privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்நெய்வேலி : மத்திய படையை விரட்டு - தொழிலாளிக்கு துப்பாக்கி கொடு !

நெய்வேலி : மத்திய படையை விரட்டு – தொழிலாளிக்கு துப்பாக்கி கொடு !

-

னித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர்கள் நெய்வேலி மருத்துவமனைக்கு சென்று காயம்பட்ட தொழிலாளிகளை சந்தித்து பேசியபோது தெரிய வந்த தகவல்களை இங்கே தருகிறோம்.

nlc murder“தொழிலாளி ராஜ்குமார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நீதி கேட்டு போராடிய தொழிலாளர்கள் மீது மத்திய படை கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதனால் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 15 பேர் சென்னைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். காயமடைந்த சொசைட்டி தொழிலாளிகள், என்.எல்.சி.பொது மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டால் வேலை நிரந்தரமாவதில் என்.எல்.சி நிர்வாகம் பிரச்சனை செய்யும் என பெரும்பான்மையான தொழிலாளர்கள் சொந்த செலவில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதனால் காயம்பட்டவர்களின் எண்ணிக்கை 40 பேர் என குறைவாக காட்டப்படுகிறது. அடிபட்டதற்கு மருத்துவம் பார்ப்பதற்கு கூட இங்கு தொழிலாளருக்கு உரிமை இல்லை. மீறி பார்த்தால் முத்திரை குத்தி ஓரம் கட்டிவிடுவார்கள். இதுதான் நெய்வேலியின் உள்ள ஜனநாயகம்.

இரண்டாவது சுரங்கத்தில் பணி முடிந்து கேட்டிற்கு வெளியே வந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மத்திய படை கல்வீசி தாக்கியது. பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. எதற்காக நம்மை தாக்குகிறார்கள் என தெரியாமல் தொழிலாளர்கள் சிதறி ஓடினர்.

மத்திய பாதுகாப்பு படையினரில் மதிய ஷிப்டிற்கு வந்தவர்களும் பிற இடங்களில் பணியிலிருந்தவர்களும் சேர்ந்து தொழிலாளர்கள் அமர்ந்திருந்த பேருந்தை அடித்தனர். காலை ஷிப்டில் இருந்தவர்களையும் சேர்த்து 300 பேருக்கு மேல் கூடிவிட்டனர். ஹோலி பண்டிகை கொண்டாடிய அதே கோலத்தில் பனியன், கால் டவுசர் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் முழுவதும் கலர் பவுடர் என அனைவரும் முழு குடி போதையில் வெறித்தனமாக இருந்தனர். போலீஸ் என்பது ஆளும் வர்க்கத்தால் கறியும் வெறியும் ஊட்டி வளர்க்கப்படும் கொடூர மிருகம் என்பதை மத்தியப்படை நிரூபித்தனர்.

இந்த நிலையில் மதிய ஷிப்டிற்கு வேலைக்கு வந்த தொழிலாளிகளும் தாக்கப்பட்டனர். கேட் நுழைவாயிலில் மூளை சிதறிய ராஜ்குமாரின் உடல் கீழே கிடந்தது. இரு ஷிப்ட் தொழிலாளிகளும் ஒன்று சேரவிடாமல் மத்திய படை காட்டுமிராண்டத்தனமான தாக்குதலில் ஈடுபட்டது. நிரந்தர தொழிலாளிகளும் தாக்கப்பட்டுள்ளனர். கையெடுத்து கும்பிட்ட நிரந்தர தொழிலாளியை கூட விடாமல் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். நிலைமையை புரிந்து கொண்டு பொதுமக்களும் சொசைட்டி தொழிலாளிகளும் கல்வீசி திருப்பி தாக்கிய பிறகுதான் மத்திய படை பின் வாங்கியது. பிறகு அவர்கள் என்.எல்.சியால் அப்புறப்படுத்தப்பட்டு தமிழக போலீசார் வந்து சேர்ந்தனர். ஒரு வேளை தொழிலாளிகள் திருப்பித் தாக்கவில்லை எனில் மத்தியப்படையின் அடக்குமுறையில் பலர் உயிரிழந்திருப்பர்.

என்.எல்.சி தொழிலாளி கொலைநமக்கு மத்திய படை தேவையில்லை. அவர்களுக்கு அனைத்து செலவுகளும் என்.எல்.சிதான் செய்கிறது. வீடு, சம்பளம், கல்வி, மருத்துவம், சொகுசு கார், ஆயுதங்கள், கண்காணிப்பு காமிரா என பல சலுகைகள்,  ஏன் குடிக்க சரக்கு உட்பட என்.எல்.சி செலவில்தான் வழங்கப்படுகின்றன.

