privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகூகிள், ஆப்பிள், இன்டெல், அடோப் கூட்டு – ஊழியர்களுக்கு வேட்டு

கூகிள், ஆப்பிள், இன்டெல், அடோப் கூட்டு – ஊழியர்களுக்கு வேட்டு

-

“நீங்க நல்லா வேலை செஞ்சா கம்பெனி வளரும், உங்களுக்கும் குரோத் (வளர்ச்சி).  இன்கிரிமென்ட் குறைவா இருக்கேன்னு கவலைப்படாதீங்க, லேர்னிங் (கற்றல்)தான் உங்க கேரியருக்கு முக்கியம். அடுத்த வருஷம் கம்பெனியோட லாபம் அதிகமானா தானா இன்கிரிமென்டும் அதிகமாயிரும். கவலைப்படாம போயி மோட்டிவேஷனோட (ஊக்கமா) வேலை செய்யப் பாருங்க. ஆல் த பெஸ்ட்”.

டெக்டோபஸ்
டெக்டோபஸ் (தகவல் தொழில்நுட்ப துறை ஆக்டோபஸ்)

தகவல் தொழில் நுட்பத்துறையில் எச் ஆர் (மனித வளத்துறை) மேலாளர்களின் இத்தகைய இனிப்பான வார்த்தைகளை கேட்காதவர்கள் இருக்க முடியாது.

“ஐடி துறையில யூனியன் எல்லாம் கெடையாதுங்க. நாங்க கம்பெனியோட கன்சல்டன்ட்ஸ், அசோசியேட்ஸ். என் திறமை, என் கடும் உழைப்பு, என் முயற்சியில நான் முன்னேறிடுவேன். அடுத்தவங்கள பத்தி நான் ஏன் கவலைப்பட மாட்டேன். அதனால, நாங்க கம்யூனிஸ்ட்டு யூனியன்லாம் வைக்க மாட்டோம். எங்களுக்கு போக வர பஸ் அல்லது கேப் வசதி, ஏசி போட்ட ஆபிசு, ஐந்திலக்க சம்பளம். கம்பெனியே எங்களை நல்லா கவனிக்கும் போது நாங்க ஏன் யூனியன் வைக்கணும். ”

இப்படி பேசாத அல்லது நினைக்காத தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களும் அதிகம் இருக்க முடியாது. ஆனால் இப்படி நிறுவனத்திற்கு விசுவாசமாக உழைக்கும் ஊழியர்களை ஐ.டி நிறுவன முதலாளிகள் பதிலுக்கு எப்படி மரியாதை செலுத்துவார்கள்?

மற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ஊழியர்களின் முதுகுக்குப் பின்னால் அவர்களை ஏமாற்றுவது தகவல் தொழில்நுட்பத் துறை முதலாளிகளின் வழக்கமாக இருக்கிறது என்பது பலருக்கும் தெரியுமா? அமெரிக்காவில் அப்படி கூட்டு சேர்ந்த முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவன முதலாளிகளின் கதை இப்போது அம்பலமாகியிருக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் – ஆப்பிள் நிறுவனத்தை நிறுவி தனி நபர் கணினி யுகத்தை ஆரம்பித்து வைத்தவராக போற்றப்படுபவர், தளுக்கான, கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஐ-பாட், ஐ-போன், ஐ-பேட் என்று அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி மேட்டுக்குடியினருக்கான மின்னணுக் கருவிகளின் ‘புரட்சி’யை நடத்தியவர்.

கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான எரிக் ஷ்மித் (நிறுவனர் செர்ஜி பின்) – கூகிள் தேடுபொறி, ஜிமெயில் என்று இணைய உலகில் முன்னணியில் செல்வாக்கு செலுத்தும் நபராக இருக்கிறார்.

கூடவே கணினி புராசஸர் தயாரிக்கும் இன்டெல் நிறுவனம், பலவிதமான வரைகலை மென்பொருட்கள் செய்யும் அடோப் நிறுவனம், ஸ்டார் வார்ஸ் திரைப்பட வரிசைக்கு புகழ் பெற்ற லூகாஸ் பிலிம்ஸ், அனிமேஷன் தொழில்நுட்பத்துக்கு பேர் போன பிக்சார், கணக்கியல் மென்பொருள் தயாரிக்கும் இன்ட்யூட் இவர்கள் முதலாளித்துவத்தின் அடிநாதமான தொழில் முனைவு, சந்தைப் போட்டி, புதியன உருவாக்குதல் இவற்றில் தேர்ந்தவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

ஆனால், உண்மையில் இவர்கள் எல்லாம் ஒண்ணாம் நம்பர் கிரிமினல்கள், தாம் ஏற்றுக் கொண்ட அறங்களையே போட்டு மிதிக்கும் மாஃபியாக்கள், சட்டங்களை கழிப்பறை காகிதமாக மதிக்கும் கேடிகள், தமது மோசடி செயல்களை திறமையாக மறைக்க முயலும் போக்கிரிகள் என்பதற்கான ஆதாரங்கள் அமெரிக்க நீதித் துறை மூலம் மறைக்க முடியாமல் கசிந்திருக்கின்றன.

தமது லாபத்தை அதிகரிப்பதற்காக சீனாவிலும், இந்தியாவிலும் ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்களில் வியர்வைக் கூடச் சூழலில் தொழிலாளர்களைச் சுரண்டி, பல நூறு தொழிலாளர்களை தற்கொலைக்குத் தள்ளி தமது பொருட்களை செய்து வாங்குவது மட்டுமின்றி, அமெரிக்காவில் பணிபுரியும் உயர் தொழில்நுட்ப ஊழியர்களையும் தமக்குள் கூட்டு சேர்ந்து இவர்கள் ஏமாற்றியிருக்கின்றனர். இவர்களது கூட்டுச் சதி நடவடிக்கைகளினால் 2005 முதல் 2009 வரையிலான 5 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் ஊழியர்களுக்கு மொத்தம் $9 பில்லியன் (ரூ 54,000 கோடி) ஊதியம் மறுக்கப்பட்டிருக்கிறது என்று அமெரிக்க நீதித்துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் மதிப்பிடுகின்றன.

