privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஐ.பி.எம் ஒரு கனவா, கொலைகார கில்லட்டினா ?

ஐ.பி.எம் ஒரு கனவா, கொலைகார கில்லட்டினா ?

-

பிப்ரவரி 12-ம் தேதி, புதன் கிழமை காலை. பெங்களுரு ஐ.பி.எம் நிறுவனம் கிட்டத்தட்ட துக்க மாளிகையாகவே மாறி விட்டது. அந்நிறுவனத்தின் கணினி தொழில்நுட்ப பிரிவில்  பணிபுரிந்து வந்த சுமார் 40  ஊழியர்கள் இரண்டே மணி நேரத்தில் வீட்டுக்கு அனுப்பட்டார்கள். மனிதவள நடவடிக்கை (Resource Action) எனப்படும் இந்த பெரும் வேலை நீக்க நடவடிக்கை வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து, ஐ.பி.எம் இந்தியாவின் பல்வேறு கிளைகளிலிருந்து நூற்றுக் கணக்கான பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.

ஐ.பி.எம் ஆட்குறைப்பு
ஐ.பி.எம் ஆட்குறைப்பு

காலையில் பல கனவுகளுடனும், அடுத்த மாத கடன் தவணைகளை பற்றிய கவலைகளுடனும், அன்றைய வேலைக்கான திட்டங்களுடனும், நிறுவனத்தினுள் நுழைந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. இரண்டு மணி நேரத்துக்குள், அவர்கள் வைத்திருக்கும் அலுவலகம் சார்ந்த மடிக்கணிணி, அடையாள அட்டை இன்ன பிறவற்றை பிடுங்கி கொண்டு மூன்று மாத அடிப்படை மாத ஊதியத்தை (6 வார முழு சம்பளம்) வங்கி காசோலையாக கொடுத்து அவர்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர். இத்தனை நாள் நிறுவனத்திற்காக தூக்கம் துறந்து, உணவை மறந்து, குடும்ப பொறுப்புகளை மறுத்து அல்லும் பகலும் செய்த பணிகள் மதிப்பின்றி குப்பை தொட்டியில் வீசப்பட்டு விட்டன.

நிர்வாகத்தின் இந்த திடீர் நடவடிக்கையை, மனிதத் தன்மையற்ற செயலை கண்டு பலர் அதிர்ந்து போனார்கள். தங்கள் கைகளில் சொந்தப் பொருட்களுடனும், மனது முழுவதும் எதிர் காலத்தை பற்றிய கேள்விகளுடனும் அழுதபடியே வெளியேறினார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த இலவச காபி சேவை நிறுத்தம், இணையம் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள், இலவச போக்குவரத்து வசதிகள் மறுப்பு, ஊக்கத் தொகை இல்லை, சம்பள உயர்வு இல்லை, வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் குறைப்பு, பயணப்படி ரத்து, வெளி நாடு தினப்படி குறைப்பு என வரிசையாக ஊழியர்களை பதம் பார்த்து வந்த ஐ.பி.எம்மின் லாபவெறியின் உச்சமாக “மனிதவள சீரமைப்பு நடவடிக்கை” மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி இவர்கள் உழைப்பு தேவை இல்லை என முடிவு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்ட பலர் வேலை இழக்க ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு முன்பும் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் செயலபட்டு வரும் ஐ.பி.எம் சத்தமே இல்லாமல் ஒவ்வொருவராக பலரை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டு தான் இருந்தது. ஆனால் இப்படி இரண்டே மணிநேரத்தில் மந்தை மந்தையாக வீட்டுக்கு அனுப்புவது இது தான் முதன் முறை. இனி மற்ற ஐடி நிறுவனங்களாலும் இந்த முறை தொடரப்படலாம். தொழில்துறையில் உழைக்கும் தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் நிலைமையை இப்போது தகவல் தொழில் நுட்பத் துறை ஊழியர்களும் சந்திக்கின்றனர்.

