privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமாநகராட்சிப் பள்ளிகளில் இருப்பது கல்வியா கண்துடைப்பா ?

மாநகராட்சிப் பள்ளிகளில் இருப்பது கல்வியா கண்துடைப்பா ?

-

2014, ஜனவரி 17,18,20 தேதிகளில்
சென்னை மாநகராட்சி மண்டல கல்வி அதிகாரிகளுடன்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியும் இணைந்து நடத்திய….
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின்

அடிப்படை வசதிகள் பற்றிய ஆய்வறிக்கை

மரியாதைக்குரிய மேயர் அவர்களுக்கு,

வணக்கம்.

ஏழை எளிய மாணவர்கள் அனைவருக்கும் கல்வி கிடைக்கவேண்டும். அதனை தருகின்ற அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதன் அடிப்படையில் இந்த கோரிக்கையை அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

”கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் ” என்றார் வள்ளுவர்.

மாநகராட்சிப் பள்ளி
மாநகராட்சிப் பள்ளி

அப்படிப்பட்ட கல்வியைக் கொடுக்க வேண்டிய பள்ளிக்கூடங்கள் அனைத்து வகையிலும் சிறப்பானதாக இருக்க வேண்டும். அதிலும் மாநகராட்சிப் பள்ளிகள் முன் மாதிரிப் பள்ளிகளாக திகழ வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் படிப்பு வாசனையே மறுக்கப்பட்டு ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் முதல் தலைமுறையாக படிப்பதற்காக வருகின்ற ஒரே இடமாக மாநகராட்சிப் பள்ளிகள் உள்ளன. எனவே இங்கு படிக்கும் பிள்ளைகளுக்கு அதிகப்படியான கூடுதல் கவனம் கொடுக்கப்பட வேண்டும். தரமான கல்வியை, அனைத்து வசதி வாய்ப்புகளும் உள்ள பள்ளிச் சூழலை பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் மட்டுமே பெறமுடியும் என்பதுதான் தற்போதைய நிலையாக உள்ளது. அதே வகையான கல்வியை ஏழை, எளிய மக்களின் பிள்ளைகளுக்கு வழங்குவதே மாநகராட்சி பள்ளிகளின் நோக்கமாக இருக்கவேண்டும். இந்த பணியை மேற்கொள்வதில் லாப நட்ட கணக்கை பார்க்காமல், தனது முதல் கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும். அவ்வாறு இன்றி செலவு கணக்கு பார்க்கக்கூடாது என்கின்ற நியதி தாங்கள் அறிந்ததே.

மேலும் முதல் தலைமுறையாகப் படிக்க வருகின்ற ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் தங்கள் வீடுகளில் தூய்மையை உணரக்கூட முடியாத அளவுக்கு அவர்களை வறுமை வாட்டுகிறது. ஆம், தாயும் தந்தையும் தினசரி வயிற்றுப் பிழைப்புக்கு கூலி வேலைக்கு சென்று அதில் தங்களின் பெரும் நேரத்தை கழிக்கின்றனர். அவர்களின் தங்குமிடமோ குப்பை மேடுகளாக காட்சியளித்து ‘சேரி’ என்று அழைக்கப்படுகின்றது. அப்பிள்ளைகளின் வீடுகளில், பகுதியில் கழிவறை இல்லை. ஆக யாருக்கு எந்த அத்தியாவசியமான ஒன்று தேவைப்படுகிறதோ அதைக் கொடுக்க வேண்டும் என்பது அரசின் தார்மீகக்கடமை. அந்த அடிப்படையில் மாநகரட்சிப்பள்ளிகள் சுகாதாரமாகவும், தூய்மையுடனும் இருக்கவேண்டும். ஆனால் நடைமுறையில் அது இல்லாமல் இருக்கிறது.

பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சூழலை அமைத்துத் தரவேண்டும். தனியார் பள்ளிகளில் இருப்பதுபோல மழலையர் பள்ளிகளில் நிறைய விளையாட்டுப் பொருட்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிற்கும் தனியாக பிள்ளைகளைப் பராமரிக்க ஊழியர்கள் (ஆயா) இருக்கவேண்டும்.

ஆர்வத்தை தூண்டும் சிறுகதைகள், பொது அறிவு புத்தகங்கள்கொண்ட நூலகங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு பள்ளியிலும் இருத்தல் வேண்டும். குழந்தைகளுக்கென தனியாக புத்தகங்கள் (children books) இருக்கவேண்டும்.

மாநகராட்சிப் பள்ளி
மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள்

வெறும் படிப்பு மட்டும் என்று இல்லாமல் அவர்களின் தங்கும் இடத்தில் மறுக்கப்பட்ட விளையாட்டு பள்ளியில் முறைப்படி கொடுக்கப்பட வேண்டும். எல்லா வகையான விளையாட்டுக்களும் கற்றுத் தரப்படவேண்டும், அவற்றிற்கான விளையாட்டுப் பொருட்களும் ஏராளமாக இருக்க வேண்டும்.

தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட குழுவால் பள்ளிக்கட்டிடங்கள், கழிவறைகள், மின் வசதிகள் போன்றவை சோதிக்கப்பட வேண்டும். சோதித்ததன் விபரங்கள் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் இடம் பெற வேண்டும். அந்தக் குழுவினால் சான்றிதழ் அளிக்கப்படுவது என்பது பள்ளி செயல்படுவதற்கு அத்தியாவசியமான ஒன்றாக மாற்றப்பட வேண்டும். அக்குழு கூறுகின்ற குறைபாடுகளை சீர் செய்வதற்கு அதிகபட்சமாக 1 மாதத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு போர்க்கால அடிப்படையில் துரிதமாக வேலைகள் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் நமது குழந்தைகள் ஆரோக்கியமான மாணவர்களாக – அறிவுப்பூர்வமான மாணவர்களாக- சிறப்பான மாணவர்களாக இருக்க முடியும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதோடு மட்டுமல்லாமல், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையே 22.10.2012 அன்று அரசாணை (நிலை) எண் 270 வாயிலாக ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச உட்கட்டமைப்பு வசதிகளைப் பற்றிய விவரங்களையும் அளித்துள்ளது என்பது தாங்கள் அறிந்ததே.