பிக்சாரும் லூகாஸ் ஃபில்மும்

ஜார்ஜ் லூகாஸ்
முதலாளிகள் தமக்குள் போட்டி போடக் கூடாது என்பது ஸ்டார் வார்ஸ் புகழ் ஜார்ஜ் லூகாசின் கோட்பாடு.

இத்தகைய சதித் திட்டங்களுக்கு முன்னோடியாகவும், தாதா நம்பர் 1 ஆகவும் இருந்தவர் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ். 1980-களின் மத்தியில் ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களுக்குப் புகழ் பெற்ற ஜார்ஜ் லூகாஸிடமிருந்து அவரது நிறுவனத்தின் கணினி தொழில்நுட்பப் பிரிவை வாங்கி பிக்சார் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய போது, ஜார்ஜ் லூகாஸ் தனது முதலாளித்துவ கோட்பாட்டை வரையறுத்திருக்கிறார்.

“நிறுவனங்கள் ஊழியர்களுக்காக தமக்குள் போட்டி போடக் கூடாது, அது இயல்பான (முதலாளிகளுக்கிடையேயான) தொழில்துறை போட்டி நிலைமையை பாதிக்கும்” என்று லூகாஸ் கருதினார். “ஊழியர்களை எடுப்பதற்காக மற்ற நிறுவனங்களுடன் சம்பள போட்டிச் சண்டையில் நாம் இறங்கக்  கூடாது என்பதுதான் என்னுடைய கோட்பாடு” என்கிறார் அவர். அதை ஏற்றுக் கொண்ட பிக்சார் நிறுவனம் போட்டி தவிர்க்கும் ஒப்பந்தத்தை கடைப்பிடிப்பதாக லுகாசுக்கு உறுதியளித்து.

அந்த ஒப்பந்தத்தின்படி லூகாசின் நிறுவனமும் பிக்சாரும்

  1. ஒரு நிறுவனம் மற்றதின் ஊழியர்களை வேலை தருவதாகச் சொல்லி அணுகக் கூடாது.
  2. மாற்று நிறுவனத்தின் ஊழியர் தானாகவே வேலை கேட்டு அணுகினாலும், அவருக்கு தெரியாமலேயே அவரது தற்போதைய நிறுவனத்திற்கு தகவல் சொல்லி விட  வேண்டும்.
  3. ஒரு ஊழியருக்கு வேலை கொடுக்கும் போது தருவதாகச் சொன்ன சம்பளம் இறுதியானது. ஊழியரது தற்போதைய நிறுவனம் ஊதியத்தை கூட்டிக் கொடுப்பதாக சொன்னால், அதற்கு இணையாக சம்பளத்தை ஏற்றக் கூடாது.

அதாவது, “ஊழியர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதில் ஒருவருக்கொருவர் போட்டி போடக் கூடாது. அது இரண்டு பேரின் லாப ஈட்டலுக்கும் நல்லது” என்று ஒப்பந்தம். ஆனால் இந்த அறம் முதலாளிகளுக்கு மட்டும்தான், ஊழியர்களுக்கு அல்ல.

கார்ப்பரேட் நிறுவனங்கள் இடுபொருட்களை வாங்கும் சந்தைகளிலும், உற்பத்திப் பொருட்களை விற்கும் சந்தைகளிலும் ரகசிய கூட்டு வைத்துக் கொள்வதன் மூலமாகவோ, அரசுகள் மூலம் போர் நடத்தி போட்டி நிறுவனங்களை ஒழித்துக் கட்டுவதன் மூலமாகவோ, அவற்றை விலைக்கு வாங்கி விடுவதன் மூலமாகவோ, போட்டியை தவிர்த்துக் கொள்வது முதலாளித்துவத்தின் அடிப்படை அம்சமாக மாறி ஆண்டுகள் பல ஆகி விட்டது. இருப்பினும், முதலாளித்துவத்தின் மகத்துவத்தையும் சந்தைப் போட்டியின் புனிதத்தையும் பற்றி இவர்கள்தான் வாய் கிழிய உலகெங்கும் பாடம் நடத்துகிறார்கள்.

அமெரிக்காவில், ஒரே துறையில் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து போட்டியை தவிர்ப்பதற்காக ஷெர்மன் கூட்டுச்சதி எதிர்ப்பு சட்டம், கிளேய்டன் கூட்டுச்சதி எதிர்ப்பு சட்டம் போன்றவை இருந்தாலும், அவை ஆளும் வர்க்கங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை அமைதி வழியில் தீர்த்துக் கொள்வதற்கு தேவைப்படும் போது மட்டும் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பயன்படுத்தப்படுகின்றன. அது போல அமெரிக்க நீதித் துறை இப்போது சிலிக்கன் பள்ளத்தாக்கு முதலாளிகள், ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதில் செய்து கொண்ட கள்ளக் கூட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. சொல்லப் போனால் இந்த வழக்கும் கூட ஏதோ ஒரு வகையில் வேறு சில முதலாளிகளுக்கு ஆதாயமாகவும் இருக்கலாம்.

இத்தகைய வழக்குகள் கார்ப்பரேட் உலகின் செயல்பாடுகளின் வகை மாதிரிகளை வெளிச்சம் போட்டு காட்டி அவற்றை தலைமை ஏற்று நடத்தும் உத்தமர்களின் யோக்கியதையை திரை கிழிக்கின்றன என்ற வகையில் நமக்கும் உதவுகின்றன.

பிக்சாரும் ஆப்பிளும்

2004-ம் ஆண்டுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிக்சார் நிறுவனம் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் அனுமதி பெற்ற பிறகே ஆப்பிள் ஊழியர்களில் யாருக்கும் வேலை கொடுக்க முன் வந்தது பிக்சார். பிக்சார் தானாக அந்த ஊழியரை அணுகியிருந்தாலும் சரி, அல்லது அந்த ஊழியர் பிக்சாருக்கு தானாகவே விண்ணப்பித்திருந்தாலும் சரி இதே நடைமுறை பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது.

