privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமூவர் தூக்கு ரத்து – பார்ப்பன தினமலருக்கு மட்டுமா பிடிக்கவில்லை ?

மூவர் தூக்கு ரத்து – பார்ப்பன தினமலருக்கு மட்டுமா பிடிக்கவில்லை ?

-

ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு.

முருகன், சாந்தன், பேரறிவாளன்
முருகன், சாந்தன், பேரறிவாளன்

சில வாரங்களுக்கு முன்னர்தான் இதே போன்றதொரு வழக்கில், கருணை மனு மீதான தாமதத்தை ஏற்று வீரப்பன் வழக்குகளில் குற்றஞ் சாட்டப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட மீசைமாதையன், பிலவேந்திரன், சைமன், உள்பட 15 பேர்களின் தூக்கு ஆயுளாக குறைக்கப்பட்டது. அப்போதே மூவர் தூக்கிற்கும் இதே மாதிரியான தீர்ப்பு வருமென்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அந்த வழக்கிலும் மத்திய அரசு “தூக்கை ரத்து செய்யக்கூடாது, அதற்கு கருணை மனு முடிவு தாமதத்தை ஒரு காரணமாக ஏற்க முடியாது” என்றே வாதிட்டிருந்தது.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவர் சார்பாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 11 ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு 2011-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலால் நிராகரிக்கப்பட்டன. இதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில் “கருணை மனுவை பரிசீலித்து முடிவு எடுப்பதில் தாமதம் செய்யப்பட்டதால் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்” என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டுமென்று கருப்பையா மூப்பனார் அபிமானி ஒருவர் தொடுத்த வழக்கையடுத்து 2012-ம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவை எதிர்த்து கடுமையாக வாதிட்ட மத்திய அரசு தரப்பு, “ஒரு நாட்டின் பிரதமரை கொன்ற குற்றவாளிகளை விடுவிப்பது முறையல்ல” என்றும், “முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதற்கு இவர்கள் வருத்தம் தெரிவிக்கவில்லை” என்றும், “இவர்கள் சிறையில் எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்றும், “ஆட்சி மாற்றம், குடியரசுத் தலைவர் மாற்றம் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டது, இதற்காக தண்டனையை குறைக்கக் கூடாது” என்றும் வாதிட்டது.

இந்த வாதத்தை நிராகரித்து நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், “கால தாமதம் ஏற்பட்டதற்கு அரசு காரணம் இல்லை என்பது நிரூபிக்கப்படவில்லை” என்றும், “நீண்ட காலம் சிறையில் இருந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை நிரூபிக்கத் தேவையில்லை” என்றும் கூறியிருக்கின்றனர். மத்திய அரசு இந்த வழக்கில் எப்படியாவது கொலையாளிகளை தூக்கிலிட வேண்டும் என்ற முனைப்புடனே வாதங்களை வைத்தது. நீதியரசர் சதாசிவத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிதான் அப்சல் குரு மீதான கருணை மனுவை ரத்து செய்து, அவரது குடும்பத்தினருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் அவசர கதியில் தூக்கிட்டு கொன்றதற்கு காரணமாக இருந்தார்.

காங்கிரசு கும்பலைப் பொறுத்தவரை அப்சல் குரு எனும் அப்பாவியை தூக்கிலிட்டு முழு காஷ்மீர் மக்களது எதிர்ப்பையும் துச்சமென புறந்தள்ளியதைப் பார்த்தால் மூவர் தூக்கு குறித்தும் அவர்களது கொலைகார மனநிலையை புரிந்து கொள்ள முடியும். இத்தனைக்கும் காஷ்மீரை விட தமிழகத்தின் பாராளுமன்றத் தொகுதிகள் அதிகம், அதனால் காங்கிரசு அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்கலாமே என்று சிலர் நினைக்கலாம். அப்படிப் பார்த்தால் தமிழகத்தை விட ஒட்டு மொத்த இந்தியாவின் தொகுதிகள் அதிகம் என்பதே பதில்.