ஆனால் கோடம்பாக்கம் புலியூர் மேல்நிலைப்பள்ளி, அமைந்தகரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அடிப்படை வசதிகளே முழுமையாக இல்லை. இதனை செய்துதரக் கோரி கடந்த அக்டோபர் மாதம் தங்களை சந்தித்து மனு கொடுத்திருந்தோம். ஆனால் மேற்கொண்டு அந்தப் பள்ளிகளில் கொடுத்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக இரண்டு முறை நினைவூட்டல் மனுவும் கொடுத்தோம். ஆனால் அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி மணலி புதுநகர், சடையன்குப்பம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேற்தளம் இடிந்து விழுந்து, இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர். அதில் குறிப்பாக, ஆகாஷ் என்ற மாணவனுக்கு, தலையில் அடிபட்டு, படுகாயமடைந்துள்ளான். அருகில் எந்த அரசு மருத்துவமனையும் இல்லாததால், ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். அம்மாணவனின் குடும்ப பின்னணி மிகவும் ஏழ்மையானது. விரிக்க பாய் கூட இல்லாத நிலையில்தான் அக் குடும்பத்தின் வாழ் நிலை உள்ளது. இந்த நிலையில், கடனை வாங்கித்தான் அம்மாணவனின் குடும்பத்தினர் சிகிச்சை பார்த்துள்ளனர். இதுவரை எந்த அதிகாரியும் வந்து பாதிக்கப்பட்ட மாணவர்களை பார்க்கவில்லை.

மாநகராட்சிப் பள்ளிசடையன் குப்பம் பள்ளிக்கு நாங்கள் நேரில் சென்று பார்த்த போதுதான் அப்பள்ளியை மாணவர்கள் பயன்படுத்தவே முடியாத சூழ் நிலையில் இருப்பதை அறிந்து கொண்டோம். அந்தக்கட்டிடங்கள் மிகவும் சிதிலமடைந்து எந்த நேரமும் இடிந்து விழலாம் என்ற அபாயகரமான நிலைமையில் இருந்ததைப் பற்றி கவலைப்படாமல் பள்ளி நடத்தப்பட்டு கொண்டிருந்தது.

இந்த சூழலில்தான், கடந்த ஜனவரி மாதம் 13-ம் தேதி, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும், அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன் பிறகு தங்களை சந்தித்து பேசினோம்.

அவ்வாறு பேசியதில், மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்த, ஆதாரபூர்வமாக தகவல்கள் தேவை. ஆகவே, 10 மண்டலங்களிலும் உள்ள மாநகராட்சி பள்ளிகளை, மாநகராட்சி அதிகாரிகளுடன் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் சென்று கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறினீர்கள். அந்த அடிப்படையில் 10 மண்டலங்களிலும் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்த இரண்டு நாட்களில் மட்டும் 57 பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்டோம்.

இந்த ஆய்வின் மூலம் சேகரித்த தகவல்களை கீழ்க்கண்ட வகையில் அறிக்கையாக தொகுத்துள்ளோம். இதன்படி பார்க்கும்போது, 22.10.2012 அன்று அரசாணை(நிலை)எண் 270 வாயிலாக ஆணை யில் உள்ளபடி எந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியும் செயல்படவில்லை என்பதே நிலைமையாக உள்ளது. அதன் அடிப்படையில் கீழ்காணும் விபரங்களை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

I. குடிநீர்

22.10.2012 அன்றைய அரசாணை (நிலை) எண் 270 , குடிநீரை பற்றி சொல்லும் விதிகள்:

  1. பாதுகாப்பான குடிநீர் தரப்பட வேண்டும், குடிநீர் சேமித்து வைக்கும் தொட்டிகள் தூய்மையான முறையில் இருத்தல் வேண்டும். எப்போது யாரால் எப்படி சுத்தம் செய்யப்பட்டது என்பதற்கான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். குடிநீர் உரிய முறையில் சுத்திகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும்.
  2. மேலும் 20 மணவர்களுக்கு 1 குழாய் என்ற வீதத்தில் குடிநீர்க்குழாய்கள் ஏற்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்
  3. பாத்திரங்கள் கழுவ, கை, கால்கள் கழுவ 20 மாணவர்களுக்கு 1 குழாய் என்ற அளவில் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். தரை வழுக்கல் இன்றி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

(பள்ளிகளில் குடிநீர் வசதி குறித்த தரவுகள் அட்டவணை 1-ல்)

மாநகராட்சிப் பள்ளி
மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள்

ஆய்வுக்கு சென்ற அனைத்துப் பள்ளிகளிலும், அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, 20 பேருக்கு ஒரு குடிநீர் குழாய், 20 பேருக்கு கை கழுவ தனியே ஒரு குழாய் என்ற அடிப்படையில் எங்குமே இல்லை. மேலும் சில பள்ளிகளில், குடிநீர் வசதி இல்லாமல் வெளியில் இருந்தோ, வீட்டில் இருந்தோதான் தண்ணீர் எடுத்து வந்து குடிக்கின்றனர் அல்லது தண்ணீரையே குடிக்காமல் இருக்கின்றனர். இதற்கான காரணங்கள், ஒன்று தண்ணீர் இல்லாமல் இருப்பது. மற்றொன்று, இருந்தும் அசுத்தமாக இருப்பது ஆகியவைகளே. மேலும் பெரும்பாலான பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிக்கப்படுவதற்கான வசதிகள் இல்லாமல் இருப்பதை கண்டோம்.. சில பள்ளிகளில் குடிநீர் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் வரும் என்ற நிலைமைதான் உள்ளது.

மண்டலம் – 7 ஆயிரம் விளக்கு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கு வரும் குடிநீர் லைனில் இருந்து அருகில் உள்ள தனியார் நிறுவனங்கள் இன்னொரு லைன் போட்டு தண்ணீர் எடுத்துள்ளனர். இதன் காரணமாக பள்ளிக்கு தண்ணீர் வரத்து அறவே இல்லை. இதனை உடனே சீர் செய்ய வேண்டும்.

