privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபோராடுற கட்சி சரி வராது சார் – திமுக மாநாட்டில் வினவு

போராடுற கட்சி சரி வராது சார் – திமுக மாநாட்டில் வினவு

-

திருச்சி திமுக மாநாட்டிற்கு வினவு செய்தியாளர்கள் நேரில் சென்று வந்த அனுபவப் பதிவு

dmk-conference-04
இந்திரன், சந்திரனிலிருந்து “எந்திரனுக்கு’ போனதுதான் திமுகவின் முதுகு சொறியும் ஜால்ரா பரிணாமத்தின் வளர்ச்சி!

“நல்லதோ கெட்டதோ இத்தனை வருசமா இந்தக் கட்சிலயே இருந்துட்டோம்… இனியும் இருந்திட வேண்டியது தான்” சிறீரங்கத்தைச் சேர்ந்த கல்யாண்குமாரின் வார்த்தைகளில் ஒரு “ஜென்” துறவியின் பற்றின்மை தெரிந்தது.

“காலைலேர்ந்து பகுத்தறிவு, திராவிடம், மாநில சுயாட்சி பற்றியெல்லாம் பேசியிருக்காங்களே… இந்த மாதிரி இன்னும் அ.தி.மு.கவில் கூட பேசறதில்லை தானே?”

“அட நீங்க வேற சார், எல்லா தொண்டனும் பகுத்தறிவோட சிந்திச்சா மொதல்ல இந்தக் கட்சியே இருக்காதுங்க”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“இப்ப பாருங்க, நான் ____ நிறுவனத்திலெ வேலை செய்யறேன். ரெண்டு பொண்ணுங்க. ஒருத்தி பி.இ படிக்கிறா. டிப்ளமோ முடிச்சி லேட்ரல்ல சேர்த்தேன். நல்ல மார்க் இருந்தாலும், செமஸ்டர் பீசு, பஸ் சார்ஜ், புத்தகம், துணி மணி, பாக்கெட் மணின்னு எப்படியும் ஆறு மாசத்துக்கு எண்பதாயிரத்துக்கு மேல செலவு போகுது. செலவு பொறுக்க முடியாம ரெண்டாவது மகளை கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்துட்டேன். கட்சிக்காரங்க கிட்ட இல்லாத காலேஜா பள்ளிக்கூடமா? இத்தினி வருசமா கட்சில இருந்திருக்கானேன்னு பாத்து ஒரு சீட்டு தருவானுகளா?”

”அப்புறம் ஏன் சார் கட்சில இருக்கீங்க?”

dmk-conference-01
தேவர் சாதி வெறி வாழ்த்தாமல் திமுகவின் இருப்பு சாத்தியமில்லை

”அதெல்லாம் ஒரு ஆத்ம திருப்திக்காகத் தான் சார். நான் என்ன எந்த நேரமும் அரசியலா செய்யிறேன்? எப்பனா மாநாடு எலக்சன்னா வந்து தலையக் காட்டுவோம், பூத் ஏஜெண்டா ஒக்காருவோம். ஒரு திருப்தி. அவ்வளவு தான்”

”நீங்க வேலை பார்க்கிற நிறுவனத்திலே பு.ஜ.தொ.மு சங்கத்தோட கிளை இருக்கே.. நீங்க அதில இருக்கீங்களா?”

“ஆமாமா இருக்காங்க. ஆனா, நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது சார். சும்மா போராட்டாம், கேட் கூட்டம்.. அது ஆவாது சார். நமக்கு மேனேஜ்மெண்ட் கிட்டே பேசி ரூவா வாங்கித் தர்ற சங்கம் தான் தேவை. சென்னைல ஒரு வக்கீல் இருக்காரு, ப்ராமின் தான்… ஆனா, நல்லா செய்யறாரு. அவரு சங்கத்துல தான் இருக்கோம்.. ஆமா பு.ஜ.தொ.மு உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“இல்ல இணையத்துல படிச்சிருக்கோம் அதான் கேட்டோம்”

”சரி நேரமாச்சுங்க வர்றேன்” அதற்கு மேல் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அவர் கத்தரித்துக் கொண்டு வேகமாக நகர்ந்தார்.

dmk-conference-09
காப்டன் எலியும், காங்கிரசு நரியும் பந்தாடுவதில் பயந்து நடுங்கும் திமுக-வை சிங்கத்தோடு ஒப்பிடுவது அசிங்கம்.

 

நாங்கள் திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து தி.மு.கவின் பத்தாவது மாநில மாநாடு நடக்கும் தீரன் நகருக்கு நடந்தே செல்வதென முடிவு செய்தோம். திருச்சி நகரம் பிளெக்ஸ் பேனர்களால் போர்த்தப்பட்டிருந்தது. எல்லா பேனர்களிலும் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் அதை ஏற்பாடு செய்திருந்தவர்களின் மூஞ்சிகளும், அவர்களை இந்திரர்கள், சந்திரர்கள் என்று போற்றும் வாசகங்களும் மட்டுமே நிறைந்திருந்தன. திருச்சி மட்டுமின்றி சென்னையில் இருந்து வரும் வழியெங்கும் பல்வேறு இடங்களில் இதே காட்சிதான். எப்படியும் சில கோடிகளையாவது செலவிட்டிருக்க வேண்டும்.

அந்த அதிகாலை நேரத்தில் திறந்திருந்த தேனீர் விடுதியில். ”நீங்க எல்லாம் ப்ரஸ்லேர்ந்து வர்றீங்களா?” நடுத்தர வயதைக் கடந்த அந்த நபர் வெள்ளை வேட்டியும் கருப்புச் சட்டையும் அணிந்திருந்தார். “என் பேரு பதிலடி பன்னீர் செல்வம். தஞ்சாவூர்லேர்ந்து மாநாட்டுக்கு வந்திருக்கேன். மாநாடு செம கலக்கு கலக்கிட்டு இருக்குன்னு எழுதிக்கங்க சார்”

“நீங்க எதாவது பொறுப்பில் இருக்கீங்களா?”