தகவல் தொழில் நுட்பத் துறை ஊழியர்களை எந்த நேரத்திலும் எவ்வித காரணமும் இன்றி வீட்டுக்கு அனுப்பலாம் என்பது நடை முறை. முன்னறிவிப்பு கிடையாது, நஷ்ட ஈடு கிடையாது. இந்நிறுவனங்கள் எவ்வித தொழிலாளர் நலச் சட்டத்தையும் மதிப்பதில்லை. அவர்கள் கொடுக்கும் சில வசதிகளை காரணம் காட்டி ஊழியர்களே அவற்றுக்காக போராடுவதும் இல்லை. தொழிற்சங்கம் இல்லை என்பதை மிகவும் பெருமையாக வேறு கருதுகிறார்கள். தொழிலாளர் நல சட்டம் இல்லை, தொழிற்சங்கம் இல்லை என்பதன் தொடர்ச்சியாக இன்று வசதிகளும் இல்லை, சலுகைகள் இல்லை, ஏன் இனிமேல் வேலையே இல்லை எனும் அவல நிலை வந்திருக்கிறது.

தொழிலாளர் நலன் எனும் அடிப்படையில் அமெரிக்காவில் ஐ.பி.எம் நிறுவன ஊழியர்களுக்காக சங்கம் கட்ட முனைந்துக் கொண்டிருக்கும் லீ கோனார்ட் இந்த பெரும் வேலை நீக்க நடவடிககைகள் இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவையும் தாக்கும் என எச்சரித்திருக்கிறார். உலகம் முழுவதும் உள்ள ஐ.பி.எம் நிறுவனங்களில் இருந்து சுமார் 13,000 பேர் வரை வீட்டுக்கு அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பளபளப்பான ஐ.பி.எம்
பளபளப்பான ஐ.பி.எம்

நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் வேலை நீக்கங்கள் செய்யப்படுகின்றன என தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. போதுமான லாபம் வரவில்லை என்பதால், வரவை விட செலவு அதிகமாக உள்ள பிரிவிலிருந்து ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். ஒரு பிரிவில் உபரியான ஊழியர்களுக்கு மறு பயிற்சி அளித்து இன்னொரு பிரிவில் வேலைக்கு அமர்த்தும் பொறுப்பைக் கூட முதலாளித்துவ நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.  இந்த வேலை நீக்கத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமானால், உலகமயமாக்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உலகின் மிகவும் பழமையான மிகப் பெரிய கணிணி நிறுவனமான ஐ.பி.எம்மின் இந்தியக் கிளை பெங்களூரை, மன்னிக்கவும், இந்தியாவின் ‘சிலிக்கான் வேலி’யை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஐ.பி.எம் நிறுவனத்திற்கு தேவை லாபம். பெரும் லாபம் ஈட்ட உலகமயமாக்கம் கற்று தரும் விதி “குறைவான கூலிக்கு பொருட்களை செய்து அதிக லாபம் கிடைக்கும் இடத்தில் அதை விற்பது”. ஐ.பி.எம் நிறுவனத்திற்கு தேவையான உற்பத்தியையும் சேவையையும் செய்து வந்த ஊழியர்கள் ஆரம்பத்தில் அமெரிக்காவில் பணியமர்த்தப்பட்டு  கணிசமான அளவு சம்பளம் பெற்றனர், அங்கு தொழிலாளர் நல சட்டங்களை பின்பற்ற கணிசமான பணத்தை நிறுவனம் செலவழிக்க வேண்டி இருந்தது. ஆனால் 1990-களின் உலகமயமாக்கல் இந்தியா, சீனாவை நோக்கி ஐ.பி.எம்மை நகர்த்தியது. இந்தியா – சீனாவில், மலிவான ஊதியத்திற்கு ஆட்கள் கிடைக்கிறார்கள், தொழிலாளர் நல சட்டம், ஊக்கத் தொகை, தொழிற்சங்க பிரச்சனை இல்லை. ஐபிஎம் வேலைகள் இந்நாடுகளில் குவியத் தொடங்கின.

எண்ணற்ற அமெரிக்க ஐ.பி.எம் ஊழியர்கள் கதற கதற வீட்டுக்கு அனுப்பப்பட்டு, அந்த வேலைகள் பெங்களூரு ஐ.பி.எம்ல் பல நூறு இந்தியர்களுக்கு கொடுக்கப்பட்டன. தற்போது ஐ.பி.எம் இந்தியாவில் சுமார் 1 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் கடும் பொருளாதார சரிவு, ஐ.பி.எம்மின் லாபத்தை பதம் பார்த்து வருகிறது. 2013 டிசம்பர் 31 வரையிலான நான்காவது காலாண்டில் ஐ.பி.எம்மின் மொத்த வருமானம் 5% வீழ்ச்சியடைந்து $2770 கோடியாக குறைந்தது. கணினி தொழில்நுட்பப் பிரிவின் வருமானம் 26.1% குறைந்து $426 கோடியை தொட்டது.

