privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்ஆர்.எஸ்.எஸ்-ன் பாம் கா பத்லா பாம் - குண்டுக்கு பதில் குண்டு

ஆர்.எஸ்.எஸ்-ன் பாம் கா பத்லா பாம் – குண்டுக்கு பதில் குண்டு

-

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் – அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் – 4

முந்தைய பகுதிகள்

  1. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் – அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்
  2. அசீமானந்தா – ஒரு காவி பயங்கரவாதியின் வரலாறு
  3. மோடியின் குஜராத்தில் அசீமானந்தாவின் கிறித்தவ வேட்டை

பரி கும்பமேளாவுக்கு முந்தைய மூன்று ஆண்டுகளாகவே, மேளாவுக்கான தயாரிப்பு வேலைகளுக்கு மத்தியில், பிற நீண்ட கால சங்க (ஆர்.எஸ்.எஸ்) ஊழியர்களை சந்தித்து மத மாற்றங்களை விட அவர்கள் மிகவும் தீவிரமானதாக கருதிய ஒரு பிரச்சனையைப் பற்றி அசீமானந்தா விவாதித்து வந்தார். இந்தக் குழுவின் மையமாக இருந்தவர்கள் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் செயற்குழு உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூரும், இந்தூரின் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில் ஜோஷியும்.

பிரக்யாசிங் தாக்கூர்
பிரக்யாசிங் தாக்கூர்

2003-ம் ஆண்டு துவக்கத்தில் டாங்ஸின் பா.ஜ.க பொதுச் செயலாளராக இருந்த ஜெயந்திபாய் கேவத் அசீமானந்தாவை தொலைபேசியில் அழைத்தார். “பிரக்யா சிங் உங்களை சந்திக்க விரும்புகிறார்” என்று கூறிய கேவத், சூரத்தின் நவ்சாரியில் உள்ள தனது வீட்டில் அவர்கள் இருவரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

1990-களின் இறுதியில் விஸ்வ இந்து பரிஷத் தொண்டர் ஒருவரின் வீட்டில் பிரக்யா சிங்கை சந்தித்ததை அசீமானந்தா நினைவு கூர்கிறார். குட்டை முடி, டி-ஷர்ட், ஜீன்சுடன் கூடிய பிரக்யா சிங்கின் தோற்றமும் அவரது தீவிர சவடால் பேச்சும் அசீமானந்தாவின் கவனத்தை ஈர்த்திருந்தன. (2006-க்குப் பிறகான ஒரு பேச்சில், “[பயங்கரவாதிகளுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும்] நாம் ஒரு முடிவு கட்டுவோம். அவர்களை எரித்து சாம்பலாக்குவோம்” என்று தனக்கே உரிய கடும் தாக்குதல் மொழியில் அவர் முழங்கினார்). நவ்சாரியில் அசீமானந்தா அவரை சந்தித்த போது, ஒரு மாதத்துக்குள் வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் வாகாய் ஆசிரமத்தில் அசீமானந்தாவை சந்திக்க வருவதாக அவரிடம் கூறினார்.

இந்துத்துவாவை வளர்ப்பதற்கான அசீமானந்தாவின் இடையறா முயற்சி, அவரது “இந்துத்துவுக்கான பணி” தன்னை அவரிடம் ஈர்த்தது என்கிறார் பிரக்யா சிங். சென்ற டிசம்பர் மாதம் நாங்கள் போபாலில் சந்தித்த போது, “அவர் ஒரு மகத்தான சன்யாசி, நாட்டுக்காக மகத்தான பணிகளை செய்து வருகிறார்” என்றார் பிரக்யா சிங்.

நவ்சாரி சந்திப்புக்குப் பிறகு, பிரக்யா சிங் தான் வாக்களித்தபடி விரைவில் டாங்ஸ் வந்து சேர்ந்தார். அவருடன் மூன்று ஆண்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் சுனில் ஜோஷி.