அப்சல்குரு
இந்து-இந்திய தேசிய வெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட முகமது அப்சல் குரு

அதாவது காஷ்மீரின் நியாயம் குறித்து தமிழகத்திற்கு தெரியாதது போல, தமிழகம் குரல் கொடுக்காதது போல தமிழகத்தின் மூவர் தூக்கு குறித்த நியாயம் ஏனைய இந்திய மக்களுக்கு தெரியாது. இது பொதுவில் தேசிய இனங்களுக்கிடையே உள்ள வேறுபாடு என்பதால் உருவான நிலை அல்ல. இந்தியா முழுவதும் ஆளும் வர்க்கம் உருவாக்கியிருக்கும் பார்ப்பனியம் சார்ந்த ‘தேசபக்தி’ மதிப்பீடுகளிலிருந்து மக்களிடையே இந்த பாராமுகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஈழ ஆதரவு என்பதை புலிகள் – பயங்கரவாத ஆதரவு என்றும், காஷ்மீர் மக்கள் ஆதரவை பாகிஸ்தான் சதி என்றும், வடகிழக்கு மக்களின் நியாயமான போராட்டத்தை சீன சதி என்றும்தான் ஊடகங்களும், கார்ப்பரேட் தேசிய கட்சிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும் மக்களிடையே ஓதி வந்தனர்.

ஆகவே ஒரு தேசிய இனத்தின் துக்கப்படுதலால் வரும் நட்டத்தை விட இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் தேசபக்த பூச்சாண்டி பொதுக்கருத்தின் இலாபம் அதிகம் என்பதே அவர்களது கணக்கு. இதில் காங்கிரசு, பா.ஜ.க என்ற வேறுபாடு இல்லை. அப்சல் குருவை அவசரமாக தூக்கிலிட்டது எதனால்? பா.ஜ.கவை விட நாங்கள்தான் தீவிர தேசபக்தர்கள் என்று ‘இந்துக்களிடையே’ காட்டி ஆதரவை காங்கிரஸ் அள்ள விரும்பியதே காரணம்.

ஒருவேளை மூவர் தூக்கு குறித்த வழக்கு பாஜக ஆட்சிக் காலத்தில் நடந்திருந்தாலும் இன்று மத்திய அரசு வழக்கறிஞர்கள் எப்படி வாதாடினார்களோ அப்படித்தான் பா.ஜ.க வழக்கறிஞர்களும் வாதாடியிருப்பார்கள். மேலும் ஆட்சியில் இல்லை என்றாலும் சு.சாமி, சோ இன்னபிற பா.ஜ.க நபர்கள் மூவர் தூக்கை உடன் நிறைவேற்ற வேண்டுமென்றே பேசி வந்தனர்.

எனவே இந்த வகையில் பரிசீலித்துப் பார்க்கும் போதுதான் இந்திய அரசும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட நீதிமன்றங்களின் செயல்பாடும் இருக்கும் என்பது புரிய வரும். தில்லை வழக்கில் இதே உச்சநீதிமன்றம் பார்ப்பன தீட்சிதர்களின் பொய்யான கருத்துக்கள், வாதங்களை ஆதரித்து தீர்ப்பு கொடுத்ததும் கூட இந்த அடிப்படையில்தான். அதனால்தான் மூவர் தூக்கு குறித்த தீர்ப்பிலும் அரசியல் நியாயம் ஒழிக்கப்பட்டு டெக்னிக்கல் காரணங்களே முதன்மையாக வைக்கப்படுகிறது.

