privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்எங்க ஊரு காதலுக்கு சாந்தியக்காதான் தலப்புதாரி

எங்க ஊரு காதலுக்கு சாந்தியக்காதான் தலப்புதாரி

-

ன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அரையாண்டு தேர்வுல, மூணு பாடத்துல முதல் மார்க்குன்னு வாத்தியார் சொன்னதும் கூடவே “அடுத்தவருசம்  பொதுத் தேர்வுலயும் பள்ளியிலேயே முதல் மார்க் எடுப்பே”ன்னு பாராட்டுனதும் எனக்கு சந்தோசத்துல தலகால் புரியல.

கிராமத்துப் பெண்
ஓவியம் : நன்றி S.Ilayaraja

“சனி ஞாயிறுதானே இன்னைக்கி மட்டும் மாட்ட ஓட்டிப் போய் மேச்சுகிட்டு வா, நான் வயலுக்கு மருந்து வாங்க டவுனு வரைக்கும் போய்ட்டு வாரேன்னு” அப்பா சொன்னாலும், “ரேசனுக்கு போ, அப்பாவுக்கு கொல்லையில சோறு கொண்டுட்டு போ, அம்மாச்சி வீட்டுக்கு இதக் கொண்டக் குடு, அதக் கொண்டக் குடு”ன்னு அம்மா சொன்னாலும் எதயும் காதுல வாங்கக் கூடாது. கவனம் பூராவும் பத்தாவதுல முதல் மார்க் வாங்கறதுலதான் இருக்கணும்னு, வீடு வர்ர வரைக்கும் படிப்ப பத்துன சிந்தனையோடயே வந்து சேந்தேன்.

கிராமத்துல பொண்ணா பொறந்தவுளுக்கு படிப்பும், அது தர்ற சந்தோஷமும் எப்படி இருக்கும்ணு சொல்லி புரிய வைக்கிறது கஷ்டம். அடிமைங்களுக்கு விடுதலை இல்லேன்னாலும், அது என்னண்ணு புரிஞ்சா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க, அது மாதிரிதான் நானும்.

வெளஞ்ச வெள்ளாம வீடு வராம வட்டிக்காரனுக்கு படியளந்ததுப் போல, இடிஞ்சுப் போயி உக்காந்திருந்த அம்மாவ பாத்தா வழக்கத்த விட அப்பா சண்ட பெரிசா போட்ருப்பாரு போலத் தெரிஞ்சது. பள்ளிக்கூடத்துல வாத்தியார் பாராட்டுனத சொல்லி நெலமையா சீராக்கிரலாம்னு “அப்பா நான் எத்தனாவது மார்க்குன்னு பாரு”ன்னு பேப்பர எடுத்து ஆசையா கொடுத்தேன்.

கையில பேப்பர வாங்குன வேகத்துல சுக்கு நூறா கிழிச்சிட்டு “நாளையிலேர்ந்து பள்ளிக்கூடம் போக்கூடாது, படிப்பும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் வீட்டுல உள்ள வேலையப் பாரு”ன்னு சொல்லிட்டு பட்டுன்னு எழுந்து போய்ட்டே இருந்தாரு. வாத்தியாரு பாராட்டு, முதல் மார்க்கு, பொதுத் தேர்வுன்னு மனசுல புதுவெள்ளமா வந்த படிப்ப பத்துன உற்சாகம், திடீர்னு வடிஞ்சு வறண்டுப் போய் நின்னுட்டேன்.

அம்மா காரணம் சொல்ல ஆரம்பித்தாள். “படிப்பு படிப்புன்னு மினிக்கிக்கிட்டு போனாளே வட கொண்டார் வீட்டு சாந்தி, சொல்லவே நாக்கூசுது – தேவூரு சின்னசாதி பயலோட ஓடிட்டாளாம். நம்ம குடும்பத்துல நடந்தா நாண்டுகிட்டுதான் சாவனும். அப்பா சொல்றத கேட்டு அடக்கமா நடந்துக்க”ன்னு அன்னைக்கே படிப்ப கழுவி கவுத்துட்டாங்க.

பசியோட இருக்குறவனுக்கு அன்னத்த காட்டி அடிச்சு விறட்டுனா எப்படி இருக்கும்ங்கிறதை அன்னைக்கு புரிஞ்சுக்கிட்டேன்.

