privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நாடாளுமன்றம்தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது ! மக்கள் போராட்டமே தீர்வு !

தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது ! மக்கள் போராட்டமே தீர்வு !

-

தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது ! மக்கள் போராட்டமே தீர்வு !

அரங்க கூட்டம் & கலை நிகழ்ச்சி

கடல் முற்றுகைநாள் :
30.03.2014 ஞாயிறு
நேரம் :
மாலை 5.00 மணி
இடம் :
அற்புதம் சாமுவேல் கல்யாண மண்டபம், பைபாஸ்ரோடு, காந்திநகர், கூடங்குளம்

தலைமை
வழக்கறிஞர் – சே. வாஞ்சிநாதன், மதுரை உயர்நீதிமன்றம்,
துணைச் செயலாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டம்

உரையாற்றுவோர்
திரு எஸ்.ஏ.ஜோசப், தலைவர், நெல்லை மாவட்ட மீனவர் கூட்டமைப்பு
திரு எஸ்.வி அந்தோணி, முன்னாள் ஊராட்சித் தலைவர், உவரி
வழக்கறிஞர் க. சிவராசபூபதி, குமரி மாவட்ட செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்,
வழக்கறிஞர் சே தங்கப்பாண்டி, அமைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், நெல்லை

சிறப்புரை
வழக்கறிஞர் சி. ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
மற்றும் வழக்கறிஞர்கள், உள்ளூர் தலைவர்கள்

அன்பார்ந்த மக்களே!

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் 2 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டில் மகள் ஆதரவைப் பெற்றுள்ளது. அணு உலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தேச துரோகம், அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் உள்பட ஆயிரக்கணக்காக பொய் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசு படைகள் அங்கேயே நிலை கொண்டுள்ளன. அந்த வட்டாரமே கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்த சூழ்நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அணு உலைகளை தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே போலீசுப்படை அங்கே நிரந்தரமாக வைக்கப்படும், காஷ்மீர் போல கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படும். மக்களுக்கு நிரந்தர அச்சுறுத்தலாக இருக்கும். சொந்த ஊரிலேயே அகதிகளைப் போல நாம் வாழ வேண்டும்.

ஓட்டுக்காக அப்போதைக்கு அணு உலை எதிர்ப்பு நாடகம் ஆடிவந்த ஓட்டுக் கட்சிகள் எல்லாம் தேர்தல் வந்து விட்ட நிலையில் வாய்மூடி மவுனிகளாகி விட்டனர். அணு உலை பற்றி எதுவுமே பேச மறுக்கின்றனர். அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி (தமிழ்நாட்டில் ஏழை மக்கள் கட்சி) கூட அணுஉலையை மூட வேண்டும் என்றச் சொல்லவில்லை பொத்தம் பொதுவான கருத்தையே சொல்லி வருகின்றனர். மக்கள் ஓட்டுப் போடுவதனால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் அதிகாரத்துக்கு வந்த பின் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அணு உலை, தாது மணல் மற்றும் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது, பாராளுமன்ற, சட்டமன்றங்களில் சட்டமாக நிறைவேற்றப்பட்டுத்தான் நடைமுறைக்கு வருகிறது. நீதிமன்றங்களும் அதை ஆதரிக்கின்றன. இயற்கை வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்து நமது வாழ்வாதாரங்களை அழிப்பதே இன்றைய உலக மயமாக்கக் கொள்கையின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இவற்றைத் தடுத்து நிறுத்துவது என்பது இயலாது. அணு உலையை மூடுவது என்பது தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டது. தேர்தல் அரசியலுக்கு வெளியேதான் இதற்கு தீர்வு இருக்கிறது.

