privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாசினிமா ஒரு வரிச் செய்திகள் – 07/02/2014

சினிமா ஒரு வரிச் செய்திகள் – 07/02/2014

-

மசாலா: விஜய் டி.வியில் ஒளிபரப்பான மகாராணி, அவள் ஆகிய சீரியலை டைரக்ட் செய்த தாமரைக் கண்ணன் இயக்கும் சினிமாவின் பெயர் சூறையாடல். சூறையாடல் பற்றி டைரக்டர் கூறியதாவது: காதல், காமம், கோபம் இந்த குணங்கள் கொஞ்சம் அபாயகரமானவை அவற்றை சரியாக கையாளாவிட்டால் என்ன நடக்கும்? அவை நம்மையே சூறையாடிவிடும் என்பதுதான் படத்தோட மெயின் லைன்.

மருந்து: இந்த மூணு குணங்களை நாங்க புரிஞ்சிக்கிட்டா சென்டிமெண்ட், செக்ஸ், ஆக்சன்னு மக்கமாரை ஏமாத்தி நீங்க கல்லா கட்ட முடியுமாடே? அது சரிவே, சீரியல் டைரக்டரு சினிமா எடுத்தா கிளிசரின்னு எத்தனை லிட்டரு வாங்குவீரு?
___________

மசாலா:  இந்து மத மகான் ஸ்ரீராமானுஜரின் சரித்திரம் திரைப்படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீராமானுஜராக கிருஷ்ணன் என்பவர் நடிக்க பிரபல நடிகை ஸ்ரேயா, டில்லி பாதுஷாவின் மகள் பீவி நாச்சியாராக நடிக்கிறார். “சாதி வேறுபாடற்ற சமுதாயம், எல்லா மதத்தினருக்கும் நற்கதி என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக போதித்த மகனானின் வாழ்க்கையே இந்தப் படம்.” என்கிறார் இயக்குனர் ரவி.வி.சந்தர்.

மருந்து: ராமானுஜரா நடிக்கிறதுக்கு கிருஷ்ணன்னு ஒரு அனாமதேயத்த போட்டு, டில்லி ராணிக்கு மட்டும் கவர்ச்சியா ஸ்ரேயாவ போட்டுக்கிறாரு நம்ம டைரக்டர் நைனா. படத்துல கவர்ச்சி இருக்கும் போது சாதி இல்லே, மதம் இல்லேன்னு ரசிகருங்கோ ஏன் ஃபீல் பண்ணப் போறான்?

___________

மசாலா: “கள்ளப்படம்” எனும் புதிய படத்தின் சிறப்பு என்னவென்றால் படத்தை இயக்கும் டைரக்டர் ஜெ.வடிவேல், இசை அமைப்பாளர் கே, கேமராமேன் ஸ்ரீராம் சந்தோஷ், எடிட்டர் குகன் ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்கள். “சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் நான்கு இளைஞர்கள் தமது பண்பாட்டை பாதுகாக்கும் நாட்டுப்புற கலையை குறிப்பாக கூத்து கலையை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க போராடுறாங்க. டைரக்டர், கேமராமேன், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என நான்கு பேருமே நண்பர்கள். புரட்யூசர் கிடைக்காம அவஸ்தைப்படுறாங்க, கடைசியில அவுங்க படம் எடுத்தாங்களா, இல்லையாங்றதுதான் கதை. இதில் நடிக்க நிறைய நடிகர்கள்கிட்ட பேசினோம். யாருமே செட்டாகல, நாங்களே நடிச்சிட்டோம்,” என்றார் இயக்குநர்.