இது நடந்து 21 வருசமாச்சு ஒரு தடவக்கூட சாந்தியக்காவ பாத்தது கெடையாது. காலப்போக்குல குடும்பம் கொழந்தன்னு என்னோட வாழ்க்கை நகரத்துக்கு மாறிப் போச்சு. ஊருக்குப் போகும் போது சாந்தியக்கா எப்படிருக்கான்னு அவங்க கிராமத்த சேந்தவங்கக்கிட்ட விசாரிப்பேன். ஒருத்தரும் சரியா சொல்ல மாட்டாங்க. ஆனா அவள நெனைக்காத நாளே கெடையாது.

வாழ்க்கை பிரச்சனைங்களோட வாழுற பொண்ணுங்களுக்கு, வேலைக்கு போற, படிச்ச பொண்ணுங்களப் பாத்தா ஒரு ஏக்கம் வரும். அவங்களுக்கு வேற பிரச்சினைங்க இருக்கிறது தெரிஞ்சாலும், நாம எதையோ இழந்துட்டமோண்ணு வலிக்கும். அப்படி படிப்பு போச்சேங்கற வருத்தம் வரும் போது கூடவே சாந்தியக்கா நெனப்பும் வரும். பின்னாடி வெவரம் வந்த பிறவுதான் நம்ம படிப்பு போனாலும், அக்கா செஞ்சது நம்ம சுத்துப்பட்டு ஊருகள்ல எந்த பொண்ணும் நினைச்சுப் பாக்காததுன்னு தெரிஞ்சது.

மகளிர் தினத்துக்கு நானும் ஒரு பெண்ணப் பத்தின பதிவு எழுதனுன்னு நெனச்சப்ப சாந்தியக்கா ஞாபகம் தான் வந்தது. எப்படியாவது அவளோட நம்பர் வாங்கி பேசி அத மகளிர் தின கட்டுரையா எழுதனுங்கற முடிவோட ஒரு மாசமா பலருட்ட துப்பு கேட்டு நம்பரை வாங்கி சாந்தியக்காட்ட பேசினேன்.

இத்தன வருசம் கழிச்சு பேசுரோமே என்ன நெனப்பாளோங்கற தயக்கத்தோட “சாந்தியக்கா, நான்தான் பேசுரேன், ஞாபகம் இருக்காக்கா”ன்னு  ஆரம்பிச்சேன். பல வருஷத்துக்கு முந்தி பாத்த அதே சாந்தியக்காவோட அன்பான பேச்சு மாறவே இல்ல.

“என்னடா அப்புடி கேட்டுபுட்ட நம்ம புள்ளடா நீ, எத்தன வருசமாச்சு சின்னப்புள்ளையில பாத்தது. நல்லாருக்கியா, அம்மா அப்பாவெல்லாம் நல்லாருக்காங்களா! தம்பி தங்கச்சியெல்லாம் என்ன செய்றாங்க ஒனக்கு கல்யாணம் ஆயி ரொம்ப வருசமா பிள்ள இல்லன்னு கேள்விப் பட்டேன் கொழந்த இருக்காடா, ஊருக்கெல்லாம் வருவியா, இத்தன வருசம் கடந்து நீ பேசற சந்தோசத்துல என்ன கேக்குறது ஏது கேக்குறதுன்னே தெரியல போ…” சாந்தியக்கா மூச்சுவிடாம கேட்டக் கேள்வியில தொண்டக் கதிர் நெல்லு வெளியே தள்ளுற மாதிரி பாசமும் ஏக்கமும் மடை தொறந்து கொட்டுச்சு.

ரொம்ப நாளைக்கு பெறவு பேசுறதால அக்காவ நீ வான்னு பேசவா, இல்லை நீங்க வாங்கன்னு பேசறதான்னு பேச்சுல தடுமாற்றம் இருந்திச்சு. ஆனா அக்காவோட நெருக்கமான பேச்சு பழைய நீ வாவையே கொஞ்ச நேரத்துல கொண்டு வந்துருச்சு.

“நான் சந்தோசமா இருக்கேங்கா, உன்னோட பிள்ளைங்கள்ளாம் என்ன பண்ணுறாங்க வீட்டுக்காரரு பள்ளிக்கூடத்துல வேலப் பாத்தாரு, பெரியாரு கட்சியில இருந்தாரு, இப்ப என்ன செய்றாரு, எப்புடி இருக்காரு?”