ஜோஷியை நேரில் அறிந்தவர்கள், அவரை “விசித்திரமானவர் மற்றும் துறுதுறுப்பானவர்” என்று சித்தரிக்கின்றனர். அவர் தனக்கு சகோதரர் போன்றவர் என்றும், ஆர்.எஸ்.எஸ் மூலமாகவே அவரை சந்தித்ததாகவும் பிரக்யா சிங் கூறுகிறார். பிற்காலத்தில், ஜோஷிக்கு சபரி தாம் ஆசிரமத்தில் அடைக்கலம் கொடுத்து தான் பாதுகாத்து வந்த போது, ஜோஷி நாள் முழுவதும் பஜனைகளிலும், பூஜைகள் செய்வதில் செலவழிப்பார் என்று அசீமானந்தா நினைவு கூர்கிறார். ஜோஷியும், பிரக்யா சிங்கும் அசீமானந்தாவுடன் உறவாட ஆரம்பித்திருந்த நேரத்தில் ஜோஷி மத்திய பிரதேசத்தில் ஒரு காங்கிரஸ் பழங்குடி தலைவரையும் காங்கிரஸ்காரர் ஒருவரின் மகனையும் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தார். அந்த குற்றத்துக்காக ஆர்.எஸ்.எஸ் அவரை அமைப்பிலிருந்து விலக்கி விட்டதாக சொல்லப்படுகிறது.

சுனில் ஜோஷி
சுனில் ஜோஷி

விரைவில் இன்னொரு உறுப்பினர் இந்தக் குழுவில் சேர்ந்தார். கனடாவில் வேலை செய்து வந்த பாரத் ராஜேஷ்வர் என்ற மேலாண்மைத் துறை ஊழியர் டாங்ஸில் அசீமானந்தாவின் பணிகள் பற்றி கேள்விப்பட்டார். தனது வெளிநாட்டு வாழ்க்கையைத் துறந்து அவருக்கு உதவி புரிய இந்தியாவுக்கு வர முடிவு செய்தார். டாங்சுக்கு அருகில் இருந்த வல்சாத் மாவட்டத்தில் ராதேஷ்வரின் வீட்டில் ஆசிரமத்துக்குப் போகும் அசீமானந்தாவின் கூட்டாளிகள் தங்கிச் செல்வது வழக்கம்.

கும்பமேளாவுக்கான தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்த ஆண்டுகளில் அவர்கள் அடிக்கடி சந்தித்ததாக அசீமானந்தாவும் பிரக்யா சிங்கும் கூறுகிறார்கள். நாட்டில் முஸ்லீம்களின் மக்கள் தொகை வளர்ந்து வருவதைக் குறித்து அவர்கள் முக்கியமாக விவாதித்தார்கள். அது தேசத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அசீமானந்தா கருதினார். “கிருத்துவர்களைப் பொறுத்தவரை நாம் ஒன்றாக சேர்ந்து அவர்களை மிரட்டி விடலாம், ஆனால் முஸ்லீம்கள் வேகமாக பெருகி வருகிறார்கள்.” என்கிறார் அசீமானந்தா.

சதியாளர் கூட்டம்
பயங்கரவாத சதிக் கூட்டம்
1. இந்திரேஷ் குமார் 2. சுனில் ஜோஷி 3. மோகன் பாகவத் 4. அசீமானந்தா 5. புரோகித் 6. பிரக்யாசிங் தாக்கூர் 7. கல்சங்கரா 8. சந்தீப் டாங்கே

“தாலிபான், மக்களை படுகொலை செய்யும் வீடியோக்களை பார்த்திருக்கிறீர்களா? அதைப் பற்றி நான் கூட்டங்களில் பேசுவது வழக்கம். முஸ்லீம்கள் இது போல பெருகிக் கொண்டே போனால், விரைவில் அவர்கள் இந்தியாவை பாகிஸ்தான் ஆக்கி விடுவார்கள். அதன் பிறகு இங்கிருக்கும் இந்துக்கள் அதே மாதிரியான சித்திரவதைகளை எதிர் கொள்ள நேரிடும்”. இதை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை அந்தக் குழு ஆராய்ந்ததாக சொல்கிறார் அசீமானந்தா. இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்கள் குறிப்பாக இந்து வழிபாட்டுத் தலங்களின் மீது நடக்கும் தாக்குதல்கள் அவர்களுக்கு ஆத்திரமூட்டின. குறிப்பாக 2002-ம் ஆண்டு குஜராத்தின் காந்திநகரில் உள்ள அக்சர்தாம் கோயிலில் 30 பேரைக் கொன்ற தாக்குதல் அவர்களை ஆத்திரம் கொள்ளச் செய்தது. இந்த பிரச்சனைக்கு அசீமானந்தாவின் தீர்வு அப்பாவி முஸ்லீம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது என்பதுதான். அதற்கு ஆதரவாக அவர் தொடர்ந்து வாதாடி வந்தார். “பாம் கா பத்லா பாம்” – குண்டுக்கு பதில் குண்டு என்று அவர் திரும்பத் திரும்பச் சொல்வது வழக்கம்.

