privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமாணவன் அருண்ராஜை தூக்கிலேற்றியது யார் ?

மாணவன் அருண்ராஜை தூக்கிலேற்றியது யார் ?

-

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் அருண்ராஜ் என்கிற மாணவர் திங்கட்கிழமை தனது வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

அருண்ராஜ்
தற்கொலை செய்து கொண்ட மாணவன் அருண்ராஜ்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் தெற்கு கொடிக்கரம்பையைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. அவருடைய மகன் அருண்ராஜ் அறந்தாங்கிக்கு அருகில் குரும்பக்காடு என்ற ஊரில் உள்ள லாரல் தனியார் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை அருண்ராஜை சந்திக்க தந்தை பள்ளியின் விடுதிக்கு வந்திருக்கிறார். மறுநாள், அதாவது திங்கட்கிழமை காலையில் பள்ளி வகுப்பறையின் மேற்கூரையில் உள்ள இரும்புக்கம்பியில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தார் அருண்ராஜ்.

தகவலறிந்து வந்த பெற்றோர், “நேத்து தான் பார்த்துட்டு போனோம்; இன்னைக்கு தூக்குபோட்டு தற்கொலை பண்ணிக்கிட்டதா சொல்றீங்க நாங்க இதை நம்ப மாட்டோம், எங்க பையனோட சாவில் மர்மம் இருக்கிறது” என்று கூறி உறவினர்களுடன் பள்ளிக்கு எதிரே உள்ள சாலையை மறித்துக் கொண்டு போராட்டத்தில் இறங்கினர்.பெற்றோருடன் சி.பி.எம் கட்சியின் உள்ளூர் தலைவர்களும், முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரனும் மறியலில் கலந்துகொண்டனர். அருண்ராஜின் தந்தை முத்துச்சாமி சி.பி.எம் கட்சியை சேர்ந்தவர்.

அருண்ராஜின் தந்தை முத்துச்சாமி,  தனது மகனிடம் சிறப்புக் கட்டணம் ரூ.20 ஆயிரம் கட்டச்சொல்லி நிர்வாகத்தினர் கூறியதாகவும், பள்ளிக்கு வந்து பணம் கட்டுவதாக தெரிவித்ததாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து ஜனவரி இறுதியில் நடத்தப்பட்ட முன்னோட்ட தேர்வில்  அருண்ராஜ் குறைவான மதிப்பெண்களை பெற்றதாக அவர் மீது அளவுக்கதிகமாக அழுத்தம் செலுத்தியிருக்கிறது பள்ளி நிர்வாகம். பெற்றோருக்கும் தகவல் தெரிவித்திருக்கிறது.

தகவலறிந்து ஞாயிற்றுக்கிழமை விடுதிக்கு வந்த தந்தை முத்துச்சாமி அருண்ராஜை சந்தித்து பேசியிருக்கிறார். பொதுவாக நடுத்தர வர்க்கம் தனது விருப்பத்திற்கேற்ப படிக்காத தனது பிள்ளைகளை எப்படி திட்டும் என்பது நாம் அறிந்தது தான். பையன் நன்றாக படிக்க வேண்டும் என்று அதிக செலவில் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் அதன் மூலம் வரும் பொருளாதார அழுத்தத்தை வாரிசுகள் மீது காட்டுவது இயல்பான ஒன்று.

அருண்ராஜின் ஊர் அறந்தாங்கிக்கு அருகில் தான் இருகிறது. எனினும் வீட்டிலிருந்து கொண்டு பள்ளிக்கு போய் வந்தால் பையன் ஒழுங்காக படிக்க மாட்டான், தாங்கள் நினைக்கும் மார்க்கை எடுக்க மாட்டான் என்று கருதிய பெற்றோர் அவனை பள்ளி விடுதியிலேயே தங்க வைத்தனர்.  மகன் மதிப்பெண்கள் குறைவாக எடுத்துவிட்டான் என்று பெற்றோர்கள் திட்டியதால் இந்த தற்கொலை நடந்திருப்பதாக பள்ளி நிர்வாகம் சாமர்த்தியமாக இதை திரிப்பதற்கும் முயலக்கூடும்.

அவ்வாறு பள்ளி நிர்வாகம் இந்த கொலைக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள நினைத்தாலும் சந்தேகத்திற்கிடமின்றி இது கொலை தான். பல்வேறு பெயர்களில் பெற்றோர்களை கொள்ளை அடித்து லாபம் சம்பாதிக்கும் கல்வி தனியார்மயம் என்கிற கொள்கை தான் இந்த கொலையை செய்திருக்கிறது.

தனியார்மய கொள்கையின் விளைவாக புற்றீசல் போல பெருகியுள்ள தனியார் பள்ளிகளின் நோக்கம் சமூகத்திற்கு நல்ல மாணவர்களை உருவாக்குவதல்ல, மாணவர்களுக்கு பதிலாக மதிப்பெண்களை எடுக்கும் எந்திரங்களை உருவாக்குவதை தான் இவை இலக்காக கொண்டிருக்கின்றன. பெற்றோர் விரும்பும், பள்ளி நிர்ணயிக்கும் மதிப்பெண்களை எடுக்கத் தவறும் இயந்திரங்களின் இயக்கத்தை இந்த நாசகார கொள்கை அருண்ராஜின் இயக்கத்தை நிறுத்தியதைப் போல நிரந்தரமாக நிறுத்திவிடும்.

இன்று தனியார் பள்ளிகளும் தற்கொலைகளும் பிரிக்க முடியாதவையாகி விட்டன. அருண்ராஜின் தற்கொலை தனியார் பள்ளிகளில் நடந்த முதல் தற்கொலையுமல்ல, இறுதி தற்கொலையுமல்ல.

குடிமக்களுக்கு கல்வி அளிக்க வேண்டிய அரசு சிறிது சிறிதாக தனது பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டு தனது இடத்தில் கல்விக் கொள்ளையர்களை அமர்த்தி வருகிறது. எனவே கல்விக்கொள்ளையர்கள் இருக்கும் வரை, கல்வியில் தனியார்மயத்தை ஒழித்துக்கட்டும் வரை இதுபோன்ற தற்கொலைகளையோ கொலைகளையோ தடுத்து நிறுத்த முடியாது. தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு பாடை கட்டினால் தான் மதிப்பெண்களுக்காக மாணவர்கள் இவ்வாறு பாடையிலேறுவதை தடுக்க முடியும்.