privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபாஜக-வின் ஆவி எழுப்பும் தேர்தல் கூட்டம் - நேரலை

பாஜக-வின் ஆவி எழுப்பும் தேர்தல் கூட்டம் – நேரலை

-

ரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டை கடந்து செல்லும் போது உள்ளே ஏதோ பொதுக்கூட்டம் நடப்பது போல மேடையும், விளக்குகளும் தென்படவே, தேர்தல் திருவிழாவில் நாமும் கலந்து கொள்வோம் என்ற கடமை உணர்வோடு மார்க்கெட் சாலைக்குள் நுழைந்தேன். சாலை முனையில் போலீஸ் வண்டிகளும், காக்கிகளும் நிறைய தென்பட்டன.

காக்கிகள் அளவுக்கு கூட அங்கே மக்கள் இல்லை. கட்சிக் கூட்டம் ஒன்று நடப்பதாக அறிகுறியே இல்லாமல் மக்களும், கடைகளும் இயங்கிக் கொண்டிருந்தனர். இத்தகைய அமோக ஆதரவு கொண்ட கட்சி எது?

தொலைக்காட்சிகளில் நமது காதுகளை ஹை டெசிபலில் பஞ்சர் போடும் தமிழிசை சவுந்தரராஜனும், வானதி சீனிவாசனும் மேடையில் தென்பட்ட போதே இது பாஜகவின் ஆவி எழுப்பும் கூட்டம் என்று புரிந்தது. மேடைக்கு முன்பு போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில் உட்கார்ந்தவர்களை விட மேடையில் கூட்டம் அதிகம். காலியான அந்த நாற்காலிகளைப் பார்க்கும் போது கனிவுடன் கவிதை எழுதும் ஆவல் எழுந்தது.

பேனர்
மாரியம்மன் திருவிழாவிற்கு நன்கொடை கொடுத்த டியூப் லைட் புரவலர்கள் போல பேனரில் ஏராளம் பெயர்கள் நிரம்பியிருந்தன.

இது பாரதிய ஜனதா கட்சியின் தென்சென்னை தொகுதி தேர்தல் பிரச்சார தொடக்க விழாவாம். துவக்கமே துக்க வீடு போல காட்சியளித்தாலும் பக்கவாட்டில் வைக்கப்பட்ட பொதுக்கூட்டம் பற்றிய ஃபிளெக்ஸ் பேனர் கலக்கலாகவே இருந்தது. இங்கே பிளக்ஸ் பேனரில் பயன்படுத்தப்படும் மை குறித்தும் கவிதை எழுத வேண்டும் என்று தோன்றாமல் இல்லை.

தேசிய செயலர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் முன்னிலையில் தென்சென்னை தொகுதி வேட்பாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல கணேசன் சிறப்புரை ஆற்றவிருக்கிறாராம். இப்பேற்பட்ட அகில இந்திய மட்டும் தமிழகத் தலைவர்கள் மேடையில் இருப்பது கூடத் தெரியாமல் பின்பக்கம் மாட்டுக்கறி வறுவலை தொழிலாளிகள் பதம்பார்த்துக் கொண்டிருந்தனர். காவிக் கதறலை புறம் தள்ளி கீரைக் கட்டுகளின் பேரமே அங்கு ஆக்கிரமித்திருந்தது.

பா.ஜ.க தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி தலைவர் அலங்கார முத்து தலைமையில் கூட்டத்தை ஏற்பாடு செய்த  இளைஞரணியும், விருகை தொகுதி நிர்வாகிகளும். மாரியம்மன் திருவிழாவிற்கு நன்கொடை கொடுத்த டியூப் லைட் புரவலர்கள் போல பேனரில் ஏராளம் பெயர்கள் நிரம்பியிருந்தன. அந்த தலைகள் தலைக்கு பத்தை அழைத்து வந்திருந்தாலும் அங்கே ஆவி எழுப்ப வேண்டிய அவசியமிருக்காது.

