privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்டிக்கெட் இல்லையா - இந்திய ரயில்வே கொல்லும் !

டிக்கெட் இல்லையா – இந்திய ரயில்வே கொல்லும் !

-

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர், ராமன் என்கிற கல்லூரி மாணவர். கடந்த புதன்கிழமை 12.03.2014 அன்று இம்மாணவர், மின்சார ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது, பயணச் சீட்டு எடுக்காததால் பரிசோதகரை பார்த்து தப்பிக்க எண்ணி, கால் தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. எனில் இது ஒரு ஒழுக்கமின்மை, மோசடி, மாணவர்களின் விட்டேத்திதனம் குறித்த பிரச்சினையாக அண்ணா ஹசாரேவால் அரசியலைப் பேச நிர்ப்பந்திக்கப்பட்ட மேன்மக்கள் கருதுவார்கள். உண்மை என்ன?

மாணவர்கள் போராட்டம்
படம் : நன்றி தினகரன்

சென்னையை அடுத்துள்ள வேப்பம்பட்டு ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியில்தான் இம்மாணவரான ராமன், இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தான். கூலி வேலை பார்த்து வந்த, அவனுடைய அப்பா ஆறு மாதங்களுக்கு முன்பு தான் இறந்துள்ளார். அவருக்குப் பிறகு அம்மா தான் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். ராமனுக்கு இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர். அப்பா இறந்த பிறகு ராமன், பட்டாபிராமில் உள்ள சித்தப்பா வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளான். தினமும் பட்டாபிராமில் இருந்து மின்சார ரெயிலில் பயணிக்க வேண்டியிருந்ததால் ரயில்வே சீசன் பயண அட்டையை பயன்படுத்தி வந்திருக்கிறான்.

அன்று காலை 8 மணியளவில், திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த மின்சார ரெயிலில் நண்பர்களோடு ஏறியுள்ளான். அந்த வண்டி ஏற்கெனவே பயணிகளால் நிரம்பி வழிந்தபடி வந்ததால், நிற்கக்கூட இடமில்லாமல் இருந்திருக்கிறது. எனவே கூட்டம் குறைவாக இருந்த அடுத்தடுத்த பெட்டிகளை நோக்கி ராமன் நண்பர்களோடு நகர்ந்திருக்கிறான். ஒவ்வொரு நிறுத்தத்திலும் இறங்கி மாறி மாறி இறுதியில் கூட்டம் குறைவாக இருந்த முதல் வகுப்பு பெட்டிக்குச் சென்றிருக்கின்றனர்.

ரயில் திருநின்றவூர் அருகே சென்று கொண்டிருந்திருந்த போது பரிசோதகர் அந்த பெட்டிக்கு வந்திருக்கிறார். ராமனிடம் பயணச்சீட்டை காட்டும்படி கேட்டிருக்கிறார். அவர் மாத சலுகை பயண அட்டையை காண்பித்துள்ளான்.

ஆனால் அந்த சலுகை பயண அட்டை மார்ச் 3-ம் தேதியோடு காலாவதியாகி விட்டிருக்கிறது. பொதுவில் மாணவர்கள் இந்த பயண அட்டையை உரிய தேதிகளில் எடுக்கிறார்கள் என்றாலும் சமயத்தில் ஒரு சில தினங்கள் எடுக்காமலே பயணிப்பது உண்டு. சில பரிசோதகர்களும் மறக்காமல் எடுக்க வேண்டும் என்று எச்சரித்து விட்டுவிடுவார்கள். இங்கே ராமன் அப்படி எடுக்காமல் இருந்ததற்கு மறதி மட்டுமல்ல, வறுமையும் கூடத்தான் காரணம். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாத பரிசோதகர் சட்டம் பேசி அந்த மாணவனை அச்சுறுத்தியுள்ளார். எப்படியாவது பரிசோதகரின் பிடியிலிருந்து தப்ப ராமன் வழி தேடியிருக்கிறான்.