2007-ம் ஆண்டு பிக்சார், ஆப்பிள் நிறுவனங்களின் மனிதவளத் துறை மேலாளர்கள்  பிக்சாருக்கும், லூகாஸ் பிலிமுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை போன்றே தமது நிறுவனங்களுக்கு இடையேயும் போட்டுக் கொள்வதாக முடிவு செய்திருக்கின்றனர். பிக்சார் மேலாளர் லோரி, “லூகாஸ் பிலிமுடனான ஒப்பந்தத்தைப் ஆப்பிளுடனும் பின்பற்றப் போகிறோம்” என்று தனது ஊழியர்களுக்கு தெரிவித்திருக்கிறார். “அதாவது நாமோ நம்மால் அமர்த்தப்படும் ஆள் எடுக்கும் (பிடிக்கும்) நிறுவனங்களோ வேலை தருவதாகக் கூறிக் கொண்டு எந்த ஒரு ஆப்பிள் ஊழியரையும் நேரடியாக அணுகக் கூடாது. ஆப்பிள் ஆள் எடுக்கும் துறையையும் இதன்படி நடந்து கொள்ளும்” என்று கூறியிருக்கிறார்.

ஆப்பிளும் கூகிளும் – கூட்டுக் களவாணிகள்

ஸ்டீவ் ஜாப்ஸ் - எரிக் ஷ்மித்
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் –  கூகிள் சிஈஓ எரிக் ஷ்மித் போட்டுக் கொண்ட போட்டி போடா ஒப்பந்தம்

இத்தகைய கள்ளக் கூட்டு ஒப்பந்தங்களைப் போட்டுக் கொள்வதற்கு ஒரே நபர் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடைமுறையை பயன்படுத்தி வருகின்றன கார்ப்பரேட்டுகள். உதாரணமாக பில் கேம்ப்பெல் என்பவர் இன்ட்யூட் நிறுவனத்தின் இயக்குனராகவும், ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை இயக்குனராகவும், கூகிள் நிறுவனத்தின் ஆலோசகராகவும் இருந்து வரும் கார்ப்பரேட் தரகர். அவரது ஆலோசனையின்படி ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சும் கூகிள் முதன்மை செயல்பாட்டு அலுவலர் எரிக் ஷ்மித்தும் ஊழியர்களுக்காக போட்டி போடா ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர்.

அந்த “கனவான்களுக்கிடையேயான ஒப்பந்தத்துக்கு” முன்பு 2005-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் கூகிளுக்கு எதிராக போர் பிரகடனமே செய்திருக்கிறார். ஆப்பிளின் சஃபாரி (இணைய உலாவி) பிரிவிலிருந்து யாரையும் எடுப்பதை தவிர்க்கும்படி கூகிளின் செர்ஜி பின்னை எச்சரித்த அவர் ”இவர்களில் ஒருவரைக் கூட நீங்கள் எடுத்தாலும் அதை போராகத்தான் நான் கருதுவேன்” என்று மிரட்டியிருக்கிறார்.

ஆப்பிளுடன் ஒரு ஒப்பந்தம் குறித்து முடிவு செய்வது வரை ஆப்பிள் ஊழியர்களை வேலை கொடுப்பதாக அணுகுவதை நிறுத்தி வைக்குமாறு செர்ஜி பிரின் உடனடியாக தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

“கூகிள் நிறுவனம் ஆப்பிளிலிருந்து யாரையும் வேலைக்கு எடுக்கும் முயற்சிகளை எரிக் ஷ்மித் நேரடியாக தலையிட்டு உறுதியாக தடுத்து நிறுத்தியிருக்கிறார்” என்று பில் கேம்பெல் ஸ்டீவ் ஜாப்சுக்கு மின்னஞ்சல் அனுப்பி சமாதானப்படுத்தியிருக்கிறார்.

ஆப்பிள் மனித வளத் துறை மேலாளர் டேனியல் லம்பெர்ட், கூகிளை தொந்தரவு செய்யக் கூடாதவர்களின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளும்படி தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். “ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தின் ஊழியர்களை பணிக்கு எடுக்கப் போவதில்லை என்ற ஒப்பந்தத்தை சமீபத்தில் நாம் போட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே, அவர்கள் அப்படி ஏதாவது செய்வதாக உங்களுக்குத் தெரிய வந்தால் எனக்கு தவறாமல் அறியத் தாருங்கள். அதே போல் நம் பக்கமும் ஒப்பந்தத்தை மீறாமல் நடந்து கொள்ளுங்கள்.” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

கூகிளின் மனித வளத்துறை மேலாளர் அர்னன் கெஷூரி தயாரித்த “ஆள் எடுப்பதற்காக அழைக்கக் கூடாத நிறுவனங்கள்“ பட்டியலின் வரைவு எரிக் ஷ்மித், லேரி பேஜ் (கூகிள் நிறுவனர்), செர்ஜி பின் (கூகிள் நிறுவனர்), ஷோனா பிரவுன் (மூத்த துணைத் தலைவர்) ஆகியோரைக் கொண்ட உயர்மட்டக் குழுவிற்குத் தரப்பட்டது. அதாவது, இத்தகைய ஒப்பந்தங்கள் ஏதோ ஓரிரு நபர்களால் திருட்டுத்தனமாக செய்யப்பட்டவை இல்லை, இவை கார்ப்பரேட் உயர்மட்ட மேலாளர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

“கூகிளின் போட்டியாளர்களுடன் இந்த பட்டியலை பகிர்ந்து கொள்வதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா” என்று ஷோனா பிரவுன் கேட்ட போது, “வாய் மொழியாக மட்டும் பகிர்ந்து கொள்ளலாம். எழுத்தில் அனுப்பினால் பின்னர் வழக்குகளில் மாட்டிக் கொள்ள நேரிடும்” என்று எரிக் ஷ்மித் அறிவுரை கூறியிருக்கிறார். பெயரளவில் இருக்கும் சட்டங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் இவர்கள் கில்லாடிகள்தான்.

2007-ம் ஆண்டு ஆப்பிள் ஊழியர் ஒருவரை கூகிள் பணிக்கு அமர்த்த முயற்சித்ததை அறிய வந்த ஸ்டீவ் ஜாப்ஸ், “உங்கள் மனித வளத்துறை இது போன்ற செயல்களை நிறுத்தினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்ற குறிப்பை எரிக் ஷ்மித்துக்கு அனுப்பியிருக்கிறார். ஒரு மணி நேரத்துக்குள், கூகிள் அந்த நிகழ்வோடு தொடர்புடைய மனித வளத் துறை மேலாளரை வேலை நீக்கம் செய்து ஒரு எச்சரிக்கும் முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதன் மூலம், இனிமேலும் எதிர்காலத்தில் இது போன்று நிகழ்வதை தடுத்திருக்கிறது.

