privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காமைக்ரோசாப்டின் தலைவர் சத்ய நாதெல்லா - பெருமையா சிறுமையா ?

மைக்ரோசாப்டின் தலைவர் சத்ய நாதெல்லா – பெருமையா சிறுமையா ?

-

மைக்ரோசாப்டின் சி.இ.ஓவாக சத்ய நாதெல்லா தெரிவு செய்யப்பட்டிருப்பதால் இந்தியர்களுக்கு அப்படியொன்றும் பெருமையில்லை..! –    அருண் குப்தா

ஜான் க்வெஸ்ட் - ஹட்ஜி
ஜான் க்வெஸ்ட் – ஹட்ஜி

ழுபதுகளில் வாஷிங்டனுக்கு அருகில் வளர்ந்த எனக்கு ஜான் க்வெஸ்ட் தொலைக்காட்சி தொடரில் காட்டப்பட்ட “நன்றாக பேசக்கூடிய… கல்கத்தாவின் தெருக்களில் தனது திறமைகளில் வளர்த்துக் கொண்ட அநாதை”யான ஹட்ஜி என்ற சிறுவன் தான் ஒரு இந்தியனுக்கான வெகுஜன கலாச்சார அடையாளம். ”மூத்திரம் குடிக்கும் பழக்கம் உடைய இந்திய பிரதமரை” போலவும்,  ‘இவன் இந்தியாவிலிருந்து திரும்பியதிலிருந்து மந்தமாக இருப்பதற்குக் காரணம் ஊரில் இவனுக்கு பத்து வயதிலேயே திருமணம் செய்து வைத்திருக்க கூடும்’ என்று எனது ஆசிரியர் என் வகுப்புத் தோழர்களிடம் சொல்வது போலவும் அது அவமானகரமான அடையாளம்தான்.

தங்களில் ஒருவர் மேற்கத்திய உலகில் வெற்றிகளின் உச்சத்தைத் தொடும் போது இந்தியர்கள் பெருமிதம் அடைகிறார்கள். அந்த வெற்றி புலிட்சர் பரிசாகவோ, மிஸ் அமெரிக்காவாகவோ, கவர்னர் பதவிகளாகவோ அல்லது தொழிலதிபர்களாகவோ இருக்கலாம். இந்தியர்கள் என்பவர்கள் “குரங்கு மூளையை சாப்பிடும் அன்னியர்கள்” என்ற பொதுப்புத்தியின் மீதான அவர்களது எரிச்சலும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு தனிநபரின் வெற்றி தேசத்தின் கூட்டு அறிவுத்திறனுக்கும், பணி நேர்த்திக்கும்  திறமைகளுக்கும் நிரூபணமாக கருதப்படுகிறது.

சத்ய நாதெல்லா
சத்ய நாதெல்லா

மைக்ரோசாப்டின் தலைமைச் செயல் அலுவலராக சத்ய நாதெல்லா தெரிவு செய்யப்பட்டிருப்பது இத்தகைய தருணங்களில் ஒன்று. ஹைதராபாத்தில் பிறந்த, இந்தியாவில் படித்த, கிரிக்கெட்டை விரும்பும் நாதெல்லா ஒரு பரிசுத்தமான ’தேசி’. அவர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான கலாச்சாரத்தின் சாரத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கிறார்.

இந்தியாவில் இதற்கான எதிர்வினைகள் ஆனந்த பரவசமாக வெளிப்பட்டுள்ளன. ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு “மைக்ரோசாப்டின் உயரதிகாரியாக சத்யா நாதெல்லா அறிவிக்கப்பட்டதை இந்தியா கொண்டாடுகிறது” என்று பீற்றிக் கொண்டது. “இந்தியாவின் பிராண்டு மதிப்பு இப்படித்தான் அதிகரிக்க வேண்டும்” என்று அறிவிக்கிறார் இன்போசிஸ் நாராயண மூர்த்தி. “இந்தியர்கள் தங்களது ‘சாதி மத மற்றும் பிரதேச’ வேற்றுமைகளை மறந்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய வேண்டுமென்பதற்கு சத்யா நாதெல்லா ஒரு உதாரணம்” என்கிறார் இன்னொரு பத்தி எழுத்தாளர்.