“பொண்ணு வெளியூருல காலேஜு படிக்கிறா, பய ஊருக்குல்லேயே பதினொன்னாவது படிக்கிறான். அவருக்கு பள்ளிக்கூடம், டியூஷன்னு வேலையே சரியாப் போவுது. முன்னமாரி கட்சியில இல்ல, ஆனா மாநாடு பொதுக்கூட்டம்னா போவாரு. குடும்பம், பிள்ளைங்க படிப்புன்னு வேலதான் கழுத்து வரைக்கும் இருக்கு, அப்பறம் எங்க கட்சி வேல செய்றது”.

“அந்த ஊருல உள்ளவங்க உன்ன எப்படி பாப்பாங்க, எப்படிக்கா நடத்துவாங்க?”

“தங்க தட்டுல வச்சு தாங்குவாங்கடி. ஒரு வேல சொன்னா ஓடி வந்து கேப்பாங்க. அதெல்லாம் மரியாதையா நடத்துவாங்க. எந்த கொறையும் இல்லடா. ஆனாலும் மத்தமத்த பிள்ளைங்கள்ளாம் தாத்தா, பாட்டி, பெரியம்மா, சின்னம்மான்னு சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லாம் போகயில நம்ம பிள்ள மட்டும் அனாதையப் போல வீட்லேயே அடஞ்சு கெடக்குதுங்களேன்னு நெனைக்கிம் போது கவலையா இருக்கும்டா. ஆனா பிள்ளைங்க அதையெல்லாம் புரிஞ்சுகிட்டு எனக்கு தைரியம் சொல்லும்”

“உன்னோட அம்மா உயிரோட இருந்தப்ப ஒரு தடவ கூட வந்து உன்னய பாக்கலையாக்கா”

“ஏதாவது செஞ்சுறுவாங்களோன்னு பயந்துகிட்டுதான் கல்யாணம் ஆயி, நாலு மாசம் வர இருக்குற எடம் தெரியாம இருந்தோம். வேற யாராச்சும் இருந்துருந்தா வெட்டிருப்பாய்ங்க. அவரு கட்சி அரசியல்னு இருக்காரு, அவர சுத்தி இவ்வளவு கூட்டம் இருக்கு, நெருங்க முடியாதுன்னு ஒதுங்கி இருக்காய்ங்கன்னு தெரிஞ்சப் பெறகுதான் இந்த ஊருக்குள்ள வந்தோம்.”

இதப் பேசுறப்போ சாந்தியக்கா பழைய காலத்துக்கு போய்ட்ட மாறி தெரிஞ்சிது.

“பாப்பா வயித்துல மூனு மாசமா இருந்துச்சு. எங்க அம்மா வந்து கருவ கலைச்சுரலாம், வீட்டுல கோச்சுகிட்டு போனதா ஊருல சொல்லிறலாம், மாமா கட்டிக்கிறேங்குறான் வந்துருன்னு பத்து தடவைக்கி மேல வந்து கூப்புட்டாங்க. அந்த பேச்ச பேசிகிட்டு இந்த வாசப்படி மிதிக்காதேன்னு திட்டி அனுப்பிச்சேன். அப்புறம் பிள்ளைங்கள்ளாம் பொறந்த பிறகு உங்களையெல்லாம் பாக்கணும் போல இருக்கு, ஆனா ஊருல அசிங்கமா பேசுவாங்களோன்னு பயந்துகிட்டே ஏழட்டுத்தடவ ராத்திரில வந்துட்டு பாத்துட்டு போனாங்க. அப்பறொம் வர்றதே கெடையாது.”

“ஒங்க அம்மா அப்பா சாவுக்குக்கூட நீ வரலையாமே ஏங்கா?”

“இத்தன வருசத்துல ஒரு தடவக் கூட நம்ம ஊருக்கு நான் வந்தது கெடையாது. அதுக்கு காரணம் பயம் கெடையாது. எதுக்கு நம்பளால ஒரு பிரச்சனன்னுதான். அப்பா செத்தது நாலு நாளைக்கப்பறந்தான் தெரியும், அம்மா செத்தது ரெண்டு மாசம் கழிச்சுதான் தெரியும். செத்தது தெரிஞ்சு வந்துறப் போறேன்னு அவசர அவசரமா அடக்கம் பன்னியிருக்கானுவொ. எங்க சித்தப்பங்காறன் வீட்டுலதான், சொத்து மொத்தத்தையும் அடைச்சு பட சாத்திக்கிற (படல்-முள்வேலி) எண்ணத்துல எங்க குடும்பத்த சின்னாபின்னமாக்கி சீறழிச்சுப்புட்டானுவொ.”