ஓட்டுப் பொறுக்கும் எந்தக் கட்சியும் தேர்தல் சமயத்தில் கூட அணு உலைக்கு எதிராகப் பேசவில்லை. கூடங்குளம் பகுதி மக்கள் என்ன நிலையெடுப்பது? ஒரு புறம் வெடிக்கக் காத்திருக்கும் அணுகுண்டு போல அணு உலை, மறுபுறம் எந்நேரமும் கைது, சித்ரவதைக்கு ஆளாகலாம் என்ற நிலையில் நூற்றுக் கணக்கான பொய் வழக்குகள், எப்போதும் ஊரில் போலீசு, உளவுத் துறை கண்காணிப்பு, நான்கு பேர் கூட சேர்ந்து போக முடியாது. மீறினால் காவல்துறை மிரட்டல் என்ற ஒரு பதட்டமான சூழல்., நீண்ட நாட்களாகப் போராடி ஒன்றும் நடக்கவில்லை. ஊரை விட்டுச் சென்று விடலாமா? என்ற சிந்தனையில் சிலர்.

கூடங்குளம் அணுஉலைகூடங்குளம் அணு உலை இயக்கப்பட்டு, மின்சாரம் வருவதாக அரசு அறிவித்தாலும் உண்மை நிலை நமக்குத் தெரியும். தினமும் 17 லாரிகளில் ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் அணு உலைக்குள் கொண்டு செல்லப்பட்டு, அதுதான் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு சிறிதளவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. யுரேனியத்தால் அணு உலை இயக்கப்படவில்லை. அணுஉலை, மின் உற்பத்திக்காகவும் இல்லை, அது ராணுவ நோக்கத்திற்காக நிறுவப்பட்டுள்ளது. மக்களிடம் அம்பலப்பட்டுப் போன நிலையில் வேறுவழியின்றி அணு உலை நிர்வாகம் மின்உற்பத்தி தொடங்கி விட்டதாக உலகை ஏமாற்றுகிறது. ஆனாலும், அணு உலையும், வழக்குகளும் இருக்கும் வரை நமக்கு நிம்மதியில்லை. இந்த சூழலை நாம் மாற்றியாக வேண்டியுள்ளது.

இரண்டு ஆண்டுகளாகப் போராட்டம், ஏராளமான இழப்புகள் என்றாலும், குறிப்பிடத்தக்க வெற்றியைக் கூடங்குளம்-இடிந்தகரை மக்கள் சாதி-மதம் கடந்து பெற்றுள்ளோம் என்பதே உண்மை. கூடங்குளம் அணு உலைக்கும் தமிழகத்தில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டுக்கும் ஒரு தொடர்புமில்லை என ஒட்டுமொத்த தமிழகமும் புரிந்து கொண்டுள்ளது. இந்தியாவில் தமிழகம்தான் மக்கள் போராட்டங்களில் முன்னிலை வகிக்கிறது என்பது அரசே தரும் ஒரு புள்ளி விவரம். தமிழகம் இவ்வாறு முன்னிலை பெற கூடங்குளம், இடிந்தகரை மக்கள் போராட்டம் ஓர் முன்மாதிரியாக இருந்துள்ளது. காரணம் நாம் நமது சொந்த பலத்தில் போராடினோம் என்பதே. இன்னும் நாம் அறிந்து கொள்ள வேண்டியதும் இதுவே. எந்த ஓட்டுப் பொறுக்கிக் கட்சியும் நமக்கு உதவப் போவதில்லை.  நம்மைப் பயன்படுத்த மட்டுமே செய்வார்கள். நாம் ஒற்றுமையோடு கடற்கரை மக்கள், உள்நாட்டு மக்களையும் போராட்டத்தில் இணைத்து ஒரு நீண்ட காலத் திட்டத்தில் போராடினால் முழு வெற்றி சாத்தியமே.