கூட்டத்தை நடத்துபவர், “அடுத்த பேச்சாளர் 5 நிமிடம் மட்டும் பேசுவார் என்று அறிவித்து விட்டுப் போக, ஒரு அம்மா பேச வந்தார். “நான் எல்லாத்துக்கும் ஃபோன்ல பேசி தாமரைக்கு வோட் போட சொல்றேன். நீங்களும் அப்படி சொல்லுங்க. நாடு முழுதும் ஒரு சேஞ்ச் வந்துட்டு இருக்கு. நீங்க எல்லாரும் மோடி பிரதமர் ஆறதுக்கு ஓட் போடணும். பாரத மாதாவோட முகத்துலையும் தாமரை தெரியணும், கையிலையும் தெரியணும், கால்லையும் தாமரை தெரியணும்னு ஒரு கவிஞன் சொன்னான். உங்க எல்லாருக்கும் வோட்டிங் மெசின்லையும் தாமரை தெரியணும்.

ஆம் ஆத்மி கட்சியாம், அவங்க பார்ட்டி நைன் டேஸ் டெல்லீல ஆட்சி செய்ய முடியல. அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நாமளும் ஏமாந்து போய் ஜாய்ன் பண்ணிக்கிட்டோம்.  இந்த நாட்டோட கான்ஸ்டிடுயூஷன் பத்தி தெரியுமா அவங்களுக்கு. தேர்தல்ல நின்னா பத்தாது, சமாளிச்சிட்டு ஆட்சி பண்ண தெரியணும். எனக்கு பேச கொறைஞ்ச நேரம் மட்டும் தந்திருப்பதால் இத்தோட முடிச்சிக்கறேன்” என்று எம்.ஜி.ஆர் மார்க்கெட் மக்களுக்கு அல்லேலுயா அன்னிய பாஷை போல திகிலூட்டி விட்டு போனார். தூணிலும் துரும்பிலும் இருப்பது பரம் பொருள், ஜட்டி முதல் பட்டி வரை படர்வது தாமரை என்ற கவிதை இங்கே தோன்றியது.

நரேந்திர மோடி
“மத்திய அமைச்சர் சல்மான் குர்சீத் மோடியை ஆண்மையில்லாதவர் என்று சொல்லியிருக்கிறார். மோடியை ஆண்மையில்லாதவர் என்று எப்படி சொல்ல முடியும்”

அடுத்தபடியாக இளைஞர் அணியைச் சேர்ந்த ஒருவர் பேச வந்தார். “மாண்புமிகு திருமாவளவன் அவர்கள் சிதம்பரத்தில் செயல் வீரர் கூட்டத்தில் ஒரு எம்.பியாக தான் சிதம்பரம் தொகுதிக்கு செய்த பணிகள் என்னென்ன, இனிமேல் என்ன செய்வேன் என்பதைக் குறித்து பேசாமல், ‘மதவாத கட்சியான பாரதிய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும்’ என்று பேசியிருக்கிறார். இப்போ அதுவா முக்கியம், மதவாதமா முக்கியம். வளர்ச்சிதான் முக்கியம். குஜராத்தைப் போல இந்தியாவையும் வளரச் செய்வதற்காக நாம் நரேந்திர மோடி அவர்களை பிரதமராக்குவோம்” என்று பேசி அமர்ந்தார். ஏலே நாங்க மதவெறியனுங்கதான், அப்பேற்பட்ட நாங்களே வளர்ச்சின்னு வந்தா கமுக்கமாக ஏத்துக்கிட்டு ஓட்டப் போடணும் என்பதை எவ்வளவு அழகாக பேசியிருக்கிறார்.

அடுத்து தென் சென்னை மாவட்டத் தலைவர் பேச வந்தார். அவர் பெயர் சொல்லி அழைத்த அவர்களே, இவர்களே எண்ணிக்கை மேடையில் இருப்பவர்களை விட அதிகம். பிறகு புரிந்தது. அவர் பிளக்சில் உள்ள வராத தீவிர தொண்டர்களையும் விடாமல் பாராட்டியிருக்கிறார். உண்மையில் இவர்தான் தலைவர். இதை நிரூபிப்பது போல அங்கு ‘குவிந்திருந்த’ அவரது அடிப்பொடிகள் நான்கைந்து பேரின் விசில் சத்தம், கொத்து புரோட்டா இசைக்கு ஈடு கொடுக்கவில்லை என்றாலும் மோசமில்லை.