சத்தியா நாதெல்லாவின் வெற்றியை  கொண்டாடும் விதமாக இந்தியாவின் தேசிய சரக்கான ஜானி வாக்கர் பிளாக்கை குடித்து களிக்கும் இந்தியர்கள் தேசத்தின் கூட்டுத்துவ சாதனையை போற்றவில்லை; மாறாக ’வெற்றி பெறுபவருக்கே எல்லாமும்’ என்ற அமெரிக்க தனிநபர் சித்தாந்தத்தில் தங்களது வாய்ப்புகளை  உத்திரவாதப்படுத்திக் கொள்கிறார்கள். வெற்றி குறித்து அவர்கள் கொண்டிருக்கும் அளவுகோலானது, தொழில் நிறுவன உயரதிகாரிகள், ஹாலிவுட் நட்சத்திரங்கள், அமெரிக்க அரசதிகாரிகள், தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் போன்றோரின் ’வெற்றிகளை’ முன்மாதிரியாக கொண்டது.

பாபி ஜிண்டால்
பாபி ஜிண்டால்

இந்த வெட்டிப் படாடோபம் பெரும்பாலும் ’தேனீர் விருந்து பிற்போக்குவாதிகளை’  (அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் டீபார்ட்டி குழுவினர்) ஒத்த கொச்சையான தேசிய பெருமிதத்தின் அடிப்படையிலானது. பாபி ஜிண்டாலை அவரது பாரம்பரிய பின்னணிக்காகவே பல அமெரிக்க இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், அவரது அரசியலைக் கூர்ந்து கவனித்திருந்தால், இனவாதிகளிடம் வாலைக் குழைப்பதற்காக தனது பெயரையும் மதத்தையும் மாற்றிக் கொண்ட  அவருக்கு “குங்கா ஜிண்டால்” என்ற பட்டப் பெயரைச் சூட்டியிருப்பார்கள்.

அவமானத்தை முகத்திரையிட்டு மறைத்துக் கொண்டு, இயல்பு நிலையை தேடும் குழந்தைத்தனமான விருப்பங்களாக இனப் பெருமை வெளிப்படுகிறது. பெண் சிசுக் கொலை, இன அழிப்பு, கூட்டு வல்லுறவு மற்றும் கொத்தடிமைகள் இவற்றின் நாடு இந்தியா என்ற பிம்பங்களை இந்தியாவின் பெருமை உடைத்து விடும் என்பதற்கு இந்த வெற்றி இன்னொரு அடையாளமாக பார்க்கப்படுகிறது.

இது போன்ற போலித்தனமான முகமூடிகளைக் கடந்து செல்லும் முதிர்ச்சியை அடைவது தான் இந்தியர்களின் மெய்யான சாதனையாக இருக்க முடியும்.

முதலாவதாக, மைக்ரோசாப்டில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது? பலரைப் பொருத்தமட்டில் அது இரண்டாந்தரமான பொருட்களையும், திருட்டுத்தனமான ஏகபோக வியாபார உத்திகளையும் கொண்டிருக்கும் நிறுவனம். மழலையர் பள்ளியிலிருந்து பல்கலைக் கழகங்கள் வரை பொதுக் கல்வியை ஒழிப்பதும் அபாயகரமான புவிமாற்ற தொழில்நுட்பங்களுக்கு நிதி அளிப்பதும்தான் அதன் கோடீசுவர முதலாளியின் பொழுது போக்கு.

அருந்ததி ராய்
அருந்ததி ராய்

முக்கியமாக, இந்தியாவில் தூய்மையான குடிநீர் கிடைக்காத ஒன்றரை கோடி மக்களில், மாதம் இரண்டாயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் நாற்பது கோடி மக்களில் யாரும் நாதெல்லாவின் வெற்றியை கொண்டாடப் போவதில்லை. ஆனால், அவர்கள் இந்த வெற்றியை பொருட்படுத்தாமல் இருக்க முடியாது. இந்த வெற்றிக்கான விலையை அவர்களது வீடுகள் இடிக்கப்படுவதன் மூலமும், தண்ணீர் திருடப்படுவதன் மூலமும், நிலம் அபரிக்கப்பட்டு ஐ.டி நிறுவனங்களும் அப்பார்ட்மெண்டுகளும் அமைக்கப்படுவதன் மூலமும் அவர்கள் செலுத்துகிறார்கள்.