மேலும், “இனிமேல் தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனு மீதான முடிவுகளை எடுக்க காலக்கெடு விதிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், இத்தகைய அரசியல் கைதிகளின் கருணை மனுக்களை உடனடியாக நிராகரித்து தூக்கு மேடையில் ஏற்றும் கொலைக்குடியரசின் செயல்பாடுகள் விரைவடைவதற்கு இது ஒரு தூண்டுதலாக அமையும். இன்று தூக்கு மேடையில் இருந்து தமிழக மூவர் காப்பாற்றப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் எந்த வழக்காக இருந்தாலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் கோரும் கருணை மனு, உடனுக்குடன் முடிவு செய்யப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படும். அதில் மன்னிப்பு யாருக்கு, தூக்கு யாருக்கு என்பது இந்திய ஆளும் வர்க்கங்களின் நலன்களை வைத்து முடிவு செய்யப்படும்.

வேறு வகையில் சொன்னால் இதுகாறும் கருணை மனு தாமதம் என்ற வகையில் தூக்கிலிருந்து தப்பித்தவர்கள் இனி தப்பிக்க முடியாது. தமிழின ஆர்வலர்கள் போற்றும் தலைமை நீதிபதி சதாசிவம் அளித்திருக்கும் தீர்ப்பு இப்படித்தான் வேறு வகையில் நீதியைக் கொல்வதற்கும் காரணமாக இருக்கப் போகிறது. இருப்பினும் இந்த தீர்ப்பைக் கூட இந்திய ஆளும் வர்க்க அறிஞர் பெருமக்கள் சினத்துடன்தான் பார்ப்பார்கள்.

ராஜீவ் காந்தி
ராஜீவ் கொலை என்பது இந்திய அமைதிப்படையின் குற்றங்கள், இலங்கையில் தனது பிராந்திய மேலாதிக்க நலனுக்காக தலையிட்ட இந்திரா முதல் ராஜிவ் வரையிலான இந்திய அரசின் குற்றங்கள் என்பதிலிருந்து விசாரிக்கப்படுவதுதான் சரியாக இருக்கும்.

இந்த தீர்ப்பு குறித்து தேசிய-ஆங்கில ஊடகங்களில் பேசும் இந்திய அல்லது இந்துத்துவ நலன்களுக்கான அறிவாளிகள், தூக்குதண்டனைக்கு ஆதரவாக ஆளும் வர்க்கத்தின் பாசிசத்தை வெறியுடன் கக்குவார்கள். குறிப்பாக அர்னாப்  கோஸ்வாமி எனும் அம்பி இன்றிரவு எத்தனை டெசிபலில் கத்துவார் என்பதை யாரும் அளவிடவே முடியாது.

தமிழ்நாட்டில் கூட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போன்ற காங்கிரஸ் பெருச்சாளிகளும், சோ போன்ற பா.ஜ.க பெருச்சாளிக்களும் அப்படித்தான் பேசுவார்கள். அதற்கு அச்சாரமாக பார்ப்பன தினமலர் “ஒரு தேச பிரதமரை கொலை செய்த கொடூர குற்றவாளிகளுக்கு இந்திய சட்டப்படி பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தூக்கு வழங்கப்பட்டதை மறு பரிசீலனை செய்யக்கூடாது என்றும், விடுவித்தால் நாட்டில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றும் , இது இந்திய நீதி மன்றங்கள் மீதான நம்பிக்கையை குலைத்து விடும் என்றும் தேச பற்றாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சாமானிய மக்கள் ஒரு கொடூரத்தினால் பாதிக்கப்பட்டால் அவனுக்கும், அவனை சார்ந்த குடும்பத்தினருக்கும் எப்படி நீதி கிடைக்கும் என்ற கேள்வி எழத்துவங்கியுள்ளது.” என்று நஞ்சை கக்கியுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் சித்திரவதை மூலம் வாங்கப்பட்ட பொய்யான வாக்குமூலங்கள் தவிர வேறு ஆதாரங்கள் இல்லை என்பதை மறைத்து விட்டு,  ‘தேச பற்றாளர்கள்’ என்ற முகமூடியின் பின்னிருந்து தனது கருத்தை வெளியிட்டுள்ளது, தினமலர். மேலும் ராஜீவ் கொலை என்பது இந்திய அமைதிப்படையின் குற்றங்கள், இலங்கையில் தனது பிராந்திய மேலாதிக்க நலனுக்காக தலையிட்ட இந்திரா முதல் ராஜிவ் வரையிலான இந்திய அரசின் குற்றங்கள் என்பதிலிருந்து விசாரிக்கப்படுவதுதான் சரியாக இருக்கும். அப்படி விசாரிக்கப்பட்டால் இந்திய அரசு, இராணுவம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றவாளிகள் என்பதை சுலபமாக நிரூபிக்க முடியும். அதை மறைக்கத்தான் இவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவோடு இறந்தவர்களை வைத்து கருணை பேசுகிறார்கள். இந்த கருணையின் பின்னே இருப்பது பச்சையான ஒடுக்குமுறையே அன்றி வேறல்ல.

