privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்சாலை சுங்க வரி: தனியார் முதலாளிகளின் வழிப்பறி !

சாலை சுங்க வரி: தனியார் முதலாளிகளின் வழிப்பறி !

-

னியார்மயத்தின் இன்னுமொரு கொடிய கொள்ளைதான் சாலை சுங்கவரி. கத்தியைக் காட்டி வழிப்பறி நடப்பதைப் போலத்தான், நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் இந்த சுங்க வரியைக் காட்டி வழிப்பறி நடக்கிறது. அண்மையில் மகாராஷ்டிராவில் இத்தகைய வழிப்பறி சுங்கச்சாவடிகளை ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தாக்கி சூறையாடியதையடுத்து இந்தப் பகற்கொள்ளை விவகாரம் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளது.

சாலை சுங்கச் சாவடிகள்
மக்களின் குமுறலைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி : நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் சட்டபூர்வ வழிப்பறி நடத்தும் சுங்கச்சாவடிகளைத் தாக்கிச் சூறையாடும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவினர்.

நாட்டிலேயே முதன்முறையாக மகாராஷ்டிராவில்தான் 1995-இல் பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி ஆட்சிக் காலத்தில் சாலைகள் தனியார்மயமாக்கப்பட்டன. தனியார் முதலாளிகள் சாலைகளை அமைத்துப் பராமரித்து, செலவிட்ட தொகையைக் கட் டணங்கள் மூலம் வசூலித்து முடித்த பின்னர், அவற்றை நாட்டுக்கு அர்ப்பணிப்பது எனும் “உருவாக்கு-பயன்படுத்து-ஒப்படை” என்ற இத்திட்டத்தின்படி, மகாராஷ்டிராவில் மொத்தம் 4,685 கி.மீ. தொலைவுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் ரூ. 15,200 கோடி மதிப்புடைய சாலை திட்டங்கள் இப்பகற்கொள்ளைக்காகவே உருவாக்கப்பட்டன.

இருப்பினும், சாலை உருவாக்கத்தில் பங்கேற்ற தனியார் நிறுவனங்கள், சாலைஅமைக்கச்செலவிட்ட தொகை எவ்வளவு, ஒரு நாளைக்கு வசூல் எவ்வளவு, போட்ட முதலீட்டை இலாபத்துடன் திரும்ப எடுப்பதற்கான காலக்கெடு என்ன, எப்போது நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்பதற்கான எந்த வரையறையுமின்றி இச்சுங்கவரி வசூல் கொள்ளை நாடெங்கும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. இது தவிர அரசு சுங்க மையங்களில் ஓட்டுப் பொறுக்கிகளின் பினாமிகளிடம் கட்டண வசூல் குத்தகைக்கு விடப்பட்டு அங்கேயும் இக்கொள்ளை கேள்விமுறையின்றித் தொடர்கிறது.

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தனது ஊழியர்களைக் கொண்டு மும்பையின் 5 மையங்களில் ஜூன்-ஜூலை 2012 -இல் நடத்திய கணக்கீட்டின்படி, ஒப்பந்ததாரர் ரூ. 2,100 கோடி அளவுக்கு முதலீடு செய்துவிட்டு சாலை வரி மூலம் ரூ. 14, 524 கோடி அளவுக்கு 2017-க்குள் சுருட்ட முடியும் என்ற பட்டியலைப் பகிரங்கமாக அறிவித்தது. ஆனால் அரசாங்கம் இப்படி எந்த கணக்கையும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்க முன்வரவில்லை. காம்கோன் – ஜல்னா புறவழிச்சாலை மற்றும் மும்பை – புனே அதிவிரைவு நெடுஞ்சாலை ஆகியவற்றில் காலக்கெடு முடிந்த பின்னரும் வரி வசூலிப்பதையும், சாலை பராமரிப்பில் 60 சதவீத அளவுக்கே நடந்துள்ளதாகவும், அதேசமயம் அந்த ஒப்பந்ததாரர் போட்ட முதலீட்டுக்கும் மேலாக பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டியுள்ளதாகவும் மகாராஷ்டிராவின் பொதுக்கணக்குக் கமிட்டி 2013-இல் அளித்த அறிக்கை குற்றம் சாட்டியது. இதேபோல கிருஷ்ணகிரி – தொப்பூர் நாற்கர சாலைக்கு ரூ. 160 கோடி செலவிடப்பட்டதாகவும், இந்தச் சாலையில் சுங்கவரி மூலம் தனியார் நிறுவனத்துக்குச் சராசரியாக மாதத்துக்கு ரூ. 3 கோடி அளவுக்கு வசூலாவதாகவும், இத்தனியார் சுங்கத்துக்கு 25 ஆண்டுகால ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதென்றால், அடிக்கும் கொள்ளை எவ்வளவு என்றும் தமிழக லாரி உரிமையாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

2009-இல் பெங்களூர் – மங்களூர் நெடுஞ்சாலையில் இப்பகற்கொள்ளையை எதிர்த்து மறியல் போராட்டம் நடந்தது. 2012-இல் யமுனா அதிவிரைவு நெடுஞ்சாலையில் உ.பி. விவசாயிகளின் டிராக்டர் வண்டிக்குக் கூட வரி கேட்பதை எதிர்த்து போராட்டம் நடந்தது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான சுங்கவரி தேவை என்பதை வலியுறுத்தி ஏற்கெனவே லாரி உரிமையாளர்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். ஆனாலும் தனியார்மயக் கொள்ளையே அரசின் கொள்கையாக உள்ளதால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரசு – தனியார் கூட்டு என்பது தனியார் கொள்ளைக்கானதுதான் என்பதையும், ஆளும் கட்சிக்கும் சாலை வரி வசூலிக்கும் ஒப்பந்ததாரர்களுக்குமிடையிலான கூட்டணியையும் இத்தனியார்மயமாக்கம் மீண்டும் மெய்ப்பித்துக் காட்டிவிட்டது. பகற்கொள்ளையே தனியார்மயத்தின் நியதியாகிவிட்ட நிலையில், இனி அதனைப் பறித்தெடுப்பதுதான் மக்களின் நீதியாக இருக்க முடியும்.
___________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2014
___________________________________