அசீமானந்தா கும்பமேளாவுக்கு தயாரித்துக் கொண்டிருக்கும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குழுவின் விவாதங்கள் தொடர்ந்தன. விரைவில்,  மேலே கூறியது போல (முதல் பகுதியில்) மோகன் பாகவத்தும் இந்திரேஷ் குமாரும் அவர்களது திட்டத்துக்கு தமது ஒப்புதலை அளித்தனர். அவர்கள் இருவரும் மற்ற இந்து வலது சாரி தலைவர்களும் கும்ப மேளாவில் நடுநாயகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தபோது அசீமானந்தா தனது ஆசிரமத்துக்கு திரும்பினார். சங்கத்துடன் அவருக்கு நீண்ட உறவும், பிரபலமும் இருந்தாலும், பொது இடங்களில் அவர் ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று  பாகவத்தும் இந்திரேஷ் குமாரும் சொன்னதை அவர் ஏற்றுக் கொண்டார். கும்பமேளாவில் பங்கேற்பதற்கு பதிலாக ரகசியமாக தாக்குதல்களுக்கு திட்டமிடுவதில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

ராமசந்திர கல்சங்ரா
ராமசந்திர கல்சங்ரா

சபரி கும்பமேளா நடந்த இரண்டு மாதங்களுக்குள் வாரணாசியில் வெடித்த இரண்டு வெடிகுண்டுகள் 28 பேரைக் கொன்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களை படுகாயப்படுத்தின. ஒரு வெடிகுண்டு ஒரு இந்து கோயிலின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்தது. அசீமானந்தா, பிரக்யா சிங், சஞ்சய் ஜோஷி, ராதேஷ்வர் ஆகியோர் சபரி தாமில் கூடி உடனடியாக ஒரு பதிலடி கொடுக்க முடிவு செய்தனர்.

ஜோஷியும், ராதேஷ்வரும் ஜார்க்கண்ட் மாநிலத்துக்குப் போய் கைத்துப்பாக்கிகளும், வெடிப்பானுக்கான சிம் அட்டைகளும் வாங்கி வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். அசீமானந்தா அவர்களுக்கு ரூ 25,000 கொடுத்தார். மற்ற தீவிரவாத சாதுக்களையும் இந்த சதித்திட்டத்தில் சேர்த்துக் கொளள முயற்சி செய்யும்படி அசீமானந்தா அவர்களுக்கு அறிவுரை கூறினார். ஆனால், அவர் சேர்த்துக் கொண்ட ராம பக்தர்கள் வெறும் வாய்வீச்சுக்களோடு நிறுத்திக் கொண்டார்கள். ஜார்கண்டில் ஜமதாதா மாவட்டத்தின் ஆர்.எஸ்.எஸ் தலைவரும் தனது நண்பருமான தேவேந்தர் குப்தாவை ஜோஷி தொடர்பு கொண்டார். சிம் அட்டைகள் வாங்குவதற்காக போலி ஓட்டுனர் உரிமங்களை பெறுவதற்கு அவர் உதவி செய்தார்.

ஜூன் 2006-ல் குழு ராதேஷ்வரின் வீட்டில் கூடியது. ஜோஷியும் பிரக்யா சிங்கும் வரும் போது தம்முடன் சந்தீப் டாங்கே, ராமசந்திர கல்சங்ரா, லோகேஷ் சர்மா மற்றும் அமீத் என்று மட்டும் அறியப்பட்ட ஒரு ஆள் ஆகியோர் அடங்கிய புது சதித்திட்ட உறுப்பினர்களை அழைத்து வந்தனர். “டீச்சர்” என்ற புனைபெயர் வைத்திருந்த டாங்கே மத்திய பிரதேசத்தின் ஷாஜாபூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர், கல்சங்கரா இந்தூரின் ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர்.

குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு ஜோஷி மூன்று செயற் குழுக்களை அமைத்தார். குண்டு வைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களுக்கு ஊக்கமளித்து, புகலிடம் கொடுத்து, பாதுகாப்பது ஒரு குழுவின் வேலை. இன்னொரு குழு குண்டுகளுக்கான பொருட்களை வாங்கி வரும் வேலையைச் செய்யும். மூன்றாவது குழு குண்டுகளை உருவாக்கி, தாக்குதல்களை நடத்தும். சதித்திட்டத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் இழையாக தான் மட்டுமே இருப்பதாக ஜோஷி பொறுப்பேற்றுக் கொண்டார். பெரும் எண்ணிக்கையிலான பாகிஸ்தானியர்களை கொல்வதற்கு சம்ஜவுதா விரைவு ரயிலை குறி வைக்கலாம் என்று அவர் ஆலோசனை சொன்னார். மாலேகான், ஹைதராபாத், அஜ்மீர், மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்  கழகம் ஆகியவற்றை அசீமானந்தா குறிப்பிட்டார்.

லெப் கர்னல் புரோகித்
லெப் கர்னல் புரோகித்

டாங்ஸில் பல மாதங்கள் எந்த புதிய தகவலும் இல்லாமல் கழிந்தன. ஜோஷி தீபாவளி கொண்டாட்டங்களின் போது சபரி தாமுக்கு வந்து அசீமானந்தாவை சந்தித்தார். செப்டம்பர் 8-ம் தேதி மாலேகானில் 31 பேரைக் கொன்ற இரண்டு குண்டு வெடிப்புகளை நடத்தியது தான்தான் என்று ஜோஷி கூறியிருக்கிறார். குண்டு செய்யும் பொருட்களை வாங்கவும் குண்டுகளை உருவாக்கி, தாக்குதல்களை நடத்த டாங்கேவும், கல்சங்கராவும் ஜோஷிக்கு உதவியிருக்கின்றனர்.

2007-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி, சிவராத்திரி நாளில் ஜோஷியும் அசீமானந்தாவும் குஜராத்தின் பால்பூரில் உள்ள கர்ட்மேஷ்வர் மகாதேவ் மந்திரில் சந்தித்தனர். அடுத்த சில நாட்களில் நல்ல சேதி வரும் என்று ஜோஷி அசீமானந்தாவிடம் கூறியிருக்கிறார். இரண்டு நாட்களுக்குப் பிறகு சம்ஜவுதா விரைவு ரயிலில் குண்டு வெடிக்கப்பட்டது. அந்த தாக்குதலுக்கு ஓரிரு நாட்களுக்குப் பிறகு அசீமானந்தாவும் சதித்திட்டத்தின் சில உறுப்பினர்களும் ராதேஷ்வரின் வீட்டில் சந்தித்த போது தாக்குதலை நடத்தியது தனது வேலை என்று ஜோஷி கூறினார். டாங்கேவும் அவரது நண்பர்களும் தாக்குதலை நடத்தியதாக அவர் கூறியிருக்கிறார். அடுத்த 8 மாதங்களுக்கு தாக்குதல்கள் தொடர்ந்தன. அந்தக் குழு ஹைதராபாத்தின் மெக்கா மசூதியில் மே மாதம் குண்டு வைத்தது. அக்டோபரில் அவர்கள் அஜ்மீர் தர்க்காவில் குண்டு வைத்தனர்.

