privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபாசிச எம்.ஜி.ஆருக்கு பக்தர்கள் கட்டிய கோவில்

பாசிச எம்.ஜி.ஆருக்கு பக்தர்கள் கட்டிய கோவில்

-

பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு அந்த ராமச்சந்திர மூர்த்தி பிள்ளை வரம் தருகிறாராம். வசூலாகாத கடனெல்லாம் வசூலாகிறதாம், தீராத நோய்கள் தீர்கிறதாம். இவ்வாறாக வெளிவந்த பத்திரிகை செய்தியைக் கண்டதும் பத்தோடு ஒன்று என்று கடந்து செல்ல முடியவில்லை. நேரில் சென்று ’அற்புதங்களைப்’ பார்த்து விடுவது என்று தீமானித்தோம்.

எம்.ஜி.ஆர் கோயில்
பாசிஸ்ட்டு எம்.ஜி.ராமச்சந்திர மூர்த்திக்கு பக்தர்கள் கட்டிய கோயில்.

திருநின்றவூரிலிருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் இடது புறமாக 5 கிமீ தொலைவில் இருக்கும் கிராமம் நத்தமேடு. படு குக்கிராமமான இந்த ஊருக்கு ஒழுங்கான சாலை வசதி கூட கிடையாது. பகுதி அளவிற்கு விவசாயத்தைச் சார்ந்திருக்கும் மக்கள். நாங்கள் சென்ற போது கோவிலில் மந்திரங்கள் ஒலிக்க பூஜைகள் நடந்து கொண்டிருந்தது.

“ஓம் ஆயிரத்தில் ஒருவனே போற்றி! ஓம் இதய தெய்வமே போற்றி ! ஓம் இரட்டை இலை தந்தவா போற்றி, இதயக்கனியே நமக” – பூணூல் அணிந்த பார்ப்பனர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்த மந்திரங்கள் தான் இவை. குழம்பி விட்டீர்களா?

இது அயோத்தி ராமச்சந்திர மூர்த்தியின் கோயிலல்ல; நமது அண்ணாயிஸ்டு மற்றும் பாசிஸ்ட்டு எம்.ஜி.ராமச்சந்திர மூர்த்தியின் கோயில். கோயிலுக்கும் அதில் குடிகொண்டிருக்கும் ஆண்டவனுக்கும் ஓனரான கலைவாணனிடம் பேசினோம்,

“இந்த  கோவிலை எங்கள் சொந்த பணத்தில் கட்டி பராமரித்து வருகிறோம். நான் ஆரம்பத்தில் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர் எல்லாம் கிடையாது. மற்ற ஹீரோ படங்களை விட இறைவன் படங்களை அதிகமா பார்ப்பேன். இறைவன் சி.எம் ஆக இருக்கும்போது கூட எனக்கு அவ்வளவா பிடிக்காது. ஆனா அவர் செத்த பின்னாடி தான் அவரைப் பற்றி பல விசயங்கள் கேள்விப்பட்டேன். அவர் ஏழைகளுக்கு நிறைய செய்திருக்கிறாராம். அதே மாதிரி சிகரெட் தண்ணி அடிக்க மாட்டாராம். இறைவன் நடிச்ச படங்கள்ல கூட அப்படி தவறாக நடிக்காமல் இருப்பதை ஒரு கொள்கையாக வச்சிருந்தாராம். மத்ததை விடுங்க சார், இந்த ஒரு  காரணத்துக்காகவே இறைவனுக்கு கோவில் கட்டலாம் தானே. நான் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் ஸ்டிக்கர் வாங்கி மக்களுக்கு கொடுத்துக்கிட்டு தான்  இருந்தேன். என் மனைவி தான் இப்படி செலவு செய்யிறதுக்கு பேசாம ஒரு கோயில் கட்டலாம் என்று ஐடியா குடுத்தாங்க”.