சாமானியருக்கு நீதி கிடைக்குமா என்று நீலிக்  கண்ணீர் வடிக்கும் இதே தினமலர் சங்கரராமன் என்ற சாமானியரை திட்டமிட்டு கொலை செய்த ஜெயேந்திரன் என்ற கொலையாளி, சாட்சியங்களை பிறழ் சாட்சியங்களாக மாற்றி புதுச்சேரி நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்டதை கொண்டாடி தனது பார்ப்பன பாசத்தை காட்டியது.

அற்புதம் அம்மாள்
பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் பல ஆண்டுகளாக சொல்லி வரும் “ராஜீவ் கொலைக்கும் பேரறிவாளனுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. எந்த குற்றமும் செய்யாமல் தண்டனை அனுபவித்து வருகிறான் என் மகன்” என்ற கேள்விக்கு யார் பதில் தருவார்கள்?

மோடியின் ஊதுகுழலான தினமலர் போலவும், அதை விட தீவிரமாகவும் ஈழப் போராட்டத்தின் மீதும், ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்கள் மீதும் வன்மத்தை உமிழ்ந்து வரும் பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்துதான் தமிழகத்தின் நலன்களை பாதுகாக்கப் போவதாக மோசடி செய்கின்றனர் வைகோ, தமிழருவி மணியன் போன்றவர்கள்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஞானதேசிகன் “சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி கூற முடியாது. ஆனால் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் குற்றவாளிகள் தான். குண்டுவெடிப்பில் தலைவர் ராஜிவ்காந்தி உள்பட பொதுமக்கள் பலர் இறந்து போனார்கள். அவர்களுக்காக யாரும் கண்ணீர் வடிக்கவில்லை. ஆனால் இவர்களுக்கு மட்டும் ஏன்? தீர்ப்பு பற்றி முழுவிவரம் தெரிந்த பிறகு பேசுறேன்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே கூட்டணியில் மட்டுமல்ல தமிழக மக்களின் கருத்திலும் காலாவதியாகி வரும் காங்கிரஸ் கட்சி இதற்கு மேல் கருத்து சொன்னால் அதற்கு கருமாதிதான் என்பது ஞானதேசிகனுக்கு தெரியாதது அல்ல.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தாலும், பல ஆண்டுகளாக சொல்லி வரும் “ராஜீவ் கொலைக்கும் பேரறிவாளனுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. எந்த குற்றமும் செய்யாமல் தண்டனை அனுபவித்து வருகிறான் என் மகன்” என்ற கேள்விக்கு யார் பதில் தருவார்கள்? ராஜீவ் கொலை வழக்கில் கொடுங்கோல் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறப்பு புலனாய்வு பிரிவினரின் சித்திரவதை மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டிருந்தனர். அந்த வாக்குமூலங்கள் சித்திரவதை மூலம் பெற்றப்பட்டவை என்பதையும், தவறாக பதிவு செய்யப்பட்டு மோசடியாக உருவாக்கப்பட்டவை என்பதையும் புலனாய்வு துறையின் அதிகாரி தியாகராஜன் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