நாதெல்லா குறித்த பெருமிதம் ஒரு சிலரை முழு தேசமாக அடையாளப்படுத்துகிறது. மே 1998-ல் இந்தியா அணு ஆயுத சோதனை மேற்கொண்டதைத் தொடர்ந்து நடந்த தேசியவாத களிவெறியாட்டத்தை ஒத்தது அது. அந்த நேரத்தில் அருந்ததி ராய்  “அந்த குண்டு இந்தியா. இந்தியா தான் குண்டு. வெறும் இந்தியா மட்டுமல்ல, இந்து இந்தியா. எனவே எச்சரிக்கையாய் இருங்கள், அதைக் குறித்த எந்த விமர்சனமும் தேச விரோதம் மட்டுமல்ல, இந்து விரோதமும் கூட” என்று எழுதினார்,

அவரது விமர்சனம் இனப் பெருமிதம் என்ற இருபுறமும் கூர்மையான கத்தியை சரியாக அம்பலப்படுத்தியது. ’சின்ன விஷயங்களின் கடவுள்’ குறித்த பெருமிதத்தில் உப்பும் இந்தியர்கள் அதை எழுதிய அருந்ததி ராயிடம் “நீங்கள் இந்தியாவைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள்” என்று சொல்வது வழக்கம்.  அந்த பெருமிதம் இந்தியாவின் சாதி, வர்க்க மற்றும் பாலியல் வன்முறையை அந்த நாவல் தோண்டியெடுத்து அம்பலப்படுத்தியது குறித்தது அல்ல  – அந்த நாவலுக்காக  அருந்ததி ராய் இங்கிலாந்தின் புக்கர் பரிசை வென்றதற்கானது. எனினும் அந்தப் பெருமிதம் திரிந்து போனது. “மேற்கத்திய விஞ்ஞானத்தின் அபாயகரமான கண்டுபிடிப்பான” அணு ஆயுதத்தை இந்தியா பரிசோதித்திருப்பது இந்தியாவின் சுதந்திரத்தை பாதிப்பதாகவும், பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தில் இந்நாட்டை நிரந்தரமாக ஆழ்த்தி விடும் என்றும் அவர் சொன்னதும் அவரது இந்தியத்தன்மையும் அவரது நம்பகத்தன்மையும், பின்னணியும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து இந்தியா சுதந்திரச் சந்தையையும் மின்னணுவியல் புரட்சியையும் வரித்துக் கொண்டது இது 65 பில்லியனர்களை உருவாக்கியுள்ளது. ஆனால், இதற்கான விலையை பெரும்பான்மை விவசாயிகளாக உள்ள மக்கள் திரளே செலுத்துகிறது. தொழிற்சாலைகளுக்காகவும், பெரும் நீர்த்தேக்கங்களுக்காகவும், சுரங்கங்களுக்காகவும் தமது பாரம்பரிய நிலங்களில் இருந்து  அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். ஆக, ஒரு தலைமைச் செயல் அலுவலருக்காகவோ பில்லியனருக்காகவோ இந்தியர்கள் பெருமிதப்பட்டுக் கொள்ளும் போது  இப்படியானவர்கள் உருவாவதற்காக பலியிடப்பட்டுள்ள கோடிக்கணக்கானவர்களை அவர்கள் புறந்தள்ளுகிறார்கள். இந்தியர்கள் தங்களில் ஒருவரை போற்ற விரும்பினால், அவர்களது சிறப்பான பாரம்பரியமான அனைத்தும் தழுவிய அறங்கள் மற்றும் நீதிக்கான தேடலை பிரதிபலிக்கும் அருந்ததி ராயைப் போன்றவர்களையே பரிசீலிக்க வேண்டும்.

அருண் குப்தா
கட்டுரையாளர் அருண் குப்தா

அமெரிக்காவிலேயே கூட சியாட்டிலின் நகர கவுன்சில் உறுப்பினரான ஷாமா சாவந்த், மைக்ரோசாப்ட் அலுவலகத்திற்கு மிக அருகிலேயே இருக்கிறார். முதலாளித்துவத்தில் மூழ்கித் தவிக்கும் ஒரு நாட்டில் சோசலிச நடைமுறைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறார். அல்லது, பல பத்தாயிரக்கணக்கான நியூ யார்க் வாடகைக்கார் ஓட்டுனர்களை ஒருங்கிணைக்கும் பைரவி தேசாய் இருக்கிறார். அல்லது புலம்பெயர்ந்தவர்களின் குடியுரிமைகளுக்காக பணியாற்றி வரும் கனடாவைச் சேர்ந்த ஹர்ஷா வாலியா இருக்கிறார்.