மருந்து: கூத்து மேல அக்கறை இருந்தா அத்த கத்துக்கிணு ஊர் ஊரா நடத்துறது வுட்டுட்டு சினிமா புடிச்சு காம்பிச்சா கூத்துக்கு இன்னாபா லாபம்? நாட்டுப்புற கலைங்கள வெச்சு என்ஜிவோக்காரன் பண்றது பிசினெஸ்னா, சினிமாக்காரன் பண்றது நான்சென்ஸ்.
__________

மசாலா: “இசையமைப்பவர்கள், ஹிட் கொடுத்து பெரிய இசையமைப்பாளரான பிறகு சின்ன பட்ஜெட் படங்கள் பக்கம் திரும்பியே பார்ப்பதில்லை. ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசையமைப்பாளர்கள் நான் இயக்குவது போன்ற 2 கோடி பட்ஜெட் கொண்ட படங்களுக்கு இசையமைக்க மாட்டார்கள். அப்படியே அவர் ஒத்துக்கொண்டாலும், இந்த பட்ஜெட்டில் அவருக்கு சம்பளம் கொடுக்க முடியாது. ஆனால் சம்பளத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் பெரிய இசையமைப்பாளர்களும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்க வேண்டும். அந்த நிலை சினிமாவில் உருவாக வேண்டும்” என்று சென்னையில் நடைபெற்ற தெகிடி படத்தில் ஆடியோ விழாவில் பேசினார் டைரக்டர் சீனுராமசாமி. பேசினார்.

மருந்து: சீனு அண்ணாச்சி, உங்க இரண்டு கோடி பட்ஜெட்டுல ரஜினியும், ஷங்கரும் நடிக்கவோ இயக்கவோ முடியாதுங்கிறத நீங்க ஒத்துக்கிட்டீகண்ணா, ரஹ்மான மட்டும் எப்படி எதிர்பாக்கீக? அமெரிக்கா அரசுகிட்ட கருணையையும் சினிமா நட்சத்திரங்ககிட்ட கலைச் சேவையையும் எதிர்பாக்கது தப்பு அண்ணாச்சி!
____________

மசாலா: உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்த முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இப்படத்துக்கு முதலில் வரிவிலக்கு கிடைக்கவில்லை. அதனால் எனது படம் வரி விலக்கு பெற தகுதியானதே என்று சொல்லி, நீதிமன்றத்தை நாடி அதன்பிறகு வரி விலக்கு கிடைத்தது. இப்போது அவர் நடித்துள்ள இது கதிர்வேலன் காதல் படத்துக்கும் வரிவிலக்கு கிடைக்கவில்லை. படத்தில் ஆபாசம், வன்முறை என எந்த முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும் வரிவிலக்கு கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த உதயநிதி மீண்டும் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்.

மருந்து: கதைக்குள்ள செக்ஸ், வயலன்சுன்னு என்ன கருமாந்திரம் இருந்தாலூம் பெயருல தமிழ் இருந்தா வரிவிலக்குன்னு உதயநிதியோட தாத்தா கொண்டு வந்த சலுகையை, கதைக்குள்ளேயும் சரக்கு இருந்தாதான் தருவேன்னு அதிமுக ஆத்தா மாத்தி கட்சி சார்புல யூஸ் பண்ணுது. ஆனா ஒண்ணுடே, உதயநிதியோட கதையெல்லாம் ஒரு சினிமான்னு தியேட்டருக்கு போய் பாக்கான் பாரு அவனோட தியாகத்த நினைச்சாத்தாம்லே கதி கலங்குது!
__________

மசாலா:  பிரபல கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி கடந்த 2009-ம் ஆண்டு சென்னை சாஸ்திரி நகரில் அடுக்குமாடி வீட்டில் பாலியல் தொழில் செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது வழக்கு முடிந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புவனேஸ்வரி மீது கூறப்பட்ட குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறிய நீதிமன்றம், அவருக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது.

மருந்து: தேவர் குல நாட்டாமை சேதுராமன் கட்சியில மகளிர் அணித் தலைவியா சமூக சேவை செய்யுற தானைத் தலைவிய பிரபல கவர்ச்சி நடிகைன்னு போட்டு ஏம்டே மானத்த வாங்குதீக!
____________

மசாலா: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஏவோன் தனது இந்திய விளம்பர தூதராக அசினை நியமித்துள்ளது. இதற்கான அறிமுக விழாவில் அசின் கலந்து கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அசின் தோன்றும் பொது நிகழ்ச்சி இது. நிகழ்ச்சியில் அசின் பேசியதாவது: படத்துக்கு படம் இடைவெளிவிட்டு அவகாசம் கொடுத்து நடித்தாலும் தனித்தன்மையுள்ள படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். நல்ல படங்களுக்காக காத்திருக்கவும் தயார். அதேபோல நல்ல கதையாக இருந்தாலும் யாருடனும் நடிக்கத் தயார். என்றார்.