இதற்கிடையே வேப்பம்பட்டு ரெயில் நிலையம் நெருங்கவே ராமன் இறங்கத் தயாராகியிருக்கிறான். பரிசோதகரோ அவனை இறங்கவிடாமல் வாக்குவாதம் செய்து கொண்டு சட்டையை பிடித்து இழுத்திருக்கிறார். ரெயிலில் இருக்கிறோம் என்பதைக் கூட மறந்து, பரிசோதகர் கேட்கப்போகும் அபராத தொகையை எண்ணி பயந்த ராமன், உயிரைப் பற்றி கூட கவலைப்படாமல் ரயில் நிற்பதற்கு முன்னாலேயே இறங்க முயன்றுள்ளான். பரிசோதகர் அவனை தப்ப விடாமல் பிடிக்க முயற்சித்துள்ளார். இருவருக்கும் இடையில் நடந்த இந்த போராட்டத்தில் கண்ணிமைப்பதற்குள் ராமனின் இரண்டு கால்களும் பிளாட்பாரத்தில் சிக்கி நசுங்கியது, தலை பயங்கரமாக தரையில் மோதி தர தரவென இழுத்துக்கொண்டே சென்றிருக்கிறது. பிறகு ரயில் நின்று, அவசர ஊர்தி வந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்குள் ராமன் இறந்து விட்டான்.

ஒரு மாணவன் ஏழை என்பதால் இத்தகைய கொடூர மரணத்திற்கு ஆளாகியுள்ளான். ஓரிரு நூறு ரூபாய்களை மதிப்புடைய பயண சீசன் அட்டை இல்லை என்பதால் இந்திய ரயில்வேயின் விசாரணைக்கு தனது உயிரை அபராதமாக கட்டி விட்டு விடைபெற்றுக் கொண்டான் ராமன்.

மாணவர் சாவு
படம் : நன்றி தினத்தந்தி

ஆனால் இந்த சம்பவம் அவனுடன் பயணித்த பிற மாணவர்களை வெகுண்டெழச் செய்திருக்கிறது. மற்ற பெட்டிகளிலும், கல்லூரியிலும் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவித்து, அனைவரையும் ரெயில் நிலையத்தில் அணிதிரட்டினர். பரிசோதகர் ராமமூர்த்தியை கைது செய்யக்கோரி அந்த வழித்தடத்தில் சென்ற அனைத்து ரெயில்களையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொந்தளித்துக் குமுறிக் கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களால் ரெயில் நிலையம் கலவரப் பகுதியானது. உடனடியாக போலீஸ் படை வந்தது. அதிகாரிகள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பரிசோதகரை கைது செய்யாத வரை மறியலை கைவிட முடியாது என்று மாணவர்கள் உறுதியாக நின்றனர்.

நடந்து கொண்டிருந்த சமாதான பேச்சுவார்த்தை மாணவர்களுக்கும் போலீசுக்கும் இடையிலான வாக்குவாதமாக மாறியது. பிறகு போலீசு மாணவர்களை மிரட்டியதால், லத்திக்கம்பை எடுத்து காட்டுமிராண்டித்தனமாக விளாசித் தள்ளியது. இதனால் கொந்தளித்த மாணவர்கள் போலீசு மீது சிறு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போலீசு நடத்திய தடியடி தாக்குதலில் மாணவர்கள் எல்லா திசைகளிலும் சிதறி ஓடினர். பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த வழக்கை ரெயில்வே போலீஸ் விசாரித்து வருகிறது.

இந்த சம்பவத்தை பற்றி செய்தி வெளியிட்டுள்ள பத்திரிகைகளில் ஒரு சில பத்திரிகைகள், இந்த சாவுக்கு காரணம் சட்டையை பிடித்து இழுத்த பரிசோதகர் தான் என்றும், வேறு சில பத்திரிகைகள் ஓடும் ரெயிலிலிருந்து இறங்கிய மாணவன் தான் என்றும் எழுதியுள்ளன. இப்படி இரண்டு விதத்திலும் நடந்திருந்தாலும் இந்த மரணம் தரும் பாடம் என்ன? அற்பமான பயணச்சீட்டு விசயத்தில் ஒரு உயிர் பறிக்கப் பட்டிருருக்கிறது. ரயிலில் உரிய பயணச் சீட்டு எடுக்க வில்லை என்றால் அதற்கு உயிர்தான் அபராதமா, என்று இதன் தீவிரத்தன்மையை நாம் பரிசீலிக்க வேண்டும்.