ஒரு நாளைக்கு 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற இயற்கை விதியின் அடிப்படையில் மாணவர்களால் குடிநீர் குடிக்க முடியாமல் போகிறது. இதன் மூலம் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, கல்வி கற்கும் மனநிலையும் பாதிக்கப்படுகிறது என்று கருதுகிறோம். எனவே அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, குடிநீருக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம்தான் கல்வி கற்கும் சூழலை மேம்படுத்த முடியும் என்று கோருகிறோம்.

II. கழிவறை

பள்ளிக்கல்வி (எக்ஸ்.2)த் துறை அரசாணை நிலை எண்.270

  1. 20 மாணவர்களுக்கு 1 சிறு நீர் கழிப்பறை மற்றும் 50 மாணவர்களுக்கு 1 மலக்கழிப்பறை என்ற அளவில், புதிய அளவில், போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம் / போதிய வெளிச்சத்துடன் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவை அன்றாடம் தூய்மையாகப் பேணப்பட வேண்டும். கிருமி நாசினி தெளித்து ஆரோக்கியமான முரையில் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக வகுப்பறையை ஒட்டியே கடைசியாக அமைக்கப்பட வேண்டும். தனியே மைதானத்திலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலோ அமைதல் கூடாது. கட்டிட உறுதி / உரிமச் சான்றுகள் கழிப்பறைகளுக்கும் அவசியம்.
  2. கழிப்பறைகள் தண்ணீர் குழாய் வசதியுடன் கூடியதாக இருத்தல் வேண்டும்
  3. தண்ணீர்த்தொட்டிகள் மாணாக்கர்களால் திறக்க முடியாதபடி மூடப்பட்டு இருக்க வேண்டும். மழலையர் மற்றும் தொடக்க நிலை வகுப்பு குழந்தைகள், நடத்தாட்டிகள் உதவியுடன் கழிவறைக்கு சென்று வர ஏற்பாடுகள் செய்துதர வேண்டும்.

(பள்ளிகளில் கழிவறை வசதி குறித்த தரவுகள் அட்டவணை 2-ல்)

மாநகராட்சிப் பள்ளி
மாநகராட்சிப் பள்ளி மாணவியர்

ஆய்வுக்கு சென்ற அனைத்துப் பள்ளிகளிலும், அரசாணைப்படி 50 பேருக்கு ஒரு கழிவறை, 20 பேருக்கு ஒரு சிறுநீர் கழிப்பிடம் என்ற அடிப்படையில் கழிவறை வசதி இல்லை. எல்லா பள்ளிகளிலும் துப்புரவுப் பணியாளர்கள் அதற்கென்று நிரந்தரமாக இல்லாததால், தொடர்ச்சியாக பராமரிக்காமல் கழிவறைகள் அசுத்தமடைந்துள்ளன. மாத சம்பளம் ரூ.350/- அல்லது ஒப்பந்த அடிப்படையில் குறைவான சம்பளத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களே உள்ளனர். இதனால் முறையான பராமரிப்பு இல்லாமல் பல பள்ளிகளில் கழிவறைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. சில பள்ளிகளில் கதவு இல்லாமல் உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை முக்கியமாக உள்ளது. அதே போல் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதியும் இல்லை.

பெண்களுக்கு பிரத்தியேகமான கழிப்பறை வசதியும் இல்லை. குறிப்பாக பெண்களுக்கான கழிவறைகள், SANITARY NAPKIN DESTROYER, வசதிகள் கொண்ட GIRLS FRIENDLY TOILET என்ற முறையில் இருக்க வேண்டும். ஆனால் இந்த முறையில் பெண்கள் கழிவறைகள் அமைக்கப்படவில்லை. விதிவிலக்காக அமைந்தகரை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (மண்டலம் – 5) இவ்வசதி இருந்தும் பராமரிப்பில்லாமல் உள்ளது.

குறிப்பிட்ட நேர இடைவெளியில் உடலில் உருவாகும் கழிவுகளை வெளியேற்றுவது மிகவும் அவசியம். ஆனால் அதற்கான வசதிகள் இல்லாதபோது, மாணவர்களுக்கு சிந்தனை ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக, பெண்கள் 94% பேர் இதனாலேயே மேல்நிலை பள்ளி படிப்பை நிறுத்திவிடுவதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

எனவே ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகளை கட்டித்தரவும் SANITARY NAPKIN DESTROYER வசதிகள் கொண்ட GIRLS FRIENDLY TOILET ஆகியவற்றை செய்து தரவும் பள்ளிகளுக்கு நிரந்தரமான துப்புரவுப் பணியாளர்கள், தேவையான தண்ணீர் வசதி ஆகியவற்றை உடனே செய்து கொடுக்க வேண்டும் என கோருகிறோம்.

III. ஆசிரியர்கள்

பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு போதுமான, அதாவது வகுப்பறைக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில் ஆசிரியர்கள் இல்லை. மாணவர்களுக்கு ஏற்ப ஆசிரியர் எண்ணிக்கை இருக்கும்போதுதான் மாணவர்களை தரமானவர்களாக உருவாக்க முடியும் என்பது தாங்கள் அறிந்ததே. பெரும்பாலான அரசுப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் உதிரித் தொழிலாளிகளாக வேலை செய்பவர்கள். அவர்களுக்கு தங்கள் பிள்ளைகளை கவனித்துக் கற்றுக் கொடுக்க போதுமான நேரம் இருக்காது. எனவே ஆசிரியர்கள் எடுக்கும் கவனம், அக்கறையின் மூலம் மட்டுமே மாணவர்களின் கல்வித்தரம் உயர முடியும். மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று காரணம் காட்டி 60 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற நிலை சில பள்ளிகளில் உள்ளது.