தமது பூர்வீக தேசங்களின் சமூக நீதிக்கான போராட்டங்களால் உந்தப்பட்ட தெற்காசியாவைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர்கள் ஏராளமானவர்கள் வட அமெரிக்காவில் இருக்கிறார்கள். ஒரு சிறந்த உலகை உருவாக்குவதற்காக கலாச்சாரம், மொழி, இனம் ஆகியவற்றைக் கடந்து இவர்கள் பணியாற்றி வருகிறார்கள். கார்ப்பரேட்டுகளின் தலைமைச் செயல் அலுவலர்களை விட இவர்களே கவனிப்புக்கு அருகதையானவர்கள்.

தமிழாக்கம்: தமிழரசன்

நன்றி: அருண் குப்தா – தி கார்டியன்

  1. இது சத்ய நாதெல்லாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருளாதார ரீதியாக முன்னெடுத்து செல்லுமே தவிர இந்திய சமுதாயத்திற்கு எந்த விதத்தில் நன்மையை கொடுக்கும் என தெரியவில்லை. மாறாக இந்தியாவில் பெரிய அளவில் புகழப்படுவது பெரிய அளவில் தேவையற்ற எண்ணங்களை இளைஞர்களின் மனதில் விதைக்கும். ஒவ்வொருவரும் படிப்பை முடித்தவுடன் வெளிநாட்டில் உள்ள புகழ்பெற்ற நிருவனத்தில் தான் வேலை பார்க்க வேண்டும் என்ற ஒரு தவரான எண்ணத்தை உறுவாக்கிவிடும். இதி நம் சமுதாயத்திற்கு மிகப்பெரிய தீங்கு.

    • //மாறாக இந்தியாவில் பெரிய அளவில் புகழப்படுவது பெரிய அளவில் தேவையற்ற எண்ணங்களை இளைஞர்களின் மனதில் விதைக்கும்//

      ஆமாம். இந்தியர்கள் அடிமைகள் தானே… அவர்கள் எவ்வாறு ஆள முடியும். அவர்கள் அமெரிக்காவிற்கு கூலி வேலைக்கு போனால் இளைஞர்களின் மனம் மாறாது..

  2. உங்கள் பிள்ளைகளுக்கு இந்த மாதிரி நல்ல இடத்தில் வேலை கிடைத்தால் உடனடியாக வேலையை விட சொல்லுவீர்கள் தானே??

  3. உங்க புலம்பல் தாங்கவில்லை.. எதுக்கு பார்த்தாலும் ஒரு நெகட்டிவா எழுதிகொண்டிருந்தால் என்ன தான் செய்வது..

    • எதையும் விமர்சனமே இல்லாமல் பார்த்தால் என்ன தான் நண்பா செய்வது ? விமர்சனங்களை சரி அல்லது தவறு என்று அனுக வேண்டுமே தவிர, அந்த விமர்சனம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பதிலிருந்து அனுகக்கூடாது. என்ன நான் சொல்வது சரி தானே.

  4. இதே போல அயன்ஸ்தீனையும் கொண்டாடுகிறார்கள் . அவரால் ஏழைகளுக்கு கிடைத்த பயன் என்ன ?

    எல்லோரும் ஏழைகளுக்காக உழைக்க வேண்டும்.

  5. உலகில் 110 கோடி பேர் பயன்படுத்தும் ஒரு சேவையின் தலமை நிறைவேற்று அதிகாரியாக ஒரு இந்தியன் நியமிக்கப்பட்டது பெருமையில்லையாம்….

    http://www.businessinsider.com/microsoft-doing-well-2010-7?IR=T#theres-11-billion-people-using-microsoft-products-9

    மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். (குறையுடன் நோக்கினால் எல்லாம் குறைதான்). தயவுசெய்து தங்கள் பார்வையை மீள் பரிசோதனை செய்யுங்கள்.