அவர் பேசியபோது “மத்திய அமைச்சர் சல்மான் குர்சீத் மோடியை ஆண்மையில்லாதவர் என்று சொல்லியிருக்கிறார். மோடியை ஆண்மையில்லாதவர் என்று எப்படி சொல்ல முடியும்” என்று கேட்ட போது திடுக்கிட்டேன். ஏதோ மருத்துவர் அறிக்கையை ஆதாரமாக காட்டி ஆண்மையை நிரூபிப்பாரோ என்று மாத்ரு பூத மேட்டர் நினைவுக்கு வந்தது. கட்ச் பகுதியில் பூகம்பம் வந்த போது மோடி ஆண்மையுடன் விரைவாக நிவாரணப் பணிகளை நடத்தினார் என்று அவர் சொன்ன போதுதான் இது வேறு வகை ஆண்மை புரிந்தது. எனினும் ஆண்மையுடன் நிவாரண பணிகள் என்ற பொருளுக்குரிய புது சொல்லை யார் உருவாக்கப்போகிறார்கள் என்ற கவலையும் எழுந்தது.

ஆண்மைக்குறைவு குழப்பத்தின் போது பின்பக்கத்திலிருந்து வெடிச்சத்தம் கேட்டது. தவுசண்ட் வாலா கொளுத்திப் போட்டிருக்கிறார்கள். இல கணேசன் வந்து கொண்டிருந்தார். தஞ்சாவூர் பிடபிள்யூ அலுவலகத்தின் அருகில் இருக்கும் தேநீர்க்கடையில் மசால் வடை சாப்பிட்ட காலத்தில் இப்படி நினைத்திருப்பாரா, பிற்காலத்தில் நமக்கும் தவுசண்ட் வாலா வெடிப்பார்கள் என்று! மசால் வடை மற்றும் சிவகாசி வெடி என்றொரு கவிதையை குறித்துக் கொண்டேன்.

இல கணேசன் பேனர்
இல கணேசன் பேனர்

அதே நேரம் பேசிக் கொண்டிருந்த தலைவர் மோடியின் ஆண்மை பற்றிய கேள்வியை அந்தரத்தில் தொங்க விட்டு விட்டு தொகுதி இல கணேசன்ஜியை வரவேற்க தயாரானார்.

திடீரென்று, இடது பக்கத்திலிருந்து “பாரேஏஏஏஏத் மாதா கீ ஜெய்” என்று அடித்தொண்டை முழக்கம் ஒன்று கேட்டது. அருகில் உட்கார்ந்திருந்த ஒரு தொண்டர்தான் அப்படி ஒரு விபரீதத்தை நிகழ்த்தியிருக்கிறார். அதைக் கேட்டு குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்த 4 வயது குழந்தை கதறி அழ ஆரம்பித்தது. “முட்டி பந்த் கர்கே, ஹாத் உடாகே, பகுத் ஜோர் சே போலியே – பாரேஏஏஏஏத் மாதா கீ — ஜெய்!” (“முட்டியை இறுக்கமா மூடி, கையை உயர்த்தி நல்ல சத்தமா சொல்லுங்க – பாரத் மாதாவுக்கு – ஜே”) என்று நரேந்திர மோடி திருச்சி கூட்டத்தில் கற்றுக் கொடுத்ததை வீட்டில் தினமும் பயிற்சி செய்து விட்டு வந்திருக்கிறார் போல. அவரது அவ்வளவு பயங்கரமான முழக்கத்துக்கு ஒரு குழந்தை அழுததோடு ஒரு 10-15 குரல்கள் மட்டுமே எதிர் “ஜே” போட்டன. பாரத மாதாவுக்கு ஜே போட 10 குரல்கள் மட்டும்தானா என்று அறம் பாட அங்கே முனிவர் பெருமக்கள் இல்லை.