2007-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி பிரக்யா சிங் அவரது தங்கையுடனும் உதவியாளர் நீரா சிங்குடனும் அப்போது வெளியாகிக் கொண்டிருந்த சம்ஜவுதா குண்டு வெடிப்பு குறித்த செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். நீரா இது குறித்து சாட்சியம் அளித்திருக்கிறார். அந்த நாசச்செயல்களின் அழிவுக் காட்சிகள் நீராவை அழ வைத்தன. செத்தது அத்தனை பேரும் முஸ்லீம்கள்தான் என்பதால் அழக் கூடாது என்று பிரக்யா சிங் கூறியிருக்கிறார். சில இந்துக்களும் கொல்லப்பட்டவர்களில் இருக்கிறார்கள் என்று நீரா சுட்டிக் காட்டிய போது, “கடலையோடு சேர்த்து சில புழுக்களும் அரைபடத்தான் செய்கின்றன” என்று பழமொழி கூறியிருக்கிறார் பிரக்யா சிங். தனது தங்கைக்கும், நீராவுக்கும் ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்து அந்த வெறிச்செயலை கொண்டாடியிருக்கிறார்.

2007-ம் ஆண்டு இறுதியில் சதித்திட்டத்தின் போக்கு அதி மோசமானது. டிசம்பர்   29-ம் தேதி மத்திய பிரதேசத்தின் தேவாஸில் உள்ள அவரது தாயின் வீட்டுக்கு அருகில் உள்ள ஆளில்லா சாலை ஒன்றில் சுனில் ஜோஷி சுட்டுக் கொல்லப்பட்டார். ஜோஷியுடன் ராஜ், மேகூல், கான்சியாம், உஸ்தாத் ஆகிய நான்கு உதவியாளர்கள் எப்போதும் இருப்பார்கள். (ராஜூம் மேகூலும் 2002 குஜராத் கலவரங்களின் போது 14 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட பெஸ்ட் பேக்கரி தாக்குதல் வழக்கில் போலீசால் தேடப்பட்டு வருபவர்கள்.) நான்கு பேருமே ஜோஷியின் கொலைக்குப் பிறகு மர்மமாக மறைந்து விட்டனர்.

ஜோஷியின் மரணம் பற்றிய செய்தி வந்ததும் அது தொடர்பான விபரங்களை பெறுவதற்கு அசீமானந்தா, ஒரு ராணுவ உளவுத் துறை அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நாசிக்கில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பான அபினவ் பாரத்தின் கூட்டம் ஒன்றில் அசீமானந்தா லெப்டினென்ட் கர்னல் சிறீகாந்த் புரோகித்தை சந்தித்திருந்தார்.

புரோகித் ஒரு மர்மமான மனிதர். 2008-ம் ஆண்டு நிகழ்ந்த இரண்டாவது மாலேகான் குண்டு வெடிப்பை திட்டமிட்டதற்காக அவர் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்.  மேலதிகாரிகளின் உத்தரவின்படி தான் இரட்டை உளவாளியாக (இரு தரப்பிடமும் தான் மறு தரப்பின் மத்தியில் உளவு வேலை செய்வதாக கூறுவது) வேலை செய்ததாக அவர் சாதிக்கிறார். “நான் என் வேலையை சரிவர செய்து முடித்தேன். மேலதிகாரிகளுக்கு தொடர்ந்து தகவல் தெரிவித்து வந்தேன். எல்லாமே ராணுவ பதிவுகளில் ஆவணங்களாக உள்ளன” என்று அவர் 2012-ம் ஆண்டு அவுட்லுக் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார். “உண்மையை தெரிந்து கொள்ளும் தேவை இருப்பவர்கள் அவரை கவனமாக கையாள வேண்டியிருக்கிறது. அவரது உண்மையான நோக்கங்கள் என்னவென்பது யாருக்கும் தெரியாது” என்கிறார் பிரக்யா சிங்கின் வழக்கறிஞர் கணேஷ் சொவானி.

