ளதால், அவற்றில் ஆள் ஏறி, இறங்குவதற்கு இரண்டு மடங்கு நேரம் பிடிக்கிறது. அவை தம் வேலையை முடித்து விட்டு நகரும் வரை மற்ற ‘சாதாரண’ நகர மக்களுக்கான பேருந்துகள் பணிவாக காத்திருக்க வேண்டியதுதான்.

இதே பேருந்து நிறுத்துமிடங்களில் தனியார் வாடகை கார்கள் நின்று பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ செய்தால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் இந்த பேருந்துகள் தம் விருப்பப்படி கட்டணம் இல்லாமல் பொது வசதியை பயன்படுத்தி வந்திருக்கின்றன.

“இது எல்லாம் ஒரு விஷயமா? மாநகரிலிருந்து சுமார் 60 முதல் 80 கிலோமீட்டர் தொலைவில் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களுக்கு ஒவ்வொருவரும் சொந்தக் காரில் போனால் எவ்வளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும்? எவ்வளவு எரிபொருள் வீணாகும்? அந்த வீணடித்தல்களை தவிர்த்து இப்படிப்பட்ட பேருந்துகளை இயக்குவது சமூகப் பொறுப்புள்ள நடவடிக்கை என்று பாராட்டாமல் எங்களை கரித்துக் கொட்டுகிறீர்களே” என்று நொந்து கொள்கின்றன கூகிள், ஆப்பிள் முதலான அந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள்.

அவர்கள் சொல்லாத இன்னொரு விஷயம், 80 கிலோமீட்டர் தூரத்திற்கு தமது சொந்த காரை ஓட்டிக் கொண்டு அலுவலகத்துக்கு வருவதை விட, வீட்டிற்கு அருகிலேயே நிறுவன பேருந்தில் ஏறி அலுங்காமல் குலுங்காமல் கொண்டு வந்து சேர்த்தால் ஊழியர் வேலை செய்யத் தயாராக இருப்பார். கூடுதல் போனசாக, பேருந்திலேயே மடிக்கணினி, இணைய இணைப்பு வசதி செய்து கொடுத்து அலுவலகத்துக்கு வரும் முன்பாகவே அவர்கள் வேலையை தொடங்குவதற்கும் ஏற்பாடு செய்து கொள்ள முடிகிறது.

கூகிள்இப்படி ஊழியர்களின் கடைசி நிமிடத் துளி வரை வேலை வாங்கும் சாத்தியங்களை ஆய்வு செய்வதில் கூகிள் முதலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பிரசித்தி பெற்றவை. 20 வயதுகளில் இளைஞர்களை உள்ளிழுத்து தேவைப்பட்டால் குட்டித் தூக்கம் போட படுக்கைகள், ஐந்து நட்சத்திர தரத்திலான இலவச உணவு, துணி துவைக்கும் சேவை முதல் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வாரத்துக்கு 60 அல்லது 74 மணி நேரம் வேலை வாங்குவதில் கில்லாடிகள் இந்நிறுவனங்கள். இந்தியாவிலும் ஆரம்பத்தில் இது போன்ற சலுகைகளை கொடுத்து பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அவற்றை படிப்படியாக ஒழித்துக் கட்டியிருக்கின்றன தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள்.

நோக்கம் என்னவாக இருந்தாலும், சான்பிரான்சிஸ்கோ நகரினுள் பொலிகாளைகள் போல சுற்றிக் கொண்டிருந்த இந்த பேருந்துகளும், அவற்றில் பயணிக்கும் வேற்று கிரகத்தவர்களை போல தோன்றும் கார்ப்பரேட் ஊழியர்களும் பல ‘பொறாமை’ பிடித்த நகரவாசிகளின் கண்களை உறுத்தியிருக்கின்றன.

இந்த பேருந்துகளிலிருந்து இறங்கிப் போகும் மிடுக்காக உடை உடுத்திய நபர்கள், பேருந்திலிருந்து வெளிச்சத்துக்கு வந்து கண்கள் கூச, ஏதோ தெரியாத இடத்துக்கு வந்தவர்களைப் போல நடந்து தத்தமது வீடுகளை நோக்கி போகிறார்கள். அவர்களில் பலர் இந்தப் பகுதிக்குப் புதியவர்கள். பெரும்பாலும் இந்தியா, சீனாவைச் சேர்ந்த இளைஞர்கள், 40-50 வயதுகளில் யாரையும் இவர்கள் மத்தியில் பார்ப்பது அரிது. இந்தத் துறையில் 50 வயதுக்கு மேல் ஒருவர் புராதன சின்னமாகி விடுகிறார்.