மருந்து: மார்க்கெட் இருக்கும் போது முன்னணி ஸ்டார்களோட நடிக்கதும், மத்தவங்க கேட்டா முறைக்கதும், மார்க்கெட் இல்லாத போது சோப்போ, சீப்போன்னு ஷோ ரூம் திறப்பு, பெறவு விளம்பரம்னு ஒதுங்கி, அப்டியும் படம் இல்லேன்னா நல்ல படம், நல்ல கதை, புதுமுகங்களோட கூட நடிப்பேன்னு……… எம்மா எல்லா மகராசிங்களும் ஒரே டயலாக்க போட்டு கொல்லுதீக!
__________

மசாலா:  ‘தூம் 3’ படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘தூம் 4’ படத்தில் பெண்களை முன்னிலைப்படுத்தி காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மருந்து: இந்தி மசலாப் படங்கள பாத்துட்டுதாம்லே மத்த மொழிக்காரனுவ நடிகைங்கள நடிக்க விடாம துணிங்கள மட்டும் குறைக்க சொல்லுதான். பெண்கள உரிச்சு உப்புக் கண்டம் போடற பய முன்னிலைப்படுத்தறான்னா பெண்கள் அமைப்புல இருக்குற அக்காமாருங்க உசாரா இருக்கணுமாக்கும்.
_________

மசாலா: ஏப்ரல் 11-ம் தேதி இந்தியில் வெளியாக இருக்கும் ‘கோச்சடையான்’ படத்தோடு அமிதாப் பச்சனின் ‘பூத்நாத் ரிட்டன்ஸ்’ படமும் வெளியாகவிருக்கிறது.

மருந்து: இத்தனாம் தேதி வடக்க ஒரு வயசான குதிர, தெக்க ஒரு ஓய்ஞ்சு போன கழுதை விட்ட போடப் போவுதுங்கிறதெல்லாம் கொண்டாடுற அளவுக்கு வரலாறுன்னா அவ்வளவு கேவலமாடே?
___________

மசாலா: ஆமிர்கான் தொகுத்து வழங்கிய ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியை, மீண்டும் மார்ச் 2-ம் தேதி முதல் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மருந்து: போன தபா அழ, சிரிக்க, கைதட்ட, உச்சு கொட்டன்னு ஆடியன்ஸ செட்டப் பண்ணாமேரி இந்த தபா இன்னா மாமு புதுமை?
____________

மசாலா: திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை.. தனிமையில் வாழவே விரும்புகிறேன் என்று நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.

மருந்து: ஏன் ராசா, மான் கறி தின்ன வழக்கிலயும், காரேத்திக் கொன்ன வழக்கிலயும் தீர்ப்பு வேற மாதிரி வருமுன்னு கனா கினா ஏதும் கண்டியா?
___________

மசாலா: ‘ஜில்லா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் வேடத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.

மருந்து: தெலுங்கு கங்கை திட்டத்துக்கோசரம், கிருஷ்ணா ஆத்து தண்ணி தமிழனுக்கு கிடைக்கலேன்னாலும், கூவத்தாண்ட குந்தியிருக்கும் கோலிவுட்டிலேர்ந்து குப்பைங்க ரீல் ரீலாய் தெலுங்கு நாட்டுக்கு மாட்லாட போய்க்கிணுகீதாம். தமிழன்டா!
____________