“பங்காளிப் பயல்ல பாதிப் பய பானைய தொடாம பருப்பள்ளுற பயலுக, போறெடம் வாரெடத்துல ஏம்புருசன்கிட்ட பேசுவானுவொ. ஆனா சாவ சொல்ல ஒருத்தனுக்கும் மனசில்ல. பணம் பதவின்னு இருக்கோமே எக்குத்தப்பா எங்கெனயாவது மாட்டிகிட்டா கட்சிக்காரன், வாவுவழி தெரிஞ்சு காப்பாத்துவான்னு கணக்குப்பண்ணி பாத்த எடத்துல பேசிவய்க்கிறாய்ங்க வேறோன்னுமில்ல.”

“உங்க தங்கச்சிய கட்டிக் குடுத்து வயுத்துல புள்ள இருக்கும் போதே ஒரு வருசத்துலேயே வீட்டுக்காரு எறந்துட்டாரு பாவம். ஊருல நீதான் காரணம்னு சொல்லுவாங்க, இப்ப அவ எப்புடி இருக்கான்னு தெரியுமா, நீ பாத்தியாக்கா?”

“எல்லாம் எங்க சித்தப்பந்தான் பண்ணுனது. நானு வீட்ட விட்டு ஓடிட்டா நல்ல மாப்புளையே கெடைக்காதா என்ன? சட்டிய பானையாக்குறதுதான் அவன் எண்ணம். ரெண்டு வேலி நெலத்த நாலு வேலியா ஒண்ணு சேத்துக்கிட்டான். சொத்த அமுக்கிகிட்டு செய்யறத செய்யலாம்ன்னு அவசர அவசரமா ஒரு சீக்காளி மாப்பிளைக்கி கட்டி குடுத்து என் தங்கச்சி வாழ்க்கைய கெடுத்துட்டானுவொ. இன்னைக்கி பெத்த பிள்ள எங்கருக்குன்னு சொல்லத் தெரியாம கூட பைத்தியமா அலையிறா. ஊருலேருந்து கந்த துணிய போட்டுகிட்டு வாரா, பாக்க சகிக்கல. இதுக்கெல்லாம் காரணம் அவைங்கெதான். எங்க வதையெல்லாம் அவங்கெளும் அணுபவிச்சு சாவுவாய்ங்கெ”

“சொத்துக்காக சாதிய காரணம் காட்டி உங்கள ஒதுக்கி வச்சுருக்காணுவொ, சுயநலத்துக்காக மறைமுகமா ஒறவு வச்சுக்குறானுவொ, தங்கச்சிக்கு 16 வயசுல உருப்படாத கல்யாணத்த பண்ணி வச்சு ஒரு வாழ்க்கைய அழிச்சிருக்கானுவொ, எல்லாம் புரிஞ்சுருந்தும் எதுக்கு ஒதுங்கி வாழ்ற, நீ எதுத்து கேக்க வேண்டியதுதானே?”

“என்னோட கையெழுத்து இல்லாம சொத்து வாங்கிருக்கானுவொ. இன்னைக்கி நெனச்சாலும் கேஸு போட்டு சொத்தெடுக்கலாம். ஆனா சொத்துக்காதான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டாருன்னு அவரையும் ஊரு நெனைக்கும். சொத்துக்காக எங்க குடும்பத்தையே அட்ரஸ் இல்லாம பண்ணிட்டாய்ங்க. அடுத்தவங்க குடிய கெடுத்து அவன் மட்டும் வாழவா போறான்?”