மோசடியான சட்டத்தின் கீழ்தான் 1998-ம் ஆண்டு தடா நீதிமன்றத்தால் இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு 1999-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் அது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை மத்திய, மாநில அரசுகள் கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்திருக்கின்றன.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பில்  “ஆயுள் தண்டனையை எவ்வளவு காலம் என்று தீர்மானித்து இவர்களை விடுதலை செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 432, 433-ன் படி முடிவு எடுக்கலாம்” என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

ஆனால், அப்படி முடிவு எடுத்து விடுதலை செய்வதை அரசுகள் செய்யாது. மக்கள் போராட்டம்தான் அதை நிர்ப்பந்திக்கும் என்பது ராஜீவ் கொலை வழக்கின் வரலாற்றிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

மத்தியில் ஆளும் வர்க்க கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுமே மக்கள் உரிமைகளை ஒடுக்கும் தடா, பொடா போன்ற சட்டங்களை உருவாக்கி, அரசியல் நடவடிக்கைகளை தடை செய்வதிலும், ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக போராடுபவர்களை அந்த சட்டங்களின் கீழ் தூக்கு மேடைக்கு அனுப்புவதில் ஒத்த கருத்துடன் இருப்பவர்கள். இதில் இவர்களது தமிழக ஏஜெண்டாக பாசிச ஜெயா இருந்து பல ஈழ ஆதரவு ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகளை சிறையில் போட்டு அடைத்தார்.

மாநில அரசைப் பொறுத்த வரை 2000-ம் ஆண்டு மாநில அரசுக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்களில் நளினியின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மனுக்களை நிராகரித்தும் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு. இப்போது மூவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று கூச்சமில்லாமல் பேசுகிறார் கருணாநிதி.

மூவர் தூக்குக்கு எதிரான மனு 2011-ம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஆகஸ்டு 30-ம் தேதியன்று தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் முன்மொழிந்த ஜெயலலிதாவின் அரசு, “கருணையை நியாயப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் எதுவும் தோன்றி விடவில்லை” என்றும் “தமிழ் மக்களின் உணர்வு குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை” என்றும் அலட்சியமாக மனு தாக்கல் செய்தது.

2010-ம் ஆண்டு நளினி 20 ஆண்டு சிறையில் கழித்து விட்ட தன்னை விடுதலை செய்யக் கோரி அனுப்பிய மனுவை தி.மு.க தலைமையிலான மாநில அரசு நிராகரித்தது. தன் வயதான தந்தையை பார்ப்பதற்கு ஒரு மாதம் பரோல் கேட்கும் நளினியின் மனுவைக் கூட, ‘சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்’ என்றும், ‘அரசியல்வாதிகள் அவரை சந்தித்து தமது ஆதாயத்துக்காக  பயன்படுத்திக் கொள்வார்கள்’ என்றும் கூறி, மேலும் சில சட்டவாத நடைமுறைகளையின் அடிப்படையில் கடந்த வாரம் (பிப்ரவரி 11, 2014) எதிர்த்திருக்கிறது ஜெயலலிதா தலைமையிலான அரசு.

இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அநியாயமாக தண்டிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதற்கு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் தாமாக முன்வரப் போவதில்லை. ராஜீவ் கொலை வழக்கு நடத்தப்பட்ட மோசடியான நடைமுறையையும், ராஜீவ் கொலையின் அரசியல்  நியாயத்தையும் அம்பலப்படுத்தி போராடுவதன் மூலமே இவர்களை விடுவிக்க முடியும்.

எனவே தூக்கு மேடையிலிருந்து மூவர் காப்பாற்றப்பட்டிருந்தாலும், அவர்களோடு நளினையையும் தூக்கு மேடைக்கு அனுப்பிய காரணங்கள் இங்கே நியாயமென்றும் நீதியென்றும் இன்னமும் ஆட்சி செய்கின்றன. அவற்றை வெட்டி வீழ்த்தாத வரை நமது போராட்டத்திற்கும் முடிவு இல்லை.

மேலும் படிக்க