மசாலா: முன்பு ஜீ தமிழ் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்த நிர்மலா பெரியசாமி இப்போது வசந்த் டி.வி.யில் வாய்மையே வெல்லும் என்று அதே நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். குடும்ப பிரச்னையை பேசி பஞ்சாயத்து பண்ணி வைக்கும் இந்த நிகழ்ச்சி தயாரிப்பில் பணியாற்றிய வசந்தன், கோபி, நோபல் ஆகியோரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வசந்த் டி.வியின் நிர்வாகி அசோகன், போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  “சில தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் இருந்து ஒரு பெண் தன்னை ஒருவர் காதலித்து 8 மாத கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாகவும். அவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறும் கூறினார். சம்பந்தப்பட்ட அந்த பெண்ணையும், அவரது காதலரையும் சைதாப்பேட்டையில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு அழைத்து விசாரித்தோம். அப்போது ஒரு கும்பல் எங்களை மிரட்டியது. இப்போது எங்கள் ஊழியர்களை அந்த கும்பல் கடத்திச் சென்று ரூ 50 லட்சம் கேட்டு மிரட்டுகிறது. எங்கள் ஊழியர்களை மீட்டுத் தருமாறு கமிஷனிரிடம் மனு கொடுத்துள்ளோம்.”.

மருந்து: காதல், கள்ள உறவுன்னு மக்களோட பிரச்சனங்கள தேடிப் பிடிச்சு வெளிச்சம் போட்டு விக்கிற கசுமாலங்களுக்கு அவங்க கலைச்சேவையே ஒரு தண்டனையை தேடித் தந்திருச்சுன்னா இதுதாம்டே கவித்துவ நீதி!
_____________

மசாலா:  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு எபிசோடுக்கு சல்மான்கான் வாங்கும் சம்பளம் 5 கோடி. கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்கு அமிதாப் பச்சன் வாங்கும் சம்பளம் 4 கோடி. மாதுரி தீட்சித்தின் சம்பளம் ஒரு கோடி, மல்லிகாஷெராவத்தின் சம்பளம் 80 லட்சம், அக்ஷய் குமார் வாங்கும் சம்பளம் 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை. தமிழ் நாட்டில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சிக்கு சூர்யா வாங்கியது எபிசோடுக்கு பத்து லட்சம்.

மருந்து: ஹலோ, குட்மார்னிங், லைஃப்ப என்ஜாய் பண்ணுங்கோ, டேக் கேர், கம்யூட்டர்ஜி லாக் பண்ணுங்கன்னு நாலு வார்த்தைங்கள பேசுறதுக்கு கோடியில சம்பளத்த கையில வாங்கறவன், வாயில நாமெல்லாம் ஏழைங்களுக்கு உதவணும்னு இன்னரு நாலு வார்த்தையில பேசுறானே இவனுங்கள எத்த கொண்டு சாத்துறது?
______________

மசாலா:  கேப்டன் தினமும் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் ஸ்டோரி டிஸ்கஷனில் கலந்து கொண்டு காட்சிகளை வசனங்களைக் கேட்டு கருத்து சொல்கிறாராம். அதே போல மகனை அன்பாகக் கண்டித்து தினமும் எக்ஸர்சைஸ் செய்ய வைத்து 10 கிலோ எடை குறைய வைத்திருக்கிறாராம்.

மருந்து:  தேமுதிக மாவட்ட செயலருங்க அத்தனை பேரும் சண்முக பாண்டியன் படத்த வாங்கி பத்து நாள் ஓட்டலேன்னா சஸ்பெண்டுதான்னு மச்சான் சதீஷை வுட்டு ஒரு காட்டு காட்டுனாத்தான் படத்த ஓட்ட முடியும். இத வுட்டு கருத்து சொல்றேன், கிலோவை குறைக்கிறேன்னு இறங்கினா படமும் தேறாது, பையனும் இளைக்க மாட்டான்.
______________

மசாலா: பத்மபூஷண் விருது பெற்ற கமலஹாசன், “ இந்தப் பெரும் பெருமைக்குத் தகுதியுள்ளவனாக இனிதான் ஆக வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

மருந்து: தகுதி வரும் போது அவார்டை வாங்கிக்கிறேன், இப்ப வேண்டாம்னு கொடுத்தீங்கண்ணா இப்புடி அநியாயத்துக்கு அடக்கம் காட்டவேணாமே ராசா!
______________

–    காளமேகம் அண்ணாச்சி

  1. நடிகன் சம்பளம் 3, 4,5,100 கோடி….
    தெருக்கோடியில் உள்ளவர்கள்?

Leave a Reply to AAR பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க