privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்பட்ஜெட் 2014 – முதலாளிகளுக்கு வளர்ச்சி, மக்களுக்கு அதிர்ச்சி

பட்ஜெட் 2014 – முதலாளிகளுக்கு வளர்ச்சி, மக்களுக்கு அதிர்ச்சி

-

2014-15 நிதி ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை பிப்ரவரி 17-ம் தேதி ப. சிதம்பரம் தாக்கல் செய்திருக்கிறார்.

ப சிதம்பரம்
சிதம்பரம் வழங்கிய பட்ஜெட் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் “சாவதற்கு முந்தைய கீதம்” (ஸ்வான் சாங்).

ஏப்ரல் 1, 2014 முதல் மார்ச் 31, 2015 வரையிலான திட்டம் சாராத செலவினங்கள் ரூ 12.08 லட்சம் கோடி, திட்டச் செலவினம் ரூ 5.55 லட்சம் கோடி என்று மொத்தம் ரூ 17.63 லட்சம் கோடி செலவுகளை முன் வைத்திருந்தாலும் இப்போதைய 15-வது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிந்து அடுத்த நாடாளுமன்றத்துக்கான தேர்தல் மே மாதம் நடைபெறவிருப்பதால், ஜூன் 30 வரையிலான 3 மாதங்களுக்கான செலவுகளுக்கு மட்டுமே நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவிருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு புதிதாக அமையப் போகும் அரசு புதிய வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து முழு ஆண்டுக்கான செலவு ஒப்புதலை பெற்றுக் கொள்ளும்.

இந்த நிதிநிலை அறிக்கை, 2004 முதல் 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி புரியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் “சாவதற்கு முந்தைய கீதம்” (ஸ்வான் சாங்) என்று இந்து நாளிதழ் சித்தரித்துள்ளது. ஆனால் காங்கிரசு மட்டும் செத்ததா, இல்லை நாட்டு மக்களா என்பதை நாம்தான் சொல்ல வேண்டும்.

’10 ஆண்டுகள் உங்களுக்காக கடுமையாக உழைத்தோம்; நேர்மையாக வேலை செய்தோம். அடுத்த ஆட்சி எங்களுடையதாக இல்லாமல் போகலாம். ஆனால், உங்களுக்கு உண்மையாக இருந்தோம் என்பதை தொகுத்து இந்த அறிக்கையினை அளிக்கிறோம்’ என்பதாக ப.சிதம்பரம் பா வரிசைப் பட சென்டிமெண்டை வைத்து ஜோடித்தாலும் சரக்கின் நாற்றம் மறையக் கூடிய ஒன்றல்ல.

அதை, சிதம்பரமும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் 10 ஆண்டுகளாக யாருக்காக வேலை செய்தார்கள் என்றும் புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் வரிச்சலுகைகளும், பொருளாதார இலக்குகளும் யாருக்கு சாதகமானவை என்பதிலிருந்தும் பார்க்கலாம்.

புதிய கொள்கை அறிவிப்புகள், புதிய வரிகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்ற ‘நல்மரபி’ன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கும் அடுத்த ஆண்டுக்கும் நிதி நிலைமை மதிப்பீடுகளுக்கான புள்ளிவிபரங்களை முன் வைப்பதோடு, முடங்கி போயிருக்கும் தொழில் துறையை வளர்ப்பதற்காக சில வரிச்சலுகைகளை அறிவித்து, கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளை பட்டியலிட்டிருக்கிறார் சிதம்பரம்.

மாருதி தொழிற்சாலை
தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தும் மாருதி மானேசர் தொழிற்சாலையில் அணி வகுத்து நிற்கும் கார்கள்.

கார்கள், மோட்டர் பைக்குகள் மீதான கலால் வரி 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகவும், எஸ்யுவி எனப்படும் பெரிய ஆடம்பர கார்களின் மீதான வரி 30 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகவும், நீண்டகால வீட்டுப் பயன்பாட்டு சாதனங்கள் (தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி முதலியவை) மீதான கலால் வரி 2 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆடி நிறுவனம் தனது ஆடம்பர காரின் விலையை ரூ 82.11 லட்சத்திலிருந்து ரூ 78.28 லட்சமாக குறைத்திருக்கிறது; மெர்சிடஸ் பென்ஸ் அதன் ஆடம்பர காரின் விலையை ரூ 72 லட்சமாக குறைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து எஸ்கார்ட்ஸ், டி.வி.எஸ், மகிந்திரா, ஹீரோ, மாருதி போன்ற நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் உயர்ந்திருக்கின்றன.