இல கணேசன் மேடையேறியதும், மேடை கலகலத்துப் போனது. ஒருவர் துண்டு போர்த்தினார். நாலைந்து பேர் பெரிய ரோஜா மாலை போட்டார்கள், எல்லோரும் மறக்காமல் ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்கள். மாலை போடும் போது மீண்டும் “பாரேஏஏஏத் மாதா கீ” என்று ஒற்றை இடிச் சத்தம் கிளம்பியது. மைக் அருகில் நின்றிருந்த பேச்சாளரும் அருகில் இருந்தவரும் மைக்கை கைப்பற்றி, “வெல்கவே, வெல்கவே, பிஜேபி வெல்கவே” என்று அபஸ்வரத்தில் பாட்டு பாடினார்கள். இருப்பினும் ஐஜேகே கட்சி கூட்டமோ இல்லை நாடாளும் மக்கள் கட்சி கூட்டமோ இதை விட இன்னும் நேர்த்தியாக நடத்தியிருக்கும் என்ற உண்மையை இங்கு பதிவு செய்யாவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது.

தமிழிசை சவுந்தரராஜன் பேசியபோது,

“ராகுல் காந்தி சொல்கிறார், இந்தியா ஒரு பன்முகத் தன்மை உடைய நாடு. அதை முன்னேற்றுவதற்கு எந்த மந்திரவாதியும் வரப் போவதில்லை என்று. ஆனால் நான் சொல்கிறேன் குஜராத்திலிருந்து ஒரு நரேந்திர மோடி வரப் போகிறார் என்று.

தமிழிசை
தமிழிசை

ஆர்.எஸ்.எஸ் காந்தியைக் கொன்ற இயக்கம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். யார் காந்தியை கொன்றார்கள். சுதந்திரம் பெற்ற 60 ஆண்டுகளாக காந்தியின் கொள்கைகளை கொலை செய்து கொண்டிருப்பவர்கள் காங்கிரஸ்காரர்கள். அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? ஆர்.எஸ்.எஸ் காந்தியைக் கொன்ற இயக்கம் என்று சொல்வதற்கு?

ப சிதம்பரம், ‘பிஜேபி ஆர்.எஸ்.எஸ்சின் கிளை அமைப்பு’ என்று சொல்லியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்சின் கிளை அமைப்பாம். ஆர்.எஸ்.எஸ் எப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தெரியுமா. நான் ஒரு காங்கிரஸ் தலைவரின் மகள் இன்று பா.ஜ.கவில் சேர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்ன தெரியுமா? தஞ்சாவூரில் ஒரு ஏழை விவசாயிக்கு ரத்தம் கொடுக்க வேண்டும் 20 பாட்டில் ரத்தம் தேவைப்பட்டது. அப்போது ராஷ்ட்ரிய சுவயம் சேவக் சங்கத்திற்கு தொலைபேசி கேளுங்கள் என்றார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் வந்து ரத்தம் கொடுத்து விட்டார்கள். அப்படிப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.கவை அந்த ஆர்.எஸ்.எஸ்சின் கிளைக் கழகம் என்கிறார் சிதம்பரம். இப்படி பேசியதற்காகவே தேர்தலில் நீங்கள் தோற்றுப் போவீர்கள்.” என்று பேசினார். இதிலிருந்து அவர் ஆர்.எஸ்.எஸ் தொடர்பை விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. இப்படியிருக்கையில் அவர் சிதம்பரத்தை ஏன் எதிர்க்கிறார், உங்களுக்கு புரிகிறதா? அல்லது கருத்து சொல்பவர்கள் கத்தமாட்டார்கள், கத்துபவர்களிடம் கருத்து இருக்காது என்ற பழமொழிக்கு இது எடுத்துக்காட்டா?

“1967-க்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு தேசியக் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்திருக்கிறோம். செங்கோட்டையை மட்டுமல்ல, செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் கைப்பற்றப் போகிறோம். நரேந்திர மோடிதான் பிரதமர் ஆகப் போகிறார், அதை நான் சொல்லவில்லை, இங்கு கூடியிருக்கும் கூட்டம் சொல்கிறது.” என்று அவர் சொன்னதும் அதிர்ச்சியாகி மேடைக்கு கீழே கூட்டத்தை பார்த்தேன்.