“பொறுப்பெல்லாம் இல்லை… ஆனா பேச்சாளரு. அந்தக்காலத்திலேர்ந்து கட்சில இருக்கேன். எங்க குடும்பமே தி.மு.க குடும்பம் தான். பாத்தீங்களா கருப்பு சட்டை… நாங்கெல்லாம் அந்தக் கால தி.மு.க சார்” அவரது முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது.

பிழைப்புவாதம்
ஹெச் ராஜா எனும் எச்சக்கலையை கண்டிக்க துப்பில்லாத உபிக்கள் பெரியாருக்கு பிளெக்ஸ் பூஜை செய்வதற்கு ஒன்றும் குறைவில்லை.

 

”சரிங்க, இப்ப பி.ஜே.பி ஹெச்.ராஜா பெரியாரை செருப்பால் அடிப்பேன்னு சொல்லி இருக்கானே.. தி.மு.க சார்பா அதுக்கு ஏதும் போராட்டம் நடத்தினீங்களா?”

”ஓ… அப்படியா பேசினான் அந்த நாயி… பேசிருப்பான். ஆனா, அவங்க எடத்துல வச்சி பேசியிருப்பான், இல்ல? வெளியிலன்னா நாங்க விட்றுவோமா?”

”வெளியில தான் இப்ப பாரதிய ஜனதா வளர்ந்திருக்குன்னு சொல்றாங்களா? நீங்களே அந்தக் கட்சியோட தானே கூட்டணில இருந்தீங்க? இப்ப கூட பாரதிய ஜனதா கூட்டணி வரும்னு பேசிக்கறாங்களே?”

”ஆமா.. கூட்டணில தான் இருந்தோம்… ஆனா கொள்கைய விட்டுக் குடுக்கலீங்களே” விட்டுக் கொடுக்காமல் பேசினார்.

”இப்ப கூட தில்லை நடராஜர் கோயிலை பாப்பானுங்க கையில தூக்கிக் கொடுத்துட்டாங்க. தி.மு.க சார்பா ஏதும் போராட்டம் நடத்தலயே.. அப்புறம் கொள்கைய சும்மா வச்சிகிட்டு என்னாங்க செய்யறது?”

பதிலடி பன்னீர்செல்வம்
“நாங்க ஆட்சியிலேயே இல்லையே என்ன செய்ய முடியும்?” என்று சமாளிக்கும் பன்னீர்செல்வம் ஆட்சியில் இருந்து என்ன கிழித்தார்கள் என்பதற்கு என்ன பதிலளிப்பார்.

“கரெக்டு தான் சார்… ஆனா எலக்சன் முடியிற வரைக்கும் எதுவும் நடக்காது. நாங்க ஆட்சில இல்லையே. என்னா செய்ய முடியும் சொல்லுங்க? ஆட்சில இருந்தா எங்க தலைவரு சும்மா இருந்திருப்பாரா..”

”ஆட்சில இருந்தா மட்டும் தான் கொள்கை வேலை செய்யுமாண்ணா?”

“அது, அப்படி இல்லீங்க… சரி பின்னாடி பேசுவோம். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு வரட்டுங்களா?” பதிலடி பன்னீர்செல்வம் பறக்கும் பன்னீராக மாறி இடத்தை காலி செய்தார்.

பன்னீர்செல்வம் போன்ற “தீவிர” தி.மு.க தொண்டர்கள் தங்கள் கட்சியின் அரசியல் ரீதியிலான ஓட்டாண்டித்தனத்தை எதிர்கொள்ள அஞ்சுகிறார்கள். கேள்விகளைத் தவிர்த்து விட்டு சங்கடமான புன்னகையோடும் குற்றவுணர்ச்சி தொனிக்கும் பாவனையோடும் கடந்து செல்கிறார்கள். என்றாலும், பன்னீர்செல்வங்களின் எண்ணிக்கை தி.மு.கவில் மிகச் சொற்பமானதாகவே இருந்தது. மாநாட்டுக்கு வந்திருந்தவர்களில் ஆகப் பெரும்பாலானோர் நாற்பதுகளைக் கடந்தவர்கள். முப்பது வயதுக்குக் குறைவானவர்கள் மிகச் சொற்பமானவர்களையே காண முடிந்தது. முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பலரிடம் பேசியதில் அவர்கள் சிந்தனை அளவிலேயே துடிப்பற்று உறைந்து போன நிலையில் இருப்பதை அவதானிக்க முடிந்தது. பத்மநாபனிடம் பேசினால் உங்களுக்கே புரியும்.

பத்மநாபன்
பத்மநாபன் (இடது) – ” கொள்கை ஊருக்குத்தான் – வீட்டில் கிடையாது”.

சென்னையைச் சேர்ந்த பத்மநாபன் அறுபது வயதைக் கடந்தவர். என்.எல்.சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். படிக்கும் காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களால் கவரப்பட்டு தி.மு.கவில் இணைந்தவர். இந்தி எதிர்ப்புப் போர் நடந்த அன்று அவரது பள்ளிக்கு விடுமுறை விடவில்லை என்பதால் நிர்வாகத்திற்கு எதிராக சில மாணவர்களைத் திரட்டிச் சென்று சாலையில் சென்ற வாகனம் ஒன்றின் மேல் கல்லெறிந்த ”வீர வரலாற்றுக்கு” சொந்தக்காரர். 15-ம் தேதியே மாநாட்டிற்கு வந்திருந்தார். மறுநாள் அதிகாலை நேரத்தில் திண்டுக்கல் சாலையில் நடைப்பயிற்சியில் இருந்தவரிடம் பேசிப் பார்த்தோம்.