வரிக் குறைப்பும், அதைத் தொடர்ந்த விலைக் குறைப்பும் கார்கள், தொலைக்காட்சி முதலான வீட்டு பயன்பாட்டு சாதனங்கள் விலை சரிவடைய வாய்ப்பு ஏற்படுத்தி, அவற்றின் விற்பனை அதிகரிப்புக்கு இட்டுச் சென்று, அதனால் லாப ஆசை தூண்டப்படும் முதலாளிகள் உற்பத்தியை முடுக்கி விட்டு பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுப்பார்கள் என்று ஆருடம் கூறுகிறார்கள் நாக்கில் எச்சிலை ஊறவிடும் முதலாளித்துவ வல்லுனர்கள். ஆனால், ரூ 3.5 லட்சம் முதல் ரூ 80 லட்சம் வரையிலான கார் வாங்குபவர்களுக்கு விலைக் குறைப்பு, அதனால் முதலாளிகளுக்கு கூடுதல் விற்பனை, கூடுதல் லாபம் இன்னபிற பட்டியல்களால் இவற்றால் இந்திய பொருளாதாரத்திற்கு என்ன ஆதாயம்? இந்திய மக்களுக்குத்தான் என்ன நன்மை? மாருதி அல்லது பஜாஜ் போன்ற தொழிற்சாலைகளில் கொத்தடிமைகள் போல வேலை செய்து வரும் தொழிலாளிகள், கார்களின் விற்பனைக் குறைவினால் வேலை இழக்க இருந்தவர்கள் இப்போது இழக்க மாட்டார்கள் என்பதா இந்த கருணையின் பின்னணி?

ஆனால், இந்த வரிச்சலுகை ஜூன் 30 வரைதான் உறுதி செய்யப்பட்டிருப்பதால், ஏற்கனவே உற்பத்தி சங்கிலியில் இருக்கும் கார்களை மட்டும் வேகமாக உற்பத்தி செய்து அனுப்புவதில்தான் முதலாளிகள் அக்கறை காட்டுவார்களே தவிர இதனால் வேறு வேலை வாய்ப்புகளோ இல்லை பொருளாதார நன்மையோ நாட்டுக்கு இல்லை. ஆனால் நுகர்வுக் கலாச்சார மோகத்தை விலை குறைப்பு எனும் மகுடி நாதத்தை கொண்டு வீசி விட்டு நடுத்தர வர்க்கத்தின் எதிர்கால சேமிப்பை கொஞ்சம் திருடுவதுதான் இதன் அடிப்படை நோக்கம். அல்லது ஆசை காட்டி அபகரிக்கும் பிக்பாக்கெட் எனவும் சொல்லலாம்.

ப சிதம்பரம்
ப சிதம்பரம் அறிவித்துள்ள முதலாளிகளுக்கான வரிக் குறைப்புகள் மூலம் அரசுக்கு சுமார் ரூ 800 கோடி வருமான இழப்பு ஏற்படும்.

மேலும், சோப்பு செய்ய உதவும் கொழுப்பு அமிலங்களின் மீதான இறக்குமதி வரி 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதால் தினசரி வீட்டு நுகர்வு பொருட்கள் நிறுவனங்களான இந்துஸ்தான் யூனிலீவர், பிராக்டர் & கேம்பிள் போன்ற சோப்பு செய்யும் நிறுவனங்களுக்கு ஆதாயம் என்று முதலீட்டாளர்கள் அந்நிறுவனங்களின் பங்குகளை வாங்கி தமது ஆதரவை தெரிவித்திருக்கின்றனர். அந்த வகையில் இங்கும் நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பு முதலாளித்துவ நிறுவனங்களின் பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு பயன்படும். பங்கு சந்தையின் குறியீட்டெண் வளர்ந்தால் நாட்டின் வளர்ச்சி என்பார்களாம்.