எனவே லாப வீதத்தை மீட்டு ஒரு பங்குக்கு $20 ஈவுத் தொகை அளிக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்காக சுமார் 100 கோடி டாலர் (சுமார் ரூ 6,000 கோடி) செலவில் மனிதவள மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொள்ளப் போகிறது என ஐபிஎம் முதன்மை நிதி மேலாளர் மார்ட்டின் ஷ்ரோடர் கடந்த மாதம் அறிவித்தார். உலகம் முழுவதும் சுமார் 13,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதுதான் அதன் பொருள். அதாவது, முதலாளிகளின் பையில் வந்து விழும் லாபத்தின் அளவு குறைந்து விடாமல் இருக்க, ஊழியர்களின் வாழ்க்கையை முடித்து வைக்கத் தயாரானது ஐ.பி.எம்.

ஐ.பி.எம்
ஐ.பி.எம்மின் மனிதவள நடவடிக்கை என்பது நிறுவனத்தின் தேவையற்ற வளத்தை வெட்டி – குப்பைத் தொட்டிக்குள் எறிவது

அதன் முக்கியப் பகுதி தான் பெங்களூருவில் நிகழ்த்தப்பட்ட மனிதவள நடவடிக்கை, அதாவது நிறுவனத்தின் தேவையற்ற வளத்தை வெட்டி – குப்பைத் தொட்டிக்குள் எறிவது. அதன்படி பெங்களூரு கணினி தொழில்நுட்பப் பிரிவின் 40% ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

ஐ.பி.எம் நிறுவனத்தில் இந்த வேலை நீக்கம் மையம் கொண்டிருப்பது கணினி தொழில்நுட்பப் பிரிவில். 1990-களில் இந்தத் துறையில் லாப வீதம் வீழ்ச்சியடைந்து வந்ததைத் தொடர்ந்து மடிக்கணினி மற்றும் மேஜைக் கணினி பிரிவை லெனோவா என்ற சீன நிறுவனத்திற்கு ஐ.பி.எம் விற்றது. எஞ்சியிருந்த, இன்டெல் கட்டமைப்பிலான சர்வர் வகை கணினிகளை ஐ.பி.எம். விற்றுக் கொண்டிருந்தது. இந்த பிரிவில் சேவை மற்றும் விற்பனை வேலைகளை புரிய ஊழியர்கள் பணி புரிந்து வந்தனர். இப்போது, சர்வர் வகை கணினி பிரிவையும் $2.3 பில்லியன் விலைக்கு லெனோவோவிடம் விற்க முடிவு செய்ததைத் தொடர்ந்து லெனோவோவுக்கு அனுப்பப்படவிருக்கும் 7,500 ஊழியர்கள் போக எஞ்சிய சேவை, விற்பனை ஊழியர்களும், இந்த பிரிவுக்கான மென்பொருள் உருவாக்கப் பிரிவை சார்ந்தவர்களும் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பிரேசில், அர்ஜென்டினாவில் 2,100 வேலை இழப்புகளும்,  பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம், நார்வே போன்ற ஐரோப்பிய நாடுகளில் 1,290 வேலை இழப்புகளும் நடந்திருப்பதாக அந்த நாட்டு ஐ.பி.எம் ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  அமெரிக்காவில் பிப்ரவரி 19 அல்லது பிப்ரவரி 26 முதல் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று கான்ராட் தெரிவிக்கிறார்.

ஐ.பி.எம் நிறுவனத்தில் இன்று வேலை இழந்தவர்களில் பலர் கடந்த ஆண்டுக்கான பணி செயல்திறனில் முதன்மையாக வந்தவர்கள். முதலோ கடைசியோ ஐ.பி.எம் எனும் கசாப்பு கடையில் என்ன மதிப்பீடு வேண்டி இருக்கிறது, ஆடு என்றால் வெட்டப்பட வேண்டியது தான். இந்தியாவில் இட ஒடுக்கீடு கோரிக்கை வரும்போதெல்லாம் அம்பிகள் “திறமைக்குத் தான் முன்னுரிமை” வேண்டும் என இடஒதுக்கீட்டை எதிர்த்து போராடுவார்கள். ஆனால் தனியார் நிறுவனங்கள் திறமையை கழிப்பறை காகிதம் அளவுக்குக் கூட மதிக்கவில்லை, பாருங்கள் அம்பிகள் அமுக்கி வாசிக்கிறார்கள். பொங்குவதில்லை.