“அதுவும் தவிர நானு ஒழிஞ்சல்லாம் வாழளடா. நம்ப ஊர்லேர்ந்து பழகுனவங்க, படிச்சவங்கன்னு நெறையப் பேரு கல்யாணப் பத்திரிக்கை குடுப்பாங்க. அவரு மட்டும் போவாரு. படிப்பு பதவின்னு அவர மரியாதையா நடத்துவாங்க. அது ஒரு மாதிரி போயிரும். நான் போனா ஒருத்தரில்ல ஒருத்தரு சுருக்குன்னு ஒரு வார்த்த சொல்லிட்டா என்ன செய்றது? பின்னாடி புள்ளைங்க மனசொடிஞ்சு போயிரும். அத தாங்கிக்க முடியாது. அதுங்களுக்கு ஒரு பாதிப்பு வரக்கூடாதுன்னு தான் எம்.பி.சி.-ன்னு போடாம பி.சி.-ன்னு பதிவு பண்ணி சர்ட்டிபிகெட் வாங்கிருக்கேன். பிள்ளைங்கதானடா முக்கியம்.”

“சாதிய மீறி, தாலிய மறுத்து தைரியமா கல்யாணம் பண்ணீங்க. எதுக்கு சாதிய அடையாளப் படுத்தி சான்றிதழ் வாங்குனிங்க? இதுக்கு ஒங்க வீட்டுக்காரரு ஒன்னும் சொல்லலையா?”

“அவரு என்னத்த சொல்றது. சாதி போடாம சர்ட்டிபிகேட் வாங்க முடியாது, அப்படி வாங்குனா செல்லாதுன்னு சொல்லிகிட்டாங்க, வெவரம் தெரியலையடா!” என்று எதார்த்தமான மனநிலையோடு பேசினாள்.

“சரிக்கா, நீ போனப்புறம்தான் என் செட்டு பொண்ணுங்க படிப்பை நிறுத்திட்டாங்களே, அது தெரியுமாக்கா?”

“ஆமாண்டி, நான் போவலேன்னாலும் உன்ன என்ன கலெக்டருக்கா படிக்க வைக்க போறாய்ங்கெ? சமைஞ்சு வீட்டுல உக்காந்த எந்த பொண்ணுடி பள்ளிக் கூடம் போகுது? எல்லாம் நம்ம காலத்தோட ஒழியட்டும், உன் பொண்ணையும், என் பொண்ணையும் தலைய அடகு வைச்சாவது படிக்க வைப்போம்”

“நீங்க வீட்டவிட்டு போனதை பற்றி ஊரில் பலமாதிரி பேசுனாங்க. அன்னைக்கி இரவு என்னதாக்கா நடந்தது எப்புடி போனிங்க?

“ஏய்… யப்பா, எப்ப நடந்தத இப்ப கேக்குற. வந்த வழித்தடமே புல்லு மண்டி போச்சுப் போ… வேறெதாச்சும் பேசுவோம்டா.” என்றாள், இனிமே பேசி என்னாகப் போகுது என்ற ஆயசத்துடன்.

“எம் பொண்ணுகிட்ட உங்க கதைய முழுமையா சொல்லி தைரியமா வளக்கணும்க்கா, சொல்லுங்க”

“ஒம் பொண்ணக் கூட்டிக்கிட்டு எங்க ஊருக்கு வா, நான்தாண்டி அந்த பெரியம்மா, இதுதாண்டி என்னோட கதையின்னு நேர்லேயே சொல்றேன்” என்று வெக்கப்பட்டு சிரித்தாள்.

_______________________

இதுவரை சாந்தியக்காவிடம் பேசியதுல சொந்தபந்தம்னு இல்லாம போச்சேன்னு வருந்தப்பட்டாளே தவிர ஒரு இடத்துல கூட மனம் தளர்ந்து போய் புலம்பல. பாத்துப் பழகுற தூரத்துல ‘சின்ன’ சாதியைச் சேர்ந்த ஒருவர கல்யாணம் பண்ணிகிட்டு, சொந்த பந்தங்கள பாக்க முடியாம பழகமுடியாம, அம்மா அப்பாவ இழந்து, சொத்த பறிகொடுத்து, கண்ணுக்கு நேரா தங்கச்சி வாழ்க்க நாசமா போயி எத்தன நெருக்கடி!

சரி, ஊரை விட்டு போய் சாதி மாறி கல்யாணம் பண்ணி ரெண்டு புள்ளைங்ளோட சாந்தியாக்கா இருந்தாலும் அவளோட சாதிய மட்டும் இன்னும் விட முடியல. படிப்பு, வேலைக்கு மட்டுமில்லாம ஊருல ஒரு கவுரவத்தோட வாழணும்னாலே, சாதி கட்டாயம் வேணும்னு எல்லாரும் பேசுனா சாந்தியக்கா தனியா நின்னு என்ன செய்ய முடியும்? ஆனா சாதிப் பேரு எதுன்னு முடிவு பண்ற நேரம் வந்த போது அக்கா தன்னோட ‘பெரிய’ சாதியத்தான் தேர்ந்தெடுத்தாள். இதுலயும் அவளோட பெரியார் கட்சி வீட்டுக்காரருக்கும் பெரிய குறையில்லைங்கிறது அநியாயம்.