புதிய முதலீடுகளை தூண்டும் விதமாக மூலதன பொருட்கள் மீதான கலால் வரி 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது புதிய தொழிற்சாலைகளுக்கான முதலீடுகள், புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கான முதலீடு போன்றவற்றுக்கான செலவு குறைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வரிக் குறைப்புகள் மூலம் சுமார் ரூ 800 கோடி அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும். இருப்பினும், இந்த விலைக் குறைப்புகளின் அடிப்படையில் பொருளாதாரம் முன்னேறி விடப் போவதில்லை என்றும் வங்கிக் கடன்களுக்கு வரிக் குறைப்பு, வாங்கும் திறன் அதிகரிப்பு போன்ற பொதுவான பொருளாதார காரணிகள் மேம்பட்டால்தான் தொழில் உற்பத்தி பெருகும் என்று முதலாளிகளின் கூட்டமைப்புத் தலைவர்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றனர். அதாவது அவர்களுக்கு இந்த சலுகைகள் போதாதாம். அரசு வரிச் சலுகை, மக்கள் வாங்குவதின் மூலம் தரும் இலாபம் இரண்டும் மட்டும் இருந்தால்தான் பொருளாதார வளர்ச்சி என்று முதலாளிகள் கூறுகிறார்கள். அதை முடிந்த அளவு செய்கிறேன் என்கிறார் சிதம்பரம்.

இரண்டாவதாக, 2009-ம் ஆண்டு மார்ச் 31-க்கு முன்பு கல்விக் கடன் வாங்கிய மாணவர்களுக்கும் டிசம்பர் 31, 2013 வரையிலான வட்டித் தொகை தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அரசுக்கு ரூ 2,600 கோடி செலவு பிடிக்கும் இதன் மூலம் 9 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் அறிவித்துள்ளார் ப.சிதம்பரம்.

உண்மையில் இந்தப் பணம் தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி கொள்ளை அடித்து வரும் கல்வி முதலாளிகளுக்கு வங்கிகளால் ஏற்கனவே தாரை வார்க்கப்பட்டு கடன் சுமை மட்டும் மாணவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இப்போது அந்த சுமையில் ஒரு சிறு பகுதியை மக்கள் வரிப்பணத்திலிருந்து நிதி ஒதுக்கி குறைத்திருக்கிறார் சிதம்பரம். மாறாக, நாடு முழுவதும் உள்ள கல்வி அறக்கட்டளைகளின் ஆண்டு வருமானத்தை தணிக்கை செய்து உபரி பணத்தை கைப்பற்றினால் அனைத்து மாணவர்களின் கடன்களின் வட்டி மட்டுமல்ல, அசலையும் கூட தள்ளுபடி செய்து விடலாம்.

ஆனால், கல்வி வள்ளல்கள் மத்திய, மாநில கட்சிகளுக்கு நிதி வள்ளல்களாக விளங்கும் போது, முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் கல்வி வள்ளல்களாக உலாவரும் காலத்தில், பச்சமுத்து, ஏ.சி.சண்முகம் போன்றவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களாக உருவெடுத்து பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் காங்கிரஸ் அரசாயிருந்தாலும் சரி, பா.ஜ.க அரசாயிருந்தாலும் சரி பள்ளிக் கல்வியிலும், உயர்கல்வியிலும் தனியார் மயத்தை ஒழித்து அனைவருக்கும், இலவச, சமச்சீர் கல்வி வழங்குவதற்கான மாற்றங்கள் எதையும் செய்யப் போவதில்லை. மாறாக, அவர்களது தனியார் மய, தாராள மய கொள்கைகளின் தொடர்ச்சியாக பழைய கடன்களை ரத்து செய்து, புதிதாக கடன் கொடுக்க நிதி ஒதுக்குவதன் மூலம் தனியார் கல்வி வள்ளல்களின் தொழில் செழிப்பதற்கும் மாணவர்கள் மீது கடன் சுமையை ஏற்றுவதற்கும் வங்கிகளின் நிதியை அர்ப்பணிப்பதற்கு கூட அடுத்தடுத்த நடவடிக்கை எடுப்பார்கள்.

நிதி அமைச்சகம்
நாட்டையும் மக்களையும் கொள்ளை அடிப்பதற்கான புளூபிரிண்டாக இடைக்கால அறிக்கையை தயாரித்த நிதி அமைச்சர் ப சிதம்பரம், நிதித்துறை துணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, ஜே டி சலீம் மற்றும் நிதித்துறை அதிகாரிகள்.

அதன்படி சுயநிதிக் கல்லூரி கொள்ளையர்கள் சேமமாக தொழில் நடத்துவதுதான் பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி என்கிறார் சிதம்பரம்.