இல கணேசனுக்கு ஆளுயர மாலை
இல கணேசனுக்கு ஆளுயர மாலை

எதிரில் உட்கார்ந்திருப்பவர்களை எத்தனை முறை எண்ணினாலும் மொத்தம் 150 பேருக்கு மேல் தேறாது. அந்த 150 பேரில் மார்க்கெட்டு வந்த மக்கள் 50 பேராவது இருக்கும். அவர்களை கழித்து விட்டு பார்த்தால் மிச்சமிருக்கும் நூறு பேரை வைத்து வார்டு கவுன்சிலர் வீட்டுக்கு கூட போக முடியாது. கூரையேறாதவன் வைகுண்டம் போன கதை கூட இந்த காமடிக்கு அவ்வளவாக பொருந்தி வராது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கூரை, கோட்டை, இரண்டையும் வைத்து அந்தக் கவிதை தன்னை எழுதுமாறு வற்புறுத்தியது.

“திராவிடக் கட்சிகள் எப்படி கூட்டம் அழைத்துக் கொண்டு வருகிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாதா. இது தானாக வந்த கூட்டம், அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல” என்று பின் வாங்கினாலும் தளராமல் ஆர்ப்பரித்து பேச்சைத் தொடர்ந்தார் தமிழிசை.

சில வாரங்களுக்கு முன்பு பாஜகவிற்கு தமிழ்நாட்டில் 41 சதவீதம் மக்கள் ஆதரவு என்று ஜூனியர் விகடன் வெளியிட்டிருந்த சர்வே முடிவுகளின் படி, சுமார் 2 லட்சம் வாக்காளர்களை கொண்டுள்ள விருகம்பாக்கம் தொகுதியில் பா.ஜ.க-விற்கு குறைந்தபட்சம் 80,000 ஆதரவாளர்கள் இருக்க வேண்டும். அவர்களில் 10% பேர் கட்சியின் தேர்தல் பிரச்சார தொடக்கக் கூட்டத்துக்கு வந்திருந்தாலும் 8,000 பேர் கூடியிருக்க வேண்டும். ஆனால், கூடியிருந்த 100 பேரை வைத்துப் பார்த்தால் பாஜகவின் ஆதரவு வெறும் எத்தனை சதவீதம், மிஸ்டர் திருமாவேலன் பதில் சொல்வாரா?

இப்படி ஒரு ‘பெரும்’ கூட்டத்தை நடத்துவதற்கு மார்க்கெட் தெரு முனையில், மேடைக்கு முன்பு, மேடைக்கு பின்புறம் என்று குவிக்கப்பட்டிருந்த மொத்த போலீஸ் படையின் எண்ணிக்கை கூட்டத்தினரின் எண்ணிக்கையை விட அதிகம். ஒரு வேளை அவர்களை மையப்படுத்தி பேசினால் கூட பத்து பதினைந்து வாக்குகளாவது கிடைத்திருக்கும்.

அடுத்ததாக, இல கணேசன் பேசினார்.

“தமிழ்நாட்டிலிருந்து ஒரு தலைவர் பிரதமர் ஆக வேண்டும் என்று சிலர் பேசுகிறார்கள். ஆகலாமே, எல்லா கட்சிக்கும் தங்கள் கட்சித் தலைவரை பிரதமர் ஆக்க வேண்டும் என்று ஆசை வரலாம். ஆனால், சென்ற தேர்தலில் நான் பிரச்சாரத்துக்கு போன போது, ‘நீங்கள் நல்லவர், உங்கள் கட்சி நல்ல கட்சி, நீங்கள் பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கும் அத்வானி நல்ல தலைவர், வாஜ்பாயி நல்ல தலைவர். உங்களுக்கு ஓட்டு போடலாம் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் நீங்க ஜெயிப்பீங்களா’ என்று கேட்டார்கள்.

மோடி - இல. கணேசன்
மோடி – இல. கணேசன்

அதே கேள்வியை நான் இப்போ கேட்கிறேன். ஒரு கணக்கு போட்டு பார்க்கலாம். நீங்க தமிழ்நாட்டில 39 தொகுதியில நிக்கிறீங்க. பாண்டிச்சேரியையும் சேர்த்து 40-ன்னே வைத்துக் கொள்ளலாம். அதில் 20 ஜெயிச்சிடுவீங்கன்னு வைத்துக் கொள்ளலாம். 20 தொகுதியை வைத்துக் கொண்டு எப்படி பிரதமர் ஆக முடியும். நாங்கள் 270 தொகுதியில் ஜெயித்து மோடியை பிரதமர் ஆக்கப் போகிறோம். எனவே ஜெயிக்கக் கூடிய பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களியுங்கள்.”