கலைவாணனின் ’வெற்றிக் கதைக்குப்’ பின்னே அவரது மனைவி இருந்திருக்கிறார். தனது நகைகளைக் கழட்டிக் கொடுத்து உதவியிருக்கிறார். சேர்த்த சொற்ப காசில் இறைவன் வாழ்ந்த புனித தலமான சென்னை நகரத்துக்குள் இடம் கிடைக்கவில்லை அதற்காக அவரது அவதார ஸ்தலமான இலங்கையின் கண்டிக்கா போக முடியும்? எனவே சென்னைக்கு வெளியே இடம் பிடித்து கோயிலைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். இதன்றி கலைவாணனின் பூர்வாஸ்ரமம் குறித்து விசாரித்து தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்த கோவிலை வைத்து பிசினெசை பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்ற இலட்சிய தாகத்தை பார்க்கும் போது ஏதோ கிரைம் ரிகார்டு இறந்த காலத்தில் இருந்தாலும் இருக்கலாம்.

பூமி பூஜை அழைப்பிதழ்”மூணு வருசத்துக்கு முன்னே இதை கட்ட ஆரம்பிச்சோம். எட்டு மாசத்தில் திருப்பணி முடிஞ்சது. ஆகஸ்டு 15 சுதந்திர தினம் அன்று விடுமுறை என்பதால் அன்றைக்கு கும்பாபிசேகம் நடத்தினோம். இதயக்கனி, உரிமைக்குரல் பத்திரிகைகளுக்கு செய்தி சொல்லியிருந்தோம். பத்திரிகைகளில் செய்தியும் வந்தது. அதைக் கேள்விப்பட்டு நிறைய பக்தர்கள் வந்தார்கள்.

கும்பாபிசேகத்துக்கு அப்புறம் ஒரு மண்டலம் விரதம் இருந்து மண்டலபிசேக விழா சரியாக அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடந்த்து. அன்று இறைவனை மாட்டு வண்டியில் எழுந்தருளச்செய்து முதல் தடவையா கிராமத்தில் ஊர்வலமா கொண்டு போனோம்.

சாமி ஊர்வலம்னாக்க மக்கள் தேங்காய் பழம் உடைச்சி மாலை போட்டு வணங்குவாங்க. நம்ம இறைவன் நடிகராச்சே கேவலமா பேசிட்டா என்னா பன்றதுன்னு யோசிச்சோம். சரி, நாமளே ஆள் செட் பண்ணி தேங்காய் பழம் வாங்கி மூணு வீட்டுக்கு ஒரு தபா நாமே தேங்காய் உடைச்சிடலாம்னு முடிவு பண்ணி ஒரு சாக்கு நிறைய தேங்காயோடு போனோம்”

ஆனால், மக்கள் இவர்களை ஏமாற்றவில்லை. இறைவனின் திருவீதி உலாவைக் கேள்விப்பட்டு அவர்களே தேங்காய்ப் பழங்களோடு தயாராக நின்றார்களாம். கலைவாணனிடம் அற்புதங்கள் பற்றிக் கேட்டோம்.

“எனக்கு அதெல்லாம் சரியா தெரியாதுங்க. ஆனா இங்க வர்றவங்க ஏதோ நடக்குதுன்னு சொல்லிக்கறாங்க” என்று பட்டும் படாமல் பேசிக் கொண்டிருந்த போது அவரது மனைவி அவசரமாக குறுக்கிட்டார்.

கும்பாபிஷேகம்
கோயிலை ஆகம விதிப்படி அமைக்கவும், இறைவனின் திருவுருவச் சிலையின் மேல் யாகங்கள் நடத்தி ’சக்தியை ஏற்றவும்’ செய்தது பார்ப்பன புரோகிதர்கள் தான்.

“சார், நான் சொல்றேன் சார். எங்களுக்கே பாருங்க, ஒருத்தன் 17 லச்சம் கடன் வாங்கிட்டு இப்போ அப்போன்னு இழுத்துட்டு இருந்தான். கோயில் கட்டினதுக்கு அப்புறம் வட்டி 4 லச்சத்தையும் சேர்த்து 21 லச்சமா கொடுத்துட்டான். போன வருசம் ஒருத்தரு குழந்தையில்லேன்னு வந்தாருங்க, இப்ப குழந்தை பிறந்துட்டுதுன்னு கேள்விப் பட்டோம்”

கலைவாணன் இதுவரை அடைந்த வெற்றிகளுக்கு மட்டுமல்ல, இதற்கு மேலும் பல உயரங்களை அடையும் வரை அவரது மனைவி ஓயப்போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. எனினும் நெடுஞ்சாலை மைல்கல்லில் புடவை சார்த்தியிருந்தால் கூட கண்டதும் குப்புற விழுந்து வணங்கத் தயாராக இருக்கும் ‘இந்துக்களின்’ ஆன்மீக வறட்சியின் ஆழத்தைத் தான் நம்மால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை.