வேலை இழந்தவர்களில் சிலர் தங்கள் அனுபவம், தொழில்நுட்ப அறிவை வைத்து இன்னொரு வேலை பெற்று விடலாம் என நம்பிக்கையாகவே இருக்கிறார்கள். ஆனால் இவர்களது நம்பிக்கையை அங்கீகரிப்பது போல தவிடுபொடியாக்கும் அதிகாரம் முதலாளிகளின் கையில்தான் இருக்கிறது.

சிறு வயதில் நாம் எல்லாம் படித்த எருது சிங்கம் கதையில் நான்கு எருதுகள் ஒன்றாக இருந்தவரை நெருங்க முடியாத சிங்கம், அவற்றை பிரித்ததின் மூலம் தான் எருதுகளை கொன்று புசித்தது. இந்த எளிமையான கதையின் நீதி கூட மெத்த படித்த, தொழில்நுட்ப சிக்கல்களை களையும் மூளைகளுக்கு ஏன் உறைப்பதில்லை?

வசதிகளுக்காகவும் ஐந்திலக்க சம்பளத்திற்காகவும் உரிமைகளை கோர மறுக்கும் கோழைத்தனத்தையும், உரிமைகளை கோருவதை கேலிக்குரியது என்ற நினைப்பதையும், சங்கமாக ஒன்றிணைவதை தீட்டாக கருதுவதையும் என்ன மாதிரியான அறிவு என்று சொல்வது?

முதலாளிகள் தங்களுக்குள் சங்கமாக திரண்டிருக்கிறார்கள், அவர்களுக்குள் சின்டிகேட் இருக்கிறது. உற்பத்தியாகும் பொருளை எக்காரணத்தைக் கொண்டும் ஒரு குறிபிட்ட அளவுக்கு மேல் குறைந்த விலையில் விற்கக்கூடாது என்பதில் அவர்கள் ஒன்றாகவே செயல்படுகிறார்கள்.

இந்நேரத்திற்கு ஐ.பி.எம் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்ய பட்டவர்களின் ப்ரொஃபைல்கள் (விபரங்கள்) மற்ற நிறுவன மனித வள மேலாளர்களுக்கான பொது தகவல் தளத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். சங்கத்தை மறுக்கும் இந்த அறிவுஜீவிகள் இனி வேலை தேடும் ஒவ்வொரு நிறுவன நேர்முக தேர்விலும் ஏன் தான் பழைய நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கு, தாமே குற்றவாளி என்ற நிலையில் அட்சர சுத்த விளக்கம் அளிக்க வேண்டும்.

எனவே இவ்வளவு நடைபெற்ற பிறகாவது தகவல் தொழில் நுட்பத் துறையில் இருக்கும் ஊழியர்கள் தாம் எத்தகைய அபாயத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு தமது சுயமரியாதை, பணிப்பாதுகாப்பிற்காக அணிதிரளவும், போராடவும் முன் வர வேண்டும்.

–    ஆதவன்

மேலும் படிக்க

  1. போராடினால் இவர்கள் சீனாவுக்குப் போயிடுவாங்களே ! முதலுக்கே மோசமாயிடாதா ?

  2. வசதிகளுக்காகவும் ஐந்திலக்க சம்பளத்திற்காகவும் உரிமைகளை கோர மறுக்கும் கோழைத்தனத்தையும், உரிமைகளை கோருவதை கேலிக்குரியது என்ற நினைப்பதையும், சங்கமாக ஒன்றிணைவதை தீட்டாக கருதுவதையும் என்ன மாதிரியான அறிவு என்று சொல்வது?

    முதலாளிகள் தங்களுக்குள் சங்கமாக திரண்டிருக்கிறார்கள், அவர்களுக்குள் சின்டிகேட் இருக்கிறது. உற்பத்தியாகும் பொருளை எக்காரணத்தைக் கொண்டும் ஒரு குறிபிட்ட அளவுக்கு மேல் குறைந்த விலையில் விற்கக்கூடாது என்பதில் அவர்கள் ஒன்றாகவே செயல்படுகிறார்கள்……

  3. வினவு வாசகர் மணவை சிவா , நாளை இங்கு வந்து வேலை நீக்கத்துக்கு ஆதரவாக “ibm” ன் குரலில் பேசப்போகிறார் !