இத்தகைய ஒத்துழைப்புகளுக்கு வசதியாக எரிக் ஷ்மித் ஆப்பிள் இயக்குனராக 2009 வரை பணியாற்றியிருக்கிறார்.

ஆப்பிளும் அடோபும் – ஆண்டானும் அடிமையும்

கூகிளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஸ்டீவ் ஜாப்ஸ், அதே மாதிரியான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும்படி அடோப் நிறுவனத்தை கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

ஆப்பிள்- அடோப்
ஆப்பிள் போட்டியை தவிர்க்க விரும்புவதை அடோப் ஏற்றுக் கொண்டே தீர வேண்டும்.

2005-ம் ஆண்டு மே 25-ம் தேதி ஸ்டீவ் ஜாப்ஸ், அடோப் முதன்மை செயல்பாட்டு அலுவலர் புரூஸ் சிசனிடம், ஆப்பிளின் ஊழியர்களை அடோப் வேலைக்கு எடுப்பதாக புகார் கூறினார்.

புரூஸ் சிசன், “உயர் மட்ட ஊழியர்களை எடுக்கக் கூடாது என்றுதான் நாம் ஒத்துக் கொண்டோம். அதே போல தொடரலாம் என்று நான் கருதுகிறேன். நீங்கள் விரும்பினால் இது குறித்து மேற்கொண்டு பேசலாம். எதுவாயிருந்தாலும் நாம் இருவரும் ஒத்தக் கருத்துக்கு வருவதை விரும்புகிறேன்” என்று பணிவுடன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அவரது பதிலில் திருப்தியடையாத ஸ்டீவ் ஜாப்ஸ், “அப்படியா சரி, மூத்த இயக்குனர் அல்லது துணைத் தலைவர் மட்டத்தில் அல்லாத அடோப் ஊழியர் யாரையும் அணுகலாம் என்று எங்கள் ஆள் எடுப்பவர்களிடம் சொல்லி விடுகிறேன். இதுதான் உங்க விருப்பமா?” என்று அடோப் ஊழியர்களை குறி வைத்து தன் நிறுவனத்துக்கு கடத்தப் போவதாக மிரட்டி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.

புரூஸ் சிசன் உடனடியாக சரணடைந்திருக்கிறார்ர். “நாம் இருவரும் எந்த ஊழியரையுமே அணுக வேண்டாம் என்ற ஒப்பந்தத்தையே நானும் விரும்புகிறேன். உங்களுக்கு இது சம்மதமானால், எங்கள் ஆட்களிடம் முறையாக தகவல் தெரிவித்து விடுகிறேன்” என்று மண்டியிட்டு பாதம் பணிந்திருக்கிறார். $100 பில்லியன் டாலர் ஆப்பிள் என்ற கோலியாத்துக்கு முன்பு குள்ளமணியாக நிற்கும் $3 பில்லியன் டாலர் அடோபுக்கு வேறு வழியிருக்கவில்லை.

தன் நிறுவனத்தின் பிற உயர்மட்ட மேலாளர்களிடம் இது குறித்து விளக்கிய புரூஸ் சிசன், “ஸ்டீவ் ஜாப்சிடம் மேல் மட்ட ஊழியர்களை தவிர மற்றவர்களை எடுப்பதில் எந்தத் தடையும் இல்லை என்று நான் சொன்னால், அவர் வேண்டுமென்றே அடோப் ஊழியர்களை கடத்த முயற்சித்து தனது வாதத்தை நிரூபிக்கப் பார்ப்பார். அவர்களை அசாதாரணமான ஊதியங்கள் கொடுத்து இழுத்து விடுவார்” என்று புலம்பியிருக்கிறார்.

அடுத்த நாள், அடோப் நிறுவனத்தின் மனித வளத்துறை மேலாளர் தெரசா “புரூசும், ஸ்டீவ் ஜாப்சும் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின்படி நாம் எந்த ஆப்பிள் ஊழியரையும் அணுகக் கூடாது. அவர்களும் நம் ஊழியர்களை அணுக மாட்டார்கள்” என்று தனது ஊழியர்களிடம் அறிவித்திருக்கிறார்.

இன்டெலும் கூகிளும் – ஒன்றுக்குள் ஒன்று

இன்டெல் முதன்மை செயல்பாட்டு அலுவலர் பால் ஒத்தெல்லினி 2004-ம் ஆண்டு கூகிள் இயக்குனர் குழுவில் சேர்க்கப்பட்டிருந்தார். இயக்குனர் கூட்டம் நடக்கும் போது மட்டும் தலையைக் காட்ட வேண்டிய அந்த கஷ்டமான வேலைக்காக அவருக்கு 2007-ம் ஆண்டு $2.3 கோடி (சுமார் ரூ 110 கோடி) வருமானம் வந்தது. இது தவிர, கூகிள் பங்குகளை வாங்கும் உரிமையின் மூலமாகவும் பல நூறு கோடிகள் சம்பாதித்து வந்தார்.

ஐடி முதலைகள்
ஐடி பெருநிறுவனங்கள்

எனவே, இன்டெல் நிறுவனத்துடன் ஆள் எடுப்பு தடுப்பு ஒப்பந்தம் போட்டுக் கொள்வதில் கூகிளுக்கு சிரமம் எதுவும் இருக்கவில்லை. இன்டெலுடனான கூகிளின் ஒப்பந்தத்தில் உயர்மட்ட கார்ப்பரேட் தரகரான பில் கேம்பெலும் பங்களித்திருக்கிறார். “எந்த ஒரு இன்டெல் ஊழியருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு முன்பு கூகிள் இன்டெல் தலைவர் பால் ஒத்தெல்லினியிடம் ஒப்புதல் பெற வேண்டும்” என்று 2006-ம் ஆண்டிலேயே பில் கேம்பல், கூகிளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்.