மாநகராட்சிப் பள்ளிசில இடங்களில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளது, எனவே தற்போது உள்ள ஆசிரியர்களே போதுமானதாக உள்ளதாக தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர். vவகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்பது இல்லாமல், மொத்த மாணவர் எண்ணிக்கையிலிருந்து ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிடுகின்றனர். உதாரணமாக k c கார்டன் நடுநிலைப் பள்ளியில் 8 வகுப்புக்கள் உள்ளன. அங்கு மாணவர் எண்ணிக்கை 37 மட்டும் உள்ளது. இதனை காரணமாக காட்டி இருந்த 4 ஆசிரியர்களிலிருந்து ஒரு ஆசிரியரை குறைத்துள்ளனர். உண்மையில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து, மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியைத்தான் மேற்கொள்ளவேண்டும். அதை விடுத்து ஆசிரியர்களை குறைப்பது பிரச்சினையை தீர்க்காது. மாறாக பற்றாக்குறையின் காரணமாக ஆசிரியர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாவதே நேரிடுகிறது. இதனால் மாணவர்களை நெருக்கமாக இருந்து கவனிக்க முடியாமல் போவதால், மாணவர்களின் கல்வித்தரமும் தாழ்ந்துபோகிறது.

மேலும் உள்ள மிகமிக முக்கியமான பிரச்சினை எல்லா பள்ளிகளிலும் எழுத்தர், அலுவலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு தனியான அலுவலர்கள் இல்லை. இந்த வேலைகளையும் ஆசிரியர்களே செய்ய வேண்டியுள்ளதால் அவர்களின் பணிச்சுமை அதிகரிக்கின்றது. இதனால் மாணவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் கவனம் குறைகின்றது. எனவே இத்தகைய பணிகளுக்கு பணியாளார்கள் உடனடியாக நியமிக்கப்படவேண்டும்.

சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் இல்லாமல் வேலை செய்து வருகின்றனர். உதாரணத்திற்கு, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 678, புத்தா தெரு, கொருக்குப்பேட்டையில் உள்ள பள்ளியில் PTA மூலமாக வேலை பார்க்கும் 6 ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.

இசை, ஓவியம், தொழில் பயிற்சி போன்ற துணைப்பாடங்கள் எல்லா பள்ளிகளிலும் இல்லை. இருக்கும் ஒரு சில பள்ளிகளிலும் அந்த பாடங்களுக்கான நிரந்தரமான ஆசிரியர்கள் இல்லை.

அதே போல உடற்பயிற்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ், போன்றவற்றிற்கு நிரந்தரமான ஆசிரியர்கள் இல்லாமல் வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் மூலம் பாடங்கள் எடுக்கப்படுகின்றன.

அதே போல், நூலகர் என்று தனியே எந்த பள்ளியிலும் இல்லை, அந்த பணியையும் இருக்கும் ஆசிரியர்களை வைத்துதான் நிறைவேற்றுகிறார்கள். இதனால், அந்த ஆசிரியர் தனக்கென உள்ள பாடத்துக்கு முழுமையாக நேரம் ஒதுக்கும் வாய்ப்பில்லாமல் போகிறது. அதேபோல நூலகங்களும் முறையாக இயங்குவது இல்லை எனவே, உடற்பயிற்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ், நூலகர் போன்றவற்றிற்கு நிரந்தரமாக ஆசிரியர்கள் நியமிக்கப் படவேண்டும்.

ஆசிரியர்கள் முழுக்க முழுக்க மாணவர்களின் தரத்தை உயர்த்த நேரத்தை ஒதுக்கும்பொழுதுதான் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும் என்பது தாங்கள் அறிந்ததே. ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லாமல், கல்வி தரத்தை உயர்த்தும் போதுதான் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த முடியும்.

எனவே, அரசாணைப்படி 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையிலும், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் வகுப்புக்களின் எண்ணிக்கைக்கேற்ற ஆசிரியர்களையும் நியமனம் செய்ய வேண்டும். ஓவியம், இசை போன்ற துணைப்பாடங்களுக்கான ஆசிரியர்களையும் உடனடியாக நியமிக்க வேண்டும். எழுத்தர், அலுவலக உதவியாளர் போன்ற பணிகளில் எல்லாப் பள்ளிகளிலும் நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.

(பள்ளிகளில் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்த தரவுகள் அட்டவணை 3-ல்)

IV. அடிப்படை பணியாளர்கள்

1. துப்புரவுப் பணியாளர்கள் ;

மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள்
மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள்

துப்புரவுப் பணியாளர்களில் இரு வகையானவர்கள் உள்ளனர். மாநகராட்சி மூலமாக மாதம் ரூ 335.00 ஊதியம் பெறுபவர்கள், ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ 1500.00 ஊதியம் பெறுபவர்கள். ஒரு நாளைக்கு கழிவறைகளை மூன்று முறை தூய்மைப்படுத்த வேண்டியது அவசியம். ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் பணியாளர்கள் இல்லாததால் துப்புரவுப் பணி எப்போதாவதுதான் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பள்ளியின் தூய்மை பாதிக்கப்படுகின்றது.

அதுமட்டும் இல்லாமல், வகுப்பறை மற்றும் வளாகங்களை தூய்மைப்படுத்தவதற்கு பணியாளர்கள் இல்லாததால், வளாகங்கள் புதர்கள் மண்டி காட்சியளிக்கின்றன.

மேலும் துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ. 350 என்பது மிகவும் குறைவாக உள்ளது. இது அவர்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே துப்புரவு பணியில் அவர்களால் நிரந்தரமாக ஈடுபட முடியாமல் போகிறது.எனவே மாநகராட்சியே நிரந்தரமான துப்புரவுப் பணியாளர்களை நியமித்து, அவர்களுக்குப் போதுமான ஊதியத்தை வழங்க வேண்டும். இதன் மூலமே பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்வது சாத்தியம் என கருதுகிறோம்.