  4. //ஐ.பி.எம் ஒரு கனவா, கொலைகார கில்லட்டினா //

    இரண்டும் இல்லை . வேலை வாய்ப்பு பொக்கிஷம்

    இந்தியாவில் வேறன்னா வேலை வாய்ப்புகள் இருந்தன ? அவற்றில் எத்துனை equal opportunity employer கொண்டிருந்தன ?

    சாதிய அடக்கு முறை , உறவினர்கள், தெரிந்தவரல் , செல்வந்தர்கள் போன்றோரே தங்களுக்குள் வேலை வாய்ப்பை வைத்து கொண்டார்கள் .

    அனைவருக்கும் வேலை , சமமான வேலை வாய்ப்பு என்று உயர்த்த உதவின இது போன்ற மேலை நாட்டு நிறுவனங்கள்

    கொடி தூக்கினால் அவர்கள் கூடாரத்தை வேறு நாட்டிற்கு கொண்டுபோய் விடுவார்கள்.
    பிறகு பொட்டிகடை , கல்யாண மண்டபம் கட்டி வாடகை விடுதல் போன்ற பழைய தொழில்களுக்கு திரும்ப வேண்டியதுதான்

    கற்க கசடற எனபது இந்தியர்களுக்கு வராத ஒன்று .

  5. I was working with IBM ISL(India SW Lab) STG(Server Tech Group). Damn good salary. Very boring work. I left IBM by Jan 2013. Last week, 70% of my team was thrown out. In IT all kind politics are there. The politics is nastier than any other place. The IT environment is very dynamic, which may be the root cause for the politics. IT workforce is uncivilized than anyone else. I deserve to make this comment. I am having 15+ years of IT experience. //அனைவருக்கும் வேலை , சமமான வேலை வாய்ப்பு// is never true. Among IT firms Indian MNC’s are very bad. In addition, whatever the work culture in abroad, it doesn’t make any sense in India for the same entity. Sorry for typing in English. என்னுடைய எண்ணங்களை எழுதுவதற்கு எனக்கு போதுமான வார்த்தைகள் ஞாபகத்தில் இல்லை.

    • /அனைவருக்கும் வேலை , சமமான வேலை வாய்ப்பு//
      The world is competitive by nature .

      //சமமான வேலை வாய்ப்பு//
      It means opportunity to get the job irrespective of your caste/religion/gender.

      • You can’t see transparency in intake, appraisal or in promotion and hence, we cant talk about equality and others. I am not victim of these. The success of IT is related to the relative difference in the value in the currencies.

  6. //அனைவருக்கும் வேலை , சமமான வேலை வாய்ப்பு என்று உயர்த்த உதவின இது போன்ற மேலை நாட்டு நிறுவனங்கள்//அடடடே ஐ பி எம் காரனின் “சேவையால்” தான் மக்கள் இங்கு பிழைத்து கிடக்கிறார்கள்…… 120 கோடி பேரில் பன்னாட்டு கம்பெனிகள் எதனை சதவீதம் பேருக்கு உங்கள் கூற்றுப்படி வாழ்க்கை பிச்சை போட்டிருக்கிறது ?? எங்கே கூலி குறைவாக வாங்கிக்கொண்டு சாகும் வரை விசுவாசமான ஊழியன் கிடைப்பானோ அங்கே கடைவிரிக்கிறான் அவன் , இதில் உங்களைபோல அடிமைகளின் ஜால்ராவை கேட்டால் அப்படியே அகமகிழ்ந்து போவான்……..

    • @Ahilan

      //அடடடே ஐ பி எம் காரனின் “சேவையால்” தான் மக்கள் இங்கு பிழைத்து கிடக்கிறார்கள்//

      பொட்டி கடையும் , கல்யாண மண்டபம் வாடகை விடுதலும் ,கோவில் விழாக்களுக்கு ஒலி பெருக்கி மாட்டுதலும் போன்ற தொழில்கள் தான் உள்ளன . ஹுண்டாய் ,நோக்கியா ஐ பி எம் போன்றவற்றை துரத்தி விட்டு கவுரவமாக வாழ்ந்து காட்டுங்கள்

      உங்களுக்கு திறமை இருந்தால் ஐ பி எம் போன்ற நிறுவனத்தை உருவாக்கி ,கூலி அதிகமாக வாங்கும் நாட்டுக்கு சென்று அனைவருக்கும் வேலை கொடுங்கள் ஐய்யா .