மனித உரிமை பாதுகாப்பு மையம் அணு உலைக்கு எதிரான கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்களின் போராட்டத்தோடு ஆரம்பம் முதலே இணைந்து போராடி வருகிறது. இடிந்தகரை பகுதியில் மட்டும் இருந்த இந்தப் போராட்டத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றது. மார்ச் 19 போராட்டத்தின் போதும் செப்டம்பர் 10 துப்பாக்கி சூடு நடைபெற்ற போதும் மக்களோடு மக்களாக இருந்து போராடியது மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் வழக்கறிஞர்களும். இப்போதும் அணு உலை, தாதுமணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில்  உங்களுடன் இணைந்து நிற்பதும் மனித உரிமை பாதுகாப்பு மையம்தான்.

கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதென்பது அமெரிக்கா, ரசியா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களையும், பன்னாட்டு பகாசுர-இந்திய முதலாளிகளையும் முதலாளிகளின் அடிவருடியான இந்திய அரசையும் எதிர்ப்பது என்பதைப் புரிந்து போராட தயாராவோம். மனச் சோர்வு, விரக்தியைக் களைவோம், இந்திய சுதந்திரப் போராட்டம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. தோள்சீலைப் போராட்டம் 65 ஆண்டுகள் நடந்தது. இதே நெல்லை மண்ணில் கட்டபொம்மனும், ஊமைத் துரையும் வெள்ளையத் தேவனும், சுந்தரலிங்கமும், பின்னர் எப்போதோ கிடைக்கவுள்ள மக்கள் விடுதலைக்காக, பிற்கால சந்ததியின் நலனுக்காக உயிர் துறந்தனர். இன்று கூடங்குளம் – இடிந்தகரை மக்கள் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கு அன்று காந்தி, வ.உ.சி, பகத்சிங் மீதும் போடப்பட்டது. மீண்டும் ஓர் விடுதலைப் போரை நடத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

அணு உலைக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் மக்களின் ஆதரவைப் பெற வேண்டும். இயற்கை வளங்களை கொள்ளையிடுவது     சுற்றுச் சூழலை மாசு படுத்தும் நாசகாரத் தொழிற்சாலைகளை அனுமதிப்பது உழைக்கும் மக்களின் வாழ்வை துச்சமாக மதிப்பது போன்ற ஆட்சியாளர்களின் வன்முறைக்கு எதிராக விடாப்பிடியாக போராடி எதிரிகளுக்குப் பெரும் சவாலாக இருந்து வரும் நந்திகிராம், சிங்கூர், நியம்கிரி மலைவாழ் மக்களின் போர்குணம் மிக்க போராட்டத்தைப் போல நாமும் நடத்துவதன் மூலமாக நாம் மக்களின் ஆதரவைப் பெறலாம். அணு உலைக்கு எதிரான போராட்டம் தலைமுறைகளைக் காக்கும் போராட்டம். வழக்குகள், காவல்துறை மிரட்டலை மக்களின் ஒற்றுமையோடு மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும், இணைந்து முறியடிக்க வேண்டும். மக்கள் பலத்தில் நாம் நம்பிக்கை வைப்போம். அஞ்சி, அஞ்சி வாழ நம்மால் முடியாது. நாம் ஊரை விட்டுச் செல்லாமல், அணு உலையை விரட்டுவோம். எந்த தேர்தல் அரசியல் கட்சிகளையும் நம்பாது நாமே அமைப்பாவோம். இளைஞர்களும், பெண்களும் போராட்டத்தில் முன் நிற்போம். பொறுமையாக விடாப்பிடியாகப் போராடி இறுதி வெற்றி காண்போம். அணு உலையை மூடுவோம். நம் மண்ணை, மக்களை, தலைமுறைகளை பாதுகாப்போம்.

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
ஊர் பொதுமக்கள் – கூடங்குளம்

க. சிவராஜ பூபதி 94866 43116 (நாகர்கோவில்)
ச தங்கப்பாண்டி 94423 39260 (நெல்லை)
சுப. இராமச்சந்திரன் 94434 27613 கெ அரி ராகவன் 94435 84049 (தூத்துக்குடி)