பொதுவில் மாணவர்களை அதிலும் ஏழை மாணவர்களை பொறுக்கிகளாக கருதுபவர்கள் உடனடியாக மாணவனுக்கு எதிராக விரலை நீட்டி விடுவார்கள். அவனுடைய மரணத்துக்கு அவனே தான் காரணம் என்று இந்த சம்பவத்திற்கு தீர்ப்பை எழுதிவிட்டு அடுத்த வேலைக்கு சென்று விடுவார்கள். பச்சமுத்து கல்லூரியில் பல இலட்சம் கொடுத்து சேர்ந்துவிட்டு, பல்சார் பைக்கில், ஐ போனுடன் சுற்றும் மாணவர்கள் வாழும் காலத்தில்தான், ஒரு பயண சீட்டுக்கு கூட வழியில்லாத ராமன்களும் வாழ்கிறார்கள்.

ராமனது வறுமைக்கு காரணம் அவனது அப்பா உயிருடன் இல்லை. அம்மாவோ மூன்று குழந்தைகளுக்கும் வாழ்வளிப்பதற்க்காக அன்றாடம் கூலி வேலை செய்கிறார். இத்தகைய சூழலில் இருக்கும் ராமன், கட்டணம் எடுக்கவில்லை என்பதை ஒழுக்கமீறலாகவும், கொழுப்பு திமிராகவும் புரிந்து கொள்வதற்கு இதயத்தில் இரக்கம் துளியும் இல்லாதவர்களால்தான் சாத்தியம்.

டிக்கெட் எடுக்கவில்லை என்பதற்காக நம்மில் யாராவது ஓடும் ரயிலிலிருந்து குதித்து விடுவோமா? ராமன் என்கிற அந்த மாணவனின் இடத்தில் பல ஆயிரம் சம்பளம் வாங்கும் வேலையில் இருக்கும் வேறொரு ராமனை வைப்போம், அவர் இப்படி ‘முட்டாள்தனமாக’ குதித்து செத்து போயிருப்பாரா? இல்லை, அது அப்படி நடந்திருக்காது. அவர் அபராதத்தை கட்டிவிட்டு இறங்கிப் போயிருப்பார். அந்த தொகையை கட்ட முடியாதது தான் இந்த ஏழை ராமனின் பிரச்சினை. அப்படி கட்ட முடியுமென்ற வசதி இருந்திருந்தால் அவன் சீசன் டிக்கெட்டே எடுத்திருப்பான். வங்கிகளோ இல்லை வட்டிக் கும்பல்களோ வாக்குத் தவறாத ஏழைகளின் இயல்பு காரணமாகத்தான் தமது கடன்களை வட்டியுடன் வசூலிக்கின்றன. நாமம் போடுபவர்கள் முதலாளிகள்தான்.

பரிசோதகர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். அவர்களும் இந்த சமூகத்திலிருந்துதான் உருவாகி ரயில்வேயில் பணியாற்றுகிறார்கள். அப்படிப்பட்டோருக்கு திருவள்ளூர் மார்க்கத்தில் வரும் மாணவர்களின் பின்னணி, பிரச்சினை தெரியாமல் இருக்காது. எனினும் அவர் இப்படி கொலை வெறியுடன் ஏன் நடந்து கொண்டார்?

சாதாரண ரயில்
ஆடம்பர ரயில்களுக்கு உள்ள வசதிகள் அடிப்படை மக்கள் பயணிக்கும் சாதாரண ரயில்களுக்கு கிடையாது.