”அதாவது சார், நாட்ல மொத்தம் இருக்கிற மக்கள் தொகையில ரெண்டு பர்செண்ட் இருக்கிறவன் மிச்சமிருக்கிற தொண்ணூத்தி எட்டு பர்செண்ட் பேரை அடக்கி வச்சிருக்கான். நாம மொழிய விட்டுக் கொடுத்துட்டோம். அந்தந்த ஸ்டேட் காரன் அவங்கவங்க மொழில பேசிக்கறான். தமிழன் மட்டும் இங்கிலீஷ்ல பேசிக்கிறான். எல்லா பிரச்சினைக்கும் அதுதான் அடிப்படையான காரணம். நம்ம மக்களும் விழிப்புணர்வோட இல்லை”

தி.மு.க மாநாடு
திகவின் பெரியார் நகரும் ஊர்தி – முதலில் வீரமணி கும்பலிடமிருந்து பெரியாரை விடுதலை செய்ய வேண்டும்.

 

”அது சரிதாங்க, ஆனா மொழியை காப்பாத்த தி.மு.க கடந்த ஒரு முப்பது வருசத்திலே என்ன செய்திருக்குன்னு நினைக்கிறீங்க? தி.மு.க நிர்வாகிகளோட பிள்ளைங்களே இப்ப ஆங்கில மொழி வழிக் கல்வியும் இந்தியும் தானே படிச்சிட்டு இருக்காங்க?”

”நோ, நோ… நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கீங்க. இந்தி படிக்கக் கூடாதுன்னு நாங்க சொல்லிட்டதா நெறைய பேரு நினைச்சுகிட்டு இருக்கானுங்க, இந்திய திணிக்கக் கூடாதுன்னுதான் சொல்றோம். மக்கள் விருப்பப்பட்டு படிச்சாங்கன்னா என்ன பிரச்சனை?”

“அது எப்படிங்க, ஆங்கிலமும் இந்தியும் தனியார் பள்ளிக்கூடங்கள்லே இருக்கு. அப்ப விருப்பம் இருந்தாலும் வசதி இல்லாதவங்க அவ்வளவு காசு கட்டி படிக்க முடியாம போயிடுமே?”

”வசதி இருக்கிறவன் படிச்சிட்டு போகட்டுமே? இப்ப எங்க வீட்லயே பார்த்தீங்கன்னா, என் பசங்க அப்பா அம்மான்னு சொல்றாங்க. ஆனா, பேரப் பசங்க மம்மி டாடின்னு சொல்லுதுங்க. நாம சொல்லிக் கொடுத்தாலும் ஸ்கூலுக்குப் போனா மற்ற குழந்தைங்கல்லாம் மம்மி, டாடின்னு சொல்லுதுன்னு மாறிடுறாங்க. என்ன செய்ய முடியும் சொல்லுங்க. அதெல்லாம் அவங்க தனிப்பட்ட சுதந்திரம்னு விட்ற வேண்டியது தான்”

”அப்படின்னா கொள்கை ஊருக்குத் தானா? வீட்டுக்குள்ளே இல்லையா?”

”அப்படியும் சொல்ல முடியாது சார். இப்ப பாருங்க, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனா என்னோட சம்சாரத்துக்கு இருக்கு. அவங்க கோயிலுக்கு போறாங்க, வீட்ல பூஜை அறை வச்சிருக்காங்க. பூஜை செய்யறாங்க. மக்களுக்கே விழிப்புணர்ச்சி இல்லேன்னா நம்ம வீட்ல மட்டும் நேர்மையா இருந்து என்ன பிரயோஜனம் சொல்லுங்க? நாம மட்டும் பைத்தியக்காரன் மாதிரி தனியா இருந்துக்கிட வேண்டியது தான்”.

வாகன ஏற்பாடு
அணிவகுக்கும் வாகனங்கள், தேடிப்பார்த்தும் கிடைக்காத கொள்கைகள் !

 

ஒரு ரோலர் கோஸ்டர் போல சுற்றிச் சுழன்று தனது சொந்த வாழ்க்கையின் சந்தர்ப்பவாதத்திற்கு முட்டுக் கொடுத்தார். வீட்டிலோ, வெளியிலோ கொள்கைப்படி வாழ வேண்டிய தேவையோ, இலட்சியமோ அவருக்கு மட்டுமல்ல,திமுகவின் தலைமைக்கே இருக்கவில்லை. அதே நேரம் இந்த சந்தர்ப்பவாதம் தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவும் தவறுவதில்லை.

”கருணாநிதி ஏதோ செஞ்சாரு.. ஒன்னும் நடக்கலை. பொறவு அவரே அவர் பழைய காலத்துல சொன்னதுக்கு மாறா நடந்துக்கிட்டு இருக்காரு. அதுக்கு அவரு என்னா செய்ய முடியும்? ஊரே ஒரு பக்கமா போகும் போது நாங்க மட்டும் எதிர்பக்கமாவா போக முடியும்?”

தி.மு.க தலைமை கொள்கையளவிலேயே ஊழல்பட்டு ஓட்டாண்டிகளாக நிற்பது குறித்து நாங்கள் பேசிய தி.மு.க தொண்டர்கள் பலரின் கருத்தோட்டம் ஏறக்குறைய இதே சாரத்தை ஒட்டித் தான் இருந்தது.

மாநாட்டுத் திடல் நோக்கிச் சென்றோம். முகப்பிலே ஏராளமான மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வண்டி பிடித்து தொண்டர்கள் வந்த வண்ணமிருந்தனர். நூற்றுக்கணக்கில் நிறுத்தப்பட்டிருந்த மினி பேருந்துகளில் சிலவற்றை அணுகி விசாரித்தோம். சொந்த முறையில் செலவு செய்து வந்திருப்பதாக சொன்னார்கள்.

“அதெல்லாம் அ.தி.மு.க தான் சார். செலவுக்கு காசும் கொடுத்து சாப்பாடும் போட்டு கலக்கிடுவானுங்க. இங்கெல்லாம் நம்ப கிட்ட இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு உருவிடுவானுங்க” கிருஷ்ணகிரியில் இருந்து வந்திருந்த மனோகரன் இந்த வார்த்தைகளை மந்தகாசமான புன்னகையோடு சொன்னார். கிருஷ்ணகிரியில் தனக்கிருக்கும் துக்கானி நிலத்தில் மானாவரி விவசாயம் செய்பவர், அதன் வருமானம் போதாமல் எலக்ட்ரிக்கல் பழுது பார்க்கும் வேலையும் செய்து வருகிறார். கஷ்ட ஜீவனம்.

dmk-conference-22
கலைஞர் நகரும் ஊர்தி – கட்சியை குடும்பத்திற்கு பங்கிடுவதற்கே நேரமில்லாத கருணாநிதி வீட்டில்இருந்தால் என்ன, ஊரில் நகராவிட்டால் என்ன?