Protesters block a bus full of Apple employees during a protest against rising costs of living in San Francisco, California, December 20, 2013. REUTERS/Beck Diefenbach (UNITED STATES - Tags: POLITICS BUSINESS EMPLOYMENT CIVIL UNREST) - RTX16PT6
ஆப்பிள் ஊழியர்கள் நிரம்பிய பேருந்தை மறித்து ஆர்ப்பாட்டம் (டிசம்பர் 20, 2013)

கடந்த டிசம்பர் 10-ம் தேதி “பொதுப் பணம், தனியார் லாபம்”, “பொது வசதிகளை சட்ட விரோதமாக பயன்படுத்துவதை நிறுத்து” “வீடு பறித்தல்களை உடனே நிறுத்து” என்ற அட்டைகளைப் பிடித்த போராட்டக்காரர்கள் கூகிள் ஊழியர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்தை வழி மறித்தனர். இதைத் தொடர்ந்து டிசம்பர் 20-ம் தேதி 70 முதல் 100 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் பேருந்தை மறித்து போராட்டம் நடத்தினர். “கட்டுப்படியாகும் வீட்டு வசதிக்கு இறுதி அஞ்சலி” என்று எழுதப்பட்ட கல்லறைகளில் பொருத்தும் நினைவுக் கல் ஒன்றையும் தூக்கிப் பிடித்திருந்தனர்.

சான்பிரான்சிஸ்கோவை அடுத்த ஓக்லாந்தில் கூகிள் பேருந்தின் பின் பக்கக் கதவில் கல் எறியப்பட்டு கண்ணாடி உடைக்கப்பட்டது; டயர் கிழிக்கப்பட்டது. “பேருந்திலிருந்து வெளியில் வந்து எங்களுடன் சேர்ந்து போராடுங்கள்” என்று பேருந்தில் பயணம் செய்யும் கார்ப்பரேட் ஊழியர்களை பார்த்து கூச்சலிட்டனர் போராட்டக்காரர்கள்.

பேருந்துகளில் உட்கார்ந்திருந்த ஊழியர்கள் நாம் என்ன தவறு செய்து விட்டோம் என்று திகைத்துப் போனார்கள்; என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தார்கள்.

பொதுப் பேருந்துகள் ஓரிரு நிமிடங்கள் காத்திருக்க நேர்வது மட்டும் பிரச்சனையில்லை. அதை விட பல மடங்கு தீவிரமான பிரச்சனைகளின் விளிம்புதான் இந்த சொகுசு பேருந்து சேவைகளும், அவை பேருந்து நிறுத்தங்களை இலவசமாக தற்காலிகமாக ஆக்கிரமித்துக் கொள்வதும்.

பேருந்து அடையாளம்
சிறிய எழுத்துக்களில் நிறுவனத்தின் அலுவலக அடையாளத்தை காட்டும் பேருந்து முகப்பு.

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தொடங்கிய கடந்த 25 ஆண்டுகளில் சான்பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே அமைந்திருக்கும் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உருவாகியுள்ள 1,700-க்கும் அதிகமான தொழில்நுட்ப நிறுவனங்களில் 44,000 ஊழியர்கள் பணி புரிகின்றனர். இவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து சலித்து எடுக்கப்பட்ட தொழில்நுட்ப பட்டதாரிகள்.