2. காவலர்கள்

பெரும்பாலான பள்ளிகளில் பகல், இரவு நேர காவலர்கள் இல்லை. அப்படியே இருந்தாலும், ஒப்பந்த அடிப்படையில் ரூ.1500 சம்பளத்திற்கு வேலை செய்பவர்களாக உள்ளனர். இந்த ஊதியம் போதுமானதாக இல்லை. எனவே இவ்வேலையில் நிரந்தரமாக யாரும் இருப்பது இல்லை. இவ்வாறு காவலர்கள் இல்லாமல் இருப்பதால் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் மது அருந்துவது, பொருட்களை சேதாரப்படுத்துவது என்பது பெரும்பாலான பள்ளிகளில் நடைபெறுகிறது. இது பள்ளியில் பாதுகாப்பற்ற சூழலையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. குறிப்பாக 731, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சென்னை மேல்நிலைப்பள்ளியில் வெளியாட்களின் பிரச்சினை அதிகமாக உள்ளது.

எனவே, எல்லாப் பள்ளிகளுக்கும் மாநகராட்சியே நிரந்தரமாக பகல், இரவு நேர காவலர்களை நியமித்து, அவர்களுக்குப் போதுமான ஊதியம் வழங்க வேண்டும் என கோருகிறோம்.

3. பிளம்பர், எலக்ட்ரீசியன்

எந்தப்பள்ளியிலும், முறையாக ப்ளம்பர், எலக்ட்ரீசியன்கள் இல்லை. பிரச்சினை ஏற்படும்போது. மண்டல அலுவலகத்திற்கு சொன்னாலும் முறையாக வருவதில்லை. சில வந்தாலும் உடனடியாக வருவதில்லை. இதனால் வெளியிலிருந்து ஆட்களை வரவைத்து பள்ளி நிர்வாகமே சரி செய்ய வேண்டியுள்ளது.

இதனால் மோட்டார் பழுதடையும்போது எலக்ட்ரீசியன் வருவதற்கு தாமதம் ஆவதால், கழிவறைக்கு தண்ணீர் பயன்படுத்த முடிவதில்லை. குறிப்பாக, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 678, புத்தா தெரு, கொருக்குப்பேட்டையில் உள்ள பள்ளி இப்பிரச்சினையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை நடுநிலைப்பள்ளி, ஆர்.ஆர்.புரம். கொருக்குப்பேட்டை (மண்டலம் 1) யில் மின்வயர்கள் அறுந்து ஆபத்தான நிலையில் உள்ளன. ஆனால் எலக்ட்ரீசியன் பிரச்சினையால் பராமரிப்பில்லாமல் அப்படியே உள்ளது.

V. கட்டுமான வசதி

வகுப்பறைகளைப் பொறுத்தவரை, நிறைய பள்ளிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு வகுப்பறை என்ற நிலை உள்ளது. அதனால் இட நெருக்கடியான சூழலிலேயே மாணவர்கள் கல்வியினை கற்கும் நிலை உள்ளது. சில பள்ளிகளில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதால், வகுப்பறைகள் போதுமானதாக இருக்கிறது. மாணவர்கள் முழுமையாக சேரும்போது வகுப்பறைகள் போதாது.

1. விளையாட்டு

பள்ளிக்கல்வி (எக்ஸ்.2)த் துறை அரசாணை நிலை எண்.270

வளாகம் / வகுப்பறை
பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் மற்றும் காலி இடங்களில் கூர்மையான பொருட்கள் துருப்படித்த ஆணிகள், கம்பு போன்றவைகள் அகற்றப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். விளையாட்டுக்கருவிகள் உடைந்த நிலையில் ஒட்டப்பட்டதாகவும் துருப்பிடித்தும் திருகு கழன்ற நிலையில் உயவு இன்றி இருப்பின் உடனுக்குடன் மாற்றப்பட வேண்டும். வகுப்புத்துவக்கத்தில் உடற்கல்வி ஆசிரியர் விளையாட்டுக் கருவிகளை சரியாக உள்ளதா? என சரிபார்த்தப் பிறகே விளையாட அனுமதிக்க வேண்டும். எக்காரணத்தினை முன்னிட்டும் வில் விளையாட்டு ஆசிரியர் துணை இன்றி விளையாடக்கூடாது. வீர விளையாட்டுக்கள் பள்ளி நிலையில் அவசியம் இல்லை. பாடத்திட்டத்தில் வரையறுக்கப்பட்ட விளையாட்டுக்களை விளையாடும் சமயம் தகுந்த பாதுகாப்பு / முதலுதவி வசதியுடன் மாணவர்கள் குறுக்கும் நெடுக்குமாகப் போகாதபடி எச்சரிக்கையுடன் பார்த்து கவனமாக விளையாட வேண்டும்.

மாநகராட்சிப் பள்ளி
மாநகராட்சிப் பள்ளி வகுப்பறை

ஆனால் நாங்கள் ஆய்வுக்கு சென்ற பள்ளிகளில் பெரும்பாலானவைகளில் விளையாட்டு மைதானம் கிடையாது. அப்படி விளையாட்டு மைதானம் இருக்கும் பள்ளிகளிலும் விளையாட்டு உபகரணங்கள் குறைவாக இருக்கிறது அல்லது இல்லை. அப்படி இருந்தும் சில பள்ளிகளில் மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குகின்றனர். (சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 678, புத்தா தெரு, கொருக்குப்பேட்டையில் உள்ள பள்ளி) வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தால் இன்னும் சிறப்பாக செய்வர்.

அதேபோல் எந்தப்பள்ளியிலும் PET ஆசிரியர்கள் நிரந்தரமாக இல்லை. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வந்து விட்டு செல்வது என்ற அடிப்படையிலேயே உள்ளது. PET ஆசிரியர்கள் நிரந்தரமாக இல்லாமல் மாணவர்களை விளையாட்டுக்களில் தகுதியுடையவர்களாக ஆக்க முடியாது. மேலும் உடல்நலமே அவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்தவும் உதவும் என்பது தாங்கள் அறிந்ததே.

எனவே, அரசாணை விதிப்படி, விளையாட்டு மைதானம், விளையாட்டு உபகரணங்கள், நிரந்தர PET ஆசிரியர் உள்ளிட்ட வசதிகளை எல்லா மாநகராட்சி பள்ளிகளிலும் நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறோம்.