    • அது சேவை இல்லீங் நண்பரே… கொள்ளைங்க…

      கட்டுரையிலிருந்து –

      //முதலாவதாக, மைக்ரோசாப்டில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது? பலரைப் பொருத்தமட்டில் அது இரண்டாந்தரமான பொருட்களையும், திருட்டுத்தனமான ஏகபோக வியாபார உத்திகளையும் கொண்டிருக்கும் நிறுவனம். மழலையர் பள்ளியிலிருந்து பல்கலைக் கழகங்கள் வரை பொதுக் கல்வியை ஒழிப்பதும் அபாயகரமான புவிமாற்ற தொழில்நுட்பங்களுக்கு நிதி அளிப்பதும்தான் அதன் கோடீசுவர முதலாளியின் பொழுது போக்கு//

  6. திரை கடலோடியும் திரவியம் தேடு. வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதித்து தாய்நாட்டிற்கு செல்வம் கொண்டு வருவதில் தவறில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் வெளிநாடுட்டுக்கு சென்று சம்பாதித்து அவர்கள் வீட்டுக்கு பணம் அனுப்புவதால் அவர்கள் குடும்பம் செழிப்படைகிறது. நமது இந்திய கலாசாரத்தின் மிகப்பெரிய ஆயுதம் நமது சேமிக்கும் பழக்கம் தான். வளைகுடா நாடுகளில் பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டவர்கள் சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் அங்கேயே செலவழித்து ஆடம்பரமாக வாழ விரும்புகின்றனர். ஆனால் இந்தியர்கள், குறிப்பாக தென்னிந்தியர்கள் தான் சம்பாதிக்கும் பணத்தில் 60 முதல் 70 சதவீதம் வரை சேமித்து சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். சவூதி ஆளும் வர்க்கம் நம் இந்தியர்களின் இந்த பழக்கத்தால் அவர்கள் நாட்டு பணம் பெருமளவில் வெளிநாடுகளுக்கு செல்வதாக கவலைப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க சுற்றினாலும், சொந்த நாட்டை மறக்காமல் நம்மவர்கள் பணம் அனுப்புவதால் நாட்டிற்கு நன்மையே. அதே சமயம், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்லும் தற்போதைய இளைய சமுதாயம் அமெரிக்க வாழ்கை முறையால் கவரப்பட்டு சேமிப்பின் அருமையை உணராமல் சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் ஆடம்பர வாழ்க்கைக்கே செலவு செய்வதும் தாய்நாட்டை, தாய்மொழியை மறந்தும் வாழ்வது மிகவும் கவலையளிக்கிறது. குழந்தைகளிடம் தமிழில் பேசாமல் ஆங்கிலத்திலேயே பேசுவதால் அவர்கள் பிற்காலத்தில் ஒரு அமெரிக்க குடிமகனாக தான் வளருகிறார்கள், இந்திய காலாசாரத்தை மறந்து விடுகிறார்கள். இது கவலையளிக்க கூடிய விடயம் தான். மரம் எவ்வளவு உயரமாக வளர்ந்தாலும் அதன் வேர்கள் தரையில் ஆழமாக பதிந்திருந்தால் தான் நல்லது. இல்லையென்றால் சிறு புயல் வந்தாலும், மரம் ஆணிவேரோடு பிய்த்துக் எறியப்பட்டு விடும். வெளிநாடுகளுக்கு போங்க, சம்பாதிங்க, செழிப்பா வாழுங்க, அதே சமயம், உங்க வேர்களை மறந்திடாதீங்க. நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை உங்க ஊருக்கு பள்ளிக்கூடம் கட்டுவதற்கோ, மருத்துவமனையை கட்டுவதற்கோ (சேவை நோக்கோடு, பண நோக்கோடு அல்ல) பயன்படுத்துங்கள். ஊரில் உள்ள படித்த அறிவாளிகளுக்கு சுய தொழில் செய்ய உதவுங்கள். நீங்களும் நல்லா இருப்பீங்க, நாடும் நல்லா இருக்கும்.

  7. இப்பத்தான் CEO ஆகியிருக்காரு அதுக்குள்ள “எனக்கு என்ன ஆதாயம்”னு கேட்கிற உங்கள விட “நம்மாள் ஒருத்தன் தன்னோட உழைப்பால் உலகின் மிகப்பெரிய software நிறுவனத்தின் தலை ஆகியிருக்கார்”னு பெருமையா நினைக்கிற சாதாரண மக்கள் மேல்.