அறிவியல் ஆராய்ச்சியிலும் தனியார் மயத்தை புகுத்தும் ஒரு முக்கியமான அறிவிப்பையும் சிதம்பரம் வெளியிட்டுள்ளார். இப்போது, இந்தியாவில் பெயரளவில் நடக்கும் அறிவியல் ஆராய்ச்சிகள் அரசு நிதி உதவி பெறும் உயர்கல்வி நிலையங்களான ஐ.ஐ.டிக்கள், மற்றும் பல்கலைக் கழகங்களிலும், துறைசார்ந்த ஆய்வுகளுக்கான மத்திய அறிவியல் கழகங்களிலும் நடைபெறுகின்றன. தனியார்மய, தாராளமய கொள்கைகளின் அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கி வரும் நிதியை குறைத்து அவற்றை வணிக ரீதியாக நிதி திரட்டும்படி மாற்றி வரும் அரசு, ஆராய்ச்சித் துறையையும் தனியார் மூலதனம், சந்தை போட்டி சார்ந்ததாக மாற்றுவதற்கான அச்சாரம் போட்டிருக்கிறது. இந்த நோக்கத்தில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு சந்தை போட்டியின் மூலம் நிதி வழங்கும் நிறுவனத்தை அரசு ஏற்படுத்தவுள்ளது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்யும் முதலாளிகளுக்கு வருமான வரிச் சலுகையும் வழங்கப்படும். இதன்படி, இனிமேல் சந்தையின் தேவைகளுக்கேற்ப குளியல் சோப்பில் இளநீர் மணம், பற்பசையில் சீரக மணம் போன்ற வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகள் முன்னுரிமை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

இதைத் தவிர முதலாளிகளுக்கு தேவைப்படும் திறனுடைய தொழிலாளர்களை உருவாக்குவதற்கான தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ 1,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதாவது பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான தொழிற் தேர்ச்சியை இனி அரசு மக்கள் பணத்திலேயே செலவழித்து வழங்கும். அதன் மூலம் ஒரு தொழிலாளியை தேர்வு செய்து பயிற்சி கொடுக்கும் செலவு இனி முதலாளிகளுக்கு இருக்காது. இதையெல்லாம் வெண்பா பாடி சிதம்பரத்திற்கு அபிஷேகம் செய்வதற்கு முதலாளிகளுக்கு நல்ல கவிராயர் இல்லை போலும்.

பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதத் தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கான பேரங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்புத் துறைக்கு ரூ 2.24 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது டாலர் மதிப்பில் சென்ற ஆண்டு ஒதுக்கீடான $37.5 பில்லியனிலிருந்து $36.2 பில்லியனாக குறைந்திருக்கிறது. இதுவும் இந்தியாவின் மக்களுக்கு எந்த வளர்ச்சியையும் தரவில்லை என்பதோடு பன்னாட்டு ஆயுத தளவாட முதலாளிகள் இந்திய மக்கள் பணத்தை முழுதாக சுருட்டிக் கொள்வதற்கு பயன்படும்.

விவசாயக் கடன் வழங்கும் இலக்கை ரூ 8 லட்சம் கோடியாக அதிகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார் சிதம்பரம். விவசாயக் கடன்கள் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் முதலைகளும், இந்திய தரகு முதலாளிகளும் வங்கிப் பணத்தை கொள்ளையிடுவதை குறித்து இந்து நாளிதழின் ஊரகத் துறை ஆசிரியர் சாய்நாத் எழுதிய கட்டுரைகளை  வினவில் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி
கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு வேதனை ஆன ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகள்.

இந்த குறிப்பான அறிவிப்புகளைத் தவிர கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முக்கிய சாதனைகளாக சிதம்பரம் குறிப்பிடுபவை,

  1. பொருளாதார வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்றும் அதற்கு அன்னிய முதலீட்டை கொண்டு வந்தே தீர வேண்டும் என்று இந்தியாவையும் இந்தியர்களையும் ஏற்றுக் கொள்ள வைத்தது.
  2. சர்க்கரை உற்பத்தி, விற்பனை மீதான ஒழுங்குமுறைகளை அகற்றி, சர்க்கரை விலையை உயர்வுக்கு வழி வகுத்தது.
  3. டீசல் விலையை விருப்பப்படி ஏற்றிக் கொள்ளும் விதத்தில் அரசு கொள்கையை மாற்றியது.
  4. ரயில் கட்டணங்களை உயர்த்தியது.
  5. கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய தனியார் வங்கிகளை திறக்க அனுமதி அளிப்பது
  6. மாநில மின்வாரியங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகளை தொடங்கி வைத்தது
  7. தொலைத் தொடர்பு, மருந்து உற்பத்தி, விமான போக்குவரத்து, சில்லறை வணிகம், மற்றும் மின்சார வர்த்தக சந்தைகளில் அன்னிய முதலீட்டை அனுமதித்தது.