2. சத்துணவு

மாநகராட்சிப் பள்ளி சத்துணவு
மாநகராட்சிப் பள்ளி சத்துணவு

மாணவர்களுக்கு போதுமான சாப்பாடு தட்டுக்கள், தட்டுக்களை வைக்க அலமாரி வசதி, சத்துணவுக்கு தேவையான கேஸ், சத்துணவு அறைக்கே தண்ணீர் குழாய் வசதி , சத்துணவு அறையில் மேம்படுத்தப்பட்ட கட்டுமான வசதி போன்றவை எல்லா மாநகராட்சி அரசுப்பள்ளிகளிலும் இல்லை. இவற்றை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.

அதேபோல் அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் ஆயா பணிகளுக்கு என ஆட்கள் எங்கும் இல்லை. (குறிப்பாக, சென்னை நடுநிலைப்பள்ளி, அரங்கநாதபுரம்) இது குழந்தைகளின் பாதுகாப்புக்கு மிகுந்த அவசியம் என கருதுகிறோம். எனவே எல்லா ஆரம்ப பள்ளிகளிலும் ஆயா பணிக்கு ஆட்களை மாநகராட்சியிலிருந்து நியமிக்க கோருகிறோம்.

3. ஆய்வகம்

பெரும்பாலான பள்ளிகளில் ஆய்வகங்கள் பெயரளவுக்கே உள்ளன.

ஆய்வகம் மாணவர்கள் மொத்தமாக ஒரே சமயத்தில் ஆய்வு செய்யும் அளவில் இருக்காது. ஷிஃப்ட் முறையில் மாணவர்கள் ஆய்வு செய்கின்றனர். இதனால் ஒரே நேரத்தில் எல்லா மாணவர்களுக்கும் ஆசிரியர் பயிற்சி கொடுப்பதற்கு முடிவதில்லை. நேரமும் விரயமாகிறது. எனவே பரப்பளவு பெரியதாக ஆய்வகங்கள் அமைக்கப்பட வேண்டும்.

ஆய்வகத்தில் ப்ளக் பாயிண்ட் (மின்வசதி) மற்றும் தண்ணீர் ஆகியவை ஆய்வு செய்யும் மேடைக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்று விதி இருந்தாலும் அவ்வாறு மின்சாரம் தண்ணீர் வசதிகள் இல்லை. அதேபோல் ஆய்வகங்களில் முதலுதவி பெட்டி இல்லை. தீயணைப்பான் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக இல்லை. மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என கோருகிறோம்.

முக்கியமாக, Lab Assistant என்பவர் இல்லை. இதை கவனத்தில் கொண்டு எல்லா மாநகராட்சி பள்ளிகளிலும் மாநகராட்சி மூலமாக நிரந்தரமாக Lab Assistant நியமிக்க வேண்டும் என கோருகிறோம்.

4. மருத்துவ வசதி

பள்ளிக்கல்வி (எக்ஸ்.2)த் துறை அரசாணை நிலை எண்.270
vi) பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 1500க்கு மேல் இருப்பின் முறையான முழு நேர மருத்துவ சேவை வசதிகள் இருக்க வேண்டும்.

மாநகராட்சிப் பள்ளி
மாநகராட்சிப் பள்ளி

இந்த ஆணையின்படி நாங்கள் சென்ற எந்த ஒரு பள்ளியிலும் மருத்துவ சேவை இல்லை. ஆகவே 1500 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளில் முழு மருத்துவ சேவையை உடனே தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்து உடனடிக் கவனம் தேவைப்படும் பள்ளிகள்

  1. மணலி புதுநகர் சடையன்குப்பம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் (மண்டலம் 1), கட்டிடம் மிக அபாயகரமான நிலைமையில் உள்ளது. மேற்கூரை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
  2. சென்னை நடுநிலைப்பள்ளி, அரங்கநாதபுரம், கொருக்குப்பேட்டை, செ- 21 ல் (மண்டலம் 1) உள்ள பள்ளியின் கட்டிடமும் அபாயகரமான நிலைமையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம். இருக்கும் ஒரே வகுப்பறையில் 65 மாணவர்கள் உள்ளனர். இரண்டு இடங்களில் மேற்தளம் பெயர்ந்துள்ளது. மழை பெய்தால் தண்ணீர் கணுக்கால் அளவு வகுப்பறைக்குள் தேங்கி விடுகிறது. ஜன்னல் இல்லாமல் உள்ளது. பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. பெஞ்சுகள் உடைந்துள்ளன. பல வருடங்களாக பெயிண்ட் அடிக்காமல் கட்டிடங்கள் பழுதடைந்துக் காணப்படுகின்றன.
  3. அதேபோல் CPS RR நகர் (மண்டலம் 1) பள்ளியில் சுற்றுச் சுவர் சேதமடைந்ந்துள்ளது. வராண்டாவில் உள்ள விளக்குகள் உடைந்துள்ளன. மின்சார வயர்கள் பராமரிப்பில்லாமல் ஆபத்தான நிலைமையில் தொங்கிக் கொண்டுள்ளன. சுற்றுப்புறத்தில் குப்பை கொட்டும் இடம் உள்ளதால், மாசுபட்ட சூழலுக்கு நடுவில்தான் மாணவர்கள் படிக்கின்றனர்.
  4. திருவல்லிக்கேணி (மண்டலம் 6 ) ல் உள்ள சில பள்ளிகளிலும் மேற்கண்ட நிலைமைதான் உள்ளது
  5. மண்டலம் 1 ல் (திருவொற்றியூர்) சென்னை நடுநிலைப்பள்ளி, கார்ணேசன் நகர், கொருக்குப்பேட்டை, செ – 21. இப்பள்ளியில் பள்ளிக் கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்னர் இடிக்கப்பட்டது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் முடிக்கப்படாமல் அப்படியே உள்ளது. கட்டிடத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. இது மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படுத்தும் வகையில் அபாயமாக உள்ளது.