ஓரளவுக்கு இது ‘நாணயமான’ பேச்சு. அதாவது இல கணேசன் கொள்கையை முன் வைத்து வாக்குகள் கேட்கவில்லை. ஜெயிக்க கூடிய குதிரைக்கு வாக்களியுங்கள், வீணாக்காதீர்கள் என்று கேட்கிறார். இதையே ஜெயாவும் மற்ற கட்சிகளுக்கு வாக்களித்து வீணாக்காமல் அதிமுகவிற்கு போடுமாறு கேட்கிறார். இறுதியில் கணக்கு சாத்தியமே காவிகளின் காரிய சாத்தியமாகிறது. ஆனாலும் அதிமுக வெற்றி பெற்றாலும் அது மோடி அணிக்குத்தானே வரப்போகிறது? இப்படிக் கேட்டால் இல கணேசன் மீண்டும் மசால் வடை சாப்பிடத்தான் போக வேண்டும், ஆளுயுர ரோஜா மாலைக்கு ஆசைப்படுவது அதிகம்.

“இந்த தேர்தலை ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் இடையேயான போட்டி என்று இங்கே மாற்ற முயற்சிக்கிறார்கள். இது நாடாளுமன்றத்துக்கான தேர்தல், மறந்து விடாதீர்கள். நரேந்திர மோடி பிரதமர் ஆக வேண்டுமா அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டுமா என்று முடிவு செய்வதற்கான தேர்தல்.” என்று ஒரு தேசிய உணர்வு குன்றாத சுவயம் சேவகராக பேசினார். அப்படி எனில் தேசிய உணர்வு இல்லாத எம்ஜிஆர் நகர் மார்கெட்டுவதற்கு பதில் தேசிய உணர்வுக்கு பெயர் பெற்ற மாம்பலத்திலோ இல்லை மந்தைவெளியிலோ கூட்டம் நடத்தியிருந்தால் பார்த்தசாரதிகள் பேஷ் போட்டிருப்பார்களே?

ஆம்பூர் பிரியாணி கடைகள் அதிகமிருக்கும் எம்ஜிஆர் நகர் மார்கெட்டில் அக்கார அடிசலுக்கு ஏது மரியாதை இல.கணேசன் அவர்களே?

இல கணேசன்
இல கணேசன்

“இந்த இடத்தில் இன்னும் பல கூட்டங்கள் நடக்கும். பல கட்சிகள் வந்து ஊழல் ஒழிப்பு பற்றி பேசுவார்கள். தி.மு.க கூட ஊழல் ஒழிப்பு பற்றி பேசலாம். ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதி உடைய ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி. முதலில் மாநிலத்தில் ஊழலை ஒழித்து விட்டுத்தானே மத்தியில் ஊழலற்ற ஆட்சியைத் தருவோம் என்று பேச முடியும். தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சியை தந்திருக்கிறீர்களா? குஜராத்தில் ஊழலற்ற ஆட்சியை தந்த நரேந்திர மோடி இப்போது தனது சேவையை நாட்டுக்கு தர வந்திருக்கிறார்”.

குஜராத்தில் அதானிக்கும், அம்பானிக்கும் ஊழலற்ற ஆட்சி, கர்நாடகாவில் இரும்புத் தாது புகழ் ரெட்டி பிரதர்சின் ஊழலற்ற ஆட்சி என்று பா.ஜ.க மாநில அரசுகள் ஊழல் நிர்வாகத்தில் படைத்த சாதனைகள் ஆம்பூர் பிரியாணியை மட்டும் அறிந்த அந்தப் பகுதி மக்களுக்கு தெரியவா போகிறது என்ற நம்பிக்கையில் இல கணேசன் ஆவேசம் பொங்க பேசினார்.