1994 வரை சொந்த பாதுகாப்பு படையை கொண்டு என்.எல்.சியே பாதுகாப்பு பணியை பார்த்து வந்தது. அவர்களுக்கு இதில் இத்தகைய சலுகைகள், வசதிகள் 10 சதவீதம் கூட செய்து தரப்படவில்லை. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது தலைவர்கள் உட்பட அனைவரும் கடுமையாக தாக்கப்பட்டனர். அதிலிருந்து என்.எல்.சி நிர்வாகத்தின் கை ஓங்கியது. மத்தியப் படையின் வருகை அதன் வரம்பற்ற அதிகாரத்தின் ஒரு பகுதிதான். இதனால் தொழிற்சங்கத்தலைவர்களின் வலிமை குறைந்து போனது.” தொழிலாளிகளை ஒடுக்குவதற்கு என்றே இந்த விசேடப் படைதீனி போட்டு வளர்க்கப்படுகிறது.

“தொழிலாளிக்கு துப்பாக்கி கொடு, இல்லையென்றால் மத்திய படையின் துப்பாக்கியை பறிமுதல் செய்” என ஒரு தொழிலாளி ஆத்திரமாக பேசினார். “நெய்வேலி ஒன்றும் கலவர பூமியல்ல. தொழிலாளியை அச்சுறுத்தவே  கையில் துப்பாக்கியுடன் மத்தியப்படையினரை கேட்டில் நிறுத்தி தினமும் தொழிலாளர்களை பரிசோதித்து வேலைக்கு அனுப்பும் அவலம் நடக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சேல்ஸ் கேட்டில் இரண்டு தொழிலாளிகள் செல்லில் பேசிக் கொண்டு சென்றனர். மத்திய படையை சேர்ந்தவர்கள் அவர்களை அழைத்து அடித்துள்ளனர். அந்த தொழிலாளர்கள் சொந்த ஊரில் இருந்து ஆளை வரவழைத்து மத்திய படையை சேர்ந்த அந்த வீரரை அடி பின்னி எடுத்தனர். தாக்கியவர்களை கண்டறிய மத்திய படை மறு நாள் ஷிப்டிற்கு சென்ற அனைத்து தொழிலாளிகளையும் வீடியோ எடுத்தனர். எங்களுக்கு என்ன உரிமை, சுதந்திரம் இருக்கிறது இங்கு என்று தொழிலாளிகள் தெரிவித்தனர்.

தொழிற்சங்கத்தலைவர்கள் எங்களிடம் சமாதானத்திற்கு சிலதை பேசுவார்கள், அதிகாரிகளிடம் ஒன்றை பேசுவார்கள். மத்திய படையை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்பதற்கு வலிமையான நீண்ட போராட்டம் தேவை. அதற்கு தொழிற்சங்கம் தயாராக இல்லை. ஆனால் அவர்களிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்ய வேண்டும். தேவைப்படும் போது மட்டுமே துப்பாக்கி ஏந்திய போலீசார் அழைக்கப்படுகின்றனர். அப்படி இருக்கும் போது எதற்கு மத்திய படைக்கு எந்த நேரமும் ஆயுதம். பாகிஸ்தான் பார்டரிலா நிற்கிறார்கள் என்று தொழிலாளிகள் கேள்வி கேட்கின்றனர்.

என்.எல்.சிஅவர்களுக்கு என் எல்.சி. தொழிலாளிதான் தனது உழைப்பிலிருந்து ஆண்டுக்கு பல நூறு கோடி சம்பளம் கொடுக்கிறார். வாக்கு வாதம் செய்தான் என்பதற்காக அவரையே சுட்டு கொல்ல முடியும் என்றால் கொல்லப்பட்டது ராஜகுமார் என்ற ஒப்பந்த தொழிலாளி மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு கொல்லப்பட்டுள்ளது. கையெடுத்து கும்பிடும் தொழிற்சங்க தலைவரை சுற்றி வளைத்து தாக்கும் மத்திய படையை இனியும் எதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்”

என வெடித்தனர்.

தொழிலாளர்களை தாக்கிய மத்திய படை வீரர்கள், தமிழக போலீசார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. திருப்பி கல்வீசி தாக்கி தம்மை தற்காத்து கொண்ட ஒப்பந்த தொழிலாளர்களில் பலர் வேப்பங்குறிச்சி, ஐ.டி.நகர், தெற்கு வெல்லூர் போன்ற பகுதிகளில் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு 22 பேர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

என்.எல்.சி நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் ராஜ்குமார் குடும்பத்துக்கு ரூ 5 லட்சம் இழப்பீடு, இறுதி சடங்கிற்கு ரூ 50 ஆயிரம்,  பாதுகாப்பு படை வீர்ர் கொலை வழக்கில் கைது, கொல்லப்பட்ட ராஜ்குமார் மனைவிக்கு நிரந்தர வேலைக்கான உத்திரவாதம், நுழைவாயிலில் தமிழ் தெரிந்த பாதுகாப்பு படை வீரர்களை நியமிப்பது என்ற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு இறுதியாக மத்தியப் படையின் டி.ஐ.ஜி நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

ஆனால் தொழிலாளர்களின் கோரிக்கை நியாயம் அப்படியே கண்ணி வெடியாக காத்திருக்கிறது.

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம்.