இந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் சான்பிரான்சிஸ்கோ நகரில் குடியேற ஆரம்பித்தது முதல் வீட்டு வசதி சந்தை வெகுவாக புரட்டிப் போடப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக வசிப்பவர்கள் கூட வாடகைக்கு வீடு தேடும் போது, விளம்பரங்களை பார்த்து சில மணி நேரங்களுக்குள் உரிமையாளரை தொடர்பு கொண்டால்தான் வீட்டைப் பார்க்கக் கூட வாய்ப்பு கிடைக்கிறது. பெரும்பாலான வாடகை அல்லது விற்பனை வீட்டு விளம்பரங்களில் கூகிள் அல்லது ஆப்பிள் பேருந்து நிறுத்தங்கள் அருகில் இருப்பதாக  குறிப்பிடப்பட்டிருக்கின்றது. வீடு பார்க்கப் போகும் போது, மாணவர்கள் போல தோற்றமளிக்கும் இளைஞர்கள் திருவிழாக் கூட்டம் போல வந்திருங்கியிருக்கின்றனர். “வீட்டு வாடகை எவ்வளவு வேண்டும்? கூடுதலா 10% வச்சுக்கோங்க, அட்வான்ஸ் ஒரு வருட வாடகை கூட கொடுத்து விடுகிறேன், நோ பிராப்ளம்” என்று காசோலையை கிழித்துக் கொடுத்து இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர்.

நகரில் பணி புரியும், சாதாரண சம்பளம் ஈட்டும் காவல் துறையினர், நகர சபை ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், உணவக ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், கடைக்காரர்கள், சிறு நிறுவன ஊழியர்கள் யாரும் லட்சக்கணக்கான டாலர்கள் சம்பாதிக்கும் இந்த ‘வெளிகிரகத்து’ மேட்டுக்குடியினருடன் போட்டியிட முடியாமல் போகும் நிலைமை ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. அவர்களில் பலர் ‘சந்தை சக்திகளால்’, தமது வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு வருகின்றனர்.

பேருந்து மறியல்
கூகிள் ஊழியர்கள் பேருந்தை அரை மணி நேரம் தடுத்து நிறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் (டிசம்பர் 9, 2013)

ஐ-போன் விற்பனையும், ஜி-மெயில் பயன்பாடும் அதிகரிக்க அதிகரிக்க, கூகுளும், ஆப்பிளும் வளர வளர, சான்பிரான்சிஸ்கோவின் மீது அழுத்தம் கூடிக் கொண்டே வருகிறது. 20-ம் நூற்றாண்டில் மக்களின் உரிமைப் போராட்டங்களின் விளைவாக ஏற்பட்ட மக்கள் நலத்துக்கான சான்பிரான்சிஸ்கோ நகர லவாடகை சட்டங்களின்படி, குடியிருப்பவர்களின் வசிப்பிட உரிமையை வாடகைக்கு விடுபவர் அங்கீகரிக்க வேண்டும். நினைத்த நேரத்தில், ஓரிரு மாதங்கள் அறிவிப்பு கொடுத்து விட்டு வெளியே போகச் சொல்ல முடியாது. நிதித்துறை மேலாதிக்கம் கோலோச்ச ஆரம்பித்த கடந்த 20 ஆண்டுகளில் இந்த சட்டங்களின் ஓட்டைகளை பயன்படுத்திக் கொண்டு பல பத்தாண்டுகள் வாடகைக்குக் குடியிருந்தவர்களை பணக் குவியல்கள் வீட்டை விட்டு துரத்த ஆரம்பித்தன.

வீட்டுச் சொந்தக்காரர் தானே குடியிருப்பதற்காக குடியிருப்பவரை வெளியேற்றலாம் என்ற விதியின்படி, “எத்தனை லட்சம் ஆனாலும் சரி, வாங்கிக் கொள்கிறேன்” என்று கட்டிடத்தையே வாங்கி, அதில் தானே குடி வரப் போவதாக வாடகைக்கு குடியிருப்பவர்களை வெளியேற்றுவது அதிகரித்து வருகிறது. சராசரி சான்பிரான்சிஸ்கோ உழைக்கும் மக்கள் நகருக்குள் குடியிருப்பது கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

பேருந்து மறியல்
ஜனவரி 21 அன்று நடத்தப்பட்ட பேருந்து மறியல்.