2007-ம் ஆண்டு பால் ஒதெல்லினி இன்டெல் மனித வளத்துறை ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் “கூகிளுடன் ஊழியர் சேர்ப்பதில் போட்டியை தவிர்க்கும் கொள்கையை நாம் பின்பற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். கூகிளின் எரிக் ஷ்மித் பால் ஒதெல்லினிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் “இன்டெலுடனான எங்கள் ஆள் எடுப்பு கொள்கையை நான் சரி பார்த்து விட்டேன். எங்கள் மனித வளத் துறையினர் யாரும் இன்டெல் அல்லது அதன் துணை நிறுவனங்களின் ஊழியர்களை நேரடியாக அணுகவோ, தொடர்பு ஏற்படுத்திக்  கொள்ளவோ, மின்னஞ்சல் அனுப்பவோ செய்ய மாட்டார்கள். அப்படி ஏதாவது உங்களுக்குத் தெரிய வந்தால் உடனேயே தெரியப்படுத்தவும்.” என்று உறுதி செய்திருக்கிறார்.

இன்டெல் மனித வளத் துறை ஊழியர் ஒருவர் பால் ஒத்தெல்லினியிடம், “கூகிள் உயர் மட்ட ஊழியர்களை நாம் அணுகுவதை தடை செய்யும்படி ஏதாவது ஒப்பந்தம் இருக்கிறதா” என்று மின்னஞ்சலில் கேட்டிருக்கிறார். பால் ஒத்தெல்லினி, “எழுத்தில் எந்த ஒப்பந்தமும் இல்லை. ஆனால்,  எனக்கும் எரிக் (ஷ்மித்)-க்கும் மத்தியில் ஒரு வாய் வழி ஒப்பந்தம் உள்ளது” என்று பதில் சொல்லியிருக்கிறார்.

2007-ம் ஆண்டு அவரது நிறுவனத்தின் தொழில்நுட்ப ஊழியர் ஒருவரை கூகிள் வேலைக்கு எடுக்கப் போவதாகத் தெரிய வந்ததும், பால் ஒத்தெல்லினி “எரிக், இது குறித்து நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா” என்று ஒரு தகவல் அனுப்பியிருக்கிறார். அடுத்த நாளே, “அந்த மேலாளர் இன்டெலுக்குள் மூக்கை நுழைத்திருக்கிறார் என்று தெரிய வந்தால் அவரை வேலையை விட்டே நீக்கி விடுவோம்” என்று எரிக் ஷ்மித் பதில் எழுதியிருக்கிறார்.

இன்டெலும், பிக்சாரும்

அக்டோபர் 2008-ல் பிக்சார் ஊழியர்களை அணுகுவதில்லை என்று இன்டெல் பிக்சாருக்கு உறுதியளித்தது.

கூகிளும் இன்ட்யூட்டும்

பில் கேம்பெல் தான் இயக்குனராக பணி புரிந்த இன்ட்யூட் கூகிளுடன் போட்டி தவிர்ப்பு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும்படி வற்புறுத்தினார். ஜூன் 12, 2007-ல் இன்ட்யூட் கூகிளின் அணுகலை தவிர்க்க வேண்டிய நிறுவனங்களின் பட்டியலில் முழுமையாக சேர்க்கப்பட்டது.

இந்த ஒப்பந்தங்களை பின்பற்றி ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஊதியங்களை குறைந்த மட்டத்தில் வைத்துக் கொள்ள வசதியாக இந்நிறுவனங்கள், பல்வேறு பதவிகளுக்கு தாம் கொடுக்கும் ஊதிய விகிதங்கள் பற்றிய விபரங்களை தமக்குள் பகிர்ந்து கொண்டிருக்கின்றன. அதன் மூலம், ஒரு நிறுவனம் கூட தவறிப் போய் கூடுதல் சம்பளம் கொடுத்து மற்றவர்கள் மீது அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ஆப்பிளும் பாம் நிறுவனமும் – நசுங்கி மறைந்து போன பாம்

பாம் நிறுவனத்துடனும் இதே போன்ற ஒப்பந்தத்தில் நுழைய ஆப்பிள் நிறுவனத்தின் ஜாப்ஸ் முயற்சித்தது வெற்றியடையவில்லை.

ஸ்டீவ் ஜாப்ஸ் - பாம்
“மரியாதையாக நல்ல முடிவு எடுங்கள்” பாம் நிறுவனத்தை மிரட்டினார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி ஸ்டீவ் ஜாப்ஸ், பாம் நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் எட்வர்ட் கொல்லிகனை அழைத்து, “உயர் தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளிட்டு ஊழியர் யாரையும் நாம் இருவரும் பரஸ்பரம் எடுப்பதில்லை” என்று ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும்படி கோரியிருக்கிறார். பாம் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் ஆப்பிள் வசம் இருக்கும் வடிவுரிமை (patent)களை பயன்படுத்தி அதற்கு எதிராக பழிவாங்கும் வழக்குகள் தொடரப் போவதாகவும் மிரட்டியிருக்கிறார்.

எட்வர்ட் கொல்லிகன் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தார். அது தவறு என்றும் சட்ட விரோதம் என்றும் அவர் மறுத்தார். “உங்கள் வடிவுரிமை வழக்குகளுக்கு எதிராக எங்கள் வடிவுரிமைகளை பயன்படுத்துவோம்” என்று அவர் பதிலளித்தார்.

அதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ், “நம் இரு நிறுவனங்களின் நிதி வலிமை ஏற்றத் தாழ்வு நீங்கள் அறியாதது இல்லை. வழக்குகளை நடத்துவதற்கு யார் அதிக பணம் செலவழிக்க முடியும் என்றும் உங்களுக்குத் தெரியும். உங்கள் வடிவுரிமை கையிருப்பை இன்னும் ஒருமுறை கவனமாக பரிசீலித்து மரியாதையாக நல்ல முடிவு எடுங்கள்” என்று அன்பாக மிரட்டியிருக்கிறார்.

கடைசியில், தமது ஊழியர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று ஸ்டீவ் ஜாப்சின் கோரிக்கையை ஏற்க மறுத்த எட்வர்ட் கொல்லிகனின் பாம் நிறுவனம் இன்று அட்ரஸ் இல்லாமல் காணாமல் போய் விட்டிருக்கிறது (எச்.பி. நிறுவனத்தால் விழுங்கப்பட்டிருக்கிறது). அதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற ஆட்கொல்லி மிருகத்தின் தாக்குதலும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அறங்களைப் பின்பற்ற நினைக்கும் யாரும் சந்தையிலிருந்து ஈவு இரக்கமின்றி துடைத்து எறியப்படுவார்கள் என்பது ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்கள் நன்கு அறிந்த உண்மை.