      ஒரு பேனா பண்ண தொழில் நுட்ப வசதி இல்லாத, வக்கில்லாதவனுக்கு ரோசம் மட்டும் வருது.

      • விட்டு கவுரவமாக வாழ்ந்து காட்டுங்கள் // இவர்கள் வருவதற்கு முன்னால் இந்தியாவில் எல்லோரும் பட்டினி கிடந்தனரா? பாதுகாப்பாக கவுரவமாகவே இருந்தனர்.

  7. “AMBIGAL AMUKKI VAASIKKIRARGAL;PONGUVATHILLAI”-Vinavu”s observation totally apply to Mr Raman.When Vinavu advises IT employees to join militant trade unions,Why Raman gets so much anger?Is IBM is the grandfather of Raman?Raman should read about the agitations of Mcdonnald in USA.Simply because you are in a cushy job,do not pour your anger on the poor victims and Vinavu.

    • அவன் கம்யூட்டர் கண்டு பிடித்து
      சாப்ட்வரெ கண்டுபிடித்து
      உங்களுக்கு சாப்ட்வரெ வேலை கொடுப்பனாம

      நீங்க சினிமா நடிகர்களை பார்த்து நடனம் ஆடுவது எப்படி ? பாட்டு பாடுவது எப்படி ? போஸ்டர் அடிப்பது எப்படி ? ஓட்டுவது எப்படி ? கோடி பிடிப்பது எப்படி என்று படு திறமையான ஆளாம் .

      எல்ல ஊரிலும் புதுசு புதுசா கண்டுபிடுச்சு செல்வம் சேர்த்தால், நீங்க ஊடு கட்டி , நிலம் வித்து செல்வம் செப்பீன்கலாம்

      நீங்க புத்திசாலி ,அவனுக அயொகியனுங்க சரிதானுங்க

      என்னது பர்கர் கம்பனி மாதிரி பண்ணனும்னு சொல்றீங்களா ?
      போராட்டம் பண்ணுங்கோ ஐ பி எம் வேற நாட்டுக்கு போய்விடுவான். பர்கர் கம்பனி அப்படி போக முடியாது . . இப்படி எதையும் யோசிக்காம கொடி புடிங்க , உங்க பேரன் புள்ளைகளுக்கு கொடி பிடிக்க சொல்லி கொடுங்க யாரு வேண்டாம்னா .

  8. Even persons working in Burger company know how to fight.I quoted the struggle of those workers only as an example.IBM is paying salary only for the work done by employees and it is not a charity.IT companies should also be made to follow all Indian labour laws.Why Raman is insulting all Indian IT employees?IT employees do not have time to do all those acts described by Raman.

  9. ஆட்குறைப்பு நடவடிக்கை மற்ற நிறுவனங்களிலும் ஆரம்பித்துவிட்டது. ஆனால் வேறு மாதிரியாக.
    குறைவாக லாபமீட்டும் ஏதாவது ஒரு ப்ராஜெக்ட்-ஐ தேர்ந்தெடுத்து, திடீரென ஒரு நாள் மீட்டிங் போடுவார்கள். “இதை சொல்ல கஷ்டமாகத்தான் இருக்கு. இன்றைக்கு உங்களுக்கு நடந்தது நாளை எங்களுக்கும் நடக்கலாம். வேறு வழியில்லை. உங்களுக்கு முப்பது நாள் அவகாசம் தருகிறோம், வேறு ப்ராஜெக்ட்-ல் வேலை பார்த்துக் கொள்ளுங்கள். முப்பது நாளைக்குப் பின் நீங்கள் பெஞ்ச்-க்கு போக வேண்டியிருக்கும். அதன் பின் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று ப்ராஜெக்ட் மேனேஜர், அவருடைய மேனேஜர் ஆகியோர் சொல்லுவார்கள். அதுவும் எப்போது? எந்த ப்ராஜெக்ட்-லும் வேலை இல்லாத நேரமாகப் பார்த்து.
    இப்போது விப்ரோ-வில் நடந்துகொண்டிருக்கிறது.

Leave a Reply to K.Senthilkumaran பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க