வீட்டு உரிமையாளர்கள் கட்டிடத்தில் குடியிருக்கும் அனைத்து குடும்பங்களையும் வெளியேற்றி விட்டு, அந்த கட்டிடத்தை விற்பதற்கு எல்லிஸ் சட்டம் என்ற மாநில சட்டம் அனுமதிக்கிறது. இதனைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக வசித்து வரும் பலர் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சான்பிரான்சிஸ்கோ நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த 1 ஆண்டில் வாடகைகள் 10 முதல் 135% அதிகரித்திருக்கின்றன. கூகிள் பேருந்து நிறுத்தும் இடங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வாடகை பிற பகுதிகளை விட 20% அதிகரித்திருக்கிறது என்று பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

ஒரு பக்கம், பெரும்பான்மை மக்களது வருமானமும் வாழ்க்கைத் தரமும் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்க, அவர்களது வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்க, அதற்கு காரணமாக ‘நல்ல சம்பளம் கிடைக்கும் துறைகளில் வேலை செய்யும் அளவுக்கு அறிவில்லாத முட்டாள்கள் நீங்கள்’ என்று சொல்லப்பட்டு, அத்தகைய வேலைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஊழியர்கள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். அவர்களிடம் உள்ளூர் மக்கள் தமது வீடுகளையும் பறி கொடுக்கிறார்கள். ஒருவருக்கு, இருவருக்கு என்று ஆரம்பித்து இது நூற்றுக் கணக்கானவர்களை, ஆயிரக் கணக்கானவர்களை பாதித்ததும் இந்தப் போக்குக்கு எதிராக, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பித்திருக்கின்றன.

வெளியேற்றப்பட்டவர்
வெளியேற்றப்பட்டேன்!

“1%-க்கு எதிராக 99% என்ற முழக்கத்தோடு வெற்றிகரமான அமெரிக்க பணக்காரர்களுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய போராட்டங்கள், 1930-களில் ஜெர்மனியில் பாசிச நாஜிக்கள் பணக்காரர்களாக இருந்த 1% யூதர்கள் மீது நடத்திய அச்சுறுத்தல், தனிமைப்படுத்தல், வதை முகாம்களில் அடைத்தல், கூட்டமாக படுகொலை செய்தல் போன்ற நடவடிக்கைகளை ஒத்திருக்கிறது. ஏறி வரும் வாடகை, விலையை கொடுத்து வீடு பிடிக்கும் அளவுக்கு திறமையாக பணம் ஈட்டியிருக்கும் இந்த தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் மீது அவ்வளவு பணம் ஈட்ட இயலாத நாம் நமது ஆத்திரத்தை காட்டுகிறோம். அமெரிக்க சிந்தனையில் இது ஒரு அபாயகரமான திருப்பம்” என்று சொந்தமாக கலிஃபோர்னிய வீடு, இங்கிலாந்து மாளிகை, சான்பிரான்சிஸ்கோ அடுக்குமாடி குடியிருப்பின் உச்ச தள சொகுசு வீடு இவற்றை வைத்திருக்கும், உலகத்திலேயே மிகப்பெரிய தனியார் சொகுசுக் கப்பலை வைத்திருந்த (2009-ல் 6 கோடி பவுண்டு விலைக்கு விற்றார்) டாம் பெர்கின்ஸ் என்ற நிதிமூலதன பண மூட்டை கருத்து தெரிவித்திருக்கிறார்.

உண்மையில் இந்த போராட்டங்கள் 18-ம் நூற்றாண்டில் பிரெஞ்சு ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக மக்கள் நடத்திய கிளர்ச்சியை ஒத்திருக்கின்றன. ஜெர்மனியில் அதிகாரத்தில் இருந்த நாஜிக்க்கள் சிறுபான்மை யூதர்கள் மீது ஒடுக்கு முறையை கட்டவிழ்த்து விட்டார்கள். இன்றைய அமெரிக்காவிலோ, அதிகாரத்தில் இருக்கும் சிறுபான்மை பணக்காரர்கள், பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மீது பொருளாதார அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். புரட்சிக்கு முந்தைய பிரான்சில் அரச குடும்பங்கள், பிரபுக்கள், மத குருக்கள் ஆகியோரின் ஆடம்பர வாழ்க்கைச் சுமையை சுமந்து முதுகு உடைக்கப்பட்ட பிரெஞ்சு விவசாயிகளைப் போல இன்றைய அமெரிக்காவின் நிதிமூலதன 1 சதவீதத்தினராலும், அவர்களுக்கு சேவை செய்யும் தரப்பினராலும் மக்கள் ஒடுக்கப்படுகின்றனர்.