இவர்களோ, இவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களோ அடுத்த வேளை சோத்துக்கு வழியில்லாமல் திண்டாடுபவர்கள் கிடையாது. 2011-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த விற்பனை வருவாய் $108 பில்லியன் (சுமார் ரூ 5.5 லட்சம் கோடி), கூகிள் $38 பில்லியன் (சுமார் ரூ 2 லட்சம் கோடி),  இன்டெல் $54 பில்லியன் (சுமார் ரூ 3 லட்சம் கோடி), அடோப் $3 பில்லியன் (சுமார் ரூ 16,000 கோடி), இன்டியூட் $3.8 பில்லியன் (சுமார் ரூ 20,000 கோடி) என்று பல ஆயிரம் கோடிகளில் கொழிக்கும் நிறுவனங்கள் இவை.

ஆக்டோபஸ்
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அரசையும், தாமிரம், உருக்கு, கப்பல் தொழில் துறைகளை அடக்கி ஆண்ட ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம்.

இருப்பினும் ஒவ்வொரு காலாண்டிலும் விற்பனையை அதிகரித்துக் கொண்டே போவது, சட்டரீதியாகவோ, சட்ட விரோதமாகவோ செலவுகளைக் குறைத்து லாபத்தை பெருக்குவது, அதன் மூலம் பங்குச் சந்தையில் பங்கு விலை உயர்வதை உறுதி செய்வது என்பது இந்நிறுவனங்களின் அடிப்படை கோட்பாடு. தாம் வைத்திருக்கும் நிறுவன பங்குகளின் விலை உயர்வதன் மூலம் தாமும் பணக்காரர்கள் ஆகிக் கொள்கின்றனர்.

100 ஆண்டுகளுக்கு முன்பு புள்ளிவிபரங்கள் பதிவு செய்ய ஆரம்பித்ததிலிருந்து முன் எப்போதும் இல்லாத வகையில் அமெரிக்காவின் பணக்கார 10 சதவீதத்தினர் நாட்டின் 50%-க்கும் அதிகமான வருவாயை தமக்கென ஒதுக்கிக் கொள்ள முடிந்திருப்பது 1990-களுக்குப் பிறகு அமலாக்கப்பட்டு வரும் இத்தகைய கட்டற்ற, சட்டங்களுக்கு அடங்காத முதலாளித்துவ நடைமுறையின்படிதான்.

“எல்லாமே சந்தைதான், எதுவுமே போட்டிதான், அதன் மூலம்தான் மனித குலத்தையே வாழ வைக்கும் புதிய கண்டுபிடிப்புகள், புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் “என்று பம்மாத்து செய்து கொண்டிருக்கும் இந்த கார்ப்பரேட் முதலைகள், தத்தமது நிறுவனங்களின் லாப வேட்டையை பெருக்கிக் கொள்ள ஒருவருக்கொருவர் கள்ள உறவு வைத்துக் கொண்டிருக்கின்றனர். நிறுவன லாபத்தை உறுதி செய்து கொள்ள ஊழியர்களின் முதுகில் குத்தியிருக்கின்றனர்.

மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் மீது தொடரப்பட்டு சொதப்பப்பட்ட ஏகபோக முறியடிப்பு வழக்கு.

தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைப்பதை சந்தை போட்டிக்கு விரோதமானது என்று கூக்குரலிடும் இந்த கனவான்கள், தகவல் தொழில் நுட்பத் துறையில் தொழிற்சங்கம் அமைப்பதை கொலைபாதக நடவடிக்கையாக சித்தரிக்கும் இந்த அறிவாளிகள் கூட்டு சேர்ந்து கொண்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் சந்தைப் போட்டியை ஒழித்துக் கட்டியிருக்கின்றனர்.

இந்த ‘உத்தமர்கள்’ மாட்டிக் கொண்டிருக்கின்றனர், வழக்கு நடத்தி ஒரு சில ஆயிரம் கோடிகள் அபராதம் கட்டி விட்டு தமது தொழிலை தொடர்வதிலும் அவர்களுக்கு தடங்கல் இருக்கப் போவதில்லை. 1990-களில் இதே அமெரிக்க நீதித் துறை மைக்ரோசாப்ட் தனிநபர் கணினிகளில் இயங்கு தள சந்தையில் தனது ஏகபோக ஆதிக்கத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக வழக்கு போட்டு, இறுதியில் நீதி மன்ற நடைமுறைகளின் ஓட்டைகள் வழியாக அந்நிறுவனத்தை தப்பிக்க வைத்தது வரலாறு. இன்றும் அந்தச் சந்தையில் மைக்ரோசாப்டின் ஏகபோக ஆதிக்கம் தொடர்கிறது என்பதுதான் நிதர்சனம்.

கார்ப்பரேட் முதலாளிகள் ஊழியர்களையும், சமூகத்தையும், அரசுகளையும் முடிந்த வழிகளில் எல்லாம் ஏமாற்றிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கு நாளொரு ஆதாரமும் பொழுதொரு சாட்சியமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் நண்பர்களே,

உங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகவோ, இல்லை பணிச்சூழல் பிடிக்கவில்லை, ஊதியம் போதவில்லை, புதியன கற்றல் வேண்டும் என்று எந்த காரணங்களுக்காகவோ நிறுவனத்தை மாற்ற வேண்டும், புதிய வேலை தேட வேண்டும் என்று முயற்சிக்கிறீர்களா? அதில் அப்பாவியாக இருந்து விடாதீர்கள், ஏனெனில் நீங்கள் விண்ணப்பிக்கும் புதிய நிறுவனத்திற்கு உங்கள் விண்ணப்பம் போய்ச்சேர்ந்த அடுத்த கணத்திலேயே உங்களது பழைய நிறுவனத்திற்கு தகவல் போய்ச்சேர்ந்து விடும். நீங்கள் எங்கு வேலை பார்க்க வேண்டும் என்பது உங்களது கைகளில் இல்லை. ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே இந்த கொத்தடிமை முறை இவ்வளவு செல்வாக்கோடு இருக்கும் போது கொத்தடிமைகளின் நரகமான இந்தியாவில் எப்படி இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றால் தொழிற்சங்கமாக போராடுவது ஒன்றே வழி என்பதை இப்போதாவது ஏற்கிறீர்களா?