மேலும் அரசின் இலவச பொருட்கள் தரும் இடமாக பயன்படுத்துவது, ஆதார் அட்டை கொடுக்கப் பயன்படுத்துவது என்பது அனைத்துப் பள்ளிகளிலும் நடக்கிறது. இதனால் பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்த்து அரசின் இலவச பொருட்களை மண்டல அலுவலகத்திலேயே கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தல் வேண்டும்.

மேற்கண்ட விபரங்களின் அடிப்படையில் பள்ளியின் கட்டுமான வசதியானது பெரும்பாலும் மோசமான நிலைமையில் உள்ளது. இவற்றைக் கணக்கில் கொண்டு, அரசாணை எண் 270 விதிப்படி, கட்டுமான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொகுப்பாக,

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

அடிப்படை வசதிகள் இல்லாமல், கல்வி கற்கும் சூழல் பாதிக்கப்பட்டதே, அரசுப்பள்ளிகளை பொதுமக்கள் புறக்கணிப்பதற்கு முக்கியமான காரணமாகும் என்பது இந்த ஆய்வில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. அப்படி இருந்தாலும், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் தனிப்பட்ட கடும் முயற்சி, மாணவர்கள் மீதான ஆசிரியர்களது அக்கறை ஆகியவை மூலமே அரசுப்பள்ளிகள் சில இடங்களில் சிறந்து விளங்குவதும், மொத்தமாக காப்பாற்றப்பட்டும் வருகின்றன எனத் தெரிகின்றன. பல பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் தங்களால் இயன்ற அளவு முயற்சி எடுத்து சாதித்துள்ளனர். ஆகவே, பள்ளிக்கல்வி (எக்ஸ்.2)த் துறை அரசாணை நிலை எண்.270 விதிப்படி அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால்தான் சென்னைப் பள்ளிகளில் கல்வி கற்கும் சூழல் உருவாகும். அதன் மூலம் சென்னைப் பள்ளிகள் எனும் மாநகராட்சிப் பள்ளிகள் தரமான பள்ளிகளாக, மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியும். ஏழை மாண்வர்களுக்கும் தரமானக் கல்வி கிடைக்கும். சென்னைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த அரசு – தனியார் கூட்டு ஒப்பந்தம் ( PPP ) மூலம் கல்வி கொடுக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாக கடந்த மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் அறிவித்துள்ளீர்கள். இது ஏழை மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கும் என்பதற்கு ஏற்கனவே பல உதாரணங்கள் உள்ளன. தனியாரைப் பொறுத்த வரையில் லாப நோக்கம் மட்டுமே இருக்கும். தமிழகம் முழுவதுமுள்ள தனியார்பள்ளிகளில் வெளிப்படையாக நடைபெற்றுவரும் கட்டணக்கொள்ளைகளும், அதற்கெதிரான பெற்றோர்களின் போராட்டங்களும் இதற்கு சாட்சியாக உள்ளன. எனவே, சென்னைப் பள்ளிகளை அரசு – தனியார் கூட்டு ஒப்பந்தம் ( PPP ) மூலம் பராமரிக்க எடுத்துள்ள முடிவை கைவிட்டு, அனைத்து சென்னைப்பள்ளிகளிலும் போதுமான, இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க தேவையான நிதியை ஒதுக்கி சென்னைப் பள்ளிகளின் தரத்தை உயர்தித்தர ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி!

பள்ளிகளில் திரட்டப்பட்ட குடிநீர் வசதி, கழிவறைகள், ஆசிரியர்கள் பற்றிய தரவுகளின் அட்டவணைகள்

chennai-corporation-schools-water-1

 

chennai-corporation-schools-water-2

chennai-corporation-schools-water-3

chennai-corporation-schools-toilets-1

chennai-corporation-schools-toilets-2

chennai-corporation-schools-teachers-1chennai-corporation-schools-teachers-2

[அட்டவணைகளை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்]

இப்படிக்கு,
(செயலர்)
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை.
நாள் : 28.2.2014
இடம் : சென்னை.

[பள்ளிகளின் புகைப்படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை]

  1. இந்த சீரிய முயற்சிக்கு மனமுவந்த பாராட்டுக்கள். இந்த ஆய்வை நடத்திய தோழர்கள், என்னைத் தொடர்பு கொண்டால் இது தொடர்பாக ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கவும், மற்ற தொடர்பான விஷயங்களைப் பற்றி தெரிவிக்கவும் உறுதுணையாய் இருப்பேன். வாழ்த்துக்கள். -இப்படிக்கு அ.நாராயணன், ஆசிரியர்-பாடம் இதழ்

  2. இவ்வளவு கோரிக்கைகளையும் வைப்பவர்கள் தங்கள் பங்கிற்கும் பாடசாலையின் சிறிய அளவிலாவது பாடசாலைகளின் வளங்களை அதிகரிக்க உதவிகளைச் செய்யலாமே? அனைத்தையும் மாநகராட்சியோ அல்லது அரசோ செய்ய வேண்டும் என நினைப்பது நடைமுறைச் சாத்தியமற்றது. உதாரணத்திட்கு “தனியார் பள்ளிகளில் இருப்பதுபோல மழலையர் பள்ளிகளில் நிறைய விளையாட்டுப் பொருட்கள் இருக்க வேண்டும்” என்று கேட்பதை விடுத்து பாடசாலையின் பழைய மாணவர்களையும், மாணவர்களின் பெற்றோர்களையும் ஒன்று சேர்த்து அவர்கள் உதவியுடன் விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாமே? மறுபுறத்தில் உரிய அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக நெருக்குதல் கொடுக்கலாம்.
    தனியார் பாடசாலையென்றால் கேள்விகள் கேட்காது பணங்கொடுக்கும் பெற்றோர் அரச பாடசாலைகளென்றால் மட்டும் எந்தவித பங்களிப்பையும் செய்யத் தவறுவது வருந்தத்தக்கது.
    நான் படித்த அரச பள்ளியில் விளையாட்டு உபகரணங்கள், மலசலகூடம், ஆய்வுகூடம் போன்றவற்றை பெற்றோர்களும் பழைய மாணவர்களும் பாடசாலை முன்னேற்றச் சங்கம் என்று ஒன்றிணைந்து தங்கள் பணத்தில் தந்தார்கள். இப்பொழுது பழைய மாணவன் என்ற வகையில் வருடாவருடம் பாடசாலை முன்னேற்றச் சங்கத்திற்கு எனது பங்களிப்பைக் கொடுத்து வருகிறேன்.