சட்டவிரோத பயன்பாடு
எச்சரிக்கை : பொது வசதிகளை சட்டவிரோதமாக பயன்படுத்துகிறார்கள்

“நாங்களும் உங்களைப் போலத்தான், வீட்டுக் கடன், குழந்தைகளின் படிப்பு, மருத்துவ காப்பீடு, எதிர்கால சேமிப்பு இதற்காக ஒரு நாளைக்கு 12-14 மணி நேரம் உழைத்து ஓடாய்த் தேய்கிறோம். எங்களை மிரட்டுவதற்குப் பதிலாக, பேருந்தில் வர வேண்டிய அவசியமே இல்லாத கூகிள் முதலாளி செர்ஜி பின் போன்றவர்களின் சொந்த ஜெட் விமானங்களை மறித்து போராடுங்கள்” என்கிறார்கள் தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள்.

அப்படி யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை. ஏழ்மையும், வீடு இல்லாமையும், தற்கொலைகளும்  சூழ்ந்திருக்கையில் அந்த சீரழிவுகளுக்குக் காரணமான அமைப்புக்கு சேவை செய்து தமக்கு வசதியான வாழ்க்கையை ஈட்டுவதிலும், பணம் குவிப்பதிலும், வெற்றியடைவதிலும்  மூழ்கியிருப்பவர்கள் தமது செயல்களுக்கு பொறுப்பேற்கத்தான் வேண்டும்.

“நீங்கள் நகருக்குள்ளேயேதான் வாழ வேண்டுமா, எங்களால் கொடுக்க முடிகிற விலையை உங்களால் கொடுக்க முடியவில்லை என்றால் குறைந்த விலை வீடுகள் கிடைக்கும் புறநகர் அல்லது வெளியூர் பகுதிகளில் இடம் பார்த்து போக வேண்டியதுதானே?” என்று அவர்கள் போராடுபவர்களை கேட்கிறார்கள். அதாவது, சாப்பிட ரொட்டி இல்லை என்று புகார் சொல்கிறீர்களே, கேக் சாப்பிட வேண்டியதுதானே என்று பதினெட்டாம் நூற்றாண்டு பிரெஞ்சு அரசி திமிருடன் கேட்கிறார்கள்.

“எங்களைச் சுரண்டும் 1 சதவீதத்தினருக்கு சேவை செய்யும் நீங்கள் வெளியில் வந்து அவர்களை எதிர்த்து போராடுங்கள். உங்கள் கைகளால்தான் எங்களை அவர்கள் ஒடுக்குகிறார்கள்” என்று பதில் சொல்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

கூகிள் பேருந்துகள் நிறுத்தப்படும் அதே பேருந்து நிறுத்தத்தில் தங்குவதற்கு வீடு, உத்தரவாதமான வேலை என்று எந்த வித பாதுகாப்பும் இல்லாத இன்னொரு குடியேறிகள் கூட்டமும் நிற்கிறது. கட்டிட மேஸ்திரிகள் வந்து வேலைக்கு கூப்பிடுவார்களா அல்லது கைது செய்யப்பட்டு வெளியேற்றப்படுவோமா என்று தவித்தபடி நிற்கும் அவர்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள். இவர்களும் அமெரிக்க முதலாளித்துவ சமூக அமைப்பால் உருவாக்கப்பட்டு தூக்கி ஏறியப்பட்டவர்கள்தான். நாளைய கூட கூகிள் ஊழியர்களுக்கும் இந்நிலை வரலாம். ஆனால் அதை புரிந்து கொண்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் அவர்களுக்கு அதிக ஊதியம், சேவைகள் கொடுக்கப்படுகின்றன.

ஆப்பிளும், கூகுளும் தகவல் தொழில் நுட்ப புரட்சியின் ஆதாயத்தை சுருட்டிக் கொள்வது என்பது அமெரிக்க மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டது என்பதோடு இணைந்தது. இன்று பேருந்து நிறுத்தங்களில் துவங்கியிருக்கும் போராட்டம் நாளை கூகிள் தலைமையகத்தை முற்றுகையிடுவது வரை வளர்ந்தே தீரும். இந்த உலகில் முதலாளித்துவ சமூக அமைப்பின் ஏற்றத் தாழ்வான அநீதியை சகித்துக் கொள்ளும் காலம் இனியும் இல்லை.

செழியன்

மேலும் படிக்க