“ஏன் சார், அதான் மாநாட்டுக்கு நிறைய வசூல் பண்ணிருப்பாங்களே? குறைஞ்சது உங்களை மாதிரி கீழ்மட்டத் தொண்டர்களுக்காவது போக்குவரத்து செலவுகளை கட்சியே செய்திருக்கலாமே?”

“நீங்க வேறங்க. அம்பது ரூவா குடுத்தா கூட வெரட்டிப் பிடிச்சி கணக்கு கேட்டு வாங்கிருவாங்க. போக்குவரத்தாவது செலவாவது”

“பின்னே ஏன் நீங்க இங்க வந்திருக்கீங்க”

“என்னா செய்யிறது சொல்லுங்க. இத்தினி வருசமா இந்தக் கட்சில இருந்துட்டோம். தலைவர் சொன்னாருன்னு ஏதேதோ ஊருக்கெல்லாம் எத்தனையோ மாநாட்டுக்கு போயிருவேன். பழக்கமாயிடுச்சி சார். இதெல்லாம் ஒரு போதை மாதிரி சார். பழகிட்டா விடவே முடியாது. இந்த கூட்டத்தைப் பார்த்துட்டு போனா ஒரு பத்து நாளைக்கு அப்படியிருக்கும்”

”உங்களை மாதிரி அடிமட்ட தொண்டர்கள் இப்படி இருக்கீங்க. ஆனா, உங்களுக்கு கட்சியில பதவி கிடைக்கிறதில்ல. கட்சில ஒவ்வொரு மாவட்டமும் ஒரு குடும்பத்தோட கட்டுப்பாட்டுல இருக்கு. அவங்க தொழில் வருமானம்னு வேற லெவல்ல இருக்காங்களே?”

”அவங்களுக்கு அது தொழில் சார். நமக்கு அப்படியா?” கல்யாண்குமாரிடம் கேட்ட அதே பதில், அதே தொனியில் வந்து விழுந்தது.

”அதுக்காக கட்சிக்கு நேத்து வந்த குஷ்புவுக்கு கூடவா சீட்டு குடுப்பாங்க?”

”அதெல்லாம் யோசிக்கறதேயில்லீங்க. யோசிச்சா, கட்சில இருக்க முடியாது”

அக்கிரஹாரம்
ஆடம்பரக் கார்களின் அக்கிரஹாரம் – திமுக இனிமேலும் சாதாரணமானவர்களின் கட்சி அல்ல.

 

மாநாட்டுப் பந்தலின் பக்கவாட்டுப் பகுதிக்குச் சென்றோம். வி.ஐ.பி பாஸ் ஒட்டப்பட்ட ஆயிரக்கணக்கான விலையுயர்ந்த கார்களுக்குத் தனியே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. டொயோட்டா, சஃபாரி, மகிந்த்ராக்களின் அக்கிரஹாரம் போல் இருந்தது அந்த பகுதி. மாநாட்டுப் பந்தலின் உள்ளேயிருந்து உரைகள் கேட்டுக் கொண்டிருந்தன. உள்ளே சென்றோம்.

மாநில சுயாட்சி, சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சமுதாயங்கள், பகுத்தறிவு என்று கூட்டாஞ்சோறு போல் பல்வேறு தலைப்புகளில் பேச்சாளர்கள் பேச ஐந்து நிமிடங்கள் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. முதல் ஒரு நிமிடம் ”அவர்களே” “அவர்களே” என்று பத்துப் பதினைந்து பெயர்களின் நாமாவளி. அடுத்த ஒன்றரை நிமிடங்களுக்கு கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் துதியாராதனை. இடையில் ஒரு நிமிடத்திற்கு மாநாட்டின் ’பெருந்திரள்’ குறித்த சிலாகிப்பு மற்றும் கே.என்.நேருவிற்கு பாராட்டுதல்கள். மேலும் ஒரு நிமிடம் ஜெயலலிதாவை படைப்பூக்கத்தோடு அர்ச்சனை. அடுத்து தலைப்புக்கு சம்பந்தமில்லாமலேயே தலைப்பைக் குறித்து முப்பது வினாடிகளுக்கு உளறினர். கடைசியாக நேரமின்மை குறித்து அங்கலாய்ப்பும் கருணாநிதி வாழ்த்தும் போட்டு முடித்துக் கொண்டனர். இணையத்தில் உ.பிக்கள் விதந்தோதிக் கொண்டிருக்கும் கொள்கை முழக்கங்களின் லட்சணம் இது தான்.

இளைஞர்கள் தி.மு.கவில்
திருப்பூரிலிருந்து வந்திருக்கும் இளைஞர்கள் – பெரியார் குறித்த எதுவும் தெரியாத திமுகவின் இளம் தலைமுறை

மாநாட்டுப் பந்தலில் பெண்களை அரிதாகவே காண முடிந்தது. வெகுசில தொண்டர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்திருந்தனர். அதில் வத்தலகுண்டு அய்யம்பாளையத்தில் இருந்து வந்திருந்த கவுன்சிலர் செல்வராஜின் ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் சந்தோஷிடம் பேசிப் பார்த்தோம். இங்கே என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை என்றான். வரப்பிடிக்காத அவனை அப்பா வலுக்கட்டாயமாக அழைத்து வந்துள்ளார். ’ஊர்ல எங்கப்பா தான் தலைவரு. நான் எங்க பிரண்ட்சுங்களுக்கு தலைவரு’ என்றான். வீட்டில் அரசியல் குறித்த பேச்சே கிடையாது என்றான். ஆனாலும் ஒரு கட்சித் தலைவரின் வாரிசுக்குரிய எல்லா அறிகுறிகளும் அவனது  பேச்சில் தென்பட்டன.

ஏழாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் மட்டுமல்ல. மாணவரணியைச் சேர்ந்த சில கல்லூரி மாணவர்களிடம் பேசிய போது அவர்களது அரசியல் மட்டமும் அப்படித் தான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் அவர்கள் திருப்பூரில் இருந்து வந்திருக்கிறார்கள். போக்குவரத்து மற்றும் சாப்பாட்டுச் செலவு இவர்களுடையது அல்ல. பெரியார் கொள்கைகள், இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி கேட்டால் “நமக்கு அதெல்லாம் தெரியாதுங்க” என்றார்கள். 2009 ஈழப் போர் குறித்து ஏதோ சண்டை நடந்தது, யாரோ செத்தார்கள் என்கிற அளவில் தான் புரிந்து வைத்திருந்தனர். ’உங்கள் தலைவர் அந்த நேரத்தில் ஈழ மக்களுக்கு துரோகம் செய்து விட்டார் என்று சீமான் போன்றவர்கள் சொல்கிறார்களே உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டோம். “அவரு சும்மா அடிச்சி விடுவாருங்க” என்று வெள்ளந்தியாக சொன்னார்கள்.

ஆறுமுகம்
ஆறுமுகம் – போர் நிறுத்தத்திற்காக கருணாநிதி என்ன செய்ய முடியும்?

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், கட்சியில் உள்ள இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட மலையகத் தமிழர்களின் புரிதலும் இதே அளவில் தான் உள்ளது. நீலகிரியில் இருந்து வந்திருந்த ஆறுமுகம் என்பவரிடம் பேசினோம். இவர்கள் 1983-ல் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர். தற்போது நீலகிரியில் ஒரு ஏக்கர் நிலத்தில் தேயிலை பயிர் செய்து வருகிறார். இவரைப் போலவே இலங்கையில் இருந்து ஒன்றரை லட்சம் பேர்கள் வரை புலம் பெயர்ந்து நீலகிரியில் வசிப்பதாகச் சொன்னார். அவர்களில் பெரும்பான்மையானோர் தி.மு.க அனுதாபிகள் அல்லது தொண்டர்கள் என்றார்.

“ஈழப் போர் நிறுத்தத்திற்கு கருணாநிதி எதுவுமே செய்யவில்லை என்று அவர் மேல் குற்றச்சாட்டு உள்ளதே?” என்றோம்.

“அதுக்கு அவரு என்ன செய்யமுடியும் சார்? செண்ட்ரல் கெவுருமெண்டு தான் எதாச்சியும் செய்திருக்கனும். அவரும் தான் உண்ணாவிரதப் போராட்டமெல்லாம் நடத்தினாரே?”

மாநாட்டுப் பந்தலில் சீட்டாட்டம்
கொள்கை போனாலென்ன, ரம்மியில் டிக் அடிக்க முடியுமா பாருங்கள் – திமுக மாநாட்டு பந்தலில் உடன்பிறப்புக்களின் சீட்டாட்டம்

 

”இல்லைங்க, அந்த நேரத்தில கட்சிக்கு எத்தனை அமைச்சர் வேணும்னு கேட்கத் தானே டெல்லிக்குப் போயிட்டிருந்தாரு? போர் நிறுத்தம் பற்றி வாயளவுலே தானே பேசிகிட்டு இருந்தாரு?”

“அது வந்து… வேற என்ன செய்ய முடியும்? நீங்க என்னதான் சொல்லுங்க. நாங்கெல்லாம் தி.மு.க தான். இந்த வெரலை வெட்டிப் போடுங்க. அப்பவும் தி.மு.க தான்” அதற்கு மேல் அவரால் அங்கே நிற்க முடியவில்லை. தலைகுனிந்தவாறே அவசரமாக கிளம்பிச் சென்றார்.

மேடையில் தயாநிதி மாறன் தனது கான்வெண்ட் தமிழில் கொஞ்சிக் கொண்டிருந்தார். “டாஸ்மாக்லே யாரு சம்பாரிக்கிறா தெரியுமா….? அங்கே இருக்கிற கேப்டன் பிராண்டி, கேப்டன் ரம், ஜெட் பிராந்தி… இதெல்லாம் யாரு பிராண்ட் தெரியுமா…? எல்லாம் ஜெயலலிதாவுக்கு சொந்தமான மிடாஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யறாங்க. வருசத்துக்கு மூவாயிரம் கோடி டாஸ்மாக் வியாபாரத்திலேர்ந்து மாத்திரம் கொள்ளை அடிக்கிறாங்க”

சுற்றிலும் பார்த்தோம். மாநாட்டுப் பந்தலெங்கும் அவர் விவரித்த அதே பிராண்டு காலி சாராய போத்தல்கள் காணுமிடமெல்லாம் இறைந்து கிடந்தன. தி.மு.க ஆட்சியிலும் மிடாஸின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாமல் வியாபார நலன்கள் காக்கப்பட்டன. கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களோ அ.தி.மு.கவின் இரண்டாம் கட்ட தலைவர்களோடு ரியல் எஸ்டேட், காண்டிராக்டுகள் பங்கிட்டுக் கொள்வது என்று நேரடியான வியாபாரத் தொடர்பு வைத்திருக்கிறார்கள். கீழ்மட்டத் தொண்டர்களோ டாஸ்மாக்கின் மூலம் மறைமுக தொடர்பு வைத்திருக்கிறார்கள். மேலிருந்து கீழ் வரை அளவுகளில் வேறுபாடு இருந்தாலும், சாராம்சத்தில் ஒரே விதமாகவும் சர்வவியாபகமாகவும் சந்தர்ப்பவாதம் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

dmk-conference-33
போதையில் வீழ்ந்து கிடப்பது திமுகவின் உடன்பிறப்பு மட்டும்தானா?