இந்தக் கதைகள் மேலும் ஒரு சுற்று சுற்றி வரும் போது எம்.ஜி.ஆர் சிவனின் நெற்றிக் கண்ணில் தோன்றிய தீப்பொறி ஒன்றிற்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த அவதாரம் என்ற ’நம்பிக்கை’ தோன்றியிருக்கக் கூடும். பல லட்சம் வருடங்கள் முன்னால் ராமனால் குமித்து வைக்கப்பட்டதாக டுபாக்கூர் விடப்பட்ட மணல் திட்டுக்களைக் கைவைப்பதற்கே ’இந்துக்களின் மத உணர்வுகளுக்கு’ அஞ்சி மத்திய அரசு தயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அவதாரக் கதைகளுக்கு எந்தளவுக்கு மதிப்பு இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

கோயிலில் ஒரு பார்ப்பனரை அர்ச்சகராக அமர்த்தியிருக்கிறார்கள். அவர் மொத்தம் 12 கோயில்களில் பூசை செய்து கொண்டிருக்கிறாராம். அந்தப் பன்னிரண்டில் இதுவும் ஒன்று. மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வேத மந்திரங்களை சுதி பிசகாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தது அவர் தான்.

மேலும் கோயிலை ஆகம விதிப்படி அமைக்கவும், இறைவனின் திருவுருவச் சிலையின் மேல் யாகங்கள் நடத்தி ’சக்தியை ஏற்றவும்’ செய்தது பார்ப்பன புரோகிதர்கள் தான். ஏற்கனவே இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாலும், அதில் பலரது பெயர்கள் இந்து மத அறிஞர்களுக்கே மறந்து போயிருப்பதாலும், அந்தப் பட்டியலில் புதிதாய் ஒரு பெயரைச் சேர்ப்பதில் சிக்கல்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

“இதயக்கனியே நமக” என்று எழுதி தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் ஒரு ஒப்புறவை ஏற்படுத்தவும், “ஆயிரத்தில் ஒருவனே போற்றி” என்று அக்மார்க் தமிழை கருவறைக்குள் புகுத்தவும் பார்ப்பன புரோகிதர்களுக்கு சொற்ப சம்பளமே வழங்கப்பட்டுள்ளது. காசு கொடுத்தால் வரிசையை மீறி சிறப்பு தரிசனமாக சாமியின் அப்பாயின்மெண்டையே சீக்கிரத்தில் வாங்கித்தரும் வல்லமையைக் கொண்டிருக்கும் அவாள்களுக்கு இதெல்லாம் சாதாரண சமாச்சாரங்கள் என்பது கலைவாணன் சொல்லாமலே நமக்கு விளங்கியது.

கும்பாபிஷேக அழைப்பிதழ்வருடாந்திரம் இறைவனுக்கு விரதமிருந்து மாலை போடுவதோடு ஜனவரி 12-ம் தேதியன்று விரதமிருந்து பாதையாத்திரையும் மேற்கொள்கிறார்கள் பக்தர்கள். ஜனவரி 12-ம் தேதியின் சிறப்பு என்ன? அந்த தேதியில் தான் எம்.ஆர்.ராதா இறைவனை துப்பாக்கியால் சுட்டாராம். எனவே தங்கள் இறைவனின் இரண்டாவது பிறப்பை மறு அவதாரமாக கருதி அந்த நாளையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்களாம். பெரியாரின் போர்வாளாக விளங்கிய எம்.ஆர்.ராதா செய்த வேலையை ஒழுங்காகச் செய்யாமல் விட்டாரே என்று இப்போது தோன்றுகிறது.