இந்த சாதனைகளின் விளைவாக சர்க்கரை முதல், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள், ரயில் கட்டணங்கள், மின் கட்டணம் உயர்த்தப்பட்டு மக்கள் மீது பெருஞ்சுமை ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கல்வி, மருத்துவம் தனியார் மயம் மூலம் மக்கள் சராசரி உழைக்கும் மக்கள் மீது கூடுதல் சுமை சுமத்தப்பட்டுள்ளது. விவசாய விளைநிலங்கள் கைப்பற்றப்படுதல், விளைபொருட்களுக்கு நியாயமான விலை கொடுக்க மறுப்பு, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு போன்ற கொள்கைகளின் மூலம் விவசாயத்தையும், சில்லறை வணிகத்தையும் சார்ந்துள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

மேலும் நிதிநிலைத் திட்டத்தில் தரப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் சாதாரண வட்டிக் கடை சேட்டு செய்யும் மோசடிகளை விட கேவலமானவை. அடுத்த அரசு தனது நிதியாதாரத்தை பெருக்கிக் கொள்வது, மக்களுக்கு பெரிய அளவு வரி விதிப்புகளை அதிகரித்தல், அல்லது பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றல் அல்லது உணவு, எரிபொருள், உரம் போன்றவற்றுக்கு மானியங்களை வெட்டி விலைவாசியை கணிசமாக உயர்த்துவது இவற்றின் மூலம்தான் சாத்தியமாகும். அடுத்து ஆட்சிக்கு வரும் எந்த அரசும்  நாட்டையும், நாட்டு மக்களையும் கொள்ளை அடித்தாவது பன்னாட்டு முதலாளிகள் கோரும் நிதி இலக்குகளை சாதித்து தீர வேண்டும் என்பதற்கான புளூபிரிண்டைத்தான் சிதம்பரம் வழங்கியிருக்கிறார்.

மேலும், உலக வங்கியின் செல்லத் திட்டமான ஆதார் அட்டை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாலும் அதிலுள்ள சிக்கல்களை களைந்த பின்பு முழுமையாக செயல்படுத்தி விட முடியும் என்று முதலாளிகளுக்கு உறுதி அளித்திருக்கிறார் சிதம்பரம். விவசாயத்துக்கும் உணவுப் பொருட்களுக்கும் வழங்கும் மானியத்தை குறைத்துக் கொள்வதாக பாலி உலக வர்த்தக கழக மாநாட்டில் வாக்குறுதி கொடுத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

கூடங்குளம் அணுமின்நிலையத்தின் முதல் யூனிட் உற்பத்தியை ஆரம்பித்து விட்டதை குறிப்பிட்டு, நாடு முழுவதும் புதிதாக 7 அணு மின் நிலையங்கள் கட்டப்பட்டு 12-வது திட்டத்தின் இறுதியில் அணு மின் உற்பத்தி 10,500 மெகாவாட் ஆக உயரும் என்று அணு உலை விற்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறார்.

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும், பா.ஜ.க ஆட்சி அமைத்தாலும் நாட்டையும் மக்களையும் பெரும் பொருளாதார நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கும் தனியார்மய, தாராள மய, உலக மய பொருளாதார கொள்கைகளில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.

நரேந்திர மோடியின் குஜராத் பாணி வளர்ச்சி மாதிரியும், 1999 முதல் 2004 வரை ஆட்சி புரிந்த ‘இந்தியா ஒளிர்கிறது’ புகழ் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியும் காங்கிரசின் இதே அன்னிய முதலீடு, தனியார் கொள்ளை பாதையில் நாட்டை செலுத்தி பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களை கேள்விக்கு உள்ளாக்கின.

இந்தக் கொள்கைகளையே ஊழல்கள் இன்றி தீவிரமாக செயல்படுத்துவது என்பதுதான் புதிதாக முளைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் கொள்கை.

இந்நிலையில் மே மாதம் வாக்குச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் தமது கழுத்தில் மாட்டிக் கொள்ளும் தூக்குக் கயிற்றின் வகை மாதிரியைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா?

–    செழியன்

மேலும் படிக்க