மு.க ஸ்டாலினின் உரையைத் தொடர்ந்து சாரிசாரியாக தொண்டர்கள் வெளியே உணவுக்காகவும் டாஸ்மாக் நோக்கியும் படையெடுத்தனர்.

நாங்கள் வேலூர் மாவட்ட முன்னாள் மாவட்ட இணைச்செயலாளர் சி.பி. வேலுவைச் சந்தித்தோம். முதுமையின் காரணமாகவோ பிழைக்கத் தெரியாதவர் என்பதாலோ நான்கு வருடத்திற்கு முன்பே அவரது பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டது. தளர்ந்து போயிருந்தார். மொழி உரிமை, திராவிடக் கொள்கை, ஈழப் பிரச்சினை, குறுநில மன்னர்களாகிவிட்ட மாவட்டத் தலைமைகள், குடும்ப கட்டுப்பாட்டிலிருக்கும் மாநிலத் தலைமை, குறுநில மன்னர்களின் கல்வி வியாபாரம் என்று அவரிடம் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவரால் பதிலளிக்க முடியவில்லை. ஒரு சங்கடமான சிரிப்போடு எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டே எங்கள் முன்னாள் நின்றார். பார்க்கவே பரிதாபமாக இருந்த அந்த முதியவரிடம் பதில்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்று கடந்து போக நினைத்தோம்.

அவருடன் வந்திருந்த அவரது அடுத்த தலைமுறை இளைஞர் ஒருவர் குறுக்கிட்டார்.  “சார், காசு இருக்கிறவன் பதவில இருக்கான். காலேஜ் நடத்துறான். காசு வச்சிருக்கிறவன் அங்கே போறான். இல்லாதவனுக்குத் தான் கவுருமெண்ட் ஆஸ்பத்திரி கட்டி விட்டிருக்கில்லே….” – அந்த இளைஞரின் பேச்சை சட்டென்று உள்ளே புகுந்து தடுத்தார் சி.பி.வேலு. “ஏய் இருப்பா.. அவர் அதைப் பத்திக் கேட்கலை… நீ விட்ரு…” என்றவர் எங்கள் பக்கமாகத் திரும்பி “தம்பி தப்பா நினைக்காதீங்க. இன்னும் சாப்பிடலை. நேரமாச்சு போகணும்” என்று சொல்லி விட்டு தடுமாற்றத்தோடு கடந்து சென்றார்.

dmk-conference-06
திமுக மாநாட்டு பந்தல் அருகே சமயபுரத்திற்கு செல்லும் பக்தர்கள் – இந்தக் குறியீட்டின் பொருள் என்ன?

மாநாட்டில் நாங்கள் சந்தித்த வேறு சில தொண்டர்களும் இதே வகை மாதிரியில் தான் பதிலளித்தனர். தி.மு.க ஒரு சீரழிந்து போன பாம்புப் புற்றாக காட்சியளித்தது. கரையான் கட்டிய புற்றில் பாம்பு புகுந்தவுடன் அக்கம் பக்கத்திலிருக்கும் பக்தஜனங்கள் அதை இன்ஸ்டண்ட் கோயிலாக்கி விடுவார்கள். முட்டை வைப்பது, பால் வைப்பது, புற்றின் மேல் மஞ்சள் தெளிப்பது என்று சில நாட்களுக்கு அந்த இடமே களைகட்டும். இந்தக் களேபரத்தில் பாம்பு புற்றைக் கைவிட்டு என்றைக்கோ ஓடியிருக்கும். ஆனாலும் முட்டாள் பக்தர்கள் தொடர்ந்து மஞ்சள் தெளித்து மஞ்சள் தெளித்து கொஞ்சம் கொஞ்சமாக உயரமான புற்றையே கரைத்து தரைமட்டமாக்கி விடுவார்கள். சில வருடங்கள் கழித்து அங்கே தரையில் வெறும் பொந்து மட்டும் மிஞ்சும். சுற்றிலும் மஞ்சள் தெளித்து கோலம் போடப்பட்டிருக்கும். பக்தர்கள் அடுத்த நாகம்மனின் வாசஸ்தலத்தை கண்டுபிடிக்கும் வரை வந்து செல்வார்கள்.

தி.மு.க பகுத்தறிவற்ற பக்தர்களின் மடமாகி விட்டது. என்றோ கனவு போலக் கலைந்து போன நம்பிக்கைகளின் வாசனையில் மாநாடுகள் கூட்டங்கள் நடக்கும் போது பக்தர்கள் தீர்த்த யாத்திரை வந்து செல்கிறார்கள். அதுவும் கிழடு தட்டிப் போன பக்தர்கள். இனி அடுத்த மடத்தை கண்டுபிடிக்கும் வரையிலோ பெரும்பான்மையாக இருக்கும் முதிய தலைமுறையின் காலம் தீரும் வரையிலோ தி.மு.க பிழைத்துக் கிடக்கலாம். அல்லது இந்த மடமே தொழிலுக்கும் வருமானத்திற்கும் பாதுகாப்பு என்று முடிவு செய்து கூட ஓட்டலாம். இடையில் இதை விட வேறு மடங்கள் நல்ல வாய்ப்புகளை வழங்குகின்றன என்று தெரிந்தால் இருப்பிடமும் மாறலாம். எங்கு மாறினாலும் இழப்பதற்கு கொள்கை இல்லை என்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

இறுதிக் குறிப்பு…..

நாங்கள் மாநாட்டை நோக்கி காலையில் நடந்து வந்து கொண்டிருந்த போது  ஆயிரக்கணக்கான சமயபுரம் பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார்கள். பல தொழிலாளிகள் அந்தக் காலை நேரத்திலேயே தங்கள் பணியிடங்களுக்குச் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களெல்லாம் மாநாட்டின் எதிர்த்திசையில் சென்றனர்.