” சார், இப்பயும் இறைவனோட பக்தர்கள் நெறிய பேரு இருக்காங்க சார்.  இறைவனோட படம் செகண்டு ரிலீசா போட்டாங்கன்னா அலகு குத்தினு போறது, கட்டவுட்டு வக்கிறதுன்னு துட்டை வேஷ்ட் பன்றாங்க சார். அதுக்கு பதிலா கோயிலுக்கு கொண்டாந்து குடுத்தாங்கன்னா கோயிலாச்சும் வளரும் சார். இதையும் மறக்காம எழுதிக்கங்க சார்” கலைவாணனின் மனைவி அக்கறையோடு சொன்னார்.

ஆனால், அவர் அங்கலாய்த்துக் கொள்வது போல் நாட்டில் ஆன்மீகத்தின் நிலைமை அத்தனை மோசமாக இல்லை. கோயிலைக் கட்ட செலவான எட்டு லட்ச ரூபாயில் இரண்டு லட்சத்தை இறைவனின் பக்தர்கள் தங்கள் கைக்காசில் இருந்து கொடுத்துள்ளனர். அதோடு பயபக்தியோடு அவ்வப்போது பாதயாத்திரை செல்வதாகட்டும், விரதமிருந்து மாலை போட்டுக் கொள்வதாகட்டும், இறைவனின் பக்தர்கள் பக்தியில் குறை வைப்பதில்லை. மாலை போட்ட சமயத்தில் அடக்கமான சாமியாக இருப்பதும் மாலையை அவிழ்த்துப் போட்ட பின் அடங்காமல் ஆடுவதும் இந்துத்துவ ஆன்மீகத்தின் இரண்டு உச்சங்கள் என்பதைப் புரிந்து கொள்ளுமளவிற்கு நமக்குத்தான் ஞானமில்லை.

மற்றபடி இந்தக் கோயிலை அ.தி.மு.க அரசு ஏன் இன்னமும் கண்டு கொள்ளாமல்  இருக்கிறது என்று இவர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். நமக்கு அதில் ஆச்சர்யமில்லை. புரட்சித் தலைவியின் வடிவில் அ.தி.மு.கவினர் ஏற்கனவே ஒரு வாழும் தெய்வத்தைக் கட்டிக் கொண்டு மாரடிக்கும் நிலையில் இன்னுமொரு தெய்வத்தையும் குனிந்து வணங்க வேண்டுமென்றால் அவர்களின் முதுகெலும்பை அறுவை சிகிச்சை செய்து அகற்றினால் ஒழிய சாத்தியமில்லை.

அந்த வகையில் கலைவாணன் ஒரு தவறு செய்து விட்டார். எம்ஜிஆரை விடுத்து ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டியிருந்தால அவரே கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கல்லா செழித்திருக்கும். அதிமுக கட்டவுட்டகளில் பிள்ளையார் சுழி போல தம்மாத்துண்டு எம்ஜிஆர் படமும், யானை பிளிறல் போல பிரம்மாண்டமான ஜெயாவும் இடம் பிடித்திருப்பதை பார்த்துக் கூட யார் அதிக சக்தி வாய்ந்த ‘தெய்வம்’ என்று அவருக்கு தெரியவில்லை.

கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு பாசிஸ்ட்டாக நடந்து கொண்ட எம்ஜிஆர் எனும் அற்பங்களுக்கெல்லாம் தமிழகத்தில் ஒரு கோவிலும், பூஜையும் நடக்கிறது என்றால் இங்கே பார்ப்பனிய இந்து மதத்தின் அருகதையை விளங்கிக் கொள்ளலாம். நடிகர்கள், தலைவர்களை அவர்களது இரசிகர்கள் ஆண்டவனாக போற்றி துதிக்கும் பிளக்ஸ் பேனர்களை பார்த்து இரத்தம் கொதிக்கும் இந்துமத வெறியர்கள், உப்பு போட்டு தின்பவர்களாக இருந்தால் இந்த எம்ஜிஆர் கோவிலை எதிர்க்க முடியுமா?

21-ம் நூற்றாண்டில் மதம், கடவுள் நம்பிக்கைகள், சடங்குகள் எல்லாம் எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இந்த எம்ஜிஆர் கோவிலே சாட்சி.

வினவு செய்தியாளர்கள்.