privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கனிமவளக் கொள்ளைக் கும்பலின் பிடியில் ஒரிசா !

கனிமவளக் கொள்ளைக் கும்பலின் பிடியில் ஒரிசா !

-

ர்நாடகத்திலும் கோவாவிலும் சட்டவிரோத சுரங்க மாஃபியாக்கள் நடத்திய கனிம வளக் கொள்ளை, தமிழகத்தில் வைகுண்டராஜன் வகையறாக்களின் தாதுமணற்கொள்ளை வரிசையில் இப்போது ஒரிசாவில் நடந்துள்ள கனிம வளக் கொள்ளையும் அம்பலமாகியுள்ளது.

ஒரிசா கனிமவளக் கொள்ளை
ஒரிசாவின் பைதாரிணி ஆற்றை ஒட்டிய பகுதியில், சட்டவிரோதமாகக் கனிமக் கொள்ளையடிக்கும் டாடா, பிர்லாக்களின் சுரங்க நிறுவனங்கள்

இரும்பு மற்றும் இதர கனிமவளச் சுரங்க முறைகேடுகளைப் பரிசீலிக்க கடந்த நவம்பர் 2010-ல் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஷா தலைமையிலான விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது. கர்நாடகத்திலும் கோவாவிலும் பல்லாயிரம் கோடிகளுக்கு நடந்துள்ள கனிமவளக் கொள்ளை பற்றி ஏற்கெனவே அறிக்கை அளித்துள்ள இக்கமிசன், இப்போது ஒரிசா மாநிலத்தில் கனிமச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதையும், சட்டவிரோதமாகக் கனிமங்கள் கொள்ளையிடப்பட்டதையும், இதனால் அரசுக்கு ரூ.60,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதையும் அண்மையில் வெளிக்கொணர்ந்துள்ளது. இக்கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோரியுள்ளது.

ஒரிசாவிலும் அதற்கு வெளியிலுமுள்ள பெருமுதலாளிகளும், அதிகாரிகளும்,மத்திய – மாநில அரசுகளும், அரசியல்வாதிகளும் கூட்டுச் சேர்ந்து இக்கொள்ளையை நடத்தியுள்ளனர். சுரங்க முதலாளிகளுக்கு மாநில சுரங்கத்துறை அதிகாரிகள் துணையாக நின்று பல கிரிமினல் சதிகளில் ஈடுபட்டுள்ளனர். மொத்த ஆண்டு வரவு-செலவில் அகழ்வுப் பணிகளுக்கு 16 சதவீத அளவுக்கே அரசுத்துறை நிறுவனங்கள் செலவுக் கணக்கு காட்டும் போது, தனியார் நிறுவனங்கள் 62 சதவீத அளவுக்குச் செலவிட்டதாகக் கூறி இலாப விகிதத்தைக் குறைத்து காட்டி மோசடி செய்துள்ளன. நாட்டின் இயற்கை மூலவளங்களை வரைமுறையின்றிக் கொள்ளையிட்டதோடு, இரயில்வேயின் சரக்குக் கட்டணத்தில் முறைகேடுகளையும், சுங்கவரி மோசடிகளையும் செய்துள்ளனர். சுரங்கத் தொழிலாளர்கள் அற்பக் கூலிக்கு சுரண்டப்பட்டு, பழங்குடியினர் தமது வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

முறைகேடாக சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததோடு, கொள்ளை அம்பலமான பின்னரும் மீண்டும் அந்நிறுவனங்களுக்கே ஆட்சியாளர்கள் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஊழலும் கொள்ளையும் நடந்துள்ள போதிலும், நாட்டின் அரசியலமைப்பு முறையானது இக்கொள்ளையர்கள் முன் கைகட்டி நின்றுள்ளது – என அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டும் ஷா கமிசனின் அறிக்கை, தற்போதைய அரசியலமைப்பு முறையானது, ஊழலுக்கும் கொள்ளைக்கும் துணை நிற்பதை அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது. இயற்கை மூலவளங்களையும் பொதுச்சொத்துக்களையும் கொள்ளையடிப்பதுதான் அரசின் எழுதப்படாத பொதுக்கொள்கையாகிவிட்டதை மீண்டும் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது, ஷா கமிசனின் அறிக்கை.

– கதிர்
___________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2014
___________________________________