–    வினவு செய்தியாளர்கள்.
_____________________________________________

திர்க்கட்சி அந்தஸ்தோடு எதிர்த்து தாக்கும் தைரியமும் இல்லாத திமுக, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டம் கூட்டி உற்சாகப்படுத்திக் கொள்ளும் நோக்கில் நடத்தியதே, திருச்சி மாநாடு. தற்போதைய ஜெயா ஆட்சியின் போது முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட தளபதிகள் என்று ஏராளம் உடன்பிறப்புகள் சொத்து, நில மோசடி ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தார்கள். மடியில் கனமிருந்ததால் வழியில் பயமும் இருந்தே தீரும் என இந்த வழக்குகளைக் கூட அரசியல் ரீதியில் எதிர்கொள்ள முடியாத அவலத்தில் இருந்தது திமுக.

கருணாநிதி உரை
காங்கிரஸ் கட்சியும் திமுக கூட்டணிக்கு வரலாம் என்பதற்காக இவ்வளவு செலவு செய்து மாநாடு நடத்துகிறார் கருணாநிதி.

சொந்த தலைவர்களையே இப்படி ஊழல் வழக்குகளுக்காக சிறைகளில் பறிகொடுத்தவர்கள் மக்கள் பிரச்சினைகளுக்கு மட்டும் அரசோடு மல்லுக்கட்டி போராடுவார்களா என்ன? ஆனாலும் தமிழகத்தில் வேறு மாற்று இல்லை எனும் யதார்த்தமும், திமுகவின் பிரமுகர்கள் அரசியலில் தொடர்ந்து நீடித்தால்தான் தொழிலை தொடர முடியும் என்ற நிர்ப்பந்தமுமே இக்கட்சி இப்போதும் செயல்படுவதற்கு முக்கியமான அடிப்படைகள்.

திமுக மாநாடு என்றால் சமூக நீதி, இட ஒதுக்கீடு, தமிழ், மாநிலசுயாட்சி, திராவிட இயக்கம் போன்ற தலைப்புகள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இந்த பத்தாவது மாநாட்டில் இதற்கு என்ன பொருளோ, வரவேற்போ இருக்க முடியும்? கருணாநிதி கூட பழைய திமுக மாநாடுகளின் மலரும் நினைவாய் மீட்டினால் இக்கொள்கைகளை இப்போது எப்படி நைத்து கிழித்து விட்டோம் என்றே பார்க்க வேண்டியிருக்கும். ஆனால் அவர் அண்ணா காலத்தில் தான் 11 இலட்சம் ரூபாயை வசூல் செய்ததை நினைவு கூர்ந்து தற்போது மு.க.ஸ்டாலின் மாநாட்டு நிதியாக திரட்டி செலவு போக 101 லட்சம் ரூபாயைக் கொடுத்ததைத்தான் பரிணாம வளர்ச்சியாக, சாதனையாக பார்க்கிறார். இது தவிர, கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நிதியாக ரூ 106 கோடியை குவித்திருக்கிறார்கள்.

dmk-conference-35
சந்தர்ப்பவாதத்தில் திமுக கொடிகட்டி பறக்கும்போது மனோகரன் அலகு குத்தி பறப்பதில் தவறு இல்லையே?

அண்ணா காலத்தில் இருந்த திமுகவின் கொள்கைகளை அதிமுக ஏற்காத கட்சி என்பதால்தான் அதை அண்ணா திமுக என்று விரிவாக அழைக்காததற்கு காரணம் என்கிறார் கருணாநிதி. இதை திமுகவிற்கும் பொருத்திப் பார்த்தால் திராவிட இயக்கத்தின் நற்கூறுகள் எதுவும் இன்றைய திமுகவில் இல்லையே? மேலதிகமாக அண்ணாவின் காலத்திலேயே மொழியின் பெயரால் தமிழ் மக்களின் உணர்ச்சியை வைத்து அரசியல் ஆதாயம் பெறுவது எனும் சந்தர்ப்பவாதம் துவங்கிவிட்டது. கருணாநிதி காலத்தில் அது பல்வேறு உச்சங்களைத் தொட்டிருக்கிறது. எனவே திமுக மாநாட்டில் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை கேட்கலாம், கற்கலாம் என்பதை விட தலைவர் யாருடன் கூட்டணி வைப்பார், அறிவிப்பார் முதலானவையே தொண்டர்களின் ஏக்கமாக இருந்தது. ஊடகங்களும் அதையே முன்மொழிந்தன. இதை திமுக தலைவர்களும் மறைத்து வைக்கவில்லை.

அதிமுக ஆட்சியில் மாநிலத்திலேயே வெம்பி வாடுபவர்களை, அதே அதிமுக மத்தியில் முக்கியமான கட்சியாக உருவெடுத்தால் என்ன செய்யும்? இந்த பயம்தான் கருணாநிதியை பிடித்து வாட்டுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான தொகுதிகளை வெல்லா விட்டால் மத்தியிலும், மாநிலத்திலும் இருமுனைத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற பயம், போஷாக்கான உடன்பிறப்புகளுக்கும் இல்லாமல் இல்லை.

dmk-conference-36
அலகு குத்தி பறக்கும் திமுக செயலாளர் மனோகரனைப் போன்றோர் கட்சியில் இருப்பது பழக்க தோசமா, ஆத்மார்த்தமான உறவா?

கூட்டணி உதவியுடன் அதை சாதிக்கலாம் என்றால் விஜயகாந்த் தண்ணி காட்டுகிறார். காங்கிரசோடு பேசுகிறார். காங்கிரசோடு உறவு வேண்டாம் என்று திமுக பொதுக்குழு பேசியிருக்கும் நேரத்தில் ‘கேப்டன்’ இப்படி புது ரூட்டு போடுகிறாரே என்ற அதிர்ச்சி ஏற்படும் அளவுக்கு, அது ஒன்றும் புனிதமான கொள்கைப் பிரகடனம் இல்லை. ஆனாலும் ஊழல் குற்றச்சாட்டு, திமுகவினர் 2ஜியில் கைது, ஈழ விவகாரத்தில் கெட்ட பெயர் காரணமாக காங்கிரசு வேண்டாம் என்று ஒரு திமுக கூறுகிறது. இதற்கு ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

மற்றொரு திமுகவோ தில்லியின் அதிகார பகிர்வில் நாமும் இடம்பெற காங்கிரசு கூட்டணி அவசியம், இல்லையேல் ஜெயா பந்தாடி விடுவார் என்று மிரட்டுகிறது. இதை தயாநிதி மாறன், கனிமொழி, பாலு முதலான தில்லியால் வாழ்வு பெற்றவர்கள் ஊக்குவிக்கிறார்கள். ஏதோ கொஞ்சமாகவாவது அழகிரி எனும் பவர் சென்டர் முடிவுக்கு வந்த நேரத்தில் புதுதில்லியில் புது பங்காளி சென்டர்கள் உருவாவது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை.