இதுக்கு அவர மட்டும் கொறை சொல்லி பிரயோஜனமில்ல. காலேஜ் நடத்துறதலயும், சீட்டு கம்பனி நிர்வகிக்கிறதலயும் மேதைங்களாயிட்ட பிறகு சாதி மறுப்பு கல்யாணம்,போராட்டமெல்லாம் அவரோட கட்சிகிட்ட எதிர்பார்க்கிறது தப்புதான். ஆனாலும் இவங்க என்ன முடிவு எடுத்தாலும் ஊர் உலகம் இவங்கள சாதி மாறி கல்யாணம் பண்ணுனாங்கன்னு எளக்காரமத்தான் பாக்குது. அதுதான் இன்னைக்கும் கூட அக்கா தன்னோட சொந்த ஊருக்கு போக்குவரத்து இல்லாம இருக்கா. என்ன இருந்தாலும் ஒரு கிராமத்துல இது மாதிரி ஊர வீட்டு போய் சாதி மாறி கல்யாணம் பண்ணி வாழ்றது சாதாரண விசயம் இல்ல.

எங்க ஊருல வயசுக்கு வந்த பொண்ணுங்களுக்கு படிப்புங்கறது அரிதா இருந்த காலம்தான் அது. வயசுக்கு வந்த பொண்ணு அடுத்த வீடு போகக் கூடாது. மாமா, மச்சான்னு மொறக்கார ஆம்பள வந்தா எதுக்க வந்து நின்னு பேசக் கூடாது, மறைஞ்சுதாங் இருக்கணும். வயசாளியோ சீக்காளியோ வீட்ல பாத்தவன கண்ண மூடிகிட்டு கட்டிக்கணும். காதல் கீதல்னு வந்து நின்னு, சாதி சனத்துக்கு மத்தில மானத்த வாங்கிருவாங்கன்னு பொண்ணுங்கள வளக்குற மொறையே இறுக்கமா இருக்கும்.

இப்படி கட்டுப்பெட்டியான ஒரு ஊருக்குள்ள இருந்து ‘கீழ்’ சாதிய சேந்த ஒருத்தரோட, வீட்ட விட்டு ஓடிப்போயி காதல் கல்யாணம் பண்ணி கடைசி வரைக்கும் வாழ்ந்து காண்பிச்ச சாந்தியக்கா துணிச்சல்காரிதான்.

எங்கூர் பக்கத்துல சாதி பிரச்சனைக்கு அருவா தூக்கமாட்டாங்க, கலவரம் நடக்காது. ஆனா ஒரு பொண்ணு, காதல் கல்யாணமுன்னு சாதி மாறி போச்சுன்னா எப்படியாவது திரும்ப கூட்டிட்டு வர முயற்சி செய்வாங்க. அப்படி கூட்டிட்டு வந்தா அந்த பொண்ணுக்கு வெளிய தெரியாம மருந்த குடுத்து கொன்னுபுட்டு கமுக்கமா கவுரவத்த காப்பாத்திடுவானுங்க. இல்லன்னா ஊருல ஒருத்தனும் மதிக்காம, சின்னாபின்னப்பட்டு சாந்தியக்கா குடும்பம் போல சீரழிஞ்சு போணும், இதுதான் நீதி.

அப்பேற்பட்ட ஊருல அந்த நீதிய முத முதல்ல தூக்கி எரிஞ்சவ சாந்தியக்கா தான். நாம் வீட்ட விட்டு போனா என்ன நடக்கும்னு தெரிஞ்சுருந்தும் எதுக்கும் கலங்காத தைரியம் அவளுக்கு. அந்த வகையில காதலுக்காக சாதிக் கட்டுப்பாட்ட மீறுன சாந்தியக்காதான் எங்களுக்கு தலப்புதாரி (முதல் ஆள்).

–    சரசம்மா
( உண்மைச் சம்பவம் – பெயர்கள் கற்பனை )