    அது சரி – அடுத்தவன் சம்பாதிச்சு எனக்கு என்ன பண்ணுவான்னு நாக்கை தொங்கபோடும் இந்த குணத்தை என்னனு சொல்ல?

  8. //அது சரி – அடுத்தவன் சம்பாதிச்சு எனக்கு என்ன பண்ணுவான்னு நாக்கை தொங்கபோடும் இந்த குணத்தை என்னனு சொல்ல//

    சரியாக சொன்னீர்கள் இப்படி சொல்லுப்பவர்கள் தாங்கள் உதவ மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தங்களைவிட அதிகம் சம்பாதிப்பவனை உதவ சொல்லுவார்கள். மற்றவருக்கு உதவுவது தனிப்பட்ட விடயம். நான் அதிகம் சம்பாதிப்பதால் மற்றவருக்கு உதவ வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்???

    • ஏன்னாக்க “நான் நான்”னு நீங்க சொல்றீங்கள்லங்க ஒன்னு அதே நாம்ங்கிறதுல இருந்து வந்ததுதானுங்க…

  9. அவரவர் சம்பாதிக்கும் வசதிக்கேற்ப ஒரு சிறு அளவு வருமானத்தை பொதுக்காரியங்களுக்கு பயனாக அளிப்பது தவறில்லையே. நம் வருமானத்தில் 5 சதவீதம் வருங்கால சேமிப்புக்கும், 5 சதவீதம் பொது காரியங்களுக்கும் செலவு செய்யலாம். தவறில்லை. இது பத்தாயிரம் வருமானம் உள்ளவருக்கும் பொருந்தும், பத்து கோடி வருமானம் உள்ளவருக்கும் பொருந்தும். பிறந்த நாடு என்பது பெற்ற தாய்க்கு சமம். நாம் வளமாக வாழ்கையில் அதனை கேளிக்கைகளுக்கு செலவு செய்யும்போது அதில் ஒரு சிறிய பங்கை நம் தாய்நாட்டின் வளர்ச்சிக்கும் தரலாமே? உங்களுக்கு NGO க்களில் நம்பிக்கை இல்லையெனில், நீங்களே நேரடியாகவோ, உங்கள் நண்பர்கள் மூலமாகவோ, சில நல்ல காரியங்களை தொடங்கி வைக்கலாமே!

    • நிறைய பணம் பண்ணும் பலர் தங்களால் இயன்ற அளவு சமுதாயத்திற்கு பங்களிக்கிறார்கள் என்பதே உண்மை (சில பல அரசியல்வாதிகள் தவிர).
      அமெரிக்க பில்கேட்ஸ் முதல் நம்மூர் அம்பத்தூர் தொழில் நிறுவனர் குப்புசாமி வரை.
      நாடெல்லாவும் ஏதோ செய்து கொண்டுதான் இருப்பார் – என்ன பலர் வெளியே தம்பட்டம் அடிப்பதில்லை.

  10. பண வசதி இல்லாதவர்கள், தங்களால் ஆன உழைப்பை கொண்டு ஏதாவது செய்யலாம். என்னை பொறுத்தவரை வெட்டியாக பேசி காலத்தை கழிப்பதை விட, வாதம் பல புரிந்து நம் வல்லமையை காட்டுவதை விட ஒரு சிறு செயலில் நம்மால் ஆனா உதவியை நம் ஊருக்கோ, நாட்டுக்கோ, நம் மக்களுக்கோ பயன்படும் வகையில் ஏதேனும் செய்து காலத்தை பயனுடன் கழிக்கலாம்.

  11. இது எந்த விதத்தில் சிறுமை?? உங்கள் பிள்ளை நல்ல வேலைக்கு போனால் சிறுமையா? உங்கள் ஊர்க்காரன் பெரிய வேலைக்கு போனால் சிறுமையா? உங்கள் இனத்தவன்(தமிழன்) நல்ல வேலைக்கு போனால் சிறுமையா?

    எந்த விதத்தில் சிறுமை?? தயவுசெய்து விளக்குங்கள்…

Leave a Reply to பாளையம் மஹறாஜ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க