மத்தியில் கொஞ்சம் எம்பிக்கள் போதும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் கவனத்தை குவிப்போம், ஆட்சியைப் பிடிப்போம் என்று முதலமைச்சர் கனவில் இருக்கும் ஸ்டாலினுக்கு புது தில்லிக் கனவுகள் இல்லை. இருப்பினும் புது தில்லியின் அதிகார விநியோகத்தில் கிடைக்கும் பங்கினை அவர் வேண்டாம் என்று சொல்லப் போவதில்லை. அதை காங்கிரசு உதவி இல்லாமலேயே பெறலாம் என்று நம்புகிறார்.

dmk-conference-30
கூட்டத்தில் ஜோக்கரான திராவிட இயக்க கொள்கைகள், சீட்டாட்டத்தின் உடன் பிறப்புகளை மகிழ வைக்கும் ரம்மி ஜோக்கர்கள்!

அந்த நம்பிக்கையை தமிழக கூட்டணிகள், மற்றும் வாக்குகள் எனும் கணிதத்தோடு பொருத்திப் பார்த்தால் வெற்றி கைகூடும் தூரத்தில் இல்லை. இதெல்லாம் சேர்ந்து திமுகவையும், கருணாநிதியையைம் அலைக்கழிக்கிறது. மாநாட்டில் பேசிய ஸ்டாலின், “தலைவர் கூட்டணி குறித்து முடிவெடுப்பார். அதையும் பொதுக்குழுவின் முடிவு அடிப்படையில் எடுப்பார்” என்றும் கோடிட்டு பேசியிருக்கிறார். காங்கிரசுடனான கூட்டணி முயற்சிகள் அவருக்கு பிடிக்கவில்லை என்று திமுக சார்பு நக்கீரனே எழுதுகிறது.

இருப்பினும் எப்படியாவது வெற்றியையோ இல்லை கணிசமான வெற்றியையோ பிடிப்பதற்கு இத்தகைய வறட்டு கவுரவங்கள் தேவையில்லை என்பது கருணாநிதி மற்றும் பெரும்பான்மை திமுகவினரது கருத்து. அதனால் கருணாநிதி எல்லாவற்றுக்கும் பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று நச்சென்று சொல்லி விட்டார்.

அதன்படி “சேது சமுத்திர திட்டத்தை ஆதரிப்பவர்களும், மதவாதத்தை எதிர்ப்பவர்களும் திமுக அணிக்கு வரலாம்” என்று பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். இனி காங்கிரசின் சாமர்த்தியம் என்று கதர் பெருச்சாளிகள் சற்று நிம்மதி அடையலாம். ஒருக்கால் எந்தக் கூட்டணியும் இல்லை என்றால் முகவரி இல்லாமல் டெபாசிட் கிடைக்காமல் காங்கிரசு தலைகள் இங்கே காணாமல் போயிருக்கும். அந்த அவலமான எதிர்கால அதிர்ச்சியை கருணாநிதியின் சாமர்த்தியமான பேச்சு கொஞ்சம் போக்கியிருக்கிறது.

இருப்பினும் விஜயகாந்த், ஸ்டாலின் என்று சில பெரியவர்கள் இதை மனமிறங்கி ஒத்துக் கொண்டு அமல்படுத்தினால்தான் கூட்டணி வரும். இல்லையென்றால் வராமலும் போகலாம். ஆனாலும் இங்கே கொள்கைள் குறித்த சண்டை இல்லை, கட்சி-தனிப்பட்ட ஆதாயங்களின் முரண்பாடு என்பதால் எப்படியாவது தீர்வைக் கண்டுபிடிப்பார்கள்.

இடையில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற எழுவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இதை மத்தியில் உள்ள காங்கிரசு கூட்டணி அரசு எதிர்க்கிறது. இதனால் அதிமுகவை தமிழார்வலர்கள் ஆதரிப்பதும், காங்கிரசை புறக்கணிப்பதும் ஜெயாவுக்கு இலாபம். காங்கிரசோடு சேர்ந்த்தால் சென்டி மெண்ட் அலையில் அடிபடுவோம் என்று தேமுதிகவும், திமுகவும் கருதும். இருப்பினும் இதெல்லாம் தேர்தலில் பெரிய பங்களிப்பு செய்ய முடியாது என்று கருதி கூட்டணி வைத்தாலும் வெற்றி என்பது எளிதல்ல.

ஆக இவ்வளவு ரூபாய் செலவழித்து கூட்டணிக்கு காங்கிரசு கட்சி வரலாம் என்று அறிவிப்பை செய்வதற்குத்தானா திமுக மாநாடு பயன்பட்டிருக்கிறது?

என்ன செய்வது, அரசர்கள் தமது அரசியல் மேலாண்மையை நிலைநாட்ட நாட்டு மக்களுக்கு கொஞ்சம் திருவிழாக்களை கூட்டி காட்ட வேண்டியிருக்கிறது. அல்லது மார்க்கெட்டே இல்லையென்றாலும் ஒரு சினிமா நட்சத்திரம் தனது இருப்பை ஊடகங்களுக்கும், ஊருக்கும் காட்டுவதற்கு பல்வேறு சடங்குகளை செய்ய வேண்டியிருக்கிறது. அந்த சலுகை திமுகவிற்கு மட்டுமில்லையா என்ன?