அப்துல்.

மேலும் படிக்க

  1. ஒரு கம்பெனி மற்ற கம்பெனிக்குத் தெரியாமல் மனித வளங்களைத் திருட மாட்டோம் என்றுதான் ஒப்பந்தம் போட்டுக் கொன்டிருக்கிறார்களே தவிற,தெரிந்து ஒப்புக் கொண்ட பிறகு ஊழியர்களைப் போக விட மாட்டோம் என்று கூறியதில்லை. இந்தியாவில் ஐ டி கம்பெனிகளில் இங்கும் அங்கும் மாறுவது சர்வ சாதாரணம். அதே போல இஞ்சினீயரிங் டிசைன் கம்பெனிகளிலும் ஒரு தடவை பார்த்த ஆள் அடுத்த முறை அதே கம்பெனியில் இருப்பதில்லை. இதை இம்மாதிரியான தொழில்களில் உள்ள சவாலாகத்தான் கம்பெனிகள் ஏற்றுக் கொண்டு ஊழியர்களை நிலைத்து நிற்கச் செய்ய குட்டிக் கரணம் போட்டுக் கொண்டிருக்கின்றன.

    கொஞ்சம் சம்பளம் கூடக் கிடைத்தால் அடுத்த கம்பெனிக்குத் தாவும் உரிமை இருக்கும் போது தொழில் வளர்ச்சி/தேக்கத்திற்குத் தகுந்தவாறு கம்பெனிகள் ஆள் அதிகம்/ குறைப்பு செய்வதை ஊழியர்களும் சரியான கண்ணோட்டத்தில்தான் எடுத்துக் கொள்கிறார்கள்.

    இந்த செக்மென்டில் இன்னும் தொழிற்சங்க கான்செப்டை நுழைக்க முடியவில்லையே என்கிற வினவின் ஆதங்கம் புரிகிறது.

    • //ஊழியர்களும் சரியான கண்ணோட்டத்தில்தான் எடுத்துக் கொள்கிறார்கள்.//

      இப்படி சரியான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளும் ஊழியர்கள் தான், ஒரு வேலையிலிருந்து வேறு வேலைக்கு மாறிச்செல்லும் போது தாங்கள் புதிதாக சேரப்போகும் நிறுவனத்தின் பெயர் தற்போதைய HRக்கு தெரிந்துவிடாமலிருக்க முனைப்புடன் இருக்கிறார்கள், பொய் சொல்கிறார்களா? 🙂

      சமூகத்தின் மற்ற பிரிவினரை விட ‘கொஞ்சம்’ சம்பளம் கூடக்கிடைப்பதால் அடிமையாக இருக்க எனக்கு உரிமையிருக்கிறது என வாதிட்டால் அதற்கு வினவும், கம்யூனிஸ்டுகளும் என்ன செய்துவிட முடியும்?
      அதற்கும் மேலே இன்னும் கொஞ்சம் கூடக் கிடைக்கும் போது ஒரு கம்பெனி மீதான அடிமையின் விசுவாசம் மற்றொரு கம்பெனிக்கு மாறிவிடுகிறது. இந்த காரியவாத உரிமையைக் கூட இப்போது தங்களுக்கிடையிலான ஒப்பந்தத்தின் மூலம் இல்லாமல் செய்துவிட்டன மேற்படி கம்பெனிகள்.

      சமூகத்தின் பிற பிரிவினரை விட மேலதிகமாக தாங்கள் அனுபவித்துவரும் (இது வரை இருந்த, தற்போது சிறிது சிறிதாக பறிமுதல் செய்யப்பட்டுவரும்) பணிப்பாதுகாப்பும் இன்ன பிற உரிமைகளும் தொழிற்சங்க கான்செப்டினாலும், போராட்டத்தினாலும் தான் பெறப்பட்டவை என்பதை
      அந்த “கொஞ்சம்” கூடக்கிடைக்கிற வரையும், புரிந்து கொள்ள இயலாது தான்!

      மேற்படி ஒப்பந்தம் பரவலாக அமல்படுத்தப்பட்டு அதனால் வேறு வேலைக்கு ‘தாவிச்’ செல்ல முடியாமல் போனபின்னரே எனக்கு உரைக்கும் என்னும் எருமைத் தோலர்களை தொழிற்சங்க கான்செப்ட் தான் என்ன செய்துவிட முடியும்? 🙂

      • “சமூகத்தின் பிற பிரிவினரை விட மேலதிகமாக தாங்கள் அனுபவித்துவரும் (இது வரை இருந்த, தற்போது சிறிது சிறிதாக பறிமுதல் செய்யப்பட்டுவரும்) பணிப்பாதுகாப்பும் இன்ன பிற உரிமைகளும் தொழிற்சங்க கான்செப்டினாலும், போராட்டத்தினாலும் தான் பெறப்பட்டவை”

        பணிப் பாதுகாப்பு என்பது தொழிற்சாலை நஷ்டத்தில் போனாலும் தேவை – Especially அது தனியார் முதலீடு என்றாலும் – என்பது எந்த விதத்தில் ஞாயம் ? பொதுத் துறையில் இம்மாதிரியான சுமைகளை நானும் நீங்களும் வரிப் பணத்திலிருந்து சுமக்கிறோம்.

        “இன்ன பிற உரிமைகளைப்” பெற்ற எத்தனை தொழிலாளர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுகிறார்கள்? இன்று காலைதான் கொச்சியில் தொழிற்சங்கங்களும் அதன் தலைவர்களும் செய்யும் அநியாயங்களையும், நாங்கள் பட்ட கஷ்டங்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். That was unadulterated nightmare.