  3. அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் குறை கூறி திட்டுவதால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை. அவரவருக்கு அவரவர் பிரச்சினை. நம்மால் முடிந்தால் ஏதாவது உதவி செய்ய வேண்டும். ஓட்டு போடும் மக்கள் சரியில்லாத போது ஓட்டு பொறுக்கும் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு கீழே பணி செய்யும் அதிகாரிகளும் ஊழியர்களும் சரியாக இருக்க வேண்டும் என எண்ணுவது அறிவீனம்.

    • நன்றாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்,ஆனால் தங்களுக்கு ஒரு செய்தியை நினைவுறுத்த விரும்புகிறேன்,’பெர்னாட்சா என்ற மேதை என்னசொல்கிறார் என்றால்,இந்த உலகில் 50%நல்லவர்களும்,50%கெட்டவர்களும் உள்ளனர் கெட்டவர்களோடு போட்டிபோட முடியாமல்,49%அவர்களைச் சார்ந்து நிற்க ஆரம்பித்து விடுகின்றனர்.ஆனால் 1%மக்கள் அவர்களை எதிர்த்து வாழநினைக்கின்றனர் அவர்களால்தான் இவ் உலகில் மாற்றங்களே நிகழ்கிறது.’என்கிறார் இதை உணராதவர்கள் வேண்டுமென்றால் அறிவீனமாக இருப்பர்.உணர்ந்தவர்கள் அறிவாளிகள் மட்டுமல்ல அறிவற்றவர்களின் தவறுகளைப் புரியவைப்பவர்களும் கூட என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

  4. மிக்க நன்றீ.முதல் முறையாக அரசு பள்ளி ஆசிரியர்களை உழைப்பை ஒப்புக்கொண்டமைக்கு.

  5. நல்ல முயற்சி. பாராட்டுகள். ஆனால் அரசு பள்ளிகளின் தரம் உயராமல் இருக்க கட்டமைப்பு வசதிகள், போதிய ஆசிரியர்கள், ஊழியர்கள் இன்மை மட்டும் தான் காரணமா ? இவை எல்லாம் போதுமான அளவில் இருக்கும் அரசு பள்ளிகளின் தரம் திருப்திகரமாக இருகிறதா ?

    மூன்று விசியங்களை ஆராய வேண்டும் :

    1. எட்டாவது வரை எப்படி படித்தாலும் ஆல் பாஸ் என்ற முறை இருப்பதால், ஆரம்ப பள்ளியில் கற்பிக்கும் முறை மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பு எப்படி பாதிக்கப்பட்டுள்ளது எனற விசியம். யாரும் எட்டாவது வரை ஃபெயில் ஆக முடியாது என்று இருப்பதால் எப்படி சொல்லிகொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் ஒரே விளைவுதான் என்பதால் ஏற்படும் பணி திறன் குறைவுகள் பற்றிய ஆய்வுகள்.

    2.ஆசிரியர்களில் விடுப்பு எடுக்கும் முறைகள் மற்றும் அளவுகள். பல கிராமபுற ஆரம்ப பள்ளிகளில் விடுப்பு விண்ணப்பத்தை (தேதி இடாமல்) சக ஆசிரியரிடம் கொடுத்து விட்டு, absent without leaveஇல் சொந்த வேலை பாக்கும் ஆசிரிய பெருமக்கள் பற்றியும், ஒழுங்காக கற்பிக்காத ஆசிரியர்களின் திறன் பற்றியும் ஆய்வுகள். (விதி விலக்குகள் இவர்களில் நிறைய உண்டு. அவர்கள் மிக பாராட்டபட வேண்டியவர்கள்)

    3. postings, transfersகளில் உள்ள ஊழல் மற்றும் முறைகள் பற்றிய ஆய்வுகள்.

    கடந்த 15 ஆண்டுகளில் தமிழக அரசு பள்ளி கல்விக்கு ஒதுக்கும் தொகை மிக மிக அதிகரித்தே வருகிறது. (இலவசங்கள் மற்றும் வெட்டி செலவுகளை குறைத்து இதை இன்னும் அதிகரிக்க முடியும் / தேவை) ஆனால் பலன் தான் போதுமானதாக இல்லை. ஏன் என்று அலச வேண்டும்.

  6. மக்கள் பங்கேற்பு ஆக்கப்பூர்வமான முறையில் அமைந்தால் அரசுப்பள்ளிகளைக் காக்க முடியும். ஆனால் இன்று சுமார் 35 ஆயிரம் அரசுப்பள்ளிகளில் கிராமக்கல்விக் குழு உள்ளது. பெரும்பாலானவர்கள் பிழைப்புவாத அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்தான் கல்விக் குழுத் தலைவர்களாக உள்ளனர். ஆனால் பல தலைவர்களின் குழ்ந்தைகள் அரசுப்பள்ளியில் சேர்க்கப்படவில்லை. அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு இருக்கிறது. இதில் 75 விழுக்காட்டினர் பெற்றோர்கள், 50 விழுக்காட்டினர் பெண்கள் இருக்கவேண்டும். பெற்றோர் மட்டுமே அதுவும் பெண் ஒருவர் மட்டுமே இக்குழுவின் தலைவர். கல்வி உரிமைச்சட்டம் இதை வலியுறுத்துகிறது. பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பும் அதிகாரமும் இக்குழுவிற்கு உள்ளது. ஆனால் இது இக்குழுவில் உள்ளவர்களுக்கே தெரியாது. கிராமக் கல்விக் குழுவும் பள்ளி மேலண்மைக்குழுவும் சிறப்பாக செயல்பட்டால் அரசுப்பள்ளிகளைக் காப்பாற்ற முடியும்.

Leave a Reply to K.R.Athiyaman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க