ஜோஷி ஒரு பழங்குடி காங்கிரஸ் தலைவரின் கொலைக்கு காரணமாக  இருந்ததால் அவர் கொல்லப்பட்டது ஒரு பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்று புரோகித், அசீமானந்தாவிடம் கூறியிருக்கிறார்.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு மகாராஷ்டிராவிலும், குஜராத்திலும் ஐந்து குண்டுகள் வெடித்தன. மாலேகானில் இரண்டு, மொடாசாவில் ஒன்று என அவை ஏழு பேரைக் கொன்று 80 பேரை காயப்படுத்தின. விரைவில் சந்தீப் டாங்கே அசீமானந்தாவை தொடர்பு கொண்டு தனக்கு சபரி தாம் ஆசிரமத்தில் சில நாட்கள் பாதுகாப்பு தரும்படி கேட்டான். அசீமானந்தா குஜராத்தில் உள்ள நாதியாதுக்குப் போய்க் கொண்டிருந்தார். தான் இல்லாத போது டாங்கேவை ஆசிரமத்தில் விட்டு வைப்பது புத்திசாலித்தனமல்ல என்று அசீமானந்தா கருதினார். சபரி தாமிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வயாராவில் உள்ள ஒரு பேருந்து நிலையத்திலிருந்து தன்னை அழைத்துக் கொண்டு போய் பரோடாவில் விட்டு விடுமாறு அசீமானந்தாவிடம் கேட்டுக் கொண்டான். அசீமானந்தா டாங்கேவை வயாராவில் சந்தித்த போது அவன் மிகவும் பயத்துடன் இருந்தான், அவனுடன் ராமசந்திர கல்சங்காராவும் இருந்தான். மகாராஷ்டிராவிலிருந்து வருவதாக அவர்கள் சொன்னார்கள். பரோடா போகும் 3 மணி நேர பயணத்தின் போது அவர்கள் வாயே திறக்கவில்லை என்று அசீமானந்தா பின்னர் நினைவு கூர்கிறார்.

முக்கிய சதியாளர்களில் முதலில் பிடிபட்டது பிரக்யா சிங். இரண்டாவது மாலேகான் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் அவருடையது என்பதை மும்பை பயங்கரவாத எதிர்ப்புப்  பிரிவு கண்டறிந்த பிறகு அவர் அக்டோபர் 2008-ல் கைது செய்யப்பட்டார். போலீஸ் பாதுகாப்பில் அவர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின. அந்த செய்தி அசீமானந்தாவை பெரிதும் பாதித்தது. இந்த வழக்கின் அடுத்த பெரிய கைதை மும்பை பயங்கரவாத தடுப்புப் பிரிவு நவம்பர் முதல் வாரத்தில் செய்தது. புரோகித் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத செயல்களை செய்தவர்களுக்கு குண்டுகளை உருவாக்க பயிற்சி அளித்ததாகவும், ராணுவ கிடங்குகளிலிருந்து வெடிமருந்து எடுத்துக் கொடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த மாதத்திலேயே பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு தயானந்த் பாண்டே என்ற சதியாளரை கைது செய்தது. அதன் பிறகு கைதுகள் திடீரென்று நின்று போயின. புலன் விசாரணைக்கு தலைமை வகித்த மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே நவம்பர் 26 மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஏப்ரல் 2010 வரை பெரிதாக எதுவும் மாறி விடவில்லை. ஆஜ்மீர் குண்டு வெடிப்பை விசாரித்துக் கொண்டிருந்த ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு ஜோஷிக்கும் ராதேஷ்வருக்கும் போலி அடையாளத்தை ஏற்பாடு செய்து கொடுத்த ஜார்கண்டைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் மாவட்ட தலைவர் தேவேந்திர குப்தாவையும் இன்னும் இரண்டு பேரையும்  கைது செய்தது. ஜூலை மாதம் சம்ஜவுதா விரைவுவண்டி குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு ஆணையம் ஏற்றுக் கொண்டது. இதற்கிடையில் சி.பி.ஐ மெக்கா மசூதி வழக்கை விசாரிக்க ஆரம்பித்து அசீமானந்தா உட்பட சதித்திட்டத்தின் பல உறுப்பினர்களை கண்காணிக்கத் தொடங்கியது.