        ஒரு தொழிலாளி வெளி மாநிலத்திலிருந்து வந்தால் மூன்று உள்ளூர் தொழிலாளிகள் சேர்த்துக் கொள்ளப் பட வேண்டும். ஒரு நாளைக்கு வேலை செய்தாலும் இல்லாவிட்டலும் இரண்டு மணி நேரம் ஒவர் டைம். காலை மாலை தேனீர், மதிய உணவு இடை வேளை போக மொத்த வேலை நேரம் 5 மணிதான். இதையெல்லாம் நடை முறைப் படுத்தவில்லையென்றால் அடி உதை மண்டை உடைப்புதான்.

        திருச்சி பெல் தொழிற்சாலையிலேயே தோழர்கள் தேனீர் உணவு இடை வேளை எவ்வளவு எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். மாலையானால் கேட் கூட்டங்களில் முதலாளி வர்க்கத்திற்கெதிராக தினமும் போராட்டம்தான்.

        தொழிற்சங்கம் என்பது 99 சதவீத இடங்களில் கூட்டமான (mob) அராஜகம்தான்.

  2. ஐ.டியில் சங்கங்களுக்கு வேலை இல்லை… திறமைக்குதான் வேலை… நூறு ஆள் வேலையை ஒற்றை ஆளாய் செய்யும் கணினிகள் வேலை நிறுத்தம் செய்வதில்லை..

    இங்கு இட ஒதுக்கீடும் இல்லை சங்கங்களும் இல்லை….

    ஐ.டி வல்லுனர்கள் ஒவ்வொருவரும் தனி திறனுள்ளவர்கள்… இன்றைய trainee நாளைய leader, சில காலம் கழித்து மேனேஜர், vp போன்று வளருகின்ற வாய்ப்பு இந்த துறையில் மட்டுமே உண்டு… மேலும் ஒரு சிலர் சொந்த கம்பெனி ஆரம்பித்து முதலாளியாகும் திறமையுள்ளவர்கள்….

    நமக்கு நாமே முதலாளி என்பதே எதார்த்தம்… திறமையினால் மட்டுமே முன்னேறற்றம் காண முடியுமே தவிர சங்கங்களால் அல்ல…

    இங்கு இட ஒதுக்கீடும் இல்லை சங்கங்களும் இல்லை…

  3. அருமயான ஒரு கட்டுரை. ஆகில உலக கார்பொரேட் கம்பெனிகல் ஒரெ வர்க்கமாக செயல்படுவதர்க்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இதேபோல் கம்பெனிகல் தங்கலுடய டைரெக்டர்கலை கொன்டு ஒரே கம்பெனி போல் செயல்படும் இன்டெர்லாகிங் டைரெக்டரேட் (Interlocking directorate) எனப்படும் ஆதிக்க முரயும் இது போன்ர சந்தைதுவ சித்தாந்ததிர்கு எதிராகவே உல்லது. இந்த கருத்தை கொன்டு நாடுகடந்த முதலாலி வர்க்கம் (Transnational capitalist class) இருப்பதை ஆராட்சியாலர்கல் நிருபிக்கிரார்கல்.

  4. //ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் – ஆப்பிள் நிறுவனத்தை நிறுவி தனி நபர் கணினி யுகத்தை ஆரம்பித்து வைத்தவராக போற்றப்படுபவர், தளுக்கான, கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஐ-பாட், ஐ-போன், ஐ-பேட் என்று அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி மேட்டுக்குடியினருக்கான மின்னணுக் கருவிகளின் ‘புரட்சி’யை நடத்தியவர்.//
    மேட்டுக்குடியினர் என்போர் யார்? நடுத்தர வர்க்க மக்களும் இதை பயன் படுத்துகிறார்களே?? வெளிநாடுகளில் அனைத்து மக்களும் இதை பயன்படுத்துகிறார்களே. நீங்கள் சொல்ல வந்தது நல்ல விடயம். ஆனால் பாவித்த சொற்பதங்கள் எரிச்சல் ஊட்டுகிறது. உண்மையை சொல்லப்போனால் உணர்ச்சி பூர்வமாய் எழுதுவதாக நினைத்துக்கொண்டு எரிச்சல் ஊட்டும் விதமாக எழுதுகிறீர்கள். நீங்கள் சொல்ல வந்த கருத்துடன் நான் ஒத்து போகிறேன். ஆனால் வார்த்தை பிரயோகங்கள் ஏற்று கொள்ளப்பட கூடியது அல்ல. தயவு செய்து ஒன்றை எனக்கு தெளிவு படுதுங்கள். மேட்டுகுடி என்றால் யார்? தங்கள் பல பதிவுகளை படிதுள்ளேன். நான் பிழையாக விளங்கிகொண்டு உள்ளேனோ தெரியவில்லை. அதனால் இதற்கான விளக்கத்தை கேட்கிறேன். நான் ஒரு engineer. நான் மேட்டுகுடியா?

    • yes according to this stupid Vinavu those who dont have job and involve mindless reproduction, Anti Social elements, Un skilled workers, Dalits, Communists, Minorities, Naxsals, Maoists are the good humans rest are bad

  5. //மேட்டுகுடி என்றால் யார்?//
    எந்த ஒரு பிரச்சினையாயினும் வீதிக்கு வந்து போராடாத அனைவரும் மேட்டுக்குடியினர்.
    அல்லது ஒரு நாளைக்கு 26 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் மேட்டுக்குடியினர் – அலுவாலியாவும் வினவாலியாவும் இதில் ஒத்து போகின்றனரே…. 🙁

  6. இந்த முறை இந்திய நிறுவனங்களிலும் பல ஆண்டுகளாக உள்ளதுதான். ஒப்பந்த முறையில் ஒரு பெரிய நிறுவனத்துக்கு சேவை வழங்கும் சிறிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நேரடியாக அந்த பெரிய நிறுவனம் வேலைக்கு அம்ர்த்துவதை தடை செய்யும் வகையில் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளும். அதே போல இருவேறு பெரிய நிறுவனங்களும் தங்களுக்கு இடையே இவ்வாறான இரகசிய ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்வதும் உன்டு. ஆனால் மென்பொருள் நிறுவனங்களுக்கிடையே இவ்வாறான ஏற்பாடுகள் குறைவுதான்.

  7. மென்பொருள்காரர்களின் விசுவாசம் கண்டு என் கண்கள் பனிக்கின்றன….. :'(

Leave a Reply to manithan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க