“பாரதத்தின் மதிப்பு உலக நாடுகள் மத்தியில் எப்படி இருக்கிறது தெரியுமா. சின்னச் சின்ன நாடுகள் கூட நம்மை மதிக்க மாட்டேன் என்கிறார்கள். மோடிக்கு அமெரிக்கா விசா கொடுக்கவில்லை என்று பேசினார்கள். மோடி விசா கேட்கவேயில்லை. நேரம் வரும் போது அவர்களாக வந்து அழைப்பார்கள் என்று இருக்கிறார். அவர்கள்தான் வந்து மோடியை சந்திக்கிறார்களே தவிர அவர் அங்கு போகவில்லை. ஒபாமாவே மோதிஜியின் பேச்சுதான் என்னை கவர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்” என்று பேசிய கணேசனை உண்மையில் சிஐஏ க்வாண்டமானோ பேக்கு அனுப்பியிருக்க வேண்டும். மோடியின் பேச்சை ஒபாமா ரசித்தார் என்று பேசுவதற்கு ஒரு நெஞ்சுரம் வேண்டும்தான், அது நெஞ்சுக்கறியை சுவைத்தே இராத கணேசனிடம் நிறைய இருப்பது ஆச்சரியம்தான். மகாபாரதத்திலேய நைட்ரஜன் குண்டுகளை கண்டுபிடித்தவர்களுக்கு ஃபோட்டோஷாப்பில் ஒபாமாவை தீர்த்தம் சாப்பிட வைப்பதில் என்ன சிக்கல்?

“நான் சிறிது நேரம் முன்பு ஒரு வீடியோவை பார்த்தேன். ஏதோ அமெரிக்காவா,  ஆஸ்திரேலியாவா என்று பார்த்தால் அது குஜராத்தில் எடுக்கப்பட்ட வீடியோவாம்.  அப்படிப்பட்ட குஜராத்தை உருவாக்கிய பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பாகவே மக்கள் அவரை அறிவித்து விட்டார்கள்.

ஒரு மன்னன் என்பவன்  நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அப்படி 12 ஆண்டுகளாக குஜராத்தை பாதுகாப்பாக ஆண்டு வருபவர் மோடி. ஒரு முறை மோடியிடம் நீங்கள் முஸ்லீம்களுக்கு ஏதாவது செய்திருக்கிறீர்களா என்று கேட்ட போது இல்லை என்று சொன்னார். கிருஸ்வர்களுக்கும் எதுவும் செய்யவில்லை. ஆனால், குஜராத்தி மக்களுக்கு செய்திருக்கிறேன் என்று சொன்னார்.”

குஜராத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலும் இந்துக்கள்தான் பெரும்பான்மை. குஜராத் பண்பாடோ, இந்தியப் பண்பாடோ இல்லை தமிழ்ப் பண்பாடோ எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருப்பது இந்துப் பண்பாடுதான் என்ற சூத்திரத்தின் படியும் இது தவறல்ல. சாணக்கியர்களின் வம்சத்திற்கு நரித்தனத்தை கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?

“விலைவாசி என்றால் ஏறிக் கொண்டுதானே போக வேண்டும். ஆனால், மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆன போது விலைவாசி குறைந்தது. வாஜ்பாயி பிரதமர் ஆன போது விலைவாசி குறைந்தது. காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத போது விலைவாசி குறைகிறது என்றால் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்தான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்று தெரிகிறது. 2ஜி ஊழல் 1.86 லட்சத்தி ஆயிரம் கோடி என்றால், நிலக்கரி ஊழல் 1.86 ஆயிரம் லட்சம் கோடி” என்று ஏதோ பெரிய தொகை போல என்று நினைக்க வைப்பதற்காக வாய்க்கு வந்த எண்களை அள்ளி வீசினார். மேடைக்கு கீழே நூறு பேர் இருக்கும் போதே இப்படி உளறுபவர் உண்மையில் இலட்சம் பேரை பார்த்து விட்டால் என்னவெல்லாம் பேசுவார்?