இந்தக் கட்டத்தில், தன்னைச் சுற்றி வலை இறுகுவதை அசீமானந்தா புரிந்து கொண்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முந்தைய சில மாதங்களில் அவர் மிகவும் பதற்றமாக  காணப்பட்டார் என்கிறார் பூல்சந்த் பப்லூ. “செய்திகள் குறித்தும், புலன் விசாரணை குறித்தும் அவர் மவுனம் சாதித்தார், விடாப்பிடியாக மவுனம் சாதித்தார். நாங்கள் அவரிடம் எதையும் கேட்பதில்லை” என்கிறார் பப்லூ. 60 வயதை எட்டியிருந்த அசீமானந்தா கைதாவதை தவிர்க்க சபரிதாம் ஆசிரமத்தை விட்டு வெளியேறி நாட்டின் பல பகுதிகளுக்கு அலைந்து திரிய ஆரம்பித்தார். இடைவிடாத பயணங்கள் அவரை பலவீனப்படுத்தி, உடல்நிலை சீரழிந்தது. ஹரித்வாரில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு புனைபெயருடன் வாழ்ந்து வந்த அவரை சி.பி.ஐ நவம்பர் மாதம் தேடி வந்தடைந்தது. “சுனிலுடன் தொடர்பு கொண்டிருந்த அனைவரையும் அவர்கள் கைது செய்து விட்டார்கள். நான்தான் பிடிபட்ட கடைசி நபர்” என்கிறார் அசீமானந்தா.

ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்ட அசீமானந்தா விரைவில் குற்றத்தை ஒத்துக் கொண்டு வாக்குமூலம் அளித்தார். “சி.பி.ஐ.க்கு நடந்தது ஏற்கனவே தெரிந்திருந்தது” என்கிறார் அசீமானந்தா. அவர் ஏன் குற்றத்தை ஏற்றுக் கொள்ள  முடிவு செய்தார் என்பது குறித்த ஒரு ஆச்சரியமூட்டும் கதை அசீமானந்தாவின் ஒரு வாக்குமூலத்தில் உள்ளது. கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அவர் கலீம் என்ற பெயருடைய முஸ்லீம் சிறுவனை சந்தித்தார். அசீமானந்தால் திட்டமிடப்பட்ட மெக்கா மசூதி சதித் திட்டத்திற்காக கலீம் கைது செய்யப்பட்டிருந்தான். கலீம் அசீமானந்தாவுக்கு பணிவிடைகள் செய்வது வழக்கம். அவனது கருணை அசீமானந்தாவின் மனதை உறுத்தியது. அந்த குற்றவுணர்வில்தான் தான் வாக்குமூலம் அளிப்பதாக அசீமானந்தா கூறியிருக்கிறார்.

இந்த நிகழ்வை எங்கள் முதல் நேர்காணலில் நான் குறிப்பிட்டதும் அசீமானந்தா குறும்பாக பார்த்தார் “கலீம் பற்றிய செய்தி அவ்வளவு பிரபலமாகி விட்டதா?” கலீம் பற்றிய கதை முழுக்க முழுக்க போலீசால் இட்டுக் கட்டப்பட்டது என்கிறார் அவர்.  “நான் அதே சிறையில் இருப்பது கலீமுக்குத் தெரியும். ஆனால், அவனை நான் சந்திக்க முடியவில்லை. நான் ஒரு முஸ்லீம் சிறுவனிடம் அப்படிப்பட்ட விஷயங்களை எப்படிச் சொல்வேன்”.

தனது ஒப்புதல் வாக்குமூலங்களுக்குப் பிறகு அசீமானந்தா சம்ஜவுதா குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று இந்திய ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். மேலும், பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். “குற்றவியல் சட்ட நடைமுறையின்படி நான் தூக்கிலிணப்படுவதற்கு முன்பு ஹபீஸ் சயீத், முல்லா ஓமர், மற்றும் பாகிஸ்தானில் உள்ள பிற ஜிகாதி பயங்கரவாதிகளை மாற்ற அல்லது திருத்த விரும்புகிறேன். அவர்களை என்னிடம் அனுப்புங்கள், அல்லது என்னை உங்களிடம் அனுப்புமாறு இந்திய அரசிடம் கோருங்கள்” என்று எழுதியிருந்தார்.

–  தொடரும்

நன்றி : லீனா கீதா ரகுநாத், கேரவான்   (விசுவாசி : சுவாமி அசீமானந்தா சங் பரிவாரத்துக்கு செய்த தீவிர பணிகள் – லீனா கீதா ரகுநாத்)
தமிழாக்கம் – பண்பரசு