இன்றும் வட இந்தியாவில் சாதாரண மக்கள் ரயிலில் டிக்கெட் எடுப்பதில்லை. இதனாலொன்றும் ரயில்வேக்கு நட்டமோ, இழப்போ ஏற்படுவதில்லை. தமிழகத்திலும் அரசியல் மாநாட்டிற்கு மக்கள் டிக்கெட் எடுக்காமல் ரயில்களை பயன்படுத்தும் வழக்கம் புரட்சிகர அமைப்புகளிடம் இன்றும் உண்டு. முதலாளிகளின் காசில் வயிறு வளர்க்கும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் ஆம்னி பேருந்துகளையும், ஆடம்பர கார்கள், வேன்களையும் மாநாடுகளுக்காக, வாடகைக்கு எடுக்கும் போது புரட்சிகர அமைப்புகள் தொழிலாளி வர்க்கம் உருவாக்கிய ரயில்வேயை உரிமையுடன் பயன் படுத்திக் கொள்கிறது.

ஆனால் தனியார் மய காலத்தில் பொதுத்துறைகளும் சேவை நோக்கத்தை விடுத்து இலாபமொன்றே குறியாக செயல்பட வேண்டும் என்ற அநீதிக்கு இந்திய ரயில்வேயும் விலக்கு இல்லை. ஏற்கனவே இந்திய ரயில்வேயின் பல்வேறு சேவைகள் தனியார் மயத்திற்கு பகுதி பகுதியாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆடம்பர ரயில்களுக்கு உள்ள வசதிகள் அடிப்படை மக்கள் பயணிக்கும் சாதாரண ரயில்களுக்கு கிடையாது. அது போல ரயில்வே பரிசோதகர்களின் பணியிலும் தற்போது வசூலிக்கும் அபராதத் தொகைக்கு இலக்கு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அதன்படி சில இலட்சங்களையாவது மாதந்தோறும் வசூலிக்க வேண்டும். இதனாலேயே பரிசோதகர்கள் கந்து வட்டி ரவுடிகள் போல நடந்து கொள்கிறார்கள்.

மின்சார ரயில்களில் கூடை தூக்கி பிழைக்கும் வியாபாரிகளெல்லாம் இவர்களுக்கு மாதந்தோறும் தட்சணை போல அபராதத்தை கட்ட வேண்டும். இது போக பயணச்சீட்டு எடுக்காதவர்கள் – அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் – இவர்களது இலக்கு. இத்தகைய சூழலில்தான் பரிசோதகருக்கு பயந்து ராமன் அநியாயமாக பலியாக நேர்ந்திருக்கிறது.

அந்த ஏழைத் தாய்க்கு இருந்த ஒரே நம்பிக்கை அவன் மட்டும் தான். இப்போது அந்த மகனும் இல்லை. இனி இரண்டு பெண்களையும் அவர் கரையேற்ற வேண்டும், அவை எல்லாம் இனி அந்த ஏழையின் பாடு. தேர்தல்களில் பிசியாக இருக்கும் கட்சிகள் எதற்கும் ராமனது மரணம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றல்ல.

மக்கள் தாலியை அறுப்பதற்காகவே எம்.எல்.ஏ, எம்.பி.களாகும் நபர்களுக்கு ரயிலில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் அரசு, மாணவர்களை அவ்வாறு அனுமதிக்க மறுப்பது ஏன்? அமைச்சர்கள் அனைவரும் வெளிநாட்டு பயணம், விமான பயணம் என பல நூறு கோடிகளை விழுங்கும் போது இந்தியாவில் மாணவர்களுக்கென்று இலவச ரயில் பாஸ் வழங்கினால் குடியா முழுகிப் போகும்?

பரிசோதகர் ராமமூர்த்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும். அது மற்ற பரிசோதகர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். இந்த பரிசோதகரை அம்பு போல ஏவிவிட்ட இந்திய ரயில்வே, மாணவனது குடும்பத்திற்கு நட்ட ஈடு வழங்க வேண்டும். இந்திய ரயில்வேயின் உயர் அதிகாரிகளும் இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளோடு, மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ் வழங்குமாறு தெற்கு ரயில்வேயை நிர்பந்தித்து, மாணவர்கள் போர்க்குணத்துடன் போராட வேண்டும். ராமனது மரணம் இந்த மாற்றத்தை கொண்டு வருமானால் எதிர்காலத்தில் பல ஏழை மாணவர்கள் இப்படி கொல்லப்படுவதிலிருந்து தடுக்க முடியும்.

–    வினவு செய்தியாளர்.