“முகலாயர்கள் வந்தார்கள், இந்தியாவின் செல்வத்தை கொள்ளை அடித்துச் சென்றார்கள். ஆங்கிலேயர்கள் வந்தார்கள் கொள்ளையடித்துச் சென்றார்கள். சுதந்திரம் கிடைத்த பிறகு காங்கிரஸ்காரர்கள் கொள்ளை அடித்துச் சென்ற செல்வத்தின் மதிப்பு அவற்றை எல்லாவற்றையும் விட அதிகம் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்.” என்று சாமர்த்தியமாக பேசினார் இல கணேசன். முகலாயர் கொள்ளை என்பது முசுலீம் எதிர்ப்பிற்காக சொல்லப்பட்ட உளறல். போகட்டும். ஆங்கிலேயர் கொள்ளையடிக்கும் போது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஆங்கிலேயர் ஆசியுடன் ஷாகாவில் பாதுகாப்பாக கபடி விளையாடிக் கொண்டிருந்ததுதான் வரலாறு.

அதே போல காங்கிரசு ஆட்சி கூட முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு பயன்பட்டிருப்பதுதான் உண்மை. அதன்படி கொள்ளையடித்த அம்பானி, அதானி போன்ற முதலாளிகள்தான் பாஜகவிற்கும் படியளக்கிறார்கள். அந்த வகையில் கொள்ளை குறித்து பேசிய இல கணேசன் சேம்சைடு கோல் அடித்தார். கொள்ளையும் கோலும் என்றொரு கவிதை தலைப்பு புளித்த ஏப்பம் போல திடீரென வந்தது.

“திடீர் சாம்பார், திடீர் இட்லி போல திடீர் முதலமைச்சர், திடீர் அமைச்சர் ஆக சிலர் வந்திருக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சியாம். காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று பாரத மக்கள் வீறு கொண்டு எழுந்திருக்கும் நேரத்தில் அந்த ஓட்டுக்கள் பிஜேபிக்கு போய் விடக் கூடாது என்று திட்டமிட்டுக் கொண்டு இவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள்.” ஆம் ஆத்மி மேலுள்ள பயம் இல கணேசனுக்கும் இல்லாமல் இல்லை. மசால் வடைகளெல்லாம் எம் பி தேர்தலில் நிற்கும் போது பிசா பர்கர்களை போன்ற ஆம் ஆத்மி நிற்பதில் என்னய்யா குற்றம்?

விஜயகாந்த்
கேப்டனின் வண்டியில் தொங்கும் பாஜக

“இந்த தேர்தலில் மோதிஜியை பிரதமராக்க நாம் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி அமைத்திருக்கிறோம். கூட்டணி அறிவிப்பதற்கு முன்னதாகவே நம்முடன் வந்து இணைந்து நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் என்று கூறியவர் வைகோ. அந்த வைகோவின் கட்சியைச் சேர்ந்த கன்னியப்பன், இப்போது நமது மேடையில் அமர்ந்திருக்கிறார்.” என்று அவர் பேசும் போதுதான் ஒரு உண்மை புரிந்தது. மேடையில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தேமுதிக, பாமக என்று யாரையும் காணோம். ஆனால் வைகோ கட்சி மட்டும் விடாமல் வந்திருக்கிறது. என்ன இருந்தாலும் அடிமைகளின் விசுவாசத்தில் வைகோவை விஞ்சமுடியாது. வாழ்த்துக்க்ள் கன்னியப்பன்!

இறுதியாக “நம்முடைய கூட்டணிக்கு தமிழ்நாடெங்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. கூட்டணிக் கட்சித் தலைவர் விஜயகாந்த் செல்லும் இடம் எல்லாம் பெரும் கூட்டம் திரள்கிறது. அவர் நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். எனவே நமது கூட்டணி தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெறும்.” என்று ‘பிராமின்ஸ் ஒன்லி’ வீடு வாடகை கும்பலைச் சேர்ந்தவர் இனம், நிறம், சாதி கடந்து கேப்டனின் வண்டியை ஏற்றுக் கொண்டு எஸ்டிஎஸ் போல தொங்கி வருவது நிச்சயம் சாதனைதான். ஆனால் எஸ்டிஎஸ் ஒரு தனிநபர். இங்கே பாஜக ஒரு கட்சி.

கடைசியில் எஸ்டிஎஸ் எஃபெக்ட்டுதான் தமிழ்நாட்டில் பாஜக தேர்ந்தெடுத்திருக்கும் ஃபார்முலாதான் என்றால் இதற்கு அழகிரி ஃபார்முலா எவ்வளவோ மேல் !

_ வினவு செய்தியாளர்.